பத்து வருடங்களுக்கு முன்புவரை ரஜினி என்றால் மெண்டல் என்றும் பரட்டை என்றும் ஒரு இமேஜ் இருந்தது. ஆனால் அது திடீரென்று ஆன்மீகவாதியாக அரசியல் தீர்மானிப்பாளராக என்று பலவிதத் தோற்றங்களுக்கு மாறிவிட்டது. மேலும் ரஜினி ரசிகர்கள்தான் ரஜினி படம் பார்ப்பார்கள் என்கிற நிலை மாறி எல்லோருமே ரஜினி படத்தைப் பார்த்தாக வேண்டும் என்கிற ஒரு 'நிர்ப்பந்தம்' எப்படியோ உருவாகிவிட்டது. ஒருவேளை ரஜினியின் படம் 'எப்போதோ ஒருமுறை' வெளியாகாமல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளியானால் அதை யாரும் சீந்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
ரஜினியின் குறும்பும் ஸ்டைலும் பைத்தியக்காரத்தனமான சேட்டைகளும் நகைச்சுவைகளும் எனக்கும் பிடித்தமான ஒன்று. சமயங்களில் கமலின் படங்களில் உறுத்தும் நடுத்தர வர்க்கத்து புத்திசாலித்தனப் பாவனையும் போலி முற்போக்கும் எரிச்சலூட்டுபவை. இதனாலேயே ரஜினியை ரசிக்க வேண்டியிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.
ஆனால் ரஜினி தத்துவஞானி ரேஞ்சிற்குப் பெண்களைப் பற்றி உதிர்க்கும் கருத்துக்கள் எப்போதும் எரிச்சலூட்டுபவை. இதோடு ஷங்கர் என்கிற விஷக் கிருமியும் சேர்ந்துவிட்டதால் எப்படியும் படம் மோசமாகத்தானிருக்கும் என்ற அரசியல் ரீதியான முன் தீர்மானத்தோடு சிவாஜி படத்திற்குச் சென்றால்..? ஏதோ தெலுங்குப் படத்திற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றியது. 'சிவாஜி - த லூஸூ' குழந்தைகள் பார்க்கவேண்டிய அனிமேஷன் படம். இனிச் சில அபத்தங்கள்.
* அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்தால் 200 கோடி சம்பாதிக்க முடியுமா என்பதை அமெரிக்கவாழ் நண்பர்கள்தான் சொல்ல வேண்டும். அப்படியே 200 கோடி சம்பாதித்தாலும் அத்தனையயும் இலவசச் சேவைக்கு ஒருவன் வழங்க முடியுமா என்ன? திட்டமிட்டு ஆதி(சுமன்) சிவாஜியை நடுத்தெருவிற்குக் கொண்டு வருகிறார் என்கிறது கதை. ஆனால் சுமன் அப்படியே விட்டுவிட்டால் கூட சிவாஜி இருக்கிற பணத்தையெல்லாம் இலவசச் சேவை செய்துவிட்டு நடுத்தெருவிற்குத்தான் வந்திருப்பார்.
* இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் ஊடுருவியிருக்கிறது. ஆனால் இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் மட்டும் நேர்மையான அதிகாரிகளே வேலை செய்கின்றனர். ரஜினி தகவல் கொடுத்தவுடனே கருப்புப்பணம் வைத்திருப்பவர்களைப் பிடித்துச் சென்று விடுகின்றனர். புல்லரிக்கிறது. அதேபோல அமெரிக்கா செல்லும் ரஜினி வெள்ளையாக மாற்றிய பணத்தை தன் அறக்கட்டளைக்கு அனுப்பச் சொன்னதும் அனைவரும் ஒரு பைசா கூட 'ஆட்டை' போடாமல் அனுப்பி வைக்கின்றனர். ஏ.வி.எம் செலவழித்த நூற்றுக்கணக்க்கான கோடிகளில் கால்வாசி சாக்கு வாங்குவதற்கே செலவாகியிருக்கும்.
* தமிழ்ப்பண்பாடுப்படி பெண் வேண்டும் என்கிறார் ரஜினி. உடனே தமிழ்ப் பண்பாட்டின்படி நயன்தாரா மாராப்பைக் கழற்றியெறிந்துவிட்டு 'பல்லேலக்கா' என்று ஆட்டம் போடுகிறார். ஸ்ரேயாவும் பாடல் காட்சிகளிலும் ரயிலை நிறுத்தும் காட்சிகளிலும் (இந்த ரயில் நிறுத்தும் காட்சி அனேகமாக 327வது தமிழ்ப் படத்தில் இடம் பெறுகிறது) 'மேற்படிப் பாணியில்' தமிழ்ப் பண்பாட்டைக்' காப்பாற்றுகிறார்.
* சாலமன் பாப்பையா 'சிவாஜியில் உங்களுக்கு நல்ல வேடம் என்றவுடன் நடிக்க வந்துவிட்டார்' போலும். கடைசியில்தான் தெரிகிறது, தமிழ் இலக்கியம், கலாச்சாரம் எல்லாம் பேசித் தன் இரண்டு பெண்களையும் கூட்டிக் கொடுக்க அலைகிறார். பாப்பையா மட்டுமில்லை, ரஜினியும் தன் புரொஜெக்ட் நிறைவேற அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூட்டிக் கொடுக்கிறார். இதுவரை ரஜினி ஏற்காத 'வித்தியாசமான' வேடம்.
