விக்கிரமன்: பெரும்பாலானவர்களின் ஆசைக்குரிய விஷயங்களில் ஒன்று மூங்கில். ஒரு சீனக் கவிஞர் "மனிதன் இறைச்சி இல்லாமல் வாழ முடியும், ஆனால் மூங்கில் இல்லாமல் இறந்துவிடுவான்" என்று எழுதினார். இந்தோனேசியர்கள் துண்டு துண்டாக்கப்பட்ட மூங்கில்களைக் கெட்டியான தேங்காய்ப்பால், மசாலாப் பொருட்கள் சேர்த்து 'குலாய் ரெபுங்' என்ற உணவு தயாரித்து உண்கின்றனர். சீனர்கள் பச்சை நிறப் பானம் ஒன்றில் மூங்கிலைப் பயன்படுத்துவதோடு, 'ஜோங்சி' எனும் வேகவைத்த பாலாடைகளைச் சுற்றுவதற்கும் மூங்கிலைப் பயன்படுத்துகின்றனர். கிழக்கத்திய கலாச்சாரங்களில் மூங்கில் தளிர்கள் பல்வேறு உணவு வகைகளில் பயன்படுவதில் வியப்பில்லை. உலகில் வேறு எவரையும் விட சீனர்கள் அதிக மூங்கிலை வளர்த்துப் பயன்படுத்துகின்றனர். சீனாவில் நானூற்றுக்கும் மேற்பட்ட வகையான மூங்கில்கள் வளர்கின்றன. அது மூங்கில் ராஜ்யம். சீனர்கள் மூங்கிலை விறகு, ஓடு, காகிதம், உணவு, தொப்பி, காலணி என்று பல விதங்களில் பயன்படுத்துகின்றனர். சீனாவில் பல வீடுகளில் தட்டு, குவளை, பாத்திரங்கள், கொள்கலன்கள் மூங்கிலால் செய்து பயன்படுத்தப்படுகின்றன. அங்கு மூங்கில் நீண்ட ஆயுளின் சின்னமாகும். ஷிண்டோ ஆலயத்தைச் சுற்றியுள்ள மூங்கில் காடு தீமைக்கு எதிரான புனிதத் தடையாகச் செயல்படுகிறது என்று ஜப்பானியர் நம்புகின்றனர். வியட்நாமில் நம்பிக்கை, நேர்மை, ஒற்றுமை மற்றும் தகவமைப்பு போன்ற நற்பண்புகளைக் குறிக்கிறது. ஒரு பழைய வியட்நாம் பழமொழி - "மூங்கில் வயதாகும்போது புதிய மூங்கில் முளைகள் தோன்றும்." இது நித்தியத்தின் சின்னமாக அங்கு உள்ளது. இந்தியாவில் மூங்கில் நட்பைக் குறிக்கிறது. மூங்கிலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? ஆர்வம்? வரவேற்பு?bamboosவீரப்பிரதாபன்: மூங்கிலுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு தொன்மையானது. கோதுமை, பருத்தி, பசு ஆகியவற்றுடன் மூங்கிலும் இயற்கையின் பரிசுகளாக முன்னேற்றத்திற்கு உதவின. நூறடி உயரம் வரை வளரும் புல் குடும்பத்தின் மிக உயரமான உறுப்பினர் மூங்கில். எந்தப் பணிக்கும் உகந்த பொருள். உறுதியான கணுப்பகுதி, நிமிர்ந்த லேசான உறுதிமிக்க தண்டுப்பகுதி, எளிதில் பயிரிடப்படுதல், குறுகிய பயிர்க்காலம் ஆகியன இதன் சிறப்பியல்புகள். தண்டுப்பகுதியை எளிதில் பிளந்துவிடலாம். காடுகள் முதல் உயரமான மலைகள் வரை எங்கும் வளரக்கூடியது மூங்கில். ஈரப்பதமிக்க மலைப்பகுதியில் ஆணிகளைப் பயன்படுத்தாமல் மூங்கிலால் மட்டுமே வீடுகள் வேயப்படுகின்றன. மூங்கில் அரிதாகவே பூப்பதால், சில கலாச்சாரங்களில் மூங்கில் பூத்தால் பஞ்சம் வரப்போவதாகக் கருதப்படுகிறது.

விக்கிரமன்: சாண்டில்யனின் 'மூங்கில் கோட்டை' நாவலில் பழங்காலச் சோழ மன்னரின் மூங்கில் கோட்டை அமைப்பு பற்றி குறிப்பு உள்ளது.

வீரப்பிரதாபன்: மூங்கில் பாலங்கள் எல்லாம் கட்டுமானப் பணிகளின் விந்தைகள். முக்கியமான பொருட்களான காகிதம், மரக்கரி, திரவ எரிபொருள் ஆகியவற்றைக் கொடுக்கிறது. சிறிது உணவாகவும், பெருமளவு உறைவிடமாகவும் பயன்படுவது மூங்கில். நிலமட்டத்திற்கு மேல் 50 சென்டிமீட்டர் உயரத்திற்கு வேர்ப்பகுதியுடன் சில கணுப்பகுதிகளைச் சேர்த்து வெட்டி எடுத்து, மழைக்காலத்திற்கு இரு மாதம் முன்பே நட்டால் மழையில் நன்கு வேரூன்றும். எந்த மூங்கில் செடியிலிருந்து இப்புதிய செடி வெட்டி எடுக்கப்பட்டதோ, அந்தத் தாய்ச்செடி பூக்கும்போது இதுவும் பூத்து மடிந்துவிடும். ஒரு மூங்கில் செடியிலிருந்து நிறைய விதைகளைப் பெறலாம். சில இருமுறை பூப்பதுண்டு.

விக்கிரமன்: அரிதாகப் பூப்பது எப்படி இருமுறை பூக்க முடியும்?

