அலுவலகத்தின் தெற்கு பகுதியிலிருந்து வந்த என் நண்பன் சிரித்துக் கொண்டே வானம் படத்தின் டிக்கெட்டுகளை என்னிடம் காட்டியபோது கடுமையான பயத்துக்கு உள்ளான நான் வடக்கு நோக்கி தெறித்து ஓடியது உண்மைதான். ஒரே காரணம் தான்... அந்த ஒரே காரணம் தான்... என் இதயம் 2 மடங்கு வேகத்துடன் அடித்துக் கொண்டது எனக்குத் தான் தெரியும். வளைத்துப் பிடித்து அமுக்கி, பிரெய்ன்வாஷ் செய்து இழுத்துச் சென்றபோது கேரளாவுக்கு வெட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் எருமை மாட்டைப் போல விழித்துத்தான் என்ன பிரயோஜனம். எல்லாம் பழிவாங்கும் நடவடிக்கையோ என்கிற சந்தேகம் எனக்கு இல்லாமல் இல்லை. சென்ற வாரம் தான் அவனை வேறொரு தமிழ் படத்திற்கு அழைத்துச் சென்று அங்கஹீனம் ஆக்கியிருந்தேன்.

நான் அவனிடம் கூறினேன்

‘நண்பா என் கண்களைப் பார்... அதில் தெரியும் பயத்தைப் பார்... அது உனக்குப் புரியவில்லையா? நீ என்ன மனசாட்சி இல்லாதவனா?”

simbu_vanam

உற்று பார்த்துவிட்டு எதுவும் தெரியவில்லை என்று கூறினான். அவன் என் கண்களுக்கு, துப்பாக்கி முனையில் இழுத்துச் செல்லும் அல்-கைதா தீவிரவாதியைப் போலத் தெரிந்தான். ரிவன்ச் என்று வந்துவிட்டால் நண்பர்கள் கூட எதிரிகளாக மாறிப் போகிறார்கள்.

ஏதோ காதலியை கையைப் பிடித்து கூட்டிச் செல்வது போல... காவல்துறை அதிகாரி அக்யூஸ்டை ஹேங் கிளிப் போட்டு அழைத்துச் செல்வது போல... வழி தெரியாத குழந்தையை தந்தை கையை பிடித்து இழுத்துச் செல்வது போல...  நாய்க்குட்டியை கழுத்தில் கயிற்றைக் கட்டி அதன் எஜமானி இழுத்துச் செல்வதுபோல...அவன் தன் ஆக்கிரமிப்புத் தன்மையை எல்லாம் என்மேல் காட்டிக்கொண்டிருந்தான் என்றால் அது மிகையில்லை.

அவன் என் கண்களுக்கு தமிழ் வில்லன் நடிகர் ராதாரவியைப் போல தெரிந்தான். (பழைய தமிழ் படங்களில் கற்பழிக்கப்படுவதற்கென்றே நிர்ணயிக்கப்பட்ட துணை நடிகைகளை ராதாரவி (திரைப்படத்தில்) கதறக் கதற இழுத்துச் சென்று பஞ்சு மெத்தையில் தள்ளி விடுவார். அந்த பெண்ணும் 3 முறை தன்னைத் தானே சுற்றியபடி (ரோலிங்) படுக்கையில் சென்று விழுவாள். அவள் முகத்தில் ஐயோ என்ன நடக்கப் போகிறதோ என்கிற பயம் தாண்டவமாடும்) இப்படியெல்லாம் நான் எதற்கு கற்பனை செய்கிறேன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. ஏன் எனக்கு இப்படியெல்லாம் பயம் வருகிறது. சாதாரண ஒரு தமிழ்ப்படம் தானே. ஐயோ கடவுளே... சமுதாய பாதிப்பு, சமுதாய பாதிப்பு என்று சொல்வார்களே அது இதுதானா...

நேற்றுதான் ஒருவர் ரிசல்ட் கூறினார்.

நான் அவரிடம் அவர் பையனின் 12ம் வகுப்பு ரிசல்ட் வந்துவிட்டதா என்பதை இப்படி சுருக்கமாகக் கேட்டுத் தொலைத்து விட்டேன்.

