30.12.2012

இட்லி,தோசை இந்தியாவின் பொது உணவு

இன்று காலை 5.00 மணிக்கு எழுந்து, முதல் நாள் நிகழ்வுகளைத் தொகுத்து எழுதினேன். பிறகு ஆயத்தமாகி, எட்டு மணிக்கெல்லாம் வெளியில் புறப்பட்டேன். தொடர்வண்டி நிலைய உணவகத்தில் காலை உணவு இட்லி. எப்படி இருக்குமோ? என்று அஞ்சி, முதல் நாள் சாப்பிடவில்லை. இன்று, இட்லியைச் சோதித்துப் பார்த்துவிடுவது என்ற முடிவோடு வாங்கினேன். இதுவரை நான் பார்த்து இராத வடிவத்தில் இருந்தது இட்லி. ஆனால், பூப்போன்ற மென்மை. அயல்நாட்டவர்கள், இட்லியை ரைஸ் கேக் என்றும் சொல்வார்கள். அதுபோல இருந்தது, கோவா இட்லியின் வடிவம். ஒரு இட்லி 10 ரூபாய். இரண்டு இட்லி, வடை 30 ரூபாய். அதுவே போதுமானது.

சாந்த துர்கா ஆலயம்எனது பக்கத்து இருக்கையில், ஒரு வெள்ளைக்காரக் குடும்பம், நான்கு பேரும், இட்லியை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அழுது கொண்டு இருந்த 7 வயதுச் சிறுவனிடம், இட்லியைக் காட்டி, it is so nice சாப்பிட்டுப் பார் என்று ஊட்டிக் கொண்டு இருந்தார்கள். அவன், இட்லியை வியப்போடு பார்த்து, வாயைத் திறந்தான். அருமையான காட்சி.

இட்லி இப்போது, தமிழகத்துக்கோ அல்லது தெற்கு இந்தியாவுக்கோ மட்டுமே உரித்தான உணவு அல்ல. இட்லி, தோசை, வடை எல்லாம், இப்போது, வட இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் கிடைக்கின்றது. அது இந்திய உணவு வகைகளுள் ஒன்றாக மாறிவிட்டது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நிறையத் தொழிலாளிகள் தமிழகத்துக்கு வந்து போவதால், அங்கும் இட்லி, தோசை ஊடுருவி இருக்கும் என்று கருதுகின்றேன். வேலூர், அப்பல்லோ மருத்துவமனைகளில் காணப்படுகின்ற வடகிழக்கு மாநிலத்தவர்கள், இட்லி, தோசையை விரும்பிச் சாப்பிடுவதைப் பார்த்து இருக்கின்றேன்.

மட்காவ்ன் தொடர்வண்டி நிலையத்துக்கு வெளியே வராமல், தொடர்வண்டி நிலையத்தின் முதலாவது நடைமேடையில் உள்ள படிகளின் வழியாக ஏறி, பின்புறம் சென்று, படிகள் இல்லாமல் சாய்வாக உள்ள தளத்தின் வழியாகக் கீழே இறங்கி வெளியில் வந்தேன். இப்படி ஒரு நீண்ட சாய்தளத்தை நான் வேறு எங்குமே பார்த்தது இல்லை.

அங்கிருந்து கீழே இறங்கினால், ஏராளமான பைலட்டுகள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்குள் வகுத்துக் கொண்ட வரிசைப்படிதான் புறப்படுகின்றார்கள். 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு பைலட்டைத் தேர்வு செய்து, அவரது வண்டியில் ஏறிக் கொண்டேன். சற்றே வயதானவர்கள்தாம், மெதுவாக, பொறுப்பாக ஓட்டுவார் என்பது என் கருத்து. நான் அச்சம் இன்றிப் பயணிக்க வேண்டுமே? நான் எதிர்பார்த்தபடியே அவரும் மெதுவாக ஓட்டினார்; வித்தை எதுவும் காட்டவில்லை.

தில்லி வேதனை

பாவ்லோ டிராவல்ஸ் சென்றேன். தெற்கு கோவா சுற்றுப்பயணத்துக்கான சீட்டைப் பெற்றுக் கொண்டன். 180 ரூபாய் கட்டணம். பத்து மணிக்குத்தான் வண்டி. ஒன்பதுதான் ஆகி இருந்தது. செய்தித்தாள் கடைக்குச் சென்றேன்.

இங்கே என்னென்ன இதழ்கள் கிடைக்கின்றன என்பதைப் பார்த்தேன்.

English: Times of India, The Navhind times, Herald (Voice of Goa- since 1900),

இந்தி மொழி ஏடுகள்: லோக்மத், தருண் பாரத், கோமந்தக், கோவா தூத், நவபிரபா

மற்றும் தைனிக் ஹெரால்டு (மராட்டி) ஆகிய இதழ்கள் கிடைக்கின்றன.

கோவா பதிப்பு இந்து ஆங்கில ஏட்டில், கோவா மாநிலச் செய்திகள் முதன்மை இடம் பெறுகின்றன. ஒருசில செய்திகள் என் கவனத்தை ஈர்த்தன. ஒரு ஓரமாக உட்கார்ந்து படிக்கத் தொடங்கினேன். தலைப்புச் செய்தியே, அதிர்ச்சியாக இருந்தது. ஆழ்ந்த வேதனையை உண்டாக்கிற்று. ஆம்; தில்லி பேருந்தில், ஆறு கயவர்களால் சீரழிக்கப்பட்ட மாணவியை, சிங்கப்பூருக்குக் கொண்டு சென்றும் பயன் இல்லை. அங்கே சென்று இறங்கிய சில மணி நேரங்களுக்குள் உயிர் பிரிந்து விட்டது.

