அமெரிக்கன் கல்லூரியில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடி தமிழகத்தின் கல்வி மற்றும் அரசியல் சூழ்நிலையில் தோன்றியுள்ள பல எதிர்மறையான வளர்ச்சிப் போக்குகளைக் கோடிட்டுக் காட்டுகிறது.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரி வளாகங்களிலும் ஒரு வகையான அரசியல் சூழ்நிலை நிலவியது. மாபெரும் மொழிப் போராட்டத்தின் பின்னணியில் ஆட்சிக்கு வந்த தி.மு.க.வினர் பதவி சுகத்தை நுகர ஆரம்பித்து அதிகார மமதை தலைக்கேறியவர்களாக மாறினர். அதற்குகந்த வகையில் அக்கட்சி அமைப்பும் மாறியது.

அச்சூழ்நிலையிலும் கூட அக்கட்சிக்கும் மாணவர் மத்தியில் ஓரளவு செல்வாக்கு இருந்தது. ஆளும் கட்சியின் தவறுகளை மையமாக வைத்து காங்கிரஸ் அரசியலுக்கும் கல்லூரி வளாகத்தில் இடமிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரையில் அக்கட்சிகளின் மாணவர் சங்கத் தலைவர்கள் கல்லூரி வளாகங்களுக்குள் வருவதும், விவாதங்கள் நடத்துவதும் ஓரளவு நடைபெற்றுக் கொண்டே இருந்தன.

இவ்வாறு மாணவர்களை தங்கள் அமைப்புகளில் சேர்ப்பதில் அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும்கூட அக்கறை காட்டினர். மாணவர் காங்கிரஸ், மாணவர் தி.மு.க. என்று தற்போது இருப்பது போல் பெயருக்கு இல்லாமல் மாணவர் மத்தியில் செயல்படும் போக்குக்கொண்ட தலைவர்களும் அக்கட்சிகளில் இருந்தனர்.

கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தல்கள் மிகவும் விறுவிறுப்பாக குறைந்தபட்சம் ஒருவார காலத்திற்கு கல்லூரிகளை களைகட்டக் கூடியதாக ஆக்கிக்கொண்டிருந்தன. மிகத் தீவிர அரசியல் நடவடிக்கைகள், விளம்பரம், பிரச்சாரம் ஆகியவை இளமைக்கும் கல்வி தந்த கற்பனை வளத்திற்கும் முழு இடமளித்து கல்லூரி வளாகங்கள் கற்பனை உலகை ஒத்தவையாகக் காட்சியளித்தன. மாணவர்கள் மட்டுமல்ல அரசியல் ஆர்வமுள்ள பொது மக்களும் கூட ஆவலுடன் நோக்குபவையாக கல்லூரிப் பேரவைத் தேர்தல்கள் இருந்தன.

பேரவைத் தேர்தல் வெற்றிகள் சாதாரண பொதுத் தேர்தல் வெற்றிகளைக் காட்டிலும் தரம் மிகுந்தவையாக பொதுமக்களால் பார்க்கப்பட்டன. இந்த மாவட்டத்தில் இத்தனை கல்லூரிகளில் பேரவைத் தலைவர் பொறுப்புகளை இந்தக் கட்சி பெற்றுள்ளது என்பன போன்ற செய்திகள் கட்சிப் பத்திரிக்கைகளோடு கூட நடுநிலையானவை என்று தங்களைக் கூறிக் கொள்ளும் பத்திரிக்கைகளிலும் வெளிவந்தன. தற்போது டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களின் பேரவை தேர்தல் அளவிற்கு இல்லை என்றாலும் அவற்றை ஒத்த விதத்தில் இங்கும் அப்போது கல்லூரித் தேர்தல் முடிவுகள் பிரபலமாக இருந்தன.

தேர்தல்களை ஒட்டி ஆங்காங்கே அவ்வப்போது சிற்சில வன்முறைச் சம்பவங்களும் நடக்கவே செய்தன. அதனைக் காரணமாக கூறி கல்லூரிக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்ற மத்தியதர வர்க்க மனநிலை கொண்டவர்களின் புலம்பல் அப்போதும் கேட்கவே செய்தது.

