வெடி என்றொரு படம்.சௌரியம் என்று தெலுங்கில் சௌகரியமாகப் பார்த்தது தான் என்றாலும் கூட என் மொழி பேசும் திரைப்படத்தைப் பார்க்க சென்று இப்படி முகத்தில் கரி பூசிக்கொண்டு வருவதை நினைத்தால் வெட்கமாக வருகிறது. இதை இயக்கிய நடனப்புயல் நயன்தாரா புகழ் பிரபுதேவா குளிரூட்டப்பட்ட வாழ்க்கையையும், என் தமிழ் சமூகம் இன்னமும் ஓராயிரம் பிரச்சினைகளுடனான வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருப்பதால் என் வேதனையை எழுத்தில் மாற்றி இங்கே தருகிறேன்.

vishal_sameera_450முதலில் கதை திரைக்கதை என்றெல்லாம் அலசி இதனை ஒரு விமர்சனமாக அணுக முற்படாதீர்கள் நண்பர்களே... இது வயிற்றெரிச்சலின் உச்சத்தில் 100 ரூபாயை வைத்து என்னென்ன செய்திருக்கலாம் என்ற வேதனையின் உச்சத்தில் வந்து விழுகிற வார்த்தைகளை இங்கே தருகிறபடியால் இது விமர்சனமன்று.

இது மாதிரியான திரைப்படங்களுக்கு எல்லாம் கதை திரைக்கதை என்றெல்லாம் எதுவுமே கிடையாது.

1)ஒரு பெயரற்ற நாயகன்... அவன் தான் சிம்பு அவன் தான் தனுஷ் அவன் தான் விஷால் அவன் தான் விக்ரம். எல்லா நடிகர்களுக்கு உள்ளேயும் ஒளிந்திருக்கிற மகாமனித மிருகம் ஒன்றுக்கு தீனி போடுவதற்காக உடனொலி இயக்குநர்கள் தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்கிற ஒரே உப்பற்ற உப்புமா தான் கதை. ஒரு நாயகன் மிருகபலம் கொண்டிருப்பான். அவனால் ஒரே சமயத்தில் 10 அல்ல 50 பேரை அடிக்க முடிகிறது. எப்படி..? நிஜ வாழ்க்கையில் நடக்காத கதைகள் தான் சினிமாவாக எம்ஜீஆர் காலத்திலும் இருந்தது. ஆனால் ஒரே ஒரு எம்ஜீஆர் தான் வர முடியும் என்பதை உணர்ந்தவர்கள்தான் எம்ஜீஆர் ரசிகர்கள். அதனால் தான் அவர் படங்கள் என்றென்றைக்கும் கொண்டாடப்படுகின்றன. இந்த வெடி படத்தில் விஷால்.... இந்தப் பேரை எடுத்து விட்டு அந்தந்த நாயகர்கள் நடித்த படங்களின் பேர் மற்றும் அவர்கள் பேரை பொறுத்தி படித்துக்கொள்ளுங்கள்.. இது எல்லாப் படங்களுக்கும் பொருந்தும்... விஷாலைப் பொருத்தவரை திமிரு மலைக்கோட்டை சத்யம் இப்போது வெடி.

2. இந்த நாயக மிருகங்களைப் பெண்கள் அல்லது ஒரு பெண் தன் உடலின் முக்கால் சதவீதத்தை வெளியில் காட்டி அணைப்பாள். பொது இடத்தில் வைத்து அவனை ஒரு தலையாய் காதலிக்கத் தொடங்குவாள். அம்முடிவிற்கு அவள் வருவதற்கு எந்த ஒரு மகானுபவமும் காரணமாக இருந்திடாது. அந்த நாயக மிருகம் 10 உப நடிகர்களை - வாய் பேச வாய்ப்பில்லாத உடல்நடிகர்களை - தூக்கிப் போட்டு ரத்தம் வர துவைத்து எலும்புகளை நொறுக்கி அடிப்பதை பார்த்து, இவன் வீரன் இவனை இந்த ஒரே காரணத்துகாக நான் காதலிக்கிறேன் என்று காதலிப்பாள். இப்படத்தில் சமீரா ரெட்டி.. இன்னுமொரு தங்கை பாத்திரம் வரும். கழுத்து வரை போர்த்திக் கொண்டு... ஏன் எனில் அவள் தங்கை அல்லவா...? அதென்ன காதலியைக் கூட்டிக் கொடுப்பதிலும் அவிழ்த்துக் காட்டுவதிலும் அத்தனை ஆனந்தம் என்று தெரியவில்லை...

