அனுபவமுள்ள அரசு அதிகாரிகளுக்கு, அவர்களது வயது முதிர்வு ஓய்வுக்குப் பிறகோ, அகால பணி ஓய்வுக்குப் பிறகோ, பல்வேறு சட்டப்பூர்வமான அமைப்புகள் அல்லது அரசியலமைப்பின் படியான ஆணையங்களில் இடமளிப்பதற்கு ஆட்சியாளர்களில் செல்வாக்குப் படைத்தவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது தற்போது மிகச் சாதாரணமாகிவிட்டாலும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும்போது, குறிப்பாக, நியமன முறை தன்னிச்சையானதாக இருக்கும் போது, சந்தேகக் குரல்கள் எழ வாய்ப்புள்ளது. அரசியல் நிர்வாகிகளிடம் உள்ள தனிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு பக்கம் இருக்க, ஒரு முறையான செயல்முறையை கடைபிடிக்காமல் அவ்வதிகாரத்தை செயல்படுத்துவது, முக்கிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பாரபட்சமின்மை அல்லது நடுநிலைமையின் மீது தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது.

2012 செப்டம்பர் 30ம் நாள் பாரதிய ஜனதா கட்சியின் சட்டப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், நீதித்துறையில் உயர் பதவி வகித்தவர்களில் பலர், அவர்களது பணி ஓய்வுக்குப் பிறகான பணியிடங்களை போட்டியிட்டுக்கொண்டு கைப்பற்ற விழையும் போக்கு அதிகரித்து வருவதை சாடிய மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான அருண் ஜெட்லி, இப்போக்கு நமது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் என்றும் கூறினார். மேலும் அவர், “பணி ஓய்வுக்குப் பிறகு பெறப்போகும் பதவியின் மீதான ஆசை, பணியிலிருக்கும் போது வழங்கும் தீர்ப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறினார். மேலும், 2012 செப்டம்பர் 13ம் நாள், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் உருவாக்கப்படும் மத்திய / மாநில தகவல் பெறும் ஆணையங்களின் தலைவராக, உச்ச நீதிமன்ற நீதிபதியாக அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் அல்லது இருப்பவர் தான் வர முடியும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினை குறிக்கும் விதமாக “நீதிமன்ற தீர்ப்புகளால் தான் பணி ஓய்வுக்குப் பிந்தைய பதவிகள் உருவாக்கப்படுகின்றன” என்றும் கூறினார். இதற்கிடையில், மேற்கண்ட தீர்ப்பு தொடர்பாக மறுஆய்வு மனுவை அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்த கூட்டத்தின் போது, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்கரி, நீதிபதிகள் பணி ஒய்வு காலத்திலிருந்து அடுத்த பணிக்காக நியமிக்கப்படுவதற்கு இடையில் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டு காலம் இடைவெளி தேவை என்றும், இல்லாத பட்சத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நீதிமன்றங்களில் அரசின் தலையீடு இருக்கும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

      பிரதான எதிர்கட்சித் தலைவர்களால் மேற்கண்ட செய்தியானது எழுப்பப்பட்டிருப்பதால் இது ‘அரசியல் ரீதியாக’ உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டு என அலட்சியப்படுத்திவிட முடியாது. உயர் நீதித்துறையானது சரியான முறையில் செயல்பட்டு வந்திருந்தால், ஜெட்லியைப் போன்ற பிரபலமான வழக்கறிஞரும், அனுபவமிக்க அரசியல்வாதியுமான ஒருவர் இவ்வாறு சாடியிருக்கமாட்டார்.

