நாம் நமக்குத் தெரிந்த பல இடங்களில், உறவினர்களோ நண்பர்களோ மாத்திரைகளை, பல்வேறு காரணங்களால், இரண்டாக உடைத்தும், பொடியாக்கியும் சாப்பிடுவதைப் பார்த்திருக்கலாம். பெரும்பாலான மாத்திரைகள் தயாரிப்பிலேயே இரண்டாக்கிச் சாப்பிடும் வகையில், நடுவில் ஒரு பக்கம் அழுத்தமான கோடிட்டுத் தயாரிக்கப்படுகின்றன.

மாத்திரைகளை இரண்டு துண்டாக்கி அல்லது பொடியாக்கி சாப்பிடுவதற்கு காரணங்கள் பல.

முதலாவதாக மருத்துவரின் அறிவுரைப்படி சாப்பிட, குறைந்த (Reduced strength) அளவில் மாத்திரைகள் தயாரிப்பில் இல்லாமலிருக்கலாம்.

நீண்ட நாட்கள் மருந்துகளைச் சாப்பிடவேண்டிய நிலையில், மருத்துவரின் அறிவுரைப்படி, மாத்திரையின் அளவைக் கூட்டியும், குறைத்தும் எடுக்க வேண்டியிருக்கலாம்.

சிகிச்சையின் ஆரம்பத்தில், நோயாளிக்கு ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்றறிய சிறு அளவில் ஆரம்பித்து, மாத்திரையின் அளவை அதிகரிக்கலாம்.

குறைந்த அளவுள்ள மாத்திரைகள் தயாரிப்பில் இல்லாதபோது, மாற்றாக மாத்திரையை இரண்டாக்கி சாப்பிடலாம்.

குழந்தைகளுக்குத் தேவையான குறைந்த அடர்த்தியில் திரவ மருந்து இல்லையென்றாலும், மாத்திரையை இரண்டாக்கித் தரலாம்.

பெரும்பாலான நேரங்களில், நோயாளிகளே ஒவ்வாமை கருதியோ, சிக்கனம் கருதியோ மாத்திரைகளை இரண்டு பாதிகளாக்கிச் சாப்பிட வாய்ப்பிருக்கிறது.

மாத்திரைகளை இரண்டாக்கி சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்:

இரண்டு பாதிகளும் பெரும்பாலும் சமமாக இருக்காததால், மருந்தின் அளவு ஒவ்வொரு முறையும் வேறுபட வாய்ப்பிருக்கிறது.

குறுகிய காலம் மட்டுமே வேலை செய்யும் Digoxin, Warfarin போன்ற மாத்திரைகள் தகுந்த பலனளிக்காமல் போகலாம்.

Film coated மாத்திரையை இரண்டாக உடைத்தபின், உடைத்த பகுதியிலிருந்து மருந்தின் வீரியம் குறைந்து உடலில் சேரும் அளவும் குறைய வாய்ப்பிருக்கிறது.

மருந்தின் சுவை தெரியாதிருக்க சில மாத்திரைகள் coating செய்யப்படுகின்றன. இவ்வகையான மாத்திரைகளை இரண்டாக்கிச் சாப்பிடும்பொழுது, சுவை பிடிக்காமல் மாத்திரையை மறுக்கலாம்.

இரண்டாக்கக் கூடாத சில மாத்திரைகள்: (உதாரணம்)

சிறிய வடிவமுள்ள Nifedipine 5 mg, Phenergan 10 mg மாத்திரைகள்.

நடுவில் கோடில்லாத D-Penamine, Glucobay 50 mg, Diaformin 850, Skelid மாத்திரைகள்.

கனமும், ஒழுங்கில்லாத வடிவில் உள்ள Fosamax 40 mg, Proscar 5 mg, Monopril, Amiloride மாத்திரைகள்.

Nifedipine, Donepezil, Tamoxifen, Imuran 25 mg போன்ற film-coated மாத்திரைகள்.

Valporate (Epilim 200 mg, 500 mg), Diclofenac, Mesalazine, Pantoprazole போன்ற enteric-coated மாத்திரைகள்.

Agon SR, Cefaclor CD 375 mg, Pottasium chloride (Slow K, Span K, Tramal SR போன்ற time-release and extended-release மாத்திரைகள்.

மாத்திரைகளை சில நேரங்களில் இரண்டாக்கிச் சாப்பிடவேண்டும் என்ற சூழ் நிலையில், கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்படுகிறது.

1. குறிப்பிட்ட மாத்திரை மருந்து பற்றிய விபரத்தைப் படித்து தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

2. மிக அவசியமாகத் தேவைப்பட்டால், நடுவில் குறுக்காக கோடிட்ட மாத்திரைகளை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம்.

3. இரண்டாக உடைத்த மாத்திரையில் மருந்து அளவு சமமாக இருக்க, மாத்திரை இரண்டாக்கும் கருவியைப் பயன்படுத்தலாம்.

4.இரண்டாக்கிய மாத்திரைகளை பாதுகாப்பாக வைத்திருந்து, அடுத்த வேளை பயன்படுத்தும்படி நோயாளிகளை அறிவுறுத்த வேண்டும்.

5. இரண்டாக்கி உபயோகிக்கும் மாத்திரைகளை அதன் பெயரிட்ட பாட்டில்களில் பத்திரமாக வைத்திருந்து உபயோகிக்க வேண்டும்.

6. கரையும் தன்மையுள்ள ஆஸ்பிரின் மாத்திரை உடைத்த பின் வீரியம் குறைவதால், மீதமுள்ள பாதியை உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It