சமூக பாதுகாப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியல் போல உலகில் பல்வேறு சமுதாய நிலைகள் பற்றி அவ்வப்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து பட்டியல்களை வெளியிடுகின்றனர். இவ்வகையில் இயற்கையுடனான உறவு குறித்த பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

கனடா, இஸ்ரேல், ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் , நேபாளம் உள்ளிட்ட 61 நாடுகளில் மக்கள் இயற்கையுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளனர் என்பது பற்றிய ஆய்வுகள் நடந்தன. இது குறித்து உலகளவில் நடந்த முதல் ஆய்வு இது. இந்த நாடுகளைச் சேர்ந்த 57,000 பேர் இதில் பங்கேற்றனர். சமூக, பொருளாதார, புவியியல், கலாசார அம்சங்கள் இயற்கையின் மீதான மக்களின் கருத்தை எவ்வாறு உருவாக்குகிறது என்பது ஆராயப்பட்டது.moonykim nepalஇந்த ஆய்வில் நேபாளம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இரான், தென்னாப்ப்ரிக்கா, பங்களாதேஷ் மற்றும் நைஜீரியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன என்று ஆம்பியோ (Ambio) என்ற இதழில் இது குறித்து வெளிவந்த ஆய்வு கூறுகிறது. க்ரோஷியா மற்றும் பல்கேரியா ஆகியவை மட்டுமே பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்ற இரண்டு ஐரோப்பிய நாடுகள். பிரான்ஸ் 19வது இடத்தில் உள்ளது.

பிரிட்டனுக்கு அடுத்த இடங்களில் நெதர்லாந்து, கனடா, ஜெர்மனி, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. பட்டியலில் ஸ்பெயின் கடைசி இடத்தில் உள்ளது. இயற்கையுடனான உறவு என்பது ஒரு தனிநபர் பிற உயிரினங்களுடன் உளவியல் ரீதியாக மற்ற உயிரினங்களுடன் அவர் எந்த அளவு நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளார் என்பதை குறிக்கிறது.

இயற்கையான சூழலில் வாழும் ஒருவர் அதிகமாக மகிழ்ச்சியுடன் இருப்பதால் அவரின் உடல் மற்றும் மன நலம் மேம்படுகிறது. இதனால் அவர் சூழல் நட்புடைய செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையுடன் குறைவாகத் தொடர்பு கொண்டுள்ள ஒருவர் உயிர்ப் பன்மய இழப்பு, பொருளாதார சமத்துவமின்மை, பொருளியல் சார்ந்த பயன்களைக் குறைவாகப் பெறுகிறார்.

பிரிட்டன் டார்பி (Derby) பல்கலைக்கழகத்தின் இயற்கைத் தொடர்புகள் குறித்த பிரிவின் பேராசிரியர் மைல்ஸ் ரிச்சர்ஸன் (Miles Richardson) அவர்களின் தலைமையில் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தினர்.

இயற்கையுடன் அதிக தொடர்பு கொண்டுள்ள சமுதாயம் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தில் அதிக நம்பிக்கையுடன் உள்ளது. இயற்கைத் தொடர்பு குறைவாக உள்ள நாடுகளில் வணிக நட்புடைய சூழல் குறைவாக உள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

பிரிட்டன் உலகில் அதிகமான சூழல் பாதுகாப்பு அமைப்புகளில் உறுப்பினராக இருந்தாலும் இயற்கையுடன் உள்ள மக்கள் தொடர்பில் அது எந்த தாக்கத்தையும் செலுத்தவில்லை. நகர மயமாக்குதல், சராசரி வருமானம் மற்றும் மிதமிஞ்சிய இணைய தள பயன்பாடு போன்றவையும் இதற்குக் காரணம் என்று ஆய்வு கூறுகிறது.

இயற்கைத் தொடர்பு என்பது நாம் எதைச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததில்லை. ஆனால் அது இயற்கையைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம், எவ்வாறு உணர்கிறோம், சிந்திக்கிறோம், இயற்கையை நாம் எந்த அளவு மதிக்கிறோம் என்பதிலேயே உள்ளது.

“இன்றுள்ள தொழில்நுட்ப உலகில் இயற்கையைக் குறித்த சிந்தனைகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். கலாசாரத்தை மாற்றுவது கடினம். ஆனால் இயற்கையின் மதிப்பை நம் நலமான வாழ்வுடன் மைய நீரோட்டத்தில் இணைத்துப் பார்க்கப் பழக வேண்டும். மனநல மற்றும் உடல் நல சிகிச்சைகளில் இயற்கை வழி முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். இயற்கை பற்றிய பொது விதிகளை உருவாக்க வேண்டும். மிதமிஞ்சிய வணிக நோக்கங்கள் சூழல் முடிவுகளைப் பாதிக்கிறது. முடிவுகள் எடுப்பதில் இயற்கைக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும்.

வெறும் வளமாக மட்டும் கருதாமல் இயற்கையை நம் செயல்களில் பங்காளியாக ஆக்க வேண்டும். நகரப் பகுதிகளில் பூங்காக்கள், பசுமையிடங்களை அதிகப்படுத்தினால் மட்டும் போதாது. அவற்றை புனிதமாகக் கருத வேண்டும்" என்று ரிச்சர்ட்ஸன் கூறுகிறார். அவ்வாறு கருதும் நாடுகளில் வாழும் மக்கள் அதனுடன் அதிகமாகத் தொடர்பு கொண்டுள்ளனர் என்று உலக மதிப்பீடுகள் கணக்கெடுப்பு (World Values Survey) அமைப்பின் ஆய்வு கூறுகிறது.

“இயற்கை உடல், மன நலம், ஆன்ம நலனிற்கு நல்லது. பைபிள் போன்ற பல புனித நூல்கள் பறவைகள், மலர்களுடன் புராண காலத்தில் மக்கள் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்ததைக் கூறுகிறது. பார்ப்பதில் நாம் நேசிப்பதை நாம் விரும்புகிறோம். அதைப் பொக்கிஷமாக நினைக்கிறோம். பாதுகாக்க முயல்கிறோம். வனப் பகுதி சூழலில் உள்ள பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள் இதில் பெரும் பங்காற்றுகின்றன” என்று இங்கிலாந்து சர்ச்சுகளுக்கான கூட்டமைப்பு மற்றும் நாரிஜ் (Norwich) தேவாலயத்தின் பிஷப் கிரயெம் அஷர் (Graham Usher) கூறுகிறார். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உலக மக்களிடையில் உருவாக்க இந்த ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.