பழந்தமிழக நாகரிகமும் களப்பிரர்களும்:
களப்பிரர் ஆட்சியின் (கி.பி.250-550) தொடக்ககால கொடூர வன்முறையும், அதனைத் தொடர்ந்து வந்த அவர்களது 300 ஆண்டுகால ஆட்சியும் மிகப் பெரிய சமூக அரசியல் இடைவெளியை உருவாக்கி இருந்தது. பண்டைய தமிழ்ச் சமூகத்தின் 1000 ஆண்டுகால நகர நாகரிகப் பண்பாடு என்பதன் சுவடே இல்லாது போனதோடு, அவை பற்றிய எந்தவிதச் சிந்தனையும் இல்லாத ஒரு பின் தங்கிய கிராமச் சமூகமாகவும், மத, சமயச் சிந்தனையில் ஆழ்ந்து போன, படிப்பறிவோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாத, மூட நம்பிக்கையும் வெற்றுச் சடங்குகளையும் கொண்ட சமூகமாக களப்பிரர் காலச் தமிழ்ச் சமூகம் ஆகிப்போயிருந்தது. பழந்தமிழ்ச் சமூகத்தின் 1000 ஆண்டுகால கல்வியறிவும் தொழில்நுட்ப அனுபவமும் உருவாக்கி இருந்த பல்வேறு துறை சார்ந்த நூற்றுக்கணக்கான நூல்களும் இல்லாது போயிருந்தன.
மிகப்பிரமாண்டமான கப்பல்களையும், கட்டடங்களையும் கட்டுகிற அவற்றைப் பராமரிக்கிற தொழில்கள், நீர்ப்பாசனம், வேளாண்மைத் தொழில்கள், பல்வேறு வகையான உலோகவியல் தொழில்கள், சுரங்கத் தொழில்கள், சமூகத்துக்குத் தேவையான பல்வேறு பொருட்களை தயாரிக்கும் தொழில்கள் என இவை போன்ற ஏராளமான தொழில்கள், வானவியல், சோதிடம், கணிதம், சித்த வைத்தியம், வர்மக்கலை, சிலம்பம், களரி போன்ற தற்காப்புக் கலைகள், போர்க் கலைகள், இசை, நடனம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள், தத்துவம் சார்ந்த விடயங்கள் போன்ற பல்வேறு வகையான அறிவியல் தொழில்நுட்ப விடயங்களும் அவை சார்ந்த நூற்றுக்கணக்கான நூல்களும் அழிந்து போயின. பழந்தமிழ்ச் சமூகம் மிகப் பெரிய பேரழிவை சந்தித்தது என்பதைவிட அதன் 1000 ஆண்டுகால அனுபவ, அறிவியல் தொழில்நுட்ப அறிவு என்பவைகள் சுவடே இல்லாமல் அழிந்து போனது என்பது மிகப் பெரிய இழப்பாகும். இன்றுவரை தமிழ்ச் சமூகம் அதனை அறிந்து கொண்டதாகவோ, உணர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை. ஏராளமான இலக்கிய நூல்கள் அழிந்து போனதை மட்டுமே அது அறிந்துள்ளது. பலவகைப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் அழிந்து போனதைக் குறித்த எந்தவிதச் சிந்தனையும் தமிழ் சமூகத்திற்கு இன்றுவரை இருப்பதாகத் தெரியவில்லை.
கீழடி அகழாய்வு கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே பழந்தமிழகம் மிகப் பரவலான கல்வியறிவு கொண்ட சமூகமாக இருந்துள்ளது என்பதையும் பழ்னஹ்தமிழகத்தில் வளர்ச்சி பெற்ற நகர நாகரிகம் இருந்துள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளது. கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் உலகில் வேறு எந்த சமூகத்திலும் தமிழகம் அளவிலான மிகப் பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இருக்கவில்லை(1). ஆதிச்ச நல்லூர் கி.மு. 1500 வாக்கிலேயே ஒரு தொழில் நகராக இருந்துள்ளது. கி.மு. 1500 வாக்கிலேயே குறியீடுகள் தமிழ் மொழிக்கான எழுத்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கி.மு. 8ஆம் நூற்றாண்டிலிருந்தே ‘தமிழி’ எழுத்தை தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். கி.மு. 750 முதலே சங்க இலக்கியம் உருவாகத் தொடங்கிவிட்டது. தமிழரசுகளிடையே 1000 ஆண்டுகாலமாக ஐக்கியக்கூட்டணி இருந்துள்ளது. அதன்மூலம், மிகப்பெரிய கடற்படைகொண்டு இந்தியாவின் மேற்கு கிழக்குக் கடற்கரைகளையும், தென்கிழக்கு ஆசியாவையும் தங்கள் வணிகக் கட்டுப்பாட்டிலும், தக்காணப் பகுதிகளைத் தங்கள் அரசியல் அதிகாரத்தின் கீழும் தமிழரசுகள் வைத்திருந்தன (2).
1000 ஆண்டுகளுக்கும் மேலாக கிரேக்க நகர அரசுகளுக்கு இணையாக சில விடயங்களில் அதைவிட மேம்பட்ட நூற்றுக்கணக்கான வளர்ச்சி பெற்ற நகர அரசுகளைக்கொண்ட சமூகமாகப் பழந்தமிழ்ச் சமூகம் இருந்துள்ளது. இவை அனைத்தும் இவை உருவாக்கிய அறிவியல் தொழில்நுட்ப நூல்களும் சுவடே இல்லாமல் அழிந்து போவது என்பது மனித இன வரலாற்றில் மிகப்பெரிய கொடுமையாகும். இந்நூல்களில் ஒரு சிறுபகுதி ஆகமங்களில் வடமொழியின் கிரந்த எழுத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நூல்களைக் கொண்டுதான் சமற்கிருத மொழி ஒரு அறிவியல் மொழியாக வளர்ச்சி பெற்றது. ஆனால் இனக்குழு நிலையில் அநாகரிக மக்களாக வாழ்ந்த, வேத இலக்கியம் என்ற நாட்டார் பாடல்களைக் கொண்ட வேதகால நாகரிகத்தில் இவை அனைத்தும் உருவானதாக வைதீக பார்ப்பனியம் கூறி வருகிறது. வடமொழியில் உள்ள சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும், பரத நாட்டிய சாத்திரம் என்ற இசைநாட்டிய நூலும் இன்னபல நூல்களும் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டவை (3). ஆனால் தமிழில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட தகவல் மறைக்கப்பட்டுள்ளது. கி.பி. 300ல் இருந்து காஞ்சி நகரம் தமிழகத்தின் அறிவியல் மையமாக ஆகியிருந்தது. அங்குதான் இந்த மொழி பெயர்ப்புகள் நடைபெற்றன. தமிழ் அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் அனைத்தும் பொருள்முதல்வாத மெய்யியல் அடிப்படையைக் கொண்டு உருவானதால் அவை அனைத்தும் சமண, பௌத்த, வைதீக சமயங்களால் அழிக்கப்பட்டன. ஒரு மிகப் பெரிய நாகரிகத்தின் ஒரு மிகப்பெரிய அறிவியல் தொழில்நுட்பக் கருவூலம் இருந்த சுவடே இல்லாமல் அழிந்து போனது.