‘ஹலோ மிஸ்டர் ஸ்ரீராம் ரிசல்ட் என்னாச்சு”

‘போயிடாத மனசாட்சியே இல்லாமல் சவட்டிக் களைஞ்சு” என்று கூறினார். ஆராய்ச்சிக்குப் பின்தான் தெரிந்தது அது திரைப்படத்தின் ரிசல்ட் என்று.

ஆனால் ஒரு நல்ல விஷயம், ரோலிங்கில் சென்று நாற்காலியில் உட்கார்ந்த எனக்கு மூச்சுவிடுவதற்கு சற்று நேரத்தை ஏற்படுத்திக் கொடுத்த சிறந்த விஷயம், படம் தொடங்கி 15 நிமிடங்களுக்கு என்னவோ நடக்கிறது என்கிற புரியாதனத்தோடு சென்று கொண்டிருந்தது தான், மேலும் மிக முக்கியமான விஷயம் அவர் ஒரு 20 நிமிடங்களுக்கு காட்டப்படவே இல்லை.

சினிமா தொடங்கியவுடன் பாடலைப் போட வேண்டும் என்று பாகவதர் உருவாக்கிக் கொடுத்த பாதையை அடியொற்றியும், முன்னோர்கள் அனுபவத்தை உதாசீனப்படுத்தக்கூடாது என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், படம் தொடங்கியதும் பாடலைப் போட்டு விட்டார்கள். பரத் அந்த தத்துவப் பாடலை பாடிக் கொண்டிருந்தார். ‘நான் யார், நான் யார், நான் யார் என்ற இந்திய ஆன்மீகத் தேடலின் மிக முக்கிய அடிப்படை ஆதாரப் புள்ளியை மையமாகக்; கொண்டு ஆங்கிலத்தில் தன் அடி ஆழத்தைத் தேடிக்கொண்டிருந்தார். ரமண மஹரிசி கேட்டிருந்தால் இனிமேல் அந்த நான் யார் என்கிற பதத்தை உபயோகப்படுத்தவே மாட்டேன் என்று சங்கல்பம் எடுத்திருப்பார். அந்த சில மணித்துளிகளைத்தான் நான் பிரார்த்தனைக்கு பயன்படுத்திக் கொண்டேன். நான் கடவுளிடம் ஒரு கோரிக்கை வைத்தேன் அப்பொழுது.

‘கடவுளே நம் விரோதத்தையெல்லாம் பிறகு ஒருநாள் பேசி தீர்த்துக் கொள்வோம். இப்பொழுது மட்டும் என்னைக் காப்பாற்று”

பிறகு திடீரென திருநெல்வெலியில் நடக்கும் ஒரு சம்பவத்தை காட்டினார்கள். நான் அருகில் இருந்த என் நண்பனிடம் கூறினேன்.

‘பார்த்தாயா இப்படித்தான் நடக்கும். இந்த தியேட்டர்களில் எல்லாம் சொந்தமாக ஒரு எடிட்டரை வைத்திருக்கிறார்கள். அவர்கள் படத்தின் நீளத்தைக் குறைக்கிறேன் என்று கன்னாபின்னாவென வெட்டித் தள்ளி விடுவார்கள். பார்... படத்தில் பாதி சீனை கட் செய்து விட்டார்கள்.”

90 கிலோ எடையுள்ள என் நண்பன் பார்வையாலேயே மிரட்டியபடி என்னைப் பார்த்தான். அவன் எப்பொழுது சிம்பு ரசிகனாக மாறிப் போனான் என்றுதான் எனக்குத் தெரியவில்லை. அவன்  ‘எவன்டி உன்னைப் பெத்தான் பெத்தான்” என்கிற பாடலை தொடர்ச்சியாக 20 முறை கேட்ட போதே நான் உஷாராகியிருக்க வேண்டும். அலுவலகத்துக்கு 10 நாள் லீவு போட்டுவிட்டு சென்றிருக்க வேண்டும். இப்பொழுது வருந்தி என்ன செய்வது.

பின் திருநெல்வெலியில் ஒரு கதை சொல்லிவட்டு, கோவை செல்கிறார்கள். அங்கு ஒரு கதை இப்படி ஒவ்வொரு கதையாக 5 நிகழ்வுகளை ஒவ்வொரு ஊரிலும் சொல்லிச் செல்கிறார்கள். அனுஷ்காவை காட்டிய போதே நான் நிமிர்ந்து உட்கார்ந்து விட்டாலும், ஏதோ புதுமையான கதை சொல்லல் முறையை கையாண்டிருக்கிறார்கள் என்று புரிந்தவுடன் தான் முழுமையாக நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

அந்த 5 கதைகளில் ஒரு ஆபத்தை தாண்டி வந்ததை நான் உணரவேயில்லை. அதுதான் சிம்புவின் கதை...

