தென் தமிழ்நாட்டில் உள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகரமாகத் திகழ்ந்தது. மதுரை என்பது 'மருதை' என்றே வழங்கப்பட்டு வருகிறது. மருதமரம் பாண்டியர்களின் காவல்மரம் என்றும், கடிமரம் என்றும், மனைமரம் என்று அழைக்கப் பெற்று தெய்வமாக வழிபடப்பட்டது. பாண்டியர்கள் ஆண்டபோது மருதமரங்களை வெட்டி அழிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. பெரியகுளம் வராக நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியன் கோயிலின் அருகாமையில் ஆற்றின் இருபுறமும் ஆண் மருதமரமும், பெண் மருதமரமும் அமைந்துள்ளது.

பாண்டிய நாடும் 100 நாடுகளும்

பண்டைய பிரிவு

                பாண்டிய நாடு பரந்து விரிந்து காணப்பட்ட பகுதியாகும். அதன் நிர்வாக நலன் கருதி நாடுகளாக பிரித்துள்ளனர். பாண்டிய நாட்டில் ஏறத்தாழ 100 நாடுகள் இருந்தன. அவற்றுள் அண்டை நாடு, அளநாடு, ஆசூர்நாடு, இரணிய முட்ட நாடு, வேம்பநாடு, கொற்கை நாடு, தொண்டி நாடு, முல்லி நாடு, புறம்பு நாடு, வேம்மைக்குடி நாடு, புறத்தாய நாடுகளும், பொங்கலூர்கா நாடு, அண்டநாடு, ஆற்றூர் நாடு, அதம்பநாடு, பூம்பாறை நாடு, வடகல்லகநாடு, தென்கல்லகநாடு, பாகனூர்க் கூற்றம், நெடுங்களநாடு, துவராபதிநாடு, புறமலைநாடு, பள்ளிநாடு முதலிய நாடுகளைச் சான்றாகக் கூறலாம்.

இன்றைய பிரிவு

பொங்கலூர்கா நாடு, வைகாவூர் நாடு பழனி வட்டத்தையும், அண்டநாடு ஒட்டன்சத்திரம் வட்டத்தையும், ஆற்றூர்நாடு, அதம்ப நாடு திண்டுக்கல் வட்டத்தையும், வடகல்லகநாடு, தென்கல்லகநாடு, பாகனூர்கூற்றம் ஆகியவை நிலக்கோட்டை வட்டத்தையும், பூம்பாறை நாடு கொடைக்கானல் வட்டத்தையும், நெடுங்களநாடு வத்தலக்குண்டு வட்டத்தையும், துவராபதிநாடு, புறமலை நாடு நத்தம் வட்டத்தையும், பள்ளிநாடு வேடசந்தூர் வட்டத்தையும் குறிக்கிறது.

                இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடைச்சங்க நாளிலும் இம்முறை வழக்கத்தில் இருந்தது என்று தெரிகிறது. இதனை

                                                                'முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு

                                                                முந்நூறும் பரிசிலர் பெற்றனர்' எனவும்,         

                                                                                                                                                                (புறம்-110)

                                                                'ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த

                                                                வல்லவேற் சாத்தன் மாய்ந்த பின்றை

                                                                முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே'

                                                                                                                                                                (புறம்-242)

என்று வரும் புறப்பாட்டடிகளாலும் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் தொடர்மொழியாலும் அறியலாம். மேலும் புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுக்களிலும், தென்களவழி நாடு சீவரமங்கலச் செப்பேட்டிலும் (கி.பி.782) களக்குடி நாடு தளவாய்புரச் செப்பேட்டிலும் (கி.பி.900) குறிப்பிடப்படுகின்றன.(டி.வி.சதாசிவபண்டாரத்தார், பாண்டியர் வரலாறு, பக்கம் 70-71)

பாண்டியரும் மீன் கொடியும்

                இந்திரனுடைய கொடி 'மீன் கொடி', இந்திரனை 'மீன் ஏற்றுக் கொடியோன்' என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. மருதநிலத் தலைவனான வேந்தனே மழைக்குரிய தெய்வமாக இந்திரன் ஆக்கப்பட்டான். மழை வேண்டி இந்திர விழா சித்திரை மாதத்தின் தொடக்கத்தில் வரும். மேழ ஓரை(மேழராசி) மீன ஓரையை(மீனராசி) அடுத்து உள்ளது. இதனால் தான் இந்திரனுக்கு மீன் கொடி வாய்த்ததென வானியல் கணக்கின்படி கருதப்படுகிறது. இது மீன ஓரையின் ஓர் உருவகமேயமாகும். இதனால் தான் இந்திர குலத்தில் தோன்றியதாகக் கூறப்படும் பாண்டிய வேந்தர்களும் தங்களின் குலக்கொடியான மீன்கொடி பிடித்தே ஆட்சிபுரிந்தனர். இதனால் தான் பாண்டிய மன்னர்களின் சின்னமான மீன் சின்னத்தை அடையாளப்படுத்தும் விதமாக கோயில், நீர்நிலை கல்வெட்டுக்களில் பொறித்திருக்கின்றனர்.

