இந்தியாவில் ஓடுகின்ற தொடர்வண்டிகளின் பெயர்கள் பெரும்பாலும் இந்தி மற்றும் ஆங்கில மொழியிலேயே அமைந்து உள்ளதால், அவற்றின் தன்மை குறித்த வேறுபாடுகளை பாமர மக்கள் அறிந்து கொள்ள முடிவது இல்லை.

தொடர்வண்டிகளில் அறிவிப்புகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில்தான் உள்ளன. எட்டு கோடி மக்கள் பேசுகின்ற தமிழ் மொழியை, தமிழ்நாட்டுக்கு உள்ளே ஓடுகின்ற தொடர்வண்டிகளில் தேடித்தான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் ஓடுகின்ற தொடர்வண்டிகளின் வகைகளைப் பற்றிக் காண்போம்:

துரந்தோ எக்ஸ்பிரஸ்(Duranto): 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தி மொழியில், ‘துரந்த்’ என்றால், ‘புயல் உடனடியாக’ என்று பொருள். ‘துரந்தோ’ என்றால், ‘அதிவிரைவு வண்டி.’ எந்த ஊரில் இருந்து புறப்பட்டாலும், போய்ச் சேருகின்ற ஊர் வரையிலும், இடைவெளியில் எந்த நிறுத்தத்திலும் நிற்காமல் செல்லும். சென்னையில் இருந்து புறப்பட்டால், அடுத்த நிறுத்தம் டெல்லிதான். முழுமையும் குளிர்பதன வசதி உள்ளது. அனைத்துப் பயணிகளுக்கும், வண்டியிலேயே உணவு பரிமாறப்படும்.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (Rajdhani Express - தலைநகர் விரைவு வண்டி): தில்லியில் இருந்து மாநிலத் தலைநகரங்களை இணைக்கும் வண்டி. முழுமையும் குளிர்பதனம் செய்யப்பட்டது. 130 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லக்கூடியவை. சென்னை-தில்லிக்கு இடையில் விஜயவாடா, நாக்பூர், போபால் என ஒருசில பெரிய நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும். அனைத்துப் பயணிகளுக்கும், வண்டியிலேயே உணவு பரிமாறப்படும்.
 
சதாப்தி எக்ஸ்பிரஸ் (Shadabdi Express): ‘சதாப்தி’ என்றால் நூற்றாண்டு. இதுவும் விரைவு வண்டிதான். ஆனால் படுக்கைகள் கிடையாது. இருக்கைகள் மட்டுமே உண்டு. முழுமையும் குளிர்பதனம் கொண்ட, பகல் நேர வண்டி. சென்னையில் இருந்து மைசூருக்கு, புதன்கிழமை தவிர, மற்ற அனைத்து நாள்களிலும் செல்கிறது. மற்றொரு வண்டி, சென்னையில் இருந்து, பெங்களூருக்கு, செவ்வாய்க்கிழமை தவிர, மற்ற அனைத்து நாள்களிலும் செல்கிறது.

கரீப் ரத் (Gharib Rath - ஏழைகளின் தேர்): மேற்கண்ட விரைவு வண்டிகளில் கட்டணம் அதிகம். அதில் பயணிக்க முடியாத நடுத்தர மற்றும் ஏழைகளுக்காக, அதே தரத்திலான வசதிகளுடன் கூடிய வண்டி. குளிர்பதனம் மற்றும் உணவு வசதிகள் உண்டு.

ஜன் சதாப்தி (Jan Shadabdi Express): சதாப்தி விரைவு வண்டி போலத்தான். ஆனால், இதில் குளிர்பதனப் பெட்டிகளுடன், சாதாரணப் பெட்டிகளும் உண்டு.

சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் (Sambark Kranti Express): ‘சம்பர்க்’ என்றால் ‘கலாச்சார பரிமாற்றம்’; ‘கிராந்தி’ என்றால் ‘புரட்சி’ என்று பொருள். இடைநில்லாத் தொடர்வண்டி. மாநிலத் தலைநகர் அல்லாத அடுத்தநிலை நகரங்களை, இந்தியத் தலைநகருடன் இணைக்கின்றன. ராஜ்தானி விரைவு வண்டியை விட, 15 விழுக்காடு குறைவான கட்டணம். தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து தில்லிக்கு சம்பர்க் கிராந்தி வண்டி ஓடுகிறது.

சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்/மெயில்: விரைவுத் தொடர்வண்டிகள். சராசரியாக, 55 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லக்கூடியவை.

எக்ஸ்பிரஸ்: இவ்வகையான வண்டிகள்தாம், இந்தியாவில் பெரும்பாலும் ஓடுகின்றன. பொதுவாக, அனைத்து பெரிய நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.

பாசஞ்சர், ஃபாஸ்ட் பாசஞ்சர்: குறைந்த வேகத்தில் இயங்குபவை; அடித்தட்டு மக்களுக்கானவை. பெரும்பாலும், இருக்கைகள் மட்டுமே உண்டு. ஒருசில இரவு நேர வண்டிகளில் மட்டுமே, படுக்கை வசதி உண்டு.

