இந்தியாவின் மிகச் சிறந்த பத்து நாவல்களுள் ஒன்றாக மதிக்கப்படுவது எழுத்தாளர் நீல. பத்மநாபனின் “தலைமுறைகள்” என்ற நாவல். அந்த நாவலைத் திரைப்படமாக்க வேண்டும் என்பதைத் தன் இலட்சியமாக வரித்துக்கொண்டு பல ஆண்டுகளாகப் போராடி அதில் தற்போதுதான் வெற்றிகண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார் என் உடன்பிறவாத் தம்பியும், இயக்குநருமாகிய வ.கௌதமன். இவர் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சந்தனக்காடு’ தொடரை இயக்கி வெற்றி கண்டவர். இப்போது மகிழ்ச்சி திரைப்படத்தை இயக்கி, நடித்துத் தமிழ்த் திரையுலகை சற்று தலைநிமிர வைத்துள்ளார். ஒரு கலைஞனாகத் தனக்கான பொறுப்பை மிகக் கவனமாகக் கையாண்டு, திரைப்படம் வெறும் பொழுதுபோக்கல்ல; அது நமது வாழ்க்கை என்பதைச் சரியான தருணத்தில் நினைவூட்டியுள்ளார்.

தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மிகப் பெரும்பாலான திரைப்படங்கள் சமூகச் சீரழிவுச் சாதனங்களே. அவற்றின் முதல் நோக்கம் வணிகம். இரண்டாவது நோக்கம் தெரிந்தோ, தெரியாமலோ பார்ப்பனியத்தைத் தூக்கிப்பிடிப்பது. சில சிறந்த படங்கள் எனப் பாராட்டப்படும் படங்களில்கூட இந்தக் கேடுகள் திரைமறைவாகவேனும் இருந்துகொண்டிருக்கின்றன. இதனால் அன்பு, பாசம், குடும்ப உறவுகள், மரபுகள், பண்பாடு, வாழ்க்கைநெறி, இனப்பற்று, மொழிப்பற்று ஆகியவற்றுக்கு இடமேயில்லாமல் திரைப்படங்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. எல்லாப் படங்களின் நோக்கமும் - கதைநாயகனும், கதை நாயகியும், ஒன்று சேரவேண்டும். அதற்காக என்னென்ன கேடுகளைச் சேர்க்க வேண்டுமோ அத்தனையும் திரைப்படத்தில் இடம்பெறும். பக்தி, குடி, கூத்தி, கும்மாளம், அடிதடி, வன்முறை, கொலைகள் எனப் படம் பார்த்து வருபவரின் நெஞ்சில் ‘பொதுநீதி’ செத்துப்போயிருக்கும். இதைத்தவிர, பார்வையாளர்களாகிய மக்கள் ஏதேனும் ஒரு நடிகனுக்கோ, நடிகைக்கோ கருத்தியல் அடிமைகளாகி, இரசிகர்களாகவும் ஆகிவிடுகின்றனர். இதனால் இரசிகர் மன்றக் குப்பைத் தொட்டிகளில் இளைஞர்கள் நிரம்பி வழிகின்றனர்.

இதையெல்லாம் முறியடித்து, நல்ல குடும்பப் பின்னணிகொண்ட கதையைப் படமாக்கி மக்கள் மனதில் குடும்பப் பாசத்தை, பொறுப்பை வலியுறுத்துகிறது கௌதமன் இயக்கி, நடித்துள்ள மகிழ்ச்சி திரைப்படம்.

நாகர்கோயிலை ஒட்டியுள்ள இரணியல் என்கிற ஊர்தான் கதைக்களம். அப்பகுதியிலுள்ள செட்டிமார்களின் குல தெய்வங்கள் ‘தாயம்மை - தங்கம்மை’. சில நூற்றாண்டுகளுக்கு முன் தாயம்மை, தங்கம்மை என்கிற பெண்களின் அறிவையும் அழகையும் மெச்சி அவர்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான் அந்நாட்டு மன்னன். ஆனால், செட்டிமார்களோ, மன்னனாக இருந்தாலும் அவன் வேறு சாதி-நாம் வேறு சாதி; அவனுக்கு எப்படிப் பெண் கொடுப்பதென எதிர்ப்புத் தெரிவித்தனர். மன்னன் சினமடைந்து கட்டாயத் திருமணம் செய்துகொள்வான் என அஞ்சி அவ்விரு பெண்களையும் குழிதோண்டிப் புதைத்துக் கொன்றுவிட்டு, அவர்களைக் குலதெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். அந்த அளவுக்குச் சாதி உணர்வுமிக்க ஒரு வம்சாவழிக் குடும்பத்தில் நடக்கிற கதைதான் மகிழ்ச்சி திரைப்படம்.

