தன்னை எரித்து பிறருக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தி போல, தன் உடல், பொருள், உயிர் அனைத்தையும் மக்களின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவம் தியாகம் செய்தவர் கக்கன்.

இன்றைய அரசியல் உலகில் அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் கார், பங்களா, பணம் என கோடிகளில் புரளுகிறார்கள். ஆனால், ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் அமைச்சராகவும், ஐந்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த கக்கன், குடியிருப்பதற்கு சொந்த வீடுகூட இல்லாமல் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார்.

தமது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிந்து எளிமையாகத் திகழ்ந்தார். மக்களோடு மக்களாக, பேருந்தில் பயணம் செய்தார். தமக்காகவும், தமது குடும்பத்திற்காகவும் அரசுப் பணத்தை கொள்ளையடிக்காமல், கையூட்டுப் பெறாமல், ஊழல் செய்யாமல், சொத்துச் சேர்க்காமல் வாழ்ந்த ‘அதிசய மனிதர்’ கக்கன்!. தமது இறுதி நாட்களில் நோய்வாய்பட்டு வாடிய போதும் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் என்று பெருமை கொள்ளாமல் சிகிச்சை பெற்றார்.

மதுரை மாவட்டம், மேலூருக்கு அருகில் உள்ள தும்பைப்பட்டி எனும் சிற்றூரில் பூசாரி கக்கன் என்பவருக்கும்-பெரும்பி அம்மாளுக்கும் மகனாக 18.06.1909-ஆம் நாள் பிறந்தார் கக்கன்.

இவரது தந்தை கிராம ஊழியராக (தோட்டியாக) பணியாற்றியவர். கக்கன் தமது தொடக்கப் பள்ளிக் கல்வியை மேலூரிலும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை திருமங்கலத்திலிருந்த காகாதிராய நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் பசுமலை அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்தார்.

ஆசிரியர் பயிற்சி முடிந்ததும், கக்கன் ஆதி திராவிட மக்கள் வாழும் சேரிப்பகுதிகளில் இரவுப் பாடசாலைகள் ஏற்படுத்தி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, பள்ளிகளில் சேர்த்து தேர்வுகளில் தேர்ச்சி பெறச் செய்தார்.

கக்கனுடைய மக்கள் தொண்டைப் பற்றி கேள்வியுற்ற, ‘மதுரை காந்தி’ என மக்களால் அழைக்கப்பட்ட ஆ. வைத்தியநாத ஐயர், இவரை அழைத்துப் பாராட்டினார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து கக்கன் சமூகப் பணிகளிலும், நாட்டு விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். கக்கனுடைய சேவையைப் பாராட்டியதுடன், அவரை மகாத்மா காந்தியடிகளிடம் அறிமுகப்படுத்தினார் வைத்தியநாத ஐயர். கக்கனுடைய அரசியல் நடவடிக்கைகள் காந்தியாரை வியப்படையச் செய்தது.

வைத்தியநாத ஐயர், கக்கன் முதலியவர்களின் தீவிர முயற்சியால் ‘அரிசன சேவா சங்கம்’ மதுரை மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. அதிக எண்ணிக்கையில் அரிசனப் பள்ளிகளையும், விடுதிகளையும் நடத்தி அரிசன மாணவர்களின் கல்விக்காகப் பாடுபட்டது. மேலூரில் மாணவியருக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியாக விடுதிகளை ஏற்படுத்தி, அவை இரண்டிற்குமே காப்பாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார் கக்கன். இவ்விடுதிகளுக்கு ‘காந்தி விடுதி’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்.

கக்கன், சிவகங்கையைச் சேர்ந்த சொர்ணம்பார்வதி என்பவரை 1938-ஆம் ஆடு மணம் புரிந்துகொண்டார்.

