“எந்தவொரு கால கட்டத்திலும் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டவும், வளர்க்கவும் சிறந்த படைப்பு மட்டும் போதுமானதல்ல. அரவணைத்துச் செல்லும் பண்பும் - ஊக்குவிக்கும் இயல்பும் - தயக்கமின்றித் தலைமை தாங்க முன்வரும் மன உறுதியும் - படைத்த ஒரு சில அறிஞர்கள் தேவைப்படுகின்றனர். இந்த நூற்றாண்டில் தமிழ் மொழிக்கு வாய்த்த அத்தகையோரில் நாரண. துரைக் கண்ணனும் ஒருவராவர். இளம் எழுத்தாளரிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிப் பிரகாசமடையச் செய்த அவருடைய பணி வெகுகாலம் போற்றப்படும்!” – இவ்வாறு, முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன், நாவலாசிரியர் நாரண. துரைக்கண்ணனைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

narana duraikannanசென்னை, மயிலாப்பூரில் ச.வே.நாராயணசாமி – அலர்மேல் மங்கை ஆகியோரின் தவப்புதல்வராக 24.08.1906 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் நடராசன் என்பதாகும். பின்னர் நாரண. துரைக்கண்ணன் என்று அழைக்கப்பட்டார்.

திருவல்லிக்கேணி இந்து ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் படிவம்வரை படித்தார். இடையில் படிப்பு தடைப்பட்டது. திருவல்லிக் கேணியில் உள்ள கெல்லட் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் மைக்கேல் என்பவரிடம் ஆங்கில மொழிப் பயிற்சி பெற்றார். பின்னர் டி.என். சோசலம் என்பவரிடம் தமிழ் இலக்கியம் கற்றார்.

இசைக் கலையில் ஈடுபாடு கொண்டு நாதமுனி என்பவரிடம் நாதசுரக் கலையையும், ஆந்திர இசைக் கலைஞர் சாத்திரியிடம் பிடில் வாசிப்பதையும் விடாது பழகிப் பயின்றார்!

குப்புசாமி முதலியாரிடம் தமிழ் கற்று, பக்தி இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டார். பின்னர் நன்னூல் இலக்கணத்திலும் நாட்டம் கொண்டு தேர்ந்தார். மறைமலையடிகளார், திரு.வி.க, மணி.திருநாவுக்கரசு, கா.நமச்சிவாய முதலியார் ஆகியோரிடம் நட்பு பூண்டிருந்ததால் தமிழார்வம் தழைக்கப் பெற்றார்.

மேற்கொண்டு கல்வியைக் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அச்சுத் தொழில் பயிற்சியோடு, மெய்ப்புத் திருத்தத்திலும் அய்க்கியமானார்! அப்பொழுது முதலே, தமிழ்ச் சமுதாயத்துக்கும் பயன்படும் வகையில், இதழாசிரியராகவும், எழுத்தாளராகவும் ஆகிவிட வேண்டுமென்னும் ஆவலை, இலட்சியமாக ஏற்றார்.

தமது இருபத்தைந்தாவது வயதில் மீனாம்பாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்பதற்காகப் பாடுப்பட்டார்; ‘பாரதி விடுதலைக் கழகம்’ என்ற அமைப்பை அதற்காகவே ஏற்படுத்தி, அதன் துணைத் தலைவராக விளங்கினார். மகாகவி பாரதியின் பாடல்களை அரசுடைமையாக்கிட அன்றைய சென்னை மாநில முதலமைச்சர் ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆவன செய்வதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து தி.க.சன்முகம், வல்லிக்கண்ணன், அ.சீனிவாசராகவன், கேபி. கணபதி முதலிய நண்பர்களோடு திருநெல்வேலிக்குச் சென்று, பாரதியாரின், மனைவி செல்லம்மாள் பாரதியைச் சந்தித்து ஒப்புதல் பெற்றார். மேலும், மகாகவி பாரதிக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம் எழுப்ப முயற்சி எடுத்தோருள் நாரண. துரைக்கண்ணனும் முக்கியமானவர் என்பது நாம் அறியப்பட வேண்டிய செய்தி.

தமிழக அரசு பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்கி அறிவித்தது. முதல்வரிடம் வேண்டுகோள் வைத்து பாரதி குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஐந்தாயிரம் நிதி அளிக்க ஏற்பாடு செய்தார் நாரண. துரைக்கண்ணன்.