மங்கி மறைந்து விட்ட மாணவர் பேரவைகள்

அவ்வாறு இருந்த நிலை படிப்படியாக மாறி மாணவர் பேரவைத் தேர்தல்கள் அடியோடு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. கல்விக்காக பணம் செலவிடுவதை சுமையாகக் கருதிய அரசாங்கங்கள் படிப்படியாக கல்லூரிகளுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கிவிட்டன. அதாவது பல்கலைக்கழக மானியக்குழு கல்விக்கான செலவினங்கள் அனைத்தையும் வழங்கிக் கொண்டிருந்த நிலை மாறி இவ்வளவுதான் ஓர் ஆண்டுக்கு பணம் ஒதுக்க முடியும் அதற்கு மேல் ஆகும் செலவினங்களை புதிய பாடப்பிரிவுகளை சுயநிதி அடிப்படையில் தொடங்கியோ அல்லது மாலைநேர வகுப்புகள் நடத்தியோ கல்லூரிகளே ஈட்டிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.

அச்சுறுத்தும் அக மதிப்பீடு

முன்பு இருந்தது போல் இல்லாமல் சுயநிதிக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கும் அக மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆசிரியர்களை தாஜா செய்து வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை பல கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஏற்பட்டது. எச்சூழ்நிலையிலும் ஆசிரியருக்குப் பிடிக்காதவனாக ஆகிவிடக்கூடாது; அவ்வாறு ஆகிவிட்டால் நாம் நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவனாக கல்லூரியிலிருந்து வெளியேற முடியாது என்ற சூழ்நிலை உருவானது. அதனால் எச்சூழ்நிலையிலும்கூட தட்டிக் கேட்கவியலாத ஒரு அதிகார வர்க்கப் போக்கு ஆசிரியர் மத்தியில் தலைதூக்கியது. தகுதிக் குறைவும் கற்பிக்கும் திறனும் இல்லாத பல ஆசிரியர்களிடம் இந்த அதிகார வர்க்கப் போக்கு அளவு கடந்து ஒரு வகையான போலீஸ்காரத்தனமாக மாறியது.

மாணவர்கள் ஏறெடுத்துப் பார்க்க முடியாத நிலைக்குச் சீரழிந்துவிட்ட அரசியல்

இதே காலகட்டத்தில் அரசியலும் அதாவது முதலாளித்துவ அரசியலும் சீரழிந்து பொது வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தரமும் மதிப்புகளும் அழிந்து மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. நடைமுறையில் முதலாளித்துவ அரசியலுக்கு மாற்றான மதிப்புகள் அடங்கிய இடதுசாரி அரசியல்-அப்பட்டமான நாடாளுமன்றவாத அரசியலில் ஊறித் திளைக்கத் தொடங்கிவிட்ட இடதுசாரி கட்சிகளால் - மாணவர் மத்தியில் கொண்டுவரப்படவே இல்லை. முதலாளித்துவ கட்சிகளைப் பொருத்தவரையில் அரசியல் லாபகரமான தொழிலாக ஆகிவிட்டது. அதற்கு முன்பு கட்சிகள் ஓரளவு கடைபிடித்த பொது வாழ்க்கை நியதிகளும் கைவிடப்பட்டு லஞ்ச லாவண்யமும் ஊழலும் மலிந்ததாக அது ஆகிவிட்டது.

சீரழிந்த அரசியல் உருவாக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அறிவுப்பூர்வமான விவாதங்களை முன்வைத்து மாணவர்களை கவர்ந்திழுப்பது முற்றிலும் இயலாத காரியமாக ஆகிவிட்டது. எனவே ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்ற மனப்பான்மை வருந்தத்தகுந்த விதத்தில் மாணவர்களையும் பற்றிக் கொண்டு விட்டது. அரசியல் படிப்படியாக உதவாக்கரைகளும் கேடிகளும் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க விரும்பும் சுயநல வாதிகளும் சென்றுசேரும் புகலிடம் ஆகிவிட்டது.

எந்திர மனிதர்களாகிவிட்ட மாணவர்கள்

இதைத்தவிர கல்லூரிகளில் இருந்த பாடப்பிரிவுகளும் பெருமளவில் வேலைவாய்ப்பு தரக்கூடியவை என்ற அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு விட்டன. சமூகவியல் சார்ந்த அரசியல், பொருளாதாரம், இலக்கியம், வரலாறு போன்ற பாடப்பிரிவுகள் பெரும்பாலும் ஓரம்கட்டப்பட்டுவிட்டன. விஞ்ஞானப் பாடத்திலும் விஞ்ஞானப்பூர்வ அம்சங்கள் முன்னிலைப் படுத்தப்படாமல் அதிலிருக்கும் தொழிநுட்ப அம்சங்களே இன்றைய முதலாளித்துவத்தின் தேவை என்ற அடிப்படையில் முதன்மைபடுத்தப்பட்டு விட்டன.

