(வீரவல்லாளன் (1291-1343) என்ற கடைசி ஹோய்சாள மாமன்னன் இந்து மதத்தின் காவலனாக விளங்கினான். அவனுக்கு மூன்றாம் வீர வல்லாளன் (கன்னடத்தில் பல்லாளன்) என்ற பெயரும் உண்டு. அவனுக்குத் திருவண்ணாமலையின் மீது தனி அன்பும் பக்தியும் உண்டு. அடிக்கடி அண்ணாமலைக்கு வந்து சென்றவன் பிற்காலத்தில் அருணசமுத்ர வீர வல்லாளன் பட்டணம் என்று அந்த ஊருக்குப் பெயர் சூட்டி அதை ஹோய்சாள ராஜ்யத்துக்கு இரண்டாம் தலைநகரமாகவும் ஆக்கினான்)

பௌர்ணமி கால பக்தர்களின் காலடித் தடயங்களின் தொடர் சப்தம் இல்லாத ஒரு ஏகாந்த தனிமைக்காலை. மஹா விஷ்ணுவின் துயில் கலையாதிருக்க சுவாசிக்கக் கூட மறந்து சலனமற்று வளைந்து படுத்திருக்கும் ஆதிசேஷனின் அமைதியில் இருந்த அந்த கிரிவலப் பாதையின் ஓரத்தில் இருந்த சிறிய பாறையில் என்பது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் தனியாக அமர்ந்திருந்தார். மூப்பின் களைப்போ இல்லை தொலை தூரம் நடந்த களைப்போ அவரின் முகத்தில் துளியும் தெரியவில்லை. உற்றுப் பார்த்தால் மட்டுமே பளிச்சென்று நேற்றியில் தெரியும் கீற்றாக மூன்று திருநீற்றுக் கோடுகள். வாழ்ந்து முடித்த களைப்பை மீறியபடிக்கு அவருடைய கண்களில் ஒரு இளைஞனின் வீரம் தெரிந்தது. விரைவில் களைப்படைய வைக்காத அந்த இளம் காலை நேரத்தை பாறையில் அமர்ந்து ரசித்தபடி சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார்.

அவரை நோக்கி வந்த ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் “நடக்க முடியலையா தாத்தா? நானும் கூட வரவா?. ரெண்டுபேரும் சேர்ந்து பேசிக்கிட்டே கிரிவலம் போலாம். உனக்கும் சலிப்பு தெரியாது” என்றான். அவனுடைய கைகளைப் பிடித்து எழுந்தவர் “நீ என் துணக்கு வந்தால் உன் ஆடுகள்?”. சிறுவன் தூரத்தே தெரியும் கோபுரத்தைக் காண்பித்து “தோ, தெரியுதே, அந்த அண்ணாமலையார் பாத்துக்குவாரு தாத்தா. கொஞ்ச நேரம் மேஞ்சிட்டு அடிவாரத்திலே போய் எனக்காக காத்திருக்கும் . கவலைப்படாம என்னுடன் வா” என்று பதிலளித்தான்.

இருவரும் சிறிது நேரம் அமைதியாக நடந்தார்கள். சிறுவன் முதியவரின் கைகளைப் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டே நடந்தான். “தாத்தா, இதுக்கு முன்னாடி உன்னை நான் எங்கேயோ பாத்திருக்கிறேன். அதுவும் ரொம்ப கிட்டக்க. உன்னைபாத்து கும்பிட்டு சூடம் கூட கொளுத்தியிருக்கேன். எங்கேன்னுதான் சரியா விளங்கலை. அதான் யோசிக்கறேன்”. கண்களை சுறுக்கி சிறிது நேரம் யோசித்த சிறுவன் உற்சாகமான குரலில் “இப்போ ஞாபகம் வந்திடுச்சு தாத்தா. திருவண்ணாமலை கோயில்லே உன்னைப் போலவே ஒரு சிலை இருக்கு” என்றான்.

