பருத்தி, நெல் விளைச்சலுக்கு உரிய தட்பவெப்பம், பருவகாலங்கள், நோய் தடுப்பு முறைகள், மண்வளம், உரங்கள் போன்ற வேளாண் தொழில்நுட்பங்களை அளித்து இந்திய அறிவியல் துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்தவர் ருஸ்தம் ஹார்முஸ்ஜி தஸ்தூர்.

                குஜராத் மாநிலம் சூரத் நகரில், ஹார்முஸ்ஜி-நவாஸ்பாய் தம்பதியினருக்கு மகனாக 07.03.1896-ஆம் நாள் பிறந்தார். சூரத் சர்வஜானிக் உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிகுலேஷன் கல்வியையும், அகமதாபாத்தில் உள்ள குராத் கல்லூரியில் பயின்று தாவரவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.

                குஜராத் கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவரான பேராசிரியர் டபிள்யூ.டி.சாக்டன் வழிகாட்டுதலால், மும்பையில் ராயல் அறிவியல் நிறுவனத்தில் துணை விரிவுரையாளராகவும், சிறந்த தாவரவியல் நிபுணராகவும் விளங்கினார் தஸ்தூர்.

                ஒளிச்சேர்க்கையில் நீரின் அளவு முக்கிய காரணி என்பதை ஆராய்ந்து தமது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையை 1924-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்து வெளியாகும் தாவரவியல் காலாண்டிதழில் எழுதினார் தஸ்தூர். மேலும், தாவர ஒளிச்சேர்க்கை வினை வேகத்தினை அளக்கும் நுட்பத்தினையும் கண்டுபிடித்தார்.

                எள், மிளகு, அவரை முதலிய படர்கொடிகள் சுருண்டு வளர்வதற்கான காரணத்தைக் கண்டறிந்து வெளியிட்டார். அதாவது, இவ்வகைக் கொடிகளின் உட்சுவர் செல்கள் ஒரே மாதிரி அமைவதில்லை. இவை சுவாசிக்கும்போது சாதாண செடிகளைவிடக் குறைவான அளவே மூச்சுவிடுகின்றன. அதனால், கரியமில வாயுவை குறைந்த அளவே வெளியிடுகின்றன. அவைகளின் உள்வெப்பம் அதிகரிப்பதும் இல்லை. ஆதலால் முதிர்ச்சியடைந்த கொடிகளில் உறிஞ்சப்படும் நீரின் அளவு அதிகரிக்கிறது என்பதையும் அறிவித்தார்.

                வெங்காயத்தோல் சாதாரண மின் விளக்கு வெளிச்சத்தைக் காட்டிலும் பகல் சூரிய ஒளியில் மூன்ற மடங்கு கார்போஹைட்ரேட் மாவுச் சத்தைத் தயாரிக்கிறது என்பதை மற்றொரு சோதனை மூலம் அறிவித்தார்.

                நெல்பயிருக்கு அம்மோனியம் நைட்ரேட்டு மிக உகந்தது எனும் உண்மையைக் கண்டறிந்தார். சாதாரண நெற்பயிர் வளரும்போது மண்ணிலிருந்து வேர்கள் மூலமாகவும், இலைகள் வழியாகவும் நீர் உறிஞ்சும். அம்மோனியம் உரமிட்டால் ஆரம்ப நிலையில் பயிரின் நீர் உறிஞ்சும் வேகம் அதிகரிக்கும். பயிர் முற்றும் நிலையில் பொட்டாசியம் உரம் இவ்வினையை ஊக்குவிக்கிறது. எனவே, அம்மோனியம் நைரட்ரேட்டு உரம் நெல் மகசூலுக்கு மிக ஏற்றது என்பதைக் கண்டுபிடித்தார்.

                ஒளிச்சேர்க்கை மூலம் பயிர்கள் கார்போஹைட்ரேட் சத்து தயாரிக்கும் வேகம் பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுபடும் என்பதைத் தமது பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்தார்.

                அமெரிக்கப் பருத்தி வகை பஞ்சாப் மாநிலத்தில் அதிகம் விளையும்; அப்பருத்தி வகை “திரக்” என்னும் நோய் ஏற்பட்டு விவசாயிகள் கடனாளியானார்கள். இந்நோய் பருத்தியில் ஏற்படக் காரணம் நைட்ரஜன், சுண்ணாம்பு, பொட்டாசியம் சத்துகள் குறைவேயாகும் என்பதையும் கண்டுபிடித்தார். இந்த நோயைப் போக்க, மண்ணில் அம்மோனியம் சல்பேட்டு உரம் கலந்திட வேண்டுமென வலியுறுத்தினார். தஸ்தூரின் கண்டுபிடிப்பினால் நாடு முழுவதும் விளைச்சல் அமோகமடைந்தது.

                இந்திய தேசிய அறிவியல் நிறுவனத்தின் அடிப்படைச் சான்றோராக 1935-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இந்திய அறிவியல் பேரவையின் தாவரவியல் பிரிவிற்கும், தாவரவியல் கழகத்திற்கும் தலைவராக 1959-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                பஞ்சாப் மாநிலத்தில் பருத்தி வேளாண்மை பெருக்கத்திற்காக தஸ்தூர் ஆற்றிய மகத்தான தொண்டினைப் பாராட்டி 1945-ஆம் ஆண்டு இந்திய அரசு ஓ.பி.இ. (O.B.E) விருது வழங்கிச் சிறப்பித்தது.

                வேளாண் பொருளாதார வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட தஸ்தூர், மும்பையில் நடைபெற்ற இந்திய மத்திய பருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள மும்மைபக்குச் சென்றார். அங்கு 01.10.1961-ஆம் நாள் திடீர் மரணமுற்றார். அவர் மறைந்தாலும், இந்திய வேளாண் அறிவியலுக்கு அவர் செய்த தொண்டு என்றம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

Pin It