இதன் காரணமாக மாணவர்கள் எந்திர மனிதர்கள் போல் ஆகிவிட்ட சூழ்நிலை உருவானது. இதனாலும் மாணவர்கள் மத்தியில் சமூக பிரக்ஞை குறைந்து சமூக விசயங்களில் சிரத்தையற்ற போக்கு தோன்றிவிட்டது. மதிப்பெண் பெற்றுத்தராத எந்த ஒரு விசயத்தையும் வாசிப்பது அவசியமற்றது என்ற நிலை ஏற்பட்டு பொது அறிவு என்பது வேலைக்காக மனு செய்யும் போது போட்டித் தேர்வில் மட்டுமே பயன்படக்கூடியது என்ற நிலை உருவாகிவிட்டது. இவை அனைத்தும் சேர்ந்து மாணவர் இயக்கத்தில் ஒரு பெரும் தொய்வினை ஏற்படுத்தியிருந்தது.

மாணவர்கள் பாராமுகமாக இருப்பதால் அரசியல் அவர்களைப் பாதிக்காமல் இருக்கப் போவதில்லை

இந்த நிலை சில முக்கிய கேள்விகளை நம் மனதில் எழுப்புகிறது. அரசியல் எத்தனை மோசமானதாகப் போனாலும் அது நிச்சயமாக சமூக வாழ்க்கையில் ஒரு மிக முக்கிய பங்கினை ஆற்றவே செய்கிறது. அதில் அறிவாளிகளும் கற்றவர்களும் ஈடுபடாமல் போனால் குற்றவாளிகளும், சந்தர்ப்பவாதிகளும், சமூகவிரோதிகளும் நிச்சயம் அதனை ஆக்கிரமித்து சமூகத்தை சீரழிக்கவே செய்வர். அரசியலுக்கு ஒரு முக்கியப் பங்கு சமூக வாழ்க்கையில் இருக்கும் வரை அதனைச் சரிசெய்ய வேண்டுமென்றால் ஒரு நல்ல அரசியலை முன் வைத்தே இன்றுள்ள கேடுகெட்ட அரசியலை மாற்ற முடியும்.

மாணவர்கள் போன்ற படித்த இளமையும் துணிவும்மிக்கவர்களின் பங்களிப்பு இல்லாமல் நல்ல அரசியலை கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. மேலும் நல்ல அரசியலைக் கொண்டுவர விரும்பும் மாணவர்கள் இன்று மிகவும் சீரழிந்துள்ள முதலாளித்துவ அரசியலை ஏறெடுத்தும் பார்க்க முடியாது. எனவே சமூகத்தின் பிரச்னைகளை விஞ்ஞானப் பூர்வமாக பகுப்பாய்வு செய்து அவற்றின் நிரந்தரத் தீர்வுக்கு வழி வகுக்கும் அரசியலையே அறிவுத்துறையில் இளமைத்துடிப்புடன் இருப்பவர்கள் என்ற ரீதியில் மாணவர்கள் தேர்தெடுக்க வேண்டியிருக்கும்.

அரசியலைப் பொறுத்தவரையில் மாணவர்கள் பாராமுகமாக இருப்பதால் இன்றுள்ள கேடுகெட்ட அரசியல் அவர்களைப் பொருத்த வரையில் பாராமுகமாக இருக்கப் போவதில்லை. அது கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அனைத்திலும் லஞ்சத்தையும் ஊழலையும் ஊடுருவச் செய்து தகுதி, திறமைகளை பின்னுக்குத் தள்ளி, அதே பாராமுகமாக உள்ள மாணவர்கள் சமூக வாழ்க்கைக்கு வரும்போது அவர்களது எதிர்காலத்தை நிர்மூலமாக்குகிறது.

உலகப் பொருளாதார நெருக்கடி

இன்று உலகமயம் மாணவர்களின் வேலைவாய்ப்பில் காட்டிவந்த பிரகாசமான தோற்றம் தற்போது தோன்றியுள்ள உலகப் பொருளாதார நெருக்கடியின் மூலம் மங்கி மறைந்துகொண்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே நிச்சயமற்றதாக இருந்த மாணவர்களின் எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாக ஆகியுள்ளது. எனவே, அவர்கள் மனங்களைப் பீடித்திருந்த காரியவாத, தன்னலவாத சமூக சிரத்தையற்ற போக்குகளை உதறி எறிந்துவிட்டு விஞ்ஞானப்பூர்வ சமூகப் பொறுப்புணர்வு உள்ள சிந்தனைகளை துடிப்புடனும் வேகத்துடனும் சமூகத்திற்கு வழங்க வேண்டியது அவர்களது மிக அடிப்படையான கடமையாகும்.

