பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்று ஒன்று ஒவ்வொரு உயிருக்கும் உண்டு. மனித குலத்துக்கும் ஒரு நாள் இறப்பு உண்டு. அது எப்பொழுது வரும், எப்படி வரும் என்றுதான் நாம் அறிவதில்லை. முன்பெல்லாம் நோய் வாய்ப்பட்டோ, காலரா, அம்மை, மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளாலோ ஏற்படும். விஞ்ஞானம் வளர வளர, அறிவியல் கண்டுபிடிப்புகளால் வாகனப் பெருக்கம் மிகவும் வளர்ந்திருக்கிறது. எல்லோருக்கும் அவசரம். நகரங்களிலும், பெருஞ்சாலைகளிலும் வாகனங்களை விரைவாக ஓட்டுகின்றனர்.

ஒவ்வொருவர்க்கும், முன்னால் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் முந்திச் செல்ல வேண்டும் என்றே வேகமாக ஓட்டுகின்றனர். அந்தந்த பகுதிக்கேற்ற வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில்லை. விபத்துக்களும் நேர்கின்றன. உயிரையும் இழக்கின்றனர்.

இது ஒரு பக்கம். நோய் வாய்ப்பட்டு மரணம் சம்பவிப்பது மறுபக்கம். என் நண்பர் ஒருவர். அரசு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு பிள்ளைகள். நிறைவான வாழ்க்கை. அமைதியாக இனிமையாக போய்க்கொண்டிருந்தது. நல்ல வேலையில் உள்ள மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. உள்ளூரிலும் வெளியூர்களிலும் உள்ள உறவினர்களுக்கு சென்று அழைப்பிதழ் கொடுத்து வந்தனர். ஒரு நாள் பயணத்தின்போது திடீரென்று வாந்தியும் தலை சுற்றலும் ஏற்பட்டது. அலைச்சலும், வெவ்வேறு இடங்களிலும் சாப்பிட்டதும் காரணமாயிருக்கலாம் என்று எண்ணி குடும்ப மருத்துவரிடம் சென்றனர்.

மருத்துவப் பரிசோதனையில் கணையத்தில் கட்டி ஏற்பட்டு பித்தப்பையை அடைத்திருக்கிறதென்று தெரிவித்தார். இதனால்தான் வாந்தியும், ஆரம்ப நிலையில் மஞ்சள் காமாலையும் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இல்லை என்றும், தற்காலிகமாக நோய்க் குறியீடுகளுக்குத் தகுந்த சிகிச்சை மட்டுமே தர முடியுமென்றும் தெரிவித்தார். இது புற்று நோய் சம்பந்தமானது, நோயாளிக்கு பக்குவமாக சொல்லும்படியும் சொன்னார். நண்பரின் மனைவி மிக துயரமடைந்தார். கணவர் முன்னால் கண் கலங்கினால் அவர் தெரிந்து மிகவும் பயப்படுவார், வருந்துவார் என்று மௌனமாகவே அழுதார்.

இப்படியே சுமார் ஒரு வருடம் ஓடிவிட்டது. நண்பரின் பிள்ளைகள் மதுரையிலும், கோவையிலும் வெவ்வேறு குடல் நோய் மருத்துவர்களிடமும் காண்பித்தும் அறுவை சிகிச்சை செய்து நோயைக் குணப்படுத்த முடியவில்லை. மருந்து, மாத்திரைகளாலும் குணமாகவில்லை. நண்பரைப் பார்த்து ஆறுதல் சொல்லவும், உடல் முடியாமைக்காக கவலைப்பட வேண்டாம் என்று தேற்றவும் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் தனியறையில் கட்டிலில் அசௌகர்யத்துடன் உட்கார்ந்திருந்தார். அவரிடம் என்ன விசாரிப்பது, எப்படி ஆறுதல் சொல்லுவது? அவருக்கு வந்திருப்பது கணையப் புற்று நோய் என்பது அவர் மனைவி, பிள்ளைகள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு மட்டும் நோயின் தன்மை பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் விரிவாகச் சொல்லவில்லை. ஒவ்வொருவர் முகத்தையும் ஆவலுடன் பார்க்கிறார். அன்று அவர் முகத்தில் எனக்கு 'மரண பயம்' தெரிந்தது. நான் மனதிற்குள் மிக அதிர்ச்சியடைந்து, 'ராமு, உடல் நலமாகும், தைரியமாக இருங்கள், மீண்டும் வந்து பார்க்கிறேன்' என்று சொல்லிக் கிளம்பினேன்.

அவர் இறுதியாக மிகவும் அவதிப்பட்டு நேற்று இரவில் இறந்துவிட்டார். ஒரே ஒரு நோய் வந்துவிட்டால் நோயாளியிடமே சொல்லிவிடலாம், நீ இறந்து விடுவாய் என்று. வெறி நாய்க் கடியால், தடுப்பு ஊசி போடாதவர்களுக்கு பாதிக்கும் 'ரேபிஸ்' (Rabies or Hydrophobia) க்கு முழுமையான மருத்துவம் கிடையாது. ஓரிரு சந்தர்ப்பங்களில் மட்டும் வெளி நாடுகளில் தீவிர சிகிச்சையில், மூச்சு திணறல் எற்படுவதை 'செயற்கை மூச்சுக் கருவி' (Ventilator) மூலமாகவும், மற்ற தகுந்த வெறி நோய் தடுப்பு மருந்துகள் மூலமாகவும் நோயாளிகளைக் காப்பாற்றியிருப்பதகவும் படித்திருக்கிறேன். கணையப் புற்று நோய்க்கும் முற்றிய நிலையில் அறுவை சிகிச்சை செய்தாலும் இதே விதிதான் போலும்! காப்பாற்ற முடியாது.

அவர் நினைத்திருக்கலாம், 'எனக்குத் தெரியாது என்றும், எனக்குத் தெரியக் கூடாது' என்றும் நீங்கள் நடந்து கொண்டிருப்பதிலிருந்து ஒன்று தெரிகிறது. எனக்கு தெரியாது என்பது தெரியாததாகவே இருக்கட்டும். எனக்குத் தெரியும் என்று நீங்கள் தெரிந்து வருந்த வேண்டாம் என்று. அன்று அவர் முகத்தில் பார்த்த 'மரண பயம்' என் கண் முன்னே தெரிகிறது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் 'நோய் இறுதியை நெருங்கும் நோயாளிகளுக்கான கவனிப்புப் பகுதி, (Terminal illness care ward) என்று இருக்க வேண்டும். அங்கு மருத்துவ சேவை இலவசமாக வழங்கப்பட வேண்டும். நோயையும், இறுதி முடிவையும் எதிர் கொள்ள தகுந்த பக்குவத்தையும், மன நிலையையும் பெற உறவினர்களுக்கு, தேவையானால் நோயாளிகளுக்கும் ஆலோசனை (Counselling) வழங்கலாம்.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It