மனிதர்களுக்குப்பிடித்தமான உணவுப்பட்டியலில் இப்போது தவளையின் கால்களும் சேர்ந்து கொண்டன. விளைவு.....தவளையினம் அழிந்து கொண்டிருக்கிறது. இப்படித்தான் சொல்கிறது அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள்.

நோய்களின் தாக்கம், வாழ்விடங்கள் இழப்பு, புவிவெப்ப உயர்வு போன்ற அச்சுறுத்தல்களினால் தவளையினம் ஏற்கனவே அழிந்து கொண்டிருக்கிறது. இப்போது உணவிற்காக அவை கொல்லப்படுவது அதிகரித்து வருவதாகவும், சட்டபூர்வமாக இது தடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கடல்வாழ் உயிரினங்களை வரைமுறையின்றி உணவிற்காக அழிக்கும் போக்கு இயற்கைச் சமநிலையை சீர்குலைக்கும். உணவுச்சங்கிலியின் ஒரு கண்ணியை அறுக்கும் இந்த செயல் சட்டத்தின் இரும்புக்கரங்களால் தடுக்கப்படவேண்டிய நேரம் வந்துவிட்டது.

பிரெஞ்சுக்காரர்கள் மட்டுமே தவளையின் கால்களை விரும்பிச் சாப்பிடுவார்கள் என்கிற காலம் மலையேறிப் போய்விட்டது. ஐரோப்பாவின் பள்ளிக்கூட சிற்றுண்டிச் சாலைகளில் கூட தவளைக்கால்கள் விற்கப்படுகின்றன. பெரும்பாலான ஆசிய நாட்டவர்கள் தவளைக்கால்களின் ரசிகர்களாக மாறிப் போயிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா கூட தவளைக்கால்களை விரும்பிச் சாப்பிடுவதாக அண்மையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு பில்லியன் தவளைகள் உண்ணப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெல்லாம் ஒரு குத்துமதிப்பான தகவல்தான். இந்தோனேசியா மட்டுமே தவளைகளை அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. இந்தோனேசியாவின் உள்ளூர் பயன்பாடு ஏற்றுமதியைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகம். ஓர் ஆண்டின் சில பருவங்களில் உள்ளூர்த் தேவைகளுக்காக தவளை பிடித்த காலம் மலையேறிப் போய்விட்டது. இப்போது ஆண்டு முழுவதும் சர்வதேச சந்தையில் தவளைக்கால் வியாபாரம் கொடிகட்டிப்பறக்கிறது.

இன்னும் படிக்க:

http://www.sciencedaily.com/releases/2009/01/090120195731.htm

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It