நாடு முழுமையும் எத்தனையோ பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து கொண்டு இருந்தாலும், இந்தியத் தலைநகர் தில்லியில், பேருந்துக்கு உள்ளே ஒரு மாணவிக்கு நேர்ந்த கொடுமை, இந்தியாவையே உலுக்கி விட்டது. தலைநகர் தில்லியின் வீதிகளில், இந்திய வரலாறு காணாத அளவுக்கு மக்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்தி விட்டனர். இக்கொடுமையான நிகழ்வு குறித்து ஏடுகள் விரிவாக எழுதி விட்டன. தொலைக்காட்சி ஊடகங்கள் விவாதங்களை நடத்தி விட்டன. எனவே, நானும் அதுகுறித்து விரிவாக எழுத விரும்பவில்லை.

இரண்டாம் நாள் காட்சிகள்:

சரியாக பத்து மணிக்கு பேருந்து புறப்பட்டது. வேறு ஒரு இடத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்தில், முதல் வரிசையில் எனக்கு இடம் கிடைத்தது. இது இயல்பாக அமைந்தது; வசதியாகப் போயிற்று. பொதுவாக பேருந்திலோ, தொடர்வண்டியிலோ ஒருபக்கத்துச் சன்னல் ஓரமாக அமரும்போது, அந்தப் பக்கத்தில் தெரிகின்ற காட்சிகளை மட்டுமே பார்த்துக் கொண்டு போவோம். எனவே, அப்படிப் போக நேர்ந்தால், அதே வழியாகத் திரும்பவும் வருகின்றபோது, அதே பக்கத்து இருக்கையில் அமர்ந்து, மற்றொரு புறத்தைப் பார்த்துக் கொண்டே வருவது எனது வழக்கம்.

ஆனால், இன்று முன்வரிசை இருக்கையில் அமர்ந்ததால், ஓட்டுநருக்கு முன்புறமாக உள்ள அகன்ற கண்ணாடி வழியாக சாலையை முழுமையாகப் பார்க்க முடிந்தது. இருபுறத்துக் காட்சிகளும் கண்ணில் பதிந்தன. மேலும், வழிகாட்டிக்கு மிக அருகில் எனது இருக்கை. நல்லதொரு வாய்ப்பாக, முதல் நாள் வடக்கு கோவா சுற்றுப்பயணத்தின்போது எங்களோடு வந்த விக்டர் ரோட்ரிக்ஸ்தான், இன்று தெற்கு கோவா சுற்றுப்பயணத்துக்கும் வழிகாட்டியாக வந்தார். அவருடைய வருணனைகளை, எனது அலைபேசியில் பதிவு செய்து கொண்டே வந்தேன்.

கோவா குறித்த புத்தகங்களில் நாம் காண முடியாத செய்திகளை, இவர்களைப் போன்ற, உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகளிடம் அறிந்து கொள்ள முடியும். நான் எதிர்பார்த்தபடியே, தகவல்களைத் தந்தார்.

முதலில், பிக் பூட்; ஆர்ட் ஆஃப் கோவா (Big Foot: Art of Goa) என்ற ஒரு அருங்காட்சியகத்துக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அங்கே சுற்றிப்பார்க்க ஒரு மணி நேரம். பார்வையாளர் கட்டணம் ரூ.150. கேமராவுக்கு ரூ.20. இந்தியாவுக்கு உள்ளே, நான் இதுவரை சென்ற இடங்களிலேயே பார்வையாளர் கட்டணம் மிக அதிகமாக இருந்தது இங்கேதான். பயணக் கட்டுரை எழுத்தாளராக வந்துவிட்டால், அனைத்துக் காட்சிகளையும் பார்த்துவிட்டுத்தான் எழுத வேண்டும். செலவைப் பற்றிக் கவலைப்படக்கூடாது. சற்றுத் தாராளமாகவே பணத்தைச் செலவிட வேண்டும்.

கட்டணத்தைச் செலுத்தி, அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்றேன். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவா மாநில மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைக் காட்டுகின்ற வகையிலான காட்சிகளை அமைத்து இருக்கின்றார்கள். மண்பாண்டங்கள் செய்தல், மீனவர்களின் வாழ்க்கை, கோவா குறித்த கதைகளில் வருகின்ற காட்சிகள் என பார்க்க வேண்டிய இடம்தான். ஆனால், கட்டணம்தான் மிக அதிகம்; 50 ரூபாய் நுழைவுக் கட்டணம் வாங்கினாலே போதுமானது.

இங்கே, பக்த மீராபாய் சிற்பம் ஒன்று, தரையில், படுக்கை வசத்தில் உள்ள கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்தியாவில் செதுக்கப்பட்டு உள்ள சிற்பங்களுள் பெரியது, இந்தச் சிற்பம்தானாம். ஆனால், அது முழுவடிவம் பெறவில்லை. சுமார் அரை மணி நேரம் அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, வெளியில் வந்தேன்.

250 ஆண்டுகள் பழமையான அல்வாரெஸ் வீடு

இந்த அருங்காட்சியகத்துக்கு நேர் எதிரே ஒரு பழமையான வீடு உள்ளது. கட்டி, 250 ஆண்டுகள் ஆகின்றனவாம். அல்வாரஸ் (பெயரைச் சுருக்கமாக எழுதி உள்ளேன்) என்ற வழக்கறிஞரது வீடு இது.

