பெண்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருத்துவக் கல்வி பயில்வது சாதாரணமானது அல்ல. பெண்கள், படிப்பதற்கான உரிமை கூட மறுக்கப்பட்ட காலம் அது. பெண்கள் போராடித்தான் வாக்குரிமையைப் பெற்றனர். கல்வி கற்பதற்கான உரிமை, எட்டுமணி நேரம் வேலை செய்வதற்கான உரிமை முதலிய அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்கு இயல்பாகவும், எளிதாகவும் கிடைக்கவில்லை.
மருத்துவப் படிப்பிலும், ஆராய்ச்சியிலும் ஆண்களின் ஆதிக்கம் நிலவிய அக்காலத்தில், பெண்களும் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலகின் மிக உயாந்த நோபல் பரிசைப் பெற முடியும் என்பதைச் சாதித்துக் காட்டிய பெண்மணி, ‘ஜெர்டி திரேசா கோரி’. அதுமட்டுமல்ல, மருத்துவ ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி அவர் என்பது உலகம் வியக்கும் உண்மையானது !.
‘ஜெர்டி திரேசா கோரி’-1896-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள பெரகு என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தனது தொடக்கக் கல்வியை வீட்டிலேயே பயின்றார். பின்னர் 1906-ஆம் ஆண்டு லைசியம் பெண்கள் பள்ளியில் சேர்ந்து படித்தார். பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு எழுதித் தேர்ச்சியடைந்தார். உடற்பயிற்சிப் படிப்பிலும் சேர்ந்து 1914-ஆம் ஆண்டு வென்றார்.
மருத்துவத்தை ‘பெரகு’ விலுள்ள ஜெர்மன் பல்கலைக் கழகத்தில் கற்றார்!, 1920 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார்.
கார்ல் பெர்டினண்ட் கோரி என்பவரை 1920-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரும் ஜெர்டி திரேசா கோரியுடன் சேர்ந்து மருத்துவம் பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர்.
‘ஜெர்டி திரேசா கோரி’ -1920 முதல் 1922 வரை ‘கரோலினின்’ குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். பின்னர் அமெரிக்கா சென்று நியூயார்க் நகரத்தில் தமது கணவர் பணிபுரிந்த ஆய்வு மையத்தில் சேர்ந்தார். இருவரும் 1922 முதல் 1931 வரை இதே ஆய்வு மையத்தில் பணிபுரிந்தனர். கணவர் 1931 ஆம் ஆண்டு ஜெயிண்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் மருந்தியல் துறைப் பேராசிரியராகப் போனார். அவரைத் தொடர்ந்து ஜெர்டி திரேசா கோரியும் அப்பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார்.
கணவனும், மனைவியும் இணைந்து மிருகங்களின் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை பற்றியும், இன்சுலின் செயல்பாட்டைப் பற்றியும் ஆய்வு செய்தனர். மிருகங்களில் கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றம் எப்படி நடக்கிறது என்பதையும், அதற்கென்று தனியான திசுக்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பவற்றையும் ஆய்வு செய்தனர். திசுக்கள் எப்படியெல்லாம் ‘என்ஸைமை’ உற்பத்தி செய்து, தனியாகப் பிரிக்கின்றன என்பதையும், அப்படி பிரியும்போது சில படிகத்தன்மை கொண்டதாக அவை உள்ளனவா என்பதையும் கண்டறிந்தனர்.
இவர்கள் 1936-ஆம் ஆண்டு தனியாக குளுக்கோஸ்-ஐ, பாஸ்பேட்டைப் பிரித்தனர், ‘பாஸ்பேட்’ ஒரு தனிப்பட்ட கார்பன் மூலம் குளுக்கோஸ் மூலக்கூறில் கலந்துள்ளது என்பதையும், இது கிரியா ஊக்கியாக செயல்படுகிறது என்பதையும் கண்டு, இதற்கு ‘கோரி ஈஸ்டர்’ என்று பெயரிட்டு அழைத்தனர்.
