Animal treatmentகிழக்கத்திய நாடுகளில் கையாளப்பட்டு வரும் ஒரு மருத்துவமுறைதான் அக்குபங்சர். மிக நுண்ணிய ஊசிகளை உடலின் குறிப்பிட்ட புள்ளிகளில் செலுத்தி வலியை மறக்கச்செய்யவும், சிகிச்சை அளிக்கவும் இந்த அக்குபங்சர் மருத்துவமுறை பயன்படுகிறது. இதுவரை மனிதர்களுக்கு மட்டுமே பயன்பட்டுவந்த இந்த அக்குபங்சர் மருத்துவமுறை இப்போது கால்நடை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் புதிய அறிவியல் செய்தி.

ஜிப்ஸி...இது ஒரு குதிரையின் பெயர். குதிகாலில் பீடித்த நோயால் அவதிப்பட்ட ஜிப்ஸியின் வலியை துரத்தியடித்து, எலும்புகளின் வலிமையைப்பெருக்கி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தது அக்குபங்சர் மருத்துவ முறை. பாரம்பரிய மருத்துவ முறையுடன் இணைந்துதான் இந்த சிகிச்சை செய்யப்பட்டது.

வர்ஜீனியா டெக் நகரத்திலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிய மற்றும் பெரிய மிருகங்களுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால்நடைகளின் தோல் நோய்கள், தசை மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், நரம்புமண்டலம் சார்ந்த நோய்கள் இவற்றுக்கெல்லாம் அக்குபங்க்சர் சிகிச்சை பலனளிக்கிறது என்கிறார் இங்கு பணியாற்றும் டாக்டர் மார்க் கிரிஸ்மான். கடந்த பத்தாண்டுகளாக இந்த சிகிச்சை முறையில் விற்பன்னராக இவர் இருக்கிறார்.

கால்நடைகளுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சியும் சான்றிதழ்படிப்பும் கூட இந்த நிறுவனத்தில் வழங்கப்படுகிறதாம்.

பழமையான மருத்துவ முறைக்கு அக்குபங்சர் மருத்துவ முறை ஒரு மாற்று அல்ல. பழமையான மருத்துவ முறையுடன் அக்குபங்க்சர் மருத்துவ முறை இணைந்து செயல்படுகிறது என்கிறார் டாக்டர் கிரிஸ்மான்.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It