நாரண. துரைக்கண்ணன் ‘ஆனந்த போதினி’, ‘பிரசண்ட விகடன்’ முதலிய இதழ்களின் ஆசிரியரானார். அவரது எழுத்தால் இதழ்களின் செல்வாக்குக் கூடியது.

விடுதலைப் போராட்டம் உச்சத்திலிருந்த 1939 – 1945 கால கட்டத்தில் தாம் ஆசிரியராக இருந்த ‘பிரசண்ட விகடனில்’ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தலையங்கம் மற்றும் கட்டுரைகள் எழுதினார். அதனால் ஆங்கிலேய அரசு அவரைக் கண்டித்ததோடு எச்சரிக்கையும் விடுத்தது. அப்பொழுது, “எங்கள் கொள்கையை விடமாட்டோம். இது எங்களது தேசியக் கடமை” எனத் துணிச்சலுடன் அறிவித்தார். ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்தை எதிர்த்து தொடர்ந்து தலையங்கங்கள் தீட்டினார்.

காந்தியடிகள் அரிசன இயக்கம் காண்பதற்கு முன்பே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். “தீண்டத்தகாதவர் யார்”? என்ற சமூக சீர்திருத்த நாடகத்தை எழுதி அதனை 1927 ஆம் ஆண்டு பல இடங்களில் நடத்திக் காட்டினார்.

தென்னிந்திய எழுத்தாளர் சங்கக் கருத்தரங்கம் 1945 ஆம் ஆண்டு சென்னை, இந்தி பிரச்சாரச் சபையில் நடைபெற்றது. அக்கருத்தரங்கத்தைத் தொடங்கி வைக்க மகாத்மா காந்தியடிகள் வருகை புரிந்தார். அப்போது, நாட்டுக்குத் தொண்டாற்றிய புகழ்மிக்கத் தலைவர்களின் வாழ்க்கை வரலறுகளைத் தமிழில் எழுதி நூலாக வெளியிட்டமைக்காக அப்போது நாரண. துரைக்கண்ணனைப் பாராட்டிக் கைகுலுக்கினார் காந்தியடிகள் என்பது வரலாற்றுச் செய்தி!

திறமையும், உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் ஒளி வீசலாம் என்னும் சிந்தனைக்குச் செயல்வடிவம் கண்டார். அதனாலேயே நாரண. துரைக்கண்ணன், இதழாசிரியர் பணியைத் ‘தொழத்தக்க பணியாக’க் கருதி தேர்ந்தெடுத்தார்!

‘தமிழ்நாடு’, ‘கலா நிலையம்’, ‘செந்தமிழ்ச் செல்வி’ ‘தேசபந்து’, ‘சிந்தாமணி’ ‘திராவிடன்’ முதலிய இதழ்களில் சீரிய சிந்தனைமிக்கக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்.

தந்தை பெரியார் 1932 ஆம் ஆண்டு ருஷ்யா நாட்டிற்குச் சென்று தாயகம் திரும்பினார். அப்பொழுது, பல எதிர்ப்புகளையும் மீறி, பத்திரிக்கையாளர்கள் சார்பாக, சென்னை தியாகராயர் நினைவு மண்டபத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இதழ்களில் தாம் பல படைப்புகளை எழுதி வந்ததோடு, எழுத்தாளர்கள் வல்லிக் கண்ணன், ஜீவானந்தம், தொ.மு.சி. ரகுநாதன், கு. அழகிரிசாமி, அகிலன், தீபம் பார்த்தசாரதி, லட்சுமி முதலிய படைப்பாளர்களையும், பாரதிதாசன், கம்பதாசன், வாணிதாசன், சுரதா, தமிழ்ஒளி, கா.மு.செரீப், கண்ணதாசன் முதலிய கவிஞர்களையும் தாம் ஆசிரியராக இருந்த இதழ்களில் எழுத வைத்தார். பின்னாளில் அவர்கள் சிறப்பதற்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து உறுதுணையாக இருந்தார்.

‘ஜீவா’என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கினார். இழப்பு ஏற்பட்டது. தனது வீட்டை விற்றுக் கடனை அடைத்தார்.

தாம் படைத்தளித்த கதைகளை ‘ஜீவா’ என்னும் புனைப் பெயரில் எழுதினார். ஜீவனுள்ள படைப்புகளை அளித்து வந்தமையால் ‘ஜீவா’ என்ற அப்பெயரே நின்று நிலைத்து விட்டது!

