சிம்பு, அனுஷ்கா மற்றும் பரத் நடித்து வெளிவந்திருக்கும் படம் “வானம்” இவர்களுடைய முந்தைய படங்களை மனதில் வைத்து இப்படத்திற்கு போனால், கண்டிப்பாக நீங்கள் ஏமாந்து போவீர்கள். அப்படியானால் இது கதையம்சம் கொண்ட படம் என்பதை நான் தனியா விளக்க வேண்டிய தேவை இல்லை.

vaanam_300பணக்கார வர்க்க வாழ்வின் மீது மோகத்துடனும், பணக்காரனாக மாறி விட வேண்டும் என்கிற தாகத்துடனும் அலையும் இளைஞனாக சிம்பு. இசுலாமியர்கள் என்றாலே, வெறுப்பை உமிழும் ஒரு காவல்துறை அதிகாரியால் இன்னலுக்கு ஆளாகும் இசுலாமியராக பிரகாஷ்ராஜ். தன்னை பண்டமாக நினைக்கும் ஆணாதிக்க சந்தையில் தன்னை விற்கும் வியாபாரம் தெரிந்தவராக அனுஷ்கா.

சமூகத்தைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் வாழும் மேட்டுக்குடி வர்க்க கதாபாத்திரமாய் பரத். கந்து வட்டிக்காரனிடம்    தன் மகனை அடகு வைத்து விட்டு அவனின் கல்விக்காக போராடும் ஏழைத்தாய் சரண்யா. இன்றைய உலகமய சந்தையில் இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளே கதைக்களம். மேற்கூறிய கதாபாத்திரங்களில் முதலில் சிம்பு கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்வோம். இன்றைய முதலாளித்துவ உலகம் தோற்றுவிக்கும் நுகர்வோர் சந்தையினால் ஈர்க்கப்படும் இளைஞனாக நன்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். பெருநகரமயமாக்கப்பட்ட சூழலில், தனது இயல்பையும், சுற்றத்தையும் மறைத்து வாழ, படித்த சேரி இளைஞர்கள் அனைவரும் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதற்கு சிம்பு கதாபாத்திரம் சரியான உதாரணம்.

குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை “குற்றவாளிகளாக” மாற்றுவதில் இந்த முதலாளித்துவ உலகிற்கு உள்ள பங்கினை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். இந்த உலகத்தில் இரண்டு casteதான் உண்டு ஒன்று பணக்காரன், மற்றொன்று ஏழை என்று சிம்பு வசனம் பேசுகிறார். இந்த இடத்தில் தான் இயக்குனரிடம் நாம் சற்று விவாதிக்க வேண்டியுள்ளது. வெறும் வர்க்க கண்ணோட்டத்துடன் இந்திய சமூகத்தை பார்த்திருப்பதால், இயக்குனர் இது போன்ற வசனத்தை படத்தில் வைத்திருக்கிறார். இச்சமூகத்தில் நிலவும் சாதியப் படிநிலைகள் குறித்தோ, தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறை குறித்தோ, அவருக்கு முழுமையான பார்வை இல்லை.

உண்மையில் இயக்குனர் நினைப்பது போல் ஏழை, பணக்காரன் என்று இரு சமூகங்கள் மட்டுமே இந்தியாவில் இருப்பது உண்மை என்றால், குப்பத்தில் வசிக்கின்ற ஒரு பார்ப்பானையோ, மார்வாடியையோ நம்மால் காண முடிவதில்லையே ஏன்? ஏனென்றால், இங்கு சாதிய – படிநிலைகள்தான் வர்க்கமாக மாறியிருக்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் அவலங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற இயக்குனரின் முயற்சியை நாம் வரவேற்கலாம். ஆனால் அந்த முயற்சி இன்னும் சற்று ஆழமாக இருத்தல் அவசியம்.

அடுத்தப்படியாக, ஏழைத்தாய் ஒருத்தி தன் உடலுறுப்பை விற்று தன் மகனை படிக்க வைக்கும் சமூக அவலத்தை “சரண்யா” கதாபாத்திரத்தின் மூலம் இயக்குனர் சிறப்பாக சொல்லியிருக்கிறார். நாட்டுக்காக தன்னுயிர் நீத்த இராணுவ அதிகாரியின் மகனாக வரும் பரத் சமூகப் பார்வை இல்லாமல் தன்னல சிந்தனை கொண்டவராக இருக்கிறார். அவரையும், இராணுவத்தில் சேர சொல்லி இந்திய நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் பரத்தின் அம்மா. (இயக்குனருக்கு சிறு திருத்தம். பரத், இந்திய இராணுவத்தில் சேர்ந்து, மணிப்பூர், காஷ்மீர், நாகலாந்து போன்ற மாநில மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் சமூக சேவையை செய்வதை விட, சுயநலமாகவும், தன் விருப்பம்போல் இசையமைப்பாளராகவும் இருப்பது எவ்வளவோ உத்தமம்).

