கிட்டத் தட்ட ஒரு மூன்றரை மணி நேரம் ஓடும் ஆவணப் படம் ஒன்று உங்களைக் கால காலமாகத் தொடரும் சமூகக் கொடுமை ஒன்றைக் குறித்து பேரதிர்ச்சிக்கும், தொடர் சிந்தனைக்கும், ஆழ்ந்த விவாதத்திற்கும் உட்படுத்திவிட முடியுமா... திரையிடல் முடிந்த பின்னும் உங்களை நிம்மதியற்றுப் போகு மாறு அலைக்கழித்துக் கொண்டிருக்க முடியுமா... சாத்தியம் என்பதை மெய்ப்பிப்பதாக இருந்தது 'ஜெய் பீம் காம்ரேட்'.

society_makkal_370ஜனவரி 20ம் தேதியன்று சென்னையில், சமூக ஆர்வத் தோடும், தேடலோடும் குழுமியிருந்த பார்வையாளர்கள்முன் தமது பதினான்கு ஆண்டு உழைப்பில் தயாரித்த படத்தைத் தாமே திரையிட்டு அதன் முடிவில் எழுந்த கேள்விகளுக்கு விடையளிக்கவும் எந்தக் களைப்பும், சலிப்பும் அற்ற புன்முறுவல் நிறைந்த முகத்தோடு காத்திருந்தார் இந்தியா வின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஆனந்த் பட்வர்த்தன். வகுப்புவாதத்திற்கு எதிராகவும், சமூக நீதி கோரியும் பல முக்கிய ஆவணப் படங்களை வழங்கி உலக அளவில் விருதுகள் பெற்றிருக்கும் அவருக்கு இந்தப் படமும் காத்மாண்டு நகரில் நடந்த தெற்கு ஆசியா திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ராம் பகதூர் ஷீல்ட் விருதினைப் பெற்றுத் தந்திருக்கிறது.

சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை, தலித் மக்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறை ஆகியவற்றின் மீதான ஆய்வை ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் வெளிச்சத்தில் இந்தப் படம் மேற்கொள் கிறது. தலித் மக்களின் எதிர்வினை, முன்னெழுந்து வரும் தலித் குழுக்களின் செயல்பாடுகள், அடக்கு முறைக்கு எதிராகத் திரள்வோரின் அரசியல் அடையாளத்தைத் தமது வஞ்சக ஆளுமைக்குள் கரைத்துக் கொண்டு வெறியோடு திரியும் பெரிய கட்சிகள், அதன் காரணங்கள் இவை என்று அறிந்து கொள்ள இயலாத தன்மையிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தை வீழ்த்திக் கொண்டிருக்கும் சூழல் போன்றவற்றையும் உள்ளடக்கிய விசாரணை யாக படம் நுட்பமான தளத்திற்குள் பயணம் செய் கிறது. சாதியக் கொடுமைகள் குறித்த இடதுசாரிகளின் பார்வையையும், இடதுசாரிகள் பற்றிய தலித் குழுக்களின் அணுகுமுறையையும் விவாதத்திற்கு முன்வைக்கும் நோக்கோடும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜூலை 11 , 1997 அன்று மும்பை மாநகரில் ரமாபாய் காலனியில் அம்பேத்கர் சிலையை ஒரு நச்சுக் கும்பல் அவமரியாதை செய்துவிட்டுப் போனதைக் கவனித்த அந்தச் சேரி மக்கள் தன் னெழுச்சியாக வீதியில் திரண்டு கண்டன முழக்க மிட்டிருக்கின்றனர். இதற்காகவே காத்திருந்த காவல்துறை பெருத்த படையுடன் வந்திறங்கி எந்த முன்னறிவிப்பும், எச்சரிக்கையும் இன்றி அடித்து நொறுக்கிச் சுட்டுத் தள்ளியதில் பத்து பேர் அங்கேயே மரணம் அடைந்தனர். ஆட்டோவை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க வந்த ஓட்டுனர் உள்பட அப்பாவிகள் உயிர் இப்படியாக காவு வாங்கப்பட்ட கொடுமைக்கு யாரும் பொறுப் பாளியாக்கப் படவில்லை. அத்து மீறி குடியிருப்பு களில் வந்து தாக்குதல் நடத்திச் சென்ற அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெயருக்கு அவனைத் தற்காலிக வேலை நீக்கம் செய்துவிட்டு, உடனே மீண்டும் வேலையில் சேர்த்துக் கொண்டதோடு அவனுக்கு பதவி உயர் வும் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது சாதிய மேலா திக்க காவல்துறை. பல ஆண்டு வழக்கு விசாரணை யின் முடிவில் அவன் தண்டிக்கப்பட்ட போது, சிறைக்கு அனுப்பப்படவேண்டிய ஆளை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறது காவல்துறை. இன்னும் வழங்கப்படாதிருக்கிறது நீதி.