எழுத்தாளராகிய ‘ஜீவா’வையும், பொதுவுடைமை இயக்கத் தலைவராக விளங்கிய ஜீவாவையும் தமிழுலகம் நன்கு அறியும். இருவரும் தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். பொது வாழ்க்கையிலும், முற்போக்குச் சிந்தனையிலும், கலை இலக்கியம் தொடர்பான இதழியல் பணிகளிலும் இடையறாது ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்கள். இருவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். காந்தியடிகளை நேரில் சந்தித்தவர்கள், மகாகவி பாரதியார் பாடல்களையும், கவிதைகளையும் ஈடுபாட்டுடன் தமிழ்ச் சமுதாயத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள்! இலக்கியத் தளத்தை, மக்களின் ‘இலக்கியக் களமாக’ உருவாக்கிட ஓயாது பாடுபட்டவர்கள்!

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இரண்டாவது மாநாடு 1946 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அறிஞர் அண்ணா தலைமை ஏற்றார். அப்பொழுதுதான் ‘கல்கி’ அண்ணாவை ‘தென்னாட்டின் பெர்னாட்ஷா’ என்று பாராட்டிப் பேசினார்!
தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டார். மேலும், 1948 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக செயல்பட்டார்.

‘தமிழ்ச் சிறுகதை மன்னன்’ எனப் புகழப்படும் புதுமைப்பித்தனோடு நாரண. துரைக்கண்ணன் தோழமை கொண்டவர். புதுமைப்பித்தன் இறந்துபோனபோது, நண்பர்களின் உதவியோடு நிதி திரட்டினார்; புதுமைப்பித்தனின் மனைவி கமலா அம்மையாரிடம் நிதியின் ஒரு பகுதியை வழங்கியும், மீதித் தொகையிலிருந்து சென்னை அண்ணாமலை புரத்தில் ஒரு வீடு வாங்கியும் கொடுத்தார்; தமிழ் எழுத்தாளர் உலகம் தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளத் தளராது பாடுபட்டார்!

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை இதழ்களில் எழுதினார். முல்லை முத்தையா மூலம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு புதுவையில் ஒரு வீடு வாங்கி வழங்கிடத் தூண்டு கோலாகவும், உறுதுணையாகவும் விளங்கினார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘திருக்குறள் உரையைக்’ கையெழுத்துப் படியில் படித்ததுமே, அதனுடைய சிறப்பை உணர்ந்து ஆய்வுக் கட்டுரையாக எழுதி முரசொலி ‘யில் வெளியிட்டார். புரட்சிக் கவிஞரின் மறைவையொட்டி ‘பிரசண்ட விகடன்’ இதழில், ‘கவிக்குயில் பறந்தது’ என்ற தலைப்பில் இரங்கல் உரை எழுதினார்.

நாரண. துரைக்கண்ணனின் ‘உயிரோவியம்’ என்ற நாவல் நாடகமாக வெளிவந்தபோது அதற்கு மு.வ. அணிந்துரை அளித்து, ‘வாழ்க்கைக் கலைஞர்’ எனப் போற்றினார்.

பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிசில், அரசும், பிரான்சு இலக்கியக் கழகமும் இணைந்து, நாடகக் கலைக்காக ஓர் இதழை வெளியிட்டு வந்தது. அந்த இதழில் உலகின் பல மொழி நாடகங்களில் தலை சிறந்தவற்றைத் தெரிவு செய்து வெளியிட்டு வந்தனர். அந்த இதழில், நாரண. துரைக்கண்ணனின் ‘உயிரோவியம்’ நாடகம் சிறந்த நாடகமாகத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும், அந்நாடகத்தை தமிழகத்தின் முதல்வர்களாக விளங்கிய ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார், காமராசர், பக்தவசலம் முதலியோர் பாராட்டிப் புகழ்ந்தனர். ‘இந்து’ நாளிதழும் சிறப்பான விமர்சனம் வெளியிட்டது.

தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் 1964 ஆம் ஆண்டு, நாரண துரைக்கண்ணனைச் சிறந்த நாடக ஆசிரியர் எனப்பாராட்டியும், ‘கலைமாமணி’ விருது வழங்கியும் சிறப்பித்தது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 7,8,9 தேதிகளில் நிகழ்த்தினார். அச்சொற்பொழிவு, ‘தமிழில் நாடகம்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.