வீரப்பிரதாபன்: ஆய்வுகள் நடக்கின்றன. தன்னுடைய வளர்ச்சியை நிறுத்திவிட்டு மறுபடி பூப்பதற்கு இரண்டு வருடங்கள் வரை தேவைப்படுகிறது. கணுப்பகுதியில் இருந்து இலைகள் உதிர்ந்த பின் பூக்களாக வெடித்துச் சிதறுகிறது. நிறைய விதைகள் காடுகளில் சிதறும். விதைகள் 'மூங்கிலரிசி' என்று மனிதரால் உண்ணப்படுகிறது. விதைகள் விரைவில் சிறிய செடிகளாக முளைத்துவிடும். முதல் வருடம் புல்லைப் போல் இருப்பினும், வளர்ந்த பின் அதிலிருந்து வேறுபட்டிருக்கும்.

பெரியமனுஷன்: மூங்கில்குழலின் இசையை மூங்கில் ஊஞ்சலில், மூங்கில் அறையில் அமர்ந்து சுவைக்கும் அனுபவம் இனிமை.

வீரப்பிரதாபன்: சுற்றுச்சூழலுக்குக் கேடு தராமல் அது மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும்; அழிய மாட்டேன் என்று அடம்பிடிக்காது, பயமுறுத்தாது. மூங்கில் விசைப்பலகையும் (Keyboard), மூங்கில் சுட்டியும் (Mouse) ஆன்லைன் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. விலை சிறிது அதிகம்தான். பயன்பாட்டுக் காலத்திற்குப் பிறகு கழிவாக மிஞ்சாமல் இயற்கையுடன் இயற்கையாகக் கலந்துவிடும். அனைத்து விசைகளும் மூங்கில் பொத்தான்களாக, அதற்கே உரிய சிறந்த வண்ணத்தில் எளிதில் ஈர்க்கும் விதமாக வயர்லெஸ் (Wireless) தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. காலைக் கதிரொளி, மயக்கும் மாலை வெயில் இரண்டிலும் பளபளக்கும் மூங்கில் இலைகள் மெல்லிய தென்றலுக்குச் சிலுசிலுப்பதை "காற்றின் பிரார்த்தனை" என்று வர்ணித்தார் 19-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த யூஜின் மாஸெல் (Eugene Mazel). ஆசியாவில் செழித்து வளர்ந்த மூங்கில் அன்றுவரை ஐரோப்பாவில் வளர்க்கப்படவே இல்லை. தட்பவெப்ப நிலையே காரணம். பெரும்பாலும் மூங்கில் வகைகள் 24 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான தட்பவெப்பத்தில் தாக்குப்பிடித்து வளரும். இருபதாயிரம் அடி உயரத்திலும் சமாளித்து வளரும். ஆனால் ஒரு கண்டத்திலிருந்து வேறு கண்டத்திற்கு மூங்கில் கன்றுகள் எடுத்து வருவதற்குள் குருத்துகள் தேய்ந்து, வேர்கள் உலர்ந்து போய்விடும். ஆசிய நாடுகளிலிருந்து பிரான்ஸுக்குக் கொண்டுபோய் அவற்றை வளர்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அப்போது விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை. மாஸெல் மூங்கில் கன்றுகளைக் கப்பலில் இறக்குமதி செய்ய முயன்றார்; பலனில்லை. பிறகு அதிவேக நீராவி என்ஜின் கப்பல்களில் 1827-இல் பலவிதமான மூங்கில் கன்றுகள் வந்து சேர்ந்தன. பூந்தொட்டிகளில் பராமரித்தார். ஆண்டூஸ் (Anduze) நகரில் 1855-இல் பண்ணை அமைத்து மூங்கில் தோப்பாக்கி, அடுத்த பத்தாண்டுகளில் 'மாஸெல் மூங்கில் தோப்பு' என்று பாரிஸ் வரை புகழ்பெற்றது. பிறகு ஓரிரு கைமாறிய அத்தோட்டம், இன்று இருநூறு வகை மூங்கில்களோடு இருநூறு ஏக்கரில் சுற்றுலாத் தலமாக அங்கு உள்ளது.

விக்கிரமன்: நம் நாட்டில் அதுபோல ஏதும் நல்ல மாற்று முயற்சிகள் ஆக்கபூர்வமாக, அறிவியல் ரீதியாக நடைபெறவில்லையா?

வீரப்பிரதாபன்: ஏன் இல்லை? இதோ இந்த அதிவேகக் கால எந்திரத்தில் ஏறுக. நாம் இப்போது நம் நாட்டில் ஓர் இடத்திற்குச் செல்வோம்.

விக்கிரமன்: வந்துவிட்டோம். இது அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் மாஜூலி நகருக்கருகில் உள்ள 'மொலாய் காடு' அல்லவா? என்ன விசேஷம் இந்தக் காட்டில்?

வீரப்பிரதாபன்: இது முற்றிலும் மூங்கில் காடு. இயற்கையான காடு அல்ல; ஒரு தனிமனிதரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட மூங்கில் காடு. அசாமில் சாதாரண குடும்பத்தில் 1959-இல் பிறந்த ஜாதவ் பயேங் என்பவர், 19-ஆம் வயதில் இங்கு வந்தபோது அதிக வெயிலினால் மரங்களோ நிழலோ இன்றிப் பல பாம்புகளும் சில சிறு விலங்குகளும் இறந்துகிடப்பதைப் பார்த்து, தம்மால் முடிந்ததைச் செய்யலாம் எனக் கருதி 1980-இல் இருபது மூங்கில் கன்றுகளை நட்டு தினமும் தண்ணீர் விட்டு வளர்த்தார். தினமும் சில மூங்கில் கன்றுகளையும் மற்ற சில அரிய மரக்கன்றுகளையும் நடுவதை ஆசையுடன் செய்தார். மூங்கில் புதர் உருவானது. சிறிது சிறிதாக வளர்ந்து இன்று 1360 ஏக்கர் பரப்பளவில் மொலாய் மூங்கில் காடாக உள்ளது. பெருமளவில் மூங்கில்கள், மற்ற சில மரங்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன. இன்று நூற்றுக்கணக்கான யானைகள், ஆயிரக்கணக்கான மான்கள், புலி, சிறுத்தை (அல்லது யானைகள், மான்கள், புலி, காண்டாமிருகம்), போன்ற வனவிலங்குகளின் புகலிடமான இந்தக் காட்டைப் பற்றி 2008-இல் தான் வெளிஉலகம் அறிந்தது.

