பூமியில் மனித குலம் அழிந்து போன பிறகு, அகழ்வாராய்ச்சி நடத்தும் வெளிக்கிரகவாசியின் கைகளில் கீழ்க் கண்டவைகள் கிடைக்கின்றன. லதா பேன்சி ஸ்டோரின் லாபம் என்று எழுதப்பட்ட எந்திரத்தகடு, ஜாங்கிரியாய் சுருண்டிருக்கும் பித்தளை ட்ரம்பெட், ஒரு பால்பாயின்ட் பேனா ஆகியன கிடைத்ததாக வைத்துக் கொள்ளுங்கள்; அதை வைத்துக் கொண்டு நம்மைப் பற்றி என்ன முடிவுக்கு வருவார்கள்? அவர்களால் அவை யாவை? எதற்குப் பயன்பட்டவை என்று கண்டுபிடிக்க முடியுமா?

‘காட் மஸ்ட் பி கிரேஸி’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில், கொக்கோ கோலா பாட்டிலை என்னவென்று தெரியாமல் அதை சாமியாகக் கும்பிட்ட ஆப்பிரிக்கப் பழங்குடியினரை நினைத்துப் பாருங்கள்.

naska_370ஒரு மனிதக் கூட்டத்தின் கலாச்சாரம் இன்னொரு கூட்டத்திற்குப் புரிவதில்லை. கஜபதி நாயுடுவின் நெற்றியில் இலங்கும் திருமண்ணின் அர்த்தத்தை கொரியாவின் ஸ்டெம் செல் ஆராய்ச்சி செய்யும் யுங்லீ எப்படி அறிவார்? அறியார்.

தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோரம் இருக்கிறது பெரு நாடு. 2800 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி அங்கே ஒரு பழங்குடி நாகரிகம் இருந்தது. நாஸ்க்கா எனும் நதி மேற்கிலிருந்து கிழக்காக பிரிந்து, வழியெங்கும் இயற்கைப் படத்தைத் தீட்டுகிறது. அது ஜீவநதி அல்ல. திடீரென்று நடுவழியில் மறைந்து மறுபடியும் நூறு கிலோமீட்டர் நிலத்தடியில் பாய்ந்து வேறொரு இடத்தில் வெளிப்படும் வினோத நதி. நாஸ்க்காவின் செப்படி வித்தையைப் பற்றி நான் இங்கு சொல்ல வரவில்லை; அங்கே வாழ்ந்து மறைந்த நாஸ்க்கா இனத்தினர், நிலத்தையே கேன்வஸாகப் பயன்படுத்தி வரைந்து விட்டுச் சென்ற பெரியப் பெரிய கோட்டுப் படங்களைப் பற்றிக் கூறப்போகிறேன்.

நாஸ்க்கா கோடுகளை தரையிலிருந்து பார்ப்பதைவிட ஆகாயவிமானத்திலிருந்து பார்த்தால் தான் வடிவங்கள் புலப்படும். ஒவ்வொரு படமும் 200-500 அடி நீள அகலத்தில் நிலத்தைக் கீறி வரையப்பட்டவை. மரபெஞ்சில் சிறுவர்கள் ஆணியால் கீறிய படங்களைப் போல... ஆனால் பல்லாயிரம் மடங்கு பெரிதாக.

பெரு நாடு வாழ்வதற்கு சுகமான நிலப்பகுதியாக இல்லாதிருந்தாலும், அங்கும் மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றனர். மனிதன் எந்த இடத்தைத் தான் விட்டு வைத்தான்.

வறண்ட காற்றும் நாஸ்க்காவின் கஞ்சத்தனமான தண்ணீரும்தான் அவர்களது ஜீவநாடி. பல மில்லியன் ஆண்டுகளாக நாஸ்க்கா நிலப்பரப்பு வெயிலிலும் குளிரிலும் பொரிந்து கிடக்கிறது. பழுப்பு சரளைக்கற்கள் நாஸ்க்கா நிலப்பரப்பை மூடியிருக்கிறது. அவற்றை விலக்கினால் கீழே சம்பா ரவை மாதிரியான மண் காணப்படுகிறது.