இடைக்காலப் பாண்டியர்கள்:
கி.பி. 550 வாக்கில் களப்பிரர்களிடமிருந்து வடக்கே பல்லவர்கள் சோழர் பகுதியையும், தெற்கே பாண்டியன் கடுங்கோன் என்பவன் பாண்டியப் பகுதியையும் கைப்பற்றிக் கொண்டனர். கடுங்கோன் சங்ககால பாண்டியர்களின் நேரடி வாரிசாக இருக்க வாய்ப்பில்லை எனினும் அவர்களின் கிளைக் குடும்பங்களில் இருந்து உருவானவனாக இருக்கலாம். களப்பிரர் காலத் தமிழ்ச் சமூகம் ஒரு பின் தங்கிய கிராமச் சமூகமாகவும், மத, சமயச் சிந்தனையில் ஆழ்ந்து போன சமூகமாகவும் ஆகியிருந்தது என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். பண்டைய நகர நாகரிகம் குறித்த நினைவை அடியோடு இழந்து போயிருந்தது. திருமூலர், காரைக்கால் அம்மையார் போன்ற பக்தி இயக்க மூலவர்கள் உருவாகியிருந்தனர். களப்பிரர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு நிறையப் பிரமதான நிலங்கள் வழங்கப் பட்டிருந்தன. முதலில் பிராகிருதமும் பின் சமற்கிருதமும் களப்பிரர்களின் ஆட்சி மொழியாக ஆகியிருந்தது. இந்த நிலையில்தான் இடைக்காலப் பாண்டியன் கடுங்கோன் பாண்டிய ஆட்சியைக் கைப்பற்றியிருந்தான். பழந்தமிழக நகர நாகரிகத் தமிழ்ச் சமூகம் குறித்த ஒரு தெளிவற்ற சிந்தனை கொண்டவர்களாகவே இந்தப் பாண்டியர்கள் இருந்தார்கள். பெரும்பாலான அறிவியல் தொழில்நுட்ப விடயங்களை இழந்து போயிருந்த தமிழ்ச் சமூகம் மீண்டும் தொடக்க நிலையில் இருந்து தொடங்க வேண்டியிருந்தது.
தனது பெருமை மிகு அடையாளத்தையும், சுய நம்பிக்கையையும் பெருமித உணர்வையும் இழந்து போயிருந்த தமிழ்ச் சமூகம், தமிழ் மொழியின் சிறப்பு குறித்த அறியாமையால், மிக எளிதாக சமற்கிருதத்தை அறிவியல் மொழியாக ஏற்றுக் கொண்டது. தின்னாகர் போன்ற இந்திய அளவையியலின் தந்தை எனப்படும் புகழ்பெற்ற அறிஞர்கள் கூட தமிழராக இருந்த போதும் தங்களது நூல்களை சமற்கிருதத்தில்தான் எழுதினார்கள். இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு அனைத்தும் தமிழில்தான் இருந்தது என்பதையும் பெரும்பாலான சமற்கிருத அறிவு என்பது தமிழில் இருந்து களவாடப்பட்ட அறிவு என்பதையும் அவர்கள் அறியாதவர்களாக இருந்தார்கள். இந்த நிலைதான் இன்றுவரை தொடர்கிறது. கீழடி அகழாய்வுதான் பலரின் கண்களைத் திறக்க வைத்துள்ளது. இன்றே இந்த நிலை எனும்பொழுது கி.பி. 6ஆம் நூற்றாண்டின் நிலைமையை, அக்காலகட்டச் சூழ்நிலையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமண பௌத்த மதங்களும் பொருள்முதல்வாதமும்:
உலகாயதம், பூதவாதம், சாங்கியம், ஆசிவகம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள், சங்கம்மருவிய காலத்தில் வைதீக சமயம் சார்ந்த கருத்துகளாலும், சமண, பௌத்த மெய்யியல் கருத்துகளாலும் பாதிப்புக்குள்ளாகி வந்தன. அதனால் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களின் வலிமையான அடித்தளம் சங்கம் மருவிய காலத்திலேயே பலவீனமடையத் தொடங்கியிருந்தது. அதன்பின் நடந்த களப்பிரர்களின் படையெடுப்பும், அதன் தொடக்ககால வன்முறையும், அதன் பிந்தைய ஆட்சியும், சமண பௌத்த மதக் கருத்துகளும் முன்பே பலவீனமடைந்திருந்த தமிழ்ச் சமூகத்தின் பொருள்முதல்வாத மெய்யியல் அடித்தளத்தை அடியோடு அழித்தொழித்தன. அவை சம்பந்தமான நூல்கள் அனைத்தும் இல்லாது ஒழிந்தன. இவற்றின் காரணமாக தமிழகத்தின் சமூக அடித்தளமாக 1000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் மிகப்பெரிய வீழ்ச்சிக்குள்ளாகின. எனினும் பக்திகாலகட்டம் வரை பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் தமிழ்ச் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற கருத்துகளாகவே இருந்து வந்தன. ஆனால் அதன் பொருளாதார அடித்தளம் களப்பிரர் காலத்தில் அழிக்கப்பட்டிருந்தது. அதன் தத்துவார்த்த அடித்தளம் சமண பௌத்த மதக் கருத்துகளால் உள்வாங்கப்பட்டிருந்தது. பக்தி காலத்திற்குப் பின்னர் வைதீக மெய்யியல் கருத்துகள் தமிழ்ச் சமூகத்தில் மேலாதிக்கம் பெறத் தொடங்கின.
கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில் (கி.பி. 640) தமிழகம் வந்திருந்த யுவான் சுவாங் (Hiuen-Tsang), மலைக்கோட்டைப் பாண்டிய அரசில் இருந்த பொது மக்களின் சமயநிலை குறித்து, “சிலர் உறுதியான கோட்பாடுகளை நம்பினார்கள்; சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்; அவர்கள் ஆன்மீக விடயங்களைத் தெரிந்து கொள்வதை உயர்வாகக் கருதவில்லை; வணிக நோக்குடனும் இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டும் இருந்தனர். பெண்களின் கன்னிகா மடங்கள் (Convents) பல இங்கு (இடிபாடுகளுடன்) காணப்படுகின்றன. இவற்றின் சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மத நம்பிக்கை உள்ள ஒருசிலர் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான பார்ப்பனக் கோயில்கள் (Deva Temples) இருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் நிகிரத்தப் பிரிவைச் சேர்ந்த சமணத்துறவிகள் உள்ளனர். நகரத்தின் (மதுரையாக இருக்கலாம்) கிழக்குப்பகுதியில் ‘சங்காராமா’ எனப்படும் பௌத்தப்பள்ளி காணப்பட்டது. இதன் தலைவாயிலும் கூடமும் மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றிலும் புதர்கள் மண்டி அடித்தளம் மட்டுமே எஞ்சியுள்ளது. இது அசோக மன்னரின் இளைய சகோதரர் மகேந்திரரால் கட்டப்பட்டது. இதன் கிழக்கில் தூபம் ஒன்று காணப்படுகிறது. இதன் பெரிய மதில்கள் மண்ணில் புதைந்துள்ளன. கவிந்த கூரைப்பகுதி மட்டுமே எஞ்சி உள்ளது. இது அசோக மன்னரால் கட்டப்பட்டது” எனச் சொல்வதாக வின்சென்ட் சுமித் (Vincent A. Smith) கூறுகிறார் (4)
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் முக்கியமாக பாண்டிய நாட்டில் இருந்த நிலைமை இது. இக்காலகட்டம் பக்தி இயக்கம் தீவிரமாக வளர்ந்துகொண்டிருந்த காலகட்டம். எனினும் மக்கள் இன்னும் பொருள்முதல்வாதக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது. ‘மத நம்பிக்கை உள்ள ஒரு சிலர் இருக்கிறார்கள்’ என்கிறார் யுவான் சுவாங். அதாவது பொதுமக்களில் ஒருசிலர் மட்டுமே மத நம்பிக்கையோடு இருக்கின்றனர் என்கிறார். அதே சமயம் ‘சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்’ என்கிறார். இந்தச் சமய மறுப்பாளர்கள் என்பவர்கள் பண்டைய பூதவாதம் (உலகாயதம்) போன்ற நாத்திகக் கொள்கை கொண்டவர்கள் எனலாம். ‘சிலர் உறுதியான கோட்பாடுகளை நம்பினர்’ என்கிறார். அவர்கள் மத நம்பிக்கை உடையவர்கள் அல்லர், ஆனால் உறுதியான கோட்பாடுகளை நம்பினர் என்கிறார். உறுதியான கோட்பாடுகள் என்பது, எண்ணியம்(சாங்கியம்) சிறப்பியம் (வைசேடிகம்), அளவியல் (நியாயவியல்) போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கோட்பாடுகளாக இருக்கலாம். பொதுமக்களில் பலர் வணிக நோக்கோடும், இலாப நோக்கோடும் இருந்துள்ளனர். நூற்றுக்கணக்கில் பார்ப்பனக் கோயில்கள் இருந்தன என்கிறார். பக்தி இயக்கத்தின் விளைவாகக் கோயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி விட்டது. சமணத்துறவிகள் அதிகளவில் இருந்தனர் என்கிறார். பௌத்தம் தமிழகத்தில் அழிந்த பின்னரும் 14ஆம் நூற்றாண்டுவரை சமணம் தமிழகத்தில் இருந்து வந்தது. கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில் சமணம் ஓரளவு வலுவாக இருந்ததன் காரணமாகவே அதனை அழிப்பதில் பக்தி இயக்கம் தீவிரம் காட்டியது.
பக்தி இயக்கம் தமிழ்ச் சமூகம் முழுவதும் பரவி, தமிழகத்தில் வலுவாகக் காலூன்றிய காலமான 8ஆம், 9ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் தான் இந்நிலை மாறி வைதீகச் சிந்தனையின் ஆதிக்கம் தமிழகம் முழுவதும் பரவி நிலைத்து விடுகிறது. ஆனால் 7ஆம் நூற்றாண்டிலேயே பௌத்த மத நிறுவனங்கள் அழிவை நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டன என்பதைப் பௌத்தப் பள்ளிகளும் அதன் கன்னிகா மடங்களும் புதர்கள் மண்டி இடிபாடுகளுடன் இருப்பது காட்டுகிறது. பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் தமிழ்ச் சமூகத்தில் வலிமை பெற்றிருந்தவரை தமிழ்ச் சமூகம் நல்ல வளர்ச்சி நிலையில் இருந்தது. சங்ககாலத்தில் தமிழ்ச் சமூகம் பரவலான கல்வியறிவையும் எழுத்தறிவையும் கொண்டிருந்தது. தொழில் நுட்ப வளர்ச்சியிலும், உற்பத்தித் திறனிலும், உலகளாவிய வணிகத்திலும் தொடர்ந்து வளர்ச்சி பெறும் சமூகமாக இருந்து வந்தது. சங்கம் மருவிய காலத்தில் இவ்வளர்ச்சி மேலும் வளர்ந்து உச்சகட்டத்தைத் தொட்டது.