வழிகாட்டி விக்டர் இந்த வீட்டை பேருந்தில் இருந்து காட்டும்போது, ‘இதை நீங்கள் பார்த்து இருக்கின்றீர்களா?’ என்று கேட்டதுதான் தாமதம்; பேருந்துக்கு உள்ளே இருந்த வட இந்தியப் பயணிள் எல்லோரும் ‘சிங்கம் சிங்கம்’ என்றனர். ஆம்; அண்மையில் வெளியாகி வெற்றி பெற்று உள்ள சிங்கம் என்ற இந்தித் திரைப்படத்தில் அஜய் தேவ்கன் வசிக்கின்ற வீடு இதுதான் என்றார். அது மட்டும் அல்ல, வேறு எத்தனையோ படங்களிலும் இந்த வீடு இடம் பெற்று உள்ளது என்றதுடன், அந்தத் திரைப்படங்களின் பெயர்களை வரிசையாகச் சொன்னார்.

250 ஆண்டுகளுக்கு முந்தைய வீடு என்பதால், நானும் ஆர்வத்தோடு உள்ளே சென்றேன். உண்மையிலேயே பார்க்க வேண்டிய வீடுதான். அந்த நாள்களில் எத்தகைய வசதிகளுடன் வாழ்ந்தார்கள்? என்னென்ன பொருள்களைப் பயன்படுத்தி இருக்கின்றார்கள் என்பதை, அந்த வீட்டின் வழிகாட்டி இளைஞன், மிகச்சுவையாக விவரித்துக் கொண்டு போனான். அதைக் கேட்டு ரசித்தபடியே ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே சென்றோம். இந்த வீட்டைப் பற்றியும், இங்கே உள்ள ஒவ்வொரு பொருளின் பயன்பாடு குறித்தும், தனியாக ஒரு சிறு நூலே எழுதலாம். அவ்வளவு செய்திகள் உள்ளன.

250 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தகைய வசதிகளோடு வாழ்ந்து இருக்கின்றார்கள் என்பதை எண்ணும்போது வியப்பாக இருந்தது. காரணம், போர்த்துகீசியர்களின் பண்பாட்டுத் தாக்கம். அந்த நாள்களில், இந்தியாவில் இருந்த அரண்மனைகளைத் தவிர, மற்ற வீடுகள் இவ்வளவு வாழ்க்கை வசதிகளுடன் இருந்திருக்குமா? என்பது கேள்விக்குறிதான். நமது செட்டிநாட்டு வீடுகளைப் போல, வட இந்தியாவின் பல நகரங்களிலும், பிரமாண்டமான வீடுகள் உள்ளன. செட்டிநாட்டு வீடுகள் குறித்து, இரண்டு நாள்கள் செட்டிநாட்டுப் பகுதியில் சுற்றிப்பார்த்து ஒரு ஆய்வுக்கட்டுரையை நான் எழுதி உள்ளேன். இதே, இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

அல்வாரஸ் வீட்டையும், அங்கே உள்ள பொருள்களையும் பொறுமையாகச் சுற்றிப் பார்க்க வேண்டும்.

சாந்த துர்கா, மங்கேஷி ஆலயங்கள்

அடுத்து, சாந்த துர்கா ஆலயத்துக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். கோவிலை அழகாகக் கட்டி இருக்கின்றார்கள். ஆனால், கோபுரங்களின் அமைப்பு, இந்தியக் கட்டடக் கலை மரபுக்கு மாறாக இருந்தது. இந்தியாவிலேயே கோவா மாநிலத்தில்தான், கோபுரங்கள் கிறித்துவத் தேவாலயங்களைப் போன்ற அமைப்பில் உள்ளன. இது சற்றுப் புதுமையாக இருக்கின்றது. போர்த்துகீசியக் கட்டடக் கலையின் தாக்கம் இது என்பதை, இஸ்ஸார் நூலில் கண்ட விளக்கம் தெளிவுபடுத்தியது.

ஒவ்வொரு கோவிலுக்கு முன்பும், வெண்ணிற சுழல் வடிவ மாடம் கட்டப்பட்டு உள்ளது. அது, இத்தாலி நாட்டின் பைசா நகரத்தில் உள்ள சாய்கோபுரத்தை நினைவூட்டுகிறது. 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தில், 'லில்லி மலருக்குக் கொண்டாட்டம்' பாடலின் இறுதியில், எம்.ஜி.ஆரும், மஞ்சுளாவும் ஆடிப்பாடுகின்றபோது, அசோகன் எம்.ஜி.ஆரைச் சுட, அவர் அந்த உயரத்தில் இருந்து விழுகின்றாரே, அந்தக் கட்டடம் போலவும், ப்ரியா தமிழ்த் திரைப்படத்தில், ரஜினி ஸ்ரீ தேவி பாடுகின்ற ஹேய் பாடல் ஒன்று பாடல் காட்சியில் இடம் பெறுகின்ற கட்டடம் போலவும் இருக்கின்றது. அழகான வடிவமைப்பு.

மங்கேஷி அம்மன் ஆலயம்

மங்கேஷி அம்மன் ஆலயம்

அடுத்து, நாங்கள் சென்றது மங்கேஷி அம்மன் ஆலயம். இந்தப் பெயரை வழிகாட்டி சொன்னபோதே, பிரபல இந்தி பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் நினைவு வந்தது. அவர் இந்த ஊரைச் சேர்ந்தவராக இருப்பாரோ? என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தபோதே, லதா மங்கேஷ்கரின் சொந்த ஊர் இதுதான் என்று சொல்லி முடித்தார் விக்டர் ரோட்ரிக்ஸ். ஆலயத்துக்கு அருகில் பேருந்தை நிறுத்துவதற்கு இடம் இல்லாததால், சற்றுத் தொலைவு தள்ளிச் சென்று நிறுத்தினார்கள். அங்கிருந்து கோவிலுக்குச் செல்லுகின்ற வழிநெடுகிலும், இருபுறங்களிலும் வரிசையாகக் கடைகள்.

