முன்குறிப்பு: பாலாவின் படங்களை விமர்சனம் செய்பவர்களை விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல் குறித்த அசூசை உடையவர்கள், 18 வயதிற்குக் குறைவானவர்கள், குரூரத்தைத் தாங்க முடியாத மென்மனம் உடைய இருதய நோயாளிகள், வன்முறை பிடிக்காத ப்யூரிஸ்ட்கள் என்று கருதும் ஒரு போக்கு சினிமா விமர்சகர்களிடையே காணப்படுகிறது. மாறாக, இவரது படங்களை ரசிப்பவர்கள் தங்களை இருண்மை வகைப் படங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த சினிமா மேதைகளாகவும், தாராளவாதிகளாகவும் கருதிக் கொள்கிறார்கள். இந்த சிந்தனைப் போக்கு, கதைச் சுருக்கத்தை ஒரு பக்கத்துக்கு எழுதி விட்டு, "....சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது", ".... அழுத்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது", "ஒளிப்பதிவு அபாரம்", "...பின்னணி இசை படத்திற்குப் பலம்..", "...இவர் படங்களில் ஒரு மைல் கல்" போன்ற டெம்பிளேட் வசனங்களை வார பலன் எழுதும் ஜோசியர்கள் போல படத்துக்கு படம் மாறி, மாறி தொடர்ச்சியாக எழுதுபவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இது அடிப்படையிலேயே தவறான புரிதல் மட்டுமல்ல, குறைமேதாவித்தனமும் கொண்டதாகும் என்பதாலேயே இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதும் எண்ணம் இல்லாமல் இருந்த போதிலும் எழுத வேண்டியதாயிற்று.

jyothika nachiyar

பாலா படங்களின் பிரச்சினை என்ன? வன்முறையா..? குரூரமா..? இருண்மையா..? அது போன்ற படங்களை நாம் கொண்டாடியதில்லையா...? டோரோண்டினோ, கிம்-கி-டுக் போன்ற இயக்குனர்களின் உலகப் படங்களிலிருந்து வெற்றிமாறனின் 'விசாரணை' வரை வன்முறை, குரூரம் கலையாகும் தருணங்கள் உண்டு. குரூரம், வன்முறையின் மூலமாக காட்சியின் அடர்த்தியையும், படத்தின் ஆதார உணர்வையும் பார்வையாளனுக்குக் கடத்தும் செர்பியன் பிலிம், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், ஹோட்டல் ருவாண்டா போன்ற படங்கள் சினிமா வரலாற்றில் அமரத்துவம் பெற்றவை. அந்தப் படங்களின் மீது நமக்கு புகார்கள் கிடையாது. எனவே, இருண்மையோ, வன்முறையோ அல்ல பிரச்சினை; வன்முறையின் அரசியல் தான் பிரச்சினை. பாலாவின் படங்கள் விளிம்புநிலை மனிதர்களின் பிரச்சினையைப் பேசுவதில்லை. அப்படியான பாவனையில் லும்பன்களின் தான்தோன்றித்தனத்தைக் கொண்டாடுகிறது. ஒடுக்கப்படுபவர்களின் வாழ்க்கையை சித்தரிப்பதாக சொல்லி, மனிதர்களை விலங்குகளாக மாற்றுகிறது. இதற்கு உதாரணமாக நிறைய சொல்லலாம் என்றாலும், தற்போது வேண்டாத வேலை என்பதால் நாச்சியாருக்குள் செல்வோம்.

பிரபல திரை விமர்சகர்கள் கதை சொல்லியிருப்பார்கள் என்பதால் நான் தவிர்க்கிறேன். நேர்மையான, கண்டிப்பான காவல்துறை அதிகாரி நாச்சியார். முதல் காட்சியிலிருந்தே அவரது அதிரடி சர்க்கரைப் பொங்கலில் மிளகு தூவியது போல ஜோதிகாவிற்குப் பொருத்தமாக இல்லை. சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்காக பொங்குபவர், தனக்கு கீழே வேலை பார்க்கும் காவலர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவது பார்வையாளர்களை சில நிமிடங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கி வாயைப் பிளக்க வைக்க செய்யும் மலினமான உத்தியைத் தவிர வேறொன்றும் இல்லை.

