இயக்கம்: ராஜன் மாதவ். இசை சாஜன் மாதவ். ஒளிப்பதிவு: கமலேஷ். நடிப்பு: சேரன், பிரசன்னா, ஜெயபிரகாஷ், ஹரிபிரியா மற்றும் நிகிதா.

cheran_prasanna_360ஒரு பயணத்தில் எதிர்பாராத‌விதமாக லிஃப்ட் கேட்பதன் மூலமாக சேரனும் அதை அனுமதிக்கிற பிரசன்னாவும் சந்திக்கின்றனர். பெங்களூருவிலிருந்து சென்னை வருகிற வரைக்கும் இரண்டு பேரின் முன் கதை-இரண்டு பேருக்கும் இடையிலான குணாம்ச முரண்கள் ஒவ்வொன்றும் அடுத்தவருக்குத் தெரியவருகிறது. ஆபத்தோடு என்னேரமும் பரீட்சை செய்து கொண்டிருக்கும் பிரசன்னா, முதல் படத்துக்கு இசை அமைக்கிற வாய்ப்பை பெற்றுக்கொண்டு சென்னை வரும் சேரன் இருவரும் ஒருவருக்கொருவர் சம்மந்தமற்ற இணைச்சாலைகள்.

இரண்டு பேருக்குமிடையிலான ஒரே ஒற்றுமை எதுவெனில் அது உறுதியான எடுத்ததை முடிக்கிற குணம் மட்டுமே.

வாழவும் விடாமல் விலகியும் செல்லாத மனைவியிடம் துன்பத்தில் உழலும் சேரன்;  தன் காதலியை தன் கோடீஸ்வரத் தந்தையே சீரழித்த பின்னும் அவரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் பிரசன்னா...

'என் தகப்பனை நீ கொல். உன் மனைவியை நான் கொல்கிறேன்' என்று பிரசன்னா யோசனை சொல்ல.. அதை மறுக்கிற சேரன் கிளம்பி தனியாக சென்னைக்குச் சென்றுவிட, இடைவேளைக்கு முந்தைய காட்சியில் சேரனின் மனைவி நிகிதா ஒரு விபத்தில் உயிரை இழக்கிறார். உன் வாழ்க்கையில் நான் இன்பத்தை ஏற்படுத்திவிட்டேன்.. இனி என் வாழ்க்கைக்கு நீ தான் உதவ வேண்டும் என்று சேரனை தன் தந்தையைக் கொல்லுமாறு நிர்பந்திக்கிறார் பிரசன்னா. கொன்றாரா இல்லையா என்ன நடந்தது என்பதே முரண்.

STRANGERS ON A TRAIN A FILM BY ALFRED HITCHKAK.தழுவலே முரண்.

முரண் படத்தின் முதல் பலம் கதைக்கு சற்றும் ஈடுகுறையா வசனங்கள். வாழ்வியலில் இருந்து எடுத்து கோர்க்கப்பட்ட வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. வசனங்களின் மூலமாக நகர்ந்து செல்லக்கூடிய கான்வெர்சேஷனல் த்ரில்லர்ஸ் வகைப் படங்கள் தமிழில் குறைவு. அவ்வரிசையில் முக்கியமானதொரு படமாக முரண் இருக்கிறது.

இரண்டாவது ஒளிப்பதிவு பத்மேஷின் ஒளிப்பதிவு உறுத்தாமல் நம்பகப் பரப்புக்குள் நம்மை நிலைநிறுத்துகிறது. மூன்றாவது இசை. சாஜன் மாதவின் இசை நெருடாமல் இருக்கிறது. இயக்கம் என்கிறதற்கான தனித்த பாராட்டுக்களை ராஜன் மாதவுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக...சேரன் இதுவரை நடித்த படங்களிலேயே மிக சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிற படம் முரண் தான். இயல்பாகவே சேரன் வரவழைத்துவிடும் சோகம் இந்தப் படத்தில் நிகழாமல், ஒரு உறுதியான அதே சமயத்தில் சரியான முடிவுகளை மட்டுமே எப்போதும் எடுக்கிற நந்தா பாத்திரத்தில் கனகச்சிதமாகப் பொருந்துகிறார் சேரன். அவரது குரலும் முகமும் அங்க அசைவுகளும் ஒரு பண்பட்ட இயக்குநர் நடிகராக பரிமளிக்கிறது. காண்பதற்கும் நிறைவாக இருக்கிறது.

அடுத்து பிரசன்னா... பணக்கார ரோமியோ பாத்திரம் அடிக்கடி பலரால் ஏற்கப்பட்டது தான். பிரசன்னாவின் குரலும் அவர் உதடுகளில் எப்போதும் தவழத் தயாராக இருக்கிற மர்மப் புன்னகையின் தொடக்கமும் பிரசன்னாவை தூக்கி நிறுத்துகின்றன. மெல்ல மெல்ல தன் பாத்திரத்தை திரையில் பரவச்செய்து ஆக்கிரமிக்கும் பிரசன்னா... சின்ன வயது கமலை நினைவுக்குக் கொண்டு வருகிறார். இது அவருக்கு நல்லதா அல்லால் கெட்டதா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.

ஜெயப் பிரகாஷ். ஒரு தயாரிப்பாளராக இருந்தவர் திடீர் சாம்பார்பொடி போல திடீர் நடிகராகி பசங்க, யுத்தம் செய், மங்காத்தா, வம்சம், நான் மகான் அல்ல என அடித்து நொறுக்கிக் கொண்டு முன் நகர்கிறார். இதில் அவருக்கு பெரிய்ய ரோல் இல்லை என்றாலும் கிடைத்ததை சாப்பிட்டு விடும் பசித்த மிருகமாய் நடிப்பு வேட்கையில் திளைக்கிற ஜெயப்பிரகாஷ் சீக்கிரமே தேசிய அளவில் விருதுகள் கவனங்கள் பெறுவது நிச்சயம்.

ஆங்கில ஹிந்தி வாடையில் பெண்பாத்திரங்கள், காட்சியமைப்புகளில் ஓரிரு இடங்க‌ளில் நெடுரும் செயற்கைத்தனம் என சில இடங்களில் வெகு கொஞ்சமே முரண்படுகிறேன்; பெருவாரி உடன்படுகிறேன்.

தமிழ் சினிமாவின் பழகிப் புளித்த எந்தக் காட்சியும் இந்தப் படத்தில் இல்லாததே படத்திற்கு மிகப் பெரிய பலம். மசாலா படத்திற்கும், நல்ல படத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளியில் இப்படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. அதனால் இரண்டு தரப்பு ரசிகர்களையும் இப்படம் திருப்திப்படுத்துகிறது.

Pin It