2008ம் ஆண்டு வரை பணி ஒய்வு பெற்ற 21 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 18 பேர் அரசின் விசாரணை ஆணையங்களிலும், தீர்ப்பாயங்களிலும் பதவி வகித்துள்ளனர் என்று 2012 ஜூன் 30ம் நாள் தேசிய நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அந்த செய்தியில், சில நீதிபதிகள் தாங்கள் வகித்துக் கொண்டிருக்கும் பதவியிலிருந்து முறைப்படி விலகுவதற்கு முன்னரே, பணி ஓய்வுக்குப் பிந்தைய பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற நீதிபதிகளின் பெயர்களை குறிப்பிடுவது, அவர்களது நம்பகத்தன்மை மற்றும் நீதித்துறையில் அவர்களது திறன் ஆகியவற்றின் மீது அவதூறு கூறுவதற்கு சமமாகும் என்பதால் இப்பிரச்சனையை வேறொரு கோணத்தில் பார்க்க வேண்டும். பணி ஓய்வின் போது தங்களது அனைத்து திறன்களையும் மதி நுட்பங்களையும் பயன்படுத்தி, சாசன அமைப்புகளிலும், சுய அதிகாரம் படைத்த இருக்கைகளிலும் உயர்ந்த பதவிகள் பெறுவதற்காக அரசியல் தலைவர்களை ‘காக்கா பிடிக்கும்’. ‘ஆமாம் சாமி’ போடும் அரசு அதிகாரிகளுடன், நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளை ஒப்பிட முடியாது என்பது சரி தான். ஆனால், நீதிபதிகள் இவர்களைப் போல் நடந்து கொள்ள எதிர்பார்க்கப்படுவதும் இல்லை, அப்படி நடந்து கொள்ளவும் கூடாது.

சமீப காலமாக, குறிப்பாக தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் போன்ற கொள்கைகளை நாடு ஏற்றுக்கொண்ட பிறகு, பொருளாதார ரீதியான பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு, அதில் பல்வேறு ஆணையங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் முறையீட்டு தீர்ப்பாயங்கள் போன்றவைகள் நடுவணரசால் உருவாக்கப்பட வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. அந்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் தேவையான தகுதி, அறிவு, அனுபவம் போன்றவை குறித்து பல சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெருவாரியான சட்டங்கள், அமலிலுள்ள / ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தான் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டுமென்று கட்டாயப்படுத்துகின்றன. இதனால் உயர் நீதித்துறையின் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள்ளிருந்து மட்டுமே தேவையான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

      கூடுதலாக, தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், சட்ட ஆணையம் என்பது போன்ற சட்ட அங்கீகாரம் பெற்ற தீர்ப்பாயங்களும், ஆணையங்களும் உள்ளன. இது போன்றவைகளில் தலைவர் பதவிக்கு ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற / உயர் நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட முடியும். மேலும், 1952ம் ஆண்டின் விசாரணை ஆணைய சட்டத்தின் கீழ் மத்திய / மாநில அரசுகள் எப்பொழுதெல்லாம் ஆணையங்களை நியமிக்கிறதோ, அப்போதெல்லாம் அவற்றிற்கு தலைமை தாங்க ஓய்வு பெற்ற நீதிபதிகளையே தேடுகிறது. நிர்வாக அமைப்புகள் மட்டுமின்றி, உயர் / உச்ச நீதிமன்றங்களும் தங்களது ஆணைகள் சரியாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய ஒய்வு பெற்ற நீதிபதிகளையே நியமிக்கிறது. அமலிலுள்ள நீதிபதிகளும் தங்களது சக பணியாளர்களான ஒய்வு பெற்ற நீதிபதிகளையே, அவர்களது சட்ட நிபுணத்துவத்திற்காகவும், நீதித்துறையில் உள்ள அனுபவத்திற்காகவும், தங்களது சட்ட சிக்கல்களுக்கு தீர்வளிக்க தேடுகின்றனர். எடுத்துக்காட்டாக, சஹாரா இந்தியா எதிர் செபி (SEBI) என்னும் அபகீர்த்தி பெற்ற வழக்கில் நீதிமன்ற நிபந்தனைகள் சரியாக நடைமுறைபடுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டி கடந்த 2012 ஆகஸ்ட் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தால், ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.அகர்வால் நியமிக்கப்பட்டார்.

உச்ச / உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்விற்குப் பிறகு அரசால் உருவாக்கப்படும் சட்ட அமைப்புகளில் தலைவர்களாக நியமிக்கப்படுவதற்கு அரசியலமைப்பு சாசனத்தின் படியும் சட்ட ரீதியாகவும் எந்த தடையுமில்லை. அது அரசியல் சாசனத்தாலேயே பரிந்துரை செய்யப்படுகிறது. இது போன்ற அமைப்புகளுக்கு தலைவர்களையும் உறுப்பினர்களையும் நியமனம் செய்யும் முறை குறித்த பரிந்துரைகள் சட்டத்திலோ, அரசியல் சாசனத்திலோ தெளிவாக பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், அரசு இப்பதவிகளுக்காக நபர்களை தேர்ந்தெடுக்கும் முறை வெளிப்படையானதாக இருத்தல் மிக அவசியமானது.

