தோட்டம் வைத்திருப்பவர்களுக்குத் தெரியும் கருவேப்பிலை செடிகளின் கிளைகளை முறிக்க முறிக்கத்தான் புதிய கிளைகள் புசு புசுவென்று வேகமாக வளரும் என்று. கிளைகளின் முனைகளை வெட்டுவதை கவாத்து செய்தல் என்பார்கள். ரோஜா செடிகளில்கூட ஆண்டுக்கொருமுறை கவாத்து செய்வது நல்லது. அப்போதுதான் புதிய கிளைகள் தோன்றும்.

ஏற்கனவே தோன்றிவிட்ட கிளைகள் அதற்குப் பிறகு தோன்ற முயலும் புதிய குழந்தை கிளை மொட்டுகளை வளரவிடாமல் அதிகாரம் செலுத்துகின்றன. ஒரு சுயநலம்தான். செடிகளுக்குக்கூட சுயநலம் உண்டு. எது அதிகாரம் செலுத்துகிறதோ அதன் தலையை கிள்ளியெடுத்து விட்டால் கீழே புதிய கிளைகள் மொட்டு விட ஆரம்பிக்கின்றன.

நீங்கள் பரிதாப்பட்டு காப்பாற்றி முளைக்க வைத்த மொட்டுகள் சாமானியமானவை அல்ல: அவை வளந்ததும் உடனே மற்ற மொட்டுகளை அதிகாரம் செலுத்த ஆரம்பிக்கின்றன.

கைகட்டி சேவகம் செய்து வந்த ஊழியர், அவரது அதிகாரி  ஓய்வுபெற்றுச் சென்றதும் அந்த இடத்தை இவர் அடைகிறார். உடனே முன்னவரைவிட அதிகமாக தனக்குக் கீழ் உள்ளவர்களை அவர் அதிகாரம் செலுத்துவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் அல்லவா.  செடிகளும் மரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

கிளைகளின் முனைகளிலிருந்து வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. இவை புதிதாக பிறக்க முயலும் மொட்டுகள் முகிழாதபடி தடுக்கின்றன. இதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன் எது என்பது தெரிந்துவிட்டது. ஸ்ட்ரைகோலேக்டோன் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இனி கவாத்து செய்யாமல் எப்படி புதிய கிளைகளை தூண்டுவது என்பதை பயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

-முனைவர் க.மணி ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It