“நாங்கள் கேட்பது சமத்துவம் அல்ல; எங்களுக்குத் தேவை நேர்மையான பங்கு. சமத்துவம் என்பது சமபங்கு ஆகாது. சமூகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உரிய நேர்மையான பங்கு கிடைக்க வேண்டுமெனில், மக்களை சமமாக நடத்த முடியாது. வருமான வரியை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் ஏன் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பதில்லை. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரி வரி விதிக்காததற்கு வரி கட்டும் இரு பிரிவினரின் திறன் வெவ்வேறாக இருப்பதுதான் காரணம். இச்சூழலில், சமத்துவம் என்பது, மிகுந்த மோசடியான பங்களித்தலையே தரும். நேர்மையான பங்கை அளிக்க வேண்டுமெனில் பலம் பொருந்தியவர்களையும் பலமற்றவர்களையும்; பணக்காரர்களையும் ஏழைகளையும்; அறிவாளியையும் அறியாமையில் வைக்கப்பட்டிருப்பவரையும் ஒருபோதும் சமமாக நடத்த இயலாது.''

- டாக்டர் அம்பேத்கர்

உச்ச நீதிமன்றத்தில் 1981இல் ஏ.பி.எஸ்.கே. சங் வழங்கில், நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், “திறமை குறித்த பொதுவான வாதங்கள் சற்றுப் பொய்யானவை... ஒன்றிரண்டு "அஜன'ங்களும், "கிஜனங்'களும் (பழங்குடியினர்) அரசுப் பணியில் நுழைந்து விட்டதாலேயே, அரசுப் பணியாளர்கள் அனைவரின் மீதும் முட்டாள்கள் அதிகாரம் செலுத்தும் கேடான நிலை ஏற்பட்டு விட்டது என்பதை எங்களால் ஏற்க முடியாது. நவீன இந்தியாவின் சிக்கல் வேறு இடத்தில் உள்ளது. பழங்குடியினரை விடவும், அவர்களை விட சற்றே மேம்பட்ட நிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களை விடவும், இந்த தர விற்பனையாளர்கள் பல வகையிலும் மிகவும் ஆபத்தானவர்கள். தரம் என்பதற்கும் தகுதி என்பதற்கும் பொருள் என்ன என்ற அடிப்படையான கேள்வி எழுகிறது. சமூகத்தின் உயர் நிலையில் இருப்பவர்கள், பொது மக்கள் மீதான அக்கறையை இழந்துவிட்டனர். அவர்கள் அரசை நடத்தும் தகுதியற்றவர்கள். அரசுப் பணிகளை செய்யும் திறமையற்றவர்கள். உணர்வுள்ள இதயம், துடிக்கும் அறிவும், மக்களின் கண்ணீன் பால் அக்கறையும் கொண்ட ஒருவரால்தான், நாட்டின் வளர்ச்சித் தேவைகளை விரைவுபடுத்த இயலும். நேர்மையான அர்ப்பணிப்பு மற்றும் அறிவுசார் நம்பகத்தன்மை போன்றவையே தரம், திறன், தகுதி ஆகியவற்றிற்கான சில அடிப்படைகள்; "ஆக்ஸ்போர்டு' அல்லது "கேம்ப்ட்ஜ்', "ஹார்வர்டு' அல்லது "சிமியானி'ல் பெற்ற பட்டங்கள் அல்ல. வேதனையூட்டும் வகையில், நமது தேர்ந்தெடுக்கும் முறையின் நோக்கம் தெளிவின்றி இருக்கிறது. வசதியான வாழ்நிலையினைப் பெற்று, பெரும்பான்மை மக்களின் துன்பங்கள் குறித்த அக்கறையற்றவர்களை விட, பிறப்பில் இருந்தே இந்தியாவின் சூழலை, பட்டவர்த்தனமாகப் புரிந்து கொள்ளும் வாழ்நிலையில் இருக்கும் பட்டியல் சாதியினர், கண்டிப்பாகத் தகுதியானவர்கள்.''

இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு, இந்தியாவின் புகழ் பெற்ற நீதித்துறை சீர்திருத்தவாதியான உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தகுதி, திறமை பற்றி குறிப்பிட்டுள்ள தீர்ப்புகளைப் பற்றி தெரிந்திருக்காது. உண்மையில், சாதி இந்துக்களும், ஊடகம் மற்றும் வணிகத் துறையில் இருப்பவர்களும் மிகக் குறைந்த அளவிலேயே நூல்களைப் படிக்கிறார்கள். அவர்களுக்கு மனித உரிமைகளைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. தங்களுடைய முன்னோர்கள் தலித் மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்காகவும் அவர்கள் வருந்துவதில்லை. தலித் மக்கள், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்கொடுமைகள், இன்றளவும் தொடர்கின்றன. ஆனால், யாரும் இது குறித்து விவாதித்து அதற்கெதிராகப் பிரச்சாரங்களை செய்வதில்லை.

Mandal
குஜராத் பற்றி எரியும்போது, சாதி இந்துக்கள் தெருவிற்கு வந்து போராடவில்லை. "முஸ்லிம்களுக்கு மருத்துவம் பார்க்காதீர்கள்' என்று அத்துறையைச் சார்ந்த பிரவீன் தொகாடியா எச்சரித்தபோது, மருத்துவத் துறையைச் சார்ந்த எவரும் வெட்கப்பட்டு, அந்த நபரைப் புறக்கணிக்கவில்லை. 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இவர்கள் யாரும் தெருவுக்கு வரவில்லை. காஷ்மீல் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் இவர்கள் யாரும் தலைகாட்டவில்லை. கடந்த பத்தாண்டுகளாக "ஷர்மா'க்கள் பெருமளவு கிரிமினல் குற்றங்களை செய்தபோதும் யாரும் கூக்குரலிடவில்லை. சுசில் ஷர்மா முதல் ஷிவானி கொலை வழக்கு வரை, நூற்றுக்கணக்கான "ஷர்மா'க்கள் குற்றங்களைப் புரிந்து சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், எந்த சாதி இந்துவும் குற்றங்கள் புரியும் "ஷர்மா'க்களைக் கண்டிக்கத் தயாராக இல்லை. இத்துணை நாட்களும் இந்த அநீதிகளைக் கண்டு அமைதியாக இருந்துவிட்டு, இன்று இடஒதுக்கீடு என்றதும் மீண்டும் தெருவில் இறங்கிப் போராட வந்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இதே சாதி இந்துக்கள், ஆங்கிலேய உயர் அதிகாரிகளின் உதவியுடன் சில தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை குற்றப் பரம்பரையினராக்கினர். ஒரு இஸ்லாமியர் உணவுப் பொட்டலத்தைத் திருடி விட்டார் என்பதற்காக, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமே திருடர்களாகக் கருதப்பட்டது. அதேபோல "குஜார்' சமூகம் குற்றப் பரம்பரையினராகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு சாதி இந்துக்களுக்கு நேரம் இல்லை; அது அவர்களின் பிரச்சனையும் அல்ல. அவர்கள் தங்களை மட்டுமே ஆளப்பிறந்தவர்களாகக் கருதுகின்றனர். எனவே, மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதும், ஊடகங்கள் ஆட்சி நிர்வாகத்துறை இவற்றைப் பயன்படுத்தி, தங்களால் தொடர்ந்து நாட்டை ஆள முடியும் என்று நம்புகின்றனர். மன்னிக்கவும், அதற்கான காலம் கடந்து விட்டது.

