கோவா: விவரம் தெரிந்த நாள் முதல் என் காதுகளுக்குள் ஒலிக்கின்ற ஒரு பெயர். எழுபதுகளில் கோவா மாநிலத்தில், சௌகுலே நிறுவனத்தின் சுரங்கத்தில் என் மாமா வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். விடுமுறையில் ஊருக்கு வரும்போது, கோவா பற்றிய செய்திகளை அத்தை நிறையச் சொல்லுவார். அங்கே கொங்கணி மொழி பேசுகிறார்கள் என்றதுடன், ஒன்றிரண்டு சொற்களையும் சொல்லிக் காட்டினார். கொங்கணி என்ற பெயரே எனக்குப் புதுமையாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. பலமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அப்போது, திருநெல்வேலியைப் பற்றிக்கூட அறிந்து இராத என் நண்பர்களிடம், கோவா பற்றி எனக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லி, பெருமைப்பட்டுக் கொள்வேன்.

கோவா மாநிலம், 1961 ஆம் ஆண்டு வரையிலும் போர்த்துகீசியர்களின் ஆளுகையின் கீழ்தான் இருந்தது. போர்த்துகீசியர்கள் கோவாவை விட்டு வெளியேற வேண்டும்; இந்தியாவோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என கோவா மக்கள் போராடி வந்தனர். அவர்களுடைய தலைவர் ரானடேவை, போர்த்துகீசிய அரசு கைது செய்து, போர்த்துகல் (போர்ச்சுகல்) நாட்டின் தலைநகர் லிஸ்பன் சிறையில் அடைத்து வைத்தது. மக்கள் போராட்டங்கள் வலுப்பெறவே, 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள், இந்திய அரசு, படைகளை அனுப்பி, கோவா மாநிலத்தில் இருந்த போர்த்துகீசியப் படைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, கோவா பகுதிகளை இந்தியாவோடு இணைத்துக் கொண்டது என்ற வரலாறைப் படித்து இருக்கின்றேன். அப்போது நடந்த மோதலில், 21 இந்திய வீரர்களும், 30 போர்த்துகீசியர்களும் கொல்லப்பட்டார்கள். ஐரோப்பிய நாடுகள், இந்தியாவின் இந்தத் தாக்குதலைக் கண்டித்தன. 451 ஆண்டுகள், போர்த்துகீசியர்களின் பிடியில் இருந்த கோவா விடுதலை பெற்று, இந்தியாவின் 25 ஆவது மாநிலமாக ஆயிற்று.

udupi_bus_stand_630

உடுப்பி பேருந்து நிலையம்

கோவா மாநிலத்தின் கடற்கரைகள் உலகப் புகழ் பெற்றவை. சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கக் கூடியவை. ஏடுகளில் கோவா பற்றிய செய்திகள் நிரம்ப வெளிவருகின்றன. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களது, பிரமாண்டமான வெற்றிப் படங்களுள் ஒன்றான ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பெரும்பகுதி காட்சிகள், கோவா மாநிலத்திலேயே படம் பிடிக்கப்பட்டன. மேலும் பல திரைப்படங்களின் பாடல் காட்சிகள், கோவா மாநிலத்தின் இயற்கை எழிலைப் படம் பிடித்துக் காட்டி இருக்கின்றன. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோவா என்ற பெயரிலேயே ஒரு திரைப்படம் வெளியானது. அதையும் பார்த்தேன். கோவா மாநிலத்தின் இயற்கை எழில் மற்றும் அழகிய கடற்கரைகளைப் பற்றிப் படிக்கும்போதெல்லாம், அங்கே சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

சென்னைக்கு நேர்கோட்டில், இந்தியாவின் மேற்குக் கரையில், அரபிக் கடல் ஓரத்தில் அமைந்து உள்ள ஊர் மங்களூரு. அந்தப் பெயரையும் நீண்ட நாள்களாக அறிவேன். சென்னை, மையத் தொடர் வண்டி நிலையத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு நாள்தோறும் மங்களூருக்கு ஒரு தொடர்வண்டி செல்லுகிறது. ‘மேற்குக் கடற்கரை விரைவு வண்டி’ என்றே அதற்குப் பெயர் (West Coast Express). இந்த வண்டியில் பலமுறை ஏறி, ஈரோடு, கோவை வரையிலும் சென்று இருக்கின்றேன்; அங்கிருந்து திரும்பி வந்து இருக்கின்றேன்.

2013 ஜனவரி 5 ஆம் நாள், மும்பையில் நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சிக்காகச் செல்ல வேண்டி இருந்தது. அந்தப் பயணத்தில், இம்முறை கோவாவுக்கும் சென்று விடுவது என்று தீர்மானத்தேன். சென்னை மையத் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, வாரம் ஒருமுறை கோவாவுக்கு நேரடியாகத் தொடர்வண்டி வசதி உள்ளது. எனினும், நான் மங்களூரு வழியாகப் பயணிப்பது எனத் தீர்மானித்தேன். பயணச் சீட்டை முன்பதிவு செய்தேன்.

27.12.2012

வழக்கம்போல, ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தில்/ அலைபேசி வழியாக முன்பதிவு செய்து காரை வரவழைத்து, வீட்டில் இருந்து புறப்பட்டேன். நொளம்பூரில் உள்ள என்னுடைய வீட்டில் இருந்து புறப்பட்டு, மையத் தொடர்வண்டி நிலையம் வந்து சேர்ந்தபோது, மீட்டர் ரூ.266 தான் காட்டியது. மகிழ்ச்சியோடு ரூ 275 கொடுத்தேன். காரணம், 2008, 09களிலேயே, எங்கள் பகுதியில் உள்ள தானி ஓட்டுநர்களிடம் மையத் தொடர்வண்டி நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னால், 300 கொடு, 400 கொடு என்று கேட்டு அதிர வைப்பார்கள்.

ஃபாஸ்ட் ட்ராக் ஓட்டுநரிடம் பேசினேன். ‘எங்கிருந்து வருகின்றீர்கள்?’ என்று கேட்டேன்.