விக்கிரமன்: ஆச்சரியம்! அப்போது எப்படித் தெரிந்தது?

வீரப்பிரதாபன்: அருகில் இருந்த ஒரு காட்டில் இருந்த 115 யானைகளைத் திடீரென்று காணவில்லை. வனத்துறை அதிகாரிகள் ஆராய்ந்தனர், தேடினர், அலைந்தனர்; இங்கு வந்தனர். அவை இங்கு உல்லாசமாக உலவுவதைக் கண்டனர். இப்படி ஒரு காடு இருப்பதை அறிந்தனர். உருவாக்கிய ஜாதவ் பயேங் பற்றியும் அவருடைய சாதனை பற்றியும் உலகம் அறிந்தது. சாதாரண மனிதரின் அசாதாரண சாதனையைப் போற்றி 2015-இல் 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது.

விக்கிரமன்: யூஜின் மாஸெல் சாதனைக்குச் சற்றும் குறைந்ததல்ல ஜாதவ் பயேங் சாதனை. மகிழ்ச்சி. அவ்வளவு சிறப்பும் பயன்களும் கொண்டதா மூங்கில் மரம்… மன்னிக்கவும்… புல்?

வீரப்பிரதாபன்: ஆதிகாலத்தில் பல விதமான கட்டுமானப் பொருட்களை நம் முன்னோர் பயன்படுத்தினர். அவற்றுள் ஒன்று மூங்கில். இரும்புக்கு நிகரான உறுதி கொண்டது; நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் மூங்கிலைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் ஐம்பதாண்டு காலமாக அதன் உறுதியைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. மூங்கில் கொண்டு கட்டிடச் சுவர்கள் எழுப்பும் தொழில்நுட்பம் இப்போது ஆய்வாக உள்ளது. இது முன்பே நம் நாட்டில் பின்பற்றப்பட்ட நுட்பம். அது இரும்புக்கும் மரத்திற்கும் மாற்று. அறைக்கலன், நாற்காலி, மேஜை, சோபா எனப் பலவித கலன்கள் செய்யலாம். அழகான கலைப்பொருட்கள் தயாரிக்கலாம். வீட்டிற்குள் சுத்தமான காற்றும் புனிதமும் கொண்டுவரும் மூங்கில், பார்ப்பதற்கு வளையக்கூடியதாக இருப்பினும் மிக உறுதியானது. நில அதிர்வுகளைத் தாங்கக்கூடியது. உடைந்த பிறகு போட்டுவிட்டால் முழுதும் மக்கக்கூடியது; சூழலுக்குத் தீங்கு விளைவிக்காது. நிலத்தில் வளரும் மூங்கில்கள் மண்ணை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும். காய்ந்த இலைகள் மண்ணை மூடிப் பாதுகாக்கும்; மண்ணரிப்பு தடுக்கப்படும். பல நன்மைகள் இருப்பினும் நாம் அதைப் பயன்படுத்துவது குறைவு.

இரும்புக் கம்பிகளுக்கு மாற்று கட்டுமானப் பொருளாக மூங்கில் கழிகள் தற்போது பரிந்துரை செய்யப்படுகின்றன. இந்த இயற்கைக் கழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். இயற்கையாக வளரும் மூங்கில் கழிகள் எளிதில் பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகலாம். அறுவடை செய்த கழிகளை செங்குத்தாக துளையிட்டு, போராக்ஸ் (Borax), போரிக் அமிலம் (Boric acid) கலந்த தண்ணீர்க் கலவையில் 48 மணி நேரம் மூழ்கவைத்து (அமிழ்த்தி) எடுத்து, இயற்கை ஒளியில் உலர்த்த வேண்டும். இப்படிப் பதப்படுத்தினால் மூங்கில் கழிகளுக்கு மிகப்பெரிய ஆபத்தான துளைப்பூச்சிகளின் தாக்குதலிலிருந்து அது தப்பிவிடும். பிறகு அவற்றை பயனுள்ள மாற்று கட்டுமானப் பொருளாக மாற்ற முடியும். கட்டுமானக் கம்பிக்கு மாற்றாக, வெளிப்புறத் தூணாக, சுவரில் மரச்சட்டகம் அமைக்க, அறைக்கலன் செய்ய எனப் பலவிதமாகப் பயன்படுத்தலாம். எடை குறைவானதால் கையாள்வது எளிது. இடத்திற்குத் தகுந்தாற்போல் அறுத்துப் பயன்படுத்தலாம்; தனிக் கருவிகள் தேவையில்லை. மூங்கில் துண்டுகள், கழிவுகள் குப்பையல்ல; சூழலுக்குக் கேடல்ல. உரமாகவும் கரி தயாரிக்கவும் பயன்படும். அரிக்கும் தன்மையற்றவை; உப்புக்காற்று வீசும் பகுதிகளில் பயன்படுத்தலாம்.

பெரியமனுஷன்: நம் நாட்டில் மூங்கில் உற்பத்தியாகும் இடங்கள் எவை? அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?