திறமை இன்றைக்கு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. "திரிவேதி'கள், "சதுர்வேதி'கள், "மல்கோத்ரா'க்கள், "குப்தா'க்கள், "சங்வி'கள், "சாவ்லா'க்கள் இவர்கள்தான் திறமை வாய்ந்த சமூகம் பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் சொல்லும் திறமை வாய்ந்த சமூகம் பற்றி யாருக்கும் புரியவில்லை. எனவே, திறமை குறித்த சில உண்மைகளைக் கண்டறிவோம். "தங்களுடைய மாபெரும் இதிகாசங்களான மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் எழுதுவதில்கூட இந்துக்கள் தோல்வியடைந்து விட்டனர்' என்று அம்பேத்கர் ஒரு முறை வேடிக்கையாகச் சொன்னார். இவ்விரு இதிகாசங்களையும் வியாசரும், வால்மீகியும்தான் எழுதினர் என்று நமக்கெல்லாம் தெரியும். மூன்றாவது இதிகாசமான நவீன இந்தியாவின் அரசமைப்புச் சட்டம், அம்பேத்கரால் எழுதப்பட்டது. இம்மூவருமே தலித்துகள். சாதி இந்துக்களின் திறமை எங்கே போயிற்று?

உண்மையில், பத்ரிநாத் அல்லது சென்னை, வாரணாசி அல்லது திருப்பதியில் உள்ள மடங்களின் தலைமைப் பதவியை ஒரு பார்ப்பனர்தான் வகிக்கிறார். அப்பதவிகளுக்கென திறந்த போட்டிகள் எதுவும் அறிவிக்கப்படுவதில்லை. கிறித்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம்கள் என எல்லா சமூகங்களிலும் யார் வேண்டுமானாலும் மத குருக்கள் என்று சொல்லப்படும் தலைமைப் பதவியை அடைய முடியும். அதற்கென உள்ள சில நடைமுறைகளில் தேர்ச்சியடைந்தாலே நீங்கள் தலைமைப் பதவியைக் கைப்பற்றி விடலாம். ஆனால், வர்ணாசிரம தர்மம் என்று சொல்லப்படும் இனவெறி தத்துவத்தில் மதகுருவாக ஆவதற்கு, திறமை அடிப்படையிலான இடஒதுக்கீடு இல்லை. ஒரு மதத்தலைவர் என்பவர் அறிவாளியாக மட்டுமல்ல; சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை மதிக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இந்து குருமார்கள் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி வன்மத்தை மூட்டுகிறார்கள். இதுதான் இந்துக்களின் வாழ்வியல் முறை. எப்பொழுதுமே மனதளவில் நேர்மையற்றும் வஞ்சகத் தன்மையோடும் இருந்து கொண்டு, வெளியே தங்களை முற்போக்குவாதிகளாக இந்துக்கள் காட்டிக் கொள்வார்கள். இடஒதுக்கீட்டைப் பற்றி விவாதிக்கும் முற்போக்கு இந்துக்கள் எங்கே போனார்கள்?

தமிழ் நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில், 69 சதவிகிதத்திற்கும் மேலாகவே இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. அண்மையில் "பிரன்ட்லைன்' ஏட்டில் வெளிவந்த அறிக்கையின்படி, இங்கு ஒரே ஒரு நிறுவனம்கூட திறமையின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறது. கேரளா, ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில்கூட எந்த சமூக எதிர்ப்பும் இன்றி இடஒதுக்கீடு தொடர்கிறது. "தென்னிந்திய மாநிலங்களில் அதிகளவு இடஒதுக்கீடு இருந்தும், அவை வட மாநிலங்களை விட சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன' என்று புகழ்பெற்ற எழுத்தாளர் காஞ்சா அய்லையா குறிப்பிட்டுள்ளார். இங்கு இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவதில்லை. ஆனால், பெங்களூரை வடஇந்தியாவின் நடவடிக்கைகளுக்கான தளமாக மாற்றியதிலிருந்து, அங்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மோசமான போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன.