அதே சமயம் சமூக மேல்தளத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்களும், சமூக அடித்தளத்தில் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், உற்பத்தி முரண்பாடுகளும் வளர்ந்து உச்சநிலையை அடைந்தன. மணிமேகலைக் காப்பியம் சமூக மேல்தளத்தில் கடுமையான கருத்து மோதல்கள் நடைபெற்றன என்பதையும், சிலப்பதிகாரக் காப்பியம் சமூக அடித்தளத்தில் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், வணிகர்கள் அரசனுக்கு எதிராக நின்றதையும் தெளிவுபடுத்துகின்றது. மூவேந்தர்களிடம் இருந்த பேரரசுக்கொள்கையின் தாக்கம் ஆதிக்கக் கண்ணோட்டத்தை வளர்த்து, தமிழகத்தின் வடஎல்லையில் பாதுகாப்பு அரணாகவும், கொங்கு, தொண்டை மண்டலங்களில் சுதந்திரத் தனி அரசுகளாகவும் இருந்த பல குறுநில மன்னர்களையும் வேளிர்களையும் அழித்து ஒழிக்கக் காரணமாகியது. சமூகத்தளத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்களும், ஏற்றத்தாழ்வுகளும்; சுதந்திரத் தனி அரசுகள் அழிக்கப்பட்டதும்; சர்வதேசக் காரணங்களால் ஏற்பட்ட தமிழக வணிகத்தின் வீழ்ச்சியும்; தமிழகத்தின் வடக்கே இருந்த சாதவாகனர்களின் வீழ்ச்சியும்; களப்பிரர் படையெடுப்புக்குக் காரணமாகி, தமிழகத்தின் வீழ்ச்சிக்கு வழிகோலியது. இந்தப் பேரரசுக்கொள்கைக்கு சமயம் சார்ந்த சிந்தனைகள் பேரளவான ஆதரவை வழங்கின.
சமண, பௌத்த மதக் கருத்துகளின் ஆதிக்கத்திற்குப் பின்னரே தமிழ்ச் சமூகம் பரவலான எழுத்தறிவை, கல்வியறிவைப் பெற்றது எனக் கருதப்படுகிறது. அது உண்மையல்ல. சமண, பௌத்த மதக் கருத்துகள் வலுவாக ஆதிக்கம் பெற்ற வட இந்தியாவிலும், தமிழகம் தவிர்த்த பிற தென்னிந்தியப் பகுதியிலும் பரவலான கல்வியறிவோ எழுத்தறிவோ இருக்கவில்லை. மேலும், சமண, பௌத்த மதக் கருத்துகள் சங்கம் மருவிய காலத்திற்குப் பின்னர் களப்பிரர்கள் காலத்தில்தான் தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றன. ஆனால் அதற்கு முன்னரே அதாவது கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழகம் பரவலான எழுத்தறிவை, கல்வியறிவைப் பெற்றிருந்தது. கீழடி அகழாய்வின் 4ஆம் காலகட்ட ஆய்வறிக்கை கி.மு. 580இல் தமிழர்கள் பரவலான கல்வியறிவும், எழுத்தறிவும் பெற்றிருந்தார்கள் என்பதை உறுதி செய்கிறது (5). அன்று சமண, பௌத்த மதங்கள் தோன்றியிருக்கவில்லை. எனவே தமிழகத்தின் பரவலான கல்வியறிவுக்கு சமண, பௌத்த மதங்கள் காரணமல்ல. தமிழ்ச் சமூகத்தில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துகளும், தமிழகத்தின் நகர்மைய அரசுகளில் இருந்த, சுதந்திரமான தனி அரசுகளும்தான் இந்தப் பரவலான கல்வி அறிவுக்கும், எழுத்தறிவுக்கும் காரணம். தமிழகத்தின் அறிவியல் தொழில்நுட்பம், பேரளவான பொருள் உற்பத்தி, இலக்கிய வளர்ச்சி, உலகளாவிய வணிக வளர்ச்சி போன்றவைகளுக்கும் இவைகளே காரணம். சமண பௌத்த மதங்களல்ல.
தமிழ் அடையாளமும் தமிழ்ப்பற்றும்:
களப்பிரர்காலத் தமிழ்ச்சமூகம், பின்தங்கிய பிற்போக்கான சிந்தனை கொண்டதாகவும், மத சமயச் சிந்தனையில் ஆழ்ந்து போனதாகவும் இருந்ததால் சமண, பௌத்த, வைதீக மதங்களுக்கிடையேயும், களப்பிரர் என்ற அந்நிய ஆட்சியாளர்களிடையேயும் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது. பாண்டியர் ஆட்சி ஓரளவு அவர்களுக்கு விடுதலையை வழங்கியிருந்தது. 1000 ஆண்டுகால நகர நாகரிகம் அவர்களைத் தமிழ் அடையாளம் கொண்டவர்களாகவும், தமிழ்ப் பற்று கொண்டவர்களாகவும் ஆக்கியிருந்தது. ஆனால் அவர்கள் களப்பிரர்கால ஆட்சியில் தங்களது தமிழ் அடையாளத்தை இழந்து போயிருந்தனர் எனினும், தமிழ்ப் பற்று கொண்டவர்களாக இருந்தனர். அன்று இழந்து போன தமிழ் அடையாளம் இன்றுவரை மீட்கப்படவில்லை என்பது வருத்ததுக்குரிய விடயம். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து உற்பத்தியும் சந்தையும் மிக அதிக அளவில் பெருகி, உலகளாவிய அளவில் வணிகம் நடைபெற்று வணிக முதலாளித்துவத்திற்கான கூறுகள் வளர்ச்சியடையும் பொழுது மட்டுமே ஒரு சமூகம் தன்னை மொழியால் அடையாளப் படுத்திக் கொள்ளும். 2000 ஆண்டுகட்கு முன்பே தமிழ், சீனம், கிரேக்கம் ஆகிய மூன்று சமூகங்கள் மட்டுமே மொழி அடையாளத்தைக் கொண்டிருந்தன.
