இந்திய நீதி பரிபாலனத்தின் அடிப்படை அம்சமே “ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது” என்பதுதான். இதை அக்கறையுடன் கடைபிடிப்பது இந்திய நீதிமன்றங்களின் தலையாய கடமையாகும். இந்த அடிப்படையில்தான், மரண தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானப்பிரகாசம், மாதையா மற்றும் பிலவேந்திரன் ஆகியோருக்காக வழக்காடும் வழக்கறிஞர் காலின் கொன்சால்வஸ் உச்சநீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனுவை தாக்கல் செய்தார். அதை கடந்த 3.1.14 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கையாண்ட விதம் இந்திய நீதிபாபாலனத்தின் அடிப்படை அலகையே அசைத்துப் போடுவதாகவும், கேலிக்கூத்தாக்குவதாகவும் உள்ளது.

வழக்கறிஞர் இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் விசாரணையின் போது பல அடிப்படை உண்மைகளும், ஆதாரங்களும் மறைக்கப்பட்டிருந்தன என்றும், அவை தற்போது தெளிவாக ஐயத்திற்கிடமின்றி வெளிப்பட்டுள்ளன என்றும், மறைக்கப்பட்ட பல உண்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் நடத்தப்பட்ட வழக்கு விசாரணை முழுமையானதல்ல என்பதால், இந்த வழக்கில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு மறு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்படிப்பட்ட வழக்குகளில் தாராளமாக மறுவிசாரணைக்கு உத்தரவிட எவ்விதத் தடையும் இல்லை. ஏனெனில் இதுபோன்ற பல வழக்குகளில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஒரு வழக்கில் வழக்கு விசாரணையின் போது அவ்வழக்கின் முழு பரிமாணங்களும் வெளிப்படும் வாய்ப்பு இல்லை. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் முக்கியமான குற்றவியல் வழக்குகளில் பல்வேறு காரணிகளால் உண்மைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெளிப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் அது முற்றிலும் சாத்தியமாகாது. அவ்வழக்குகளை விசாரணை செய்துவரும் அமைப்புகள் பல்வேறு நெருக்கடிகளுக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் உள்ளாகின்றன. நமது நாட்டில் விசாரணை செய்யும் அமைப்புகள், அது மத்திய குற்றப் புலனாய்வுத் துறையாகவே இருந்தாலும், அனைத்தும் அரசியலில் அதிகாரம் செலுத்துவோரின் கையில் இருக்கின்ற ஒரு துருப்புச்சீட்டாகவே இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட பின்புலத்தில், பல நூறு வழக்குகளில் புதிய ஆதாரங்கள், மறைக்கப்பட்ட பல அரிய விவரங்கள், சாட்சிகள், சான்றுப் பொருட்கள், சான்றாவணங்கள் போன்றவை காலம் கடந்து வெளிவருவதென்பது வியப்பல்ல. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்னும் அவிழ்க்கப்படாத மர்மங்கள் பல உள்ளன. விசாரணை அமைப்பான சி.பி.ஐ. ஆரம்பம் முதலே எவ்வளவு குளறுபடிகளை இதில் செய்துள்ளது என்பது மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அதேபோல குசராத்தில் நடைபெற்ற பல்வேறு கொலை மற்றும் போலி மோதல் சாவுகள் குறித்த வழக்குகளில் பல புதிய ஆதாரங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. புதிய ஆதாரங்கள் வரக்கூடாது; அவற்றை புதிதாக கருத்தில் கொள்ள முடியாது என்று சொன்னால், இந்நாட்டில் பல வழக்குகளில் நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடும். பல நிரபராதிகள் சட்டப்புறம்பான முறையில் தொடர்ந்து தண்டனை அனுபவிக்கவும் பல குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கும் வழி ஏற்பட்டுவிடும்.

ஒரு குற்றவியல் வழக்கைப் பொருத்தவரை தண்டனை கொடுக்கப்பட்டு அந்தத் தண்டனை உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்ட பிறகு தகுந்த காரணங்கள் இருப்பின் அதை மீண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று எந்த நியதியும் இல்லை; எவ்வித சட்டமும் இல்லை; அப்படி இருக்கவும் முடியாது. ஏனெனில், அப்படி ஒரு நியதியோ சட்டமோ இருந்தால் அது இந்திய நாட்டின் நீதிபாபாலன முறைக்கு எதிரானதாகவும், முரணானதாகவும்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறை சட்டத்தை இயங்கியல் தன்மை கொண்டதாக அன்றி நிலைத்த தன்மையுடைதாகவே மாற்றிவிடும். சட்டம் என்பது இயங்கியல் தன்மை கொண்டதாக இருக்கின்ற போதுதான் புதிய புதிய சிந்தனைகள், நாகரீகமான மாற்றங்கள், புதிய அணுகுமுறைகள் போன்றவை சாத்தியமாகின்றன. இயங்கியல் தன்மை காரணமாகத் தான் நமது சட்டங்கள் பல மாறுதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. நிலைத்துப்போனதாக இருந்தால் இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகி இருக்காது.