‘அண்ணா நகர் ரவுண்டானாவில் இருந்து வந்தேன் சார்’ என்றார். ஆனால், என் வீட்டில் இருந்து புறப்பட்டபோதுதான் மீட்டரை இயக்கினார்.

2012 டிசம்பர் மாதத் தொடக்கத்தில், எழும்பூரில் இருந்து வண்டி பிடித்து, நானும், என் தங்கையும், சோழிங்கநல்லூர் சென்றோம். பின்னர் அங்கிருந்து, செம்பாக்கத்தில் உள்ள எனது சகோதரி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது, பிற்பகல் 3 மணி. அங்கிருந்து 6 மணி அளவில் புறப்பட்டு, நுங்கம்பாக்கத்துக்கு வந்து என் சகோதரியை இறக்கி விட்டு விட்டு, மீண்டும் நான் எழும்பூர் வந்து இறங்கியபோது, ரூ 1,180 தான் ஆகி இருந்தது. தனியாக செம்பாக்கம், தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, நொளம்பூர் வர ரூ 500 தான் ஆகிறது. இதற்கு முன்பு, நொளம்பூரில் இருந்து எழும்பூருக்குப் பலமுறை வந்து விட்டேன். ரூ 233, 250, 260 என்றுதான் கட்டணம் ஆகிறது.

ஏ.சி. காரில் இனிமையான பயணம். தானியை விட பிரச்சினையில்லாத பயணம். எல்லா ஓட்டுநர்களுமே ஒன்றுபோலத்தான் இயங்குகிறார்கள். இதுவே சென்னையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மாற்றம் பரவலாக நிகழ்ந்தால், சுற்றுலாப் பயணிகள் மட்டும் அல்ல, உள்நாட்டுத் தமிழர்களும் அச்சம் இன்றி, கார்களில் ஏறிப் பயணிப்பார்கள்.

மங்களூரு பயணத்துக்காக, மையத் தொடர்வண்டி நிலையத்துக்கு வந்து சேர்ந்தேன். உள்ளே நுழைகின்ற இடத்தில் இருக்கின்ற, சென்னையின் புகழ்பெற்ற தொடர் உணவகம் ஒன்றில், காபிக்கடையில் யாருமே இல்லை. முன்பு விறுவிறுப்பாக இருந்த இடம், இப்போது வெறுமையாகக் கிடக்கின்றது. பரபரப்பு இல்லை. காரணம், இரண்டு சாம்பார் வடை ரூ 55; காபி விலை ரூ 25. அதைவிடச் சிறந்த தரத்தில், சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் நல்ல தரமான காபிக்குப் பெயர் பெற்று உள்ள உணவகம் தருகின்ற மினி காபி 13 ரூபாய்தான். பெரிய கிளாஸ் 17 ரூபாய்தான்.

எனவே, புகழ்பெற்ற உணவகத்தில் காபி குடிப்பதைத் தவிர்த்துக்கொண்டு, 4 ஆம் எண் நடைமேடையை நோக்கி நடந்தேன். தொடர்வண்டித்துறையின் ஜனதா உணவகம் கண்ணில்பட்டது. அங்கே, இரண்டு சாம்பார் வடையின் விலை 19 ரூபாய்தான். தரம் ஓரளவு பரவாயில்லை. ஆனால், விலை மலிவுதானே?

மையத் தொடர்வண்டி நிலையத்தில் நாளுக்குநாள், கூட்ட நெரிசல் பெருகிக் கொண்டு இருக்கின்றது. யாரையும் இடிக்காமல் நடக்க முடியவில்லை. பயணிகள் அமருகின்ற பகுதிக்கு உள்ளேயே நுழைய முடியவில்லை. எல்லா இருக்கைகளிலும் பயணிகள் உட்கார்ந்து இருந்தார்கள்.

பெரும்பாலும் வட இந்தியத் தொழிலாளர்கள்தாம். ஒரு இடத்தில், வடஇந்தியர்கள் குடும்பத்தோடு, கூட்டம் கூட்டமாகத் தரையில் துணி விரித்து வட்டமாகச் சுற்றி அமர்ந்து இருக்கின்றார்கள். பெரிய பெரிய பெட்டி படுக்கைகள். எப்படித்தான் தூக்கிக் கொண்டு அலைகிறார்களோ? குறைந்த சுமை; இனிமையான பயணம் (Less Luggage; More comfortable) என்பதைப் புரிந்து கொண்டால், பயணம் எப்போதுமே இனிமையாக அமையும்.

அந்தக் கூட்டத்துக்கு நடுவே, சிவப்புச் சட்டை அணிந்து இருந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் பலர், தரையில் படுத்துக் கிடந்தனர். அதுவும் ஆழ்ந்த உறக்கத்தில். அவர்களைக் கடந்து உள்ளே சென்று இடம் பிடிப்பது அரிது. இருப்பினும், வண்டி புறப்பட நீண்ட நேரம் இருந்ததால், கையில் பெட்டிகளை வைத்துக்கொண்டு, மிகுந்த சிரமப்பட்டு உள்ளே சென்று, ஒரு இருக்கையைப் பிடித்து அமர்ந்தேன். சுழல் உருளைகள் பொருத்திய பெட்டிகள், பைகள் வந்தபிறகு, சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டன. 90களில், சென்னை மையத்தொடர் வண்டி நிலையத்துக்கு உள்ளே ஒரு தொடர்வண்டி நுழைகையில் 100, 200 சுமைதூக்கும் தொழிலாளர்கள் வரிசையாக அமர்ந்து இருப்பார்கள். இப்போது அந்த எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இருக்கின்ற சிலருக்கும் வேலை இல்லை. இப்படிப் படுத்து உறங்குகின்றார்கள்.

மையத் தொடர் வண்டி நிலையத்தில், ஆங்காங்கு வைக்கப்பட்டு உள்ள அகன்ற திரைகளில், தொலைக்காட்சி விளம்பரங்கள், தொடர்வண்டித் துறையின் அறிவிப்புகள் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தன. முன்பு திருடர்கள் குறித்து ஒலிபெருக்கிகளில் எச்சரிப்பார்கள். இப்போது, எப்படியெல்லாம் திருடுகிறார்கள் என்பதை படமாகவே எடுத்து ஒளிபரப்புகிறார்கள்.