மகாத்மா காந்தியடிகளுக்கும், அண்ணல் அம்பேத்காருக்கும் 1932-ஆம் ஆண்டு ஏற்பட்ட பூனா ஒப்பந்தப்படி, பத்து ஆண்டுகளில் தீண்டப்படாதவர்களுக்கு, இந்து மதத்தில், சாதி இந்துக்களுக்கு உள்ள அனைத்து சிவில் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். பொது நடைபாதைகளில் நடந்துசெல்லும் உரிமை, பொது நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை, பொதுக் கிணறுகளில் நீரெடுக்கும் உரிமை, பொதவான இடங்களிலும், உணவு விடுதிகளிலும் செல்லும் உரிமை, கோவிலினுள் நுழைந்து வழிபடும் உரிமை, அரசு கல்வி நிலையங்களிலும், அரசுப் பணிகளிலும் தனி ஒதுக்கீடு பெறும் உரிமை முதலிய உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென ஒப்பந்தம் அறிவித்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்துக் கோவில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபாட்டில் ஈடுபடச் செய்யும் உரிமையை காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர். இக்கோவில் நுழைவுப் போராட்டம் சாதி இந்துக்களால் தடுக்கப்பட்டது. அதை மீறி மதுரை வைத்தியநாத ஐயரும், கக்கனும் கோவில் நுழைவு உரிமைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினர்.

சென்னை மண்டலத்திற்கு 1937-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இராஜாஜி சென்னை மண்டல முதல்வராகப் பதவியேற்றார். இராஜாஜி தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவு இயக்கத்தை ஆதரித்தார். மேலும் ‘கோவில் நுழைவு’ என்பதைச் சட்டமாக்கினார். ‘மலபார் கோவில் நுழைவு சட்ட முன்வரைவு’ என்ற சட்ட முன்வரைவை 1938-ஆம் அண்டு கொண்டுவந்தார். இதற்குத் தடையாக இருந்த இந்து சமய அறநிலையச் சட்டங்களைத் திருத்தினார். தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவு உரிமைக்கு தடையாக நிற்கும் சாத்திர, சம்பிரதாயங்களை முறியடித்து அவர்களுக்கு முழு உரிமையும் அளிக்கும் சட்டத்தை 1938-ஆம் ஆண்டு நிறைவேற்றினார். ஆனால், இச்சட்டம் இந்துமதவாதிகளின் எதிர்ப்பினால் தோல்வியடைந்தது.

ஆனால், மதுரை அரிசன சேவா சங்கத்தின் செயல்வீரரான கக்கன் கோவில் நுழைவு உரிமையை எப்படியும் நிலைநாட்டிட வேண்டுமென உறுதி பூண்டார். அகில இந்திய அரிசன சேவா சங்கத்தின் துணைத் தலைவரான இராஜேஸ்வரி, நேருவை டெல்லியிலிருந்து மதுரைக்கு வரவழைத்தார். கோவில் நுழைவு உரிமை மாநாட்டை மதுரையில் கூட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலை தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபட திறந்துவிட வேண்டுமென தீர்மானம் போட்டார். இராஜாஜி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்களையும், அலுவலர்களையும் சந்தித்து, கோவிலை தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிடும்படி கூறினார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவிலைத் திறந்துவிட்டால், இந்து சமய அறநிலையச் சட்டங்களின்படி கோவில் அலுவலர்களும், அர்ச்சகர்களும், அறங்காவலர்களும், பிறரும் தண்டிக்கப்படுவார்கள் என்ற அவலநிலை இருந்தது. அதை அறிந்த இராஜாஜி, அன்றைய‌ ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபுவிடம் எடுத்துக் கூறி 1935-ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தின் 88-ஆவது பிரிவின்படி ‘அவசரப் பிரகடனம்’ ஒன்றை வெளியிடச் செய்தார். ஆதன்படி தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் அதற்காக கோவில் அதிகாரிகள், அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் முதலியவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என்ற நிலை உருவானது. அதற்குப் பிறகு தமிழகமெங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபடும் உரிமை நிலைநாட்டப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939-ஆம் ஆடு ஜூலை 8-ஆம் நாள் ஆ. வைத்தியநாத ஐயர் தலைமையில் எல்.என். கோபாலசாமி, கக்கன், சாமி.முருகானந்தம், முத்து, வி.எஸ்.சின்னையா, வி.ஆர். பூவலிங்கம் முதலிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும், விருதுநகர் எஸ்.எஸ். சண்முக நாடார் என்ற நாடார் பிரமுகரும் கோவிலில் நுழைந்து வழிபட்டனர். கக்கனின் அரசியல் வாழ்வில் இந்த நிகழ்ச்சி வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. கக்கன் மக்களிடையே பிரபலமடைந்தார். இந்த கோவில் நுழைவுப் போராட்டத்தை இராஜாஜி ‘இரத்தம் சிந்தாப் புரட்சி’ எனக் கூறி வைத்தியநாத ஐயரையும், கக்கனையும் புகழ்ந்து பாராட்டினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்தை அடுத்து, மதுரையிலுள்ள கள்ளழகர், கூடல் அழகர் கோவில்களும் திறந்துவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து தஞ்சை, திருநெல்வேலி, குற்றாலம், தென்காசி முதலிய இடங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமைப் போராட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன.

