கல்வி, பொருளாதார, அரசியல் தளங்களில் பெண்கள் தமக்கான இடத்தைச் சம அளவில் பெறுவதென்பது அவர்களுக்குச் சுதந்திரத்தை உறுதி செய்து தரும். அவ்வாறே தந்து கொண்டிருக்கிறது. ஆனால் சமத்துவத்தை? இம்மூன்று நிலைகளிலும் அடைந்த விழிப் புணர்வும் முன்னேற்றமும் பெண்களுக்குச் சமத்துவத்iதை உறுதி செய்து தர முடியவில்லை. அது சமூகப் புரட்சியால் மட்டுமே சாத்தியப்படும்.

நவீன இந்தியாவின் பெண்கள், முன்னேற்றத்தின் படிகளில் வேகமாக ஏறிக் கொண்டிருக்கும் காலமிது. கடந்த தலைமுறைகளைவிட பெண்கள் அதிக அளவில் கற்றறிந்தவர்களாக இருக்கின்றனர். தம் தாய், தாயின் தாயைவிடப் பரவலாகப் பொருளாதார சுதந்திரம் கிடைக்கப் பெற்றிருக்கிறது. அன்றிருந்ததைப்போல வீடுகளுக்குள் முடங்கி இல்லாமல் சுதந்திரமாக வலம்வர முடிகிறது. தம் தேவைகளை, பிரச்னைகளை, கருத்துக்களை உரக்கச் சொல்லும் உரிமைகள் சாத்தியப்பட் டிருக்கின்றன. ஆனால் பண்பாட்டு ரீதியாகப் பெண் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் மாறியிருக்கிறதா என்றால் இல்லவே இல்லை என்பதே கசப்பான பதில்.

jeyarani 450இத்தனை முன்னேறிய காலத்திலும் பெண் என்பவர், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களோடு இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆணை விஞ்சிவிடாத அடக்க ஒடுக்கத்தோடு இயங்க வலியுறுத்தப்படுகிறது. வன்முறைகளாலும், பாலியல் சீண்டல் களாலும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் எனக் கற்பிக்கப்படுகிறது.

சுதந்திரமான பெண்கள் ஆபத்தான வர்கள். அவர்கள் ஆணை அவனது அரியணை யிலிருந்து வலுக்கட்டாயமாக இறங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக அச்சுறுத்தல் செய்யப்படுகிறது. அதன் வழியாகவே இந்த முன்னேறிய காலம், பழங்காலப் பிற்போக்குத் தனங்களை மீட்டுருவாக்கமும் மறு உற்பத்தியும் செய்து பெண்களை மேலும் சிறைபடுத்த விழைகிறது.

இந்த ஆபத்தை முன்னேறிய / நவீன காலத்தின் பெண்கள், எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்? இக்கேள்விக்கான பதிலைக் கண்டறியுமுன்னர், முன்னேற்றம் மற்றும் நவீனம் என்ற பதங்களுக்கான சரியான அர்த்தத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவான முன்னேற்றம் என்பது கல்வி மற்றும் பொருளாதாரம் சார்ந்ததாகவே அளவிடப்படுகிறது. அவ்வகையில் பார்த்தால், கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கையும், பொருளீட்டும் பெண்களின் எண்ணிக்கையும் அவர்கள் ஈட்டும் பொருளின் அளவும் கணிசமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பது உண்மையே.

ஆனால், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பது முன்னேற்றத்தின் சிறு கூறுதானே தவிர, அதுவே முன்னேற்றம் ஆகாது. ஏனென்றால் இந்த வளர்ச்சிகளால் பெண் களுக்குச் சமத்துவத்தை உறுதிப்படுத்த வியலாது. சுயமரியாதையை வழங்கவியலாது. பிற்போக்குத் தனங்களில் இருந்து விடுவிக்க வியலாது. இந்த வளர்ச்சி, அடக்குமுறை மற்றும் வன்முறைகளில் இருந்து பெண்களை ஒருபோதும் மீட்பதில்லை.

கல்வியும் பொருளாதாரமும் மறுக்கப் பட்டு வீடுகளுக்குள் முடங்க நிர்ப்பந்திக்கப் பட்ட பெண்களைப் போலவே கல்வியும் பொருளாதார சுயசார்பும் கைவரப்பெற்ற இந்தியப் பெண்கள், தினம் தினம் பாலியல் வன்முறைகளுக்கும் பிற கொடூரமான குற்றங்களுக்கும் பலியாகும் சமூக எதார்த்தமே இதற்கு சான்று.

தொழில்நுட்பத்திலும் கல்வியிலும் எவ்வளவு முன்னேற்றத்தைக் கண்டாலும் இந்நாடு சக பாலினத்தின் மீதான தனது வன்மத்தை குறைத்துக் கொள்ளவே இல்லை என்பதிலிருந்து தான் முன்னேற்றம் என்பதன் பொருளை நாம் விளங்க முற்பட வேண்டும். பாருங்கள், எங்கேயும் பெண்கள் எல்லாத் துறைகளிலும் பெண்கள். அவர்களுக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்களுக்குத் தான் தொழில்முறை வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என வாதிடுவோர் அதிகம். இதில் உண்மை இருந்தாலும், இதன் மற்றொரு பக்கத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். தேசியக் குற்றப் பதிவு ஆணையத்தின் 2015ஆம் ஆண்டைய அறிக்கை கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை இருமடங்கிற்கும் மேல் அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. அதாவது, முந்தைய பத்தாண்டை விட, 2014-2015 வரையிலான பத்தாண்டுகளில் சுமார் 20 இலட்சம் குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன. அதில் சுமார் 10 இலட்சம் குற்றங்கள் கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் நிகழ்த்தப்படுவதாக இப் புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. ஆக, கல்வி அறிவோ, பொருளாதாரச் சுய சார்போ பெண் களை வீடுகள் மற்றும் வீதிகளில் நடந்தேறும் அடக்குமுறைகளிலிருந்து விடுவிக்க வில்லை.