நாயகன் சிறைக்கு செல்லும்போது சக சிறுவர்களால் சீண்டப்பட்டு ஏற்படும் சண்டையில், சிறைக் காவலர் நாயகனை இரும்பு வாளியை வைத்து அடித்து நொறுக்குவதற்கும் இந்த படத்தின் மற்ற காட்சிகளுக்கும் ஏதாவது தொடர்பு, தேவை இருக்கிறதா...? சிறை என்றால் காவலர்கள் அடித்து நொறுக்குவார்கள் என்பதை எத்தனை படங்களில் ஐயா பார்ப்பது..? அப்படியே இருந்தாலும் அதில் ஒரு லாஜிக் வேண்டாமா..? அந்த சிறுவர்களுக்கும், அவனுக்கும் என்ன பிரச்சினை..? படத்தின் தொடர்ச்சிக்கும், அந்த காட்சிக்கும் என்ன தேவை?

வன்முறையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பாலாவின் படங்களில் செய்நேர்த்தியை தான் அனைவரும் சிலாகிப்பார்கள். இந்தப் படத்தில் அதுவும் இல்லை. காட்சிகள் சீரியலுக்கு உண்டான வேகத்துடன் செயற்கையான வசனங்கள், நம்பகத்தன்மை இல்லாத மொக்கை காமடி நீதிமன்றக் காட்சிகள் என்று செல்கிறது. நாகூர் ஹனிபாவின் பாடல்களுடன் நடக்கும் இஸ்லாமிய திருமணம். ஐயா எந்தக் காலத்தில் இருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. அதிலும், 'இன்ஷா அல்லா', 'இன்ஷா அல்லா' என்று திருமண வீட்டில் அலப்பறை செய்யும் கதாபாத்திரம் பிரியாணியை தரமறுத்து, மனித நேயம் இல்லாமல் இருப்பதாக சுட்டிக் காட்டுவதெல்லாம் வேறு லெவல். கடவுள் நம்பிக்கையுடன் இருக்கும் கெட்ட முஸ்லிமைக் காட்டியாயிற்று, நல்ல முஸ்லிம்கள் அதைக் கண்டுபிடித்து கும்முகிறார்கள்..ஸ்ஸ்ப்பா...எவ்வளவு தட்டையான சித்தரிப்பு... பாத்திரங்களின் சென்னை வட்டார மொழி, சோ நாடக குருப்பின் வட்டார மொழியை விட கொஞ்சம் பெட்டராக இருந்தது ஆறுதல் அளித்தது. கடவுளை கேலி பேசி சில வசனங்கள், வடகலை தென்கலை என்று சில வசனங்களில் எல்லாம் பேஸ்புக்கில் எழுதப்படும் பதிவுகளின் அங்கதத்தில் இருக்கும் அடர்த்தி கூட இல்லை.

காலம் எவ்வளவு சீக்கிரம் மாறுகிறது என்பதை சில படங்களை மீண்டும் பார்க்கும்போது உறைக்கும். சமீபத்தில் 'காதலுக்கு மரியாதை' படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன். அதில் கல்லூரியில் படிக்கும் நாயகி நோட்டுப் புத்தகத்தை நெஞ்சில் அணைத்தவாறே (வெட்கமாம்) சுற்றிக் கொண்டிருப்பார். நாயகனுடன் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு வீடு திரும்பும் போது, "கர்த்தர் மேல சத்தியமா நான் 'கெட்டுப்' போகலை" என்று அண்ணனிடம் கெஞ்சிக் கொண்டிருப்பார். இப்போது அதே வசனத்தை வைக்க முடியுமா..? அவ்வாறு யோசிக்கும் ஒரு இயக்குனரிடம் சாதாரண அறிவுடைய உதவி இயக்குனரே, "பொண்ணு என்ன கத்திரிக்காயா கெட்டுப்போறதுக்கு.. டயலாக்கை மாத்துங்க சார்" என்று சொல்லி விடுவார். விசிலடிச்சான் குஞ்சுகளை திருப்திப்படுத்தும் வகையில் பெண்களை அடக்கும் வசனங்களை தற்போது ரஜினியின் படத்தில்கூட வைக்க முடியாது. ஆனால், காவல்துறை அதிகாரிகள் பற்றிய சித்தரிப்புகள் மட்டும் காலம் காலமாக மாறுவதே இல்லை. அவர் நேர்மையாக இருந்தால் மட்டும் போதும், சுட்டுத் தள்ளலாம், அடித்து நொறுக்கலாம், நரம்பை அறுக்கலாம்.