வீரப்பிரதாபன்: உலகில் வேகமாக வளரும் தாவரம் மூங்கில்தான். இந்தியாவில் அதிகமாக மூங்கில் உற்பத்தியாகும் இடங்கள் நிறைய உள்ளன. அருணா கப்பகந்துலா, பிரசாந்த் லிங்கம் ஆகிய இருவரும் மூங்கில் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சமூகத் தொழில் நிறுவனம் நடத்துகிறார்கள். திரிபுரா மாநிலத்தின் கடலோரக் கிராம மக்கள் மூங்கிலை நம்பி வாழ்கின்றனர். கைவினைப் பொருள், சாரக்கட்டு, தற்காலிக இருக்கை, நாற்காலி ஆகியன தயாரிக்க மூங்கிலைப் பயன்படுத்திய நிலையில், புதுமையாக மூங்கிலை வீடு கட்டுமானத்துக்குப் பயன்படுத்த முடிவெடுத்துப் பயணம் செய்து, மூங்கில் பற்றி நன்கு அறிந்துகொண்டு, 2010-இல் 'பாம்பூ ஹவுஸ் இந்தியா' (Bamboo House India) நிறுவனம் தொடங்கினர். வனச்சட்டம் 1927-இன் படி, மூங்கிலைப் பழங்குடிகள் மட்டுமே வெட்ட முடியும்; அரசாங்கத்திடம் மட்டுமே விற்க முடியும். அரசு ஆண்டிற்கு 12 முறை அதைச் சந்தையில் ஏலம் விடும்.

ஹைதராபாத்தில் ஒரு பள்ளி மாடியில் கொலம்பிய வகை கலையில் மூங்கிலால் ஒரு கூடம் அமைத்தனர். இரண்டாண்டுகளுக்குள் நாடு முழுதும் 150 வீடுகள் கட்டி முடித்தனர். கல்லூரிகளில் மூங்கிலால் வீடு கட்டுவது எப்படி என்ற சிறப்பு வகுப்புகள் எடுக்கிறார் பிரசாந்த். உலகளவில் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருப்பினும், கூடை முடைய மட்டுமே மூங்கிலை இன்னும் பயன்படுத்துகிறோம். எல்லா வசதிகளும் கொண்ட மூங்கில் வீடு கட்டுவதற்கு இரண்டரை முதல் மூன்று லட்சம் வரை போதும். முப்பது வருடங்கள் தாங்கும். மூங்கில் நல்ல இயற்கை மணத்தை அளிக்கும். தொடக்கத்தில் இருந்தே கட்டுமானத்துக்குப் பயன்பட்டுவரும் முக்கிய கட்டுமானப் பொருள் அது. அறிவியல் தொழில்நுட்பம் வளர வளர இது போன்ற பசுமைக் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவது குறைந்துவிட்டது. சன்னல் திரைகளாகப் பயன்படுத்தலாம்; தரை அமைக்கலாம். பராமரிக்க எளிது; எளிமையாகச் சுத்தப்படுத்தலாம்; வழுக்காது. தண்ணீர் அதிகம் புழங்கும் இடங்களில் பயன்படுத்தலாம்; ஆரோக்கியத்துக்கு நல்லது. வயதானவர்கள், குழந்தைகள் புழங்க மூங்கில் தரைத்தளம் சரியான தேர்வு. நீடித்த உழைப்பைத் தரக்கூடியது.

விக்கிரமன்: உணவு, உறைவிடம் மட்டும்தானா? உடையும்...

வீரப்பிரதாபன்: மூங்கிலின் கூழ் (Pulp) எனும் செல்லுலோஸ் கூழிலிருந்து மூங்கில் இழை உற்பத்தி செய்யப்படுகிறது. வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஏதும் பயன்படுத்தாமல் இயற்கையாக மிகுதியாக வளரக்கூடிய மூங்கில் தாவரத்தின் இழையைப் பயன்படுத்தி நெய்யப்படும் ஆடை மென்மையாக, லேசாக, வசதியாக இருக்கும். பருத்தியை விட மென்மையான இந்த இழை பட்டைப் போன்ற பதம் கொண்டிருக்கும். வியர்வையை அப்படியே உறிஞ்சிக்கொள்ளும். மூங்கிலாடை நொடிப்பொழுதில் உலர்ந்துவிடும். காற்றோட்டம் காரணமாக நீண்ட நேரம் நம்மை உலர்வாக வைக்கும். கோடையில் சூழல் வெப்பநிலையை விட இரண்டு டிகிரி குறைவாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் உடலை வைக்கும். பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதால் இது ஆரோக்கியமானது. 50 சலவைகளுக்குப் பிறகும் இதன் தரம் நீடிக்கிறது. தோல் தடிப்புகள், காய்ப்பு போன்ற ஒவ்வாமை விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. மூங்கில் இழை ஆடைகள் இன்னும் பரவலாகவில்லை. மூங்கில் நூலில் ஆர்கானிக் நூலுடன் இணைத்துத் தயாரிக்கப்பட்ட ஆடைகள் உடலின் ரத்த ஓட்டத்தைச் சமச்சீராக வைக்கும். புடவை, சுடிதார், வேட்டி, சட்டை, குழந்தை ஆடைகள் ஆகியன தயாரிக்கலாம்.

பெரியமனுஷன்: மூங்கில் பூக்கக்கூடாது, கெடுதல் என்பார்கள். அது...