முதியவர் தான் அணிந்திருந்த முத்திரை மோதிரத்தை சிறுவனிடம் கொடுத்து இரண்டு கைகளாலும் மனமாற ஆசீர்வதித்தார். அதிர்ச்சியில் உறைந்து போன சிறுவன் முத்திரை மோதிரத்தை மீண்டுமொருமுறை பார்த்தான். காலைக் கிரணங்கள் அதன் மீது பட்டுத் தெறிக்க அந்த இடம் வானவில்லின் நிறங்களால் மேலும் பிரகாசமானது. அந்தப் பரிபூரண ஒளியில் சிறுவனுடன் முதியவராக கிரிவலம் வந்த மூன்றாம் வீர வள்ளாலன் மெல்ல மறைந்து அரூபமாகித் தன் கிரிவலத்தைத் தொடர்ந்தான்.

போசாள நாட்டில் இருக்கும் துவார சமுத்திரத்தை மாலிக் கபூரின் படைகள் எந்த நேரத்திலும் முற்றுகையிடப்போவதாக படைத் தலைவன் மாதப்ப தண்ட நாயக்கனிடம் ஒற்றன் செய்தி கொண்டுவந்திருந்தான். இந்தப் படையெடுப்பு தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் ஆணைப்படி மாலிக் கபூரின் தலைமையில் நடக்க இருக்கிறது என்பதையும் அறிந்தான். ஆனால் அதே சமயம் மன்னன் மூன்றாம் வீர வல்லாளன் தங்களின் பெண் வழிச் சொந்தமான மாறவர்மன் குல சேகரபாண்டியனின் மகன்கள் சுந்தரபாண்டியனிற்கும் வீரபாண்டியனிற்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் பங்கேற்று அவர்களிற்கிடையே சமாதானம் கொண்டு வருவதற்கான முயற்சியில் மதுரையில் தங்கி இருந்தான்.

மாலிக் கபூரின் திடீர் முற்றுகையால் தலைவன் இல்லாத நகரம் சூறையாடப்பட்டது. மக்களும் அச்சத்திற்குள்ளானார்கள். பின்னர் ஒருவாராக ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பாடாகியது. அதன்படி முதலில் தில்லி சுல்தானுக்கு போசாள நாடு அடங்கிய நாடாக ஒப்புக்கொண்டு ஆண்டு தோறும் பெரும் கப்பத் தொகையை கட்ட ஒப்புக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக துவார சமுத்திரத்தின் கருவூலத்தில் இருக்கும் அனைத்து செல்வங்களையும் சுல்தான் வசம் கொடுத்துவிட வேண்டும். முன்றாவதாக சுல்தானிடம் வள்ளாலன் அடிபணிந்த செயலின் நன்றிக் கடனாக தன் ஓரே மகன் வீருபட்சாவை மாலிக் கபூருடன் தில்லிக்கு அனுப்ப வேண்டும். கண்மூடித் திறக்கும் நேரத்திற்குள் அனைத்தும் நடந்தேறியது.

இறுதியாக மாலிக் கபூருடன் தன் மகனை வள்ளாலன் அனுப்பி வைத்தார். நாட்கள் கடந்து போக தந்தைக்கான தன் அந்திமகாலக் கடன்களை தன் மகன் நிறைவேற்றுவான் என்ற மன்னரின் நம்பிக்கை தளர்ந்துகொண்டே போனது. மகனை மீண்டும் பார்ப்போமா என்ற ஏக்கத்தில் தன்னை இம்மையிலும் மறுமையிலும் ஆளும் அண்ணாமலையாரை நினைத்து மனமுறுக வேண்டினார். வள்ளாலனின் வேண்டுகோளிற்கிணங்க அண்ணாமலையாரே மன்னரின் கனவில் வந்து அவருக்கு குழந்தையாக தானே அவதரித்திருப்பதாகவும் , மன்னருக்கான அந்திம காரியங்களை தானே நடத்த இருப்பதாகவும் உணர்த்தி நம்பிக்கை அளித்தார். வல்லாளனும் ஒருவாறு சமாதானமானான்.