அனுஷ்கா கதாபாத்திர படைப்பை பொறுத்தவரை, இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். “பாலியல் தொழிலாளி” என்ன உணர்வை ஏற்படுத்துவாரோ, அது போன்ற உணர்வினை தரும் அளவிற்கு கதாநாயகியின் பாத்திர படைப்பு தமிழ் சினிமாவில் மோசமாக உள்ளது. இத்தகைய சூழலில் “பாலியல் தொழிலாளி” கதாபாத்திரம் மூலம் ஒரு நடிகையை மரியாதையாக காண்பித்திருக்கும் “வானம்” திரைப்படம் வரவேற்கத்தக்கது. பாலியல் தொழிலாளிகளின் அவல நிலையை மட்டுமல்லாமல், திருநங்கை ஒருவரின் பரிதாபத்திற்குரிய வாழ்வியலையும் ஒரு சேர இணைத்து காட்டியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசு பயரங்கரவாதத்தின் அடியாட்களான காவல் துறையினரால் அதிகம் பாதிக்கப்படுவது விலைமாதர்களும், திருநங்கைகளும்தான் என்கிற உண்மையை இப்படம் அழுத்தமாக காட்டுகிறது. “சார், உங்ககூட எத்தனை தடவ வேணுன்னாலும் படுக்கிறேன் சார். ஆனா போலீசுக்கிட்ட மட்டும் போக சொல்லாதீங்க” என்று அனுஷ்கா மருத்துவரிடம் கெஞ்சும் காட்சியில் உலகமய சந்தையில் பெண்ணின் உடல், நுகரும் பொருளாகிப் போன அவலத்தைக் காட்டுகிறது.

இறுதியாக, நாம் இப்படத்தில் விவாதிக்க வேண்டிய பாத்திர படைப்பு பிரகாஷ்ராஜ் படத்தின் முற்பகுதியில் “அட” போட வைத்துவிட்டு, படத்தின் இறுதிக்காட்சியில் “அய்யோ சொதப்பிட்டாரே” என்று முணுமுணுக்க வைத்த கதாபாத்திரம் பிரகாஷ்ராஜ் என்னும் இசுலாமிய கதாபாத்திரம். “விநாயகர் சதுர்த்தி” என்கிற பேரில் இந்துத்துவ அமைப்புகள் நடத்தும் மதவிரோதப் போக்கையும், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நடவடிக்கையையும் இப்படம் துணிச்சலுடன் காட்டியுள்ளது. ஆனால், அதனால்தான் இசுலாமியர்கள் தீவிரவாதிகளாக மாறி வருகின்றனர் என்று நடைமுறையில் இல்லாத ஒரு பொய்யான கருத்தினை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

தமிழகத்தில், இசுலாமிய அமைப்புகள் இருக்கின்றன. அந்த அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் கிடையாது. வன்முறையை தூண்டியது கிடையாது. ஆனால், தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாகவே வன்முறையை தூண்டுகின்றன. திரிசூலத்தை காட்டி சிறுபான்மையினரையும், நாத்திகர்களையும் கொலை செய்வோம் என்று மிரட்டுகிறது. தமிழகத்தின் இது வரை நடந்த அனைத்து கலவரங்களுக்கும் (மண்டைக்காடு, தென்காசி) பின்புலமாக இருந்தது ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளே. பெரியார் பிறந்த தமிழக மண்ணிலேயே ஆர்.எஸ்.எஸ் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டால், இந்தியாவின் பிறமாநிலங்களை நாம் கேட்க வேண்டிய அவசியமில்லை.

உண்மை நிலை இப்படியிருக்க, இசுலாமிய தீவிரவாதிகள் தமிழக மருத்துவமனையில் குண்டு வெடிப்பு நிகழ்த்துவது போல் படத்தில் காண்பித்திருப்பது முரணான செய்தி. ஒரு வேளை, கிளைமாக்ஸ் காட்சியில் இசுலாமியர்களை தீவிரவாதிகளாக காண்பிக்க வேண்டிய நிர்பந்தம் இயக்குனருக்கு வந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இன்னும், சமூகத்தைப் பற்றி ஆழமான பார்வையும், புரிதலும் இயக்குனருக்குத் தேவை. இது போன்ற சில முரண்பாடுகளை சுட்டிக்காட்டும் அதே வேளையில் கலாச்சார அடிப்படைவாதிகளையும், மத அடிப்படைவாதிகளையும் துணிச்சலாக தோலுரித்துக் காட்டிய இயக்குனரை பாராட்ட வேண்டியது நமது கடமை.

Pin It