29.12.2012

இன்று காலை 6.00 மணிக்கு எழுந்து, 7 மணிக்கு உள்ளாக ஆயத்தமாகி, வெளியே புறப்பட்டேன். தொடர்வண்டி நிலைய உணவகத்தில் மசால் தோசை ஒன்று 20 ரூபாய்தான். சுவை பரவாயில்லை.

‘கோவா உள்ளூர் சுற்றுப்பயணத்துக்கு, மர்காவ் கேஆர்டி பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள பாவ்லோ டிராவல்ஸ் நிறுவனமே சிறந்த அமைப்பாளர்கள்; அவர்களை அணுகுங்கள்’ என்று தம்பி திம்மராஜன் கூறி இருந்தார். இவர், கோவாவில் சில காலம் பணிபுரிந்தவர். இப்போது, தேனி மாவட்டத்தில் சொந்த ஊரில் இருக்கின்றார். அவர் இங்கு இருந்திருந்தால், எனக்குக் கொஞ்சம் உதவியாக இருந்திருக்கும்.

மர்காவ் பேருந்து நிலையம் செல்வதற்காக வெளியே வந்தேன். தொடர்வண்டி நிலையத்தில் முதல் நாள் இரவு நான் பார்த்த இரண்டு பெண்கள், முழுக்க முழுக்க உடலை மறைக்கும் வகையில் சுரிதார், குர்தா பைஜாமா அணிந்து இருந்தார்கள். இன்று காலையில் பார்த்தபோது, நீளம் குறைந்த குட்டை அரை டிரவுசர், டி ஷர்ட் அணிந்து, ஆண் நண்பர்களுடன் ஜாலியாகப் புறப்பட்டு விட்டார்கள். இதுதான் கோவா. இந்த மாற்றத்துக்காகத்தானே இங்கு வருகின்றார்கள்! உடைக்கு விடுதலை; உள்ளத்துக்குக் குதூகலம் தருவது கோவா.

goa_arunagiri_640

குற்றாலத்தில் இப்போது எல்லோரும் அரை டிரவுசர் அணிவது போல, கோவாவில் மட்டும் அல்ல, சுற்றுலா மையம் என்றாலே, அங்கே மக்கள் தங்களை மறந்து, மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகின்றார்கள். கோவா கடற்கரைக் காட்சிகள் அதைத்தான் காட்டுகின்றன.

பைலட்

ஒரு பைலட் வண்டியில் ஏறி பேருந்து நிலையத்துக்குப் போகச் சொன்னேன். ஆம்; தாய்லாந்து நாட்டில் நான் பார்த்ததுபோல, கோவாவிலும் வாடகை பைக்குகள் ஓடுகின்றன. அதைத்தான், பைலட் வண்டிகள் என்கிறார்கள். மட்காவ்ன் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்துக்கு வாடகை 70 ரூபாய் கேட்டார் ஒரு பைலட். நான் சற்று யோசித்து, அவ்வழியாகச் சென்ற ஒருவரைக் கைகாட்டி நிறுத்தினேன். அவர் பைலட் அல்ல; ஆனால், ஐம்பது ரூபாய் தருகிறேன் என்றதும், என்னை வண்டியில் ஏற்றிக் கொண்டார்.

‘உலக வலம்’ என்ற எனது நூலில், 38 நாடுகளில் வசிப்பவர்களை நேர்காணல் கண்டு, அந்த நாடுகளில் அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டு எழுதி இருக்கின்றேன். காந்தளகம் பதிப்பக நிறுவனர் சச்சிதானந்தம் அவர்கள், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில், எந்தக் காரைக் கைகாட்டி நிறுத்தினாலும், நம்மை ஏற்றிக்கொள்வார்கள்; நாம் போக வேண்டிய இடத்துக்குக் கொண்டு போய் விட்டுவிடுவார்கள்; அங்கே சுற்றுலாவை அப்படித்தான் வளர்க்கிறார்கள் என்று கூறி இருந்தார்.

இந்தோனேசியாவுக்குச் சென்று வந்த நண்பர் ஒருவர் சொன்னார்: அந்த நாட்டில் ஒருவர் காரில் செல்லும்போது, யாரேனும் கை காட்டி நிறுத்தினால், இடம் காலியாக இருந்தால், கண்டிப்பாக ஏற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும். இல்லாவிட்டால், கை காட்டி நிறுத்தியவர் புகார் கொடுத்தால், போக்குவரத்துக் காவலர்கள் உடனே நடவடிக்கை எடுத்து, நிறுத்தாமல் போனவரது ஓட்டுநர் உரிமத்தைப் பறித்து விடுவார்களாம்.