ஒய்வு பெற்ற நீதிபதிகள் அரசால் நியமிக்கப்படும்போது, தொடர்புடைய அமைச்சகத்தைச் சார்ந்த மூத்த பணியாளர்கள் மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சார்ந்த எதிர்கட்சி தலைவர்கள், தொடர்புடைய துறை சார்ந்த நிபுணர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்த பிரதான நபர்கள், சட்ட வல்லுனர்கள் போன்றோர் கலந்து முடிவெடுத்தால் தான், அது சட்டப்படியான தேர்வாக இருக்கும்; அரசு பணி ஒய்வு பெற்ற நீதிபதி ஒருவரை தனிச்சையாக நியமனம் செய்ததாகவோ, அவருக்கு அன்பளிப்பாக பதவி அளித்ததாகவோ அமையாமலும் இருக்கும். ஒவ்வொரு ஒய்வு பெற்ற நீதிபதியின் நியமனமும் பொது கொள்கை முடிவின்படி வெளிப்படையாகவே இருப்பதை உறுதி செய்ய இந்த நடைமுறையானது கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில், சமீப காலமாக மிகவும் குறைந்து கொண்டே வரும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் சட்டப்படியான அமைப்புகளின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும்.

மேலும், நீதித்துறை போல்வு (quasi judicial) அமைப்புகளுக்காக ஒய்வு பெற்ற நீதிபதிகளை பரிந்துரை செய்வதற்கு சுய அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் சில தரப்பினரிடமிருந்து கோரிக்கை எழுகிறது. இது தொடர்பாக விவாதிக்கையில், உயர் / உச்ச நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை முறையாக தேர்வு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ள தேசிய சட்ட ஆணையம், நமது சட்ட இயற்றுனர்களின் அலட்சியப்போக்கால் இதுநாள் வரையில் அமைக்கப்படாமல் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில், இது போன்றதொரு தேசிய ஆணையத்தை உருவாக்க ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி இசைவு தெரிவிக்கும் என்பது நடக்க சாத்தியமற்ற காரியமாகவே தோன்றுகிறது.

மக்களவையில் அரசியல் சாசன (98வது திருத்தம்) மசோதா, 2003ஐ கடந்த 2003ம் ஆண்டில் கொண்டு வந்ததன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, அப்போதைய சட்ட அமைச்சர் அருண் ஜெட்லியால், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் துர்நடத்தை, அவர்களது பணியிட மாற்றம், பணி நியமனம் தொடர்பான விசாரணைகளுக்காக தேசிய சட்ட ஆணையம் உருவாக்கப்படுவது தொடர்பான தைரியமான முன்முயற்சி எடுக்கப்பட்டது. மேற்கண்ட மசோதாவானது 13வது மக்களவை 2004ல் கலைந்ததை தொடர்ந்து இரத்தானது. ஆனால் இன்றுவரையிலும் மீண்டும் அந்த மசோதாவினை கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் பின்வந்த இரு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகளாலும் எடுக்கப்படவில்லை என்பது கவலைக்கிடமானது.

      பணி ஓய்வுக்குப் பிறகு பதவி அளிக்க சுயாட்சி பெற்ற ஒரு தேசிய அமைப்பு உருவாக்கப்படுவது ஒருபக்கமிருக்க, அனைத்து தீர்ப்பாயங்களின் செயல்பாட்டையும் ஒரே அமைச்சகத்தின் கீழ் கொண்டுவருவதற்குக் கூட நடுவண் அரசால் இயலவில்லை. நடுவணரசால் உருவாக்கப்பட்டு நடப்பிலுள்ள 62 தீர்ப்பாயங்கள், 24 அமைச்சகங்களால் நிர்வகிக்கப்படுகிறது. 1997ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம், அனைத்து தீர்ப்பாயங்களின் நிர்வாகமும் ஒரு தனித்த சுயாட்சி பெற்ற அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென உத்தரவிட்ட பிறகும் இன்றளவும் அந்த உத்தரவு நடைமுறைபடுத்தப்படாமலே உள்ளது. மேற்கண்ட காரணத்திற்காக “மத்திய தீர்ப்பாய துறை” ஒன்றை நடுவணரசின் சட்ட மற்றும் நீதித்துறையின் கீழ் கொண்டுவர நடுவணரசு முயற்சித்த போதும், பல்வேறு அமைச்சகங்களின் ஒப்புதல் இல்லாமல் போனதால் இன்றளவும் அமல்படுத்தப்பட முடியாமல் இருக்கிறது. இப்பிரச்சனையை தற்போது உச்ச நீதிமன்றமும், இன்டெர் மினிஸ்டீரியல் குரூப்பும் கையாண்டு வருகின்றன.