திறமையற்றவர்களால்தான் திறமை குறித்த விவாதம் நடத்தப்படுகிறது. பத்திரிகை ஆசிரியர்கள் ஒரு காலத்தில் சமூக அக்கறையுடையவர்களாக இருந்தார்கள். ஆனால், இன்று அவர்கள் தங்கள் முதலாளிகளுக்கு கட்டுப்பட்டு கிடக்கிறார்கள். பெரும்பான்மையான பத்திரிகை ஆசிரியர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு, தங்களுக்கான காயங்களை சாதித்துக் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். இத்தகைய பத்திரிகை ஆசிரியர்களும், தொலைக்காட்சியில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக விவாதங்கள் நடத்துவோரும்தான் இந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நினைக்கின்றார்களா? நம்முடைய ஆசிரியர்களின் திறமைகளைப் பற்றி நாம் விவாதிப்போம்.

அரசியல் தொடர்புகளின் மூலமே சிலர் தங்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். ஒரு புகழ் பெற்ற வார ஏட்டின் ஆசிரியருக்கு இந்துத்துவா பரிவாரங்களின் பின்னணி இருக்கிறது. அவருக்கு ஆங்கிலத்தில் இரண்டு பக்கங்கள்கூட செய்திக் கட்டுரை எழுதத் தெரியாது. இன்று அவருக்கு கீழ் பணியாற்றும் அப்பெரிய நிறுவனத்தில், எண்ணற்ற திறமை வாய்ந்த துணை ஆசிரியர்களும் செய்தியாளர்களும் புழுங்குவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இதே போல, பல்வேறு ஊடக நிறுவனங்களில் திறமை வாய்ந்த செய்தியாளர்களும் ஆசிரியர்களும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு இரையாகி வருகின்றனர்.

ஆனால், நமக்கு திறமையைப் பற்றி அறிவுறுத்துகின்றவர்கள் தங்களுடைய கல்விப் பின்னணியையும் தாங்கள் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றார்கள் என்பதையும் வெளிப்படுத்தியாக வேண்டும். சமூகத்தின் உணர்வுகளிலிருந்து எழுதுவதாக அவர்கள் சொல்கிறார்கள். ஆங்கிலேயர்களும் அய்ரோப்பிய கல்விமான்களும் இந்தியாவிற்கு வருகை புரிந்து, கிராமங்களுக்குச் சென்று தங்கி, அம்மக்களை மதித்து அவர்களின் பன்முகத் தன்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், சாதி இந்து அறிவுஜீவிகளின் நேர்மையற்ற தன்மையால் இங்கே சமூக விஞ்ஞானிகளே உருவாகவில்லை.இந்தியாவின் பத்திரிகை ஆசிரியர்களும், எழுத்தாளர்களும் ஏன் இனவெறியோடு நடந்து கொள்கிறார்கள்? தலித்துகள் தங்கள் வரலாற்றைத் தாங்களே எழுதுவதற்கு ஏன் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்? ஏனெனில், நம்முடைய வரலாறு பார்ப்பனியத்தின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டுவிட்டது. இந்துக்களின் வாழ்வியல் முறை, சமூக நீதியின் அனைத்துக் கதவுகளையும் மூடிவிட்டது.

சாதி இந்து செய்தியாளர்கள் இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கார்கில் போரின் போது, இந்திய ராணுவத்தின் அருகில் அமர்ந்து கொண்டு செய்தி வெளியிடுபவர்களால் இந்தியாவை புரிந்து கொள்ள முடியாது. எல்லா மக்கள் மீதும் சாதி இந்து எண்ணங்களைத் திணிப்பதன் மூலம் நீங்கள் அதைச் செய்ய முடியாது. எந்தவொரு செய்தியாளரும் இந்தியாவின் பன்முகத் தன்மையையும், சமூகப் பிரச்சனைகளையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சிகளுக்கு இதைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லை.