அதேபோல,கோவாவில், ஈருளை வண்டிக்காரர்கள் யாரையும் ஏற்றிக் கொள்கின்றார்கள் போலும். என்ன ஒன்று, இலவசமாக அல்ல; பணம் வாங்கிக் கொள்கின்றார்கள். போகின்ற வழியாக இருந்தால், இலவசமாகவே கொண்டு போய் விடுபவர்களும் இருக்கக்கூடும். முன்பின் தெரியாத ஊரில், மற்றொருவர் பின்னால் உட்கார்ந்து போவதற்குக் கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. சுற்றுலாவுக்கு வந்த இடத்தில், மருத்துவமனையில் படுக்கும்படி ஆகிவிடக்கூடாதே? சென்னையில் நான் யாருடைய வண்டியிலும் ஏறி அமர்வது இல்லை. அவர்கள் பத்து கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டினாலும் எனக்கு அச்சமாக இருக்கும். நீங்களும் உங்கள் நண்பர்களோடு ஈருருளை வண்டியில் பின்னால் அமர்ந்து சென்று பாருங்கள். நான் சொல்வது புரியும். எனவே, நானேதான் ஓட்டுவேன். கோவாவில் வேறு வழி இல்லை. வண்டியை மெதுவாக ஓட்டும்படிக் கூறினேன். இளைஞரான அவரும் ஓரளவு சமாளித்து பொறுமையாக ஓட்டினார்.

பாவ்லோ டிராவல்ஸ்

8.15 மணிக்கெல்லாம் பாவ்லோ டிராவல்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்றேன். அவர்கள், கோவா சுற்றுலாவை, வடக்கு கோவா, தெற்கு கோவா என இரண்டு நாள்களாகப் பிரித்து இருக்கின்றார்கள்.

கட்டணம் ஒவ்வொரு நாளும் ரூ.180. காலை பத்து மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சுற்றிக் காண்பிக்கின்றார்கள். கோவாவில் இரண்டு நாள்கள் தங்குவது என நானாகத் தீர்மானித்தேன். அதேபோலத்தான், இங்கே உள்ள சுற்றுலா நிறுவனங்களும், வடக்கு கோவாவுக்கு ஒருநாளும், தெற்கு கோவாவுக்கு ஒருநாளும் சுற்றுலா என வகுத்து இருக்கின்றார்கள். எனவே, என்னுடைய தீர்மானம் சரியாகப் போயிற்று. கோவா மாநிலத்தின் நிலப்பரப்பு 3702 சதுர கிலோமீட்டர்கள்தாம். இப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் சரிபாதி. எனவே, இரண்டு நாள்களில் இந்த மாநிலத்தை முழுமையாகச் சுற்றி வந்துவிட முடியும்.

goa_arunagiri_641

நான் முதல் நாள், வடக்குக் கோவா சுற்றுப்பயணத்துக்கான சீட்டைப் பதிவு செய்தேன். பத்து மணிக்குத்தான் பேருந்து புறப்படும் என்று சொன்னார்கள். அதுவரையிலும் என்ன செய்வது? காலாற சற்றுத் தொலைவு நடந்தேன். பேருந்து நிலையத்துக்கு அருகில், புதிதாக ஒரு பிரமாண்டமான கட்டடத்தைக் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். ஏறத்தாழ பணிகள் முடியும் தறுவாயில் இருக்கின்றன. கட்டடத்தின் வடிவமைப்பு, கோவா மாநிலத்துக்கே உரிய, போர்த்துகீசிய கட்டுமானக் கலையின் வடிவமாகவே திகழ்கிறது. பெங்களூரு விதான சௌதா கட்டடத்தை நினைவூட்டுகிறது.

அது என்ன கட்டடம்? என்று கேட்டேன். ஒருவருக்கும் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அரசு அலுவலகங்கள் அங்கே வரப்போவதாக ஒருவர் சொன்னார். அந்தக் கட்டடத்துக்கு முன்பு நின்று படம் எடுத்துக் கொண்டேன்.

சென்னையில் ரிப்பன் மாளிகையைத் தவிர வேறு எந்தக் கட்டடத்தின் வடிவமைப்பும் ரசிக்கும்படியாக இல்லை. எழிலகம் என்று பெயர்தானே ஒழிய, அதில் எந்தவிதமான தமிழகக் கட்டுமானக் கலையின் வடிவமும் இல்லை. அண்மையில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றக் கட்டடமோ, எண்ணெய்க் கிடங்கு போல அமைந்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பூட்டியே கிடக்கின்றது. இப்போது, மருத்துவமனையாக ஆக்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன.

இனி எதிர்காலத்திலாவது, புதிதாகப் படித்து வருகின்ற இளம் கட்டடக்கலை விற்பன்னர்கள், தமிழகத்தின் பாரம்பரியக் கட்டுமானக் கலையை நினைவூட்டும் வகையில், அத்தகைய வடிவமைப்பிலான கட்டடங்களைக் கட்டவேண்டும் என்ற என் விருப்பத்தை இங்கே பதிவு செய்கின்றேன். கட்டடக்கலை படிக்கின்ற மாணவர்கள், கோவா, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய ஊர்களுக்குச் சென்று, புகழ்பெற்ற கட்டடங்களைப் பார்க்க வேண்டும்.

பேருந்து நிலையத்தில்...