கோவில் நுழைவுச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னும் கூட, கேரளாவின் மலபாரிலும், தமிழகத்திலும் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமை முழுதாக வழங்கப்படவில்லை. ஆங்காங்கே இந்துமத சனாதனியர்களும், சாதி ஆதிக்கம் கொண்டவர்களும் எதிர்ப்பாகச் செயல்பட்டனர். அரிசன சேவாத் தொண்டர்கள் தமிழகத்திலிருந்து கேரளாவின் மலபாருக்குச் சென்றனர். கக்கன் தலைமையில் அரிசன சேவாத் தொண்டர்கள் திருவனந்தபுரம் சென்று அங்குள்ள பவண மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்து உரிமையை நிலைநாட்டினர்.

மகாத்மா காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் முதலிய நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தொண்டாற்றினார் கக்கன்.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை 1942-ஆம் ஆடு மகாத்மா காந்தியடிகள் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அறிவித்தார். காங்கிரஸ் தொண்டர்களுக்கு ‘செய் அல்லது செத்துமடி’ என்ற போராட்ட அறைகூவலை விடுத்தார். காமராசரின் நேரடிச் சீடராக விளங்கிய கக்கன் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, தஞ்சைச் சிறைச்சாலையில் ஒன்றரை ஆண்டுகள் அடைக்கப்பட்டார். போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக காவலர்களின் குண்டாந்தடி தாக்குதலுக்கு உள்ளானார். குருதி கொட்டியபோதும், குண்டாந்தடிகள் தாக்கிய போதும் நாட்டு விடுதலையே தமது உயிர் மூச்சாகக் கொண்டு பாடுபட்டார் கக்கன்.

மகாத்மா காந்தியடிகள், காமராஜர் முதலிய தலைவர்களின் மதிப்புக்கும், அன்புக்கும் பாத்திரமாக விளங்கினார் கக்கன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக, 1955-ஆம் ஆண்டு ஆவடியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கக்கன் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முதல் தாழ்த்தப்பட்டோர் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கக்கன் 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார்.

தமிழகச் சட்டமன்றத்திற்கு 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். காமராஜர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்று, தாழ்த்தப்பட்டோர் நலம், வேளாண்மை, பொதுப்பணி, உணவு முதலிய துறைகளை திறமையாகவும், நேர்மையாகவும் கவனித்தார்.

தமிழக சட்டமன்றத்திற்கு 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம். பக்தவசலம் அமைச்சரவையில், தாழ்த்தப்பட்டோர் நலம், மதுவிலக்கு, வேளாண்மை, உணவு, நீர்ப்பாசனம், கால்நடைப் பராமரிப்பு முதலிய துறைகளின் அமைச்சராக விளங்கி ஊழல் செய்யாமல் பணியாற்றினார்.

ஏழ்மையிலும், வறுமையிலும் வாடிய கக்கனுக்கு, தமிழக அரசு 1979-ஆம் ஆண்டு இலவச வீடும், இலவச பயணஅட்டையும், இலவச மருத்துவச் சலுகையும், மாதம் ஐநூறு ரூபாய் ஓய்வு ஊதியமும் வழங்கிட உத்திரவிட்டது.

ஏழையாகப் பிறந்து ஏழைமக்களின் வாழ்க்கை முன்னேற பாடுபட்டு, ஏழையாகவே வாழ்ந்த ‘தியாகச் சுடர்’ கக்கன், தமது எழுபத்திரண்டாவது வயதில் நோய்வாய்பட்டு 28.12.1981-ஆம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும், அவரது மேன்மையும், எளிமையும், தொண்டும் என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It