ஒரு கடையில், உடலில் பச்சை குத்துவது போல, மர அச்சுகளைத் தங்கள் உடலில் பதித்துக் கொள்கின்றார்கள். பச்சை குத்திக் கொள்ளுவது, இந்தியாவில் தொன்றுதொட்டு இருந்து வருகின்ற வழக்கம் என்றாலும், விதவிதமான வண்ணங்களில், சில இடங்களில் அல்ல, உடல் முழுமையுமே பச்சை குத்திக் கொள்வது, ஐரோப்பிய வழக்கம். அந்த வழக்கம், மெல்ல இந்தியாவுக்கு உள்ளேயும் புகுந்து கொண்டு இருக்கின்றது. கோவாவில் அப்படிப் பல இளைஞர்களைப் பார்த்தேன். அவர்கள் குத்தி இருக்கின்ற பச்சை தெரிய வேண்டும் என்பதற்காகவே, அரைக்கால் சட்டை, கை இல்லாத பனியன் அணிந்து சுற்றிக் கொண்டு திரிந்தார்கள்.

பச்சை குத்துவது, எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளாது. ஊசியால் உடலைக் குத்துவது, ஒவ்வாத மையைப் போட்டுக் கொள்வது, வேறுவிதமான பக்க விளைவுகளைக் கண்டிப்பாக ஏற்படுத்தும். நெற்றியில் பெரிய அளவுக்கு வட்டப்பொட்டு வைத்துக்கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு திரிந்தவர்கள் பலரது நெற்றி பொத்துப் போனதை நான் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். இப்போது, எல்லாமே கலப்படம்தான். பச்சை குத்துவது தேவை அற்ற ஒன்று.

கொமந்தக் என்றால் என்ன?

ஒரு தேநீர்க்கடையில் தேநீர் அருந்தினேன். நான் மாணவனாக இருந்தபோது, கோவா மாநில முதல் அமைச்சராக, சசிகலா ககோத்கர் என்று ஒரு பெண்மணி இருந்தார். அவரது கட்சியின் பெயர், மகாராஷ்டிராவாதி கோமந்தக் பார்ட்டி. (எம்ஜிபி). அந்தப் பெயர் நினைவுக்கு வந்தது.

கோமந்தக் என்றால் என்ன பொருள்? என்று தேநீர்க்கடைக்காரரிடம் கேட்டேன். அவர், அருகில் கரும்புச் சாறு விற்றுக்கொண்டு இருந்த பெண்ணைக் கைகாட்டினார். அந்தப் பெண்மணி சொன்னார்: எப்படி கர்நாடகா, ஆந்திரா என்று மாநிலங்களின் பெயர்கள் உள்ளனவோ, அதைப்போல கோவா என்ற பகுதிக்கு கோமந்தக் என்பதுதான், புராண, இதிகாச காலப் பெயர்; இங்கே உள்ள மக்களையும் அப்படித்தான் அழைக்கின்றார்கள்’ என்றார்.

மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, 1963 ஆம் ஆண்டு, கோவா மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. தயானந்த் பண்டோத்கர் முதல்வர் ஆனார். 1973 ஆம் ஆண்டு, இறக்கின்ற வரையிலும் பொறுப்பில் இருந்தார். அவருக்குப் பின்னர், அவரது மகள் சசிகலா ககோத்கர் முதல்வர் பொறுப்பு ஏற்று, 1979 வரையிலும் ஆறு ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அதற்குப்பின்னர் இந்தக் கட்சி உடைந்தது. 1980 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. சசிகலா பின்னாளில், காங்கிரசில் சேர்ந்தார். 90 ஆம் ஆண்டு, சிலகாலம் கோவா கல்வி அமைச்சராகவும் இருந்தார். கோவா மாநில முன்னேற்றத்துக்கு, இவரது நடவடிக்கைகள் அடிப்படையாக அமைந்தன. எனவே, மராத்திய மொழியில், இவரை தாய் (மூத்த சகோதரி) என்று கோவா மக்கள் அன்போடு அழைக்கின்றார்கள்.

சாந்த துர்கா ஆலயம் போலவே இருந்தது மங்கேஷி ஆலயம். அங்கே சிவப்பு வண்ணம் என்றால், மங்கேஷி ஆலயச் சுவர்கள் தூய வெண்ணிறத்தில் அமைந்து இருந்தது. சிறிய கோவில்தான். உள்ளே செல்ல நீண்ட வரிசை இருந்தது. சாந்த துர்கா ஆலயத்துக்கு உள்ளே சென்று பொறுமையாகப் பார்த்து விட்டு வந்ததால், மங்கேஷி ஆலயத்துக்கு உள்ளே செல்லவில்லை.

ஃபிரான்சிஸ் பசிலிகா

ஃபிரான்சிஸ் பசிலிகாஅடுத்து, தூய ஃபிரான்சிஸ் பசிலிகா தேவாலயத்துக்குச் சென்றோம். இந்த ஆலயம்தான் கோவாவுக்கே பெருமை சேர்க்கின்ற, பழமையான தேவாலயம் ஆகும்.

ஆம்; 460 ஆண்டுகளுக்கு முன்பு,சீனாவில் இறந்துபோன ஃபிரான்சிஸ் பாதிரியாரின் உடல், இரண்டு அண்டுகளுக்குப் பிறகு, அங்கே இருந்து கொண்டு வரப்பட்டு, இந்த ஆலயத்தில்தான் வைக்கப்பட்டு உள்ளது. தேவாலயம், முழுமையும் கற்களால் கட்டப்பட்டு உள்ளது. உள்ளே, பொன்மஞ்சள் நிறத்திலான, கலை வேலைப்பாடுகள் கண்ணைக் கவர்கின்றன. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலையலையாக வந்து கொண்டு இருந்தது. நெருக்கியடித்துக் கொண்டுதான் உள்ளே நுழைய முடிந்தது.

