பொன்னன் கட்டுமரத்தின் துடுப்பை வேகமாகப் போட்டான். “தம்பி! இதுக்கு மேலே போக வேண்டாம். இனிமே வரதெல்லாம் சுறாமீன் சஞ்சாரப் பகுதி'' என்று எச்சரிக்கை செய்தான், கொம்பன்.

Fishermenகட்டுமரத்தில், பனை ஓலைக் கூடையில், பிடித்த மீன்களெல்லாம் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. “அண்ணே! நான் இதுவரை சுறாமீனைப் புடிச்சதே இல்லை. இப்ப ஒன்றைப் புடிச்சுப் பார்க்கலாமா?' என்று ஆவலுடன் கேட்டான், பொன்னன்.

“சுறா மீனை புடிக்க ஆள்பலம் வேணும் தம்பி. அது வாலைச் சுழற்றி அடிக்கும்போது கவிழாத படகு தேவை. இன்னொரு நாள் விசைப்படகில் ஆள் கட்டோடு வரலாம். இப்ப வேணுமானா, சுறாவை வரவழைச்சுக் காட்டறேன்'' என்றான், கொம்பன்.

பிடிக்கும்போது அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்த ஒரு பெரிய மீனை ஓலைக் கூடையில் இருந்து எடுத்த கொம்பன், அதை பலமாகக் கயிற்றில் கட்டி, நீரில் எறிந்தான். “தம்பி! சுறாக்களுக்கு மோப்ப சக்தி மிக அதிகம். நீரில் ரத்தக் கசிவு கலந்தால் பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் இவை கண்டுபிடித்துவிடும் பாரேன். இந்த மீனின் ரத்தக் கசிவைக் கண்டு பிடித்து எத்தனை சுறாக்கள் ஓடி வருகின்றன என்று!'' கொம்பன் கூறி முடிக்கவில்லை. கயிற்றில் கட்டப்பட்டிருந்த மீனை நீருக்குள் சுறாமீன்கள் இழுப்பது தெரிந்தது. வாலால் சுழற்றி வீசப்பட்ட நீர் உயர்ந்த அலைகளாக எழும்பிக் கட்டுமரத்தை அலைக்கழித்தது.

சுறா, கட்டுமரத்தையே தாக்கிக் கவிழ்த்துவிட முயன்றது. சண்டை போட்டுக் கொண்டே இரண்டு சுறாக்கள் வாயைப் பிளந்தபடி ஒன்றை ஒன்று தாக்க முயன்றபோது பயங்கரமாக இருந்தது. “யெப்பா! முதலைக்குப் பல்வரிசை இருப்பது மாதிரி என்ன இதுகளுக்கும் இருக்கு!'' என்று வியந்தான், பொன்னன். அந்த மீனுக்காகச் சுறாக்கள் மோதிக் கொண்டபோது, கட்டுமரம் படாத பாடு பட்டது. அரும்பாடு பட்டு, கட்டுமரத்தை அந்த இடத்தில் இருந்து விலக்கிக் கொண்டு போனார்கள்.

“தம்பி! முதலைகளுக்குப் பற்கள் ஒரு வரிசைதான். ஆனா சுறாக்களுக்குக் குறைஞ்சது நாலு வரிசைப்பற்கள் இருக்கும். இரையைக் குத்திக் கிழிக்கிறது எல்லாமே முதல் வரிசைப் பற்கள்தான். இதுல ஒரு பல் உடைஞ்சு விழுந்துட்டா, பின் வரிசையிலிருந்து ஒரு பல் அந்த விழுந்த இடத்துக்கு நகர்ந்து வந்துவிடும்! இல்லைன்னாக்கூட இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுறாக்களுக்குப் புதிய பல் முளைத்துவிடுகிறது. புலி சுறான்னு ஒரு வகை. இதுக்கு மட்டும் பத்து வருடத்திலே 24,000 பல் முளைக்கிறது'' என்று விளக்கினான், கொம்பன்.

“சுறாவின் எந்த உறுப்பும் வீணாவது இல்லை. பற்களால் மாலைகள், தோலால் பைகள், செருப்புகள், எலும்பால் மருந்துத்தூள், ஈரல் கொழுப்பில் இருந்து எண்ணெய், இறைச்சி என்று அதன் உடம்பின் எல்லா பாகங்களும் மனிதர்களுக்கு உதவுகின்றன. ஆங்கிலேயர்களுக்குச் சுறா என்றால் கொள்ளை ஆசை. நம்ம நாட்டுல பிரிட்டிஷ் ஆட்சி நடந்துக்கிட்டிருக்கிறப்போ, எங்க தாத்தா பத்து வருடத்துல ஆயிரம் சுறா புடிச்சுக் கொடுத்தார்னு ஆங்கிலத் துரை, ‘ஆயிரம் சுறா புடிச்ச மாரிமுத்து'ன்னு எங்க தாத்தாவுக்கு பட்டம் தந்தாராம்!'' என்று தொடர்ந்து கூறினான், கொம்பன்.

“இதன் உடம்பு சிலேட் மாதிரி மொழுமொழுன்னு இருக்கே!''