தமிழ்ச் சமூகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவிலேயே தன்னை ஒரு தமிழ்ச் சமூகமாக அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு வளர்ச்சி பெற்ற சமூகம். ஆனால் களப்பிரர் படையெடுப்புக்குப் பின்பு அது தனது தமிழ் அடையாளத்தை இழந்து போயிருந்தது. ஆனால் அதன் ஆழ்மனதில் தமிழ்ப்பற்று இருந்து வந்தது. களப்பிரர் காலத்தில் முதலில் பிராகிருதமும் பின் சமற்கிருதமும் ஆட்சி மொழிகளாக இருந்தன. தமிழ் கீழ்மக்களின் மொழியாகத் தரம் தாழ்ந்து போயிருந்த போதும் மக்கள் தமிழ்ப் பற்று உடையவர்களாகவே இருந்தனர். இந்தத் தமிழ்ப் பற்றையும் தமிழிசையையும் அடிப்படையாகக் கொண்டுதான் பக்தி இயக்கம் வெற்றி பெற்றது.
பக்தி இயக்கம் – தமிழின் மறுமலர்ச்சி:
சைவ சமய ஆழ்வார்களைப்போலவே வைணவ நாயன்மார்களும் பக்தி இயக்க காலத்தில் வைணவத்தைப் பரப்பினர். கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நடைபெற்ற பக்தி இயக்கம் சமண, பௌத்த மதங்களை இல்லாதொழித்தது. சைவ, வைணவ சமயங்கள் தமிழகத்தில் உறுதியாகக் காலூன்ற வழிவகுத்தது. தமிழ் மரபின் மீதான ஆழ்வார், நாயன்மார்களின் ஈடுபாடும், தமிழ் மொழி மீதான அவர்களின் பற்றும் உண்மையானதாகவே இருந்தது. அவர்கள் அனைவரும் தங்கள் கடவுளர்க்கும், தத்துவங்களுக்கும், இன்ன பிற நம்பிக்கைகளுக்கும் தமிழ் அடையாளத்தை வழங்குவதில் உறுதியாக இருந்தனர். சிவனடியார்களும், வைணவ அடியார்களும் தம்முடைய பாடல்களைத் தமிழோடும், தமிழ் இசையோடும் இணைத்துப் பாடியதால்தான் சைவ, வைணவ சமயத்தை தமிழ்ச்சமூகத்தின் அடித்தளம் வரை கொண்டு செல்ல முடிந்தது. ஆகவே இன்றைக்கு 1500 வருடங்களுக்கு முன்பே தமிழ்ப்பற்றுதான் பக்தி இயக்கத்தின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்துள்ளது. எல்லாரும் சமம் என்ற கருத்து பக்தி இயக்கத்தின் உள்ளார்ந்த நோக்கமாக இருந்த போதும் அது இறுதியில் பார்ப்பனியத்தை, தமிழ் மரபுக்கு எதிரான சமத்துவமின்மையை, பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்ற தமிழ் அறத்துக்கு எதிரான வைதீகத்தை தமிழ்ச் சமூகத்தில் நிலைநிறுத்துவதற்கு வழி வகுத்தது. ஆகவே பக்தி இயக்கம் பார்ப்பனியத்தை மறுதலிக்கவில்லை.
அப்பர், சம்பந்தர்:
சைவ சமயத்தைச் சேர்ந்த இந்த இருவர் காலத்தில் சமணம் வலுவோடு இருந்துள்ளது. அதனை எதிர்த்துப் போராடி அதனை வலுவிழக்கச் செய்தவர்கள் இந்த இரு சமயக்குரவர்களும் ஆவர். அப்பர் என்ற திருநாவுக்கரசரின் காலம் கி.பி. 580-661 ஆகும். இவர் சமண மதத்தில் இருந்து சைவ மதத்துக்கு மதம் மாறியவர். பல்லவ மன்னனாக இருந்த மகேந்திர பல்லவனை (கி.பி. 600-630) சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் இவர். திருநாவுக்கரசரின் முதுமைக்காலத்தில் இளைஞராக இருந்தவர் திருஞானசம்பந்தர் என்கிற சம்பந்தர். இவரது காலம் 7ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் எனலாம். இவர் கூன்பாண்டியன் என்ற சுந்தர பாண்டியன் நெடுமாறன் அரிகேசரியை (கி.பி. 640 – 670) சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மதம் மாற்றியவர். இவர்கள் இருவரும் சேர்ந்து பாண்டிய பல்லவ நாடுகளில் இருந்த பெரும்பாலான சமண சமயத்தாரை அழித்து ஒழித்தவர்கள் அல்லது மதம் மாற்றியவர்கள் எனச் சொல்லப்படுகிறது. இதற்கு வடக்கே இருந்த மகேந்திர பல்லவனும், தெற்கே இருந்த கூன் பாண்டியனும் பேருதவி செய்துள்ளனர் (6). கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சம்பந்தர், அப்பர் ஆகிய இருவரும் இணைந்து செயலாற்றி சைவ மதத்தைப் பரப்பியுள்ளனர்.
மணிமேகலையும், குண்டலகேசியும் பொருள்முதல்வாதமும்:
பௌத்த தர்க்கவாதத்தின் தந்தையான தின்னாகர் போன்றவரின் வடமொழி நூல்களை மணிமேகலை நூலின் ஆசிரியர் சாத்தனார் பயன்படுத்தியதாகக் கூறுகிறார் வானமாமலை (7). ஆகவே பௌத்தக் காப்பியமான மணிமேகலை கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தோன்றியது. பூதவாதி (உலகாயதம்), சாங்கியவாதி, வைசேடிகவாதி, அளவைவாதி, வேதவாதி, நிகண்டவாதி (சமணத்தில் ஒரு பிரிவு), சைவவாதி, ஆசிவகவாதி ஆகிய பலர் மணிமேகலையுடன் வாதிடுவதாகச் சாத்தனார் கூறுகிறார். ஆகவே கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பூதவாதி (உலகாயதம்), சாங்கியவாதி, வைசேடிகவாதி, அளவை வாதி, ஆசிவகவாதி ஆகிய பொருள்முதல்வாதச் சிந்தனைகள் இருந்துள்ளன. ஆனால் சாங்கியம் பற்றி மணிமேகலை 24க்குப்பதிலாக புருடனைச்சேர்த்து 25 கூறுகளைக் குறிப்பிடுகிறது. வைசேடிகத்தில் உள்ள பொருளின் 7 பண்புகளில் ஒன்றான இன்மையை விட்டுவிட்டு ஆறு பண்புகளைக் குறிப்பிடுகிறது. ஆகவேதான் கடவுள் மறுப்பைக் கொண்டிருந்த சாங்கியம், நியாயம், வைசேடிகம் ஆகிய தத்துவங்களில் கூட ஆன்மீக வாதமும் தெய்வக் கொள்கையும் புகுந்துவிட்டன எனக் கூறுகிறார் வானமாமலை (8). ஆகவே அன்றே சமண பௌத்த மதங்களும், பார்ப்பனிய வேத மதச் சிந்தனைகளும் தமிழகத்தில் தோன்றிய பொருள்முதல்வாதச் சிந்தனைகளில் பெரும் உடைப்புகளைக் கொண்டு வந்துவிட்டன. பண்டைய தமிழகத்தின் பொருள்முதல்வாதச் சிந்தனையின் வீழ்ச்சி என்பது தான் வைதீக பார்ப்பனியத்தைத் தமிழகத்தில் கொண்டுவருவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தந்தது என்பது மிக முக்கியம்.
