மூன்றாம் உலகப் போருக்கு வாய்ப்பிருக்கிறது.
இன்னும் கொஞ்சம் குறைந்து கணக்கிட்டால் குறைந்த பட்சம் நாமே நம்மை அடித்துக் கொண்டு சாகவும் வாய்ப்பிருக்கிறது.
2050 க்கு மேல் நாம் இருந்தால் நாம் சாவோம். இல்லை என்றால் நம் பிள்ளைகள் சாவார்கள்.
நா வறண்டு ஒரு முறை தொண்டை தடவி பார்த்துக் கொண்டேன். கண்கள் வறண்டு ஒரு முறை கண்ணீர் வருமா என்று யோசித்துக் கொண்டேன். அத்தனை படபடப்போடும் பயத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆழ் துளை குழி மூடாமல் விடும் காரணம் யாவும் நாம் அறிவோம். ஆனாலும் எங்கோ ஒரு கிராமத்தில்... எங்கோ ஓர் ஊரில்.... அல்லது நமது பக்கத்தூரில்... அல்லது நமது ஊரில் நடக்கும் அசட்டுத்தனத்தின் அம்பலத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்திருந்த திரைக்கதையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அறம்...
இன்றை கால கட்டத்துக்கு தேவையான படம். ஒரு சினிமா என்ன செய்து விட முடியும் என்று யோசிக்கலாம். சினிமாதான் நிறைய செய்து கொண்டிருக்கிறது என்பது கசந்தாலும் உண்மையே. அதுதான் மனிதனை தன்னை தானே காட்டும் பிம்பமாக இருக்கிறது. நாகரீக வளர்ச்சியின் ஒரு கட்டம் என்றால் அது சினிமாவின் வருகையும் ஆதிக்கமும்தான். அதன் வடிவம் வேண்டுமானால் மாறலாம். ஆனால் அதன் உட்செறிவு.... பொருள்.....நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டுதான் இருக்கும். வேட்டை முடிந்து களைத்து குகைக்கோ குடிசைக்கோ திரும்பியவனுக்கு ஓவியமாகவோ கூத்தாகவோ பாட்டாகவோ ......சொல்லாடலாகவோ போல செய்தலாகவோ அரங்கேறிய அது இன்று வெள்ளி திரையில் சினிமாக உருகொண்டதில் அடுத்த நகர்வை நோக்கி செல்ல ஆயத்தமாகி விட்டது மனித சமூகம் என்று நம்பத்தான் வேண்டும். அந்த சினிமா என்ன எடுத்து கொள்கிறது.....? என்ன மக்களுக்கு திருப்பித் தருகிறது...? என்ற கேள்வி அவ்வப்போது கிளம்பினாலும்.... ஏதாவது ஓர் ஒளியை பதிலாக அது தெளித்துக் கொண்டேதான் இருக்கிறது. நம் அறியாமையை நம் முன்னே கொட்டி நம்மை முகர்ந்து பார்க்க சொல்கிறது. நாம் மூச்சடைத்து கிடக்கும் சாக்கடையை சுத்தம் செய் என்று உரக்க கத்துகிறது.
அப்படி வெகுண்டெழுந்து "பாருங்கடா பணந்தின்னி மனிதர்களா....... நீங்கள் ஆட்சி நடத்துகிற விதமும்.....மக்கள் செத்துக் கொண்டிருக்கும் நிலையும்" என்று "கோபி நயனார்" என்றொரு மனிதன் ஒரு கதை சொல்லி இருக்கிறார். அந்த கதை நாம் அறிந்த கதைதான். நம்மை அரிந்த கதையும்தான்.
"அறம்" ஒரு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே அல்லாடுகிறது. அலைபாய்கிறது.
மதிவதனி (பெயர் சொல்லும் கதை தனி வரலாறு) என்ற மாவட்ட ஆட்சியரின் தன்னலமில்லாத அறம் சார்ந்த உண்மையின் மீதான நம்பிக்கையின் முடிவுக்கும்.....ஆளுக்கொரு செல்போன் வைத்துக் கொண்டு......அன்றாடம் நீருக்கும் நீதிக்கும் தடுமாறும் கூலிகளின் அறியாமைக்கும் ஆத்திரத்துக்கும் அன்புக்கும் அதிகாரிகளின்......அரசியல்வாதிகளின் அலட்சிய போக்குக்கும்.. ஆபத்தான மனநிலைக்கும் இடையே நடக்கும் போராட்டமென இரண்டு மணி நேரம் நம் நாட்டின் லட்சணத்தை காரி உமிழ்கிறது.
எத்தனை நீச்சல் வீராங்கனைகள்......எத்தனை கபடி சாம்பியன்கள்.......எத்தனை கால் பந்து வீரர்கள்........ கிராமத்துக்குள் செல்போனில் கனவைக் கண்டு கொண்டு காணாமல் போகிறார்கள் தெரியுமா...?