மீன், சுருள் வட்டங்கள், கடல்பாசி, கருடன், சிலந்தி, பூ, உடும்பு, ஓணான், கொக்கு, கைகள், மரம் என சம்மந்தா சம்மந்தமில்லாத, 1000க்கும் மேற்பட்ட கோட்டுப் படங்கள் சுமார் 1500 சதுர கிலோமீட்டர் பரப்பில் இரைந்து கிடக்கின்றன. படங்கள் மட்டுமல்லாமல் ஏராளமான கோடுகள் கிழக்கு மேற்காகவும், தென் வடலாகவும் வரையப்பட்டுள்ளன.

எப்படி வரையப்பட்டது?

பெரு நாட்டு பழங்குடியினர் நாஸ்க்கா படங்களை திட்டம் போட்டே வரைந்திருக்கின்றனர். சுவரில் அல்லது தரையில் சிறியதாக படம் வரைவது சுலபம். 300-400 அடிப்பரப்பளவுக்கு விரிவான படங்களை வரைவதற்கு ஏதாவது திட்டம் இருந்தே ஆகவேண்டும்.

கையிலுள்ள சிறிய படத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு தரையிலிருந்து நாஸ்க்கா ஓவியர் முக்கிய இடங்களில் ஆப்பு வடிவ கல்லை அடையாளமாக நடுகிறார். பின்னர் அவற்றைக் கோடுகளால் இணைக்கிறார். வானத்திலிருந்து பார்த்தால் கோடுபோல இருப்பவை உண்மையில் கட்டை வண்டி செல்லக்கூடிய அகலமுள்ளவை.

கோடு போடுவதற்கு நாஸ்க்கா இனத்தினர் கடப்பாறை, மண்வெட்டியைப் பயன்படுத்தவில்லை. கோடுகளில் மீது படிந்திருக்கும் பழுப்பு நிற சரளைக் கற்களை அகற்றி கோட்டின் இரண்டு பக்கத்திலும் அடுக்கியிருக்கிறார்கள். கோல மாவு போன்ற இயற்கையான அடிமண் வெளிப்படுகிறது. விரிந்து பரந்த பழுப்பு கேன்வாஸில் வெள்ளைக் கோடுகளாக படங்கள் வெளிப்படுகின்றன.

naska_people_3701.    பாட்டைகள் அமைக்க வேண்டிய கோடுகளை நூல் பிடித்து ஆப்புகள் அடிக்கின்றனர்.

2.    மேலாக உள்ள பழுப்புநிற சரளைக் கற்களை பொறுக்கி குவிக்கின்றனர்.

3.    பொறுக்கிய சரளைகளை பாட்டையின் இரு மருங்கிலும் வரப்புகளாகக் குவிக்கின்றனர். இயல்பாகவே உள்ள அடி மண்ணின் வெண்ணிறம் கோடுகளுக்கு வடிவம் தருகிறது.

4.    சுருள் வட்டம் அமைக்க மையமாக ஒரு குச்சியை நட்டு அதை ஆதாரமாகக் கொண்டு கயிற்றால் படிப்படியாக பெரிதாகும் ஆரமுடைய வட்டம் வரைகிறார்கள்.

5.    அதற்கிணையாக இன்னொரு கோடு போட்டு சுருள் வட்ட பாட்டையை அமைக்கின்றனர்.

ஏன் வரைந்தனர்

நாஸ்க்கா படங்கள் கிமு 800 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. கடைசியாக வரையப்பட்டது கி.பி. 800 ஆக இருக்கும். அதன் பிறகு அந்த நாகரிகம் என்னவாயிற்று, அவர்கள் எங்கே மறைந்தார்கள் என்பது தெரியவில்லை. நாஸ்க்கா இப்போது ஆளரவமற்ற பாலைவனமாகக் காட்சியளிக்கிறது.

நாஸ்க்கா படங்கள் 1920 இல் பெருநாட்டில் விமானப் போக்குவரத்து துவங்கியபோதுதான் தெரிவந்தது. அதன் பிறகு அப்படங்களின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முயலாத மானுடவியல் வல்லுநர்களே இல்லை எனலாம். பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. விண்வெளியிலிருந்து வரும் வேற்றுக் கிரகவாசிகளுக்கு தரையிறங்குவதற்காக வரையப்பட்ட லேண்டிங் ஸ்ட்ரிப் என்றார் ஒருவர். பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றார் இன்னொருவர். ஒற்றையடிப்பாதைகள் என்றார் வேறொருவர். பலூனில் மிதந்தபடி பார்ப்பதற்காக வரையப்பட்ட ஓவியங்கள் என்று கூட விளக்கங்கள் தரப்பட்டன.