வரலாற்றின் பார்வையில் பாண்டியர்கள்

                கி.மு.5 ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் பல உள்ளன.

                இலங்கையின் பண்டைய வரலாற்றைக் கூறும் மகாவம்சம் கி.மு.478 ல் வெளிவந்த நூலில் இலங்கையை ஆண்ட தமிழ்வேந்தன் விஜயன், பாண்டிய மன்னனின் மகளை மணந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

                கி.மு. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த அசோகர் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்களில் பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரையிலான சங்க காலத்தில் பாண்டியர்கள் புகழ் பாடப்பெற்றுள்ளது.

                கி.பி. 3ம் ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 6-ம் நூற்றாண்டு வரையில் இருந்த பாண்டிய பேரரசு களப்பிரர்களால் வீழ்ந்தது.

                கி.பி. 6ம் நூற்றாண்டில் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் களப்பிரரிடம் இருந்து பாண்டிய நாட்டை மீட்டு மீண்டும் பேரரசை நிறுவினார். இந்தப் பேரரசு முதலாவது பாண்டியப் பேரரசு என்று அழைக்கப்பட்டது.

                கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் பாண்டிய பேரரசு வலுவிழந்து சோழப்பேரரசிற்கு மாறியது. அதன் பின்னர் கி.பி. 1310 ஆம் ஆண்டில் மீண்டும் பாண்டிய அரசு நிறுவப்பட்டது.

                கி.பி.1190 முதல் கி.பி. 1216 வரை ஆட்சி புரிந்த முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தில்தான் இரண்டாம் பாண்டியப் பேரரசு தொடங்கியது. அதில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1251-1268 ஆம் ஆண்டில் ஆட்சிபுரிந்தார். அதன் பின்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268 முதல் 1310 வரை ஆட்சி புரிந்தார். இவரோடு பாண்டியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டெல்லியில் முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி என்பவர் கி.பி.1290-1296 வரை ஆட்சிசெய்தார்.

                அலாவுதீனின் படைத்தளபதி மாலிக்கபூர். சந்த்ராம் என்ற திருநங்கை மதம் மாறி மாலிக்கபூர் ஆனார். மாலிக்கபூர் தென்னகத்தின் மீது படையெடுத்தார். அப்போது தென்னாட்டில் நான்கு பெரும் ராஜ்ஜியங்கள் இருந்தன. அவை பின்வருமாறு, தேவகிரியை தலைமையிடமாகக் கொண்டு யாதவர்கள் கர்நாடகம், மத்தியப்பிரதேசத்தை ஆண்டனர். வாராங்கல்லை தலைமையிடமாகக் கொண்டு காக்கத்தியர்கள் ஆந்திரப்பிரதேசத்தையும், பேலூர் மற்றும் ஹலபேடுவை தலைமயிடமாகக் கொண்டு ஹொய்சாளர்கள் கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் வடமேற்கு பகுதியை ஆண்டார்கள். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் மற்றும் இன்றைய ஆந்திராவை பாண்டியர்கள் ஆட்சிபுரிந்தனர்.

                மாலிக்கபூர் படை ஒவ்வொரு பகுதியாக ஆட்சியைப் பிடித்து அதன் பின்னர் மதுரைக்கு வரும்பொழுது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி முடிவுறும் நிலையில் இருந்தது. அவருடைய வாரிசுகளாக இரண்டு மகன்கள் இருந்தனர். அதில் ஒருவன் பெயர் மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். மற்றொருவன் மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன். இவர்களுக்கிடையே சகோதர யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுந்தரபாண்டியனுக்கு ஆதரவாக மாலிக்கபூர் படை மதுரையை வந்தடைந்தது. 1327 ஆம் ஆண்டு தில்லி சுல்தான்களின் 23வது மாநிலமாக மதுரை அறிவிக்கப்பட்டது. ஜலாவுதீன் ஹசன் ஷா மதுரையின் நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலிக்கபூருக்குப் பின்னர் அடுத்தடுத்து சுல்தான்கள் சுமார் 65 ஆண்டுகள் மதுரையை ஆண்டனர். விஜய நகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பணன் கி.பி.1370 இல் மதுரை மீது படையெடுத்து மதுரை சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். சுல்தான்கள் ஆட்சி முடிவுற்றது. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தில் தான் கி.பி.1529 நாகமநாயக்கர் பாண்டிய நாட்டு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