கடந்த 15 நாட்களாக தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு, அந்தச் செய்தி ஆசிரியர்களின் திறமையைப் பற்றிய கேள்வி எழுந்திருக்கும். நம்முடைய அறைகளில் உட்கார்ந்து கொண்டு 24 மணி நேரம் பிரமோத் மகாஜன் கதைகளை, எத்தனை வாரத்திற்கு தான் பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? ஓர் இளம் தலைவர் எதிர்பாராத மரணத்தால் இறந்துவிட்டார் என்பது உண்மைதான். ஆனால், அவரை ஒரு மக்கள் தலைவராக எப்படி ஏற்றுக் கொள்ள டியும்? இதே அளவுகோலுடன் அவர்கள் கன்னட நடிகரான ராஜ்குமாரைப் பற்றியோ, தமிழ் நாட்டின் எம்.ஜி.ஆரைப் பற்றியோ செய்திகளை வெளியிடவில்லையே! இதே தொலைக்காட்சிகளும் திறமை வாய்ந்த பத்திரிகை ஆசிரியர்களும், இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர்களான டாக்டர் கே.ஆர். நாராயணன் அவர்களுக்கோ, ஜெயில்சிங்கிற்கோ தங்கள் நாளேடுகளில் ஒரு பக்கத்திலோ அல்லது தொலைக்காட்சியில் அய்ந்து நிமிடங்களோ ஒதுக்கியதில்லை. அவர்கள் எதை நம்புகிறார்களோ அதையே நம்மையும் நம்பச் சொல்வார்கள். நல்ல வேளையாக, அறிவு விபச்சாரம் செய்யும் இந்தப் பத்திரிகையாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு, நாம் இன்னும் வாக்களிக்கத் தொடங்கவில்லை.

பல்வேறு பிற்படுத்தப்பட்ட மக்களையும், தலித் அறிவுஜீவிகளையும் இணைத்து இடஒதுக்கீட்டை திறமைக்கு எதிரானதாகச் சித்தரிக்கிறார்கள். "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சமூக சமத்துவத்திற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்பான ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியின் சாரம் இதுதான்: நெல்சன் மண்டேலா கறுப்பர்களுக்கு குறிப்பாக எதையும் பெற்றுத்தரவில்லை! இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில், தன்னுடைய சொந்த மக்களிடம் புகழ் பெற்றிருப்பதைக் காட்டிலும் வெளிநாட்டில் வசிப்பவர்களிடம்தான் மண்டேலா புகழ்பெற்று விளங்குகிறார். அதிகாரத்தில் பங்கேற்பது என்பது, இடஒதுக்கீட்டின் மூலம்தான் சாத்தியமாகும். ஆப்பிக்காவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து சுரண்டிய வெள்ளையர்கள், எந்தவித எதிர்ப்புமின்றி கறுப்பர் ஒருவரையே தலைவராக நியமித்துக் கொண்டு, தங்களுடைய அதிகாரத்தை நிலைநாட்டி வருகிறார்கள் என்றால், அங்கு மாற்றம் என்பதே நிகழவில்லை என்றுதானே பொருள்.

நெல்சன் மண்டேலா தான் விடுதலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவிற்கு 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தார். அப்பொழுது இடஒதுக்கீட்டிற்கு எதிராக சாதி இந்துக்கள் மோசமான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால், இப்பிரச்சினை குறித்து நெல்சன் மண்டேலா பேச மறுத்துவிட்டார். மிகத் தெளிவாக, தென்னாப்பிரிக்க கறுப்பர்களின் பிரச்சனையைவிட, மண்டேலாவின் பிரச்சனைதான் பெரிய பிரச்சனையாகப் பேசப்பட்டது. இதன் விளைவு, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் குழுவில் இன்றளவும் வெள்ளை ஆதிக்கம்தான் நீடிக்கிறது. அதிகார வர்க்கத்திலும் வெள்ளையர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிகார மாற்றம் என்பது, ஒரு பிரதமரிடமிருந்து இன்னொரு பிரதமருக்குச் செல்வதல்ல. மக்களுக்குப் போய்ச் சேரும் அதிகாரம்தான் உண்மையான அதிகார மாற்றம். தென்னாப்பிரிக்க தலைமை இந்தக் கோணத்தில் செல்லத் தவறி விட்டது. தற்பொழுதுள்ள அதிபர் மொபிக்கி, மண்டேலாவைவிட இதைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் என்று நம்பலாம்.