அப்படியே நடந்து, அருகில் இருக்கின்ற மர்காவ் பேருந்து நிலையத்துக்கு உள்ளே நுழைந்தேன். ஒரு பன்னாட்டு நகரமான கோவாவின் பேருந்து நிலையத்தைப் பார்த்தபோது, பலத்த அதிர்ச்சியாக இருந்தது. பாடாவதி. பயணிகள் உட்கார பத்து நாற்காலிகள் கூட இல்லை. இருக்கின்ற ஒன்றிரண்டு பெஞ்சுகளும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, போர்த்துகீசியர் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட காங்கிரீட் சிலாப்புகள்தான். அதன் முதுகு சற்று வளைந்து உள்வாங்கி இருக்கின்றது. சற்றே சரிந்து கொண்டுதான் அமர வேண்டும். நிற்க முடியாதவர்கள், அதன் நுனியில் உட்காரலாமே தவிர, வசதியாக சாய்ந்து கொள்ள முடியாது. அதிலும் சில பெஞ்சுகள் உடைந்து கிடக்கின்றன. தரை ஆங்காங்கே பெயர்ந்து கிடக்கின்றது. தலையை மேலே உயர்த்தி, கூரைகளைப் பார்த்துவிடாதீர்கள். உங்கள் கண்களில் தூசு விழுந்து விடும். அந்த அரதப்பழைய ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை அமைத்ததற்குப் பிறகு, ஒருமுறை கூட ஒட்டடை நீக்கவில்லை போலும்.

துப்புரவுத் தொழிலாளிகள் பாவம் என்ன செய்வார்கள்? மேற்கூரை பதினைந்து இருபது அடிகள் உயரத்தில் அல்லவா இருக்கின்றது? மேலே ஏறி ஒட்டடை அடிக்க முடியுமா? அதனால் அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அதிகாரிகள், அவர்கள் சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒரே குப்பை கூளமுமாக இருந்தது பேருந்து நிலையம். எத்தனை கோடிகளை சுற்றுலாவில் ஈட்டுகின்றார்கள்? இப்படிச் சீரழித்து வைத்து இருக்கின்றார்களே பேருந்து நிலையத்தை என்ற வேதனை வாட்டியது.

கோவாவில் பெரும்பாலும் அளவிற் சிறிய பேருந்துகள்தாம் ஓடுகின்றன. கோவா மீனவப் பெண்கள், மீன்களைத் துண்டுதுண்டுகளாக நறுக்கி, கூறு போட்டு, பைபகளில் அடைத்து விற்கின்றார்கள். நம் ஊரில் இப்போதுதான் காய்கறிகளை இவ்வாறு வெட்டிக் கூறு போட்டு விற்கின்றார்கள். சென்னையில் மீன்களைக் கூறு கட்டி விற்கின்றார்களே தவிர, துண்டுதுண்டுகளாக வெட்டி, கழுவி சுத்தம் செய்து, பைகளில் அடைத்து விற்பதை, நான் பார்த்தது இல்லை. மேலும் சென்னையில், மீன் விற்பவர்களும், ஞாயிற்றுக் கிழமைகளில் புதிதாகத் தோன்றும் ஆடு மற்றும் பன்றி இறைச்சிக் கடையினரும், கழிவுநீர் வாய்க்கால்கள், சாக்கடைகளுக்குப் பக்கத்திலேயேதான் அமர்ந்து இருப்பர். இந்தக் கொடுமை இன்னும் எத்தனை நாள் நீடிக்குமோ?

கோவா பேருந்து நிலையத்தைச் சுற்றிப் பார்த்த அதிர்ச்சியோடு, மீண்டும் பாவ்லோ அலுவலகத்துக்குப் போனேன்.

வழிகாட்டியின் விளக்கங்கள்

முன்பதிவு செய்த பயணிகள் வரிசையாக வரத் தொடங்கி விட்டார்கள். சரியாக 10.10 மணிக்கு, வடக்கு கோவா சுற்றுப்பயணம் தொடங்கியது. பேருந்து புறப்பட்டவுடன் பயண வழிகாட்டி எழுந்தார். மைக் இல்லாமல் உரத்த குரலில் பேசத்தொடங்கினார். தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

“எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் விக்டர் ரோட்ரிக்ஸ். முதலில் உங்களுக்குச் சில குறிப்புகளைத் தருகின்றேன்.

எங்களுடைய பாவ்லோ நிறுவனம், 1935 ஆம் ஆண்டிலேயே போர்த்துகீசியர்களால் தொடங்கப்பட்ட சுற்றுலா நிறுவனம் ஆகும். இந்தியாவிலேயே பழமையான சுற்றுலா நிறுவனங்களுள் ஒன்று. எங்களிடம் விதவிதமான பேருந்துகள் உள்ளன. ஜெர்மனி நாட்டின் புகழ்பெற்ற பேருந்தான மான், இந்தியாவிலேயே எங்கள் நிறுவனத்திடம் மட்டும்தான் உள்ளது. கோவாவில் இருந்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகருக்கு பேருந்துகளை இயக்குகின்றோம். இந்தியாவிலேயே நீண்ட தொலைவுக்குப் பயணிகள் பேருந்து செல்லும் தடம் இதுதான்.

இன்றைய நாள் முழுவதும், நாம் 140 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க உள்ளோம். இந்தப் பேருந்தின் எண்ணை எல்லோரும் குறித்துக் கொள்ளுங்கள். எந்த இடத்தில் இறங்கினாலும், திரும்பி வரும்போது தேடிப்பிடிக்க எளிதாக இருக்கும்" என்றார். எல்லோரும் குறித்துக் கொண்டனர்.