குளுக்கோஸானது மிருக உடலில் சேமித்து வைக்கும், ‘கார்போ ஹைடிரேட் கிளைகோஜன்’ ஆகும். இது மிருகங்களில் கல்லீரலில் காணப்படுகிறது. இது செயல்புரிந்து, பல மாற்றம் ஏற்பட்டு மீண்டும் கடைசியாக இரத்த குளுக்கோஸிலிருந்து கிளைகோஜனாக மாறுகிறது. ஆறாண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து என்ஸைமை தனியாகப் பிரித்தனர். இதில் கோரி ஈஸ்டரானது கிரியா ஊக்கியாக இருந்து செயல்பட்டது. செயற்கை முறையில் கிளைக்கோஜனை 1943ஆம் ஆண்டு உருவாக்கிக் காட்டினர். மேலும் குழாயில் ஒன்றுடன் ஒன்றாக மாற அனுமதித்தனர். இதற்கு ‘கோரி சுழற்சி’ (Cori Cycle) எனப் பெயரிட்டனர்.
எளிய சர்க்கரை குளுக்கோஸிலிருந்து பாஸ்பேட்டைக் கண்டுபிடித்தனர். இது உலக முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகும். கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றத்தை உலகம் முழுமைக்கும் அறிவித்தனர்.
விலங்களின் என்ஸைமானது மாவுப் பொருளாகி எப்படி ரத்த சர்க்கரையாய் மாறுகிறது என்று கண்டுபிடித்தற்காக, இவர்களுக்கு 1947-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்க்கரை வியாதி எப்படி உண்டாகிறது என்பதை அறிந்து கொள்ளவும், அதைக் கட்டுப்படுத்த மேற்கொண்டு ஆய்வு செய்யவும் இது உதவிகரமாக உள்ளது.
‘ஜெர்டி திரேசா கோரி’ 1947-ஆம் ஆண்டு உயிர் வேதியியல் துறையில் பேராசிரியரானார். கல்லூரியில் மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்து உயிர் வேதியியல் பாடத்தைக் கற்பித்தார். ‘The Journal of Biological Chemistry’ உட்பட பல அறிவியல் இதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.
இவரும், இவரது கணவர் பெர்டினண்ட் கோரியும் அமெரிக்காவின் உயிரியல் வேதியியலாளர் கழகம், தேசிய அறிவியல் கழகம், மருந்தியல் கழகம், மனோதத்துவக் கழகம் முதலிய பல அமைப்புகளில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பணியாற்றினார்.
அமெரிக்க வேதியியல் கழகத்தின் விருதையும், 1946-ஆம் ஆண்டு ஸ்கியூபி விருதையும் பெற்றனர். மேலும் ‘ஜெர்டி திரேசா கோரி’க்கு 1948-ஆம் ஆண்டு கார்வான் பதக்கமும் (Garvan Medal) செயின்ட் லூயிஸ் விருதும் (St. Louis Award) கிடைத்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு சர்க்கரை ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது.
பாஸ்டன் பல்கலைக் கழகம், ஸ்மித் கல்லூரி, யேல் பல்கலைக் கழகம், கொலம்பியா பல்கலைக் கழகம், ரோச்செஸ்டர் கல்லூரி முதலிய பல கல்லூரிகள் ஜெர்டி கோரிக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.
‘டாக்டர் ஜெர்டி கோரி’ 1967-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் நாள் இயற்கை எய்தினார். அமெரிக்காவின் அஞ்சல்துறை 2008-ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி ஜெர்டி கோரியின் பணியைச் சிறப்பிக்கும் வகையில் தபால் தலை வெளியிட்டது!. மருத்துவத்திற்காகவும், உள இயல் ஆராய்ச்சிக்காகவம் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி இவரே !.
- பி.தயாளன்