“தலையில இருந்து வால்பக்கம் தடவினால் அப்படித்தான் இருக்கும். ஆனால், வாலில் இருந்து தலைப்பக்கம் தடவினால் உப்புக் காகிதத்தைத் தொடுவது போல் சொரசொரப்பாய் இருக்கும்.''

“பைலட் மீன், ரிமோரா என்று இரண்டு வகை சிறிய மீன்கள் இவைகளின் உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன. சுறாக்கள் இவைகளைக் கண்டுகொள்வதில்லை. காரணம், இவை சுறாவின் பற்களையும், செதில்களையும் சுத்தப்படுத்துகின்றன. சுறாக்களால் வண்ணங்களைப் பிரித்து அறிய முடியாது. பார்வையும் கூர்மை கிடையாது. மந்தமான வெளிச்சத்தில்தான் இதற்குப் பார்வை தெளிவாகத் தெரியும்''.

“அதனால்தான் சுறாக்கள் பெரும்பாலும் மாலை நேரத்தில் மனிதர்களைத் தாக்குகின்றனவா?''

“சுறாக்களின் உடம்பில் இருப்பவை வலுவான எலும்புகள் அல்ல. நமது மூக்கின் நுனிப்பகுதி கார்டிலேஜ் என்ற மென்மையான குறுத்து எலும்பு பொருளால் ஆனது. இதைப் போன்றே சுறாவின் உடல் எலும்புகள் எல்லாம் குறுத்தெலும்பால் ஆனவை.''

“சுறாக்கள் மனிதர்களைக் கண்டால் விடாது என்கிறார்களே..!''

“இது முழுக்க உண்மை அல்ல. சுறாக்களில் சுமார் 300 வகை உண்டு. இவற்றுள் 30 வகைகளே மனிதர்களைத் தாக்குபவை. அதுவுங்கூடச் சில நேரங்களில்தான். சுறாக்களுக்குப் பசி வந்துவிட்டால் எதிர்ப்பட்ட எல்லாவற்றையும் விழுங்கி வைக்கும். ஒரு சுறாவின் வயிற்றில் இருந்து ஒரு மண்ணெண்ணெய் டின், பிளாஸ்டிக் பொம்மை, கோணி எல்லாம் எடுத்திருக்கிறார்கள். சுறாக்குட்டிகளுக்குப் பிறக்கும்போதே பற்கள் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவை இரண்டு குட்டிகள் போடும். சில வகை சுறாக்கள் நூறு குட்டிகள் கூடப் போடும். குட்டிகளை அம்மா விட்டுவிட்டுப் போய்விடும். இவை தாமே இரை தேடிப் பிழைத்துக் கொள்ளும். பெரிய சுறாக்கள், குட்டிச் சுறாக்களைச் சாப்பிட்டுவிடும். ஆனால், தாய் தன் குட்டிகளைச் சாப்பிடாது. மாதக்கணக்கில் இவை பட்டினி கிடக்கும். உடம்பு இளைக்காது. ஈரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பும் எண்ணெயும் இவைகளைப் பாதுகாக்கும்.''

“சுறா கடலில் மட்டும்தான் இருக்குமா? ''

“அப்படி இல்லை. நல்ல நீரில், நதிகளில் வசிக்கும் சுறாக்களும் உண்டு. பொதுவாக சுறாக்கள் ஆழமான பகுதிகளில்தான் வசிக்கும். 4000 மீட்டர் ஆழத்தில் வசிக்கும் சுறாக்கள் கூட இருக்கின்றன.''

பொன்னன் துடுப்பை வேகமாகப் போட்டான்.

நன்றி: குருவி நடக்குமா?

அறிவியல் கதைகள்

அறிவியல் உண்மைகள்

 சுறாக்கள் 350 மில்லியன் ஆண்டு களாக உலகில் வாழ்பவை. அதிக உருமாற்றம் ஏதுமில்லை.
 குளிர் ரத்த வகை. 300 வகைகள். 30 வகைகளே மனிதர்களுக்குச் சில நேரங்களில் எதிரிகள்.
 உடம்பில் இருப்பவை எலும்புகள் அல்ல. மெல்லிய குறுத்தெலும்பு. மங்கலான வெளிச்சத்தில்தான் பார்வை அதிகம்.

 குட்டிபோடும் இனம், தாய் தன் குட்டிகளைத் தின்னாது. மற்ற சுறாக்களின் குட்டிகளைத் தின்னும். எதையும் தின்னும் இனம்.
 பற்கள் 4 வரிசைகள், அவற்றிற்கு மேலும் உண்டு, புதிய பற்கள் 2 வாரங்களுக்கு ஒருமுறை முளைக்கும். பாஸ்கிங் சுறாவுக்குப் பற்களே இல்லை.
 கொழுப்பும், எண்ணெயும் ‘ஏ' வைட்டமின் நிரம்பியவை.
 சுறாக்கள் இல்லையெனில் கடலில் சிறிய மீனினங்கள் பெருகி நீந்த இடமின்றித் தவித்து இறக்கும்.
 வேல் சுறா 15 மீட்டர் நீளம் வரை வளரும், ட்வாப் சுறாவின் நீளம் 5 அங்குலமே!

- ரேவதி

(நன்றி : தலித் முரசு ஆகஸ்ட் 2008)

Pin It