சமணக் காப்பியமான குண்டலகேசி கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரர், இராமானுசர், மெய்கண்டார் ஆகியவர்களுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் எனக் கூறுகிறார் வானமாமலை (9). இந்நூலின் கதாபாத்திரமான நீலகேசி என்ற பெண் துறவி மூன்று பௌத்தப் பிரிவுகளையும், சாங்கியம், வைசேடிகம், பூதவாதம், ஆசிவகம் ஆகிய பொருள்முதல்வாதக் கருத்துகளையும் எதிர்த்து வாதிடுகிறாள். இங்கும் சாங்கியம், வைசேடிகம் ஆகியன ஆன்மீகத் தத்துவங்களாகவே கூறப்படுகின்றன. எனினும் பொருள்முதல்வாதக் கருத்துக்களையும் பெருமளவில் அவை உள்ளடக்கியிருந்தன. மணிமேகலை, குண்டலகேசி ஆகிய பௌத்தச் சமணக் காப்பியங்கள் முறையே கி.பி. 6 ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் தமிழில் தோன்றி இருப்பதாலும், அவைகளில் சாங்கியம், வைசேடிகம், அளவியல் (நியாயம்), உலகாயதம் (பூதவாதம்), ஆசிவகம் போன்ற பொருள்முதல்வாதக் கருத்துகள் விவாதிக்கப்பட்டிருப்பதாலும் அன்றைய அளவில் பொருள்முதல்வாதச் சிந்தனைகள் இருந்துள்ளன எனலாம். இதனை யுவான் சுவான் அவர்களின் கூற்றும் உறுதிசெய்கிறது. களப்பிரர் கால வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர் ஆட்சி உருவானபின் மீண்டும் பொருள்முதல்வாதக் கருத்துகள் தமிழ்ச் சமூகத்தில் வளரத் தொடங்கின எனலாம். ஆனால் அவை சமணம் பௌத்தம் வைதீகம் போன்ற வட இந்திய மதச் சிந்தனைகளால் பாதிப்புக்கும், திருத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்த போதும் பொருள்முதல் வாதச் சிந்தனை என்பது பொதுமக்களிடத்தில் செல்வாக்கோடு இருந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால்தான் யுவான் சுவாங், பாண்டிய நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் மத நம்பிக்கை அற்றவர்களாக, உறுதியான கொள்கைகளில் (எண்ணியம், சிறப்பியம், அளவியல், ஆசிவகம் போன்றவற்றில்) நம்பிக்கை உடையவர்களாக, இலாப வணிக நோக்கோடும் இருந்தனர் எனச் சொல்லியுள்ளார். அதேசமயம் நிறைய பார்ப்பனியக் கோவில்களும், சமணத்துறவிகளும் இருந்தனர் என்ற அவரின் கூற்று அக்காலகட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் பெற்றுவரும் வளர்ச்சியை, சமண மதத்தின் வலிமையான இருப்பை வெளிப்படுத்துகிறது எனலாம்.
பாண்டிய நாட்டில் தமிழில் வழிபாடு:
யுவான் சுவாங் கி.பி. 640 வாக்கில் பாண்டிய நாடு வந்துள்ளார். அதன் பின்னர்தான் திருஞான சம்பந்தர், பாண்டியன் நெடுமாறன் அரிகேசரியை (கி.பி. 640 – 670) சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மதம் மாற்றியுள்ளார். ஆகவே அதன்பின்தான் சமண சமயமும் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும் வீழ்ச்சிக்குள்ளாகியுள்ளன. இருந்தபோதிலும் சமண சமயம் 14ஆம் நூற்றாண்டுவரை இருந்துள்ளது. ஆசிவகம் கி.பி. 14ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் செல்வாக்கோடு இருந்தது என ஏ.எல். பாசம் கூறுகிறார் (10). சாங்கியம், வைசேடிகம், அளவியல் (நியாயம்), உலகாயதம், ஆசிவகம், சமணம், பௌத்தம் போன்றவைகள் வைதீக பார்ப்பனியம், சாதியம் ஆகியவைகளுக்கு எதிராக இருந்தவை. இக்காலகட்ட பக்தி இயக்கமும் வைதீகச் சிந்தனைகளுக்கு எதிரானதாகவே இருந்தது. ஆகையால் அன்று வைதீக பார்ப்பனியம் மிகக் கடுமையான எதிர்ப்புகளைப் பாண்டிய நாட்டில் சந்தித்தது. மேலும் பல்லவர் பகுதியில் பார்ப்பனர்கள் கோவிலுக்கு வழிபாடு செய்யவும் குருக்களாக செயல்படவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் பாண்டிய நாட்டில் தமிழர்களான சித்தர் பண்டாரங்கள்தான் தமிழில் வழிபாடு செய்து வந்தனர். 17ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கன் காலத்தில்தான் சித்தர் பண்டாரங்கள் நீக்கப்பட்டு பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டு சமற்கிருத வழிபாடு தொடங்கியது (11). அதுவரை பாண்டிய நாட்டின் அனைத்துக் கோவில்களிலும் சித்தர் பண்டாரங்கள் மூலம் தமிழில் தான் வழிபாடு நடைபெற்று வந்தது.
