manonmanium sundaranarஅன்னைத் தமிழுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாங்குற அணி செய்தவர்! நிறை தமிழ்ச் சான்றோராய் நின்று நிலைபெற்றவர்! தமிழக அரசின் நிகழ்ச்சிகள் துவங்கும்போது, “நீராரும் கடலுடுத்த நிலமட‌ந்தைக்கு எழில் ஒழுகும்” என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர்! கடின உழைப்பு-விடாமுயற்சி-பிறர்க்கு உதவும் பாங்கு – நன்றி மறவாமை, உண்மையை யாரிடத்தும் எவ்விடத்தும் துணிந்து கூறி நிலைநிறுத்தும் நேரிய கொள்கை – ஆகிய உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்! தாய் மொழிப் பற்று, தாய் நாட்டுப்பற்றுடன் நெஞ்சமெலாம் நிறைந்த மனிதப்பற்றாளர்! தத்துவஇயல், மொழிஇயல், வரலாற்றியல், தொல்லியல் ஆகிய பல்துறை அறிஞர்! அவர்தான் பேராசிரியர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார்.

                கேரள மாநிலம் ஆலப்புழைத் துறைமுகப்பட்டினத்தில், பெருமாள்பிள்ளை- மாடத்தி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 05.04.1855 ஆம் நாள் பிறந்தார்.

                சுந்தரனார் ஐந்தாம் வயதில் ஒரு தமிழ்ப் பள்ளியில் பாதம் பதித்தார். பள்ளிக் கல்வியுடன், அவரது தந்தை மூலம் ஒளவையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை, நன்னெறி, நீதிநெறி விளக்கம் போன்ற நீதி நூல்களையும், தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி நூல்களையும், திருக்குறள், நாலடியார் போன்ற அறம் உரைக்கும் நூல்களையும் கற்றுத் தெளிந்தார்! பன்னிரெண்டாம் வயதிலேயே சிறந்த தமிழ்மொழி அறிவு பெற்றவராய் விளங்கினார்.

                ஆலப்புழையில் ஓர் ஆங்கிலப் பள்ளியில் பயின்று நன்கு தேர்ச்சியடைந்ததுடன், ஆசிரியர்களின் பாராட்டையும் பெற்றார்.

                திருவனந்தபுரம் மாமன்னர் கல்லூரியில் சேர்ந்து உயர்நிலைக் கல்வி கற்று முதல் மாணவராக வெற்றி பெற்றார். இதன் மூலம் அரசின் உதவித் தொகையினை இளங்கலை படிப்புவரை கிடைக்கப் பெற்றார். இளங்கலைப் பட்டப்படிப்பிலும், திருவனந்தபுரத்தில், முதல் மாணவராகத் தேர்ந்தார்!

                நாகை நாராயணசாமிப் பிள்ளையிடம் யாப்பருங்கலக்காரிகையைத் தெளிவுபெறக் கற்றார்.

                தத்துவத்துறையில் 1880 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். திருவிதாங்கூர் அரசுப் பணியில் இருந்து கொண்டே சட்டக் கல்வியும் பயின்று முடித்தார்.

                தான் பயின்ற திருவனந்தபுரம் மாமன்னர் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றும் நல்வாய்ப்பைப் பெற்றார். மாணவர்களுக்கு வரலாறும், தத்துவஇயலும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் போதித்தார்.

                சிவகாமி என்னும் மங்கையை 1877 ஆம் ஆண்டு மணம்புரிந்தார். சுந்தரனார், ஆராய்ச்சியும் கல்வியும் இரு கண்களாகக் கருதிச் செயல்பட்டார்.

                திருநெல்வேலி ஆங்கிலக் கலாசாலைக்குத் தலைவர் ஆனார். அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். சிறந்த முறையில் பாடங்களைக் கற்பிக்குமாறு ஆசிரியர்களை உற்சாகப்படுத்தினார். ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் ஆகியவை பற்றி ஒப்பியல் நெறியில் உரை நிகழ்த்தினார்.

                திருவனந்தபுரம் மாமன்னர் கல்லூரியில் மீண்டும் 1879 ஆம் ஆண்டு தத்துவத்துறைப் பேராசிரியராகப் பணியேற்றார். இவர் திறமையை அறிந்த மாமன்னர் தன் அரண்மனையிலேயே, ‘பிறவகை சிரஸ்ததார்’ எனும் உயர்பதவியை வழங்கினார்.

