நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங் களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் – அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த ஓராண்டாக வந்ததன் தொடர்ச்சியாக, இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

அ.சா.31 : கருப்பன் (குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றுதல் மகஜர் ஆகியவற்றுக்கான சாட்சி) (இவர் பிறழ்சாட்சியாகக் கருதப்பட்டு பின்னர் அரசுத் தரப்பு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்) முதல் விசாரணை :

நான் கீழவளவு கிராமத்தில் வசிக்கிறேன். எனக்கு விவசாயத் தொழில். இந்த வழக்கு சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது. எதுவும் நான் பார்க்கவில்லை. போலிசார் என்னை விசாரிக்கவில்லை. (இத்தருணத்தில் இந்த சாட்சியை பிறழ்சாட்சியாகக் கருதி குறுக்கு விசாரணை செய்ய அரசு வழக்குரைஞர் அனுமதி கோர அனுமதி வழங்கப்பட்டது.)

அரசுத் தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை :

12.7.94 காலை 10.30 மணியளவில் கீழையூருக்கு வட மேற்கே உள்ள சுந்தரி அம்மன் கோயில் பக்கம் நானும் வாழமலை என்பவரும் இருந்தபோது ஆண்டிச்சாமி, 7ஆவது எதிரி, ஆண்டிக்காளை, பாஸ்கரன், அசோகன் ஆகியோரை மதுரை டி.எஸ்.பி. கைது செய்ததாகவும், அப்போது அவர் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகவும், அதில் சம்பவத்திற்கு பயன்படுத்திய அறுவாளை பஞ்சபாண்டவர் மலை அடிவாரம் பக்கமுள்ள ஆலமரத்தடியில் மறைத்து வைத்திருப்பதாகவும் அதை எடுத்து தருவதாக சொன்னதாகவும், போலிசார் விசாரணையில் கூறியுள்ளார் என்றால் சரியல்ல.

அ.சா.32 : வாழமலை (குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றுதல் மகஜர் ஆகியவற்றுக்கான சாட்சி)

(இவர் பிறழ்சாட்சியாகக் கருதப்பட்டு, பின்னர் அரசுத் தரப்பு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்)

முதல் விசாரணை :

என் சொந்த ஊர் கீழவளவு. இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. போலிசார் என்னை விசாரிக்கவில்லை. (இத்தருணத்தில் இந்த சாட்சியை பிறழ்சாட்சியாகக் கருதி குறுக்கு விசாரணை செய்ய, அரசு வழக்குரைஞர் அனுமதி கோர அனுமதி வழங்கப்பட்டது.)

அரசு தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை : அனுமதியின் பேரில்

12.7.94ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கீழையூர் வடமேற்கே உள்ள சுந்தரி அம்மன் கோவில் பக்கம் நானும் கருப்பனும் இருந்தபோது மேலவளவை சேர்ந்த எதிரிகள் ஆண்டிச்சாமி, பாஸ்கரன், அசோகன் ஆகியோரை மதுரை மாவட்ட குற்றப்பிரிவைச் சேர்ந்த டி.எஸ்.பி. கைது செய்ததாகவும், அப்போது மேற்கண்ட 3 பேர்களும் தனித்தனியாக ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகவும், அவர்கள் இவ்வழக்கு சம்பவத்தின் போது உபயோகப்படுத்திய ஆயுதங்களை கூட்டிக்கொண்டு போனால் எடுத்து தருவதாக சொன்னதாகவும் அந்த வாக்குமூலங்களில் தானும் கருப்பனும் சாட்சி கையெழுத்துகள் போட்டதாகவும், பிற்பாடு அந்த ஒப்புதல் வாக்குமூலங்களின் படி, அவர்கள் டி.எஸ்.பியை அழைத்து சென்று கீழவளவு பக்கமுள்ள பஞ்சபாண்டவர் மலை அடிவாரத்தில் ஆலமரத்துக்கு பக்கத்தில் உள்ள பாறைக்குள் இருந்த கத்தி ஆலமரத்திற்கு புதருக்குள் இருந்த பாறை இடுக்கிலிருந்த அருவாள் ஆகியவற்றை எடுத்து ஆஜர் செய்ததாகவும், அவைகளை மேற்படி டி.எஸ்.பி. அத்தாட்சி தயாரித்து கைப்பற்றிக் கொண்டதாகவும், அந்த அத்தாட்சிகளில் தானும் கருப்பனும் சாட்சி கையெழுத்தும் போட்டு உள்ளதாகவும் போலிசார் விசாரணையில் நான் கூறியுள்ளேன் என்றால் சரியல்ல.

