எம்.பி.டி ஆச்சார்யா சென்னை திருவல்லிக்கேணியில் 1887 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையார் எம்.பி.நரசிம்மன், பொதுப்பணித்துறையில் மேலாளராகப் பணிபுரிந்தவர்.

                mpt acharyaதிருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். தமது 19-ஆம் வயதிலேயே இந்திய விடுதலைப் போரில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

                ‘இந்தியா’ என்னும் இதழ் எம்.பி.டி ஆச்சார்யாவினால் 1906 ஆம் ஆண்டு மே மாதம் துவக்கப்பட்டது. அவ்விதழின் ஆசிரியராக மகாகவி பாரதி விளங்கினார். திலகரின் தீவிரக் கொள்கைகளைப் பரப்பும் இதழாக ‘இந்தியா’ திகழ்ந்தது.

                ‘பால பாரத்’ என்னும் ஆங்கில வார இதழை 1906 ஆம் ஆண்டு ஆச்சார்யா துவக்கினார். ரஷ்யாவில் ஜார் மன்னருக்கு எதிராக நடைபெற்ற புரட்சியைப் பற்றியும், துருக்கி, எகிப்து மற்றும் அயர்லாந்து நாட்டு விடுதலைப் போராட்டங்கள் குறித்தும், இத்தாலிய விடுதலை வீரர்களான மாஜினி, கரிபால்டி முதலிய தலைவர்களைப் போற்றியும் ‘பால பாரத்’ இதழில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அந்த ஆங்கில இதழுக்கும் மகாகவி பாரதியே ஆசிரியராக இருந்தார்.

                தூத்துக்குடியில் வ.உ.சி. யால் நடத்தப்பட்ட சுதேசிக்கப்பல் கம்பெனிக்குப் பல தொல்லைகளை ஆங்கிலேய அரசு செய்து வந்தது. அப்போது, ‘இந்தியா’ இதழ், “அரசியல்  அதிகாரமின்றித் தொழில் வளர்ச்சி சாத்தியம் என இன்னமும் கனவு கண்டு கொண்டிருப்போர், தங்கள் தவறிலிருந்து விடுபட இது உதவக்கூடும்.”-என கருத்துரைத்தது.

                மகாகவி பாரதியார், ஆச்சார்யா, சக்கரை செட்டியார் ஆகியோர் இந்திய மக்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதில் உறுதி கொண்டு செயல்பட்டார்கள்.

                ஆச்சார்யா, பூனாவிற்குச் சென்று திலகரைச் சந்தித்தார். திலகர் மக்களிடம் ஆங்கிலேயர்களின் ஆட்சி குறித்து விரிவாக பரப்புரை செய்ய வேண்டும் எனவும், பின்னர் உறுதியாக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராட வேண்டும் எனவும் வழிகாட்டினார்.  ஆச்சார்யா சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பிரதிநிதியாக கலந்து கொண்டார். சென்னை திரும்பிய ஆச்சார்யா ‘இந்தியா’ இதழைத் தொடர்ந்து நடத்தி வந்தார். ஆங்கிலேய அரசின் அடக்குமுறை தீவிரமடைந்தது. 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ‘இந்தியா’ இதழின் அலுவலகம் சோதனையிடப்பட்டது. இனி மேலும் சென்னையிலிருந்து  ‘இந்தியா’ இதழை நடத்த இயலாது என்பதை உணர்ந்த ஆச்சார்யா, புதுவையிலிருந்து 1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘இந்தியா’ இதழை நடத்தினார். லண்டனிலிருந்து வ.வே.சு ஐயர், புதுவையிலிருந்து வெளி வந்த ‘இந்தியா’ இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். 

                வ.வே.சு ஐயருடன் தொடர்பு கொண்டு 1908 ஆம் ஆண்டு லண்டனுக்குச் சென்றார். அங்கு இந்தியா இல்லத்தில் தங்கியிருந்த ஆச்சார்யா, இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த வீர சாவர்க்கர் எழுதிய ‘இந்திய சுதந்திரப் போர்’ என்ற நூலைப் பதிப்பித்து, ரகசியமாக இந்தியாவுக்குள் அனுப்பி வைத்தார். 