அன்று திருவண்ணாமலையில் பங்குனி உத்திரம் திருவிழாவின் மூன்றாவது நாள். வழக்கம் போல பண்டிகைக்கான வழிமுறைகளை மக்கள் ஒரு புறம் மேற்கொண்டாலும் தொடர் போரினால் அவர்களின் உற்சாகம் முன்பு போல இல்லையோ என்று வீர வல்லாளன் நினைத்தான். மக்களின் மன நிலையை எப்படியாவது கண்டறிய மாதப்ப கண்ட நாயக்கரிடம் ஆலோசனை கேட்டான்.

“இந்ததகைய எண்ணம் தங்களுக்கு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. தொடர் போர்களால் மக்களின் மனநிலையில் உள்ள மாறுதல்களை நானும் அவதானித்துக் கொண்டுதானிருக்கிறேன். அவர்கள் எந்த நிலைமையிலும் தங்களையோ தங்களின் ஆட்சியையோ விட்டுக் கொடுத்ததேயில்லை. உங்களை மன்னராகப் பார்ப்பதை விட அண்ணாமலையாரின் பக்தனாகத்தான் பார்க்கிறார்கள். கவலை வேண்டாம் மன்னா” என்று படைத்தலைவன் கூறினாலும் அவருடைய பதிலால் மன்னர் சமாதானமாகவில்லை. “நாம் இருவரும் இன்று இரவு மாறுவேடத்தில் நகர்வலம் போவோம்” என்று வீரவல்லாளன் கூற படைத்தலைவனும் அதை ஆமோதித்தான்.

ஊர் உறங்கும் மூன்றாம் யாமம். அண்ணாமலையார் கோயிலின் கோபுரத்தில் உள்ள புறாக்களின் மெல்லிய சலசலப்பு தெளிவாகக் கேட்டது. ஊரின் அப்பால் இருக்கும் ஒரு குடிசையைக் கடந்து அவர்கள் போகும் போது ஒரு பெண்ணின் குரல் கேட்டது. “நீ வேலைவெட்டிக்குப் போகாம ராசாவை குத்தம் சொல்லாதே. அவரு என்ன கஜானாவை வெணும்னா காலி பன்னினாறு. சண்டை வேனாம்னு சமாதானமா போகலாம்னு சொன்னாறு. நம்ம ஒவ்வொருத்தரு உசிரை விட ராசாவுக்கு பெரிசு எதுவுமில்லை. தெரிஞ்சிக்கோய்யா. இல்லைன்னா பெத்த புள்ளையை சுல்தானோட அனுப்புவாறா? அடுத்த வெள்ளாமை அண்ணாமலையாராலே செழிப்பா விளையப் போகுது. அப்போ எல்லாரும் ராசாவுக்கு அள்ளிக்கொடுப்போம். எதுவும் தெரியாம கள்ளுகுடிச்சு எங்கூட சண்டை போடத்தான்யா நீ லாயக்கு” என்று கோபமாகப் பேசியவள் ஏதோ வெளியில் அரவம் கேட்க இற்றுப்போன தட்டிக்கதவைத் திறந்தாள். இரண்டு பேர் நிற்பதைப் பார்த்தவள் “இந்த நேர்த்திலே வழி தவறி வந்திட்டீங்களா எசமான்? தாகமா இருக்கா? என்று கேட்க வீர வல்லாளன் செய்கையில் குடிக்க நீர் கேட்டான். ஒரு மண் குவளை நீர் மோருடன் உரித்த சிறிய வெங்காயத்தை ஒரு தட்டில் வைத்து அவர்களுக்குக் கொடுத்தாள். “உன் பேர் என்னம்மா?” என்று வாஞ்சையுடன் மன்னன் கேட்க “உண்ணாமலையம்மை” என்றாள். மிகுந்த மன சமாதானத்துடனும் மகிழ்ச்சியுடனும் மன்னர் அங்கிருந்து சென்றார்.