வீரப்பிரதாபன்: 'பசுமைத் தங்கம்' எனப்படும் மூங்கில் மரம் புல் வகை. புல்லும் பூக்கும். பஞ்சகாலத்தில் ஏதேனும் மூங்கில் தோட்டம் பூத்திருக்கலாம். அதை வைத்து மூங்கில் பூத்தால் பஞ்சம் என்று கருதியிருப்பார்கள். பூக்கும் மூங்கில், பூக்கா மூங்கில் என இரு வகைப்படும். முள் மூங்கில், கல் மூங்கில் ரகங்கள் பூக்கும் வகை. விதை மூலம் நாற்றுகள் உருவாக்கித் தரமான கன்றுகளைத் தேர்வு செய்து நட வேண்டும். முள்ளில்லா வகைகளாகிய பல்கூவா (Bambusa balcooa), வல்காரிஸ் (Bambusa vulgaris) ஆகியன பூக்காதவை. நாற்பதிலிருந்து அறுபது ஆண்டுக்குள் ஒரே ஒரு முறை வெளிர் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கின்றன. மூங்கில் பூ பூத்தால் அது முற்றிவிட்டது என்று பொருள். இந்தப் பூவிலிருந்து நெல்மணிகள் காய்க்கின்றன. அத்துடன் மூங்கில் இறந்துவிடுகிறது. அந்த நெல்மணிகள் 'மூங்கில் நெல்' எனப்படுகிறது. மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் மூங்கிலரிசி முக்கிய உணவாக இருந்துள்ளது. பழங்குடிகள் மூங்கில் நெல்லை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தினர். மூங்கில் நெல் பற்றிய குறிப்புகள் புறநானூற்று நூலில் உள்ளன. மூங்கில் நெல், பலா, வள்ளிக்கிழங்கு, மலைத்தேன் ஆகியன உழவரால் உழப்படாமல் விளையக்கூடிய உணவுகள் என்று கூறுகிறது. நாமக்கல் கொல்லிமலையில் இன்றும் மூங்கில் நெல், மலைமக்கள் மூலம் அதிகம் கிடைக்கிறது. பளியர் பழங்குடி மக்கள் சேகரித்து விற்பர். பார்ப்பதற்கு வயலில் விளையும் நெல்மணிகள் போன்று பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்த நெல்லின் உமிக்குள் கோதுமை வடிவில் அரிசி இருக்கும். வெளியே அரிசி, உள்ளே கோதுமை. மற்ற அரிசி ரகங்கள் போலவே இதையும் சாப்பிடலாம். மரஉலக்கை கொண்டு குத்திப் புடைத்து அரிசியைப் பிரித்தெடுத்து உண்ணலாம். உடல்திடத்திற்கு மிக நல்லது. தற்போது மூங்கில் மரம் ஆயுள் முடிவதற்குள் வெட்டப்பட்டு விடுவதால் மூங்கில் நெல் கிடைப்பது அரிதாகிவிட்டது. அரிதெனில் விலை கூடும் அல்லவா? மூங்கில் வனப்பரப்பு குறைந்து வருவதால் காட்டு யானைகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன. அவற்றின் விருப்பமான உணவு மூங்கில். பாண்டா கரடிகளின் விருப்ப உணவும் மூங்கில்தான்.

விக்கிரமன்: மூங்கிலில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளன?

வீரப்பிரதாபன்: வேகமாக வளரக்கூடிய மூங்கிலில் ஆயிரம் இனங்கள் உள்ளன. ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் இயற்கை முறையில் வளர்கின்றன. இந்தியாவில் 130 இனங்கள் தமிழக மலைப்பகுதிகளில் பரவலாகக் காணப்பட்டன. நம் நாட்டில் ஐந்து வகை மூங்கில்களைப் பயிரிட முடியும். வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையதாயினும், கடும் வறட்சியில் சில காய்ந்துவிடும்; இயற்கை. அளவில் சிறிய சிறுமூங்கில் வகை உயரமாக வளராது. துளைகள் இல்லாத மூங்கில் வகைகள் கெட்டியாக, கடினமாக, வலிமையாக இருக்கும்; அதில் துளையிடுவது கடினம். முள் இருக்கும் முள்மூங்கில் வகைகளை வேலிகளாக வளர்க்கலாம்; வறட்சியைத் தாங்கும். பார்க்க அழகாக இருக்கும் மஞ்சள் மூங்கில் வகையை நகரங்களில் சில வீடுகளில் 'வாஸ்து மூங்கில்' என்று வளர்ப்பர். பக்கவாட்டில் பச்சைக் கோடு நீண்டிருக்கும் இந்த மஞ்சள் மூங்கில் வலிமை குறைந்தது. செதுக்கிய வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் போல் மளமளவென்று வடிவமுள்ள கணு மூங்கிலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்; கரும்பு போல கணுக்களுடன் தோற்றம் தரும். சிறுமூங்கிலைக் கொண்டு கூடைகள் செய்யலாம்; சில ஆண்டுகள் தாங்கும். கரையான்கள் மூங்கிலை அதிகம் அரிப்பதில்லை. செடி கொடிகளுக்கு வேலியாக மூங்கில்களை நடலாம். கத்தி, மண்வெட்டி போன்றவற்றுக்குக் கைப்பிடிகளாகப் பயன்படுத்தலாம். மூங்கில் இலைகள் பசுமையாக இருக்கும்போது கால்நடைகள் விரும்பி உண்ணும்; மக்கிவிட்டால் மண்ணுக்கு வளம் சேர்க்கும். பயன்கள் பரவலாகும்போது செயற்கையின் மாற்றாக இயற்கை இருக்கும்; சூழல் மாசு குறையும்.