      ஒய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகே ஒரு நீதிபதி வேறு எந்த பதவிக்கும் அரசால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை ஏற்புடையதாகவே தோன்றினாலும், நடைமுறையில் சிக்கலாக அமையலாம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பு 65 என்பதால், ஓய்விற்குப் பிறகு செல்வாக்கு வாய்ந்த ஒரு பதவியை அடைவதற்கான மோகம், பெருவாரியான நீதிபதிகளை, இடைப்பட்ட காலத்தில் ஆட்சிக்கட்டிலில் உள்ளவர்களிடமும், அரசியல் தலைவர்களிடமும் பணி ஓய்வுக்குப் பிந்தைய பதவிக்காக பேச்சுவார்த்தை நடத்த ஊக்குவிக்கிறது. பணி ஓய்வுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு நீதிபதிக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டால் நீதித்துறை போல்வு அமைப்புகளில் அவ்விரு வருடங்கள் அவர்கள் சேவை புரியும் வாய்ப்பும் இல்லாமல் போகிறது. மேலும், அனேக சட்டங்களில், அமைப்புகளின் தலைவர்களுக்கான அதிக பட்ச வயது வரம்பு 70 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, பணி ஓய்வுக்குப் பிந்தைய இரண்டு ஆண்டு ஒய்வு காலம் என்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பொருத்த வரையில் சரியாக இருக்காது. மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சமமாக உயர்த்துவது தொடர்பான அரசியல் சாசன (114வது திருத்தம்) சட்ட மசோதா 2010ம் இன்றளவும் நாடாளுமன்றத்தில் நிலுவையிலுள்ளது.

மனித உரிமை பாதுகாப்பு சட்டம், 1993ன் படி தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே நியமிக்கப்பட முடியும். மேலும், அவரது அதிக பட்ச வயது வரம்பு 70 ஆகும். இந்த காரணத்திற்காக மட்டும் கடந்த 2010ம் ஆண்டு வரை முழுமையாக ஒரு ஆண்டிற்கு தலைவர் இல்லாமல் ஆணையம் செயல்பட்டதை கண்டிப்பாக நினைவுகூர வேண்டும். வேறு எவரும் அந்த பதவிக்கு தகுதியில்லாதவர்களா அல்லது இதற்கு வேறு காரணம் எதுவும் உள்ளதா என்பது அரசாங்கத்திற்கு மட்டுமே தெரிந்த உண்மை. முன்னாள் தலைமை நீதிபதிகள் மட்டுமே தேசிய / மாநில மனித உரிமை ஆணையங்களுக்கு தலைவராக நியமிக்கப்பட முடியும் என்பது போன்ற கடுமையான விதிகள் பாராளுமன்றத்தால் ஏன் மறுஆய்வு செய்யப்படுவதில்லை? குறிப்பிட்ட ஆண்டுகள் உச்ச / உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றியவர்கள் இத்தகைய அமைப்புகளுக்கு தலைவராக பதவி வகிக்க தகுதியானவர்களாக்கப்பட வேண்டும். இது தேர்வு செய்யப்படும் நபர்கள் தொகுதியை விரிவுபடுத்தும். இதே திருத்தமானது, தகுதியான நபர்கள் கிடைக்கப் பெறாததால் நீண்ட காலமாக நியமனம் செய்யப்படாமல் வெற்றாக இருக்கும் பணியிடங்களுக்கு காரணமான சட்டப்பிரிவுகளிலும் கொண்டுவரப்பட வேண்டும்.

      இறுதியாக, பணி ஓய்விற்குப் பிறகான நீதிபதிகள் நியமனத்தில் பாரபட்சமற்ற தேர்வு முறையைக் கொண்டுவருவதில் தாமதம் இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு நாம் வரலாம். ஆனால் நிச்சயமாக அதிகாரம் படைத்தவர்களால் எனது ஆலோசனை ‘அரசியல் ரீதியாக தவறானது’ என தள்ளுபடி செய்யப்படும்.

- ஹேமந்த் குமார், வழக்கறிஞர்

[நவம்பர், 2012 லாயர்ஸ் அப்டேட் இதழில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் மொழியாக்கம்]

தமிழாக்கம்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சா. சபிதா

Pin It