இப்படித்தான் டாக்டர் சின்னவயதில் என் கைகளில் பேசிக்கொண்டே ஊசியை ஏற்றுவார். நறுக்கென்று ஏற்றிவிட்டு... ம்;..ம்..ம்.. வலிக்காது...வலிக்காது.. என்று தாஜா செய்வார். இயக்குனர் கிரிஷ் ஒரு மருத்துவரோ என்று கூட சந்தேகப்பட வேண்டியிருந்தது. எதிர்பாராத ஒரு தருணத்தில் அவரைக் காட்டி நறுக்கென்று ஏற்றி விடுவாரோ என்று அடி வயற்றில் புளியை கரைத்துக் கொண்டிருந்த சமயத்தில்  நாட் பேட் என்று சொல்ல வைத்தது. தமிழ்த் திரையுலகில் திறமையான இயக்குனர்களுக்கு ஹீரோ கிடைப்பது கடினம். அதனால் வூ(றழழ) பில்ம் மேக்கராக இருப்பது கட்டாயப்படுத்தப்படும் ஒரு விஷயமாக மாறிப் போகிறது. படம் முடிந்த பின்தான் யோசிக்க முடிந்தது கிரிஷ்சை குறை சொல்ல முடியாது என்று.

சிம்புவின் முகம் திரையில் வந்த பொழுது பெண்கள் கூட விசிலடிக்கிறார்கள். டைப்ரைட்டர் சென்டர்களிலும் சரி, கம்யூட்டர் சென்டர்களிலும் சரி, சிம்பு படம் ஓடும் தியேட்டர்களிலும் சரி 10 பெண்களுக்கு 2 ஆண்கள் தான் இருக்கிறார்கள். கேட்டால் பெண்களுக்கு சுதந்திரமே இந்தியாவில் கொடுக்கப்படுவதில்லை என்று பொய் சொல்கிறார்கள். 

இதுபோன்ற 5 கதைகளை வைத்து தனது திறமையை காட்டிய ஒரு இயக்குனர் இருக்கிறார். படம் பல்ப் பிக்ஷன். இயக்குனர் க்வண்டின் டாரண்டினோ. ஒரு கதையை இப்படித்தான சொல்ல வேண்டும் என்கிற எல்லா வரைமுறைகளையும் உடைத்தெறிந்தவர். கதையை விசுவலாக சொல்வதில் எத்தனை விதமான சாகசங்கள் உள்ளனவோ அத்தனைக்குமான கதவுகளை திறந்து விட்டவர். பிகாசோவின் நவீன ஓவியங்களைப் போல காட்சிகளை பிய்த்துப் போட்டு ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டு வந்து சொல்ல வந்த விஷயத்தை மனதில் பதிய வைத்து விடுவதில் வல்லவர். ‘அ”க்குப் பின் ‘ஆ” என்ற நேர்கோட்டு விதிமுறைகளையெல்லாம் தகர்த்தெறிந்து முன்பின் மாற்றி காட்சிகளை கட்டமைக்கும் கில்லாடித் தனத்தை உலகுக்கு வழங்கியவர்.

அது போன்ற காட்சியமைப்புகளைக் கொண்ட ஒரு சில படங்கள் அவ்வப்பொழுது தமிழ்த் திரையுலகில் தலைதூக்கி பின காணாமல் போய்விடுவதுண்டு.

உதாரணமாக அலெக்சாண்ட்ரா கொன்சாலஸ் என்கிற மெக்சிக்கன் இயக்குனரின் அமெரோஷ் பெரோஸ் என்ற திரைப்படத்தின் ஸ்ட்ரக்சர் ஆயுத எழுத்தாக தமிழில் வந்தது. கதை வேறு வேறு என்றாலும், காட்சிகளின் கட்டமைப்பு அப்படியே காப்பியடிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிறப்பாக கையாளப்பட்டிருந்தது. மணிரத்தினத்தால் மட்டுமே அது முடிந்திருக்கக் கூடிய விஷயம். அதுபோல், சர்வம், நடுநிசி நாய்கள் என்று ஒரு சில படங்கள் வந்தாலும் சில நாட்களில் காணாமல்போய் விடுகிறது.

