மராத்தி நாடக மேடையிலிருந்து இந்திய சினிமா வரை — குரல், மௌனம், கோபம், நகைச்சுவை, வலி ஆகியவற்றைத் தனக்கான நடிப்பு மொழியாக மாற்றிய கலைஞனின் பயணம்.

இந்திய சினிமாவில் சில நடிகர்களின் பெயர்களைச் சொன்னவுடன் அவர்கள் நடித்த கதாபாத்திரங்கள் நினைவுக்கு வரும். இன்னும் சிலருடைய பெயர்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தையும் அந்தக் காலத்தின் மனிதர்களையும் நினைவுக்குக் கொண்டு வரும். நானா படேகர் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.

nana patekarஅவரை வெறுமனே “தீவிரமான நடிகர்” என்று சொல்லிவிட முடியாது. பரிந்தாவில் அண்ணாவாக வந்த அதே நடிகர், வெல்கம் படத்தில் உதய் ஷெட்டியாக நம்மைச் சிரிக்க வைக்கிறார். கிராந்திவீர் படத்தில் சமூகத்தின் மீது கோபம் கொண்ட பிரதாப் திலக்காகக் குரலை உயர்த்தியவர், அப் தக் சப்பன் படத்தில் அதிகம் பேசாமல் ஒரு காவல்துறை அதிகாரியின் கடினமான மனநிலையை வெளிப்படுத்துகிறார். நட்ஸம்ராட் படத்தில் வயதாகித் தனிமைக்குள் சிக்கிக் கொண்ட நாடக நடிகனாகத் தோன்றுகிறார்.

இந்த வேறுபாடுகளை ஒன்றாக வைத்துப் பார்த்தால்தான் நானா படேகரின் நடிப்பின் அளவு புரிகிறது. அவர் எந்த ஒரு “நடிப்பு பாணிக்கும்” அடிமையாக இருக்கவில்லை. கதாபாத்திரம் எதை வேண்டுமோ அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார். அதன் வேர்கள் சினிமாவுக்கு முன்பே இருந்தன. மேடை அவருக்குக் கற்றுக் கொடுத்தது. நானா படேகரின் கலைப் பயணத்தைப் புரிந்து கொள்ள மராத்தி நாடக மேடையைத் தவிர்க்க முடியாது.

அவர் மும்பையில் உள்ள சர் ஜே. ஜே. கலைக் கல்லூரியில் பயின்றவர். நாடக உலகில் பெற்ற அனுபவமே அவரது நடிப்பின் அடித்தளமாக அமைந்தது. ஹமீதாபாய் சி கோத்தி போன்ற நாடகப் பணிகள் அவருக்கு மேடை நடிப்பின் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தன. மேடையில் கேமரா இல்லை. நெருக்கக் காட்சி இல்லை. ஒரு சிறிய முகபாவனையைப் பெரிதாக்கிக் காட்டும் தொழில்நுட்ப வசதியும் இல்லை. நடிகரின் குரல், உடல், நடை, இடைவெளி — இவையே அவனுடைய கருவிகள். நானாவின் நடிப்பில் பின்னாளில் அடிக்கடி தெரிந்த “இடைநிறுத்தம்” அங்கிருந்தே வந்திருக்கலாம். அவர் பேசாமல் இருக்கும் சில நொடிகளிலும் காட்சி நகரும். பல நடிகர்கள் கோபத்தைக் குரலின் அளவால் காட்டுவார்கள். நானா சில சமயங்களில் குரலைக் குறைத்தே பயத்தை உருவாக்குவார். தேவையான இடத்தில் அதே குரல் திடீரென வெடிக்கும். அந்த மாறுபாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் அவரது நடிப்பின் தனிச்சிறப்பு. அவர் வசனத்தைச் சொல்லவில்லை என்று சில நேரங்களில் தோன்றும்; அந்த மனிதனே பேசுகிறான் என்று தோன்றும்.