                சுந்தரனார்யின் ஆராய்ச்சிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது திராவிட இன ஆராய்ச்சியாகும். தென்னாட்டில் திராவிட இன உணர்வுக்கு வித்திட்டவர் என்று திராவிடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

                பழந்தமிழ் இலக்கியங்களையும், தத்துவ நூல்களையும் ஆராய்ந்தவர் பேராசிரியர் சுந்தரனார். அவர் மொழிப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் வளர்த்தார்.

                மனோன்மணியம் என்னும் நாடகத்தை 1891 ஆம் ஆண்டு படைத்தார். ‘அது ஒரு பொழுதுபோக்கு நாடகமல்ல; வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு உரிய தத்துவக் கருவூலமாக மிளிர்கிறது’- என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

                ‘மனோன்மணியம்’ என்ற நாடகத்தினைப் படைத்ததால் ‘மனோன்மணியம் சுந்தரனார்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இந்நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர் அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்களால் ‘மனோன்மணி’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

                திருவனந்தபுரம் பூர்வீக அரசியல் வரலாறுகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்து ‘திருவிதாங்கூர் பண்டை மன்னர்கள் வரலாறு’ என்ற ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார்.

                அந்த நூல் அந்நாட்டு வரலாற்றை உரைக்கும், இன்றியமையாத ஆதாரங்களுள் ஒன்றாக இன்றும் விளங்குகிறது. இந்நூலின் பொருட்டு, திருவிதாங்கூர் மாமன்னர், இவர் குடும்பத்தினர் திங்கள்தோறும், ஒரு நன்கொடை தொகையை பரம்பரையாகப் பெற்றுவர ஆணையிட்டார்.

                திருவிதாங்கூர் அரசு 1896 ஆம் ஆண்டு கல்வெட்டுத்துறையைத் தொடங்கியது. பேராசியர் சுந்தரனார், அரசுக் கல்வெட்டுத் துறையின் ‘மதிப்புறு தொல்லியல் ஆய்வாளராக’ நியமிக்கப்பட்டார். அவர் திருவிதாங்கூரின் பல பகுதிகளிலும் கிடைத்த கல்வெட்டுக்களைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

                புரவசேரி ஆழ்வார் கோயில், சோழபுரம் சோழராஜாகோயில், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில், திருவல்லம் பரசுராமர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை அவர் தேடிக் கண்டுபிடித்து அவை தரும் தகவல்களை வெளியிட்டார். கல்வெட்டுத் துறையில் சுந்தரனார் முன்னோடியாக விளங்கினார் என்று வரலாற்று அறிஞர் கே.கே. பிள்ளை தமது ‘சுசீந்திரம் கோயில்’ என்ற ஆய்வுநூலில் குறிப்பிட்டுள்ளார்.

                இவரின் தொல்லியல் ஆய்வுத் திறனைப் பாராட்டி, இவரை இங்கிலாந்தில் உள்ள ‘ராயல் ஏஷியாடிக் கழகம்’ தங்கள் நிறுவனத்தின் உறுப்பினராக்கிப் பெருமைப்படுத்தியது. பிறகு, லண்டன் வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் F.R.H.S. என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. தென்னிந்திய வரலாற்றில் இவர் செய்த சாதனைகளைப் பாராட்டி அன்றைய ஆங்கிலேய அரசு ‘ராவ்பகதூர்’ என்ற பட்டத்தை வழங்கியது. ஜெர்மன் நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்று 1896 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

                சென்னைப் பல்கலைக்கழகம் இவரை, ‘உயர்கலைக் கழக உறுப்பினர்’ பொறுப்பில் நியமித்தது. தமிழ், ஆங்கிலம், வரலாறு, தத்துவம் ஆகிய துறைப் பாடங்களின் தேர்வு நிலை உறுப்பினராகவும் விளங்கினார்.

பேராசிரியர் பெ.சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் நாடகக் காப்பியத்திலுள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான், தமிழக அரசு விழாக்களில் பாடப்பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி 1970 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                திருவனந்தபுரத்தில் ‘சைவப் பிரகாச சபை’ என்ற சபையை சுந்தரனார் 1885 ஆம் ஆண்டு தோற்றுவித்தார். தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றைப் போற்றி வளர்த்தல் – தமிழ்ச் சமுதாயப் பழக்க வழக்கங்களைச் சீர்திருத்துதல்- தமிழ் மக்களின் பொருளாதார நிலையை மேன்மையுறச் செய்தல்-தமிழ்ச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல்-தமிழ் மக்களின் உயர்தரக் கல்வி, தொழிற் கல்வி ஆகியவற்றிற்குரிய வசதிகள் அளித்தல் ஆகிய சீரிய நோக்கங்களுடன் சபையை நிர்வகித்தார். மேலும் இச்சபையின் மூலம் தமிழ்ப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. சபையின் சார்பில் கேரளப் பல்கலைக் கழகத்தில், “பேராசிரியர் சுந்தரனார் அறக்கட்டளை” நிறுவப்பட்டுள்ளது.