                ஆச்சார்யா, ஜெர்மன் கப்பல் மூலம் ஜிப்ரால்டர் வந்தடைந்து, ரிப்ஸ் குழுவினருடன் இணைந்து பிரெஞ்சு, ஸ்பானிஷ் படையெடுப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டார். மொரக்கோ சென்று, அங்கு தங்கள் தாயக விடுதலைக்காகப் போரிட்டுக் கொண்டிருந்த மூர்களுடன் ஆயுதப் போர்ப் பயிற்சினை மேற்கொண்டார்.

                வ.வே.சு. ஐயரின் ஆணைப்படி 1909 ஆம் ஆண்டு அக்டோபரில் ஆச்சார்யா பாரீஸ் சென்றார். ‘தால்வார்’, ‘வந்தே மாதரம்’, ‘இந்திய சமூகவியலாளர்’ முதலிய இதழ்களையும். ‘ஓ! தியாகிகளே!’  முதலிய பிரசுரங்களையும் ரகசியமாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.

                பிரிட்டனின் எதிரியான ஜெர்மனியோடு சேர்ந்து பொருளுதவி, ஆயுத உதவி பெற்று பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்த ‘பெர்லின் இந்திய தேசியக்குழு’ செயல்பட்டது.

                                பெர்லின் இந்திய தேசியக் குழுவில் ஜெய்ஹிந்த் செண்பகராமன், வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, பி.என்.டாட்டா,  எம். என். ராய்,  அபானி முகர்ஜி, ஆச்சார்யா முதலிய தலைவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். இக்குழுவினர், இந்திய விடுதலையைத் தூண்டும் ஏராளமான பிரசுரங்களை ஐந்து இந்திய மொழிகளில் பிரசுரித்து இந்தியாவில் விநியோகித்தனர். ஏராளமான ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் பர்மா எல்லையோரம் குவித்தனர். போர்க் கைதிகளாக ஜெர்மனியில் பிடிக்கப்பட்ட இந்தியச் சிப்பாய்களைக் கொண்டு, இந்திய தேசியப் போராளிகளை உருவாக்க முயன்றனர். மகேந்திர பிரதாப் தலைமையில் தற்காலிக இந்திய அரசை ஆப்கானில் நிறுவி, இந்திய கிளர்ச்சியைத் தூண்டினர்.

                மகேந்திரா பிரதாப் தலைமையில் 1915 ஆம் ஆண்டு ஆப்கனில் தற்காலிக இந்திய அரசு நிறுவப்பட்டது. ஜெர்மனியும், துருக்கியும் அதற்கு ஆதரவளித்தன.

                லண்டன், பாரீசு, பிரஸ்ஸல்ஸ், பெர்லின், ஜீரிச், வியன்னா, கான்ஸ்டாண்டிநோபிள், நியூயார்க், கலிபோர்னியாவிலுள்ள பர்க்லி, ஸ்டாக்ஹோம், காபூல், தாஷ்கண்ட், மாஸ்கோ எனப் பரவலாகச் சுற்றுப்பயணம் செய்து தமது பணிகளைத் தொடர்ந்தார் ஆச்சார்யா.!

                “ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களின் நலன்களும் ஒரே மாதிரியானவை தான் என்ற கருத்தினை நாங்கள் கொண்டிருக்கிறோம். ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட ஏகாதிபத்தியம் வீழ்த்தப்படும் வரை உலக சமாதானத்திற்கு எதிர்காலமில்லை. அது மட்டுமின்றி, முதலாளிய, ராணுவ வர்க்கங்களின் அதிகாரமும் வீழ்த்தப்பட வேண்டும் என்பதே எங்களது கருத்தாகும்.”- என வெளிநாடுகளில் தீவிரமாகப் பணியாற்றி வந்த இந்திய தேசியப் புரட்சியாளர்கள் அறிவித்தனர்.