பசி, அவமானம், வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்கள்

நானாவின் சிறுவயது வசதியானதாக இருக்கவில்லை. 13 வயதிலேயே பள்ளி முடிந்த பிறகு மும்பையின் சுனாபட்டி பகுதிக்குச் சுமார் எட்டு கிலோமீட்டர் நடந்து சென்று திரைப்படப் போஸ்டர்கள் வரைந்ததாக அவர் பின்னர் நினைவுகூர்ந்திருக்கிறார். அதற்குக் கிடைத்தது மாதம் ரூபாய் 35 மற்றும் ஒரு வேளை உணவு. குடும்பத்தின் பொருளாதாரச் சரிவு அவரது இளமைக்குள் பசியையும் அவமானத்தையும் கொண்டு வந்தது.

“வறுமையிலிருந்து வெற்றி” என்ற வழக்கமான வாழ்க்கைக் கதையாக இதைச் சுருக்கி விடுவது எளிது. ஆனால் நானாவின் நடிப்பைப் பார்க்கும்போது அந்த அனுபவங்கள் வேறு விதமாகத் தெரிகின்றன. பசியுள்ள மனிதன் எப்படி நிற்பான்? அவமானப்பட்டவன் எப்படி மற்றவரைப் பார்ப்பான்? அதிகாரம் உள்ள ஒருவரிடம் பேசும்போது குரல் எப்படித் தாழும்? கோபத்தை வெளியில் காட்ட முடியாதவன் அதை உடலுக்குள் எப்படி வைத்திருப்பான்? இத்தகைய மனிதர்களை அவர் புத்தகத்தில் படித்திருக்கவில்லை. வாழ்க்கையில் பார்த்திருக்கிறார். அதனால்தான் அவரது நடிப்பில் சில விஷயங்கள் “நடிப்பு” என்று தனியாகத் தெரியாமல் போகின்றன.

கேமரா முன்னால் வந்தபோது

கமன் (1978) அவரது திரைப்படப் பயணத்தின் தொடக்கம். பின்னர் மராத்தி மற்றும் இந்தி சினிமாவில் தொடர்ந்து பணியாற்றிய அவர், பரிந்தா (1989) மூலம் நாடு முழுவதும் தீவிரமாகக் கவனிக்கப்பட்டார். அவருடைய முகம் அக்காலத்தின் வழக்கமான இந்தி கதாநாயகனுக்கான முகமாக இல்லை. உடல்மொழியிலும் ஒரு இயல்பான கடினத்தன்மை இருந்தது. ஆனால் அதுவே அவருக்கு ஒரு சுதந்திரத்தைத் தந்தது. அவர் “கதாநாயகனாக” இருப்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் கோபமான மனிதனாகவும் நடிக்க முடிந்தது. தோல்வியடைந்தவனாகவும் நடிக்க முடிந்தது. அதிகாரத்தின் மீது வெறுப்பு கொண்டவனாகவும் நடிக்க முடிந்தது. அதே நேரத்தில் நகைச்சுவையில் முற்றிலும் வேறு மனிதனாக மாறவும் முடிந்தது.

பரிந்தா: வன்முறைக்குள் இருக்கும் பயம்

பரிந்தாவில் நானா படேகர் நடித்த அண்ணா, அவருடைய நடிப்பு வாழ்க்கையின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று. அவன் வன்முறையைப் பயன்படுத்தத் தயங்காதவன். மற்றவர்களை அச்சுறுத்தக்கூடியவன். ஆனால் அவனுக்குள்ளேயே ஒரு அச்சம் இருக்கிறது — நெருப்பின் மீது இருக்கும் பயம். இந்தப் பயம் கதாபாத்திரத்தை வெறும் “கொடூர வில்லன்” என்ற வரம்பிலிருந்து வெளியே கொண்டு வருகிறது. அண்ணா மற்றவர்களைப் பயமுறுத்துகிறான். ஆனால் அவனுடைய சொந்த பயம் அவனைப் பின்தொடர்கிறது. அந்த முரண்பாட்டைத்தான் நானா தனது நடிப்பில் பிடித்திருக்கிறார். மேலும், அந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் ஏற்பட்ட உண்மையான தீ விபத்தில் நானா படுகாயமடைந்தார். பல வாரங்கள் மருத்துவமனையில் இருந்த அவர், பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகே பணிக்குத் திரும்பினார் என்று இயக்குநர் விது வினோத் சோப்ராவும் நானாவும் பின்னர் கூறியுள்ளனர். பரிந்தாவுக்காக அவர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். அது அவரது முதல் தேசிய விருது.