இந்தப் பொருளாதார நெருக்கடி எப்படியாவது தீர்ந்துவிடும் என்ற நப்பாசை மனநிலையோடு இணைந்து சலனமற்று இருப்பது மாணவர் சமூகத்திற்கே ஏற்பட்டுள்ள களங்கமாகும். பல்வேறு தகிடுதத்தங்கள் செய்து தற்போதைய இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து சமூகத்தை ஓரளவு பெருமூச்சுவிடும் இடைவெளிக்கு கொண்டுவர முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முயன்றாலும் அது இருக்கும் பிரச்னைகளுக்கு சிறிதளவு கூட நிரந்தர தீர்வாகிவிடாது. மாறாக இந்நெருக்கடி இருந்ததைக் காட்டிலும் இன்னும் மீளமுடியாததாக ஒரு மிகப் பெரும் நெருக்கடியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்பதே விஞ்ஞானமும், முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிப் போக்கின் வரலாறும் புகட்டும் பாடமாகும்.

அரசு உயர்கல்விக்கு ஆரம்பத்தில் அதிகம் செலவிட்டதன் பின்னணி

இந்தப் பின்னணியில் தான் அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னை தோன்றியது. அது ஒரு கல்லூரி சார்ந்த பிரச்னை என வெளிப்படையாகத் தோன்றினாலும் அது இன்று கல்வியைச் சூழ்ந்துள்ள மிக ஆழமான பிரச்னையின் ஒரு வெளிப்பாடேயாகும். அதாவது விடுதலை பெற்ற காலத்தில் அதுவரை அந்நிய ஏகாதிபத்திய சுரண்டலினால் உள்நாட்டு தொழில்வளர்ச்சி குன்றியிருந்த நமது நாட்டில் தொழில்வளர்ச்சியை துரிதமாகக் கொண்டுவர விடுதலை பெற்ற அரசு திட்டமிட்டது. தொழில் வளர்ச்சியின் ஒரு முக்கிய காரணியான விஞ்ஞானம் தொழில் நுட்பம் கற்ற வல்லுநர்களை பெரிய அளவில் உருவாக்க வேண்டிய அவசியம் அதற்கு இருந்தது. எனவே அரசு நிதி உதவியுடன் பலருக்கும் உயர்கல்வி கிட்டும் வகையில் பல விஞ்ஞான, சமூக விஞ்ஞான, பொறியியல் கல்லூரிகள் உள்நாட்டுத் தொழில் வளர்ச்சி தேவையினைக் கருத்திற் கொண்டு தொடங்கப்பட்டன.

கல்விக் குறைப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கக் காரணம்

ஆனால் இந்தியா விடுதலைப் பெற்ற வேளையிலேயே முதலாளித்துவச் சந்தை நெருக்கடி தோன்றிவிட்டதால் மேலை நாடுகள் சாதித்த அளவு தொழில் வளர்ச்சியினை இந்திய முதலாளிகளால் சாதிக்க முடியவில்லை. அது வளர முடிந்த அளவு வளர்ந்தது. அதன் பின்னர் இந்திய முதலாளித்துவமும் சந்தை நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. அந்நிலையில் உயர் தொழில் நுட்பம், விஞ்ஞானம் கற்றவர்கள் பெரிய எண்ணிக்கையில் அதற்கு தேவைப்பட வில்லை. மேலும் படித்து வேலையில்லாதவர்கள் கூடுதல் எண்ணிகையில் இருந்தால் அது ஒரு கிளர்ச்சி மனப்பான்மையை அவர்களிடையே ஏற்படுத்தி அது இந்த முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு அபாயத்தை ஏற்படுத்திவிடும் என்ற அச்சமும் அரசிற்கு இருந்தது.

அந்தப் பின்னணியில் தான் உயர் கல்வியில் கல்விக் குறைப்பு நடைவடிக்கையை முடிந்த வகையில் எல்லாம் அது கொண்டு வர விரும்பியது. அரசின் அத்தகைய வரைபடமே அது அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையாகும். அந்த அடிப்படையில் முதலில் உயர்கல்விக்கு வழங்கும் நிதியில் அரசு கைவைத்தது. அது சுயநிதி நிறுவனங்களாக பல கல்லூரிகள் தங்களை மாற்றிக் கொண்டு பல பாடப் பிரிவுகளை சுயநிதிப் பிரிவுகளின் கீழ் ஆரம்பித்து அதற்காக ஆகும் முழு செலவினையும் மாணவர்களிடமிருந்து கட்டணமாக வசூலிக்கும் போக்கிற்கு கல்லூரிகளை கொண்டு சென்றது.

அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னை

இந்த பின்னணியில் அமெரிக்கன் கல்லூரி சுயநிதிப் பாடப் பிரிவுகளையும், அரசு உதவி பெறும் பாடப் பிரிவுகளையும் கொண்ட ஒரு நிறுவனமாக ஆகியது. இன்று உலகமயமாதல் பின்னணியில் உயர் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான அறிவு கொண்ட உழைப்புத்திறன் உலகச் சந்தையின் சரக்காக ஆகியுள்ளது. அது உயர்மட்டத் தொழில் திறனுக்கு உலக அளவில் ஒரு வாய்ப்பினைத் தோற்றிவித்துள்ள நிலையில் பலர் கல்வி நிறுவனங்களை லாபகரமான கல்வி தொழிற்சாலைகளாக ஆக்கியுள்ளனர். பல கல்லூரிகளின் சுயநிதிக் கல்விப் பிரிவுகளும் அத்தகைய கல்வித் தொழிற்சாலைகளை பங்கும் பகுதியுமாக ஆகியுள்ளன. இந்நிலை படிப்படியாக அரசு உதவியுடன் குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் கல்வி பயில உதவும் பாடப்பிரிவுகளை அரசும் அதிகார வர்க்க கல்வித் துறையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் போக்கினை உருவாக்கியுள்ளது. படிப்படியாக அப்பிரிவுகளை இல்லாமல் செய்வதே அரசு மற்றும் அதன் கல்வித் துறையின் நோக்கமாக உள்ளது.

அமெரிக்கன் கல்லூரியைப் பொருத்தவரையில் சுயநிதிப் பாடப்பிரிவுகளைக் கற்பிப்பதற்கென்று ஒரு புதிய வளாகம் புறநகர் பகுதியில் உருவாக்கப்பட்டிருந்தது; எனவே அதன் நகரிலுள்ள முக்கிய வளாகத்தில் நடைபெறும் அரசு உதவி பெற்ற கல்வி அதிக வருவாயை நிர்வாகத்திற்கு ஈட்டித் தராவிட்டாலும் அந்த வளாகம் அமைந்துள்ள இடம் அதிக மதிப்பு வாய்ந்ததாக ஆகியுள்ளது.

லாப நோக்கத் தொழில் நிறுவனர் மனநிலையில் பேராயர்

தற்போது கிறிஸ்தவ மதக் கருத்துகளைப் பரப்புபவர் என்ற பாத்திரத்தைக் காட்டிலும் மதத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களை லாபகரமாக நடத்தி மதத்திற்குப் பணம் சேர்ப்பவர் என்ற காலத்திற்கு ஏற்ற நவீன பாத்திரத்தை வகிப்பவராக தனது மதத்தினரிடையே தன்னைப் பெரிதும் காட்டிக் கொள்பவராக விளங்கும் திருமண்டிலப் பேராயரின் மனதில் இது ஒரு ஆசையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வளாகத்தை விற்று ஒரு பகுதி பணத்தை மதத்திற்குக் கணக்குக் காட்டிவிட்டு மறுபகுதிப் பணத்தை தன் சொந்தப் பங்காக வைத்துக் கொள்ளலாம் என்று அவர் எண்ணத் தொடங்கியுள்ளார்.

ஆமாம் சாமி ஆட்களை நியமிக்க வேண்டியதன் அவசியம்

உண்மையான கல்விமான்கள் கல்லூரியை நிர்வகிப்பவர்களாக இருந்தால் இதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் தனது ஆமாம் சாமி ஆட்களை நிர்வாகப் பொறுப்பில் அமர்த்த அவர் திட்டமிடுகிறார். கல்வியை நிர்வகிக்கும் அரசின் அதிகார வர்க்க அமைப்புகளும் அவரது இந்தத் திட்டத்திற்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவாகவே உள்ளன.

அரும்பத் தொடங்கியுள்ள மாணவர் இயக்கம்

அமெரிக்கன் கல்லூரியில் தோன்றிய இந்த அவலநிலை 30 ஆண்டுகளுக்கு மேலாக தூங்கிக்கிடந்த மாணவர் சமூகத்தில் ஒரு சிறிய விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் தாங்களே ஒரு அமைப்பினை உருவாக்கி பேராயரின் கல்வி நிறுவனத்தையே விற்றுக் காசாக்க விரும்பும் போக்கினை எதிர்த்துப் போராடத் தொடங்கியுள்ளனர். அப்போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் ஆதரவினையும் திரட்டத் தொடங்கியுள்ளனர்.