"கோவா மாநிலத்தின் சாலைகள் குறுகியவை. இருபுறங்களிலும் மரங்கள் அடர்ந்து வளர்ந்து, கிளைகள் நீட்டிக் கொண்டு இருக்கின்றன. பேருந்தில் பல இடங்களில் உரசக்கூடும். எனவே, நீங்கள் தலை, கைகளை வெளியே நீட்டக் கூடாது. பேருந்தில் இருந்து கொண்டு வெளியில் எச்சில் துப்பக்கூடாது; காகிதங்கள், குப்பைகளை வெளியே எறியக் கூடாது; சாலையில் போகின்ற யார் மீதேனும் அவை பட்டுவிட்டால், வண்டியை எடுத்துக் கொண்டு பேருந்துக்குப் பின்னாலேயே விரட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். காவல்நிலையத்துக்கு உங்களை இழுத்துக்கொண்டு போகாமல் விடமாட்டார்கள். எனவே, வில்லங்கத்தை இழுத்துவிடாதீர்கள். அத்தகைய பிரச்சினை வந்தால், நாங்கள் பொறுப்பு அல்ல; குறிப்பிட்ட பயணியை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு நாங்கள் போய்விடுவோம். பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது; சட்டங்களை மீறுவோருக்கு, நாளை முதல் அக்வாடா என்ற இடத்தில் உள்ள மத்திய சிறையில் இலவச உணவு கிடைக்கும்" என்றார்.

பேருந்துக்கு உள்ளே பலத்த சிரிப்பு. விக்டர் தொடர்ந்தார்:

"இந்தியாவின் பிற மாநிலங்களில் மதுவுக்கு அரசுகள் விதிக்கின்ற வரி 24 விழுக்காடு. கோவா மாநிலத்தில் 12 விழுக்காடு மட்டும்தான். இங்கே குடிப்பதற்குத் தடை எதுவும் இல்லை. உங்களிடம் மது இருந்தால், வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இந்தப் பேருந்துக்கு உள்ளே யாரும் புகை பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது.

எந்த இடத்தில் இறங்கினாலும், நாங்கள் கொடுக்கின்ற நேரத்துக்கு உள்ளாகப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து விட வேண்டும்.

கோவா மாநிலம் 3702 சதுரகிலோ மீட்டர்கள் நிலப்பரப்பு உடையது. பதினைந்து இலட்சம் மக்கள் வாழ்கின்றார்கள். தலைநகர் பனாஜி. முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர். ஆளுங்கட்சி பாரதீய ஜனதா; எதிர்க்கட்சி காங்கிரஸ். 40 சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்கள் அவையில் ஒரு உறுப்பினர் இருக்கின்றார். இந்த மாநிலத்தை ஆண்ட மன்னர் கடம்பா பெயரில் பேருந்து நிறுவனம் உள்ளது.

1510 ஆம் ஆண்டு,வாஸ்கோ-ட-காமா தலைமையில் இந்த மண்ணில் கால் பதித்த போர்த்துகீசியர்கள், சுமார் 400 ஆண்டுகள் கோவாவைத் தங்கள் பிடிக்குள் வைத்து இருந்தனர். 1962 ஆம் ஆண்டுதான், இந்திய அரசு படைகளை அனுப்பி, போர்த்துகீசியர்களை வெளியேற்றி, இந்தியாவோடு கோவாவை இணைத்துக் கொண்டது. இப்போது கோவா, இந்தியாவின் 25 ஆவது மாநிலம்.

இன்று, முதலில் நாம் வடக்கு கோவாவில், வாஸ்கோவில் போர்த்துகீசியர்கள் கட்டிய கோட்டைக்குப் போகின்றோம்" என்றார்.

goa_arunagiri_642

அடுத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். "டால்ஃபின் மீன்கள் நீந்துகின்ற அழகைக் கண்டு ரசிக்க விரும்புகின்ற பயணிகள் படகுப் பயணம் போகலாம். சாலை வழியாகச் செல்லுகின்றபோது நாம் பார்க்க முடியாத பல இடங்களை, படகுப் பயணத்தின்போது பார்க்கலாம். கோவா கலங்கரை விளக்கம், 50 கோடி ரூபாயில், கோவாவிலேயே அதிக மதிப்புள்ள பிரமாண்டமான பங்களா மற்றும் வாஸ்கோ கோட்டையின் எழிலார்ந்த தோற்றத்தையும், படகுப் பயணத்தில் கடலில் இருந்தே நீங்கள் பார்க்கலாம். பயணம் முடிந்து நீங்கள் வெளியே வருகின்ற இடத்தில், இதே பேருந்து வந்து உங்களை ஏற்றிக் கொள்ளும். கட்டணம் ரூ 250" என்றார்.

ஐந்தாறு பேர் பணம் கொடுத்தனர். அவர்களை வழியில் இருந்த ஒரு படகுத்துறையில் இறக்கி விட்டுப் பேருந்து தொடர்ந்து சென்றது.

வழியில், கொங்கண் தொடர்வண்டித் தடத்தில் கட்டப்பட்டு உள்ள மீக நீண்ட ஆற்றுப்பாலத்தைக் காண்பித்தார். "கோவாவில், சுவாரி (zuari), மாண்டவி (Mandovi) ஆகிய இரு நதிகள் ஓடுகின்றன. இந்தப் பாலத்தைக் கடந்துதான் வடக்கு கோவாவுக்குப் போக வேண்டும். கொங்கண் தொடர்வண்டித்தடத்தில் கட்டப்பட்டு உள்ள சிறந்த பாலம் இதுதான்.

