சைக்கோ நியுரோ இம்மியூனாலஜி என்பது மூன்று மருத்துவத் துறைகள் ஒன்றாகச் சேர்ந்தது. உள்ளம், நரம்பு மற்றும் நோயெதிர்ப்பு அம்சம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதால் இப்படிப்பட்ட ஒரு புதிய மருத்துவ அறிவியல் தோன்றியிருக்கிறது.

மருந்துதான் உண்மையிலேயே வேலை செய்து ஒருவரை குணமாக்குகிறதா அல்லது ‘நான் மருந்து சாப்பிடுகிறேன்' என்ற நினைப்பு அவரை குணப்படுத்துகிறதா என்பதை அறிவதற்கு மருத்துவத்தில் ஒரு தந்திரத்தைப் பயன்படுத்துவார்கள். அதன் பெயர் பிளசிபோ. உண்மையான மாத்திரைக்குப் பதில் டம்மி மாத்திரையை சாப்பிடத் தருவார்கள். உண்மையிலேயே மாத்திரைதான் குணப்படுத்துகிறது என்றால் நோயாளி பிளசிபோ மாத்திரை சாப்பிட்ட பிறகு வலி குறையவில்லை என்று முணுமுணுப்பார். மாறாக டம்மி மாத்திரையை முழுங்கிவிட்டு "இப்ப தேவலை, நல்லா இருக்கிறேன்'' என்றால் மாத்திரைக்கு பதிலாக அவர் சிகிச்சைத் தரப்படுகிறார் என்ற நம்பிக்கையே குணப்படுத்துகிறது எனலாம்.

ரோசெஸ்ட்டர் பல்கலைக்கழக மருத்துவர்கள் சோதனைக்காக சோரியாசிஸ் என்ற தோல் அரிப்பு நோயர்களை எடுத்துக்கொண்டார்கள். நிஜ மாத்திரையுடன் கூடவே பிளசிபோ மாத்திரைகளையும் கொடுத்து வந்ததில் நோயாளி நலமடைவதைப் பார்த்து டம்மி மாத்திரைகளுக்கும் பலன் இருக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டார்கள். மனித மனம் நோய்களை உண்டாக்குவதற்கும் அதே சமயம் அதிலிருந்து பிழைப்பதற்கும் முக்கிய பங்காற்றுகிறது என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

பிளசிபோ மருத்துவம் நாள்பட்ட நோய்களான உடல் வலி, சோரியாசிஸ் போன்றவற்றை குணப்படுத்தவும் அதனால் ஏற்படும் மருந்து செலவைக் குறைக்கவும் அதிகமாக மருந்தை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. பிளசிபோ சிகிச்சையும் பயனளிக்கும் என்கிற பட்சத்தில் மருத்துவர்கள் தமது சிகிச்சை முறையை சற்றே மாற்றிக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.

-     முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It