புரட்சிகர கவிதைகள் எழுதி இசைத்துக் கொண்டிருந்த கவி விலாஸ் கோக்ரே ஜூலை 11, 1997 கொடிய நிகழ்வின் பாதிப்பில் பரிதவித்து, துடிதுடித்துத் தாளாமல் ஐந்தாறு நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டார். மார்க்சிய-லெனினிய குழுவில் இணைந்தவராய் தாழ்த்தப் பட்ட சமூகத்தின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த அவரை அறிந்திருந்த ஆனந்த் பட்வர்த்தன் அந்த மனிதரின் கதையை அவரது இசையையும், உணர்வுகளையும் பின்புலமாய்க் கொண்டு படம் நெடுக எடுத்துச் சொல்கிறார். தலித் மக்கள் மீது அன்றாடம் தொடுக்கப்படும் வன் முறை, வன்மம் ஆகியவற்றைக் குறித்த செய்தி களும், அலசல்களும், விவாதங்களும் இடம் பெறுவதோடு, கதியற்ற அந்த மக்களின் வாழ் வாதாரங்கள், அன்றாடச் சுமைகள், அவலமான வாழ்க்கை முறை ஆகியவற்றையும் பார்வையாளர் கள் அதிர்ச்சியுறும் வண்ணம், கேள்விகளை எழுப்பும்படி படமாக்கி வழங்கி இருக்கிறார் ஆனந்த். நாடோடிக் கதை சொல்லி பாணியில் இசைப் பாடலாகவே ஒலிக்கும் இந்த ஆவணப் படத்தில் தலித் மக்களின் சங்கீதமும் ஒரு பாத்திரமாகவே உருவெடுத்திருக்கிறது.

மேற்படி காவல்துறை வெறியாட்டம் நடந்தது பா ஜ க - சிவ சேனை ஆட்சிக் காலத்தில் என்பதைக் கூட பத்தாண்டுகளுக்குப் பின் போய்க் கேட்கும் போது மக்கள் மறந்திருப்பதை மனம் பதறப் பதறப் பதிவு செய் கிறார் ஆனந்த். காங்கிர° கட்சி எப்படி சும்மா இருந்து விட்டு, பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து 2009 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஓசைப்படாமல் அம் பேத்கருக்குப் புதிய சிலை யெழுப்பி தலித் வாக்குகளைப் பெற தகிடு தத்தம் செய்தது என்பதையும் காட்டுகிறார் அவர். அந்தச் சிலைக்கு மாலை போடு பவர்களாக நரேந்திர மோடி உள்ளிட்ட ஆதிக்க சக்திகள் அடுத் தடுத்து அந்தப் பகுதிக்குள் நுழை வது தாங்க முடியாத இன்னொரு வன்கொடுமையாகவே படுகிறது.

அம்பேத்கர் பெயரால் அணி திரளும் லட்சக் கணக்கான மக்கள் பால் அருவருப்பும், வெறுப்பும் காட்டும் மேல்தட்டு மக்களை அவர்கள் பதில்களாலேயே அம்பலப் படுத்தும் ஆனந்த், சமூகத்தில் நிலவும் பிற்போக்குத் தனக் காட்சிகளைத் தோலுரிக் கிறார். தலித் மக்கள் மீது சராசரி யாக நாள் ஒன்றிற்கு இரண்டு பாலியல் வன்கொடுமையும், மூன்று படுகொலைகளும் நிகழ்த்தப்படுவதை படம் உரத்த குரலில் பேசுகிறது. கெயர்லாஞ்சி உள்ளிட்ட அண்மைக்கால கோர நிகழ்வுகளையும், ஒடுக்குமுறை களையும் விவாதிக்கிறது.