கோவாவில் சூதாட்டத்துக்குத் தடை கிடையாது. எனவே, ஆங்காங்கு சூதாடிக் கொண்டு இருப்பார்கள். உங்களை அழைப்பார்கள். அங்கே போய் நீங்கள் எதையும் இழக்காதீர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்" என்றார்.

வாஸ்கோ கோட்டைக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது, மணி 11.45ஆகி விட்டது. கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, 45 நிமிடங்களில் பேருந்துக்குத் திரும்பிவிட வேண்டும் என்றார்.

கோவாவில் உயரமான ஒரு இடத்தைத் தேர்ந்து எடுத்து, இந்தக் கோட்டையைக் கட்டிய போர்த்துகீசியர்களின் கடுமையான உழைப்பு, நம்மை வியக்க வைக்கின்றது. எவ்வித வசதிகளும் இல்லாத காலங்களில், புயல்-மழை-சூறாவளிகளை எதிர்கொண்டு, பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடலில் பயணித்து இங்கே வந்து, இவ்வளவு சிரமப்பட்டு, கோட்டையும் கட்டி இருக்கின்றார்களே?

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டை. எனவே, கடல் காற்றால் கோட்டைச் சுவர்கள் அரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆங்காங்கே, ஓட்டைகளாகத் தெரிகின்றன.

கோவா என்ற பெயர், படங்களுடன் கூடிய, கை இல்லாத வெள்ளைப் பனியன்கள் அணிந்த இளைஞர் படை ஒன்று ஆரவாரத்தோடு கோட்டையைச் சுற்றிவந்தது. அவர்களோடு நானும் இணைந்து கொண்டேன். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்கள். சுற்றுலாவுக்காக வந்து இருக்கின்றார்கள். நான் அவர்களோடு படம் எடுத்துக் கொண்டேன்; அவர்களும் என்னோடு படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அலைபேசி... ஆயிரம் வயசு என நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் அடங்கிய குறுநூலை அன்பளிப்பாக அவர்களிடம் கொடுத்தேன்.

அதைப் பற்றிய விவரங்களை ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டார்கள். ‘நீங்கள் எல்லோருமே உலகத்தை ஒருமுறையேனும் சுற்றி வாருங்கள்; உங்கள் வாழ்க்கையைப் புத்தகமாக எழுதுங்கள்’ என்ற வேண்டுகோளையும் விடுத்தேன். அவர்களுள் மூன்று நான்கு மாணவர்கள் என்னோடு நெருக்கமாகி விட்டார்கள். கோட்டை முழுவதும் என்னுடனேயே சுற்றி வந்தார்கள். அந்தப் புத்தகத்தில் உள்ள என்னுடைய ஃபேஸ்புக் முகவரியைப் பார்த்துவிட்டு, ‘ஃபேஸ்புக் வழியாக உங்களைச் சந்திக்கின்றோம்’ என்று கூறி விடைபெற்றனர்.

இந்தக் கோட்டையில், பம்பாய் படத்தின் சில காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

கோட்டையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், படகுப் பயணம் சென்றவர்களை வரவேற்பதற்காக, ஒரு படகுத்துறைக்கு அருகில் கொண்டு போய் நிறுத்திவிட்டார்கள். சுமார் அரை மணி நேரம் அங்கே வீணாகக் கழிந்தது.

சுற்றுலா நிறுவனத்தார் படகுப் பயணம் செல்பவர்களுக்குத் தனியாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், இது இந்த வழிகாட்டிக்குப் படி அளக்கின்ற பயணமாக இருக்கும்போல. அதனால், அதைப்பற்றி வலுக்கட்டாயமாகப் பெருமைபேசி, நான்கைந்து பேரை அனுப்பி விட்டார். பாவ்லோ நிறுவனம் இதைக் கவனிக்க வேண்டும். இதனால், மற்ற பயணிகளின் நேரம் விரயம் ஆகின்றது.

அடுத்து எங்களுடைய பயணம் தொடர்ந்தது. வடோகரா என்ற கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள். இந்தக் கடற்கரையில் ஆங்காங்கே திட்டுத் திட்டாகப் பாறைகள் உள்ளன. எல்லோரும் அவற்றின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டும், நின்றுகொண்டும் படங்களை எடுத்துக் கொண்டார்கள். நானும் படங்கள் எடுத்துப் பதிவு செய்து கொண்டேன். கோட்டையில் பார்த்த ஆக்ரா மாணவர்கள் அணிந்து இருந்தது போன்று, கோவா என்ற எழுத்துகளுடன் கூடிய பனியனை வாங்கி நானும் அணிந்து கொண்டேன். எதை எடுத்தாலும் பத்து ரூபாய் இருபது ரூபாய் என்பதுபோல, கோவாவில் எதைத் தொட்டாலும் 100 ரூபாய்தான். அந்த பனியனை ஒருமுறை தண்ணீரில் நனைத்தால், சுருங்கி விடும். அடுத்த நாள் நான் அணிய முடியாது. அடுத்த தலைமுறைதான் அணிய முடியும். அப்படிப்பட்ட பனியனுக்கும் கொள்ளை விலை.