தொடர்வண்டிக்கு உள்ளே அமர்ந்து, சன்னல் ஓரமாகத் தலையைச் சாய்த்து உறங்கிக் கொண்டு இருக்கின்றார் ஒரு பெண். வேகமாக வருகின்ற திருடன், ஒரே நொடியில் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடி விடுகிறான்; ஒருவர் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவரிடம் பையைப் பார்த்துக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டு, கழிப்பு அறைக்குப் போகிறார். அவர் அந்தப் பக்கம் நகர்ந்த அடுத்த நொடியில், இவர் பையைத் தூக்கிக் கொண்டு ஓடி விடுகின்றார்; அடுத்து ஒருவர் மயக்க மருந்து தடவிய பிஸ்கெட் கொடுக்கிறார்; வாங்கித் தின்று மயங்கிச் சரிகிறார் மற்றொருவர்; கை, காதுகளில் இருப்பவற்றை எல்லாம் கழற்றிக் கொண்டு ஓடி விடுகிறார் திருவாளர் திருடர் பெருமான்.

இதுபோல, ஒளிபரப்பாகின்ற காட்சிகள், பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற உணர்வைப் பயணிகளுக்கு ஏற்படுத்துகின்றன. இது தொழில் நுட்பப் புரட்சியால் ஏற்பட்டு உள்ள வரவேற்கத்தக்க மாற்றம்.

நடந்து வந்த களைப்பு, தாகம் தீர, ஆவின் பாலகத்தில் சூடான பால் வாங்கிப் பருகினேன். அலைபேசி அழைத்தது. புதுக்கோட்டை ஞானாலயா நூலக நிறுவனர் கிருஷ்ணமூர்த்திதான் அழைத்தார். என்னுடைய ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி என்ற ஐரோப்பியப் பயண நூலுக்கு  முன்னுரை எழுதியவர். தமிழ் பயண இலக்கியத்தின் தந்தை ஏ.கே.செட்டியார்; அவரது நேரடி வாரிசு அருணகிரி என்று குறிப்பிட்டார். இவர், ஏ.கே. செட்டியாரோடு நெருங்கிப் பழகியவர்களுள் ஒருவர். செட்டியாரைப் பற்றி சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகின்றார். செட்டியார் எழுதிய நூல்கள் அனைத்தும் இவரது நூலகத்தில் உள்ளன. நான் அங்கே சென்று, அந்த நூல்களைப் படித்து ஆய்வு செய்து, உலக வலம் என்ற என்னுடைய நூலில், சுருக்கமாக ஒரு கட்டுரை எழுதி உள்ளேன்.

‘பேசி நாள்கள் பல ஆயிற்றே; சும்மாதான் அழைத்தேன்; அடுத்த பயணம் எப்போது?’ என்று கேட்டார்.

‘ஐயா, சென்னை மையத்தொடர் வண்டி நிலையத்தில்தான் நின்று கொண்டு இருக்கின்றேன். பத்து நாள்கள் பயணம்; மங்களூரு, கோவா, மும்பை, அஜந்தா, எல்லோரா என இதுவரையிலும் நான் பார்க்காத பல இடங்களுக்குச் செல்கிறேன். புறப்படுகின்ற வேளையில், சரியாக உங்களிடம் இருந்து அழைப்பு வந்து இருக்கின்றது’ என்றேன். வாழ்த்துச் சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மையத் தொடர்வண்டி நிலையத்தில், நடைமேடைகளின் அகலம் மிகவும் குறைவாக இருக்கின்றது. அதிலும் நடக்க முடியாத அளவுக்குப் பல்வேறு தடைகள். சரக்கு ஏற்றிச் செல்லுகின்ற தள்ளுவண்டிகள், வழியை அடைத்துக் கொண்டு நிற்கின்றன. தொடர்வண்டியில் ஏற்ற வேண்டிய சரக்குகளையும் பரப்பி வைத்து இருக்கின்றார்கள். இதற்கு ஊடாக நீங்கள் உள்ளே நுழைந்தால், யாரையேனும் இடித்துக்கொண்டுதான் நடக்க முடியும்; அல்லது நீங்கள் இடி வாங்க வேண்டும். இந்த இடத்தையும் ஒருவழியாகக் கடந்து, வண்டிக்குள் ஏறி அமர்ந்தேன்.

அவுட்லுக் டிராவலர்

மங்களூரைப் பற்றி இணையத்தில் தகவல்களைப் பெற வேண்டும்; படங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். பணி நெருக்கடிகளால் முடியாமற் போயிற்று. மங்களூரு என்ற பெயர் மட்டும்தான் தெரியும் என்கின்ற நிலை. தள்ளுவண்டி புத்தகக் கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று பார்த்தேன். OUtlook Traveller கண்ணில்பட்டது. அது கடற்கரைச் சிறப்பிதழ். அட்டைப்படத்திலேயே Coastal Crawl என்ற தலைப்பில், Mangalore to Kokarna என்ற கட்டுரை இடம் பெற்று இருப்பதாக எழுதி இருந்தது. ஒரு பிரதியின் விலை ரூ.100. உடனே வாங்கினேன்.

அவுட்லுக் டிராவலர் என்ற மாத ஏடு, பயணம் தொடர்பான செய்திகளை மட்டுமே தொகுத்துத் தருகின்றது. கட்டுரைகள், சுருக்கமாகவும், சிறப்பாகவும் உள்ளன. ஏராளமான வண்ணப்படங்களைப் பார்க்கலாம். கடைகளில் அவ்வளவாக விற்பனைக்குக் கிடைப்பது இல்லை. பெரும்பாலும் சந்தாதாரர்களுக்கே கிடைக்கின்றது. பயண ஆர்வலர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஏடு இது.