கமல்ஹாசன் போன்ற மேதை இயக்குனர்கள் ஒத்துக் கொண்ட விஷயம் தான் இருந்தாலும் ஒரு முறை பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவிஷயம். சிறந்த திரைப்பட ரசனை உள்ளவர்கள், ஒரு இடத்துக்கென உள்ள அல்லது ஒரு சமுதாயத்துக்கு என உள்ள அடிப்படை ரசனையை கேலிக் கூத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மக்களின் ரசனை எப்பொழுதும் 100 சதவீதம் சரியாக, சார்ப்பாக இருக்கும்.

சிம்புவின் விரல் வித்தையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அதை கேலிக்குரியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. வெகுஜன ரசனையை கேலிக்கூத்தாக நினைப்பது இடது கை பெருவிரலையும், வலது கை பெருவிரலையும் சண்டை போட விட்டு எது ஜெயிக்கும் என்று வேடிக்கை பார்ப்பது போன்றதாகும்.

வெகுஜன ரசனையை கேலிக்கூத்தாக நினைத்து ஒதுக்கும் போது நாம் உட்கார்ந்திருக்கும் மரத்தின் கிளையை எதிர்பக்கமாக நாமே வெட்டிக் கொள்வது போன்றதாகும். சிம்புவின் விரல்வித்தையை கூட வேறு விதமான மெச்சூர்டாக மாற்றலாம். (இவையெல்லாம் ஒரு உதாரணத்திற்குத்தான் சிரிக்க வேண்டாம்).

ஒரு மண்ணுக்கென தனி இசை உண்டு தனி நடனம் உண்டு. தனி ஆன்மா உண்டு. இங்கே சாவு மேளம் ரசனையுடையதாக இருந்தால் அது சிரிக்கக் கூடிய விஷயம் இல்லை. இங்கு குத்தாட்டம் எழுந்து ஆட்டம் போட வைக்கிறது என்றால் அது கேலிக்குரிய விஷயம் இல்லை. எல்லா உருவாக்கங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் கண்டிப்பாக இருக்கும்.

ஆனால் இயக்குனர் கிரிஷ்ஷின் மேல் உள்ள கோபம் என்னவெனில், படத்தில் உள்ள இரு ஹீரோக்களுக்கும் கண்டிப்பாக ஒரு பாடல் கொடுத்தே ஆக வேண்டும். பிறகு அனுஷ்காவை நடிக்க வைத்து விட்டு குத்தாட்டம் இல்லையென்றால சாமி கண்ணைக் குத்திவிடும் என்கிற ரீதியில் ஒரு குத்துப்பாட்டு, பின் பரத்துக்கு ஒரு சண்டைக் காட்சி, இவைதான் டிரையலரிலும முன்னிறுத்தப்பட்டன. இவற்றால் தான் படத்தை பார்க்க வேண்டாம் என்கிற எண்ணமும் தோன்றியது.

யாருடைய கட்டாயத்தின் பேரில் இவற்றையெல்லாம் இயக்குனர்கள் தன்னுடைய படத்தில் வைக்கிறார்கள். ஒருவேளை ஹீரோ கட்டாயப்படுத்தியிருப்பாரோ?, அல்லது ப்ரொடியூசர் கட்டாயப்படுத்தியிருப்பாரோ? அல்லது டிஸ்ட்ரிப்யூட்ர்ஸ் கேட்டுக் கொண்டிருப்பார்களோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.

கிரிஷ் தனது படத்தின் மற்ற இடங்களில் எல்லாம் செலுத்தியிருக்கும் கவனத்தை பாடல்கள், சண்டைக்காட்சிகள், பில்ட்அப்கள் இவற்றில் காட்டவில்லை. அவற்றின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக அந்த காட்சிகளை இவ்வாறு அமைத்திருக்கலாம். ஆனால் ஒரு இயக்குனர் இதுபோன்ற காட்சிகளையும் மேம்பட்டதாக மாற்ற வேண்டும் என்பதே சொல்ல வந்த விஷயம். 