சடங்குகளுக்காகவா?

தெலுங்கு பார்ப்பனர் வீட்டுக் கல்யாணத்தில் ஜானவாசம் முதல் அப்பளம் தலையில் அடித்து ஒடிப்பது வரையிலான சடங்குகளை ஒரு வெள்ளைக்கார ஆசாமியால் எப்படி புரிந்து கொள்ளமுடியும்? அம்மி மிதிப்பதும், அருந்ததி பார்ப்பதும், குடை பிடித்துக் கொண்டு வாசல் வரை காசி யாத்திரை செய்வதையும் தமிழகத்துக்குள்ளே இருக்கும் நம்மவர்களுக்கே புரியாதபோது கலாச்சாரமே இல்லாத வெளிநாட்டவர்களுக்கு என்ன புரியும்? உள்ளுர்வாசிகளின் துணையில்லாமல் அந்த ஊரின் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஆராய்ச்சி செய்வதும் அவற்றை விளக்க முயல்வதும் முட்டாள் தனமாகத்தான் முடியும்.

naska_pic_370நாஸ்க்கா குடியினரின் கடைசி ஆசாமி ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொலைந்து போய்விட்ட நிலையில், அவர்களின் தரை ஓவியங்களை யாரால் உள்ளபடி விளக்கமுடியும்?

நாஸ்க்கா ஓவியங்களில் பெரும்பாலும் உயிரினங்களே அதிகம் காணப்படுகின்றன. ஆங்காங்கே மேடைகள் உள்ளன. உடைந்த பானைகளில் மனித மண்டை ஓடு காணப்படுகிறது. மண்டை ஓட்டின் நெற்றியில் ரூபாய் நாணயம் அளவுக்கு துளையிடப்பட்டு கயிறு நுழைக்கப்பட்டுள்ளது. இடுப்பில் தொங்க விடுவதற்காகவா? இவற்றை எல்லாம் பார்க்கும்போது பாலைவனம் முழுவதும் பரவிக்கிடக்கும் வரைபடங்கள் சமயச்சடங் கிற்காக வரையப்பட்டது போலத் தோன்றுகிறது.

பெருவில் நாஸ்க்கா நதி மட்டுமே குடிநீரைத் தரக்கூடியதாக இருந்தாலும்; அது திடுமென்று நிலத்தில் மறைந்து பலநூறு கிலோமீட்டர் தள்ளி வேறொரு இடத்தில் வெளிப்பட்டு பாய்வதாலும், அதை நம்பி அதன் கரையருகே வாழ்ந்த நாஸ்க்கா குடியினர் ஆண்டுதோறும் இந்தப் பாலைவனப் பரப்பில் கூடி தத்தம் குலதெய்வத்தைக் கொண்டாடியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே குலத்தவர் ஓரிடத்தில் குலதெய்வங்களுக்கு கோயில் எழுப்பி அங்கே தவறாமல் கூடி சமயச்சடங்குகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது அன்றும் நாஸ்க்கா குடியின் பல குலத்தவர்கள் அவரவர் குலதெய்வக் குறியை தலையில் மிகப் பெரிதாக வரைந்து அதன் ஊடே படையல், பூசை சாமான்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக நடந்து, சடங்குகள் பூர்த்தி செய்திருப்பார்கள் போலிக்கிறது.

நதிநீர் ஏமாற்றி விடமாலிருக்க வேண்டி ‘அப்பு’ என்ற சடங்கில் மனிதத்தலையை படையலாகக் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. அப்பு என்றால் சமஸ்கிருதத்தில் தண்ணீர் என்றொரு பொருள் உண்டு. நமக்கு கோயிலும் கும்பாபிஷேகமும் எப்படியோ அதுபோலவே நாஸ்க்காவினருக்குத் தரைப் படங்கள் முக்கியமானவை போலிருக்கிறது.

பரந்து விரிந்த பாலை நிலத்தில் என்றோ ஓடிய சிற்றோடையின் சுவடுகளுக்கிடையில் பறவைகளிலேயே மிகச் சிறிய தேன்சிட்டு 200 அடி விரிவுக்கு தரையில் வரையப்பட்டுள்ளது. [வலது மேல்] இனம் தெரியாத ஒரு பறவை. கீழே வழக்கமான குரங்கு ஒன்று வாலை சுருட்டிக் கொண்டிருக்கிறது.

naska_550

Pin It