அ.சா.35 : பி. ஆண்டி (குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றுதல் மகஜர் ஆகியவற்றுக்கான சாட்சி) முதல் விசாரணை :

நான், தெற்கு தெருவில் கக்கன் காலனியில் குடியிருக்கிறேன். எங்கள் ஊர் காளமேக பெருமாள் எனக்கு தெரியும். சுமார் 3 வருடங்களுக்கு முன்பு நானும் காளமேக பெருமாளும் சுக்காம்பட்டியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தோம். அப்போது டி.எஸ்.பி. கூப்பிட்டதின் பேரில் மேலூர் காவல் நிலையம் போனோம். காவல் நிலையத்தில் எதிரிகள் கணேசன், ஜெயராமன், கதிர்வேல் ஆகியோர் இருந்தார்கள். அவர்களை டி.எஸ்.பி. விசாரித்தார்கள். அவர்கள் சொன்னதை டி.எஸ்.பி. எழுதிக் கொண்டார். அதில் நான் காளமேக பெருமாளும் சாட்சி கையொப்பம் செய்தோம். எதிரி கதிர்வேல் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதி அச.சா.ஆ.66..... எதிரி கணேசன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதி அ.சா.ஆ.68. அதன் பிறகு மலம்பட்டி பாலத்திற்கு அருகில் உள்ள இடத்தில் கதிர்வேல் எடுத்துக் கொடுத்த கத்தியை டி.எஸ்.பி. கைப்பற்றி மகஜர் தயாரித்தார். அந்த மகஜர் அ.சா.ஆ.69. அதில் நானும் காளமேகபெருமாளும் சாட்சி கையொப்பம் செய்தோம். எதிரி ஜெயராமன் ஒரு கத்தியை எடுத்து டி.எஸ்.பி.யிடம் ஆஜர் செய்தார். அதையும் மகஜர் தயாரித்து டி.எஸ்.பி. கைப்பற்றினார். அந்த மகஜ ர் அ.சா.ஆ.70. அதில் நானும் காளமேகபெருமாளும் சாட்சி கையொப்பம் செய்தோம். எதிரி கண்ணனும் ஒரு அரிவாளை எடுத்து டி.எஸ்.பி.யிடம் ஆஜர் செய்தார். அதையும் மகஜர் தயாரித்து டி.எஸ்.பி. கைப்பற்றினார். அந்த மகசர் அ.சா.ஆ.71. அதில் நானும் காளமேகபெருமாளும் சாட்சி கையொப்பம் செய்தோம். டி.எஸ்.பி. என்னை இது சம்பந்தமாக விசாரித்தார்.

1 முதல் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

 என்னை டி.எஸ்.பி. விசாரித்த போது மதியம் 2.00 மணி இருக்கும். அப்போது தான் மேற்படி கையெழுத்துகளை நான் போட்டேன். மேற்படி எதிரிகள் சொல்லச் சொல்ல டி.எஸ்.பி. கைப்பட எழுதிக் கொண்டார். ஒப்புதல் வாக்குமூலம் எழுதிய பிறகு டி.எஸ்.பி. கேட்டுக் கொண்டதன் பேரில் கையெழுத்து போட்டோம். பிற்பாடு டி.எஸ்.பி. 3 மகஜர்களையும் மேலூர் காவல் நிலையத்தில் எழுதினார். அந்த மகஜர்களிலும் நான் கையெழுத்து போட்டேன். மொத்தம் 6 கையெழுத்துகள் மேலூர் காவல் நிலையத்தில் போட்டேன். அதற்கு முன்பும் பின்பும் எதிரிகள் கண்ணன், ஜெயராமன், கதிர்வேல் ஆகியோரைப் பார்க்கவில்லை. தற்போதும் அவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியாது. இறந்தவர்களை எனக்கு உறவினர்கள் என்பதால் போலிசார் கேட்டுக் கொண்டதன் பேரில் கையெழுத்து போட்டதாக பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல.

(தலித் முரசு ஜூன் 2011 இதழில் வெளியானது)

Pin It