               viswanatha nayak கி.பி.1559-1564 வரை தமிழகத்தில் விஸ்வநாத நாயக்கர் மூலம் நாயக்கர் ஆட்சி காலூன்றியது. சுமார் 200 ஆண்டுகள் வரை நாயக்கர்கள் ஆட்சிபுரிந்தனர். பாண்டிய நாட்டில் பாளையக்காரர்களின் ஆட்சியை ஏற்படுத்தியவர் விஸ்வநாத நாயக்கர் ஆவார். விசுவநாத நாயக்கரின் தளவாயாகவும், முதல் அமைச்சராகவும் திகழ்ந்தவர் அரியநாதன் முதலியார். அரசு பதவிகளில் உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் முதலி என அழைக்கப்படுவது வழக்கம். அரியநாதன் முதலியார் முதல் மூன்று நாயக்க மன்னர்களிடமும் அவர் பணியாற்றியுள்ளார். அவரே பாளையப்பட்டு முறையை இப்பகுதியில் அறிமுகப்படுத்தியவர்.

பாளையக்கார்கள்

                விஸ்வநாத நாயக்கர் காலத்தில் தான் பாளையக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். பிற்காலத்தில் பாளையக்காரர்களே ஜமீன்தார்களாக மாறினர். ஜமீன் என்றால் பாரசீக மொழியில் நிலம் என்ற பொருளும், தார் என்றால் ஆளக்கூடியவர்கள் என்ற பொருளும் உண்டு. நிலத்தை ஆளுக்கூடியவர்கள் ஜமீன்தார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

                ஆங்கிலேயர் ஆட்சியில் நிலங்களுக்கெல்லாம் நிலையான அரசு முறை ஏற்படுத்தப்பட்டது. கி.பி.1793க்குப் பிறகு தான் பாளையக்காரர்கள் அனைவரும் ஜமீன்தார்கள் என்று பெயர் பெற்றனர். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு 72 பாளையங்கள் பிரிக்கப்பட்டன.

                வடுகநாட்டில் எப்போதுமே பாளையங்கள் எழுபதுக்கு மேல்தான் இருந்தது. அவை ஒரு கல், கொண்டவீடு, ராஜமகேந்திரகிரி, ஆனைகுந்தி என எல்லாவற்றிலும் பாளையங்கள் அப்படித்தான் இருந்தன. விஜயநகரை மண்டலங்களாகப் பிரித்தபோது எழுபதுக்கும் மேல் பாளையங்கள் ஒவ்வொன்றிலும் இருந்தன. அது ஆந்திரவம்சத்தை வென்றபோதும் காப்பு பாளையப்பட்டுகள் எந்த மாற்றமுமின்றி வம்சாவழியாகத் தொடர்ந்தன. அந்த ஞாபகத்தில்தான் விஸ்வநாதன் 72 பாளையங்கள் என்று தீர்மானித்தான். பாளையம் என்பதற்குச் சேனை, படை, கூடாரம், குறுநில மன்னர், ஊர், பாளையப்பட்டு என்ற பல பொருள் உண்டு. பாளையப்பட்டு என்பது பாளையக்காரர் கட்டுப்பாட்டில் உள்ள சிறுதொகுதி என்பது பொருள். பாளையப்பட்டு என்பதை பாளையம் என்றும் கூறுவர். படைவீரர்களின் குடியிருப்புகளை பாளையம் என்று அழைத்தனர்.