அக்காவின்மீது உயிரான பாசமும் அன்பும் நிறைந்த தம்பி. நிலபுலத்தையெல்லாம் விற்று ஒரு கௌரவமான மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்கிறான். ஆனால் மாப்பிள்ளையோ அவளுடன் வாழாமல், அவளை மலடி என்று குற்றம் சுமத்தி வாழாவெட்டியாக்கிப் பிறந்த வீட்டிற்கே அவளைத் திருப்பி அனுப்புகிறான். தன் அக்காவின் வாழ்வுக்காக எவ்வளவோ போராடுகிறான் தம்பி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தன் நண்பன், அக்காவுக்கு மறுவாழ்வுதர முன்வருகிறான். தம்பியும் தன் குடும்பத்தாருடன் பேசி இந்தச் சாதி மறுப்பு மறுமணத்தை முடிக்கிறான். அக்காவின்மீது சுமத்தப்பட்ட மலடிப் பழியை மருத்துவ சோதனைமூலம் முறியடிக்கிறான். மறுமணம், கலப்பு மணம் இரண்டையும் சாதிக்க தம்பி படுகிறபாடுதான் கதைக்கரு.

தந்தை பெரியாரால் பெயர் சூட்டப்பட்டவர் இயக்குநர் கௌதமன். பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கிக்கொண்டு வாழ்ந்து வருபவர் கௌதமன். அதனால் திரைப்படமெங்கும் சீர்திருத்தக் கருத்துகளைத் தேனில் குழைத்துத் தந்திருக்கிறார். சாதி மறுப்பு, முடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, அறிவியல் பார்வை, தீண்டாமை ஒழிப்பு எனப் படமெங்கும் படர்ந்திருக்கிறது பகுத்தறிவு. கேடு செய்யும் புகை, மது, பாக்கு வகையறாக்கள் படத்தில் இல்லை. ஓரளவு வணிக நோக்கம் இருக்கிறது என்றாலும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

செந்தமிழன் சீமான், வ.கௌதமன் என இரண்டு இனமானப்போராளிகள் இதில் களமிறங்கிக் கலக்கியுள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்புத் தோழனாக நடித்துள்ள சீமானின் கதைப்பாத்திரம் படத்திற்கு மிகச் சிறந்த வலுவூட்டுகிறது. சீமான் இதில் ‘நடிக்கவில்லை’, அவரது இயல்பே அதுதான். கௌதமன், பிரகாஷ்ராஜ், அஞ்சலி, கார்த்திகா, சம்பத், விஎஸ்.இராகவன், சுகுமாரி, கஞ்சா கறுப்பு ஆகிய அனைவருமே தங்கள் பங்கை மிகச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர். ஓவியர்கள் வீர சந்தானம், மருது, கவிஞர்கள் அறிவுமதி, பச்சியப்பன் போன்ற இனமானப் படைப்பாளிகளும் இதில் பங்கெடுத்துள்ளது மகிழ்வளிக்கிறது.

இதுதவிர, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எல்லாமே சிறப்பாக அமைந்துள்ளன. எத்தனையோ தயாரிப்பாளர்களின் கதவுகளைத் தட்டிய கௌதமனுக்கு மகிழ்ச்சியோடு கதவைத் திறந்தவர் ‘அதிர்வு திரைப்பட்டறையின்’ த. மணிவண்ணன். ‘வி’ கிரியேஷன் இப்படத்தை வெளியிட்டுள்ளனர். தொலைக்காட்சி நேர்காணலில் நடிகர் சத்தியராஜ் சொன்னதுபோல இது தமிழர்கள் குடும்பம் குடும்பமாய்ப் பார்த்துக் கொண்டாட வேண்டிய படம்.

இனி, தமிழ்த் திரையுலகம் வ. கௌதமனை ‘வா, கௌதமா!’ என இருகைநீட்டி ஏற்றுக்கொள்ளும். மகிழ்ச்சி. வாழ்த்துகள்!