goa_arunagiri_643

அதேபோல, ஒரு சாக்குப் பை வாங்கினேன். சென்னையில் அதன் விலை 30, 40 சில இடங்களில் ஐம்பது ரூபாய்க்குக் கிடைக்கும். அது கொஞ்சம் உறுதியானதாக இருக்கும். ஆனால், கோவாவில், பத்துத் துணிகளை வைத்தாலே அறுந்து விடும் என்கின்ற அளவிலான அந்தப் பைக்கு, 100 ரூபாய் பறித்துக் கொண்டார்கள். வேறு வழி இல்லை. எப்போதுமே உள்ளூர்ப் பயணங்களில், சாக்குப் பை ஒன்று வைத்துக் கொள்வது என் வழக்கம். துண்டு, போர்வை, செருப்பு போன்ற உடனடியாகத் தேவைப்படுகின்ற பொருள்களை அதில் வைத்துக் கொள்ளலாம். வசதியாக இருக்கும். செருப்பை, காகிதத்தில் சுற்றி வைப்பேன்; அல்லது பையில் போட்டு வைத்து விடுவேன். இம்முறை அப்படிக் கொண்டு வராததால், 50 ரூபாய் கூடுதல் இழப்பு.

அங்கிருந்து புறப்பட்டோம். உடலில் வியர்வை வழிந்தோடியது. கைக்குட்டை எடுத்துச் செல்லாததால், சிரமமாக இருந்தது. அணிந்து இருந்த சட்டையைக் கழற்றித் துடைத்துக் கொண்டேன்.

நண்பகல் ஆகி விட்டது. உணவுக்காகக் கொண்டு போய் நிறுத்தினார்கள். இங்கே ஒரு மணி நேரம் என்றார் வழிகாட்டி.

"கோட்டையைச் சுற்றிப் பார்க்க 45 நிமிடம் தந்தீர்கள்; இங்கே ஏன் ஒரு மணி நேரம்?" என்று நான் கேட்டேன்.

இதுதான் அவர்களது வழக்கமான பயணத் திட்டம். எங்கெல்லாம் அவர்களுக்குப் படி அளக்கின்றார்களோ, அங்கே கூடுதல் நேரம் நிறுத்துவார்கள். ஆக்ரா சுற்றுப் பயணத்தின்போதும் இப்படித்தான். ஆக்ரா கோட்டையைப் பார்க்க ஒரு மணி நேரம் தர மாட்டார்கள். வேகமாக ஓடிப் போய்த்தான் பார்த்துத் திரும்ப வேண்டும். அவ்வளவு தொலைவு. ஆனால், கைவினைப் பொருட்கள் விற்கின்ற ஒரு கடையில் கொண்டுபோய், ஒன்றரை மணி நேரம் நிறுத்திவைப்பார்கள். இருபது முப்பது ஆண்டுகளாக, இதே கொடுமைதான் தொடர்கின்றது. கடந்த ஆண்டு நான் சென்று இருந்தபோதும் அப்படித்தான்.

அந்தக் கடையில், தாஜ்மகால் எப்படிக் கட்டப்பட்டது என்பதை, பொறுமையாக விளக்கமாகச் சொல்லுவார்கள்; ஆனால், தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு அவ்வளவு நேரம் தர மாட்டார்கள். கடைக்காரர்கள் எடுத்துக் காட்டுகின்ற தாஜ்மகால் மாதிரி ஒன்றாக இருக்கும்; அது வேண்டும் என்றால் கொடுக்க மாட்டார்கள். நாங்கள் விற்பதுதான் உண்மையான பளிங்குக் கல்; மற்றவை எல்லாம் மாவுக்கல் என்று சொல்லி, கையளவு தாஜ் வடிவத்துக்கு, ஆயிரம் ரூபாய் பிடுங்கிக் கொள்வார்கள்.

அதேபோல, ஆக்ராவில் இருந்து தில்லி திரும்புகின்றபோது, வழியில் உள்ள சிக்கந்தரா என்ற இடத்தில், அக்பர் சமாதியில் முன்பு நிறுத்துவார்கள். இப்போது, அங்கே நிறுத்துவது கிடையாது.

இங்கே கோவாவிலும் இப்படித்தான் நேரத்தை வீணடிக்கின்றார்கள். 10 மணியில் இருந்து ஆறு மணிக்கு உள்ளாக, 140 கிலோமீட்டர்கள் சுற்றுகிறார்கள்; அதுவும் நேரான தேசிய நெடுஞ்சாலை அல்ல; குறுகலான, வளைந்து நெளிந்து செல்லுகின்ற, ஏறி இறங்குகின்ற பாதைகளில் இவ்வளவு தொலைவு பயணிப்பதற்கே, சுமார் நான்கு மணி நேரம் போய்விடுகின்றது. அதாவது, பெரும்பாலான நேரம் நாம் பேருந்துக்கு உள்ளேயேதான் அமர்ந்து இருக்கின்றோம். வெளியில் இறங்கி சுற்றிப் பார்க்கின்ற நேரம் மிகவும் குறைவு.

கடைசியாக நான்கு மணிக்கு, பாகா என்ற கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையிலும் நீண்டு கிடக்கின்றது; பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகின்றது. வண்ண வண்ணக் குடைகள்; அதற்கு உள்ளாக சாய்வு மெத்தைகள். அதில் உள்ளாடைகளுட‌ன் ஆண்களும், பெண்களும் படுத்துக் கிடக்கின்றார்கள். பெண்களுக்கும், ஆண்களே மசாஜ் செய்கின்றார்கள். 