72 பாளையங்களின் பெயர்கள்

                மதுரையை தலையிடமாகக் கொண்டு பாளையங்கள் பிரிக்கப்பட்டன‌. அந்த பாளையங்களை பல்வேறு சமூகத்தினர் ஆண்டுள்ளனர். அவை பின்வருமாறு, பெரியகுளம்(நாயக்கர்), போடி(நாயக்கர்) நிலக்கோட்டை (நாயக்கர்) பாஞ்சாலங்குறிச்சி,(நாயக்கர்) தொட்டப்பநாயக்கனூர்(நாயக்கர்) கன்னிவாடி(நாயக்கர்) சந்தையூர்(நாயக்கர்), எழுமலை(நாயக்கர்) சாப்டுர்(நாயக்கர்), எட்டயபுரம், (நாயக்கர்), சிவகிரி(வலையர்), ஊத்துமலை(மறவர்), ஊர்க்காடு(மறவர்), சேத்தூர்(மறவர்), சிங்கம்பட்டி(மறவர்), மன்னார்கோட்டை(நாயக்கர்), ஆவுடையாபுரம்(மறவர்), கடம்பூர்(மறவர்), ஆத்தங்கரை(நாயக்கர்), கோல்வார்பட்டி(நாயக்கர்), மணியாச்சி(தலைவன்), பாவாலி(செட்டியார்), குளத்தூர்(நாயக்கர்), மேல்மாந்தை(நாயக்கர்) அழகாபுரி(வன்னிய வலையர்), சுரண்டை(மறவர்), கொல்லங்கொண்டான்(மறவர்), நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர், மேல்மாந்தை, கொல்லபட்டி, கோலார்பட்டி, நெற்கட்டும்செவல், சொக்கம்பட்டி, சிவகிரி, அழகாபுரி, இராசாக்கனூர், கோட்டையர், மருங்காபுரி, இலக்கையனூர், முல்லையூர், கடவூர், இடையக்கோட்டை, தேவதாரம், இராமகிரி, கல்போது, தும்பிச்சிநாயக்கனூர், நத்தம், வெள்ளிக்குன்றம், மலையப்பட்டி, வடகரை, அம்மையநாயக்கனூர், சக்கந்தி, மதவாளையூர், சோசலைப்பட்டி, வீரமலை, குருவிகுளம், அத்திப்பட்டி, இளசை, மதுவார்பட்டி, கோம்பை, கூடலூர், கவுண்டன்பட்டி, குமரவாடி, உதயப்பனூர் ஆகிய ஜமீன்கள் ஆகும்.(இரா.தேவஆசிர்வாதம், தமிழ் மூவேந்தர் மரபினரான தேவேந்திர் வீழ்ச்சி,பக்கம் 33).

                ஆங்கிலேயர்கள் 1802 ஆம் ஆண்டு 'சாசுவத நிலவரி திட்டம்' என்ற திட்டத்தை அமல்படுத்தினார்கள். இத்திட்டத்தின் படி இருக்கின்ற நிலங்களை நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட தொகையை மட்டும் ஒவ்வொரு வருடமும் கிஸ்தியாக கட்டினால் போதும். நிலங்கள் அனைத்தும் ஜமீன்தார் வைத்துக்கொள்ளலாம். அந்த சொத்தை ஜமீன்தார் பார்த்து யாருக்கு வேண்டுமானாலும் தரலாம். குத்தகைக்கும் கொடுக்கலாம் என அறிவித்திருந்தனர்.

                1803 ஆம் ஆண்டு பாளையங்களின் எல்லைகளை மறுவரையறை செய்து 'ஜமீன்தாரி' முறையில் மிட்டாக்கள், மிராஸ்தார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பாளையங்களை நிர்வகித்தவர் பாளையக்காரர் என்றழைக்கப்பட்டனர். 'பாலாமு' என்ற தெலுங்கு மொழிச்சொல்லில் இருந்து பாளையம் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும்.

தானம் பெற்ற நிலங்கள் வகை

                திருக்கோயிலுக்கு அரசர் இறையிலியாக அளித்த நிலங்களும், ஊர்களும் தேவதானம் எனப்பட்டன. பாண்டிய மன்னர் காலத்தில் சிவன் கோயில்களுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலம் தேவதானம் என்றும், திருமால் கோயில்களுக்கு அளிக்கப் பெற்றது திருவிடையாட்டம் எனவும், ஜைன, பௌத்த கோயில்களுக்கு விடப்பெற்றது பள்ளிச்சந்தம் எனவும், பார்ப்பனர்களுக்கு அளிக்கப் பெற்றது பிரமதேயம் பட்டவிருத்தி எனவும், மடங்களுக்கு விடப்பட்டது மடப்புறம் எனவும், புலவர்களுக்கு அளிக்கப்பட்டது புலவர்முற்றூட்டு எனவும், ஜோதிடர்களுக்கு அளிக்கப்பெற்றது கணிமுற்றூட்டு எனவும் வழங்கப்பட்டன. தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் தேவதானப்பட்டி என்றும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் தேவதானம் என்ற பெயரும், மன்னார்குடி வட்டத்தில் தேவதானம் என்ற பெயரும் ஊரின் பெயர்களாக அமைந்துள்ளன.

ஆதார நூல்கள்:

1.சதாசிவம் பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு, வைகுந்த் பதிப்பகம், சென்னை.

2.அழிந்த ஜமீன்களும், அழியாத கல்வெட்டுக்களும், அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி

3.எஸ்.பி.சொக்கலிங்கம், மதுரையை ஆண்டு முஸ்லிம் மன்னர்கள், கிழக்கு பதிப்பகம், சென்னை

4.முனைவர் குருசாமி, தொல்லியல் துறை வெளியீடு, சென்னை.

- வைகை அனிஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It