                வீரத்துறவி விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டு ஆன்மீகப் பயணமாக திருவனந்தபுரம் வந்திருந்தார். அப்போது, சுந்தரனார்யின் விருந்தினராக அவர் இல்லம் வந்தார். விருந்திற்குப் பின்பு விவேகானந்தரும், சுந்தரனார்யும் உரையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில், விவேகானந்தர், சுந்தரனார்யைப் பார்த்து, ‘தங்கள் கோத்திரம் என்ன’? என்று கேட்டார். சுந்தரனார் ஒரு நிமிடம் மௌனமானார். பின் நிகழ்ந்தவற்றைத் தன் குறிப்புப் புத்தகத்தில் இவ்வாறு குறித்துள்ளார்: “உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர், ‘தங்கள் கோத்திரம் என்ன?’ என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில் வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த, அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், ‘எனக்கும் கோத்திரத்திற்கும் சம்பந்தம் ஒன்றும் கிடையாது- தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்” என்பதே அக்குறிப்பு!

                பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார், ‘மனோன்மணியம்’, ‘நூற்றொகை விளக்கம்’, ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல் கற்கள்’, ‘பண்டைய திருவிதாகூர் முடிமன்னர்களின் காலம்’ ஆகிய நூல்களையும், ‘சிவகாமி சரிதம்’, ‘ஒரு நற்றாயின் புலம்பல்’, ‘பொதுப் பள்ளியெழுச்சி’, ‘அன்பின் அகநிலை’ ஆகிய கவிதை நூல்களையும், ‘ஜீவராசிகளின் இலக்கணம்’, ‘மரங்களின் வளர்ச்சி’, ‘புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்’ ஆகிய உரைநடை நூல்களையும், ‘உரை நடை மடல்,’ ‘கவிதை மடல்’ ஆகிய மடல் நூல்களையும், ஐந்து ஆங்கில நூல்களையும் படைத்து தமிழுலகுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

                பேராசிரியர் சுந்தரனார் 26.04.1897 ஆம் நாள் இளமை முதிராத தன் நாற்பத்திரெண்டாவது வயதில் இயற்கை எய்தினார். அன்றே – ‘தமிழ் உலகம்’, தன் தலைமகனை இழந்ததாய்க் கண்ணீர் விட்டுக் கதறி அழுதது. தென்னகத்தின் முக்கடலும், கண்ணீர் சூழ உப்புக் கடலாய் உருமாறி ஓலமிட்டது.

                இலக்கியத் திறனாய்வாளர் கலாநிதி க. கைலாசபதி, ‘அவர், ‘பொதுமறையாம் திருக்குறளோடு ‘மனுநீதி சாத்திரத்தை’ ஒப்பிட்டும், ‘திருவாசகத் தேனோடு’, ‘வேதத்தை ஒப்பிட்டும்’ தீந் தமிழின் உயர்வு பேசுகிறார்’ என்று கருத்துரைத்துள்ளார்!

                பாவேந்தர் பாரதிதாசன், சுந்தரனார்யின் புகழைத் தன் கவிதை நூலில் ‘தேனருவி’ யாய் இப்படிக் கொட்டிப் பாடியுள்ளார்.

                “நான் பெற்ற மக்களிள் சுந்தரன் சிறந்தவன்!

                நற்றமிழ் காக்கத் தன்னலம் துறந்தவன்!

                தேன்போன்று தமிழை வளர்க்கப் பிறந்தவன்!

                செந்தமிழுக்கு உழைத்தே இறந்தவன்!”

                பேராசிரியர் பெயரில், நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 1989 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது.

                தத்துவப் பேராசிரியராக- கல்லூரி முதல்வராக – வரலாற்று ஆராய்ச்சி அறிஞராக–கல்விக் கடலாகத் திகழ்ந்தவர்! அமிழ்தினும் இனிய தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியவர். தமிழ் மொழி உள்ளவரை, மனோன்மணியம் சுதந்திரனார்யின் பெயரும் நின்று நிலைத்திருக்கும் !

                மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் உருவம் பொறித்த ‘அஞ்சல் தலை’யும், ‘நாணயமும்’ நடுவரணரசு வெளியிட வேண்டும் என்பது நானிலமெங்கும் வாழும் தமிழர்களின் விருப்பமாகும்.

- பி.தயாளன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It