ஃபிரான்சிஸ் பாதிரியார் உடல், தரையில் இருந்து பத்து அடிகள் உயரத்தில், கலை வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பெரிய பேழையில் வைக்கப்பட்டு உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அதைக் கீழே இறக்கி, பொதுமக்கள் பார்வைக்கு வைப்பார்களாம். கடைசியாக, 2004 ஆம் ஆண்டு காண்பிக்கப்பட்டது; இனி, 2014 இல்தான் பார்க்க முடியும். அந்த உடலுக்கு எந்தவிதமான தைலங்களும் பூசப்படவில்லையாம். அப்படியே இயற்கையாகவே அழியாமல் இருக்கின்றது என்கிறார்கள்.

ஆலயத்துக்கு உள்ளே நுழைகையில், வாயிலில் நிற்கின்ற காவலர்கள், பாதிரியாரின் உடல் இருக்கின்ற பீடத்தைப் படம் எடுக்கலாம்; ஆனால், கலை வேலைப்பாடுகளுக்கு அருகில் நின்று நாம் படம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரித்தார்கள். ஆனால், கூட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? இன்று, பயணிகள் அனைவருமே கைகளில் படக்கருவி வைத்து இருக்கின்றார்கள் அல்லது அலைபேசி வைத்துப் படம் எடுக்கின்றார்கள். எல்லோரும் ஒரே திசையை நோக்கிப் படம் எடுக்கவும் முடியாது. இப்படியும் அப்படியும் திசை மாறும்.

இந்தப் பக்கத்தை எடு; அந்தப் பக்கத்தை எடுக்காதே என்றால், அதுவும் ஒரு பெருங்கூட்டத்தில் அதை எப்படி எல்லோரும் பின்பற்ற முடியும்? வாயிற்காவலர்கள் விடுக்கின்ற எச்சரிக்கை, பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு எப்படிப் புரியும்? எனவே, அவரவர்கள் தங்கள் விருப்பம்போல படம் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஆண், பெண் காவலர்கள் அவ்வப்போது வந்து எச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். சிலரது கேமராக்களைப் பிடுங்க முயன்றார்கள். தள்ளுமுள்ளுகள் நடந்தன. இடையிடையே நானும் சில படங்களை எடுத்துக் கொண்டேன்.

இந்த பசிலிகாவின் பலிபீடத்தின் படம்தான், டி.எஸ்.இஸ்ஸார் எழுதிய நூலின் அட்டைப்படமாகவும் இடம் பெற்று உள்ளது. கோவா பற்றி எழுதப்படுகின்ற எந்த நூலாக இருந்தாலும், அதில் இடம் பெற வேண்டிய காட்சிதான் இது. அந்த அளவுக்கு வேலைப்பாடுகள் கண்ணைப் பறிக்கின்றது. நுணுக்கமாகப் பார்த்து ரசிக்கப் பல மணி நேரம் வேண்டும். அவ்வளவு கலை வேலைப்பாடுகள்.

இந்தத் தேவாலயத்தைப் பார்வையிட அரை மணி நேரம் மட்டுமே கொடுத்தார்கள். சுற்றுலாப் பேருந்துகளில் போகும்போது, அவர்கள் கொடுக்கின்ற நேரத்துக்கு உள்ளாகத் திரும்பி விட வேண்டும். இல்லையேல், விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்; அடுத்த இடத்துக்கு எப்படிப் போவது என்று தவித்துப் போவோம். அவர்கள் கொடுக்கின்ற நேரம், நமக்குப் போதாதுதான். ஆயினும், ஒன்றிரண்டு நாள்களில், கோவாவைப் பார்க்க வேண்டும் என்றால், வேறு வழி இல்லை.

போர்த்துகீசிய வீடுகள்

அடுத்து நேராக மதிய உணவுக்குச் செல்லும் முன்பாக, ஒரு தெருவின் வழியாகச் சென்றது பேருந்து. இருபுறங்களிலும் வீடுகள் வரிசையாக இருந்தன. இவை அனைத்துமே, 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை; அப்போதைய, பூர்த்துகீசிய (ஆம்; இப்படித்தான் கோவாவாசிகள் அழைக்கின்றார்கள்; வேறு சில வழிகாட்டிகள், வேறு மாதிரியாகவும் சொல்கிறார்கள்) அரசு அதிகாரிகள் இங்கே வசித்தனர் என்றார் வழிகாட்டி. பழமையான வீடுகள் என்றாலும், நன்றாகப் பராமரித்து, புது வண்ணம் தீட்டி, புதிதாக வைத்து இருக்கின்றார்கள். எல்லாமே பூர்த்துகீசிய கட்டடக் கலையின் வடிவங்களாகவே திகழ்ந்தன. ஏதோ, போர்த்துகல் நாட்டுக்கு உள்ளே இருக்கின்ற ஒரு நகரத்தின் தெருக்கள் வழியாகப் போவது போல இருந்தது.