சுபர்பன்: டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், லக்னோ, கான்பூர் ஆகிய பெருநகரங்களுக்கு உள்ளே மட்டுமே ஓடுகின்றன. புறநகர்வாசிகள், நகரின் மையப்பகுதிகளுக்கு உள்ளே இருக்கின்ற அலுவலகங்களுக்கு வந்து செல்லக்கூடிய வகையில் இயங்குபவை. இந்த நகரங்களில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும். இருக்கைகள் மட்டுமே உண்டு. படுக்கை வசதி கிடையாது. முன்பதிவு வசதிகளும் இல்லை. ஆனால், மாதாந்திரச் சீட்டுகள் உண்டு.

மெட்ரோ/மோனோ: டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டுமே இத்தகைய வண்டிகள் ஓடுகின்றன.

தமிழகத்தில் பொதிகை, வைகை, மலைக்கோட்டை, முத்துநகர் என ஆறுகள், அடையாளங்களின் பெயர்களை தொடர்வண்டிகளுக்குச் சூட்டி இருப்பதுபோல, இந்தியா முழுமையும் இவ்வாறு பல பெயர்களில் தொடர்வண்டிகள் ஓடுகின்றன.

கலிங்கா, கொனார்க் (ஒரிஸ்ஸா), மகாலெட்சுமி (கர்நாடகா), ஷான்-இ-பஞ்சாப் (பஞ்சாப்பின் அடையாளம்), கோல்டன் டெம்பிள், சேடக் (மகாராணா பிரதாப்பின் குதிரை), பிங் சிட்டி (ஜெய்பூர்), லால்கிலா (செங்கோட்டை), பூர்வ (கிழக்கு), பஸ்சிம்(மேற்கு), ரப்தி சாகர், ஸ்டீல் சிட்டி (இரும்பு நகரம்),கர்நாடகா, சார்மினார், லால் பாக், பிருந்தாவன், கொரமண்டல், கீதாஞ்சலி, ஞானேஸ்வர் (மேற்கு வங்காளம்), ஷாலிமார், உத்யோக் நகரி, புஷ்பக், அவாத் (உ.பி), அக்னி வீணா (பெங்கால்), அகிம்சா (அஹமதாபாத்-புணே), அஜந்தா (மன்மட்-செகந்தராபாத்), அகால் தக்த் (பொற்கோவிலின் புனித பீடம்) (அம்ரித்சர்-சியால்டா, கொல்கத்தா), அரண்யக் (காடு), ஆரவல்லி (ஜெய்பூர்-பாந்த்ரா), ஆஸ்ரம் (அஹமதாபாத்-டெல்லி), ஆசாத் இந்த் (விடுதலை இந்தியா)(புணே-ஹெளரா), பாக்மதி (ஆறு), தர்பங்கா, பிஹார்-பெங்களூர்), பிளாக் டயமண்ட் (கருப்பு வைரம்) (ஹெளரா-தன்பாத்), பிரம்மபுத்ரா - (திப்ரூகர்-டெல்லி), புத்த பூர்ணிமா (ராஜ்கீர்-வாரணாசி), பந்தேல்காண்ட் (குவாலியர்-வாரணாசி), கச்சார் (லும்திங்-சில்சார், அஸ்ஸாம்), சாளுக்கியா (தாதர்-யஷ்வந்த்பூர்), சம்பல் (ஹெளரா-குவாலியர்), சாமுண்டி (மைசூரு-பெங்களூரு), சத்தீஷ்கர் (பிலாஸ்பூர்-அம்ரித்சர்), சித்ரகூட் (லக்னோ-ஜபல்பூர்), சர்கார் (அ) சிர்கார் (சென்னை-காகிநாடா), கோல்ஃபீல்டு(நிலக்கரிவயல்) (ஹெளரா-தன்பாத்), டெக்கான் (மும்பை-புணே), தீக்ஷாபூமி (நாக்பூர்-கயா), துவாரகா (ஓக்லா- குவாஹட்டி), கிழக்கு கடற்கரை (ஹெளரா-ஹைதராபாத்), ஏக்தா (ஒற்றுமை) (பிவானி-கல்கா), ஃபலக்நூமா (செகந்தராபாத்-ஹெளரா), ஃபராக்கா (டெல்லி-மால்டா), ஃபிளையிங் ராணி (மும்பை-சூரத்), கணதேவதா(ஹெளரா-அசிம்கஞ்ச்), கங்கா-கோம்தி (அலஹாபாத்-லக்னோ), கங்கா-காவேரி (சென்னை-சப்ரா, பிஹார்), கங்கா-சட்லஜ், கர்வால், கரீப் நவாஸ், கருடாத்ரி (சென்னை-திருப்பதி), கௌர், கௌதமி, பெட்வா, பாகீரதி, கோதாவரி, கோகுல், கோல்கொண்டா, கோண்ட்வாணா, குருதேவ், ஹம்பி, ஹரியாணா, ஹிமாச்சல், ஹேம்குண்ட், ஹிமிகிரி, ஹிமசாகர் (கன்னியாகுமரி-ஜம்முதாவி) என எத்தனையோ விதவிதமான பெயர்களில் இந்தியா முழுவதும் விரைவுத் தொடர்வண்டிகள் ஓடுகின்றன, ஓடுகின்றன, ஓடிக்கொண்டே இருக்கின்றன!

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It