மூன்று வருடங்கள் கழித்து மன்னரின் மகனும் திரும்பி வந்தான். அனைத்து சூழ்நிலைகளும் சாதகமாகவே இருந்தது. போரில்லா நல்லாட்சியும் தொடர்ந்தது. சுல்தானுக்குக் கொடுக்கவேண்டிய கப்பத்தை வல்லாளன் மறுதலிக்க முஹம்மது பின் துக்ளக் துவார சமுத்திரத்தை இரண்டாவது முறையாக மீண்டும் முற்றுகையிட்டான். வழக்கம் போல கொள்ளை உயிர்ப்பலி என்று அனைத்தையும் திட்டமிட்டபடி அரங்கேற்றினான். நாட்டில் மீண்டும் அமைதியின்மை சூழ்ந்தது. இப்படியாக போசாள நாடு தொடர் முற்றுகையால் மக்கள் சற்றே பாதிக்கப்படிருந்தாலும் மன்னரின் மேல் அவர்கள் வைத்த நம்பிக்கை மட்டும் துளியும் மாறாமல் மேலும் மேலும் உறுதியானது

முஹம்மது பின் துக்ளக்கின் படையெடுப்பிற்குப் பிறகு மதுரைய ஆண்ட பல சுல்தான்களுடன் மூன்றாம் வல்லாளன் போரிட்டு முறியடித்தான். இறுதியாக கண்ணனூர் குப்பத்தில் மூன்றாம் வல்லானனிற்கும் மதுரை சுல்தான் கியாஸ் உத்தின் ஆகியோருக்கும் கடும் போர் நடந்தது. வல்லாளனின் படையில் ஒன்றரை லட்சம் வீரர்கள் இருந்தார்கள். சுல்தான் படையிலோ ஆறாயிரம் படைவீரர்களே இருந்தார்கள். போர் தர்மத்திற்கெதிராக படையெடுத்து வஞ்சககத்தாலும் சூட்சியாலும் பல அரசர்களை வீழ்த்திய கியாஸ் உத்தின் அனைத்து சுல்தான்களிலும் மிகவும் கொடியவன். வல்லாளனின் படையினரிடம் திணறிய சுல்தானின் படைகளுக்கு உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆதலால் வல்லாளனுடன் சமாதான உடன்படிக்கைக்குத் தயாரானான். இந்தப் போரிலும் வல்லாளன் வெற்றி பெற்றான். என்றாலும் சுல்தான் படையினர்கள் வழக்கம் போல வஞ்சகப்போரை அரங்கேற்றி வீரவல்லாளனை சிறைபிடித்து அவனை கொலையும் செய்தார்கள். வல்லாலனைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவனது உடலை மதுரை கோட்டை சுவர்களில் காட்சிக்கு வைத்தார்கள் .தலைவனில்லா படை சிதறி சின்னாபின்னமாகி செயலிழந்து நின்றது. தகப்பனைக் காப்பாற்றும் அனைத்து முயற்சியிலும் அவருடைய வாரிசான நான்காம் வல்லாளன் வீருபட்சா சுல்தானிடம் தோற்றது மட்டும் இல்லாமல் பெரும் செல்வத்தையும் இழக்கவேண்டியிருந்தது.