பிரஹார்: உடலைக் கட்டுப்படுத்திய நடிகன்

பிரஹார்: தி ஃபைனல் அட்டாக் (1991) நானாவின் மற்றொரு முக்கியமான முயற்சி. இந்தப் படத்தில் அவர் நடிகராக மட்டுமல்ல; இயக்குநராகவும், எழுத்தாளராகவும் இருந்தார். ராணுவ அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது சீருடை அணிந்து நடப்பது மட்டும் அல்ல. அந்த மனிதனின் ஒழுக்கம் அவனுடைய உடலுக்குள் இருக்க வேண்டும். நானா அதை வெளிப்புற அலங்காரமாகச் செய்யவில்லை. நடையின் கட்டுப்பாடு, பார்வையின் நேர்மை, வசனத்தைச் சொல்லும் முறை — இவை அனைத்திலும் அந்த மனிதனின் பயிற்சி தெரிகிறது. அதே நேரத்தில் அந்த ஒழுக்கத்தின் பின்னால் இருக்கும் மனிதனையும் அவர் மறைக்கவில்லை.

கிராந்திவீர்: கோபம் ஒரு குரலாக மாறியபோது

கிராந்திவீர் (1994) நானாவின் நடிப்பை வெகுஜன மக்களிடம் இன்னும் ஆழமாகக் கொண்டு சென்ற படம். பிரதாப் திலக் ஒரு அமைதியான கதாபாத்திரம் அல்ல. அவனைச் சுற்றியிருக்கும் சமூக அநீதிகள், ஊழல், அதிகார அரசியல், வன்முறை ஆகியவை அவனுடைய கோபத்தை உருவாக்குகின்றன. ஆனால் அந்தக் கதாபாத்திரத்தின் வலிமை வசனங்களில் மட்டும் இல்லை. நானாவின் குரல் அந்தக் கோபத்தின் உடலாக மாறுகிறது. அவர் பேசும்போது வசனத்தை “சொல்லும்” நடிகராக இல்லாமல், அதை நம்புகிற மனிதனாகத் தோன்றும்.

அதனால்தான் அந்தப் படத்தின் பல காட்சிகள் இன்றும் நடிகரின் குரலோடு நினைவில் இருக்கின்றன. இந்தப் படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். அதிகாரப்பூர்வ தேசிய திரைப்பட விருது ஆவணத்திலும் நானா படேகர் முன்னணி நடிகராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

அக்னி சாக்ஷி: மூன்றாவது தேசிய விருது

நானா படேகரின் தேசிய விருதுப் பயணத்தில் பலர் மறந்துவிடும் இன்னொரு முக்கியமான படம் அக்னி சாக்ஷி (1996). இந்தப் படத்தில் அவர் துணை நடிகராக நடித்தார். அந்த நடிப்புக்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது. 44வது தேசிய திரைப்பட விருது ஆவணத்தில் இது அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நானா படேகர் மூன்று தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்ற நடிகர்: பரிந்தா — சிறந்த துணை நடிகர் கிராந்திவீர் — சிறந்த நடிகர் அக்னி சாக்ஷி — சிறந்த துணை நடிகர் இந்த மூன்று விருதுகளும் அவரது நடிப்பு வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களைச் சேர்ந்தவை. ஒரே மாதிரியான நடிப்புக்காக அவை கிடைக்கவில்லை என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

அப் தக் சப்பன்: சத்தமில்லாத ஆபத்து

2004-ல் வெளியான அப் தக் சப்பன் நானாவை இன்னொரு கோணத்தில் காட்டியது. மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரியான சாது ஆகாஷேவின் கதாபாத்திரத்தில் அவர் அதிகமாகக் கத்த வேண்டியதில்லை. அவருடைய பார்வை போதுமானது. அதிகம் பேசாத மனிதரின் பின்னால் எவ்வளவு அனுபவம் இருக்கலாம் என்பதை நானா அந்தக் கதாபாத்திரத்தில் காட்டுகிறார். குரலைவிட அமைதி அதிகமாக வேலை செய்கிறது. பின்னாளில் நானா உண்மை மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட பல கதாபாத்திரங்களிலும் நடித்தார். தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11 படத்தில் ராகேஷ் மரியா, டாக்டர் பிரகாஷ் பாபா ஆம்தே: தி ரியல் ஹீரோ படத்தில் டாக்டர் பிரகாஷ் ஆம்தே, தி வாக்சின் வார் படத்தில் டாக்டர் பல்ராம் பார்கவா போன்ற பாத்திரங்கள் அதற்கு உதாரணங்கள்.

