தமிழ் வரலாற்று நாவல் உலகம் பெரும்பாலும் சோழ, பாண்டியப் பேரரசுகளின் பொற்காலங்களைப் பாடுவதிலேயே தேங்கிவிட்ட சூழலில், ஒரு புதிய மாற்று வரலாற்றுப் பாதையைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்திருக்கிறார் நாவலாசிரியர் தமிழ்மகன். 14-ஆம் நூற்றாண்டின் தமிழ் மண், அந்நியப் படையெடுப்புகளாலும், உள்நாட்டு அரசியல் மாற்றங்களாலும் கொந்தளித்துக் கொண்டிருந்தபோது, தமிழ் நிலத்தைக் காத்த கடைசித் தமிழ் மன்னர்களான சம்புவராயர்களின் வீரத்தையும், வாழ்வியலையும் பேசுகிறது இந்த 'படைவீடு'.
தமிழக வரலாற்றைப் படிக்கும் எவருக்கும் ஒரு பொதுவான சித்திரம் மனத்தில் எழும் - சோழர்கள் வீழ்ந்தார்கள், பாண்டியர்கள் எழுந்தார்கள், பிறகு மாலிக் கஃபூர் வந்தான், இறுதியில் விஜயநகரப் பேரரசு வந்து நாயக்கர் ஆட்சியை நிறுவியது. இந்த வரிசைக்கிரமத்தில் ஒரு பெரும் துண்டு காணாமல் போயிருக்கிறது. அந்த "நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" தான் பதினான்காம் நூற்றாண்டில் வட தமிழகத்தைத் தற்காத்து நின்ற சம்புவராயர்களின் தன்னாட்சிக் காலம். இதனை ஒரு வரலாற்றுத் தேடலாகவே தமிழ்மகன் தனது 'படைவீடு' நாவலில் நிகழ்த்தியிருக்கிறார்.
18-ஆம் நூற்றாண்டு பாளையக்காரர் ஆட்சியில் இருந்த கட்டபொம்மன் போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், 14-ஆம் நூற்றாண்டில் ஒரு பேரரசாகத் திகழ்ந்த சம்புவராயர்களுக்குத் தமிழக வரலாற்றில் வழங்கப்படவில்லை. நாயக்கர் காலத்திற்குப் பிந்தைய வரலாற்றாசிரியர்கள், விஜயநகரப் பேரரசின் வருகையை நியாயப்படுத்துவதற்காகச் சம்புவராயர்களின் ஆட்சியைத் திட்டமிட்டே சிறுமைப்படுத்தினர் அல்லது மறைத்தனர்.
தமிழ் மன்னர்களான கோனேரிராயன், காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1242-1278) போன்ற மன்னர்கள் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டப் போராடிய கதைகள் இன்னும் வரலாற்றின் அடிக்குறிப்புகளாகவே இருக்கின்றன. தமிழ்மகன் இவர்களைப் போன்றவர்களையே நாவலின் மையப்புள்ளிகளாக மாற்றி, தன்னுடைய வரலாற்றுக் கடமையைச் செய்திருக்கிறார்.
வரலாறு என்பது எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுவது. ஆனால், களத்தில் நெஞ்சுரத்துடன் நின்று போராடித் தோற்கடிக்கப்பட்டவர்களின், வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டவர்களின் பக்கம் நின்று உண்மையை மீட்டெடுப்பதுதான் ஒரு சிறந்த படைப்பாளியின் அறம். அந்த வகையில், 'படைவீடு', தமிழ் இலக்கியச் சூழலில் மிக முக்கியமான ஒரு கலகக்குரல். 14-ஆம் நூற்றாண்டின் இருண்ட காலத்தைத் துல்லியமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த நாவலை வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுகளையும், இதிலுள்ள வரலாற்று உண்மைகளையும் இங்கே விரிவாகப் பகிர்கிறேன்.
யாரிந்த சம்புவராயர்கள்?