தென்னாப்பிரிக்காவிற்கு அருகே உள்ள ஜிம்பாப்வே நாட்டில் நிலச்சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, வெள்ளையர்களின் மனித உரிமை அமைப்புகள் ராபர்ட் காபேவுக்கு எதிராகத் திரும்பின. ராபர்ட் காபே இனவெறியராகவும் சர்வாதிகாரியாகவும் தூற்றப்பட்டார். ஒவ்வொரு முறையும் அவர் கறுப்பின ஏழைகளுக்கு நிலம் வழங்க முயற்சி செய்தபோதும், பன்னாட்டு அமைப்புகளால் அவர் கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டார். பெரும்பாலான ஆதரவுடன் அவர் தேர்தலில் வெற்றி பெற்றபோதும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஜனநாயகத்தைக் குறைத்து மதிப்பிட்டு, அதைத் தங்களுக்கானதாகப் பயன்படுத்திக் கொள்ளும் மேற்கத்தியவர்களின் வழக்கம் இது.

இடஒதுக்கீடும் நிலச் சீர்திருத்தம் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்ல வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிலமற்ற பெரும்பான்மை மக்களின் பிரச்சினையை, நிலச்சீர்திருத்தத்தின் மூலமே மய்ய நீரோட்டத்திற்குக் கொண்டுவர முடியும். வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட பல்வேறு தவறுகளை சரி செய்வதற்கு, அரசுப் பணிகளிலும் அதிகார மய்யங்களிலும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். இத்தகைய பிரதிநிதித்துவம் மக்கள் தொகைக்கேற்ப அமைந்திட வேண்டும். தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், சாதி இந்து மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்பது போன்ற பொய் வாதங்கள் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. ஆனால், பெருமளவிலான தலித்துகள், ஆட்சி நிர்வாகத்தில் சாதி இந்துக்களைவிட சிறப்பாகப் பணியாற்றுகின்றனர் என்பதே உண்மை.

இங்கு நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களை நினைவு கூறலாம். நீதிபதி பாலகிருஷ்ணனுடைய பெயரை குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் பரிந்துரை செய்தபோது, ஊடகங்கள் இதைக் கண்டித்து கூக்குரலிட்டன. "தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரில் சிறப்பு வாய்ந்த பல நீதிபதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீதித்துறையில் உரிய பிரதிநதித்துவம் அளிக்கப்பட வேண்டும்' என்று டாக்டர் நாராயணன் எழுதினார். "பாலகிருஷ்ணன் சிறந்த நீதிபதிதான். இருப்பினும் அவருக்குப் போதிய வயதில்லை என்று பதில் கிடைத்தது.' ஆனால், நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருந்தால், அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீண்டநாள் பணிபுரிந்த நீதிபதிகளுள் ஒருவராக இருந்திருப்பார். இதுதான் சூழ்ச்சியாளர்களை அச்சுறுத்துகிறது.

Pro reservation agitation நீதித்துறை தங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று சாதி இந்துக்கள் விரும்புகிறார்கள். பொதுநல வழக்கு என்ற பெயரில், அனைத்து செயல் முறை ஆணைகளையும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் ஒழித்துவிடலாம் என்று கருதுகின்றனர். பொதுநல வழக்குகளை உருவாக்குவது, சாதி இந்துக்களுக்கு கை வந்த கலை. இத்தகைய பொதுநல வழக்குகள் மூலம் அவர்கள் தலைவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.