செப்பேடுகளும் அரசு ஆவணமும்:
அறையோலைதான் அரசின் முறையான ஆவணம். இந்த ஆவணம் பின் கல்வெட்டாகவும் செப்பேடாகவும் மாற்றப்படும். எபிகிராபிகா இண்டிகா தொகுதி-3, பக்கம் 345 இன்படி செப்பேடு என்பது ‘திரிபலீ தாம்ர சாசனம்’ எனப்படும். இதற்கு திரு நா. சுப்பிரமணியம், ‘உத்தரவு முதலில் ஓலையிலும், பின் கல்லிலும், அதன்பின் செம்பிலும் எழுதப்படுவதால் செப்பேடு என்பது மூன்றாவது பிரதி ஆகிறது’ என விளக்கம் தந்துள்ளார். ஆனால் கோனோலை அரச உத்தரவின் முதல் பிரதி, இரண்டாம் பிரதி என்பது நாட்டார் அவையின் அறையோலை, செப்பேடு அல்லது கல்வெட்டு என்பன அதன் மூன்றாம் பிரதி எனலாம். கல்வெட்டு அல்லது செப்பேடு என்பன தானம் பெற்றவர் எழுதிக் கொள்பவை. சோழர் காலத்தில் நிலதானம் பெற்ற பெரும்பாலோர் செப்பேடுகளையோ, கல்வெட்டுகளையோ வெட்டிக்கொள்ளவில்லை (12).
வரலாறும் பார்ப்பனர்களின் செப்பேடுகளும்:
அரசு ஓலைகளை மூலமாகக்கொண்டே செப்பேடுகளும் கல்வெட்டுகளும் தனியாரால் உருவாக்கிக் கொள்ளப்பட்டன. கோனோலை என்பது அரசனால் சொல்லப்பட்டு அரசனின் அதிகாரியால் அப்படியே எழுதப்படும் அரசு உத்தரவு ஓலை. அந்தக் கோனோலை நாட்டாரவைக்கு அனுப்பப்படும். நாட்டார்கள் அரசனின் உத்தரவில் உள்ளபடி தானத்தை நிறைவேற்ற, முதலில் தான நிலத்தை அளந்து அதன் எல்லைகளை உறுதி செய்வர். பின் தானம் நிறைவேற்றப்பட்ட முறையை விரிவாக எழுதி தங்கள் கையெழுத்துகளோடும், சாட்சிகளின் கையெழுத்துகளோடும் ஒரு புதிய ஓலையை உருவாக்குவர். அது நிலம் கைமாறியதை மக்களுக்கு அறிவிக்கும் ஓலை என்பதால் அறையோலை எனப்பட்டது. இந்த அறை ஓலை அரசின் ஆவணக்களரிகளில் சேமித்து வைக்கப்படும்.
இந்த அறை ஓலை தான் அரசின் ஆவணம். இதனைக் கொண்டே பார்ப்பனர்கள் செப்பேடுகளை வெட்டி அதில் தங்கள் நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் புகுத்தியுள்ளனர். செப்பேடு என்பதில் கோனோலை, வரைவோலை ஆகியவற்றில் இருப்பது போக நிலதானம் பெற்றவரின் அல்லது செப்பேட்டை எழுதியவரின் வழக்கங்களும் நம்பிக்கைகளும் சேர்த்து எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக பார்ப்பனர் நிலதானம் பெற்ற செப்பேடுகளில் அரசு ஆவணங்களில் உள்ளது போக காப்புச்செய்யுள், புகழ்ச்சி, ஓம்படைக்கிளவி போன்றன சமற்கிருத மொழியில் எழுதப்பட்டிருக்கும். இவை பார்ப்பன நூல்களின் வழிகாட்டுதல்படியும், தானம் பெற்றவரின் அனுமதியை மட்டும் கொண்டு பார்ப்பனக் கவிஞர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அரசுக்குத் தொடர்பற்றவை. ஆகவே செப்பேடு என்பது அரசு ஆவணத்தின் நகலாக மட்டும் இல்லாமல் தானம் பெற்றவரின் நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் கொண்டிருக்கும் என்பதால் அதனை அரசு ஆவணத்தின் உண்மை நகலாகக் கொள்ள முடியாது (13). ஆனால் இன்றைய வரலாறுகள் இந்த செப்பேடுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுவதால் வரலாறு பார்ப்பனமயமாகி விடுகிறது. இடைக்கால பாண்டியர் வரலாறும் அப்படித்தான் பார்ப்பனமயமாய் ஆகியுள்ளது. செப்பேடுகளோடு கல்வெட்டுகளையும், அகழாய்வுகளையும் இன்னபிற சான்றுகளையும் கொண்டுதான் முறையான வரலாற்றைக் கட்டமைக்க முடியும்.
இடைக்காலப் பாண்டியர்களும் சமுதாயமும்:
கி.பி. 550இல் தொடங்கிய இடைக்காலப் பாண்டியர் ஆட்சி கிட்டத்தட்ட கி.பி. 950ல் முடிவுற்றது. இவர்களது ஆட்சியின் முற்பகுதியில் சமணம் மிகுந்த செல்வாக்கோடு இருந்ததை மாற்றியமைக்கவே, பாண்டியன் நெடுமாறன் அரிகேசரியை (கி.பி. 640–670) சம்பந்தர் சைவ சமயத்துக்கு மாற்றினார். அக்காலத்திலிருந்து சைவம் செல்வாக்கு பெற்றது. பாண்டியன் நெடுஞ்சடையப் பராந்தகன் (கி.பி. 768-811) காலத்தில்தான் ‘வேள்விக்குடி’ என்ற பொய்யான செப்பேடு உருவானது. சிரிவரமங்கலச்செப்பேடு சின்னமனூர் சிறிய செப்பேடு ஆகியவற்றின் மூலம் இவன் காலத்தில் பார்ப்பனர்களுக்கு நிலதானங்கள் வழங்கப்பட்டன. இவனுக்கு முன் பார்ப்பனர்களுக்கு நிலதானங்கள் வழங்கப் படவில்லை. இறுதிப் பாண்டிய அரசன் மூன்றாம் இராசசிம்மன் (கி.பி.900-945) காலத்தில் சின்னமனூர் பெரிய செப்பேடுகள் உருவாகின (14). ‘பாண்டிய நாட்டில் எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே பிரம்மதேயங்கள் உருவாகுவதை வேளாளர்கள் எதிர்த்து வந்தனர். வேளாண் வகை கிராமங்களில் பிரம்மதேயக் குடியேற்றங்கள் உருவாகுவதற்கு சிக்கல்கள் எழுந்தது பற்றி தளவாய்புரச் செப்பேடுகள் மூலம் தெரிய வருகிறது’ எனக் கூறுகிறார் எசு. செயசீல இசுடீபன் (15). இதுபோன்ற காரணங்களால் பாண்டிய நாட்டில் பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயங்கள் மிகக்குறைந்த அளவே வழங்கப்பட்டன. இடைக்காலப் பாண்டியர் ஆட்சியில் (கி.பி. 550-940) கிடைத்த ஆறு செப்பேடுகளை மட்டும் இக்கால வரலாற்றுக்கான முதன்மைச் சான்றுகளாகக் கொண்டு வரலாறு எழுதப்படும் பொழுது அது பார்ப்பனியமயமாகி விடுகிறது.