சம்புவராயர்கள் தொடக்கத்தில் பிற்காலச் சோழர்களிடம் குறுநில மன்னர்களாகவும், படைத்தளபதிகளாகவும் பணியாற்றினர். இவர்கள் செங்கேணி என்ற குலப் பெயரைக் கொண்டவர்கள். சோழப் பேரரசு பலவீனமடைந்தபோது, இவர்கள் தங்களைத் தனித்தமிழர் அரசாக அறிவித்துக் கொண்டனர். இவர்களின் தலைநகரம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படைவீடு (ஆரணிக்கு அருகில்). இவர்கள் ஆட்சி செய்த பகுதிகள் இன்றைய திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய "இராசகம்பீர இராச்சியம்". இவர்களின் இராசகம்பீரன் மலைக்கோட்டை: படைவீட்டில் உள்ள இவர்களது கோட்டை இன்றும் ஒரு முக்கிய வரலாற்றுச் சான்றாக உள்ளது.
வட தமிழகத்தில் நிலவிய குழப்பமான சூழலில் ஒரு நிலையான ஆட்சியை வழங்கி, கலை மற்றும் கலாசாரத்தைப் பாதுகாத்த "மறைக்கப்பட்ட தமிழ் மன்னர்களான சம்புவராய மரபில் 1. இராசகம்பீர சம்புவராயர், 2. வென்றுமண்கொண்ட சம்புவராயர், 3. இராசநாராயண சம்புவராயர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
கல்கியின் பொன்னியின் செல்வன் - சம்புவராயர் வரலாற்றுப் பக்கங்களில் விழுந்த அழியாக் கறை
தமிழ் எழுத்தாளர் அமரர் கல்கி அவர்கள் ஆதித்த கரிகாலன் கொலையை எழுதுகிறேன் என்ற பெயரில் சில வரலாற்று உண்மைகளோடு கலந்து கட்டிய புனைவாகச் சம்புவராயர் பற்றி மோசமான சித்திரிப்புகள், இன்றைக்கும் ஆதித்தியனைக் கொன்ற ரவிதாசன் பஞ்சமனை விடச் சோழப் பேரரசின் மோசமான வில்லன்களாகச் சம்புவராயர்களை ஆக்கியிருக்கிறது.
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி தனது பொன்னியின் செல்வன் புனைவு நாவலில் சம்புவராயர்களை மிக முக்கியமான கதாபாத்திரங்களாகச் சித்தரித்துள்ள அதே சமயம் (நாவலில் வரும் பெரிய சம்புவராயர், சோழப் பேரரசின் கீழ் ஒரு வலிமையான குறுநில மன்னராகவும், கடம்பூரைத் தலைநகராகக் கொண்டவராகவும் காட்டப்படுகிறார்; சம்புவராயரின் மகளான மணிமேகலை ஆதித்த கரிகாலனை விரும்புகிறாள். சம்புவராயரின் மகன் கந்தமாறன்: வந்தியத்தேவனின் நண்பனாகவும், இடையில் வந்தியத்தேவனைத் தவறாகப் புரிந்து கொண்டு பகைத்துக் கொள்வதாகவும் கதை சொல்லப்படுகிறது).
சம்புவராயர்களின் கடம்பூர் மாளிகை சோழப் பேரரசுக்கு எதிரான சதிகளின் மையப்புள்ளியாகக் காட்டப்படுகிறது. (மதுராந்தகனை (உத்தம சோழன்) அரியணையில் அமர்த்த நடக்கும் ரகசியக் கூட்டங்கள் கடம்பூர் அரண்மனையிலேயே நடப்பதாகக் கதையில் வரும். நாவலின் உச்சக்கட்டமான ஆதித்த கரிகாலனின் கொலையும் கடம்பூர் மாளிகையில்தான் சம்பவிக்கிறது). வரலாற்றுப்படி ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டது உண்மை, ஆனால் அது சம்புவராயர் மாளிகையில்தான் நடந்ததா என்பதில் வரலாற்று அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன (உடையார்குடி கல்வெட்டு வேறு ஒரு உண்மைச் சித்திரத்தைத் தருகிறது).
காலவரிசையில் (Chronology): பொன்னியின் செல்வன் காலத்துச் சம்புவராயர்கள் (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) வேறு, சுதந்திரமாக ஆட்சி செய்த சம்புவராயர்கள் (கி.பி. 13, 14-ஆம் நூற்றாண்டு) வேறு. வாசிப்பவர்கள் இருவரையும் குழப்பிக்கொள்ளாமல் சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
சம்புவராயர் வீர வரலாறு - கங்காதேவியின் சாட்சியம்
விஜயநகர இளவரசன் குமார கம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய சமஸ்கிருத நூல் 'மதுரா விஜயம்'. இது சம்புவராயர்களின் வீழ்ச்சியைப் பதிவு செய்த மிக முக்கியமான நூல். இதில், சம்புவராய மன்னர் (இராசநாராயணன்) தனது கடமையிலிருந்து தவறியதாகவும், அதனால் தெய்வீக ஆணைப்படி குமார கம்பணன் அவரை வென்றதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு 'வெற்றிக் காவியம்' என்பதால் இதில் சில சார்பு நிலைகள் உள்ளன. ஆனாலும் இதிலிருந்து...