* அந்த ஜோசியக்காரன் போன்ற கொடூரமான வில்லனை எந்தப் படத்திலும் பார்த்ததேயில்லை. ரஜினி ஸ்ரேயா ஜாதகத்தைப் பார்த்தவுடனே 'திருமணம் நடந்தால் ரஜினி உயிருக்கு ஆபத்து' என்கிறார். அத்தோடு விட்டாரா? திருமணத்திற்கும் வந்து 'சீக்கிரம் தாலியறுப்பாய்" என்று ஸ்ரேயாவை 'வாழ்த்துகிறார்'. பொருத்தம் பார்க்கும் ஜோசியக்காரனைத் திருமணத்திற்கு அழைக்கும் முதல் வீட்டுக்காரர்கள் இவர்களாகத் தானிருக்கும்.
* ரஜினி ஒரு 15 அடியாள்களை வைத்து தமிழ்நாட்டிலிருக்கும் தொழிலதிபர்களிலிருந்து அதிகாரிகள், அமைச்சர் வரை மிரட்டுகிறார். பாவம் அவர்கள் அனைவரும் அடியாட்கள் வைத்துக் கொள்ளாத, வன்முறையில் நம்பிக்கையில்லாத காந்தியவாதிகள்.
* ரகுவரன் என்னும் திறமையான கலைஞரை இந்தப் படம்போல எந்தப் படத்திலும் வீணடித்ததில்லை.
* ரஜினியின் சண்டைக் காட்சிகள் போகோ சேனலையும் ஜெட்டிக்ஸ் சேனலையும் ஒருசேரப் பார்த்ததைப் போல இருக்கிறது.
* படத்தில் விவேக் காமெடி என்ற பெயரில் எரிச்சல் ஏற்படுத்துகிறார் என்றாலும் மேலே சொன்னபடி பெரும்பான்மையான காட்சிகள் காமெடியாகத் தானிருக்கின்றன. அதில் உட்சபட்சம் கருப்புப் பணமெல்லாம் ஒழிந்து ரேஷன்கார்டு போல மணிகார்டு வந்து 2015ல் இந்தியா வல்லரசாவது. விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
* இந்தக் கதையைத்தான் லீக் ஆகிவிட்டது, லீக் ஆகிவிட்டது என்று பில்டப் கொடுத்தீர்களா, அடப்பாவிகளா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் வாங்கி நாலு 'இரும்புக்கை மாயாவி' யைப் படித்து மிக்ஸ் செய்தால் அதுதானே சிவாஜி கதை!
* ஆனாலும் படத்தில் இரண்டு பெரிய வித்தியாசங்கள் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். வழக்கமாக ஷங்கர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சட்டவிரோதமாக 'சமூக சேவை' செய்யும் கதாநாயகன் 'மாட்டிக்' கொண்டவுடன் மக்கள் அவனை விடுதலை செய்யச் சொல்லி போராடோ போராடென்று போராடுவார்கள். அதேபோல ரஜினி படங்களின் கிளைமாக்சில் ரஜினியின் தங்கை, அம்மா, மனைவி என்று யாரையாவதோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ வில்லன் கடத்திக் கொண்டுபோய்க் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருப்பான். ஆனால் இந்த இரண்டு கருமாந்திரங்களும் இந்தப் படத்தில் இல்லை.
* அதேபோல சென்ற படத்தில் மலைகள், லாரி என்றெல்லாம் ஷங்கர் 'வித்தியாசமாக' பெயிண்ட் அடித்திருந்தார். ஆனால் இதில் மாறுதலாக தொப்பையுள்ள 50 பேரை அழைத்துவந்து அவர்களின் தொந்தியில் ரஜியின் முகத்தை பெயிண்ட் அடித்துக் குலுங்க விட்டிருக்கிறார். ஒரே கதையை வைத்து பல படங்களை எடுத்து இம்சைப்படுத்துவதைவிட பேசாமல் ஷங்கர் பெயிண்ட் அடிக்கப் போகலாம்.
இந்த அபத்தங்களையும் தாண்டி நிழலாடும் சில அரசியல் உறுத்தல்கள்:
* பராசக்தி படத்தின் தொடக்கக் காட்சியில் சிவாஜி ரங்கூனிலிருந்து சென்னையில் காலடி வைக்கும்போது ஒரு பிச்சைக்காரர் 'அய்யா தர்மம் போடுங்க' என்பார். 'தமிழ்நாட்டின் முதல் குரலே இப்படி இருக்கே' என்பார் சிவாஜி. அதில் ஒரு கூர்மையான அரசியல் விமர்சனமும் சமூகநிலை குறித்த எள்ளலும் இருக்கும். ஆனால் அதே காட்சியை சிவாஜியில் பார்க்கும்போது காறித் துப்பலாமென்றுதான் தோன்றுகிறது.
* ரஜினி மருத்துவமனை கட்டும்போது 'ஷாக்' அடித்து ஒரு சிறுவன் துடிக்கும் காட்சியில் 'சிவாஜி பார்ட்டி'யில் இறந்துபோன அந்த தொழில் நுட்பக் கலைஞன் ஞாபகத்திற்கு வந்துபோவது தவிர்க்க முடியவில்லை.
* கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?' என்று பாடும்போது 'சும்மா எரியுதில்ல'.
- சுகுணா திவாகர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
சிவாஜி: அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்...
- விவரங்கள்
- சுகுணா திவாகர்
- பிரிவு: திரை விமர்சனம்