நிராசையும், அவநம்பிக்கையும் சூழும் நடப்பு காலத்தில் துணிச்சலோடு மாற்றுப் பண்பாட்டுக் கொடி களோடும், சமத்துவ வேட்கையோடும் இறங்குகிற இளம் காதலர்களை புதிய கீதங்கள் இசைக்கும் “கபீர் கலா மன்ச்” கலைக் குழு மேடையில் அறிமுகப்படுத்தும் இடம் நம்பிக்கை யை வேரூன்றுகிறது. அந்தப் பெண் ஷீதல் சாத்தே தனது தாயையும் தனது கொள்கைபால் வென் றெடுத்திருப்பது வியக்க வைக்கிறது. தாய் என்ற தலைப்பில் ஷீதல் பாடும் பாடல் உள்ளத்தைப் பிழிந்தெடுப்பது. கண்களில் சத்திய ஆவேசம் பொங்க அவர் பாடும் புரட்சி கீதங்களும் உணர்வூட்டுபவை.

பாஜகவையும், காங்கிரஸ் கட்சியையும் தேர்ச்சியாக அம்பலப்படுத்துகிற இந்தப் படம், தலித் அரசியல் குழுக்கள்- குறிப்பாக இந்தியக் குடியரசுக் கட்சி இந்து வகுப்புவாத சக்திகளோடும் சமரசம் செய்து கொண்டு சனாதன வருணாசிரம தத்துவத்தைப் பரப்புவோர் மேடையில் அவர் களுக்காக வாக்கு சேகரிக்கும் நிலைக்கு வீழ்ந்து விட்டதையும் பேசுகிறது. மத சார்பற்ற பகுதியாகத் திகழ்ந்த ரமாபாய் காலனியில் இந்த பதினான்கு ஆண்டுகளில் ஏற்பட்டுவிட்ட மாற்றத்தின் வேதனை யை வலியோடு சொல்கிறது படம்.

சாதியம் குறித்த இடதுசாரிகள் பார்வை வர்க்கத்தை மட்டிலும் முன்னுரிமைப் படுத்தி சாதிய வேர்களின் வீரியத்தை உணரவிடாது செய்வதாயிருப்பதாய் இந்த ஆவணப் படம் விமர்சனம் வைக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றை இன்று சீரிய பிரச்சார மேடையில் இடதுசாரிகள் முன்வைத்துக் களத்திலும் போராடும் வளர்ச்சி நிலையைக் குறிப்பிட வேண்டிய அதே நேரத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான வலுவான அரசியல்-தத்துவார்த்தப் போராட்டங்களை மேலும் கூர்மைப் படுத்த வேண்டிய தேவையை மறுக்கமுடியாது.

கற்பி, கிளர்ச்சி செய், ஒன்று சேர் என்ற அம்பேத்கர் சிந்தனை கொச்சையாக்கப்பட்டு விட்டதற்கு எதிராகப் புதிய விடியல் கீதம் இசைக்கும் ஷீதல் சாத்தே உள்ளிட்ட கலைஞர்களை மாவோயிஸ்டுகள் என்று அடையாளம் சுமத்தி வேட்டையாடத் தலைப்பட்டிருக்கிறது ஆட்சி நிர்வாகம். ஆனாலும் துவண்டு விடாத வேகத்தோடு ஷீதல் பாடல்களோடு புறப்படுவது உள்ளத்தை உலுக்கிப் போடுகிறது. போராளி எழுந்து வருவார் அம் பேத்கர் சிந்தனையிலிருந்து - அடங்கி முடங்கி விலை போவதற்கு அல்ல, ஆர்ப்பரித்து விடுதலை கீதம் இசைக்க என்று அவர் மேடையில் முழங்கும் நிறைவுக் காட்சி ஏராளமான நம்பிக்கையைச் சூல் கொண்டிருக்கிறது. சாதியத் திற்கெதிரான வலுவான குரலை எழுப்புகிறது. பார்வையாளர்களின் சிந்தனையில் கலகம் தொடக்கி அனுப்பி வைக்கிறது...

(செம்மலர் பிப்ரவரி 2012 இதழில் வெளியானது)

Pin It