 

11 மணி அளவில், வண்டியில் ஏறி அமர்ந்தேன். குளிர்பதனப் பெட்டி என்பதால், நம் வீட்டுக்குள் ஓர் அறைக்கு உள்ளே அமர்ந்து இருப்பதுபோலத்தான் இருக்கின்றது. ஆனால், பக்கத்தில் பலர் உட்கார்ந்து இருக்கின்றார்கள். வண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றது; நாமும் ஆடிக்கொண்டே பயணிக்கின்றோம். அவ்வளவுதான். மூன்றாம் வகுப்பு குளிர்பதனப் பெட்டிகளில், இருக்கைகளுக்கு இடையிலான இடைவெளி மிகவும் குறைவு. எனவே, நெருக்கடி அதிகம்.

சன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தவர்கள் திரைகளை விலக்கவில்லை. எனவே, வெளியில் ஒன்றும் தெரியவில்லை. பலமுறை பயணித்த வழித்தடம்தானே? எனவே, படிக்கவும், மடிக்கணினியில் எழுதவும் அந்த நேரம் பயன்பட்டது. எதிரே இரண்டு இளைஞர்கள்; அண்ணன் தம்பிகள்.

பெற்றோருடன் பயணிக்கின்றனர். வண்டி ஓடத் தொடங்கியதும் படுக்கையை விரித்தவர்கள்தான், மதிய உணவுக்குக்கூட எழவே இல்லை. மாலையிலும் தொடர்ந்து உறங்கினார்கள்.

வண்டியில் பயணிக்கும்போது கட்டுரைகளைப் படித்தேன். ஷீதல் வியாஸ் என்ற கட்டுரையாளர், கர்நாடகக் கடற்கரையின் பல இடங்களுக்குப் பயணித்து அந்தக் கட்டுரையை எழுதி இருந்தார். சந்தீபன் சட்டர்ஜி என்பவர் அவருடன் பயணித்து, வண்ணப்படங்களை எடுத்து இருக்கின்றார்.

udupi_mut_640

உடுப்பி கிருஷ்ணா மத் முன்பு

மங்களூர், உடுப்பி, கோகர்ணா ஆகிய இடங்களைப் பற்றிய கட்டுரை அது. மங்களூரில் முதன்மையாகப் பார்க்க வேண்டிய இடங்களுள், இரண்டு கோவில்களைக் குறிப்பிட்டு இருந்தார். மஞ்சுநாத் ஆலயம், மங்களூர் பனம்பூர் கடற்கரையைப் பற்றியும் எழுதி இருந்தார்.

தமிழகத்தை விட நிலப்பரப்பில் பெரிய மாநிலம் என்றாலும், கர்நாடக மாநிலத்தில் 280 கிலோமீட்டர் நீளத்துக்கு மட்டுமே கடற்கரை இருக்கின்றது. தமிழகக் கடற்கரையின் நீளம் 1000 கிலோமீட்டர். மங்களூரில் அமைந்து உள்ள துறைமுகம், இந்தியாவின் பெருந்துறைமுகங்களுள் ஒன்று. சென்னை-மங்களூரு, இரு நகரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்து இருக்கின்றன. இது வங்கக் கடற்கரை; அது அரபிக் கடலோரம். எனவே, பருவநிலை பெரும்பாலும் ஒன்றாகத்தான் இருக்கக்கூடும்.

நண்பர்கள் சந்திப்பு

ஈரோடு நண்பர் ரவி, ஈரோடு தொடர்வண்டி நிலையத்துக்கு வந்து சந்தித்தார். அவரிடம் மங்களூரைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார்:

‘நான் மங்களூருக்குச் சென்று வந்து உள்ளேன். அது பெரிய ஊர். மங்களூருக்கு வடக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உடுப்பி நகரம் அமைந்து உள்ளது. கிருஷ்ணன் கோவில் புகழ்பெற்றது. இந்த மேற்குக் கடற்கரைத் தொடர்வண்டியில் வருகின்ற நூற்றுக்கணக்கான பயணிகள், உடுப்பியில் உள்ள கோவில்களைப் பார்க்கத்தான் போவார்கள். எனவே, இந்த வண்டி வருவதை எதிர்பார்த்து, மங்களூரு தொடர்வண்டி நிலையத்தில், நிறைய வாடகைக் கார்கள் காத்துக் கொண்டு இருக்கும். அதில் ஏறி நேராக உடுப்பி சென்று பார்த்துவிட்டு, மங்களூருக்குத் திரும்பி வந்து விடலாம்’ என்றார்.

அடுத்து, அலைபேசி வழியாக மட்டுமே அறிமுகமாகி இருந்த நண்பர் வழக்கறிஞர் செந்தில்கண்ணன், தமது இரு நண்பர்களோடு கோவை தொடர்வண்டி நிலையத்துக்கு வந்து சந்தித்தார். ‘நாங்கள் மூவருமே பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளோம். மேற்குத் தொடர்ச்சி மலையில் பல பகுதிகளுக்குப் போய் இயற்கையை ரசித்து இருக்கின்றோம். இனிமேல்தான் தமிழகத்தை விட்டு வெளியே போக வேண்டும்; மும்பைக்கு, முன்பதிவு செய்யாத பொதுப் பெட்டியில் பயணித்து வரத் திட்டமிட்டு உள்ளோம்’ என்றனர் மூவரும். மும்பையில் சந்திப்போம் என்று கூறி விடைபெற்றேன்.

கோவையைக் கடந்து வாழையார் பகுதிக்கு வரும்போதெல்லாம், கேரள தொலைத்தொடர்புத் துறையின் வரவேற்பு வரிகள், என் அலைபேசியில் குறுஞ்செய்தியாக வந்தன. வாழையார் சிமெண்ட் தொழிற்சாலை கண்ணில்பட்டது. திரூர் நண்பர் நசீர் நினைவு வந்தது. அலைபேசியில் அழைத்தேன்.

