மதுரையில் எக்கச்சக்கமான வீதிகள் உண்டு.

இதென்ன கூத்து.

ஒரு ஊர் என்றிருந்தால் அதில் எக்கச்சக்கமான வீதிகள் இருக்கத் தானே செய்யும்.

அதில்லை மக்களே. மதுரை நான் பிறந்த ஊர் என்பதால் மதுரையை வரவழைக்கிறேன். அப்படி இருக்கக் கூடிய எண்ணற்ற தெருக்களில் ஒன்றில் புகுந்து இன்னொன்றில் அல்ல பலவற்றில் வெளியேற இயலும். ஒரு மழையின் முடிவுப் பொழுதில் ஒரு தினத்தின் சாயங்காலம். அப்போது நான் பத்தாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீடு இருந்ததோ மத்திய மதுரையில் இருந்து 10 கி.மீ தூரத்தில் இருக்கிற திருநகர் என்னும் பிரதேசம். நான் அப்போது சென்றுகொண்டிருந்ததோ காக்கா தோப்புத் தெரு என்னும் வீதி. அங்கே நான் கண்ட காட்சியை இப்போது விவரிக்க விரும்புகிறேன்.

neerparavai_641

இருள் சார்ந்த ஒரு சாயங்காலம். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்த மங்கிய விளக்குகள். அந்த சாலையின் முகப்பில் ஒரு அடிகுழாய். அந்த அடிகுழாயின் கைப்பிடியை ஒரு சின்னப்பயல், அவனுக்கு அன்றைக்கு ஏழுவயது கூட இருக்காது, பிடித்துத் தொங்கியவாறே அடித்துக் கொண்டிருந்தான். குழாயில் இருந்து வடிந்துகொண்டிருந்த சொற்ப நீரை அவன் அம்மாவாக இருக்கக் கூடும். அவள் ஒரு தூக்குவாளியில் பிடித்துக் கொண்டிருந்தாள். சற்றுத் தள்ளினாற் போல ஒரு ட்ரை சைக்கிள் என்னும் மூவுருளை நெட்டுக்குத்தலாக முன் சக்கரம் வான் நோக்கியவாறு இருந்தது. அதனருகே ஒரு மனிதன் வயது நாற்பது இருக்கக் கூடும். அவன் அங்கே தன் வேட்டி அவிழ்ந்தது குறித்த உணர்தல் கொஞ்சமும் இல்லாது தரையில் வீழ்த்தப்பட்டு உளறியவாறு கிடந்தான். அப்போது எதனால் அவன் வீழ்ந்து கிடக்கிறான் என்பது எனக்குத் தெரியவில்லை.

மது மெல்ல இன்றைக்கு ஒரு குடும்பபானமாகவே மாறிக் கொண்டிருக்கிறதாக நம்பப்படுகிற இன்றைய வாழ்வியலில் ஒரு படத்தின் முற்பகுதி முழுக்க ஒரு இளைஞனைப் பறவையாக்கி அவனை நீர்மத்தின் பிடியில் இருந்து வெளியே கொணர்வது வரை ஒரு இயக்குனரால் படமெடுக்க முடியும் என்று நானே சொன்னால் கூட நம்பி இருக்க மாட்டேன்.

நீர்ப்பறவை, ஒரு மீனவ நிலத்தில் முழுக்கதையும் நிகழ்கிறது. கடலில் அகதியாய் வந்து, பிள்ளைகளற்ற பெற்றோர் சரண்யா-பூ இருவருக்கும் தத்துக் கிடைத்த செல்வன் அருளப்பசாமி. செல்லமகன். பொறுப்பற்றுக் குடிபோதையின் கோரப்பிடியில் அறிமுகமாகிறான். யாரையாவது ஏமாற்றி ஏதேனும் ஒரு கதை சொல்லி குடிப்பதற்கான பணத்தை பறித்துக் கொண்டு செல்லக் கூடிய இளைஞன் அருளப்பசாமி. அந்த ஊர் முழுக்க பெருவாரி கிறித்தவ மக்களே. கடலை நம்பி வாழ்கிறவர்களே. அப்படித் திரிகிற அருளப்பசாமி வழக்கம்போலவே தன் சேட்டையை ஒரு பெண்ணிடமும் காட்டுகிறான். அவள் கைப்பணத்தை அல்ல, கோயிலுக்காக வசூலித்த கொடையை பொய் சொல்லி ஏமாற்றிக் குடிக்கக் கொண்டு சென்றுவிடுகிறான்.

அம்மா தடுக்க, அப்பா அவனை அடிக்க அந்தப் பணம் மீண்டும் அதே பெண்ணுக்குக் கிடைக்கிறது. குடி குடி என்றே திரிகிறவன் வாழ்க்கையில் அந்தப் பெண் ஒரு வசந்ததேவதையாக நுழைந்து மெல்ல அவனைத் திருத்துகிறாள். குடி போதை மறுவாழ்வு மையம் சென்று திருந்தி வருகிற அருளப்பசாமி மெல்ல குடிக்கெதிரான பிரச்சாரம் செய்பவனாக மாறுகிறான். 'அவன் யார் என்னவென்றே தெரியாது. அவன் கடலுக்கு செல்ல அனுமதிக்க முடியாது' என்று சிலர் முறுக்கிக் கொள்ள, 'அவன் கடல்மாதா பெற்றெடுத்த பிள்ளை; அவனுக்கு கடலில் செல்லமீன் பிடிக்க உரிமை உண்டு' என்று வாதிடுகிறாள் அவன் அம்மா. கடைசியில் அவன் சொந்தப் படகு வாங்கிக் கடலுக்குச் சென்றால் சரி என ஊர் ஒதுங்குகிறது.