தியாகராயர் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரியை இணைத்து ஒரு பல்கலைக்கழகமாக ஆக்குகிறோம் என்ற பெயரில் அரசு உதவியுடன் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்பித்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அரசின் நாசகாரத் திட்டத்தை எதிர்த்தும் இதே வேளையில் ஒரு மனநிலை மாணவர் மத்தியில் தோன்றியது. சட்டக் கல்லூரி மாணவர்களும் சாஸ்தா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்லூரி துவக்குவதை எதிர்த்து போராடினர். இச்சூழ்நிலை மங்கிக் கிடந்த மாணவர் இயக்கம் மீண்டும் மலர்வதற்கு ஏற்றதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இச்சூழ்நிலைகளைப் பயன்படுத்தி 30 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி வளாகங்களுக்குள் நிலவிய அரசியல் சூழ்நிலையை மீண்டும் கொண்டுவந்தால் கல்வியையும் மாணவர்களையும், சமூகத்தையும் பீடித்துள்ள பல்வேறு அவலங்களை எதிர்த்த அறிவுக் குரலினை உயர்ந்தோங்கச் செய்ய முடியும். உள்ளபடியே முன்பு நிலவியது போன்றதொரு அரசியல் சூழல் நிலவியிருக்குமானால் பேராயர் போன்ற மதத்தோல் போர்த்திய சுயலாபக்காரர்களுக்கு கல்லூரியின் விவகாரத்தில் இந்த அளவு நேரிடையாகத் தலையிடும் தைரியமும், துணிவும் நிச்சயம் வந்திருக்காது.

பேராயரின் அங்கிக்குள் அகதிகளாகிவிட்ட அரசியல் கட்சிகள்

ஆனால் அத்தகு அரசியல் சூழ்நிலையைக் கொண்டுவர இயலாத அளவிற்கு பேராயர் வழங்க முன்வரும் நன்கொடைக்கும், சிறுபான்மையினர் வாக்கு வங்கி என்ற நப்பாசைக்கும் இரையாகக் கூடியவையாகவே இன்று அரசியல் கட்சிகள் உள்ளன என்பதையே அவை இப்பிரச்னையில் ஒரு அக்கறையும் காட்டாதிருந்த போக்கு வெளிப்படுத்தியது.

ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாகிவிட்ட முதலாளித்துவ- 'இடதுசாரி' அரசியல் கட்சிகள்

இந்த விசயத்தில் பிற முதலாளித்துவக் கட்சியினர் எடுத்தது பாராமுக நிலை என்றால், இடதுசாரிக் கட்சிகளான சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ(எம்) போன்றவை எடுத்தது இந்தப் பிரச்னை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தின் இரு குழுக்களுக்கிடையிலான பிரச்னை என்ற நிலையே. இதில் சி.பி.ஐ(எம்) கட்சி ஒருபடி மேலே சென்று பேராயர் தரப்பிற்கு ஆதரவான நிலையையே நாசூக்காக எடுத்தது.

நாம் ஏற்கனவே பார்த்த விதத்தில் பெரிய அரசியல் கட்சிகள் என்று கூறப்படும் முதலாளித்துவ அரசியல் கட்சிகள் ஊழல் மலிந்து, அறிவு பூர்வ விசயங்களில் தொடர்பு குன்றிப்போய் மாணவர் களைத் திரட்ட வல்லவையாக அதாவது முன்பு அவர்கள் செய்ததைப் போல் குழப்பவும் முடியாதவையாக உள்ளன. இடதுசாரிப் போர்வையில் உலாவரும் சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) போன்ற கட்சிகளின் நிலையும் ஏறக்குறைய இதை ஒத்ததாகவே உள்ளது.

பக்கவாத்தியம் வாசிக்கும் பெயர்ப்பலகை மாணவர் அமைப்புகள்

அந்தப் போலி இடதுசாரிக் கட்சிகளின் மாணவர் அமைப்புகளும் வெறும் பெயர்ப்பலகை அமைப்புகளாகவே உள்ளன. அக்கட்சிகளின் நடைமுறை அரசியல் தேவைகளுக்குப் பக்கவாத்தியம் வாசிப்பவையாகவே அவை ஆகிவிட்டன. எனவே உண்மையான அறிவுபூர்வ, விஞ்ஞான பூர்வ அரசியலை உருவாக்கும் வளர்த்தெடுக்கும் பணி மாணவர்களின் தோள்மேலேயே விழுந்துள்ளது.