‘இங்கே வருவது குறித்து நீங்கள் முன்பே சொல்லக்கூடாதா? நானும் உங்களோடு வந்து இருப்பேனே? இப்போது, பெங்களூருவில் உள்ளேன். பல ஆண்டுகளுக்கு முன்பு மங்களாபுரம் சென்று வந்து உள்ளேன். பெரிய ஊர்தான். (கேரளாவில், மங்களூரை, மங்களாபுரம் என்றுதான் சொல்லுகின்றார்கள்) தொடர்வண்டி நிலையத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் துறைமுகம் உள்ளது. கோடை காலத்தில்கூட கேரளா போலத்தான் பருவநிலை இருக்கும். வெயில் கிடையாது. நீங்கள் பிற்பகலில் கோவாவுக்குச் செல்வதால், காலையில் உடுப்பிக்குப் போக வேண்டாம். வீண் அலைச்சல். அதற்குப் பதிலாக, நடந்தே மங்களூரைச் சுற்றிப் பாருங்கள். தொடர்வண்டி நிலையத்திலேயே தங்கும் அறைகள் உள்ளன. வெளியில் வந்தால், சற்றுத் தொலைவிலேயே குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகளும் உள்ளன’ என்றார். ஈரோடு ரவியோடு பேசியபோது, உடுப்பி போவது என்று தீர்மானித்தேன். அடுத்து நசீரோடு பேசியபோது, உடுப்பி வேண்டாம்; அலைச்சலைத் தவிர்ப்போம்; மங்களூரைப் பார்ப்போம் என்று முடிவு எடுத்தேன்.

கோவா பயணத் திட்டம்

கோவாவில் சுற்றுலா வாரம் என்பதே, டிசம்பர் 25 முதல் ஜனவரி 1 வரையிலும்தான். கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டும். நான் பயணித்த நாள்களும் அதுதான். இது, இயல்பாகவே அமைந்த ஒன்று. நான் திட்டமிடவில்லை. எனவே, புறப்பட்டு, மங்களூரு செல்லும் வரையிலும் கோவாவில் நான் தங்கும் இடம் உறுதி ஆகவில்லை. ஒருவேளை கிடைக்கவில்லை என்றால், தெருவில்தான் அல்லது தொடர்வண்டி நிலையத்தில்தான் கிடக்க வேண்டும். எப்படியானாலும் சரி; பார்த்துக் கொள்வோம் என்ற எண்ணத்தோடுதான் பயணித்துக் கொண்டு இருந்தேன்.

நீண்ட நாள்களாக ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி ஆற்றி விட்டு, ஒரு வாரம், பத்து நாள்கள் விடுமுறை; நீண்ட தொலைவுப் பயணம் போகும்போது, ஏதோ விடுதலை பெற்ற உணர்வு ஏற்படுகிறது. அலுவலகத்தில் இருந்து பணி ஆற்ற வேண்டிய நேரத்தில், பயணிப்பதும் ஒரு மாறுதலாக இருக்கின்றது.

நேற்று முன்தினம் மதுரையில் நான் சந்தித்த எனது கல்லூரித் தோழர், ஒரு தனியார் நிறுவனத்தின் மதுரைக் கிளையின் மேலாளராகப் பணி புரிகின்றார். அவர் சொன்னார்: ‘சென்னையில் வேலைக்குச் சேர்ந்தேன். மதுரையில் காலி இடம் வந்தது. மாறுதல் கேட்டு வாங்கிக்கொண்டு இங்கே வந்தேன். இப்போது மேலாளர் ஆகி விட்டேன். திரும்ப சென்னைக்குக் கூட வந்தது இல்லை. இங்கேயேதான் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கின்றது' என்றார். அவரது மனைவி, அரசு மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியையாக இருக்கின்றார். ஒரே மகள். 'அடுத்த ஆண்டு, குடும்பத்தோடு வட இந்தியச் சுற்றுப்பயணம் சென்று வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். இப்படித்தான் பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கின்றது.

மங்களூருவில்...

நள்ளிரவு 12 மணிக்கு, கோழிக்கோடு தொடர்வண்டி நிலையத்துக்கு உள்ளே வண்டி வந்தது. உடன் பயணித்து வந்த குடும்பத்தினர் இறங்கிக் கொண்டனர். ஒத்தப்பாலம், சொரனூர், திரூர், கோழிக்கோடு, காசர்கோடு வழியாக தொடர்வண்டி சென்றது. லேசாகக் கண் அயர்ந்தேன்.

மங்களூரு வந்து விட்டது என்று சக பயணிகளின் பேச்சுச் சத்தம் கேட்டுத்தான் விழித்தேன். நேரம் சரியாக விடிகாலை நான்கு மணி. வெளியில் குளிர் இருக்குமோ என்று கருதியவாறே பெட்டியில் இருந்து இறங்கினேன். இயல்பாகவே இருந்தது.

தொடர்வண்டி நிலைய தகவல் அலுவலரைச் சந்தித்து, கூட்டுப்படுக்கை அறைகள் (டார்மிட்டரி) குறித்துக் கேட்டேன். குளிர்பதன அறைகள் ரூ.200, அல்லாதவை ரூ.125 என்றார். குளிர்பதன அறை வேண்டும் என்று கேட்டேன். பயணச்சீட்டு வழங்கும் கவுண்டரிலேயே பணத்தைக் கட்டி ரசீது கொண்டு வாருங்கள் என்றார். வரிசையில் நின்று பணத்தைக் கட்டினேன். கோவாவுக்கு அடுத்த வண்டி எப்போது? என்று கேட்டேன். ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்து இருந்த பயணச்சீட்டைப் பார்க்கவே இல்லை. அது ஒரு தவறு என்பது பின்னர்தான் புரிந்தது.

காலை 6.30 க்கு ஒரு வண்டி. அதற்குப் பிறகு, பிற்பகல் 2.35 தான் அடுத்த வண்டி என்றார். சென்னையில் இருந்து புறப்படுகின்ற வரையிலும், மங்களூருவில் இருந்து கோவா பயணத்துக்கான எனது முன்பதிவுச் சீட்டு இருக்கை உறுதி ஆகவில்லை. காத்து இருப்போர் பட்டியலிலேயே இருந்தது. எனவே, பிற்பகலில் வரிசையில் வந்து நிற்க வேண்டாமே என்று கருதி, சாதாரண வகுப்பில் ஒரு சீட்டு வாங்கிக் கொள்வோம் எனத் தீர்மானித்துக் கேட்டேன். 6.30 வண்டிக்குக் கட்டணம் ரூ.52; 2.35 வண்டிக்குக் கட்டணம் ரூ.107 என்றார். 2.30 வண்டிக்கு வாங்கிக் கொண்டேன்.