உண்மைச் செய்திகள்:
சம்புவராயர்கள் வட தமிழகத்தில் மிக வலிமையான கோட்டைகளை (குறிப்பாக இராசகம்பீரன் மலைக்கோட்டை) வைத்திருந்தனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. இவர்களது வீரம் மற்றும் போர்க்கலை சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
தவறான/சார்பு நிலைகள்:
கங்காதேவி தனது கணவனின் வெற்றியைப் பெரிதுபடுத்த, சம்புவராய மன்னரை (இராசநாராயணன்) ஒரு பலவீனமானவராகவும், போரில் தோற்றுச் சரணடைந்தவராகவும் சித்தரிக்கிறார். ஆனால், வரலாற்று ரீதியாகப் பார்த்தால், சம்புவராயர்கள் அத்தனை எளிதில் அடிபணியவில்லை; மிகக் கடுமையான போருக்குப் பின்னரே வீழ்ந்தனர். இது ஒரு 'புகழ்ச்சி நூல்' என்பதால் தோல்வியடைந்த மன்னரைப் பற்றிக் குறைத்து மதிப்பிடுவது இயல்பாக உள்ளது.
குமார கம்பணன், இராசநாராயணன் இருவருக்குமான போரில் சம்புவராய மன்னன் வீரமாகப் போரிட்டாலும், இறுதியில் விஜயநகரப் படைகளிடம் தோற்றதாகக் கூறப்படுகிறது. ஒரு வெற்றிக் காவியம் என்பதால் இதில் சம்புவராயர்கள் சற்றுத் தாழ்வாகச் சித்தரிக்கப்பட்டாலும், அவர்களின் கோட்டை வலிமையைக் கங்காதேவியே வியந்து பாடியுள்ளார்.
தமிழ் நிலத்தின் நுழைவாயிலும் தற்காப்பு அரணும்
பதினான்காம் நூற்றாண்டு என்பது தமிழகத்திற்கு ஒரு சோதனைக்காலம். வடக்கிலிருந்து சுல்தானியப் படைகளும், பின்னர் விஜயநகரப் படைகளும் தமிழகத்திற்குள் நுழைய முற்பட்டபோது, அவர்களுக்குப் பெரும் தடையாக இருந்தது படைவீடு எனும் ராணுவத் தலைமையகம். நுழைவாயில் போர்: காஞ்சிபுரம் மற்றும் விரிஞ்சிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, இன்றைய வேலூர், திருவண்ணாமலை, காஞ்சி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு வலுவான 'படைவீடு' பேரரசைச் சம்புவராயர்கள் நிலைநிறுத்தினர். தமிழ்மொழிக்கும், பண்பாட்டுக்கும் சிறிதும் ஒவ்வாத அந்நியப் படையெடுப்புகள் நிலவிய ஒரு கொந்தளிப்பான சூழலில், சுமார் அரை நூற்றாண்டு காலம் ஒரு தமிழ் அரசு வலுவாக, திடமாக இருந்தது என்பது சாதாரண சாதனை அல்ல. இதைத் தமிழ்மகன் மிக நுணுக்கமான கல்வெட்டுத் தரவுகள் மூலம் நாவலில் நிறுவுகிறார்.
பிற வரலாற்று நாவல்களிலிருந்து படைவீடு வேறுபடும் விதம்
பொதுவாகத் தமிழ் வரலாற்று நாவல்கள் 'மதுரா விஜயம்' போன்ற வடமொழி நூல்களை அடிப்படையாகக் கொண்டு, குமார கம்பணனின் படையெடுப்பை ஒரு மீட்பு நடவடிக்கையாகவே சித்தரித்து வந்துள்ளன. ஆனால், தமிழ்மகன் அந்தப் புனைவுத் தன்மையை உடைக்கிறார். வரலாற்று நூலாசிரியர்களால் 'இருட்டடிப்பு' செய்யப்பட்ட சம்புவராயர்களின் ஆட்சிக்காலத்தை முன்னிறுத்துகிறார். யதார்த்தம்: அரசர்களின் புகழ்பாடுவது மட்டுமே நோக்கமாக இல்லாமல், அக்காலத் தமிழகத்தின் யதார்த்த நிலையை, மக்களின் வலியை நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.