மிதமான வறண்ட பகுதிகளில் கல்மூங்கில் அல்லது 'டென்ட்ரோகலாமஸ்' (Dendrocalamus) என்ற சிறுவாரை வகை மூங்கில் வளரும். ஈரம் செழிப்பான பகுதிகளில் பெருவாரை எனும் 'பம்பூசா அருண்டினேசியா' (Bambusa arundinacea) வகை காணப்படும். இந்த வகை மூங்கிலின் தண்டுகள் முட்களுடன் கூடிய கிளைகளைக் கொண்டவை. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் முட்கள் இல்லாத மூங்கில் வகைகள் உள்ளன. மூங்கில்களில் சில இனங்கள் ஒரே நாளில் சுமார் முப்பது சென்டிமீட்டர் வரை வளரக்கூடிய தன்மை உடையவை. தமிழ்நாட்டில் கல்மூங்கிலும் முள்மூங்கில் எனும் பொந்துமூங்கிலும் பரவலாக விளைகின்றன. குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து லாபம் தரக்கூடிய புதிய முள்ளில்லா ரகங்கள் 'வல்காரிஸ்' மற்றும் 'பல்கோவா' போன்றவை தற்போது பரவலாகப் பயிரிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த முள்ளில்லா மூங்கில்கள் நட்ட நான்காவது ஆண்டிலிருந்து அறுவடைக்குத் தயாராகி நாற்பது வருடம் வரை தொடர்ந்து விளைச்சல் தரும். 'டுல்டா' (Tulda) மற்றும் 'நூட்டன்ஸ்' (Nutans) ஆகிய இரண்டு வகைகளும் சிறப்பாக வளரும் தன்மையுள்ளவை. வல்காரிஸ் எனும் பச்சை ரக மூங்கில் தண்டுகளில் சிலிக்கா அளவு குறைவாக உள்ளதால் மரக்கூழ், செல்லுலோஸ் அதிகம் தயாரிக்க மிக ஏற்றது. "உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம்" என்று குறிஞ்சிப்பாட்டில் வரும் 'உந்தூழ்' என்பது பெருமூங்கில். "விரிமலர் ஆவிரை வேரல் சூரல்" என்ற வரியில் வரும் 'வேரல்' என்பது சிறுமூங்கில். குறுந்தொகையில் 'உந்தூழ் வேலி' என்று மூங்கிலை வேலியாக உடைய மலைத்தலைவன் பற்றிய குறிப்பு உள்ளது. சங்க இலக்கியங்களில் கழை, வேதிர், வெதிரம் என்றெல்லாம் வழங்கும் மூங்கிலை, திருஞானசம்பந்தர் 'வேய்' என்று "வேயுறு தோளி பங்கன்" என்ற வரியில் குறிக்கிறார். திருக்காளத்தியில் முகலியாற்றின் கரையில் கோங்கம், குரவம், கொன்றையோடு மூங்கிலும் அணையும் அழகை அவர் பாடுகிறார். சங்க காலத்தில் மக்கள் வாழ்வோடு இந்தப் பெரும்புல் இணைந்திருந்தது.

பெரியமனுஷன்: எப்படிப்பட்ட நிலத்தில் மூங்கில் வளர்க்க முடியும்?

வீரப்பிரதாபன்: மண்ணின் pH அளவு 5.5 முதல் 8 வரையுள்ள மண்ணில் மூங்கில் வளர்க்கலாம். வடிகால் வசதி உள்ள மண்வகைகள், வண்டல், சரளை, கண்மாய்க்கரை, ஓடை வண்டல் கலந்த களிமண்ணில், படுகை நிலங்களில், மணற்பாங்கான நிலங்களில் மூங்கில் வளரும். காற்றோட்டம் இல்லாத, நீண்ட நாள் நீர் தேங்கும் பகுதிகளில் சரியாக வளராது. சூரிய ஒளி அதிகமாகவும், மழை நன்கு பெய்யும் இடங்களிலும் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழை குறைவு எனில் நீர்ப்பாசன வசதிகள் செய்து வளர்க்கலாம். மேட்டுப்பகுதிகளிலும் மலைச்சரிவுகளிலும் நன்கு வளரக்கூடியது; பயன் தரக்கூடியது.

விக்கிரமன்: வளர்க்கும் வழிமுறைகள், சிக்கல்கள்…?

வீரப்பிரதாபன்: விதையில்லா இனப்பெருக்கம் மூலம் நாற்றுகள் உருவாக்கலாம். மூங்கில் கரணைகள் மற்றும் பக்கக்கிளைகள் மூலம் நாற்றுகள் உருவாக்குவது எளிய முறையில் அதிக நாற்றுகள் உற்பத்தி செய்யச் சிக்கன வழிமுறை. திசுவளர்ப்பு முறை மற்றும் ரைசோம் முறைகளிலும் வளர்க்கலாம். மூங்கிலைப் பெரும்பாலும் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. ஒரு சில பகுதிகளில் கரையான், வெள்ளைப் புழுக்கள் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பெரியமனுஷன்: மூங்கிலின் பூ, தண்டு அமைப்பு எப்படி?

வீரப்பிரதாபன்: போயேசி (Poaceae) குடும்பத்தைச் சேர்ந்த கல்மூங்கில் கெட்டி மூங்கில் எனப்படும் சிறுமூங்கில். மூங்கில் பட்டை தடித்திருக்கும்; நடுவில் வெற்றிடம் இருக்காது. பக்கக் கிளைகள் குறைவு. வறண்ட பகுதியில் வளரும்; அடர்த்தி இருக்காது. பொந்து அல்லது கூட்டு மூங்கில் எனும் பெருமூங்கில் ஈர இடங்களில் அடர்த்தியாக வளரும். வளமான மண்ணில் வளர்ந்து நீண்ட காலம் வாழும்; பட்டையின் தடிப்பு குறைவு, வெற்றிடம் இருக்கும், அதிக முள்கிளைகள் இருக்கும். ரைசோம் (Rhizome) எனும் தண்டுக்கிழங்கு உண்டு; விதை உண்டு. விதை முளைத்துக் கிழங்கு உருவாகி, கிழங்கிலிருந்து முளைகள் தோன்றி மூங்கிலாகும். வளர்ந்த மூங்கில் தண்டு ஆங்கிலத்தில் 'கல்ம்' (Culm) எனப்படும்; கழி எனலாம். பூங்கொத்துகள் 'ஸ்பைக்' (Spike) எனப்படும். ஒவ்வொரு மங்கிய வெண்ணிற மலரும் 'க்ளூம்' (Glume) எனும் உறையால் மூடப்பட்டிருக்கும்; உறைமூடிய மலர். கரும்புப்புல் தோகை போல இந்த மூங்கிலுக்கும் சிறப்பான இலைகள் உள்ளன; அது கால்நடைத் தீவனம். மாடு, குதிரை, யானை விரும்பி உண்ணும்.