மசாஜ் செய்து கொள்ளும்படி என்னை அழைத்தவரிடம் கட்டண விவரத்தைக் கேட்டேன்.

முழு உடல் மசாஜ் ஒரு மணி நேரம். கட்டணம் 650 ரூபாய்; கால்கள் மட்டும் என்றால் இருபது நிமிடங்கள்தான். 250 ரூபாய்; மசாஜ் இல்லாமல், படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றால், படுக்கைக்கு ஒரு மணி நேரக் கட்டணம் ரூ 100 என்றார்.

மசாஜ் செய்த மனநிறைவோடு அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

இந்தக் கடற்கரையின் நீளம் ஐந்து கிலோ மீட்டர்கள் என்று வழிகாட்டி ஏற்கனவே கூறி இருந்தார். காலையில் வாக்குவாதம் செய்ததால், "இந்தக் கடற்கரையை ஒரு மணி நேரம் சுற்றிப் பார்க்கலாம்" என்றார். அங்கும் இங்கும் அலைந்து நேரத்தை வீணாக்காமல், சுருக்கமாகச் சுற்றித் திரிந்தேன். தாய்லாந்து நாட்டின் பட்டாயா கடற்கரையில் நான் பறந்ததுபோல, இங்கே ஐந்தாறு பாராசூட்டுகளில் பலர் பறந்துகொண்டு இருந்தார்கள்.

‘பனானா போட்’ என்று அழைக்கப்படும், வாழைப்பழ வடிவிலான நீள்படகில், ஐந்தாறு பேர் சேர்ந்தாற்போல அமர்ந்து கொள்கின்றார்கள். படகோட்டி மிக விரைவாகச் செலுத்துகின்றார். தண்ணீரில் எம்பி எம்பிக் குதிக்கின்றது படகு. வேகமாக ஒரு இடத்தில் வளைத்துத் திருப்புகின்றார்; ஐந்து பேரும், தண்ணீருக்கு உள்ளே விழுந்து தத்தளிக்கின்றார்கள். ஆனால், யாரும் மூழ்கி விடாமல் உடனடியாக மேலே தூக்கிவிடுகின்றார்கள். இதை எல்லாப் படகோட்டிகளுமே செய்கின்றார்கள். கடலுள் விழுந்து எழுந்த பயணிகளுக்கு மறக்க முடியாத பயணமாக அமைந்து விடும்.

இந்தக் காட்சிகளை எல்லாம், கரையில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். இந்தக் கடற்கரைக்கு ஒரு மணி நேரம் போதாது. ஒருநாள் ஓய்வு தேவைப்படும். அடுத்தமுறை குடும்பத்தோடு கோவா வரும்போது, இதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

இத்துடன், இன்றைய பயணம் நிறைவு பெற்றது.7.30 மணி அளவில், காலையில் ஏற்றிய இடத்திலேயே கொண்டு வந்து இறக்கி விட்டார்கள்.

கோவா பற்றிய நூல்கள்:

Goa Dourada : The Indo-portuguese Bouquet என்ற படங்கள் நிறைந்த, பெரிய அளவிலான பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை நான் வைத்து இருந்தேன். அதில், கோவா பற்றி, அருமையான தகவல்கள் நிரம்பி இருந்தன.

இந்தப் புத்தகத்தை எழுதியவர், டி.பி. இஸ்ஸார். பஞ்சாபியரான இவர், கர்நாடக மாநில அரசின் தலைமைச் செயலராகப் பணி ஆற்றி ஓய்வு பெற்றவர்(1992). பெங்களூரு, மைசூரு ஆகிய இரண்டு பெருநகரங்களின் கட்டடக் கலையைப் பற்றி ஆய்வு செய்து இவர் எழுதிய The City Beautiful, The Royal City ஆகிய இரண்டு நூல்களும், வாசகர்களால் சேகரிப்போரால் விரும்பிப் படிக்கப்பட்டவை; கட்டடக் கலைஞர்களால் பாதுகாக்கப்படுபவை. இவருடைய நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று, கோவாவைப் பற்றி ஆய்வு செய்து, அரிய படங்களுடன் விவரமாக இந்த நூலை எழுதி இருக்கின்றார்.

இந்த நூலை வெளியிட யுனெஸ்கோ நிறுவனத்தார் நிதி உதவி வழங்கி உள்ளனர். இத்தகைய வழிகாட்டி நூல்களை வெளியிட யுனெஸ்கோ நிதி உதவி வழங்குகின்ற செய்தியை, இந்தப் புத்தகத்தின் முன்னுரையில்தான் அறிந்து கொண்டேன்.

இந்தப் புத்தகத்தில், இந்திய-போர்த்துகீசிய பண்பாட்டு இணைப்பு, கட்டடக்கலை, ஆர்ட்டிஃபேக்ட்ஸ், மர வேலைப்பாடுகள், நீலக் கற்கள் மற்றும் துணிகள் குறித்து, இஸ்ஸார் விவரமாக எழுதி உள்ளார்.