மதுரா விஜயம் - புனைவும் உண்மையும்
வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் நாம் படித்த கங்காதேவி எழுதிய 'மதுரா விஜயம்' என்பது குமார கம்பணனின் படையெடுப்பை ஒரு புனிதப் போராக, மீட்புப் பயணமாகச் சித்தரிக்கும். ஆனால், தமிழ்மகன் அந்தப் பிம்பத்தைக் கவனமாக உடைக்கிறார். அந்தப் பிம்பத்தின் பின்னுள்ள அரசியலைத் தோலுரிக்கிறது. சம்புவராயரின் எதிர்ப்பு: கம்பண்ணன் முதலில் போர் தொடுத்ததே சம்புவராயர்களுக்கு எதிராகத்தான். இராஜகம்பீரம் மலைக்கோட்டையில் வைத்துச் சம்புவராய மன்னனை கம்பண்ணன் எதிர்கொண்ட போர் முறை, தமிழர்களின் கோட்டைப் பாதுகாப்பு நுட்பங்கள் ஆகியவற்றை ஆசிரியர் விவரிக்கும் விதம் அற்புதம்.
"கம்பண்ணனின் வாள் சுல்தான்களை மட்டும் வீழ்த்தவில்லை, அது தமிழ் நிலத்தின் தன்னாட்சியையும் சேர்த்தே வீழ்த்தியது" என்பதை ஆசிரியர் ஆதாரங்களோடு முன்வைக்கிறார். சம்புவராயர்கள் சுல்தான்களை எதிர்க்கவில்லை என்பது பொய் என்பதை, அவர்கள் சுல்தான்களோடு போரிட்ட கல்வெட்டுச் சான்றுகள் நாவலில் இடம்பெறுவதன் மூலம் நாம் உணர முடிகிறது. தமிழ் நிலத்தின் கடைசித் தமிழ் மன்னனாக, தன் மண்ணைக் காக்க ஒருவன் எத்தகைய வீரத்துடன் போரிட்டிருப்பான் என்பதை நாவலின் பக்கங்கள் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்துள்ளன.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய உண்மைத் தகவல்களைத் தரும் மூல உடையார்குடிக் கல்வெட்டுகளைப் புனைவு கலந்து, சுய அரசியல் கழித்தல் நீட்டல் நோக்கோடு பொன்னியின் செல்வன், மற்றும் பறம்பு மலை பாரியின் சங்க இலக்கியம் கூறும் உண்மை வரலாற்றுச் செய்திகளை மறைத்து, வேள்பாரி எனப் போலிப் புனைவு வரலாற்றை எழுதி அதை உண்மை வரலாறாக்க முயற்சி செய்யாமல், அந்தந்தப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுத் தரவுகளை நாவலின் பக்கங்களுக்குள் கொண்டு வந்திருப்பது இதன் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. ஒரு வரலாற்று ஆவணமாகவும் உருவெடுக்கிறது. குமார கம்பணனின் படையெடுப்பு என்பது சமய மீட்பு அல்ல, அது ஒரு நிலப்பரப்பைக் கைப்பற்றும் அரசியல் ஆதிக்கம் என்பதை வரலாற்று ரீதியாக நாவல் உறுதிப்படுத்துகிறது.
"படைவீடு நாவல் வெறும் கதையல்ல; அது இழந்த தமிழ் அடையாளத்தைத் தேடும் பயணம்". கம்பண்ணனின் வருகையை வெற்றியாகக் கொண்டாடிய தமிழ்நாடு, தமிழர் வரலாற்றின் மறுபக்கத்தை, அதாவது தமிழ் நிலத்தின் வீழ்ச்சியைத் துணிச்சலாகப் பேசுகிறார் தமிழ்மகன் அவர்கள்.