முதல் நாள் சென்ற உணவு விடுதி, சந்தைக் கடை போல இருந்தது. இன்று அவர்கள் அழைத்துச் சென்ற உணவு விடுதி, முழுமையும் மரத்தால் இழைக்கப்பட்டு இருந்தது. நல்ல இட வசதி. முழுமையும் குளிர்பதனம் செய்யப்பட்ட உணவுக்கூடம். மதிய உணவும் சிறப்பு. ஆம்; 200 ரூபாய்க்கு புஃபே. விருப்பம்போல, கோழி, மீன் குழம்பு எடுத்துக் கொள்ளலாம். நன்றாக ருசித்துச் சாப்பிட்டேன். பேரீச்சம்பழ வடிவில், கோவா இனிப்புகளையும் வைத்து இருந்தார்கள். அதுவும், புதுச்சுவையாக இருந்தது. இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, அகன்ற திரையில், ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. எல்லோரும் பொறுமையாக அமர்ந்து, விளையாட்டைப் பார்த்து ரசித்துக்கொண்டே சாப்பிட்டார்கள். எனவே, ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாகி விட்டது.

அடுத்து, கோவா மாநிலத் தலைநகர் பனாஜிக்கு உள்ளே நுழைந்தோம். போகின்ற வழியில் உள்ள கட்டடங்கள், தேவாலயங்கள், கிறித்துவ வழிபாட்டுத்தலங்களைப் பற்றிச் சில விவரங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார் வழிகாட்டி விக்டர்.தொலைவில் ஒரு மலையின் உச்சியில், ஒரு கட்டடம் தெரிந்தது. அதுதான், கோவா சட்டமன்றம் என்றார்.

கோவா மாநிலத்தின் முதலாவது முதல் அமைச்சர் பந்தார்கர் சிலையைக் காண்பித்தார். கோவாவின் புகழ்பெற்ற பிரபல வடிவமைப்பாளர், நடனக் கலைஞர் ஆகியோரின் வீடுகளைக் காண்பித்தார். இந்தப் பெயர்களை எல்லாம் வழிகாட்டி சொன்னபோது, பேருந்தில் உள்ள சக பயணிகள் ஆர்வத்தோடு பார்த்தார்கள். நான் இந்தப் பெயர்களைக் கேள்விப்பட்டு இருக்கின்றேன். ஆனால், தமிழகத்தில் அவ்வளவாக அறிமுகம் இல்லை.

கோவா மாநிலத்தின் சிறப்பு, மூன்று எஃப்கள் Feni, Fish, Football என்றார் விக்டர். கோவா மக்களின் விருப்பமான உணவு மீன்; விளையாட்டு, உதைபந்து, ஃபெனி என்பது ஒரு பழச்சாறு. வழியில் உள்ள ஒரு இடத்தில், மூன்று சுவையிலான மது பானங்கள் கிடைக்கும்; மூன்று பாட்டில்களை, கோவா மாநிலத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்ல,கோவா அரசு அனுமதிச் சீட்டும் கிடைக்கும்; வேண்டிய அளவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

பயணிகள் இறங்கத் தொடங்கினார்கள். எனக்கு அங்கே வேலை இல்லை. எனவே, நான் கீழே இறங்க விரும்பாமல், பேருந்துக்கு உள்ளேயே அமர்ந்து இருந்தேன். கடைசியில் திரும்பிப் பார்த்தேன். பேருந்துக்கு உள்ளே என்னைத்தவிர வேறு ஒருவரும் இல்லை. திரும்பி வரும்போது, சில பெண்களும் மதுப்புட்டிகளைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தார்கள். சில பெண்கள், முந்திரிப்பருப்பு, பழச்சாறுகளை வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

கொல்வா கடற்கரை

அடுத்து, இன்றைய நாளின் இறுதியாக, கொல்வா கடற்கரைக்குப் போகின்றோம்; இங்கிருந்து 44 கிலோமீட்டர்கள் தொலைவு என்றார். வழிநெடுகிலும் பார்த்துக் கொண்டே சென்றேன். 5.15 மணிக்கு அங்கே கொண்டு போய் இறக்கி விட்டார்கள். இதுதான், இந்தியாவிலேயே, சென்னை மெரீனா கடற்கரைக்கு அடுத்ததாக, மீக நீண்ட கடற்கரை; கோவாவில் புகழ்பெற்ற இடங்களுள் ஒன்று என்றார்.

இங்கே கார்கள் குவிந்து இருந்தன. பேருந்தை நிறுத்த முடியாத அளவுக்கு இட நெருக்கடி. எனவே, அழகிய கடற்கரை போலும்; அதுதான் இவ்வளவு கூட்டமாக இருக்கின்றது என்ற எதிர்பார்ப்போடு சென்ற எனக்கு ஏமாற்றமாகப் போய் விட்டது. முதல் நாள் பார்த்த பாகா கடற்கரையின் அழகு இல்லை. கோவா மாநிலத்தில், இருபது முப்பது இடங்களில், பயணிகள் அச்சம் இன்றிக் குளித்து மகிழக்கூடிய கடற்கரைகள் உள்ளன. எனது இரண்டு நாள்கள் பயணத்தில், ஒன்றிரண்டு கடற்கரைகளைத்தான் பார்க்க முடிந்தது.

