"மேட்டூர் அணை உருவாவதற்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்துத் திட்டம் வகுத்துத் தந்தவர் பா.வே. மாணிக்கம் நாயக்கர்" என்று தமிழ்க் கலைக் களஞ்சியம் கூறுகிறது.

சேலம் மாவட்டம் பாகல் பட்டியில் வேங்கடசாமி நாயக்கருக்கும் - முத்தம்மையாருக்கும் 25.02.1871 ஆம் நாள் இரண்டாவது மகனாகப் பிறந்தார் பா.வே. மாணிக்க நாயக்கர்.

நாயக்கரின் அறிவுத் திறமை கண்டு, அவருக்குப் பட்டப்படிப்பு வரை உதவி செய்தார் துறவி முனுசாமி நாயுடு. பள்ளியில் படிக்கும் பொழுதே கவிபாடும் ஆற்றல் கொண்டவராக விளங்கினார். சேலம் கல்லூரியில் சேர்ந்து இளங்கலையில் எப்.ஏ., பட்டம் பெற்றார். அவருடைய பொறியியல் நுட்ப ஆர்வத்தை அறிந்த கல்லூரி முதல்வர், சென்னை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு உதவினார். அங்கு, முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுப் பல பரிசுகளும், தங்க பதக்கமும் பெற்றார்.

சென்னை அரசாங்கத்தில் நீலகிரி உதவிப் பொறியாளராக 1896 ஆம்ஆண்டு பணியேற்றார். செயற்பொறியாளராக 1906 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார்.

இங்கிலாந்துக்கு 1912ஆம் ஆண்டு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். வலுவாக்கிய கான்கிரீட் பற்றியும் ஆய்வு செய்தார். 'கால்குலோகிராப்' என்ற கருவியை உருவாக்கி, அதைப் பொறியியல் உலகத்துக்கு அளித்து சாதனை புரிந்தார்.

தயாகம் திரும்பிய பின்னர் 1915ஆம் ஆண்டு சென்னை பொறியியல் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். கல்லூரி மாணவர்களுக்கு பொறியியல் கல்வியைத் திறம்பட அளித்தார்.

பொதுப் பணித் துறையில் 1919ஆம் ஆண்டு செயற்பொறியாளராகப் பதவி ஏற்றார். அத் துறையில் கண்காணிப்புப் பொறியாளராகப் பதவி; உயர்வு பெற்றவர் பின்னர் 1927 ஆம் ஆண்டு அரசுப்பணியில் இருந்து ஓய்வுப் பெற்றார்.

பொறியியலைத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் விலங்கியல். வானவியல், நிலவியல், மெய்ப் பொருளியல் முதலிய துறைகளிலும் சிறப்புடன் விளங்கினார்.

தமிழ், தெலுங்கு, வடமொழி ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். தையற்கலை, தச்சுக்கலை, ஓவியக்கலை, .இசை முதலிய பல கலைகளிலும் பயிற்சி உடையவராகவும் விளங்கியதால் இவரை ஒர் பல்கலைக் கழகம்' என ஆய்வாளர்கள் இவரைக் குறிப்பிடுகின்றனர்.

பொறியியல் துறையில் அறுபதுக்கும் மேற்ப்பட்ட கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி சாதனையாளரானார். பொறியியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே தமிழறிஞர்கள் பலரோடு நெருங்கிய நட்பும், தொடர்பும் கொண்டிருந்தார். தேசியக்கவி பாரதியுடன் 1915 முதல் நெருங்கிப் பழகியவர். மறைமலையடிகள், எம்.எல் பிள்ளை ஆகியோரிடம் சிறந்த நட்புக் கொண்டிருந்தார். பா.வே. மாணிக்க நாயக்கரின் திறமையை நன்கு அறிந்த தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலையடிகள் அவரை 'தனித்திறமார் பேரறிஞர்' எனப் பாராட்டியுள்ளார்.

ஆய்வு செய்தல், சொற்பொழிவாற்றுதல் ஆகிய பணிகளில் ஈடுபடடு வந்தார். இவரது பெரும்பாலான ஆய்வுகள் ஆங்கில மொழியில் அமைந்துள்ளன.

'தமிழ் எழுத்துக்களில் நுண்மை விளக்கம்', 'உயிர் வளர்ச்சியிற் கண்ட இறை வடிவம் 'சென்னையில் நமது மிருக காட்சிச் சாலை' ஆகியவை நாயக்கர் எழுதிய ஆங்கில நூல்களின் தமிழாக்கங்களாகும். மேலும் தமிழ் ஒலி இலக்கணம், மெய்ஞானத்தின் கொலுவிருக்கையில் அஞ்ஞானத்தின் வழக்கீடு, கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் - முதலிய நூல்களையும் அவர் தமிழுக்கு அளித்துள்ளார்.

'ஜஸ்டிஸ்' - 'செந்தமிழ்ச் செல்வி' ஆகிய இதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவரது ஆய்வுகள் அனைத்தும் தனித்தன்மை உடையவை. தமிழ் மொழியின் சிறப்பு பற்றியும் ஆய்வுகள் பல செய்துள்ளார்.

தமிழ் ஒலியைக் கொண்டு உலகின் எந்த மொழியையும் உச்சரிக்க இயலும் என்பது இவரது ஆய்வு முடிவு. இது, அறிஞர்கள் பலரின் பாராட்டைப் பெற்றது. தமிழில் அறிவியல் கலைச் சொல்லாக்கத்திற்கு முதலில் வித்திட்டடவர் பா.வே. மாணிக்க நாயக்கராவார். ஜஸ்டிஸ் இதழில் 1926 முதல் ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கி வெளியிட்டார்.

தமிழ் மொழியின் சொற்களே, தமிழ் மக்களின் நாகரிகத்தை விளக்குவதற்குச் சான்றுகளாக அமைந்துள்ளன என்பதைத் தனது ஆய்வு மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். சான்றாக 'கள்' என்னும சொல்லை நோக்கினால், தமிழர்கள் ஆப்பொருளின் மீது எத்தகைய வெறுப்புக் கொண்டிருந்தனர் என்பதை இப்படி விளக்கினார்: " 'கள்' என்ற சொல் திருடு என்று பொருள் தருகிறது. கள்ளைக் குடிப்பதனால் ஒருவன் தன்னையே திருடிக் கொள்கிறான். அதாவது தன் உணர்வையும், அறிவையும் இழக்கிறான். எனவே தான் இத்தகைய திருட்டு நிலைக்குக் காரணமான அப்பொருளைக் 'கள்' எனத் தமிழர்கள் சுட்டினர்" எனக் குறிப்பிட்டுள்ள விளக்கம் வியக்கத்தக்கது ஆகும்

நாயக்கர் தமிழ்ப் பேரகராதியின் தயாரிப்பிலும், வளர்ச்சியிலும் அக்கறைக் காட்டினார் தமிழ் அல்லாத பிற துறையில் இருந்து கொண்டு, தமிழ்ப் பணி செய்து உயர்ந்த பெருமைக்குரியவர் பா.வே. மாணிக்க நாயக்கர்.

பேரறிஞர் பா.வே மாணிக்க நாயக்கர் 25.12.1931 ஆம் நாள் காலமானார். அவரது புகழ் தமிழ் மொழி உள்ளளவும் நிலைத்து நிற்கும்.

Pin It