ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆயுதந்தாங்கிய தீவிரவாதச் செயற்பாடுகளை நோக்கித் திருப்பிய முதற்கட்ட இளம் முன்னோடிகளில் ஒருவராக இருந்த போதிலும் புஸ்பராஜா தமிழக அளவில் அறியப்பட நேர்ந்தது அவரது ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்கிற நூல் மூலமாகவே.

 ஈழப் போராட்ட வரலாறு குறித்த ஒற்றைப் பார்வையே தமிழ்ச் சமூகத்தில் நிலவியிருந்த சூழலில் சற்றே ஒரு மாறுபட்ட பார்வையை முன்வைத்த வகையில் இந்நூல் முக்கியமானதாய் அமைந்தது. ஆனால் இதுவுங்கூட முழுமையான மாற்று வரலாறு இல்லை என்கிற விமர்சனங்களும் இதன் மீது உண்டு. எந்த நிகழ்வைப் பற்றியுமே எண்ணற்ற வரலாறுகள் சாத்தியம் என்கிற வகையில் புஸ்பராஜாவின் வரலாறு முக்கியத்துவம் பெருகிறது. Authentic கான ஒரு வரலாற்றை எழுதுகிற மதர்ப்பு இன்றி ஏதோ தான் பார்த்த ஒரு நிகழ்வைச் சொல்லுகிற ஒரு சாதாரண கதைச்சொல்லி போல அந்த நூலை எழுதியிருந்ததன் மூலம் தமிழ் வாசகர்களுடன் புஸ்பராஜா நெருக்கமானவர்.

தனது நூலைப்போலவே புஸ்பராஜா எளிமையானவர். எந்நேரமும் தன்னிலும் இளமையானவர்களுடன் சிரிப்புக் கூத்தென வாழ்ந்தவர். ஷோபாசக்தி, சுகன் போன்ற கலகக் கும்பலுடன் பல்வேறு அம்சங்களில் கருத்து வேறுபட்டிருந்த போதிலும் அவர்களோடு நட்பாக இருந்தது மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகவும் அருந்துணையாகவும் இருந்தவர்.

ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த முன்னோடி இயக்கங்களில் செயலாற்றி இருந்தபோதிலும், ‘ஆயுதங்கள் இல்லாமல் வரும் எவருடனும் நான் உரையாடத் தயார்’ என ஓரிடத்தில் அவர் பதிவு செய்திருப்பது நினைவுக் கூறத்தக்கது.

மயிலிட்டி சி. புஷ்பராஜா தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதை ‘அநிச்ச’ பதிவு செய்ய விரும்புகிறது. அவர் அதை வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வங்காட்டாதவராயிருந்த போதிலும் அவர் குறித்த பதிவுகளில் இது தவிர்க்க இயலாதது.

அநிச்ச இதழ் செயற்பாடுகளில் அவர் மிகுந்த உற்சாகம் காட்டியிருந்தார். சென்ற இதழில் அவர் எழுதியிருந்த கட்டுரை முக்கியமானது. வித்தியாசமான கோணத்தில் பத்திரிகையாளர் சிவராமின் கொலையை அவர் அணுகியிருந்தார். இந்த இதழில் அவர் நூல் குறித்த விமர்சனம் ஒன்று உள்ளது. ஈழப் போராட்டத்தில் பெண்களின் பங்கு குறித்து கட்டுரை எழுதித் தருவதாகச் சொல்லியிருந்தார். அந்தக் கட்டுரைக்கு பதிலாக இப்படியொரு இரங்கற் குறிப்பு எழுத நேர்ந்ததது துயரமானது.

எந்தவித பெரிய முன்னறிவிப்புகளும் இல்லாமல் சடக்கென அடித்த ஒரு சுழற்காற்று போல மரணம் அவரை நம்மிடமிருந்து தட்டிச் சென்றுவிட்டது. சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், இப்போது புஸ்பராஜா என புகலிட இலக்கிய ஆர்வலர்களின் முதல் தலைமுறையினர் ஒவ்வொருவராக மறைவது நம்மை வருத்துகிறது.

அடுத்த இதழில் புஸ்பராஜா குறித்த விரிவான கட்டுரையொன்று வெளியிடப்படும். இம்மாத இறுதியில் அவருக்கான இரங்கல் கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய உள்ளோம். விவரம் அறிய எமது தொலைபேசியில் தொடர்புகொள்க.

என்றும் என் காதலுக்குரிய என அவரால் விளிக்கப்பட்ட அவரது துணைவியார் மீரா அவர்களுக்கும், அவரது பிள்ளைகள் மூவருக்கும், எங்களது ஆழ்ந்த இரங்கலும் அனுதாபங்களும்.

Pin It