டார்மிட்டரி ரசீதைக் கொண்டு போய், மீண்டும் வரவேற்பாளரிடம் கொடுத்தேன். அந்தச் சீட்டின் எண்ணை, தம்மிடம் இருந்து பதிவு ஏட்டில் பதிந்து கொண்டு, எனது முழு முகவரி, தொலைபேசி எண்களை எழுதும்படிச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன். 5 ஆம் எண் அறையின் திறவுகோலைக் கொடுத்தார். வாங்கிக்கொண்டு முதல் மாடிக்குப் போனேன். குளிர்பதன அறைகள் ஓரளவு தூய்மையாகவே இருந்தன. 6 அடி நீளம்; 5 அடி அகலத்துக்கு சிறுசிறு தடுப்புகள்தாம்; படுக்கை வெண்ணிறத் துணி விரித்து, தூய்மையாகவே இருந்தது.

உடைமைகளை வைத்து விட்டு ஆறு மணி வரை ஓய்வு எடுப்போம் என்று கருதினேன். ஆனால், தூக்கமே வரவில்லை. வண்டியில்தான் விடிய விடிய நன்றாகத் தூங்கி விட்டோமே? 5.30 க்கு எழுந்து, மீண்டும் எழுதினேன். விடிந்தவுடன் புறப்பட்டு, உடுப்பி வரையிலும் போய்விட்டு வந்து விடுவோம் என்று தீர்மானித்தேன். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதுபோல, ஊர் சுற்றிப் பழகியவர்களால் ஒரு இடத்தில் உட்கார முடியாது. புறப்படுவதற்கான ஆயத்தங்களைச் செய்தேன். காலை 6.15 மணிக்கெல்லாம், அறையைப் பூட்டி, சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். பொழுது புலரவில்லை. இருட்டாகவே இருந்தது. பேருந்து நிலையத்துக்குச் செல்ல தானி ஒன்றைப் பிடித்தேன். 30 ரூபாய் கேட்டார். (வரும்போது 20). சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலேயே பேருந்து நிலையம் இருக்கின்றது.

உடுப்பி செல்லும் பேருந்தில் ஏறினேன். உடனே புறப்பட்டது. ஐந்தாறு பேர்கள்தாம் இருந்தோம். நடத்துநரைக் காணவில்லை. ஒருவேளை உடுப்பிக்கு இலவசமாக அழைத்துச் செல்கிறார்களோ என்று யோசித்துக் கொண்டு இருந்தபோது, இரண்டு மூன்று கிலோ மீட்டர்களுக்கு அப்பால், டி சர்ட் அணிந்த ஒருவர் கையில் பூக்களோடு வண்டியில் ஏறினார். வண்டியில் சாமி படங்களுக்கு அணிவித்தார். அவர்தான் நடத்துநர் போலும். சீருடை எதுவும் இல்லை. ஊரைவிட்டு பேருந்து வெளியில் வரும்வரை பயணச்சீட்டு கேட்கவே இல்லை. பதினைந்து இருபது நிமிடங்கள் கழித்துத்தான் பயணச்சீட்டு கொடுக்க வந்தார். மங்களூரு உடுப்பி பேருந்துக் கட்டணம் ரூ.50. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரப் பயணம். தேசிய நெடுஞ்சாலை எண்.66 இப்போதுதான் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஆங்காங்கு பாலங்கள் கட்டுமானப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்த சரத்குமார் என்பவரோடு பேசினேன். ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். உடுப்பியைப் பற்றி விசாரித்தேன். விவரங்கள் கூறினார். தமிழ்நாட்டில் இருந்து நிறையப் பேர் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு வருகிறார்கள் என்றார்.

ஆம்; 1980 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். வந்தார். அதன்பிறகு, இந்தக் கோவில் பிரபலம் ஆகிவிட்டது என்றேன்.

ஆமாம்; அவர் அந்தக் கோவிலுக்கு தங்க வாள் காணிக்கை கொடுத்தது எனக்கு நினைவு இருக்கிறது என்றார். மங்களூரில் இருந்து வடக்கு நோக்கிப் பயணித்தால், உடுப்பி 60 கிலோமீட்டர்; கொல்லூர் 100 கிலோமீட்டர்; அடுத்து, முர்டேஸ்வர், கோகர்ணா என வரிசையாக, பல ஊர்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் பிரபலமான கோவில்கள் என்றார். உடுப்பியில்தான், மத்வாச்சாரியார் த்வைதம் என்ற கோட்பாட்டை நிறுவினார்.

8.15 மணிக்கு உடுப்பி பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அங்கிருந்து, ஸ்ரீ கிருஷ்ணா மத் சுமார் ஒன்று அல்லது ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நடந்தே செல்லும்படி அறிவுறுத்தினார்கள். நடந்தே சென்றேன்.

மடத்துக்கு எதிரே உள்ள ஒரு சிறிய சந்துக்கு உள்ளே ஒரு சிறிய உணவகம் இருந்தது. எட்டுக்கு எட்டு சதுரத்துக்கு உள்ளே, இரண்டு மேசைகளைப் போட்டு வைத்து இருந்தார்கள். இட்லி சிறிய அளவில், நம்மூர் இட்லியை விடச் சரிபாதியாக, அழகாக, அளவாக இருந்தது. ஆறு இட்லி,வடை, காபி ரூ.38. காபி அளவாக, அருமையான சுவையோடு மணம் கமழ்ந்தது.

udupi_mut_450கிருஷ்ணா மடத்துக்கு முன்பாக, இரண்டு தேர்கள் அலங்கரிக்கப்பட்டு வீதியில் நிறுத்தப்பட்டு இருந்தன. மடத்துக்கு உள்ளே செல்லுவதற்கு, வெளியே ஒரு நீண்ட வரிசை காத்துக் கொண்டு இருந்தது. மடத்துக்கு உள்ளே ஒரு தெப்பக்குளம் உள்ளது. அதன் படிகளில், பார்ப்பன வேதியர்கள் அமர்ந்து மந்திரங்களை முணுமுணுத்துக்கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தனர். ஒருவர் தண்ணீரை வெள்ளைத்துணியால் வடிகட்டி ஒரு செம்புத்தட்டில் எடுத்து பூசைக்குக் கொண்டு சென்றார்.