நாரண. துரைக்கண்ணன் ‘கோனாட்சியின் வீழ்ச்சி’, ‘யான் ஏன் மணப்பெண்ணாய்ப் பிறந்தேன்?’, ‘உயிரோவியம்’, ‘தாசிரமணி’, ‘காதலனா? காதகனா? ‘சீமான் சுயநலம்’, ‘தியாகத் தழும்பு’, ‘தரங்கினி’, ‘புதுமைப் பெண்’, ‘நடுத்தெரு நாராயணன்’ முதலிய நாவல்களை எழுதித் தமிழுக்கு அளித்துள்ளார். இவரது, ‘சீமான் சுயநலம்’ – ஓர் “அரசியல் நாவல் என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமாய்த் தமிழில் எழுந்த முதல் நாவலாகும்” என ஆய்வாளர் மா.இராமலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இவரது கதை மாந்தர்களில், பெண்களே நினைவில் நிற்கக் கூடியவர்கள். பெண்களின் பிரச்சனைகளான விதவைக் கோலம், மறுமணம், தேவதாசிகளின் அவலம், ஆணாதிக்க அடக்கு முறை, பெண்ணடிமைத்தனம், ஆகியவை, அவரது படைப்புகளில் மிகுதியாக உள்ளன. ‘பெண்களின் முன்னேற்றத்துக்கான எழுத்தாளர்’ என்றே இவரைக் கூறலாம்.

நாரண. துரைக்கண்ணன் இருபத்தொரு நாவல்களைப் படைத்து அளித்துள்ளார்.

‘முத்தம்படா அதரம்’, ‘சபலம்’, ‘அழகாம்பிகை’, ‘பார்வதி’, ‘தேவகி’, ‘மேனகா’ ‘ஹம்கா நந்தி’ மற்றும் ஜீவாவின் சிறுகதைகள் – முதலிய தம் சிறுகதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவரது சிறுகதைகள், சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும், சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும், பெண்களின் அவல வாழ்க்கையையும் அடிப்படைக் கருப்பொருளாகக் கொண்டவையாகும்.

‘தீண்டாதார் யார்?’, ‘உயிரோவியம்’, ‘குமரி முதல் காஷ்மீர் வரை’, ‘எழுதாத ஓவியம்’, ‘திருவருள் பிரகாச வள்ளலார்’ முதலிய நாடகங்களை எழுதி தமிழ் நாடக இலக்கியத்திற்கு வளம் சேர்த்துள்ளார்.

“திருமலைக் கவிராயர் கவிதைகள் ‘இதய கீதம்’, ‘அருட்கவி அமுதம்’, முதலிய கவிதை நூல்களையும் இயற்றியுள்ளார்.

‘வள்ளலார்’, ‘தந்தை பெரியார்’, ‘சங்கரர்’, ‘சுபாஷ் சந்திர போஸ்’, ‘விவேகானந்தர்’, ‘அரவிந்தர்’, ‘காந்தி’, ‘பாரதி’, ‘இராஜாஜி’, முதலியவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் செதுக்கியுள்ளார்.

‘தமிழர் யார்?’, ‘சிவகாமி சரித ஆராய்ச்சி’, ‘தமிழ்நாடகம்’ முதலிய ஆராய்ச்சி நூல்களைப் படைத்துள்ளார்.

‘அரசியல் சிந்தனைகள்’, ‘அறிவுக்கு விருந்து’, ‘எழுத்தாளர் சகோதரர்களுக்கு’, ‘இலக்கியக் குரல்’, ‘தன்மதிப்பு’, ‘தமிழகத்தின் தனித் தலைவர்கள்’, முதலிய கட்டுரை நூல்களையும் ஆக்கித் தந்துள்ளார்.

தமிழ் ஆட்சி மொழியாதல் வேண்டும்; கோயில்களில் தமிழ் மொழியில் வழிபாடு செய்தல் வேண்டும்; கல்வியைத் தாய்மொழி வழிக் கற்பிக்க வேண்டும்; பாடத்திட்டங்களில் தமிழ் இடம் பெற வேண்டும்; என்னும் உயரிய கருத்துக்களைத் தமது எழுத்துக்கள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

‘நற்கலை நம்பி’, ‘இலக்கியச் செம்மல்’ என்னும் பட்டங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை, கடிதம், மொழி பெயர்ப்பு, ஆராய்ச்சி, வாழ்க்கை வரலாறு, விமர்சனம், தலையங்கம் முதலிய பல தளங்களில் இயங்கி முத்திரைப் பதித்தவர் நாரண.துரைக்கண்ணன்.

நாரண.துரைக்கண்ணன் தமது தொண்ணூறாவது வயதில் 23.07.1996 ஆம் நாள் இயற்கை எய்தினார். தமிழிலக்கியம் உள்ளவரை அவரது தொண்டு நிலைத்திருக்கும்!

Pin It