மாசி மாத பௌர்ணமியுடன் கூடி வரும் மக நட்சத்திர நாள். திருவண்ணாமலையின் கீழ்த்திசையில் ஓடும் கௌதம நதிக்கரையில் ஆங்காங்கே மக்கள் குழுமியிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் பிராமணர்கள் திதிக்கான பொருட்களை சரிபார்த்து அதற்கான வழி முறைகளை விளக்கிக் கொண்டிருந்தார்கள். தூரத்தே ஒரு முதிய பிராமண புரோகிதர் கையில் தர்ப்பைக்கட்டுடன் பையில் சில பூஜைக்கான பொருட்களை வைத்திருந்தார். அவரை யாரும் இடையில் அமர இடம் கொடுக்கவில்லை. அனைவரையும் தாண்டி கடைசியில் இருந்த ஒரு இடத்தில் அமர்ந்தார். இவ்வளவு தூரம் கடந்து வந்து திதிக்கான சடங்குகளை நடத்த யாராவது ஒருவராவது நிச்சயம் தன்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் அண்ணாமலையாரை கைகூப்பி வணங்கினார். முதியவரைத் தவிர அனைத்து புரோகிதர்களிடம் மக்கள் குழுமியிருந்தார்கள். அதில் குறிப்பிட்ட புரோகிதர்களுக்காக ஒரு சிலர் காத்திருக்கவும் செய்தார்கள்.

நேரமும் கடந்து கொண்டே போனது. அப்போது ஒரு இளைஞன் அனைவரையும் கடந்து முதியவரை நோக்கி வந்தான். ஒரு பெரிய தாம்பாளத்தில் பசும்பால், தேன், வெண்பட்டு, புத்துருக்கு நெய், கருப்பு எள் மற்றும் சில பூஜைப் பொருட்களை கொண்டு வந்திருந்தான். அந்த அண்ணாமலையாரே தன்னை நோக்கி வருவதாக நினைத்து முதியவர் மகிழ்ந்தார். “தகப்பனாருக்கு திதி கொடுக்கவேண்டும் சுவாமி” என்று தான் கொண்டு வந்திருந்த அனைத்து பொருட்களையும் முதியவர் முன் பணிவுடன் வைத்தான். “தோப்பனார் பேர்” அவர் கேட்டு முடிப்பதற்குள் “வீர வள்ளால மஹாராஜா” என்றான். அனைத்து சடங்கும் நிறைவேறியது. முதியவரிடம் தான் கொண்டு வந்திருந்த சில பொற்காசுகளுடன், அரிசி, காய்கறிகளை தட்சணையாகக் கொடுத்தான். மீண்டும் கைகளை உயர்த்தி அண்ணாமலையாருக்கு தன் நன்றியைக் கூறினார் முதியவர். இளைஞன் சென்ற பிறகு அனைத்து பொருட்களையும் தான் கொண்டுவந்திருந்த துணிப்பையில் வைக்கும் போதுதான் அதிர்ச்சியுடன் அதைப் பார்த்தார். முதியவர் கொண்டுவந்திருந்த சிறிய தாமிரத் தாம்பாளமும், தீர்த்தச் சொம்பும் சௌர்ணமாக மாறி சூரிய ஒளியில் மின்னியது.

 (மூன்றாம் வீர வள்ளாலனின் மகன் நான்காம் வீர வல்லாளன் வீருபட்சா போராட்டமான சூழ்நிலையில் அரியணையேறினான். தன் தகப்பனார் காலத்தில் அவருக்கு மிகவும் விசுவாசமாக இருந்த பல படைத் தலைவர்கள் நான்காம் வீர வல்லாளனின் பலவீனத்தக் கண்டு தனியாகச் சென்றுவிட்டார்கள். மதுரை சுல்தானிடம் அவருடைய தந்தையார் மேற்கொண்ட போரில் பல சிறந்த போர் வீரர்களும் இறந்து விட்டார்கள். கியாஸ் உத் தின்னிடம் தன் தகப்பனாரை மீட்க மொத்த கஜானாவை காலியானது. இப்படியாக ஆறு வருடப் போராட்டத்திற்குப் பிறகு மதுரை சுல்தானுடன் போரிட்டு தன் தந்தையைப் போலவே நான்காம் வீர வள்ளாலனும் சிறைபிடிக்கப்பட்டான்)

- பிரேம பிரபா

Pin It