ஆளும் வர்க்கத்தின் அறிவுக்குறைப்பிற்கு எதிராக எழுந்ததே மொழிப் போராட்டம்

தமிழக அரசியல் மாற்றங்களில் கடந்த காலங்களில் மாணவர் இயக்கம் ஆற்றிய பங்கும் அதற்குக் கிடைத்த வரவேற்பும் என்றும் யாராலும் மறுக்க முடியாதவை. மகத்தான மொழிப் போராட்டமே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 1967-ல் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது மிக முக்கியமாக மாணவர் சக்தியே.

அன்றும் மொழிப்போராட்டத்தின் அடிப்படையை அறிந்து கொள்ளத் தவறி மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனவையே இந்த சி.பி.ஐ, சி.பி,ஐ(எம்) போன்ற அமைப்புகள். அன்றாவது ஓரளவு இடதுசாரித் தன்மையுடனும், போர்க் குணத்தோடும் விளங்கிய அவை இன்று இடதுசாரித் தன்மையை அறவே இழந்து நிற்கும் அமைப்புகளாகிவிட்டன.

விடுதலைப் போராட்டத்திற்குப் பின்னர் தமிழகத்தில் நடந்த மிகப் பெரும் போராட்டம் இந்தித் திணிப்பினை எதிர்த்த போராட்டமே. ஆளும் முதலாளிவர்க்க சேவகர்களான ஆட்சியாளர்கள் ஆங்கிலத்தை இணைப்பு மொழி என்ற நிலையிலிருந்து அகற்றியதை எதிர்த்துக் கிளம்பியதே அக்கிளர்ச்சி. நம் மக்களுக்கு ஆங்கிலம் மூலம் கிட்டும் உயர் அறிவு பறிபோய்விடும் என்பதனாலேயே கல்வியின் பால் அக்கறை கொண்ட அனைவரும் அக்கிளர்ச்சியை ஆதரித்தனர்.

தி.மு.க.வினர் நாசூக்காக அக்கிளர்ச்சியினைத் தங்களுக்கு பிராந்திய முதலாளிகளின் ஆதரவினைப் பெற்றுத் தரும் பிராந்தியவாத அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். உயர்ந்த அறிவு பெற்றோர் முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பை இன்றில்லாவிடில் நாளை எதிர்த்துக் கிளம்பவே செய்வர் என்ற அடிப்படையிலேயே ஆங்கிலத்தை அகற்றி இந்தியை இணைப்பு மொழியாக்கும் செயலை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் செய்தனர்.

இந்த அடிப்படை புரியாமல் அக்கிளர்ச்சியினை ஆதரிக்காத தவறினை அன்று தமிழகத்தில் கம்யூனிஸ்டுக் கட்சிகள் செய்தன. அதில் உள் பொதிந்திருந்த முதலாளித்துவச் சதி அக்கட்சிகளின் கண்ணுக்குப் புலப்படவில்லை. மாறாக அது வெறும் இணைப்பு மொழி குறித்த கிளர்ச்சி என்ற அடிப்படையில் 'கல்வி கற்பிக்கத் தாய் மொழியே போதும் இணைப்பு மொழி என்று ஆங்கிலத்தையோ இந்தியையோ கற்க வேண்டியதில்லை. நல்ல மொழி பெயர்ப்பாளர்கள் வைத்துக் கொண்டால் இணைப்பு மொழித் தேவையை பூர்த்தி செய்துவிடலாம்' என்று கூறின.

எத்தனை உரத்து முழங்கினாலும் உலகமயத்தை மாற்ற முடியாது

இன்றும் அந்த அமைப்புகள் உலகமயமே அனைத்திற்கும் காரணம் என்று கூறி வருகின்றன. நவீன தாராளவாதம், உலகமயம் அனைத்துமே உலக அளவில் முதலாளித்துவம் தன் வாழ்நாளை நீட்டுவதற்காகக் கொண்டுவந்தவையே தவிர தானாக வந்தவை அல்ல. உலகமயத்திற்கு எதிராக என்னதான் கரடியாகக் கத்தினாலும் அதை மாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்ப்போம். 250-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளன. இவற்றில் கல்வி கற்று வெளிவரும் பொறியியலாளர் அனைவரையும் நிச்சயமாக உள்நாட்டில் பயன்படுத்தத் திராணியுள்ளதாக நமது முதலாளித்துவம் இல்லை.