jyothika nachiyar 1

வில்லனைக் கொடுமைப்படுத்துவதை நியாயப்படுத்தும் அளவிற்கு நாயகிக்கு அவன் கொடுமை செய்திருக்கிறான், எனவே பார்வையாளர்கள் 'அடி... கொல்லு... வெட்டு' என்று படத்துடன் ஐக்கியமாகி விடுவார்கள். இந்தப் படத்தில் ஒரு படி மேலே சென்று, குற்ற விசாரணை பற்றிய அறிவு சிறிதும் இல்லாத ஒரு முட்டாள் காவல்துறை அதிகாரியின் திமிர்த்தனத்தை நியாயப்படுத்தும் விதமாகவும் காட்சிகள் இருப்பது அருவறுப்பாக இருக்கிறது. விசாரணையின்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவனை கேள்வியே கேட்காமல் அடித்து நொறுக்கும் போது, "கேள்வி கேட்டுட்டு அடிக்கலாம்ல" என சொல்லும் சக அதிகாரியிடம், "நான் அடிச்சுட்டு தான் கேள்வி கேப்பேன்" என்று சொல்லும்போதும், பிறகு அவன் நிரபராதி என்று தெரியும் போதும், 'நேர்மையான' கண்டிப்பான அதிகாரிக்கு சிறிதும் குற்ற உணர்ச்சி வருவதில்லை. "அவனைப் போகச்சொல்லு" என்று அலட்சியமாக கைகாட்டுகிறார். இது என்ன வகையான பாத்திர சித்தரிப்பு..?

நாயகியை நாயகன் வன்புணர்வு செய்யவில்லை, நாயகிக்கும் தன்னை ஒருவன் வன்புணர்வு செய்தான் என்றே தெரியவில்லை. நாயகன் தனது குற்றத்தை ஒத்துக் கொள்கிறான். குழந்தையை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறான். நாயகிக்கும் நாயகன் மீது கோபம் இல்லை. பிறகு என்ன தான் நாச்சியாருக்குப் பிரச்சினை..? சரி, விசாரணையில் அந்த குழந்தைக்கு தந்தை வேறு ஒருவன் என்று தெரியவரும் போது, ஒரு சிறு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவனை தண்டிக்க வேண்டும் என்று நினைத்தால் நரம்பை அறுப்பதைத் தவிர வேறு வழியே இல்லையா..? தனது உயரதிகாரியான டி.சி என்ன உச்சநீதிமன்றமா..? மருத்துவராக இருக்கும் ஜோதிகாவின் கணவருக்கும் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை... "உண்மையைச் சொல்லு உண்மையைச் சொல்லு" என்று படுத்திக் கொண்டே இருக்கிறார்.

க்ளைமாக்சில் நாயகி தெரியாமல் ஒருவனால் வன்புணர்வு செய்யப்படுவதை, நாயகன் பெரிய சம்பவமாக நினைக்காமல் 'சப்பை மேட்டர்' என்று சாதாரணமாக எடுத்துக் கொள்வதை சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்க நினைக்கிறார். ஆனால், அது எந்தவித அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் பரிதாபமாக தோல்வியில்தான் முடிவடைகிறது.

- இராஜகோபால் சுப்பிரமணியம்

Pin It