விக்கிரமன்: திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர், திருநெல்வேலி ஆகிய தலங்களில் தலவிருட்சமாக மூங்கில் உள்ளது. திருநெல்வேலிக் கோயில் 'வேணுவனம்' எனப்படுகிறது. 'வேணு' என்பது மூங்கிலின் வேறொரு பெயர்; புல்லாங்குழல் என்றும் கூறலாம். இளம் மூங்கில் குருத்துகளைச் சாறெடுத்துப் புண்ணில் வைத்துக்கட்டுவார்கள். இளம் குருத்து இலைகளைக் காய்ச்சிக் குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் அகலக் கொடுப்பதுண்டு. பசுங்கன்றுகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்க மூங்கில் இலையோடு மிளகு, உப்பு சேர்த்துக் கொடுப்பதுண்டு. இளங்குருத்துகளில் ஹைட்ரோசயனிக் அமிலம் மற்றும் பென்சாயிக் அமிலம் உள்ளன. செரிமானம் சார்ந்த பிரச்சினைகளுக்கு இளங்குருத்துகளை ஊறுகாய் போல செய்து கொடுப்பர்.

வீரப்பிரதாபன்: மூங்கில் உப்பு பற்றி அறிவீரா? மூங்கில் குழாயில் நீர் வற்றிய நிலையில் ஓர் அங்குல அகலத்திற்கு உப்பு படிந்து கட்டியாக இருக்கும். இந்த உப்பை 'தபாஷீர்' (Tabasheer) அல்லது 'மூங்கில் மன்னா' என்பர். அதிகளவு சிலிக்கன் டை ஆக்சைடும், இரும்பும், கால்சியமும் உள்ளன. காய்ச்சல், இருமல், மூட்டுவலி, க்ஷயரோகம் (காசநோய்) ஆகியவற்றுக்கு இந்த தபாஷீருடன் திப்பிலி, இலவங்கம் சேர்த்துப் பொடித்து மருந்தாகத் தருவதுண்டு. நீரிழிவு நோயாளிகளுக்குத் தகுந்த நல்லுணவு மூங்கிலரிசி. மூங்கில் வேரை அரைத்துச் சொறி, சிரங்கு, படைகளுக்குப் பற்றுப் போடுவதைப் பார்க்கலாம். வேரை உலர்த்திக் குடிநீரில் கொதிக்கவைத்துக்காய்ச்சல் தணியத் தருவர். மூங்கில் கிழங்கிலிருந்து கிளைத்து வரும் முளை நல்லதொரு உணவுப்பொருள். மலைமக்கள் அதைக் கறியாகச் சமைத்து உண்பர். புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், நியாசின் சத்துகள் உள்ளன. பச்சையாக உண்ணக் கூடாது; நஞ்சாகிவிடும். வேகவைத்தால் நஞ்சு சிதைந்து அழிந்து உணவாகிவிடும். மூங்கில் குருத்தின் உறையில் அடர்ந்துள்ள ரோமங்கள் கொடிய நஞ்சாகும்; அறவே நீக்கிவிட்டு குருத்தைப் பயன்படுத்த வேண்டும். அரிசி, கோதுமையை விட மூங்கிலரிசி சத்துள்ள உணவு என்பர். கூடை, ஏணி, விசிறி, முறம், பந்தல், சாரம், பாலம் எனச் சில விஷயங்களில் மூங்கில் பயன்பட்டாலும் இன்னும் அதன் முழுப் பயன்பாட்டில் நாம் ஈடுபடவில்லை. காகிதம், ரேயான் தயாரிப்புத் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருள் மூங்கில். பெரும்பாலும் 3 வருடம் வளர்ந்த கல்மூங்கில் பயன்படுகிறது. மூங்கில் வளரும் இடங்களில் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது; ஆறு, குளக்கரைகளில் வளர்க்கலாம். மலைப்பிரதேசங்களில் வளர்ப்பதால் மண்சரிவு ஏற்படாது. தன்னைச் சுற்றியுள்ள காற்றைச் சிறப்பாகச் சுத்தப்படுத்தும் குணமுடையது. 'பீமா' என்று ஒரு புதிய வகை மூங்கில் கோவையில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டு பரவலாகியுள்ளது. சூழலுக்கு ஏற்ற, பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, புவி வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய வகை 'பீமா மூங்கில்' வகை.

விக்கிரமன்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள் காற்றை உள்வாங்கி இசையும் கொடுக்கும், உலகையும் காக்கும். வேறு ஏதும் புதுமை?

வீரப்பிரதாபன்: உலகில் தினமும் எண்ணற்ற வடிவங்களில் கைப்பேசிகள் அறிமுகமாகிக் கொண்டிருந்தாலும், முழுவதும் மூங்கிலால் ஆன கைப்பேசியை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மாணவர் ஒருவர் உருவாக்கினார். உடையாத தன்மையுடன் மிகவும் வழவழப்புத் தன்மையுடன் இருக்கும் இளம் மூங்கில் மரங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினார். கேமரா உள்ளிட்ட நுட்பங்களும் இடம்பெற்றன மூங்கில் போனில். நெதர்லாந்து தூதரகத்தின் ஆதரவில் சென்னை அருங்காட்சியகம் 'AARDE' அமைப்புடன் இணைந்து மூன்று நாள் மூங்கில் பட்டறை நடத்தியது. குழந்தைகளை இயற்கை மற்றும் வரலாற்றுடன் இணைக்கும் ஒரு நன்முயற்சி இது. 'சிறப்புக் கண்ணாடி' எனப்படும் மூங்கிலுடன் பழக்கப்படுத்தி அதன் அவசியத்தைப் புரியவைக்கும் விதமாக இந்த மூங்கில் பட்டறை வடிவமைக்கப்பட்டது. ஒரு பகுதியாக மூங்கிலின் பாரம்பரியப் பயன்பாடுகள் பற்றியும், மற்றொரு பகுதியாக நவீனப் பயன்பாடுகள் பற்றியும் விளக்கப்பட்டது. மூங்கில் பல்வேறு பயன்கள் கொண்டது. அது நிலையான, நம்பகமான, தொடர்ந்து கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருள். அதை இரும்புக்கு மாற்றாகவும் பயன்படுத்த முடியும். குழந்தைகள் மூங்கில் முளையை வெட்டுவதில் தொடங்கி தேவையான அளவுப்படி அடிப்படை அமைப்பு தயாரித்து இறுதி வடிவம் கொடுப்பது வரை முழுமையான செயல்முறையை அறிந்தனர்.