பல கடற்கரைகளில், பேருந்துகளை நிறுத்த இடம் கிடைக்காது; சற்றுத் தள்ளியே நிறுத்த வேண்டும் என்பதால், பயண முகவர்கள் அதுபோன்ற கடற்கரைகளைத் தவிர்த்து விடுகின்றார்கள் என்பதை, வழிகாட்டி விக்டர் சக பயணி ஒருவரிடம் சொன்னபோது, நான் கேட்டுக் கொண்டு இருந்தேன். கோவா மாநிலத்துக்கு அடிக்கடி சென்று வருகின்ற பல நண்பர்கள், ஒவ்வொரு கடற்கரையிலும் என்ன சிறப்பு என்பதை விலாவாரியாகச் சொல்லுவார்கள். எனவே, இதுபோன்ற பயண முகவர்கள் உதவியுடன் நாம் சுற்றிப் பார்த்தாலும், கோவாவில் குறைந்தது நான்கு நாள்களாவது தங்கி இருந்து, தனியாகச் சுற்றிப் பார்க்க வேண்டும்.

goa_arunagiri_temple_480

சாந்த துர்கா ஆலயம்

நான் அங்கே சுற்றிய இரண்டு நாள்களிலும், தடுக்கி விழுந்தால் ஒரு தமிழன் மீதுதான் விழ வேண்டும் என்கின்ற அளவுக்கு, கோவாவில் தமிழர்களின் கூட்டம்தான் மிகுதியாக இருந்தது. 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தில் நம்பியார், காணும் இடமெல்லாம் புத்தனின் சிலைகள் என்று சொல்லுவதுபோல, கோவாவில் நான் கண்ட இடங்களில் எல்லாம் தமிழர்களே.

இந்தக் கடற்கரைக்கு வந்து இருந்த, கோவை பொறியியல் கல்லூரி மாணவர்களோடு பேசினேன். இன்று காலையில்தான் வந்தோம்; நான்கு நாள்கள் தங்கி இருந்து, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடித்துக் கொண்டுதான் கிளம்புவோம் என்றனர்.

‘செலவு கூடுதலாக ஆகுமே?' என்றேன். 'உணவைக் குறைத்துக் கொள்வோம்; சுருக்கமாகச் செலவழிப்போம்' என்றார்கள்.

இரண்டு நாள்களிலும் நான் பேச்சுக் கொடுத்த பலரும், கொங்கு மண்டலத் தமிழர்களே. தமிழகத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில், அவர்கள்தானே பொருளாதாரத்தில் சற்று வசதியாக இருக்கின்றார்கள்! அது மட்டும் அல்ல, இவ்வாறு பயணங்களை மேற்கொள்ளும் எண்ணம் உடையவர்களாகவும் இருக்கின்றார்களே? இந்த எண்ணம் அனைத்துத் தமிழர்களுக்கும் வர வேண்டாமா?

மதுரை மற்றும் தென் மாவட்டப் பணக்காரர்கள், மென்மேலும் பணம், நகைகளைக் குவித்துக் கொண்டே போவதைப் பற்றித்தான் சிந்திக்கின்றார்களே தவிர, ஊர் சுற்றும் எண்ணம் இல்லை. கோவில் வழிபாடு என்று சொல்லிக்கொண்டு ஆண்டுதோறும் ஒரே ஊருக்குச் செல்வதை முதலில் நிறுத்த வேண்டும். உலகம் முழுமையும் தமிழர்கள் பரவ வேண்டும். இக்கட்டுரை அதற்கு உந்துதலாக அமைய வேண்டும் என்பதே என் அவா.

இன்றைய பயணம் முடிந்து, சுமார் ஏழு மணி அளவில், மட்காவ்ன் பேருந்து நிலையத்துக்கு அருகே கொண்டு வந்து இறக்கி விட்டார்கள். கொல்வா கடற்கரையில் இருந்து ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளாகத்தான் இருக்கின்றது. மீண்டும் ஒரு பைலட் வண்டியில் ஏறி, மட்காவ்ன் தொடர்வண்டி நிலையம் வந்து சேர்ந்தேன்.

என் வாழ்நாளில், ஒரு தொடர்வண்டி நிலையத்திலேயே மூன்று இரவுகள் தொடர்ந்தாற்போலத் தங்கி இருந்தது இதுவே முதன்முறை. இரவு முழுமையும், வண்டிகள் வருவது போவது குறித்த அறிவிப்புகள். ஒவ்வொருமுறை தொடர்வண்டி வரும்போதும், நீண்ட மணியொலி என தூக்கமே இல்லை. இதுவும் ஒரு புது அனுபவம்தான். இந்தப் பயணத்தின்போதுதான், முதன்முறையாக செலவுக் கணக்கு எழுதி வந்தேன். அது, பணத்தைச் சுருக்கமாகச் செலவிட வேண்டும் என்ற எண்ணத்தை அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.

31.12.2012

எல்லோரும் கோவாவுக்கு வந்து இறங்கும் நாளில், நான் கோவாவை விட்டுப் புறப்படுகின்றேன். ஆம்; இன்று இரவுதான், கோவா முழுமையும் உச்சகட்டக் கொண்டாட்டங்கள் களை கட்டும். ஆனால், எனக்கு என்னவோ அதைப் பார்க்கும் ஆவல் இல்லை. காலை ஒன்பதரை மணிக்கு, மட்காவ்ன் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து மும்பைக்குப் புறப்படுகின்ற மாண்டவி விரைவுத் தொடர்வண்டியில் மும்பை செல்ல வேண்டும். நேரம் இருந்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாள் இதழைப் புரட்டினேன். கோவா வருகின்ற பயணிகளின் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன என்கிறார் முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர்.

முதல் பக்கத்தில் ஒரு செய்தி: மொர்ஜிம் (Morjim) என்ற இடத்தில், இரண்டு நாள்களாக, இரவு பகல் தொடர்ச்சியாக, ஒலிபெருக்கியை அலற விட்டதால், நோயுற்று இருந்த ஒரு மூதாட்டி இறந்து விட்டார் என, பிரனெம் ஸ்வாபிமான் நாகரிக் சமிதி என்ற அமைப்பு, காவல்துறையிடம் புகார் அளித்து உள்ளது. அந்த மூதாட்டி, இரத்தக்கொதிப்பால் பாதிக்கப்பட்டு, படுக்கையில் இருந்து உள்ளார். அவரது வீட்டுக்கு இருபுறங்களிலும், ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளாக அமைந்து இருக்கின்ற இரண்டு கேளிக்கை விடுதிகளில் இருந்து, இடைவிடாமல் பாடல்களைச் சத்தமாக ஒலிபரப்பி உள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. மேலும், அவர்கள் அவ்வாறு ஒலிபெருக்கி வைத்துக் கொள்ள, காவல்துறையிடம் இருந்து உரிய ஒப்புதலையும் பெற்று இருக்கவில்லை. இரண்டு நாள்களாகத் தூக்கம் இன்றித் தவித்த மூதாட்டி இறந்து விட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு.

