கடல் கடந்து புகழ்பெற்ற ஜார்ஜ்

இந்த கேரளத்துப் புலியின் கதை நமக்குத் தெரியாவிட்டாலும் பிரான்சில் இவன் குழந்தைகளிடம் மிகப் பிரபலமானவன். பிரெஞ்சு எழுத்தாளரும், நடனக் கலைஞருமான லெயர் ல் மிஷேல் என்ற பெண்மணிதான் தன் சிறுகதைகள் மூலம் ஜார்ஜ் என்ற புலியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கடந்த 2021 டிசம்பரில் ஜார்ஜ் மரணத்திற்குக் கீழ்படிந்தான் என்றாலும் கதைகளின் வழியாக அவன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

மிஷேலிற்குக் கிடைத்த ஜார்ஜின் தோழமை

இயற்கைக்கும் விலங்குகளுக்கும் இடையில் இருக்கும் உறவைப் பற்றி ஆராய்வதற்காக ஒரு சில ஆண்டுகளுக்கு முன் மிஷேல் பிரெஞ்சு கலாச்சார மையமான அலியோன்சிஸ் பிரான்சிஸின் விருந்தாளியாக கேரளாவிற்கு வந்தார். ஆய்வுகளின் ஒரு பகுதியாக அவர் மிருகக்காட்சி சாலையில் டாக்டர் ஜேக்கப் அலெக்சாண்டரைச் சந்தித்தார்.

எழுத்தின் தொடக்கம்

அப்போது முதல் மிஷேல் தன் அனுபவங்களை எழுதத் தொடங்கினார். அமைதியாக கூண்டிற்குள் வாழ்ந்து கொண்டிருந்த ஜார்ஜ் என்ற புலியுடன் நேசம் மிக்க தோழமை ஆரம்பித்தது. நாட்டிற்குத் திரும்பியவுடன் “The story of George” என்ற பெயரில் ப்ளாக் (blog) மற்றும் வானொலித் தொடராக இந்தப் புலியின் கதைகள் பிறந்தன. கருத்தும் கற்பனையும் கலந்த ஜார்ஜின் கதைகள் ஜன ரஞ்சகமாயின. மிருகக்காட்சி சாலையின் ஊழியர்கள் இதில் கதாபாத்திரங்களாயினர்.tiger georgeகுழந்தைகள் மனதில் என்றும் வாழும் ஜார்ஜ்

இதுவரை ஜார்ஜின் கதை 38 அத்தியாயங்களாக வெளிவந்துள்ளது. சனிக்கிழமைகள்தோறும் பிரான்சில் பிராத்தனேயு டவுனில் நடக்கும் வாசிப்பு இரவுகளில் (reading nights) ஜார்ஜின் கதைகளைக் கேட்க பலர் ஒன்று திரண்டனர். மிஷேல் ஷூட் செய்திருந்த ஜார்ஜின் காணொளிகள் கதை சொல்லலை மேலும் அழகானதாக்கியது. ஜார்ஜுடன் தொடர்புடைய கதைகள், சம்பவங்கள் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து பிரார்த்தனேயு டவுன் ஒரு இணையப் பக்கத்தையும் (webpage)ஆரம்பித்துள்ளது.

ஓவியமாக மாறிய புலி

கதை கேட்க வருபவர்களில் குழந்தைகள் ஏராளமாக இருந்தனர். அவர்கள் வரைந்த ஜார்ஜின் 23 ஓவியங்களை ஜனவரி 2022ல் திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஓவியங்களைப் பார்த்தபோதுதான் ஜார்ஜிற்கு பிரான்சில் இவ்வளவு இரசிகர்கள் இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. 

முதலில் பீதியை ஏற்படுத்தியவன் பிறகு ஹீரோ

இதற்கிடையில் ஜார்ஜ் கடந்த டிசம்பர் 2021ல் மரணமடைந்தான். இது மிஷேலையும், இரசிகர்களையும் சோகக்கடலில் ஆழ்த்தியது. புலிகள் சாதாரணமாக 16 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும். ஆனால் ஜார்ஜ் இந்த பூமியை விட்டு மறைந்தது அவனுடைய 22வது வயதில். 2015ல் இவன் காட்டில் இருந்து நாட்டிற்குள் நுழைந்தான்.

முப்பதிற்கும் அதிகமான வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடினான். மலையோர கிராமங்களை ஏழு நாட்கள் நடுங்க வைத்தான். இறுதியில் பிடிக்கப்பட்டான்.

திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரும்போது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. மூக்கின் நுனியும் உடைந்திருந்தது. சிறந்த பராமரிப்பினால் உடல் நலம் தேறினான். அந்த ஆண்டு பிரபலமான பிரேமம் என்ற மலையாளத் திரைப்படத்தின் கதாநாயகனின் பெயரும் கிடைத்தது. விலங்குகளை கூண்டிற்குள் அடைத்து வைத்து காட்சிப்படுத்தும் முறைக்கு எதிராக இருந்த மிஷேல் ஜார்ஜைப் பார்த்த பிறகு, அவனுக்குக் கிடைத்த பாசம் மிக்க பராமரிப்பைக் கண்டபிறகு தன் மனதை மாற்றிக் கொண்டார்.

என்றும் வாழும் ஜார்ஜ்

இயற்கையின் படைப்பில் காக்கா குருவி முதல் அணைத்து உயிரினங்களும் அன்பிற்கு அடிமை என்பதையே ஜார்ஜின் கதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அன்பு காட்டினால் பூமரம் முதல் யானை புலி வரை எல்லா உயிரினங்களும் என்றும் நம் நினைவில் வாழும்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It