அண்மையில் "அவுட்லுக்' ஏடு வெளியிட்டிருந்த ஒரு செய்திக் கட்டுரையில், ஒரு மூத்த தலித் அலுவலர் எப்படிப் பதவி இறக்கம் செய்யப்பட்டார் என்பதை விளக்கியிருந்தது. தலித் மக்களுக்கு எதிரான அநீதிகள் பெருமளவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இடஒதுக்கீடு இல்லை என்றால், சாதி இந்துக்கள் திறமையைப் பற்றிப் பேசப்போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, வடஇந்தியப் பார்ப்பனர்களும் அவர்களின் ஒட்டுண்ணிகளான பனியாக்களுமே இந்தியாவை ஆள வேண்டுமென்று விரும்புகின்றனர். அரசியல் சூழல்கள் மாறிவிட்டதால், அவர்கள் கல்வி நிலையங்களைக் குறிவைக்கின்றனர். நம்முடைய தொழில் நிறுவனங்களை எல்லாம் மார்வாகள்தான் குடும்ப நிறுவனங்களாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். ராகுல் பஜாஜ் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவரைத் தவிர, வேறு எவரையும் திறமையான நபராக அங்கீகரித்து நியமிக்கப் போவதில்லை.

தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பொறுத்த அளவில், அவர்களுடைய திறமையை யாரும் சந்தேகிக்க முடியாது. அவர்கள் பல்வேறு வணிக நிறுவனங்களையும் வங்கிகளையும்கூட நடத்தி வருகிறார்கள். மகாராட்டிராவில் உள்ள சித்தார்த்தா வங்கி, கொங்கனியில் உள்ள குன்பி கூட்டுறவு வங்கி, மத்தியப்பிரதேசத்தில் அம்பேத்கர் பெயரில் உள்ள வங்கிகளை எல்லாம் மிக வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். ஆனால், வெறும் இரண்டு சதவிகிதமே உள்ள அரசு வேலைவாய்ப்புகளில் மட்டும் திறமை போய்விடும் என்று காலம் முழுக்க இந்துக்கள் கூறி வருகின்றனர். ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராட்டிராவில் பழங்குடியினப் பெண்கள் செய்யும் அற்புதமான பொருட்களை விற்று சாதி இந்துக்கள் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், இந்தத் திறமைக்கு சாதி இந்துக்கள் ஏதும் விருது அளித்துப் பாராட்டுகின்றார்களா?

இடஒதுக்கீட்டை எதிர்த்து திறமை பற்றி பேசும் சாதி இந்துக்களை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஒரு நாட்டை நிர்வாகம் செய்வதற்கு நமக்கு பலவகைப்பட்ட, பன்முகத் திறமைவாய்ந்த மக்கள் தேவை. ஒரு சில பார்ப்பனர்களும், மார்வாகளும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. நீங்கள் மொழி, மதச் சிறுபான்மையினருக்கு முறையான பிரதிநிதித்துவத்தை வழங்கியாக வேண்டும். தலித் மக்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக பாகுபாட்டால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அரசு அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

இங்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுள்ளது. தலித் மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதரிப்பதால், சாதி இந்துக்களின் வெறுப்பை சந்திக்க வேண்டியுள்ளது. மண்டல் குழு பரிந்துரை நடைமுறைக்கு வந்தபோது, தலித் மக்கள் இயல்பாகவே இப்பரிந்துரைகளை ஆதரிப்பதில் முன்னணியில் இருந்தனர். அந்த நேரத்தில்தான் தலித் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களின் ஒற்றுமை உருவாகத் தொடங்கியது. ஆனால், எதிர்பாராத விதமாக சில அரசியல் தலைவர்கள் குறுகிய எண்ணத்தாலும், சுய நலத்தினாலும் இந்துத்துவ சதித்திட்டத்திற்கு ஆட்பட்டு விட்டனர். இந்துத்துவ முகாம்களில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைந்து கொண்டு தலித் மக்களை அச்சுறுத்தத் தொடங்கினர்.