விவாதிக்கப்படும் இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சாதாரண தண்டனை அனுபவிப்பவர்கள் இல்லை. மாறாக, மரண தண்டனை வழங்கப்பட்டு அது உறுதி செய்யப்பட்டு அதன் பிறகு குடியரசுத் தலைவர் முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மனிதர்கள். மரண தண்டனை வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதமே மரண தண்டனையைவிட கொடூரமான தண்டனையை அனுபவித்திருப்பதற்கு சமம் என்பதாலும் அது நியாயமானதல்ல என்பதாலும் தற்காலிகமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நபர்கள் அவர்கள். இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள், புதிய உண்மைகள், புதிய சாட்சிகள் இவற்றின் அடிப்படையில் இவ்வழக்கை மறு விசாரணை செய்வதுதான் இந்த வழக்கின் உண்மைத் தன்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். அதன் பிறகு அவற்றை சீர்தூக்கிப் பார்த்த பிறகுதான் இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்க வழி பிறக்கும். அதற்குப் பதிலாக, மறுவிசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று ஒரேயடியாக வழக்கைத் தள்ளுபடி செய்வது இயற்கை நியதிக்கும் இயற்கை நீதிக்கும் புறம்பாக அப்பாவிகளைத் தண்டிப்பதற்கு இணையாகும். ஏற்கனவே அப்சல் குரு மற்றும் அஜ்மல்கான் போன்றவர்களின் வழக்குகளில் அவசரகதியில் செயல்பட்டு அவர்களை தூக்கிலிட்டு அநியாயம் செய்துள்ள நிலையில் மீண்டும் சரியான வாய்ப்புக்கள் கொடுக்கப்படாமல், வெறும் அனுமானங்கள், புனையப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் புனைவுகளை ஏற்றுக்கொண்டு சில மனிதர்களைத் தூக்கிலிட்டால் அதற்கு கண்டிப்பாக இந்தியா என்னும் மிகப் பெரிய சனநாயக நாடு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

மேலும், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தலைமை நீதிபதி அதற்கு கூறியிருக்கும் காரணம் அனைவரையும் திகைக்க வைக்கிறது. இந்த வார்த்தைகள் இந்திய நாட்டு சட்டங்களை நன்கு கற்றறிந்த தலைமை நீதிபதியின் வாயிலிருந்து வருபவைதானா? என்று பலரும் வியக்கின்றனர். ஏனெனில், அவரது கூற்றுப்படி, “இப்போதெல்லாம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை அதிகாரிகள் தங்கள் விசாரணை பற்றி அதில் நடந்த குறைகளையும், தவறுகளையும் பற்றிப் பேசுவது சுவாரசியமானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் மறு விசாரணைக்கு உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவிட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். மேலும், ஏராளமான வழக்குகள் இங்கு தொடுக்கப்படும்” என்றும், ”ராஜீவ் கொலை வழக்காக இருந்தாலும், வீரப்பன் வழக்காக இருந்தாலும் எல்லா குற்றவியல் வழக்குகளிலும் ஏதாவது குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக இது போன்ற மனுக்களையெல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று வழக்குகளை எதிர்கொள்வதற்குப் பதில் தப்பித்துக் கொள்ளும் மனநிலையுடன் உதிர்த்த வார்த்தைகளாக இருக்கின்றன. இது தலைமை நீதிபதிக்கும் உச்சநீதிமன்றத்தில் நீதி வழங்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டவர்களுக்கும் அழகல்ல; மிகவும் பொறுப்பில்லாத வார்த்தைகள்.

நீதிமன்றங்களே அதிலும் உச்சநீதிமன்றமே, வழக்குகளை சட்டத்தின் பார்வையில் நின்று நீதி வழுவாது தீர்ப்பதற்குப் பதிலாக, என்ன இப்படிப்பட்ட வழக்குகள் தொடுக்கப்படுகின்றனவே என்று அங்கலாய்த்துக் கொண்டால், அநியாயமாக பழி சுமத்தப்பட்டு தண்டனைக்குள்ளாகும் மனிதர்கள் நீதி கேட்டு எங்கே செல்வார்கள்? நீதிபதிகள் தங்களது அணுகுமுறைகளையும் மனநிலையையும் மாற்றிக் கொள்ளாவிட்டால் மக்கள் அம்மன்றங்களின் மீது எளிதில் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

- அ.சகாய பிலோமின் ராஜ், வழக்கறிஞர்

Pin It