கோவா மாநில மக்களின் பிரச்சினைகளுக்கு, இது ஒரு எடுத்துக்காட்டு.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக, கோவா கடற்கரைகளில், பல இடங்களில் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. Goa Coastal zone Management Authority -GCzMA என்ற அமைப்பு, கடற்கரைகளைக் கண்காணிக்கின்றது. நள்ளிரவோடு ஒலிபெருக்கிகளை அணைத்து விடவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், கேளிக்கை விடுதிகள் அதைப் பொருட்படுத்தவில்லை என்பதைப் பல அமைப்புகள் கண்டித்து இருந்தன. அது தொடர்பான கட்டுரைகள் பல வெளியாகி இருந்தன.

ஆட்டமும், பாட்டும் அளவோடு இருக்கட்டும்

பொங்கல் விடுமுறையின்போது, நான் இந்தக் கட்டுரையை எழுதி முடித்தேன். 16.1.2013 தினந்தந்தி, திருநெல்வேலி பதிப்பு, 8 ஆம் பக்கத்தில் வெளியாகி இருந்த ஒரு செய்தி, கவனத்தை ஈர்த்தது; கவலையைத் தந்தது.

சென்னை கொடுங்கையூர், காந்தி நகரைச் சேர்ந்தவர், மதன். வயது 29. பி.காம். பட்டதாரி. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஐந்து நாள்கள் பொங்கல் விடுமுறையைக் கொண்டாட, 15 நண்பர்களுடன் கோவா சென்றார். ஒரு நட்சத்திர விடுதியில், டிஸ்கோ நடனம் பார்த்தார். அருகில் இருந்த மேசையில், 20 பேர் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு, கூச்சல் போட்டு, குழப்பம் செய்தனர். மதன் தரப்பினர் தட்டிக் கேட்டனர். அவர்கள் கத்தியை எடுத்து மதனையும் அவரது நண்பர்களையும் குத்தினர். மதன் இறந்தார். இரண்டு நண்பர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் உள்ளனர்.

இதே கொலை குறித்து தினமலர் செய்தி: நள்ளிரவு 12.30 மணிக்கு, மதனும் நண்பர்களும் ஒரு விடுதிக்குள் சென்று, பீர் கேட்டனர். 12 மணிக்கு மேல் கிடையாது என்று விடுதி ஊழியர்கள் கூறினர். இதில் தகராறு ஏற்பட்டது; கைகலப்பு நிகழ்ந்தது; விடுதி ஊழியர்கள், மதனைக் கத்தியால் குத்திக் கொன்றனர்.

நடந்த நிகழ்வு குறித்து இருவேறு செய்திகள் இருப்பினும், மதன் உயிரோடு இல்லை; மது உயிரைப் பறித்தது என்பதுதான் இதில் கிடைக்கின்ற படிப்பினை. மதன் பெற்றோருக்கு ஒரே மகன். வயதான அவர்களையும் , மனைவி, ஒரே குழந்தையையும் தவிக்கவிட்டுப் போய்விட்டார்.

கோவா செல்கின்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தச் செய்தியை இக்கட்டுரையில் இணைத்தேன். கோவா செல்பவர்களது ஆட்டமும், பாட்டும் அளவோடு இருக்கட்டும். உங்கள் பயணம் பாதுகாப்பாக அமையட்டும்.

கோவாவுக்கு வருபவர்கள், ஏதோ சிம்லா, ஊட்டி போல குளிரை அனுபவிக்க வரவில்லை. குதூகலத்துக்காக வருகின்றார்கள். கோவாவுக்கு உள்ளே காலடி எடுத்து வைத்த உடனேயே, உடலுக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்கின்றது. ஓய்வு கொள்கின்றார்கள்; உழைத்த களைப்பைப் போக்கிக் கொள்கின்றார்கள். புத்துணர்ச்சியோடு திரும்பிச் செல்லுகின்றார்கள்.

இவ்வளவு நாள் கோவாவைப் பார்க்காமல் இருந்து விட்டோமே? என்று வருந்தினாலும், இப்போதாவது பார்த்து விட்டோமே என்ற ஆறுதலோடு, அடுத்த ஆண்டு, மனைவியையும், மகளையும் அழைத்து வந்து காட்ட வேண்டும் என்ற உறுதியோடு, கோவாவை விட்டுப் புறப்பட்டேன். மாண்டவி தொடர்வண்டியில், மும்பை நோக்கிப் பயணித்தேன்.

கோவா தொடர்பாக எழுத வேண்டிய சுவையான செய்திகள் ஏராளம் உள்ளன. கட்டுரை நீண்டுகொண்டே போகின்றது. எனவே, இத்துடன் நிறுத்திக் கொண்டேன். எனது இந்தியப் பயணங்கள் குறித்த நூலில், இக்கட்டுரையில் கூடுதல் தகவல்கள் இடம்பெறும். இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, மேலும் ஒரு வார காலம், கொங்கண் மும்பையில் நான் கண்ட காட்சிகள், இன்னொரு கட்டுரையாக வெளிவரும்!

- அருணகிரி

Pin It