உத்திரப் பிரதேசத்திலும் பீகாரிலும் "யாதவ'ர்களும், ஆந்திராவில் "திவாரா'க்களும், உத்திரப்பிரதேசத்திலும் அயானாவிலும் "குஜ்ஜார்'களுமாகிய பிற்படுத்தப்பட்ட மக்கள், தங்கள் பார்ப்பன மதத்தலைவர்களின் அடியாட்களாகச் செயல்பட்டனர். ஆனால், தங்களுடைய இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும் முக்கியப் போராட்டத்திற்கு, ஓர் ஆற்றல் வாய்ந்த தலைமை இல்லாததை உணர்ந்தனர். இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில், பிற்படுத்தப்பட்ட மக்கள், எந்தத் தயக்கமின்றி தலித் மக்களைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும். தலித் மக்களுக்கு அம்பேத்கர் இருக்கிறார். புலே அவர்களின் அடையாளச் சின்னமாக விளங்குகிறார். பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகளால் பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகுந்த பயனடைவார்கள்.

எனவே, அனைத்து தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து, சாதி இந்துக்களை எதிர்த்தாக வேண்டும். பார்ப்பனிய சக்திகள் தங்களின் ஆதிக்கம் தகர்ந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். அவர்கள் ஏற்கனவே அரசியல் தளத்தை இழந்துவிட்டார்கள். ஆகவே, சூழ்ச்சி நிறைந்த அரசியலை நடத்துகிறார்கள். எனவே, நாம் விவாதங்களை எழுப்பி சாதி இந்துக்களின் தகுதி திறமை விவாதத்தை முறியடித்தாக வேண்டும். தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் ஒன்றிணைந்து உரிய பதிலைத் தந்தாக வேண்டிய தருணம் இது. திறமை என்பது வேறு ஒன்றுமில்லை; துரோணச்சாரிகளின் பரம்பரை அது. அதற்கான காலம் கடந்துவிட்டது. இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் துரோணாச்சாரிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய நேரமிது.

இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அதிகார அமைப்பில் பங்கேற்காத வரை, இந்தியா முன்னேறாது. இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தக்கோரி நாம் அரசை நிர்பந்திப்போம். அரசுப் பணிகளில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்ற விவரத்தை, வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும்; ஒவ்வொரு பிரிவின் கீழும் முழு அறிக்கை வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். அரசு வகுத்துள்ள இடஒதுக்கீட்டின்படி, 27 சதவிகித பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். களும் 17.5 சதவிகித தலித் அய்.ஏ.எஸ்.களும் வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். இதற்கிடையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், நன்றாகப் படித்து தங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கட்டும்.

மருத்துவ மாணவர்கள் "பிளாக் மெயில்' செய்தால், அது இந்தியாவின் நலனைப் பாதிக்கும்; அவர்களுக்கு எதிராகவே அது திரும்பும். தமிழ் நாட்டிலுள்ள இடஒதுக்கீட்டில் நீதிமன்றம் தலையிடாத வகையில் அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்ததைப் போல, பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டையும் முழுவதுமாக இவ்வட்டவணையில் சேர்த்துவிட வேண்டும். கடந்த காலங்களில் பாதை தவறிய தலித் பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை, இத்தகைய விவாதங்கள் மூலம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தலித் மக்கள் தலைமையில் ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகங்களும் தங்களின் நீண்ட நாள் கனவான ஒற்றுமை குறித்து உணர, சாதி இந்துக்களின் போராட்டம் உதவட்டும். நாடாளுமன்றத்தில் உள்ள தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள், ஆர்த்தெழுந்து போராட வேண்டிய தருணமிது.

தமிழில் : புலேந்திரன்
நன்றி : countercurrents.org
Pin It