காட் பாதரில் வரும் மர்லன் பிராண்டோ கூட பக்கா ஹீரோ பில்ட்அப்தான். ஆனால் மேம்படுத்தப்பட்டது அது. நல்ல குத்துப்பாடல்கள் இங்கு நிறைய உண்டு. குத்துப்; பாடல்கள் என்றாலே எனக்கு வாந்தி வருகிறது என்று சொல்லும் சமுதாய ஆர்வலர்களுக்காக இல்லாவிட்டாலும், சமுதாயம் ஏற்கனவே திருந்திக்கிடக்கிற ஒரு சில இடங்களில் இதுபோன்ற பாடல்களை மக்கள் ரசிக்கக் கூடுமே. யோசித்துப் பார்த்திருக்கலாம்.

மேலும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி காட்டப்பட்ட நல்ல படங்களுள் இதுவும் ஒன்று. பாலா என்ற ஒரு இயக்குனர் ஒடுக்கப்பட்டவர்களை பூதக்கண்ணாடி வைத்து தமிழ்நாட்டின் அல்லது இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் தேடிப்பிடித்து தனது படத்தில் நடிக்க வைத்திருப்பார். அவ்வாறு இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களின் இயல்பான கோபத்தை வெகு சாதாரணமாக வெளிப்படுத்தியிருந்தது சிறப்பான விஷயம். ஒடுக்கப்பட்டவர்கள் ஹீரோக்கள் இல்லை என்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஹீரோயிஷம் என்றால் என்னவென்றே தெரியாது என்றும் நச்சென்று எடுத்துச் சொல்வதற்கான ஒரு களமாக இப்படம் இருக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்களை ஹீரோக்களாகக் காட்டி அவர்களுக்கு சொரிந்துவிடும் தனத்தை யாரும் கண்டுபிடித்துவிட முடியாது என்கிற மேம்போக்குத்தனமான மேதைமைத் தனத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிஜமான கோபத்தை எளிமையாக, எந்த மேதமைத் தனமும் இல்லாமல் தெருவோர ராமசாமி எப்படி கோபப்படுவானோ அப்படி காட்டியிருப்பது (அடக்கி வாசித்திருப்பது, நான் கடவுள் அகோரன் போன்று இல்லாமல்) குறைந்த பட்சம் பாராட்டுக்குரியது. ஒருவேளை அகோரன் ஆர்யாவைப் போல் வேல்கம்பை எடுத்துக் கொண்டு பிரகாஷ்ராஜ் போலீஸ்காரனைத் துரத்தியிருந்தால் விசில் சத்தம் பறந்திருக்கும்.

கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு நடத்தப்படும் வன்முறைகளை வாய்திறந்து பேசமுடியாத ஊர் இது. திரைப்படமாக எடுத்து விட்டு சென்னையில்தான் கிரிஷ் இருக்கிறார் என்றால் அவருக்கு இந்திய அரசாங்கம் வீரசாகசம் செய்தவருக்கான விருதுகளை யோசிக்காமல் வழங்கலாம்.

சிம்பு 5 கதைகளில் ஒருவராக வந்து போவது அவரது சிறப்பானதைத் தேர்ந்தெடுக்கும் திறனைக் காட்டுகிறது. அவர் மெச்சூர்ட் ஆகிவிட்டார் என்று சொன்ன போது நம்ப இயலவில்லைதான். ஆனால் இப்பொழுது ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். இத்திரைப்படத்தில் இப்படியொரு கேரக்டரை தேர்ந்தெடுத்ததற்காக அவரை பாராட்ட வைத்துவிட்டார். நான் மனதிற்குள் யாருக்கும் தெரியாமல் அவரை ரகசியமாக பாராட்டி விட்டேன். அதோடு நான் சிம்பு ரசிகனாக மாறிவிடுவேனோ என்கிற பயம் வேறு என்னைத் தொற்றிக்கொண்டது. சில நுணுக்கமான உணர்வுகளையெல்லாம் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். இவையெல்லாம் அனுபவம் கொடுக்கும் அழகு. சிம்பு அழகாகத் தெரிகிறார் படம் முழுவதும். அதற்கு காரணம்  அவரது தேர்ந்தெடுக்கும் தன்மைதான் என்று சொன்னால் அவர் நம்புவாரா?