சந்தி மரிச்ச மேரி

சந்தி மரிச்ச அம்மன், பிள்ளையார் கோவில்களைத் தமிழகத்தில் பார்க்கின்றோம்; கோவாவில் பல இடங்களில், சந்தி மரிச்ச மேரி; சந்தி மரிச்ச சர்ச்சுகளைப் பார்த்தேன். அதேபோல, கோவாவில் உள்ள இந்துக் கோவில்களின் கோபுரங்கள், கிறித்துவ தேவாலயங்களின் பாணியில் அமைந்து இருக்கின்றன. சாந்த துர்கா ஆலயம், மங்கேஷி ஆலயங்களில் கோபுரங்களின் வடிவங்கள் மாறுபட்டு உள்ளனவே என யோசித்துக் கொண்டு இருந்தேன். அதைப் பற்றிய விளக்கங்கள் மேற்கண்ட நூலில் உள்ளன.

goa_arunagiri_644

இந்தியர்களுக்கும், போர்த்துகீசியர்களுக்கும் இடையிலான தொடர்புகள் 450 ஆண்டுகள் பழமையானவை. பெரும்பாலும் இந்தியாவின் மேற்குக் கரையில், கோவா, கேரளாவில் பல இடங்களிலும், வேறு சில இடங்களிலும், போர்த்துகீசியர்களின் வாழ்க்கைத் தடங்களைப் பார்க்கலாம். அவர்கள் இங்கே கட்டிய வீடுகளுக்கான மர வேலைகளைச் செய்வதற்காகவே, போர்த்துகல் நாட்டில் இருந்து, தச்சர்களையும் அழைத்து வந்து உள்ளனர். அவர்கள், தமக்கு உதவியாளர்களாக, இந்தியர்களைப் பணியில் அமர்த்திக் கொண்டு உள்ளனர். அந்த உதவியாளர்கள், போர்த்துகீசியர்களின் மர மற்றும் கட்டட வேலைப்பாடுகளைப் பழகிக் கொண்டனர். அது, இன்றளவும் தொடர்கின்றது. இப்போதும், கோவாவில் கட்டப்படுகின்ற கட்டடங்களில் அதைக் காண முடிகின்றது.

கோவா மாநிலத்தில் இருந்து புகழ் பெற்ற மனிதர்கள்: மேரியோ மிராண்டா அண்மையில்தான் மறைந்தார். இவர் அனைத்து இந்திய அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் கருத்துப்பட வரைகலைஞர் (கார்ட்டூனிஸ்ட்). அவரைப் பற்றியும், கோவா குறித்து நிறைய நூல்களைச் சேகரித்து வைத்து உள்ள பிராக்ஸி பெர்னாண்டஸ் (Praxy Fernandes) பற்றியும், இஸ்ஸார் நூலில் குறிப்புகள் கிடைக்கின்றன.

மனோகர் மல்காவ்ன்கர் எழுதிய இன்சைடு கோவா, (1982 Inside Goa- Manohar Malgonkar) ஆய்வாளர் அல்வாரோ பெர்னாண்டஸ் எழுதிய நூல்கள் (Mr Alvaro Leao Fernandes, researcher on the Christian-Portuguese Component of Goa s Sociao-cultural tradition) இந்த நூலை எழுதப் பெரிதும் உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டு உள்ளார், கோவா டூராடா நூலை எழுதிய டி.பி. இஸ்ஸார். இவரது மகள் காய்த்ரி, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக, போர்ச்சுகல் நாட்டில் பணிபுரிந்தவர். அங்கே இருந்து, ஆவணங்களைத் திரட்டித் தந்து உள்ளார். மொத்தம் 184 பக்கங்கள். சுமார் ஒரு அடி உயரம், முக்கால் அடி அகலம். 265 வண்ணப்படங்கள் இடம் பெற்று உள்ளன. கோவாவைப் பற்றி அறிந்து கொள்ள விழைவோர் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது.1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, 2001 இல் மறுபதிப்பு கண்டு உள்ளது. விலை ரூ. 1200. 

கோவா பற்றி மேலும் அறிந்து கொள்ள, படிக்க வேண்டிய நூல்கள்:

1. Golden Goa (1980) Marg Publications, Mumbai

2. Inside Goa (1982) Government of Goa

3. Goa (J.M.Richards, (1982), Vikas Publishing House vt. Ltd., New Delhi

4. This is Goa (1983) (Source Publishers Pvt.Ltd, Mumbai

5. De Goa A Lisboa ( Instituto Portugues de Museus, 1992, Lisbon

6. A Arte Indo Portugues de Museus, 1992, Lisbon

7. Barogue Goa (Jose Pereira, 1995, Books and Books, Janakpuri, New Delhi.

8. Goa: Cultural Patters, (1983), Marg Publication,Mumbai

9. Goa: Cultural Trends (Seminar Papers), Directorate of Archives, Archaeology & Museum, Goa,1988

10. Interiors em Portugal, Helder Carita, Livraria Civilizacao Editora, Lisbon

11. Azulejos de Portugal, Rota da Asia, Seculos XVII e XVIII, Jose Mecor, Funcacao Orients, 1991,Lisbon

12. Goa and the Blue Mountains, Richard Burton, 1851, Asian Educational Services, New Delhi

13. Tesouros Artisticos de Portugal, Seleccoes do Reader s Digest, 1976, Lisbon

14. A Influencia Oriented na Ceramica Portuguesa do Seculo XVII, Museu Nacional do Azulejo,Lisbon

15. The Portuguese in India, Vol I & II, Frederick Charles Danvers, 1894, Asian Educational Services, New Delhi.

(தொடரும்..)

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It