மூங்கிலின் பிரபலமான பயன்பாடு காகிதத் தொழிலும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதும் ஆகும். மூங்கில் கரி காற்றில் துர்நாற்றத்தை உறிஞ்சவும், பூஞ்சைகளைத் தடுக்கவும், ஈரப்பதத்தை அகற்றவும் பயன்படுகிறது. இதன் அருமை ஜப்பானில் பரவலாக அறியப்பட்டுப் பயன்படுகிறது. இதன் நவீன பயன்பாடு டிசைனர் தயாரிப்புகள், பேக்கேஜிங், மூங்கில் துணிகள், ஜவுளித்தொழில் என்று தொடர்கிறது. மிசோரம் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை ஆராய்ந்தபோது, கொறித்து உண்ணும் எலிகளுக்கு மூங்கில் பூக்கும் காலத்தில் மூங்கில் அரிசி உணவு அதிகம் கிடைப்பதால் அவை பெருகின என்று அறியப்பட்டது. எலிகளால் நஷ்டம் ஏற்படுகிறது; நோய்கள் பரவுகின்றன. இளம் மூங்கில் குருத்துகள் பாண்டா கரடி, சிவப்புப் பாண்டா, லெமூர் போன்ற விலங்குகளின் முதன்மை உணவாகும். எலிகளும் அவற்றை உண்கின்றன. எலிகளைக் கட்டுப்படுத்திவிட்டால் வேறு பிரச்சினை இல்லை. மூங்கில் பூக்க ஆரம்பித்ததும் அதன் அசுர வளர்ச்சி குறைந்து மெதுவாக வளரும் தாவரங்களில் ஒன்றாகிவிடும்.

உலகம் முழுதும் ஒரே காலகட்டத்தில் பூக்கும் தன்மை கொண்டது மூங்கில். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உடலமைப்பை இழந்தவர்கள் சீரான உடலமைப்பும் வலிமையும் பெற மூங்கில் அரிசி சாப்பிடலாம். உடலை இரும்பு போல உறுதியாக்கும்; முறையாக உண்ண வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர். பொங்கல், பாயசம் போல செய்து சாப்பிடலாம். மூங்கிலின் இலைகள், வேர், கன்றுகள் மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன. மூங்கில் நோயெதிர்ப்புத் தன்மை கொண்டது. இதன் மூலம் மருத்துவம் சார்ந்த முதல் உதவிப் பொருட்களைத் தயாரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். உடலில் சீழ் பிடித்த பாகங்களுக்குப் பற்றாகப் பூசினால் விரைவில் குணமாகும். அந்தச் சாற்றில் சிலிக்கா அதிகளவில் உள்ளது. மயக்கம், பித்தம் இவற்றைச் சரிசெய்து செரிமானத்தைத் தூண்டி எலும்புகளை வலுவாக்கும். ஏணிகள் தயாரிக்கப் பெரும்பாலும் மூங்கில்தான் உதவுகிறது. தற்போது முட்கள் இல்லாத மூங்கில் உருவாக்கப்பட்டுப் பயிரிடப்படுகிறது. தற்போது மூங்கில் செடிகளை வீட்டிலேயே வளர்க்கும் முறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சீன மூங்கில்களை ஒரு பூந்தொட்டியில் வளர்க்கலாம். இப்படி வளர்க்கப்படுபவை விற்பனைக்கு வருகின்றன. அழகுக்காக, அதிர்ஷ்டத்திற்காக அவற்றை வீட்டில் வளர்க்கிறார்கள். வாஸ்து செடிகளில் அதற்கு முக்கிய பங்கு உண்டு; பரிசாகக் கொடுக்கப்படுகிறது. ஈரப்பதமான சூழலில் தண்ணீரில் இருக்கும்படி அந்த அதிர்ஷ்ட மூங்கில் செடியை வளர்க்க வேண்டும். வீட்டில் விலங்குகள் இதை உண்ணாமல் பராமரிக்க வேண்டும். இந்த மூங்கில் செடியில் நச்சுத்தன்மை கொண்ட டாக்ஸிக் (Toxic) அமிலம் இருக்கிறது. ஒரு நாளுக்கு அரை மணி நேரம் வெயிலில் வைக்க வேண்டும். பார்க்க மகிழ்ச்சி, வீட்டுக்கு அழகு, காற்றுக்குத் தூய்மை. நன்கு வளர்ந்து முற்றிய மூங்கிலிலிருந்து எண்ணற்ற பொருள்களைச் செய்ய முடியும். குறைந்த முயற்சியில் எளிதாகக் கையாண்டு பொருள் ஈட்ட முடியும். கிராமப் பொருளாதாரம் மேம்பட மூங்கில் பயன்படும். பூவுலகத் தேவதை மூங்கில் சூழல் நண்பன், ஆதலால் எதிர்மறை விளைவுகள் ஏதும் இல்லை. காட்டரண், வெட்டுமரம், இயற்கை வேலி, மரக்கூழ் மூலம், மூங்கில் வீடுகளுக்குக் கட்டுமானப் பொருள், புவி நண்பன்.

- புழல் தி.பாலகுமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.