மற்றொரு முக்கியமான விஷயம், நேஷனல் அவார்டை தேர்ந்தெடுக்கும் ஜுரிகள் தயவு செய்து சரண்யாவை கவனிக்க வேண்டும் என்பதே. அவரது நடிப்பு மேலும் மேலும் மெருகேறிக் கொண்டே செல்கிறது. மிக மிக இயல்பான நடிகை அவர். மிக மிக சிறந்த நடிகை. தமிழகத்தில் இப்பொழுதிருக்கும சிறந்த நடிகை யார் என்று கேட்டால் தயங்காமல், அவரா இவரா என்று யோசிக்காமல் ஒருவரை கைகாட்ட முடியும் என்றால் அது சரண்யாதான். குறைசொல்லி விமர்சிக்க முடியாத சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிட்னியை விற்று கடனை அடைக்கும் கொடுமைகள் இன்னும் திருநெல்வெலி போன்ற மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பதை முகத்தில் காரித்துப்பி சொன்னது போல் இருந்தது. என்ன செய்துவிட முடியும் என்கிற தினவில் எல்லாம் வெளிப்படையாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திரைப்படத்தின் மூலம் சமுதாயத்தை திருத்திவிடலாம் என்கிற கற்பனையும், ஏப்ரல், மே மாதங்களில் காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரில் குளிப்பது போன்ற கற்பனையும் ஒன்று தான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை என்றாலும், ஏனோ இதையெல்லாம் பொருத்துக்கொள்ள முடியாமல் உள்ளம் தவிக்கிறது. இதையெல்லாம் எழுதி, திரைப்படம் எடுத்து, சிம்பதைசர் என்கிற பெத்த பெயரை எடுப்பதைவிட சும்மா இருந்துவிடலாம். ஒரு செயல் ஆயிரம் கட்டுரைகளைவிட, ஆயிரம் சினிமாவை விட சிறந்தது.

படத்தில் மிகப்பிடித்த டயலாக்

அனுஷ்கா போலீஸ் உயரதிகாரி ராதாரவியிடம் கூறியது.

‘நாங்க சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சு மாசம் மாசம் உங்களுக்கு கால்பங்கு மாமூல் கொடுத்து விடுகிறோம், எங்கள விட்டுருங்க”

குபீரென்று வந்த சிரிப்பு வந்த வேகத்திலேயே அப்படியே அடங்கிப் போனது. இவ்வளவு நாராசமான கொடுமையான சூழ்நிலை வேறொன்றும் இருக்க முடியாது. ஒரு பெண் 4 பேருடன் படுத்து சம்பாதித்து அந்த பணத்தில் கால்பங்கை போலீசுக்கு தந்துவிடுவதாகவும், அதற்குப் பதிலாக தங்களை சுதந்திரமாக வாழ விட வேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்கிறாள். இதில் வேறு இந்த நாட்டை சுதந்திர நாடு என்று கூறிக் கொள்கிறோம். பின் கத்தியை எடுத்தால் தான் என்ன? துப்பாக்கியை ஏந்தினால்தான் என்ன? காட்டில் வாழும் தாவர உண்ணிகளுக்கு கூட புலி, சிறுத்தை, சிங்கங்களிடமிருந்து தப்பித்து ஓட ஒரு வாய்ப்பு உண்டு. இங்கு இளைச்சவன் கெட்டு சீரழிவதைத் தவிர வேறு வழியே இல்லை.

படத்தில் பிடிக்காத வசனம் :

தீவிரவாதிகளின் தலைவர் (பெயர் தெரியவில்லை – பசங்க படத்தில் வரும் வாத்தியார்) கூறுவது

‘தியேட்டர், மார்க்கெட்டுனு பொதுமக்கள் கூடுற இடத்துல குண்டு வச்சா சில பேர் சாவாங்க, சில பேர் அடிபட்டு ஹாஸ்பிட்டல் போவாங்க. ஆனா அந்த ஹாஸ்பிட்டல்லயே குண்டு வச்சா ஒருத்தனும்  பொழைக்க முடியாது”

என்ன ஒரு புத்திசாலித்தனம், கமல் மாதிரி சிரித்துக்கொண்டே அழுகத் தெரிந்தவர் இன்னொருவர் இந்த தமிழ்நாட்டில் இருக்கிறார். அது யார் தெரியுமா? நான் தான். சத்தியமா அழுதுகிட்டே சிரிச்சேன். எந்தக் கோயிலில் வேண்டுமானாலும் சூடத்தை அனைத்து சத்தியம் செய்யத் தயார்.

Pin It