வெல்கம்: நானாவுக்குள் இருந்த நகைச்சுவை நடிகன்

பின்னர் வெல்கம் (2007). உதய் ஷெட்டியாக நானா வந்தபோது, பரிந்தாவின் அண்ணாவை நினைத்துப் பார்க்கவே முடியாது. அதுதான் அவரது நடிப்பின் சுவாரஸ்யம். குற்ற உலகத்துடன் தொடர்புடைய மனிதனாக இருந்தாலும், உதய் ஷெட்டி பயமுறுத்தும் வில்லனாக மட்டும் இல்லை. தன் மரியாதையைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும், சூழ்நிலைகளால் சிக்கிக் கொள்ளும், சில நேரங்களில் குழந்தைத்தனமாக நடந்து கொள்ளும் மனிதன். இங்கே நானாவின் நகைச்சுவை உணர்வு முக்கியமானதாகிறது. வசனத்திற்குப் பிறகு அவர் கொடுக்கும் பார்வை, ஒரு சிறிய உடல் அசைவு, முகத்தில் வரும் மாற்றம் — அவற்றில்தான் பல காட்சிகளின் நகைச்சுவை இருக்கிறது. தீவிரமான நடிகருக்குள் இருந்த நகைச்சுவை உணர்வை வெல்கம் வெகுஜன பார்வையாளர்களுக்கு முழுமையாகத் திறந்து காட்டியது. அந்தப் பாத்திரத்தை அவர் வெல்கம் பேக் படத்திலும் தொடர்ந்தார்.

நட்ஸம்ராட்: மேடையை விட்டு வெளியே வந்த நடிகன்

நட்ஸம்ராட் (2016) நானாவின் நாடகப் பின்னணியோடு நேரடியாக இணையும் படைப்பு. ஓய்வு பெற்ற நாடக நடிகர் கணபத்ராவ் பெல்வால்கர். வாழ்நாள் முழுவதும் மேடையில் பிற மனிதர்களாக வாழ்ந்தவன். வயதான பிறகு அவனுடைய வாழ்க்கையில் எது மீதமாகிறது? கைதட்டலா? பழைய நினைவுகளா? அல்லது வீட்டுக்குள் உருவாகும் தனிமையா? இந்தக் கதாபாத்திரத்தில் நானா தன் நாடக அனுபவத்தை மறைக்கவில்லை.

அதே சமயம் அதை வெளிப்படையாகக் காட்டவும் முயலவில்லை. வயது, நினைவுகள், பெருமை, இழப்பு — இவை மெதுவாக உடலுக்குள் சேர்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனை அவர் உருவாக்குகிறார். அதனால்தான் நட்ஸம்ராட் அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் வந்த மற்றொரு படம் என்ற அளவில் மட்டும் பார்க்க முடியாது. அவரது நாடகப் பயணமும் திரைப் பயணமும் ஒரே இடத்தில் சந்திக்கும் படைப்பு அது.

தமிழில் நானா படேகர்

தமிழ் சினிமாவில் நானா படேகர் நடித்தது குறைவு. ஆனால் அந்தப் படங்கள் அவருடைய வேறுபட்ட நடிப்பை நினைவுபடுத்துகின்றன. பொம்மலாட்டம் (2008) படத்தில் அவர் திரைப்பட இயக்குநர் ராணாவாக நடித்தார். பாரதிராஜா இயக்கிய அந்தப் படம் ஃபைனல் கட் ஆஃப் டைரக்டர் என்ற இந்தி வடிவத்துடன் தொடர்புடையது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு காலா