ஆசிரியரின் பேருழைப்பும் களஆய்வும்
ஒரு வரலாற்று நாவலை எழுதுவது என்பது வெறும் கற்பனை கலந்த கதை சொல்லல் அல்ல; அது கால இயந்திரத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் ஒரு தவம். இதற்காகத் தமிழ்மகன் மேற்கொண்ட பேருழைப்பு பிரமிக்கத்தக்கது. விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பி, சம்புவராயர்களின் கோட்டையாகத் திகழ்ந்த படைவீடு, இராஜகம்பீரம் (படைவீடு மலை), காஞ்சிபுரம் என நாவலின் களம் நகரும் இடங்களுக்கெல்லாம் ஆசிரியர் நேரடியாகச் சென்று பார்த்து, கதைக்களத்தை நெஞ்சில் வாங்கி நூலினைப் படைத்துள்ளார்.
எழுத்து நடை எனும் காலயந்திரப் பயணம்
தமிழ்மகனின் எழுத்து நடை ஒரு மந்திரக்கோலைப் போன்றது. 14-ஆம் நூற்றாண்டின் தமிழ் எப்படியிருக்கும் என்பதை இன்றைய வாசகர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாகவும், அதே சமயம் அந்தக்காலத் தொனி மாறாமலும் கையாண்டிருக்கிறார். ஹம்பியின் சிதைந்த மண்டபங்கள், படைவீடு கோட்டையின் இடிபாடுகள், இராஜகம்பீரம் மலையின் உச்சி என ஒவ்வொரு இடத்தையும் அவர் விவரிக்கும்போது, நாமே அந்த இடத்திற்குச் சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. கல்வெட்டுத் தமிழில் உள்ள சொற்களை ஆங்காங்கே உரையாடல்களில் பயன்படுத்தி, அந்தக் காலக்கட்ட தமிழின் வாசனையை நாவல் முழுக்க வீசச் செய்திருக்கிறார்.
கல்வெட்டுகள் பேசும் சம்புவராயர் வரலாறு
இந்த நாவலின் ஆகச்சிறந்த பலமே, ஆசிரியர் வெறும் வாய்மொழிக் கதைகளை நம்பாமல், கல்வெட்டுத் தரவுகளை (Epigraphical Evidences) அடிப்படையாகக் கொண்டு கதையை நகர்த்தியதுதான். தன்னாட்சி அதிகாரம்: 'சகலலோக சக்கரவர்த்தி' என்று தங்களை அழைத்துக்கொண்ட சம்புவராயர்கள், சோழர் வீழ்ச்சிக்குப் பிறகு சுமார் 150 ஆண்டுகள் வடதமிழகத்தைத் தன்னாட்சியுடன் ஆண்டனர்.
கல்வெட்டுச் சான்று: குறிப்பாக, ஜம்பை மற்றும் விரிஞ்சிபுரம் கல்வெட்டுகள் மூலம் அவர்கள் ஆற்றிய மக்கள் பணி, நீர்நிலை மேலாண்மை மற்றும் வரிவிலக்கு போன்ற செய்திகளை ஆசிரியர் நாவலில் அழகாகக் கோர்த்திருப்பார். அஞ்சினான் புகலிடம்: படைவீடு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், போர்க்காலங்களில் சாமானிய மக்களுக்கு அவர்கள் வழங்கிய பாதுகாப்பை (Asylum) உறுதிப்படுத்துகின்றன. இதை ஆசிரியர் வெறும் தகவலாகச் சொல்லாமல், ஒரு போர்ச்சூழலில் மக்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்ற உணர்ச்சிகரமான காட்சியின் வழியே விவரிக்கிறார்.
சம்புவராயர்கள் தங்களைச் சிற்றரசர்களாகக் கருதவில்லை. சகலலோக சக்கரவர்த்தி: குலசேகரச் சம்புவராயர், வென்றுமண் கொண்ட சம்புவராயர் போன்றோர் தங்களைச் 'சக்கரவர்த்தி' என்று கல்வெட்டுகளில் அழைத்துக்கொண்டனர்.
நாணய வெளியீடு:
ஒரு சுதந்திர அரசு என்பதற்கான ஆகச்சிறந்த சான்று அவர்கள் வெளியிட்ட நாணயங்கள். 'படைவீடு' நாவலில் இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்த விதம், வணிக வரி முறைகள் ஆகியவை தரவுகளுடன் விவரிக்கப்படுகின்றன.