                ஜெர்மனி மீது நம்பிக்கையிழந்த இந்தியப் புரட்சியாளர்கள் ரஷ்யப்புரட்சி வெற்றிபெறும் தருவாயில் லெனினோடும், போல்ஷ்விக் கட்சியோடும் தொடர்பு கொள்ள விரும்பினர். 1917 ஆம் ஆண்டு மத்தியில் போல்ஷ்விக் கட்சிப் பிரதிநிதி ட்ராய நோவ்ஸ்கியைச் சந்தித்து, ரஷ்யக், கட்சியோடு ஆச்சார்யா தொடர்பு கொண்டார்.

                ஆப்கனில் தற்காலிக இந்திய அரகின் தலைவராக இருந்த மகேந்திர பிரதாப் தலைமையில், 1919 ஆம் ஆண்டு ஜீலை மாதம் இந்தியப் புரட்சியாளர் குழு இரஷ்ய புரட்சித் தலைவர் லெனினைச் சந்தித்தது. அக்குழுவில் ஆச்சார்யா, அப்துர் ராப்பார்க், தலீப்சிங்கில், முகம்மது பர்க்கத்துல்லா, இப்ராஹிம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 1920 முதல் 1922 வரை ஆச்சார்யா இரஷ்யாவிலேயே தங்கியிருந்து, மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் நடத்திய இரண்டாவது, மூன்றாவது மாநாடுகளில் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

                ஸ்டாக்ஹோமில் போல்ஷ்விக் பிரதிநிதி கிரில் ட்ராயநோஸ்கியுடன் கொண்டிருந்த தொடர்பினாலும், சூரிட்ஸ், ரெய்ஸ்னர் முதலிய சோவியத் அரசுப் பிரதிநிதிகளின் தொடர்பினாலும் தான் கம்யூனிஸ்ட் ஆனதாக ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

                தாஷ்கண்டில் 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி, எம்.என். ராய் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. அக்குழுவில் ஆச்சார்யா அங்கம் வகித்தார். 1920 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ஆச்சார்யா தலைவராகவும்,  சித்திக் செயலாளராகவும் அறிவிக்கப்பட்டனர். பதிமூன்று பேர் கொண்ட கட்சியாக அது திகழ்ந்தது.

                ரஷ்யாவிலிருந்து 1923 ஆம் ஆண்டு பெர்லின் சென்றார். 1935 வரை அவர் ஜெர்மனியில் இருந்தார். இருபத்து ஆறு ஆண்டுகள் வெளி நாடுகளில் வாழ்ந்த ஆச்சார்யா, பதினான்கு ஆண்டுகள் புரட்சிகரப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். மாக்டா நாட்ச்மன் என்ற போலந்து நாட்டுப் பெண்மணியை மணந்து வாழ்க்கை நடத்தினார். 1938 ஆம் ஆண்டு,  ‘மராட்டா’ என்ற இதழில், ‘ஒரு புரட்சியாளனின் நினைவுக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் எட்டுக் கட்டுரைகள் எழுதினார். மகாத்மா காந்தியடிகளின்  ‘ஹரிஜன்’ இதழில் இருபது கட்டுரைகள் எழுதினார். தாய் மண்ணின் அடிமை விலங்கொடிக்க, தரணியெங்கும், இந்திய சுதந்திரக் கொடியேந்தி சுற்றித் திரிந்த, தமிழகத்தில் பிறந்த புரட்சியாளர் ஆச்சார்யா. 1954 ஆம் ஆண்டு தமது 67-ஆம் வயதில் மும்பையிலுள்ள ‘பாட்டியா’ பொது மருத்துவமனையில் உயிர் நீத்தார், சுதந்திரக் காற்றை சுவாசித்தப்படியே!

- பி.தயாளன்

Pin It