பொருள்கள் வைக்கும் அறைக்குச் சென்றேன். அங்கே இருந்த முதியவர், ‘மடிக்கணினிப் பையை வாங்க மாட்டேன். காவலரிடம் காண்பித்து விட்டு உள்ளே செல்லுங்கள்’ என்றார். பாதி வரிசையில் நின்றுகொண்டு இருந்தவரிடம் அனுமதி பெற்று, வரிசையில் இடம்பிடித்தேன்.

நுழைவாயிலுக்கு அருகில் வரும்போது, அங்கே நின்றுகொண்டு இருந்த ஒருவர், கணினிப் பையை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றார்.

சாமான்கள் வைக்கும் இடத்தில் இதை வாங்க மறுக்கின்றாரே? என்றேன்.

வாருங்கள் என்னோடு என்று கூறி அழைத்துச் சென்றார். அங்கே இருந்தவருக்கும் இவருக்கும் இடையே ஒரு சிறு வாக்குவாதம். கடைசியாக, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் வந்து வாங்கிக் கொள்ள வேண்டும்; விலை மதிப்பு உள்ள பொருள்கள் தொலைந்து போனால் பொறுப்பு கிடையாது என்றெல்லாம் சொல்லி, அரை மனதோடு வாங்கிக் கொண்டார் அந்தப் பெரியவர்.

மீண்டும் வரிசைக்கு வந்து, மடத்துக்கு உள்ளே நுழைந்தேன். ஆண்கள் சட்டையைக் கழற்ற வேண்டுமாம். உள்ளே, கேரள பாணியில், மரங்களால் அமைந்த சுற்றுப் பிரகாரம். அதில் வரிசையாக விளக்குகள். ஐந்து பத்து நிமிடங்களில், கிருஷ்ணர் சிலை இருக்கும் இடத்தை நெருங்கினேன்.

சுமார் மூன்று அடி உயரத்தில், அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலை; மணிகள் பொருத்திய கதவுத்துளைகளின் வழியாகத்தான் உள்ளே உற்றுப் பார்க்க வேண்டும். ஐந்து அல்லது பத்து விநாடிகள். அவ்வளவுதான். வழிபாடு முடிந்தது. இதற்குத்தான் அவ்வளவு நீண்ட வரிசை.

அடுத்து ஒரு பெரிய அரங்கம். ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் திரண்டு நின்று கொண்டு இருந்தார்கள். யானையைச் சுற்றிலும் குழந்தைகள் கூட்டம். அடுத்த அன்னதான அரங்கம். மற்றொரு இடத்தில் மாடுகளைக் கட்டி வைத்து இருக்கின்றார்கள். இவ்வளவுதான் அந்த மடம்.

ஆங்காங்கே வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. மடம் நடத்துகின்ற பள்ளியின் மாணவ, மாணவியர்கள் ஓரிடத்தில் அணிதிரண்டு, பேண்டு வாத்தியங்களை முழங்கிக் கொண்டு ஊர்வலமாகப் புறப்பட்டுப் போனார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் சிறிது தொலைவு நடந்து சென்று, மடத்துக்கு முன்புறமாக வந்தேன். மடத்துக்கு எதிரே ஒரு கோவில் உள்ளது. குவாஹத்தி காமாக்யா கோவிலை நினைவுபடுத்தும் கட்டுமானம்.

உடுப்பி சிறிய ஊர் என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால், அது பெரிய ஊராகத்தான் இருக்கின்றது. மணிப்பால் பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள் மட்டும் அன்றி, பல அடுக்கு மாடிக் கட்டடங்கள், குடியிருப்பு வளாகங்கள் உள்ளன. நகரத்தை மிகத் தூய்மையாகப் பராமரிக்கின்றார்கள்.

உடுப்பி உணவகங்கள்

உடுப்பி என்ற பெயரை நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உடுப்பிக்காரர்கள் உணவகங்கள் நடத்தி வந்தார்கள்; பல ஊர்களில் மூடிவிட்டாலும், பரவலாக உடுப்பி உணவகங்களை இப்போதும் காண முடியும். உணவகத் தொழிலில் உடுப்பிக்காரர்கள் அவ்வளவு பிரபலம். எனது சொந்த ஊரான சங்கரன்கோவிலிலும், உடுப்பி உணவகம் ஒன்று இருந்தது. அந்த உணவகத்தின் உரிமையாளர் மகன் குமாரசாமி, பள்ளியில் ஒரு வகுப்பு மூத்தவர். பள்ளித்திடலில், கிரிக்கெட் விளையாட்டுத் தோழர். உடுப்பியில் அவர் எங்கே இருக்கின்றாரோ? என்ன செய்து கொண்டு இருக்கின்றாரோ? என்று எண்ணிப் பார்த்தேன். இப்போது உள்ளது போல, அலைபேசிகள், தொலைத்தொடர்பு வசதிகள் அப்போது இல்லை என்பதால், தொடர்புகள் விடுபட்டுப் போயின. ஆனால் இப்போது, நீண்ட நாள்களாகக் காண முடியாத நண்பர்களையும், எதிர்பாராதவிதமாக முகநூல் பக்கங்களில் பார்த்து மகிழ முடிகின்றது. இந்த நினைவுகளோடு உடுப்பியைச் சுற்றி வந்தேன்.

மேடும் பள்ளமுமாக அமைந்த கேரள நகரங்ளைப் போலவே உடுப்பி பேருந்து நிலையத்தில், நகரப் பேருந்துகள் புறப்படும் இடம், பத்துப் பதினைந்து அடிகள் கீழே இறங்க வேண்டும். அங்கிருந்து மணிப்பால் பல்கலைக்கழகம், ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர்கள் தொலைவில்தான் இருக்கின்றது என்றார்கள். அதைப் பார்க்க விழைந்தேன். டைகர் சர்க்கிள் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்றார்கள். பதினைந்து இருபது நிமிடங்களில் அங்கே சென்றது பேருந்து.