பாண்டியர்களின் அனைத்துக் கோவில்களிலும் தமிழ் மொழி தான் வழிபாட்டு மொழியாக இருந்தது. சித்தர் வழி வந்த தமிழ்ப் பண்டாரங்கள் தான் பூசாரிகளாக இருந்தனர். பார்ப்பனர்கள் இடைக்காலப் பாண்டியர் கோவில்களில் பூசாரிகளாக இருக்கவில்லை. அதனால் இடைக்காலப் பாண்டியர் கோவில்களில் சமற்கிருத வழிபாடும் இருக்கவில்லை. 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு திருமலை நாயக்கர் காலத்தில்தான் சித்தர் வழிப் பண்டாரங்கள் அகற்றப்பட்டு தெலுங்கு சிவ பார்ப்பனர்கள் கோவில்களில் இடம் பெற்றனர். அதுவரை தமிழ் மொழி தான் வழிபாட்டு மொழியாக இருந்தது. நாயக்கர்கால ஆட்சியில்தான் பாண்டியர் பகுதிகளில் இருந்த கோவில்களில் சமற்கிருத மொழியில் வழிபாடுகள் நடைபெற்றன (16).
இடைக்காலப் பாண்டியர் காலத்தில் சமணம், பௌத்தம், பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் ஆகியன செல்வாக்கோடு இருந்தன. இடையில் சைவ சமயம் செல்வாக்கு பெற்றது எனினும் பத்தாம் நூற்றாண்டு வரையிலும் அதன்பின்னரும் கூட சமண சமயம் செல்வாக்குடன் இருந்தது என்பதைக் கழுகுமலைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சமண சமயத்தில் பெண்களும் சமயக்குறத்தி என்ற பெயரில் ஈடுபட்டார்கள். ஆசிவகமும் 14 ஆம் நூற்றாண்டுவரை செல்வாக்கோடு இருந்துள்ளது. இப்பாண்டியர்களின் பிற்கால ஆட்சியில்தான் பார்ப்பனர்கள் ஓரளவு செல்வாக்கோடு இருந்தனர் என்பதால் அவர்களது பார்ப்பனியக் கருத்துகள் சமூகத்தில் செல்வாக்கு பெறவில்லை. பக்தி இயக்கம் மிக்க வலுவோடு இருந்து வந்தது. இவைபோன்ற பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக இடைக்காலப் பாண்டியப் பேரரசில் பிறப்பின் அடிப்படையிலான சாதியம் உருவாகவில்லை. தொழில் அடிப்படையில் உருவான வகுப்புகள் மட்டுமே இருந்தன.
பார்வை:
1.பழந்தமிழக (கீழடி) நகர நாகரிகமும் அதன் அழிவும், கணியன்பாலன், ‘பெயல்’ அரையாண்டு ஆய்விதழ், அக்டோபர் 2019 – மார்ச் 2020. பக்: 12-14
2. சாதியின் தோற்றம், கணியன்பாலன், தொல்கபிலர், 2023, பக் 197-200
3. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், NCBH, சனவர்-2023 புத்தகம் -2, பக்: 452-453, 526-527.
4. “ “ “ புத்தகம் -1, பக்: 106.
5. ‘கீழடி’ – வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம், தமிழ்நாடு அரசு, தொல்லியல்துறை, 2019 – Publication No: 302, பக்: 7-9
6. தமிழகத்தில் வைதீக சமயம், தி.சு.நடராசன், NCBH, 2008, பக்: 187-191.
7. நா.வானமாமலை, தமிழர் பண்பாடும், தத்துவமும், அலைகள் வெளியீட்டகம், சூலை-2008, பக்: 130.
8. “ “ “ பக்: 124
9. “ “ “ பக்: 167
10. தொல்கபிலர், கணியன் பாலன், தொல்கபிலர் பதிப்பகம், 2023, பக்: 224.
11. தமிழ்நாடு செப்பேடுகள் தொகுதி-2, ச. கிருசுணமூர்த்தி, மெய்யப்பன் தமிழ் ஆய்வகம், 2002, பக்: 81.
12, 13. ஆதித்த கரிகாலன் கொலை, இரா. மன்னர் மன்னன், பயிற்று பதிப்பகம், மே-2023. பக்: 56-197.
14. தமிழகத்தில் வைதீக சமயம், தி.சு.நடராசன், NCBH, 2008, பக்: 187-191. & தமிழ்நாடு செப்பேடுகள் தொகுதி-1 ச. கிருசுணமூர்த்தி, மெய்யப்பன் தமிழ் ஆய்வகம், 2002, பக்: 250, 251, 254, 255, 279.
15. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும், உழைப்பாளர் சமூக உண்மை நிலையும், சாதியும் (கி.பி. 600-1565), எசு.செயசீல இசுடீபன், தமிழில் கி.இளங்கோவன், NCBH, பக்: 20.
16. தமிழ்நாடு செப்பேடுகள் தொகுதி-2, ச. கிருசுணமூர்த்தி, மெய்யப்பன் தமிழ் ஆய்வகம், 2002, பக்: 81.
- கணியன் பாலன்