அதில் அவர் நடித்த ஹரிதேவ் அபயங்கர், அதாவது ஹரி தாதா, அதிகாரத்தையும் சாதித் தூய்மை அரசியலையும் தன் வசப்படுத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதி. படத்தின் காட்சியமைப்பிலேயே ரஜினிகாந்தின் கருப்பு நிறத்துக்கு எதிராக நானாவின் கதாபாத்திரம் வெள்ளை நிறத்துடன் வைக்கப்படுகிறது. அவருடைய நடிப்பின் முக்கியமான அம்சம் என்னவென்றால், ஹரி தாதாவை வெறும் “வில்லன்” ஆக மாற்றவில்லை. அவன் தன் உலகத்தைப் பற்றிய நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறான். அதனால்தான் அவனுடைய சிரிப்புக்குள்ளும் ஒரு அதிகார உணர்வு இருக்கிறது. தமிழ் வசனங்களைப் பேசும்போதுகூட நானா தன் உடல்மொழியை மாற்றிக் கொண்ட விதம் அந்தக் கதாபாத்திரத்திற்குத் தனி அடையாளம் கொடுத்தது.

நடிக்க விரும்பியும் வரவே வராத மலையாளப் படம்

இந்திய சினிமாவில் பல மொழிகளில் பணியாற்றிய நானாவுக்கு ஒரு குறை இருந்தது. மலையாளப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பேசியபோது, பல தசாப்தங்களாக எந்த மலையாள இயக்குநரும் தன்னை அணுகவில்லை என்று அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருந்தார். மொழி தன்னிடம் தடையாக இருக்காது என்றும் அவர் கூறியிருந்தார். அந்த வாய்ப்பு அவருடைய நீண்ட வாழ்க்கையில் நிகழவில்லை. ஒரு நடிகரின் திறமைக்கு எல்லைகள் இருக்க வேண்டியதில்லை. ஆனால் சினிமாவில் வாய்ப்புகளுக்கு எப்போதும் அந்த அளவிலான சுதந்திரம் இருப்பதில்லை. நானாவின் மலையாளப் பயணம் வராமல் போனது அந்த வகையில் ஒரு சிறிய இழப்பு.

நானாவின் நடிப்பில் இருந்த முக்கியமான விஷயம்

நானாவின் நடிப்பை ஒரு சொல்லில் வரையறுக்க வேண்டுமென்றால் “தீவிரம்” என்று சொல்லிவிடலாம். ஆனால் அது போதாது.

அவருடைய தீவிரம் எப்போதும் சத்தமாக இருக்காது. சில நேரங்களில் அது குரலில் இருக்கும். சில நேரங்களில் உடலில் இருக்கும். சில நேரங்களில் பார்வையில் இருக்கும். சில சமயங்களில் ஒன்றுமே இல்லாமல் — ஒரு சிறிய இடைவெளியில் இருக்கும். அதனால்தான் அவரது நடிப்பை நகலெடுப்பது எளிது என்று தோன்றியும், உண்மையில் நகலெடுப்பது கடினம்.

அவருடைய குரலைப் பின்பற்றலாம். அவருடைய வசன உச்சரிப்பைப் பின்பற்றலாம். ஆனால் ஒரு மனிதன் பேசுவதற்கு முன் அவனுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. நானா அதைச் செய்தார்.

திரைக்கு வெளியேயும் ஒரு வேறு வாழ்க்கை

நானாவின் வாழ்க்கை சினிமாவோடு மட்டும் முடிந்துவிடவில்லை.

நடிகர் மகரந்த் அனஸ்புரேவுடன் இணைந்து அவர் தொடங்கிய நாம் அறக்கட்டளை, மகாராஷ்டிராவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்காகப் பணியாற்றியது. 2015-ல் தொடங்கிய இந்த முயற்சி பின்னர் நீர்ப்பாதுகாப்பு, விவசாயிகள் நலன் உள்ளிட்ட பல பணிகளுக்கு விரிந்தது. அந்த அமைப்பின் பணிகள் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சென்றடைந்தது.

அதேபோல், 1999 கார்கில் போரின்போது அவர் இந்திய ராணுவத்துடன் சுமார் 60 நாட்கள் விரைவு நடவடிக்கைக் குழுவில் இருந்ததாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இவற்றை வைத்து அவருடைய திரை வாழ்க்கையை “வீர வாழ்க்கை” என்று மாற்றி எழுத வேண்டிய அவசியமில்லை. சினிமாவுக்கு வெளியேயும் அவர் தன் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் சமூகத்தோடு இணைத்திருந்தார் என்பதே போதுமானது.