விரிஞ்சிபுரம் கல்வெட்டு: அந்தப் பகுதிகளில் உள்ள கல்வெட்டுகள் அவர்கள் செய்த நிலச் சீர்திருத்தங்களையும், அந்தணர்களுக்கு வழங்கிய கொடைகளையும் மட்டுமல்லாமல், ஒரு தமிழ் அரசு அந்நிய ஆதிக்கத்திற்குப் பணிய மறுத்த வீரத்தையும் பறைசாற்றுகின்றன.
சம்புவராயர்களின் வீரம் மற்றும் ஆட்சித்திறம்
சம்புவராயர்கள் வெறும் சிற்றரசர்கள் அல்ல; அவர்கள் தெலுங்கு மற்றும் சுல்தானியப் படைகளைத் தமிழ் மண்ணிற்குள் நுழைய விடாமல் தடுத்த அரண்கள். போர்க்காலங்களில் சாமானிய மக்களுக்கு அடைக்கலம் தந்த 'அஞ்சினான் புகலிடம்' போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி, மக்களின் காவலர்களாக அவர்கள் விளங்கியதை நாவல் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
கலை மற்றும் சமயப் பொறை
சம்புவராயர்கள் போர்க்கலையில் மட்டுமல்ல, நுண்கலைகளிலும் ஆர்வம் கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர். கலை ஆதரவு: தெருக்கூத்து கலைஞர்கள்: இவர்களது காலத்தில் வாழ்ந்த இரட்டைப் புலவர்களின் பாடல்கள், அரசவைச் சூழலைத் தாண்டி சாமானிய மக்களின் வாழ்வியலையும் எப்படிப் பிரதிபலித்தன என்பதை ஆசிரியர் இயல்பான தமிழ் நடையில் விவரித்துள்ளார்.
சம்புவராயர்கள் தீவிர சிவபக்தர்களாக இருந்தாலும், அவர்கள் சமண மதத்திற்குச் செய்த தொண்டுகளை ஆசிரியர் மறக்காமல் பதிவு செய்துள்ளார். 'திருமலை சமணத் தளம்' சார்ந்த கல்வெட்டுகளை அவர் நாவலில் கையாண்ட விதம், அக்காலத் தமிழகத்தின் மத நல்லிணக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அத்துடன், தெருக்கூத்து கலைஞர்களை அவர்கள் ஆதரித்தது, கலைகள் வழியாக வீரத்தை விதைத்தது எனப் பல பரிமாணங்களை நாவல் தொடுகிறது. சைவம், வைணவம் தாண்டி, அருகன் தத்துவமான சமண மதத்திற்கும் அவர்கள் அளித்த பேராதரவு, அவர்களின் பரந்த மனப்பான்மைக்குச் சான்று. கல்வெட்டுகளின் துணை கொண்டு இந்தச் சமய நல்லிணக்கத்தைச் சுட்டிக்காட்டியிருப்பது ஆசிரியரின் தனிச்சிறப்பு.
இந்த நாவலை வாசிக்கும்போது, வரலாற்று ஆய்வாளனாக, ஒரு வாசகனாக, எனக்குள் எழுந்த கேள்வி இதுதான்: "நம் மண்ணை ஆண்ட, நம் மொழியைப் போற்றிய ஒரு மாபெரும் பேரரசைப் பற்றித் தெரிந்து கொள்ள நமக்கு ஏன் இத்தனை ஆண்டுகள் ஆனது?" தமிழ்மகன் அவர்கள் வறண்ட வரலாற்றுத் தகவல்களைத் தரவில்லை; மாறாக, அந்தக் கல்வெட்டுகளுக்கு உயிர் கொடுத்து உலவ விட்டிருக்கிறார்.