அதன்பின் அவன் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளும், அவன் எப்படி கடலுக்குச் செல்கிறான் என்பதும் படத்தின் அடுத்தடுத்த காட்சிகளாக அழகாக விரிகின்றன.

கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறான் அருளப்ப சாமி. திரும்பவே இல்லை. என்ன ஆனான் அருளப்ப சாமி என்றே தெரியாது. அவனுக்காக 25 வருடங்களாக கடல்வாசலில் காத்துக்கொண்டே இருக்கிறாள் அவன் மனைவி.(சிறுவயதில் சுனைனா. வயதானபின் நந்திதா)

இதே புள்ளியில் தான் இப்படம் தொடங்கி முடிகிறது. இதன் இடையில் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுகிறான் அருளப்பசாமி. அவன் பிணத்தை ஊரார் யாரும் அறியாமல் கொணர்ந்து அவன் தந்தையும் தாயும் மனைவியும் மட்டும் அவன் வாழ்ந்த வீட்டிலேயே புதைத்துவிடுகின்றனர். ஆனாலும் அவன் உயிர் தன்னைத் தேடி வரும் என்று காத்திருக்கிறாள் மனைவி.

மகனே புகார் கொடுக்க அருளப்பசாமியின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு கோர்டில் நிறுத்தப்படுகிற அவன் மனைவியிடம் இது தவறில்லையா எனக் கேட்கப்படுகையில் "இந்த அரசாங்கத்திடம் சொன்னால் என்ன செய்துவிடும்...? சுடுவதைத் தடுத்துவிடுமா..?" எனக் கேட்கிறாள்.

samuthrakani_645படம் முடிந்தபிறகும் பலத்த அதிர்வுகளை பார்க்கிறவர் மனசுக்குள் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது இப்படம். இந்தப் படம் ஒரு அழகான பாதிக்கவிதை. பாதிக்கவிதை என்று சொன்னால் அரைகுறை என்ற பொருள்வரும். அது அல்ல நான் சொல்கிற பொருள். பாதிக்கவிதைகள் மிகமுழுமையானவையே. இப்படம் ஒரு அழகான பாதிக்கவிதை. வாழவந்த ஒருவன் இலங்கையில் இருந்து கடலில் ஒதுங்கி வேறொரு பெற்றோருக்குத் தத்துப் பிள்ளையாகி, குடியில் உழன்று, பிறகு திருந்தி அதே கடலை நம்பிப் படகில் சென்று அதே கடலில் பிணமாய் மிதந்து முடிந்து போகிறான். பாதியில் முடிந்து போகிற கவிதையாகிறான். அந்த நீர்ப்பறவை அருளப்பசாமி.

இத்திரைப்படம் முன்வைக்கிற கேள்விகள் முழுமையானவை. இதுவரைக்கும் கேட்கப்படாதவை. இன்னும் மீண்டும் மீண்டும் விவாதிக்கத் தக்கவை. சாதி, மதம், இனம், மொழி என எதன் காரணமாகப் பிரிந்து கிடத்தலும் பிரித்து வைத்தலும், உயிர்ப்பலி கேட்டுக்கொண்டே இருக்கிற சமூகத்தில் ஒரு சாமானியன், ஒரு படிக்காதவன், ஒரு ஒடுக்கப்பட்டவன் வாழ்ந்து கரையேறுவதற்கு வழியில்லை என்பதை இதைவிட காத்திரமாக சமகாலத்தில் எந்தப் படைப்பும் எந்தப் படைப்பாளியும் முன் வைக்கவே இல்லை.

தமிழக மீனவன் என்று தானே சொல்கிறது செய்திகள்..? இந்திய மீனவன் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்..? என்கிற ஒற்றைக் கேள்வி எளிதில் பாப்கார்ன் தின்றுவிட்டுக் கடந்துவந்து விடுவதற்கா.? இல்லவே இல்லை. இது கேள்வி மட்டுந்தான். விடைத்தாட்களைப் பூர்த்தி செய்வது யார் கையில் இருக்கிறது..? அரசும் மக்களும் மகாபுருஷர்களும் அல்லவா பதில் சொல்லவேண்டும்.? சாமானியர்களின் நசுக்கப்பட்ட குரல்வளையில் இருந்து இதுவரை எழுப்பப் படாத எல்லாக் கேள்விகளும் இந்தப் படத்தின் காட்சிப்படுத்துதல்கள் எங்கும் தொடர்ந்து உறுத்தாதா பதில்சொல்லிகளின் கண்களை..?

பாலசுப்ரமணியத்தின் கேமிரா, ரகுநந்தனின் இசை, வைரமுத்துவின் வரிகள் மூன்றும் பெரும்பலங்களாகின்றன. நந்திதா தாஸ் மற்றும் சுனைனா இருவருமே சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். தம்பி ராமையா, பாண்டி, பூ ராமு, சரண்யா எல்லாருமே தத்தமது பங்கை நிறைவாற்றியிருக்கிறார்கள். எல்லாருக்கும் மேலாக விஷ்ணு, ஏற்கனவே நடித்த படங்களில் எல்லாமும் நன்றாக பரிமளித்தே வந்திருக்கும் இந்த இளைய நடிகர் இந்தப் படத்தில் அருளப்பசாமியாகவே மாறி இருக்கிறார். மிக அருமையான நடிப்பு.

இயக்குநர் சீனு ராமசாமி தான் நம்புகிற சினிமாவை எடுத்து இருக்கும் இயக்குநர்.  பாராட்டுக்கள்

 

 

- ஆத்மார்த்தி

Pin It