வேற்றிட வேலை வாய்ப்பையும் வெளிநாடுகளில் உள்ள வேலை வாய்ப்பையும் நம்பியே இக் கல்வித் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே நமது முதலாளிகள் ஒட்டு மொத்தத்தில் உலகமயத்தின் மூலம் பலனடைந்துள்ளனரே தவிர, பெரிதும் பாதிக்கப்படவில்லை. உலகமயத்தினால் உற்பத்தித் துறையிலும், சிறு தொழில்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் காட்டிலும், இந்தியாவின் சேவை மற்றும் கல்வித் துறை முதலாளிகள் அடைந்துள்ள பலன்களே அதிகம்.

ஆனால் நம் தொழில்கள் உலகமயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன என்று மீண்டும் மீண்டும் சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்), சி. பி.ஐ(எம்.எல்) கட்சிகள் முன் வைக்கக் கூடிய வாதத்தை தந்திரமாக இந்திய முதலாளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள், 'ஆம். நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால் தொழிலாளர்களுக்கு முன்பு வழங்கிய பல சலுகைகளை வழங்க முடியாத நிலையில் இருக்கிறோம்' என்று கூறி தொழிலாளரை இன்னும் சுரண்டவும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களைப் பறிக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். உலகமயத்திற்கு எதிரான முழக்கங்கள் இவ்வாறு தொழிலாளரை எதிர்மறையாகப் பாதிக்கவும் செய்கின்றன.

நீண்ட காலத்திற்குப் பின்பு அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னையை அடிப்படையாக வைத்து அனைத்துக் கல்லூரிகளிலும் தலைகாட்டியுள்ள மாணவர் இயக்கமும் மேலே விவரித்துள்ள வளர்ச்சிப் போக்குகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். அதனை மையமாக வைத்து மாணவர்களை அணிதிரட்டுவதற்கான பொது வழியை தர்க்க ரீதியாக சிறந்த வாதங்களின் மூலம் முன் வைக்க வேண்டும்.

வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு மட்டும் வரைவு செய்யப்பட்டுள்ள பாடப் புத்தகங்களோடு மாணவர்களைக் கட்டிப் போட்டுள்ள கட்டுப்பாட்டுத் தளைகளை அறுத்தெறிய வேண்டும். சமூக மேம்பாட்டுக்கு உண்மையிலேயே வழிகாட்டக்கூடிய உயர்ந்த நூல்களைப் படிக்க வேண்டும். மார்க்சின் 'கம்யூனிஸ்ட் அறிக்கை' போன்ற 150 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணத்தைப் பார்த்த, அப்பிரச்னைகளுக்கான அடிப்படைகளை அலசி ஆராய்ந்து முன்வைத்த அறிவு தாகத்திற்கு வற்றாத ஜீவபானத்தை வழங்கும் அமுதசுரபி போன்ற நூல்களை அவசியம் படிக்க வேண்டும்.

தற்போது தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி அத்தனை எளிதில் சமாளிக்கக் கூடியதல்ல. எனவே இன்னும் மகத்தான மாணவர்-இளைஞர் எழுச்சிகளை ஐரோப்பிய உலகின் நகரங்கள் வெகுவிரைவில் கண்ணுறக் காத்திருக்கின்றன. அந்த மேலை நாட்டு மாணவர் சமூகத்தின் பொருத்தமான இணை சக்தியாக நமது மாணவர் சமூகமும் பயணிக்கத் தயாராக வேண்டும்.

கைவிடப்பட வேண்டிய பத்தாம் பசலிக் கருத்துக்கள்

உலக அளவில் முதலாளித்துவ உற்பத்தி முறையே ஒரே உற்பத்தி முறை என்பது இப்போது அப்பட்டமாக நிலைநாட்டப்பட்டுவிட்டது. அறிவு, உழைப்புத்திறன் உட்பட அனைத்தும் உலகச் சந்தையின் உற்பத்திப் பொருட்களாகிவிட்டன.

இந்நிலையில் தமிழ், தமிழ் தேசம், பார்ப்பனீயம், அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவம் என்று பத்தாம் பசலித்தனமாக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதும் அவற்றிற்கான விளக்கங்களை அரைவேக்காட்டு அரசியல்வாதிகளிடம் தேடியலைவதும் பயனற்றது. கல்விக்கண் பெற்றுள்ள மாணவர் சமூகம் சுயசிந்தனையை வளர்த்து வரலாற்றில் அது ஆற்ற வேண்டிய பணியினை ஆற்றத் தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

வாசகர் கருத்துக்கள்
lakshmankarthik
2009-03-02 04:01:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

i am a american college student . cwp was very important party in india

Pin It