விருதுகளைவிட நீடிப்பது கதாபாத்திரங்கள்

மூன்று தேசிய திரைப்பட விருதுகள். நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகள். பத்மஸ்ரீ. பல்வேறு மாநில மற்றும் மராத்தி திரைப்பட விருதுகள். இவை அனைத்தும் ஒரு நடிகரின் சாதனைகளைப் பதிவு செய்யும் ஆவணங்கள். ஆனால் ஒரு நடிகனின் நீடித்த மதிப்பை விருதுகளின் எண்ணிக்கையால் மட்டும் அளக்க முடியாது. பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு கதாபாத்திரத்தின் குரல் நம் காதில் கேட்கிறதா? ஒரு முகம் திடீரென்று நினைவுக்கு வருகிறதா? ஒரு வசனம் அந்த நடிகரை நினைவுபடுத்துகிறதா? ஒரு காட்சி மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறதா?

நானா படேகரின் நடிப்பில் இதற்கான பதில் இருக்கிறது. அதனால்தான் அவரை நினைவுகூரும்போது முதலில் விருதுகள் நினைவுக்கு வருவதில்லை. அண்ணா நினைவுக்கு வருகிறார். பிரதாப் திலக் நினைவுக்கு வருகிறார். உதய் ஷெட்டி நினைவுக்கு வருகிறார். கணபத்ராவ் பெல்வால்கர் நினைவுக்கு வருகிறார். ஹரி தாதா நினைவுக்கு வருகிறார். அவர்கள் அனைவரும் ஒரே நடிகரால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போதுதான் நானாவின் அளவு புரிகிறது.

ஒரு நடிகனின் நீண்ட பயணம்

நானா படேகரின் பயணத்தை “வறுமையில் பிறந்து புகழ்பெற்ற நடிகர்” என்ற பழைய வெற்றிக் கதைக்குள் அடைத்துவிடுவது அவரது கலைக்கு நியாயம் செய்யாது. அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு பகுதி. அவர் பார்த்த மனிதர்கள் இன்னொரு பகுதி. நாடகம் அவருக்கு ஒழுக்கத்தைக் கொடுத்தது. சினிமா அவருக்கு வெவ்வேறு மனிதர்களைக் கொடுத்தது. அவருடைய சொந்த அனுபவங்கள் அந்த மனிதர்களுக்குள் செல்வதற்கான ஒரு வழியைக் கொடுத்திருக்கலாம். அதனால்தான் அவரது கதாபாத்திரங்களில் வெறும் நல்லவன், கெட்டவன் என்ற இரண்டு நிறங்கள் மட்டும் இருப்பதில்லை.

அண்ணாவுக்குள் பயம் இருக்கிறது. பிரதாப் திலக்குக்குள் கோபம் இருக்கிறது. சாது ஆகாஷேவுக்குள் சோர்வு இருக்கிறது. உதய் ஷெட்டிக்குள் குழந்தைத்தனம் இருக்கிறது. கணபத்ராவ் பெல்வால்கருக்குள் இழந்த காலத்தின் வலி இருக்கிறது. ஹரி தாதாவுக்குள் அதிகாரத்தின் மீது இருக்கும் நம்பிக்கை இருக்கிறது.

அந்த மனிதர்களை அவர் நம்மிடம் அறிமுகப்படுத்திய விதம்தான் அவரது கலை. ஒரு நல்ல நடிகர் கதாபாத்திரத்தை நம்ப வைப்பார். ஒரு சிறந்த நடிகர், அந்தக் கதாபாத்திரம் திரைக்கு வெளியேயும் எங்கோ வாழ்ந்திருக்க வேண்டும் என்று நம்மை நினைக்க வைப்பார். நானா படேகர் அப்படிப்பட்ட நடிகர். திரை அணைந்த பிறகும் அவர் உருவாக்கிய மனிதர்கள் நம்மிடையே தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள்.

- இரா.இராஜா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.