மணிப்பால் என்ற பெயரை, இளம்பருவத்திலேயே கேள்விப்பட்டு இருக்கின்றேன். அது ஏதோ, வட இந்தியாவிலோ அல்லது வட கிழக்கு மாநிலங்களிலோ இருக்கிறது போலும் என்று நீண்ட நாள்களாகக் கருதிக்கொண்டு இருந்தேன். உடுப்பிக்கு அருகில் இருக்கின்றது என்பதை அண்மையில்தான் அறிந்தேன். மணிப்பால் பல்கலையின் விளம்பரங்கள், பிரமாண்டமான கட்டடங்களுடன் அடிக்கடி வெளியாகும். அங்கே படித்துப் பட்டம் பெற்ற பலரைச் சந்தித்து இருக்கின்றேன். எனவே, அந்தப் பல்கலைக்கழகத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு சென்றேன்.

டைகர் சர்கிளில், கஸ்தூர்பா நினைவு மருத்துவமனை, அதனை அடுத்து பல்கலைக்கழக முதன்மைக் கட்டடங்கள் முன்பு நின்று படங்கள் எடுத்துக் கொண்டேன்.

படம் எடுப்பதற்கு உதவியாக யாரும் இல்லாததால், வழியில் போவோர் வருவோரை எல்லாம் அழைத்துப் படங்கள் எடுத்துத் தரச் சொன்னேன். ஒரு பெரிய திடல். பார்வையாளர்கள் அமர்ந்து இருக்கின்ற காலரியில் நின்று கொண்டு படம் எடுக்கச் சொன்னேன். படம் எடுப்பதற்கு வசதியாக, சற்றே பின்னோக்கி நகர்ந்து கீழே இருந்த தளத்தில் கால் வைக்க முனைந்தேன். அப்படியே சரிந்து தடுமாறி விழுவதற்குள் சமாளித்துக் கொண்டேன். அதாவது, சாதாரணபடிகளைப் போல அல்லாமல், விளையாட்டுத் திடல்களில் உள்ள படிகளில் உயர இடைவெளி சற்று அதிகமாக இருக்கும்.

அதைக் கணக்கிடாமல் பின்னோக்கி நகர்ந்ததில், விழுந்து மண்டை நொறுங்கி இருக்க வேண்டும்; அல்லது, கை கால்கள் முறிந்து இருக்க வேண்டும். படங்கள் எடுக்கும்போது பலர் இந்தத் தவறைச் செய்கின்றார்கள். படம் எடுப்பவர்கள், இன்னும் கொஞ்சம் பின்னால் போ என்பார்கள். எதிரே நிற்பவர்கள், பின்னால் திரும்பி பார்க்காமல் நகர்ந்து சென்று விழுந்து விடுவார்கள்.

தாஜ்மகாலில் நடந்த விபத்து

இப்படித்தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆக்ரா தாஜ்மகலில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பொறியியல் பட்ட வகுப்பு மாணவி கீழே விழுந்தார். தாஜ்மகல் கட்டடம், ஒரு பீடத்தின் மீது கட்டப்பட்டு உள்ளது. அந்த பீடத்தின் மேலே உள்ள வெட்டவெளியில், பார்வையாளர்கள் பளிங்குக் கற்களில் அமர்ந்து, தாஜ் கட்டடத்தின் அழகைக் கண்டு ரசிக்கலாம். படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழகத்தின் செட்டிநாட்டுப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு பொறியியல் கல்லூரியின் மாணவ, மாணவியர், வட இந்தியச் சுற்றுப்பயணத்தில் தாஜ்மகலுக்குச் சென்றனர். பீடத்தின் வெளிப்புறத்தில் சுவர் விளிம்பு ஓரமாக நின்றுகொண்டு ஒரு மாணவியைப் படம் பிடிக்க ஒரு மாணவர் முயன்றார். கொஞ்சம் தள்ளி நிற்கச் சொன்னார். படம் எடுக்கின்ற மகிழ்ச்சியில் பின்னால் இருந்த தொலைவைச் சரியாகக் கணிக்காமல், சற்றே பின்னோக்கி நகர்ந்த அந்தப் பெண் நிலை தடுமாறி சுமார் பதினைந்து அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

ஓடிச்சென்று எட்டிப் பார்த்த மாணவர், இரத்த வெள்ளத்தில் மாணவி கிடப்பதைப் பார்த்த உணர்ச்சி வேகத்தில் தானும் அங்கிருந்து குதித்து விட்டார். அவர் படிகள் வழியாக கீழே இறங்கி வந்து காப்பாற்றி இருக்கலாம். இருவருக்குமே இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிந்து விட்டன. உயிர் பிழைத்ததே பெரிது.

அங்கிருந்து, தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ அவர்களுக்குத் தகவல் கொடுத்தார்கள். அவர், அங்கிருந்து அவர்களைக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உதவியோடு, ஆக்ராவில் இருந்து இருவரையும் தில்லிக்குக் கொண்டு வந்தனர். முழுமையாக உடல் நலம் பெற பல மாதங்கள் ஆகும் என்றார்கள். பின்னர், தில்லியில் சில நாள்கள் வைத்து இருந்துவிட்டு, அவர்களை தொடர்வண்டியில் சென்னைக்கு ஏற்றி அனுப்புவது பெரும்பாடாகி விட்டது. மிகுந்த சிரமப்பட்டுத்தான் வண்டிக்கு உள்ளே ஏற்றினோம்.

இங்கே மணிப்பாலில் படிகளில் சறுக்கியபோது, ஆக்ரா நிகழ்வு என் நினைவுக்கு வந்தது. தடுமாறித் தப்பித்தேன். மீண்டும் மங்களூரு நோக்கிப் பயணித்தேன். என்னைப் பொறுத்த அளவில், உடுப்பியில் பார்க்க வேறு ஒன்றும் இல்லை. உடுப்பி பேருந்து நிலையத்தில் வாங்கிய இந்து ஆங்கில ஏட்டைப் புரட்டிக்கொண்டே பயணித்தேன்.

(தொடரும்)

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It