மீண்டெழும் சம்புவராயர் வரலாறு - அகழ்வாராய்ச்சி தொல்லியல் சான்றுகள்
வரலாறு ஆசிரியர்களின் சுய விருப்பு வெறுப்பு காரணங்களினாலும், மோசமான வரலாற்றுப் புனைவு போலி பெருமித இலக்கியப் பதிவுகளினாலும் தமிழ்நாட்டு வரலாற்றுப் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்த சம்புவராயர் வரலாறு அறிவியல் துணையோடு மீண்டெழுந்து வந்திருக்கிறது. சம்புவராயர்களின் தலைநகரான படைவீடு (இன்றைய திருவண்ணாமலை மாவட்டம்), அவர்களின் ஆட்சி நிர்வாகத் திறமைக்குச் சான்றாக உள்ளது. : தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில், படைவீட்டில் செங்கற்களால் ஆன அரண்மனை அடித்தளங்கள், சுடுமண் குழாய் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் விநியோக முறை மற்றும் சீன நாட்டுப் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது அவர்களின் சர்வதேச வணிகத் தொடர்பைக் காட்டுகிறது. படைவீடு அகழ்வாய்வு சம்புவராயர்களை ஒரு "நகர நாகரிகம்" கொண்ட மன்னர்களாக நிலைநிறுத்துகிறது. சுடுமண் சிலைகள்: அங்கு கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிலைகள் மக்களின் வாழ்வியலையும், கலை ஆர்வத்தையும் காட்டுகின்றன.
போர் ஆயுதங்கள்: இரும்பினால் ஆன அம்பு முனைகள் மற்றும் வாள் துண்டுகள் அவர்கள் ஒரு பெரும் போர் வலிமை கொண்டவர்களாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. தனி சுதந்திர அரசுக்குரிய பொருளாதாரப் பலத்தைக் குறிக்கும் "வீர சம்பன் குளிகை" என்ற நாணயங்கள் கிடைத்திருக்கின்றன.
மறைக்கப்பட்ட வரலாறும், தமிழ்நிலத்தின் அங்கீகாரமும்
நாயக்கர் மற்றும் விஜயநகர ஆட்சிக் காலத்தில் இவர்களது வரலாறு முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. தமிழ் மன்னர்களான சம்புவராயர்களின் நிர்வாக முறைகளும், வரலாற்றுப் பதிவுகளும் மெல்ல மெல்லப் புறக்கணிக்கப்பட்டன. இருப்பினும், சம்புவராயர்கள் வெறும் குறுநில மன்னர்கள் அல்ல; அவர்கள் அந்நியப் படையெடுப்புகளின் போது தமிழ் கலாசாரத்தையும், ஆன்மீகத்தையும் பாதுகாத்த அரண்கள். காஞ்சிபுரம் முதல் கடலூர் வரை அவர்கள் செதுக்கிய கல்வெட்டுகள் இன்றும் "நாங்கள் ஆண்ட தமிழ் நிலம் இது" என்று உரக்கச் சொல்லும் இவர்களின் உண்மை வரலாற்றை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விதமாக 1989-இல் தமிழக அரசு "திருவண்ணாமலை - சம்புவராயர் மாவட்டம்" என்று பெயரிட்டது.
தமிழ் நிலத்தின் கடைசித் தன்னாட்சி: 'படைவீட்டின்' - ஒரு வரலாற்றுத் தரிசனம்
'படைவீடு' நாவல், தமிழ் வரலாற்று இலக்கியத்தில் ஒரு முக்கியமான மைல்கல். வரலாற்று ஆசிரியர்கள் வேண்டுமென்றே அல்லது கவனக்குறைவாகத் தவிர்த்த பக்கங்களை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் தமிழ்மகன். இது ஒரு வீர வரலாறு மட்டுமல்ல, தமிழ் நிலத்தின் கடைசித் தமிழ் மன்னர்களின் கண்ணீரும் ரத்தமும் கலந்த ஒரு காவியம் இது. நாவல் மட்டுமல்ல; அது நாம் இழந்த ஒரு வரலாற்றுப் பக்கத்தின் மீட்சி. இதுவரை வெளிவந்த வரலாற்று நாவல்கள் எல்லாம் 'கற்பனை' கலந்த வரலாற்றைச் சொன்னது என்றால், 'படைவீடு' என்பது 'வரலாற்றுத் தரவுகள்' கலந்த ஒரு அற்புதமான புனைவாக மலர்ந்திருக்கிறது. தமிழ் நிலத்தின் கடைசித் தமிழ் மன்னர்களின் வீரத்தை அறிய விரும்பும் ஒவ்வொரு தமிழனும் வாசிக்க வேண்டிய பொக்கிஷம் இது.
'படைவீடு' என்பது ஒரு நாவல் என்பதைத் தாண்டி, தமிழர்களின் தன்னாட்சி அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டும் ஒரு ஆவணம்.
- இரா.இராஜா