அப்படி ஒரு நீச்சல்காரன் இங்கே இருக்கிறான். அவனுக்கு காது வலிக்கு மருந்து கூட போட முடியாமல் தவிக்கும் ஒரு குடும்பம். அவன் அப்பா ஓர் இரவில் அவனின் சிறுவயது கபடி ஆசையையும் திறமையையும் இந்த வாழ்க்கை முறை அடித்து துவைத்து விட்டதை கூறி அதனால் தன் பிள்ளைக்கு நீச்சல் ஆசையெல்லாம் வேண்டாம் ஒழுங்கா படிக்க சொல்லு என்று கூறி நொந்து போகும் இடத்தில் படம் பார்க்கும் எத்தனை கபடி வீரர்கள்......நீச்சல்காரர்கள்........ வாய்ப்புக்கும் வாழ்க்கைக்கும் இடையே நசுங்கி போயிருக்கிறார்கள் என்று நினைத்து பார்க்க முடிகிறது. இன்றும் மேல் தட்டு மனிதர்கள் மட்டுமே விளையாட்டு துறையில் முன்னுக்கு வரும் விளையாட்டு...... அதிலும் சாதி சாமி என்று கூத்தடிக்கும் அரசியல்.......சீ என புளிக்கிறது. தப்பித் தவறி கீழ்த்தட்டு மக்களில் ஒருவன் முன்னுக்கு வந்து விட்டால் அவனை காலம் முழுக்க அலைக்கழித்தே கொன்று விடுகிறது இந்த சட்டமும் சாத்திரமும்.
என்ன மாதிரி அரசியல் அமைப்பு இது. காலத்துக்கு தகுந்தாற் போல சட்டமும் மாற வேண்டும் அது இல்லாது போனால் சட்டம் மேலுள்ளவனுக்கு மட்டும் தான் விசிறி வீசும்.
இந்த படத்தில் ஒரு வசனம் வரும். மக்களுக்கு என்ன தேவையோ அது தான் சட்டமாக வேண்டுமே தவிர சட்டத்தை போட்டு விட்டு மக்களை மடங்க சொல்வது மகா குற்றம்...என்று. "விவசாயமே இல்ல.... இதுல கூலி விவசாயம்னு சொல்றீங்க " என்று மீடியாவை பார்த்து ஊர் மக்களில் ஒருவன் நக்கலாக கேட்கும் கேள்வி.. சுளீர் என்று வலிக்கிறது.
நம்மகிட்ட ராக்கெட் இருக்கு...... ஆனா மலம் அள்ளும் இயந்திரம் இல்லை. நம்மிடம் போர் விமானங்கள் இருக்கின்றன. ஆனால் ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற எந்த வசதியும் இல்லை. நம்மிடம் ஓட்டுக்கு தர பணம் இருக்கிறது. ஆனால் ஊர் ஊருக்கு ஏழைகளும்......சாலை சாலைக்கு பிச்சைக்காரர்களும் நிரம்ப இருக்கிறார்கள். என்ன மாதிரியான வடிவம் நம் நாட்டின் அரசியல். சொந்த அறிவும் இல்லை. சொல்லும் அறிவும் இல்லை. சாராயம் விற்றவனும்.......சைக்கிள் செயின் சுற்றியவனும் ஆள்கிறார்கள். படித்தவனெல்லாம் செல்போனிலும்.. அலட்சியத்திலும் மூழ்குகிறார்கள்.
படத்தில் இன்னொரு வசனம் வருகிறது. "தாகமே எடுக்காம இருக்கறதுக்கு ஒரு சொட்டு மருந்து இருந்தா போட்டுட்டு போங்க" என்று. இயற்கை கொடுத்த வரத்தை எல்லாம் சுரண்டிய பாவத்தின் சம்பளம் அது. என்ன...., எவனோ சுரண்டியதுக்கு எவனுக்கோ தண்டனை. அதுதான் பூமியின் முரட்டு சுற்றின் பிரபஞ்சத்தின் கூற்று.
தப்பு செய்தவன் மட்டும் காரணம் இல்லை. அதை தட்டி கேட்காத நானும் நீங்களும் சேர்ந்துதான். குழிக்குள் விழுந்த குழந்தையின் நிலை. மேலே நின்று புழுவாய் துடிக்கும் அந்த பெற்றோரின் மனநிலை... அழுகை... குற்ற உணர்வை கொடுக்கிறது. எல்லாமும் எல்லாருக்கும் தொடர்பு இருக்கிறது. ஊர் மக்களின் பரிதவிப்பும்.......கோபமும்... நம்மை சிந்திக்க தூண்டுகிறது. "இவனுங்க கிட்ட எந்த மெசினும் இல்ல..." என்று கண் கலங்கி நிற்கும் போது.... இனி தியேட்டரில் படம் போடுவதற்கு முன் எழுந்து நிற்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. தொடர்ந்து நம்பிக்கையின் நீட்சியின் மதிவதனி எடுக்கும் முயற்சி... அந்த குழந்தையை காப்பாற்றியதா இல்லையா என்று திக் திக் நொடியில் நம்மை படபடக்க வைத்த இயக்குனர் கடைசியில் நம்மையும் குழிக்குள் இருந்து மீட்டெடுக்கிறார்.
அந்த ஆட்சியர் விசாரணை கமிஷனை எதிர் கொள்ள நேர்கையில் "அட போங்கடா" என்றாகி விடுகிறது சட்டத்தின் படிநிலை.
படத்தின் கதை.... திரைக்கதை... வசனம்... இயக்கம்....ஒளிப்பதிவு.... அத்தனை பேரின் நடிப்பு.... படத்தொகுப்பு... இசை.... கன்டினியூட்டி... கருவின் கனவு...இன்னும் எல்லாமே... இந்த ஆண்டின் மிக சிறந்த பாடத்தை புகுத்தி இருக்கிறது.
நயன்தாரா என்ற தனி மனுஷிக்கு சல்யூட்....
அறம் வாழ்வின் நிறம். மூன்றாம் உலகப் போருக்கு வாய்ப்பு தர வேண்டுமா.... யோசிப்போம். 2050 க்கு மேல் நாம் இருந்தாலும் இல்லாமல் போனாலும் நீரில்லை என்று இந்த பூமி நா வறல கூடாது. எதாவது செய்ய வேண்டும்.
- கவிஜி