3.மூன்றாவது அம்சமான அம்சம் இந்த நாயகி தவிர ஒரு நடன நடிகை கட்டாயமாக வரவேண்டும். அவள் வில்லன் கோஷ்டியில் உள்ள அத்தனை பேரையும் சூடேற்றி வெறியேற்றி ஒரு முழ ஆடையோடு ஆடும் பாடலுக்கு நடுவே நாயகமிருகம் வரும். அவனை அணுகி அந்த நடிகை உரசுகையில் அவளைத் தவிர்த்து விட்டு பேராண்மையோடு கடந்து செல்வான் நாயகமிருகன். இதிலும் அப்படி ஒரு காட்சி. இதற்குப் பேர் குத்துப்பாட்டு...குருதி எம் குருதியன்றோ மக்களே...

4.நாயகனால் முடியாததெதுவுமே இல்லை. எந்த இடத்திலும் எல்லாரையும் அடிப்பான். சிலரைக் காப்பாற்றுவான். ஏழைகளை மீட்டெடுப்பான். அதீதமான காரியங்களை எல்லாம் அனாயாசமாக செய்தும் முடிப்பான். நம்பத்தகாத முறையில் நம் அறிவை மழுங்கச்செய்து உறங்க வைப்பான். இதிலும் ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனராக நாயகனின் அதிகப்பிரசங்கித் தனங்கள் அட்டகாசங்கள் தாங்கவொண்ணாதவை.

5.வில்லனும் அவனுக்கொரு மகனும், பட்டப்பகலில் நடுரோடுகளில் கொலைகள், வன்கொடுமைகள், மிரட்டல், பயங்கரச்செயல்கள், குழந்தைகள் மீதான வன்முறை என எல்லாவற்றையும் செய்துகொண்டே திரிவார்கள். 48 என்கவுண்டர் செய்துவிட்டு வரும் நாயக மிருகம் இந்த இரண்டு வில்ல மிருகங்களோடு கடைசி வரை போராடிக்கொண்டே இருந்துவிட்டு கடைசியில் மூத்த மிருகத்தைக் கொல்வது தான் கதை. இந்தப் படத்திலும்...மாஞ்சா வேலு உட்பட சமீபத்தில் வெளியான நூற்றுக்கணக்கான மொட்டைகளை மறுபடி மறுபடி தமிழ்த்தலைகளில் நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றனர் திரைப்பட இயக்குநர்களும் கூட்டாளிகளும்.

6.ஊருக்கு ஒதுக்குப்புறமான க்ளைமாக்ஸ் இடங்கள் எப்போதடா வரும் என்று இருக்கின்றன. வாழ்வியலுக்கு சம்மந்தமில்லாத இது மாதிரியான சூழல்களில் ரத்தக்களறி செய்து வகைப்படுத்தும் காட்சிகளை என்றைக்கு இவர்கள் தவிர்க்கப் போகிறார்கள்..? திருந்தாத ஜென்மங்களாய் திரிகிற இவர்கள் சமூகத்தை அல்லவா சேற்றால் அடிக்கிறார்கள்..?

7.நகைச்சுவைக் காட்சிகள் என்று அறிவுக்கு ஒவ்வாத காட்சிகளில் நடித்துவிட்டு விவேக் போன்றவர்கள் வெளியே வெட்டிப்பகுமானம் பேசுவதை வன்மையாகவே கண்டிக்கலாம் யாராவது... இதில் வருகிற அத்தனை நகைச்சுவைக் காட்சிகளும் நீர்த்துப் போனவையே.

8.வாழ்வியலுக்கு சம்மந்தமில்லாத காட்சிகள், அளவற்ற வன்முறை, பாலியல் இச்சையைத் தூண்டும் ஆபாசமான அசைவுகள், பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை, நம்பகத் தன்மையற்ற பாத்திரப்படைப்புக்கள், அறிவியற்புலத்துக்கு எதிரான காட்சி நகர்தல்கள், வெறியை, விஷத்தை தூண்டும் அதீத வசனங்கள் என எல்லா விதத்திலும் புறக்கணிக்கப்பட வேண்டிய படம்...

இதுக்கு பேரென்னங்க..?ஆங்க்.... வெடி.... மாஞ்சாவேலு.... திமிரு... மலைக்கோட்டை..... காளை.... சுள்ளான்...ச்சீ ச்சீ..... இனிமே இதுகளுக்குப் பேரு.. நூத்துக்கு அறுபது.... மதிப்பெண் அல்ல... வருகிற நூற்றுக்கு அறுபது படங்கள் இதே குப்பையின் பிரதிகள் தானே.... அப்படி வெச்சுக்குவோம்.... இந்த முறை நூத்துக்கு அறுபது ரகக் குப்பைக்கு பேரு...வெடி..

வேலையப் பாப்போம் மக்களே...

Pin It