தகவல் தொழில்நுட்பத்துறை திறந்து விட்ட வேலை வாய்ப்புகளின்படிப் பார்த்தால் இதற்கு முந்தைய தலைமுறைப் பெண்களை விடவும் இந்த தலைமுறைப் பெண்களுக்கு, கடந்த பத்தாண்டுகள் பொருளாதார ரீதியாக ஒரு பொற்காலம். பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்த காலகட்டமாகவே அதைக் கருத வேண்டும். தகுதியான மாப்பிள்ளைக்காக படிக்க வைக்கப்பட்ட பெண்கள், கை நிறைய சம்பாதிப்பதற்காகக் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் சமூக மாற்றம் நிகழ்ந்த தலைமுறை இது. இத்தகைய மாற்றம் நடுத்தர வர்க்கப் பெண்களிடையே பொருளாதார சுயசார்பை உருவாக்கியது. ஆனால் ஏட்டுக் கல்வியோ பொருளாதாரமோ எவ்வகையான பாகுபாட்டையும் அழித்து விடாது என்பதைத்தான் இங்கே பெருகிக் கொண்டே இருக்கும் குற்றங்களும் வன்முறைகளும் நிரூபிக்கின்றன.

முன்பு வீட்டிலிருந்து குடும்பத்தை கவனித்துக் கொண்ட பெண்கள், இன்று பொருளீட்ட வேலைக்குச் செல்லுமளவிற்குக் காலமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அவர்களின் குடும்பச் சுமையைப் பங்கிட்டுக் கொள்ள ஆண்கள் தயாராக இல்லை. வரதட்சணை வாங்காமல் எத்தனை பேர் திருமணம் செய்து கொள்கின்றனர்? கணவன் தான் என்றாலும் முடியாத பொழுதுகளில் உடலுறவை மறுக்கும் உரிமை எத்தனை பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது? கணவனால் பலாத்காரம் என்பது இந்தியாவில் இன்றளவிலும் தொடருகிறது. பாலினத்தைக் கண்டறிவது குற்றம் என்றாலும் எப்படியாயினும் தெரிந்து கொள்ளத் துடிக்கின்றனர். காதலை நிராகரித்தால் ஒருதலைக் காதல் கொலை; காதலை ஏற்றுக் கொண்டால் கவுரவக் கொலை, பாலியல் சீண்டல்கள், குடும்ப வன்முறைகள் என, எது தான் மாறியிருக்கிறது? இந்த அத்தனை கொடுமைகளின் சமீபத்திய புள்ளி விவரங்களை சோதித்துப் பாருங்கள்! எதிலுமே பின்னடைவு இருக்காது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி, மருத்துவர், விஞ்ஞானி, மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் என எத்தகைய உயரத்திற்குப் பறந்தாலும் பெண்ணை ஒரு பாலியல் பண்டமாகவும் அடிபணிய வேண்டியவளாகவும் இச்சமூகம் நடத்துகிறது. இதற்கான காரணமென்ன என்பதை ஆராய்ந்து தீர்வை எட்ட வேண்டிய கால நெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். சுதந்திரத்தைப் பெற்று விட்டதாக நம்பும் பெண்கள் தாம் ஏன் மீண்டும் மீண்டும் தாக்கப்படுகிறோம், சீண்டப்படு கிறோம், சுரண்டப்படுகிறோம் என்பதற்கான விடை தெரியாமல் விழிக்கின்றனர். பதிலாக ஆணாதிக்கம் மாறவில்லை. ஆண்கள் திருந்தவில்லை என ஆண்களுக்கு எதிராகக் களமிறங்குகின்றனர். இது ஆண் பெண் நல்லிணக்கத்தை மென்மேலும் பாழ்படுத்தி, பிரச்சனையைத் தீவிரப்படுத்துகிறது.

33ரூ அரசியல் ஒதுக்கீடு, 100ரூ கல்விப் புரட்சி, 50ரூ பொருளாதாரப் புரட்சி என பெண்கள் முன்னேற்றத்துக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால், சமூகப் புரட்சியில் ஒரு சதவீத முன் நகர்தலுக்கான இலக்கையேனும் நாம் கொண்டிருக்கிறோமா? நிச்சயமாக இல்லை. கல்வி, பொருளாதார, அரசியல் தளங்களில் பெண்கள் தமக்கான இடத்தைச் சம அளவில் பெறுவதென்பது அவர்களுக்குச் சுதந்திரத்தை உறுதி செய்து தரும். அவ்வாறே தந்து கொண்டிருக்கிறது. ஆனால் சமத்துவத்தை? இம்மூன்று நிலைகளிலும் அடைந்த விழிப்புணர்வும் முன்னேற்றமும் பெண்களுக்குச் சமத்துவத்iதை உறுதி செய்து தர முடியவில்லை. அது சமூகப் புரட்சியால் மட்டுமே சாத்தியப்படும்.

சுதந்திரத்தைப் பெறுவதாலேயே தமக்கு சமத்துவம் கிடைத்து விடுவதாகப் பெண்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் பெண்ணியவாதங்கள் அனைத்தும் சுதந்திரத்iதை மையப்படுத்தியதாகப் பேசவும் எழுதவும் படுகின்றன.

உண்மையில் சமத்துவம் இருந்தால் மட்டுமே சுதந்திரம் அர்த்தப்படுகிறது. சமத்துவமில்லாத இடத்தில் கிடைக்கும் சுந்திரம் ஆபத்தானதும்கூட! மருத்துவ மாணவி நிர்பயா இரவுப் பொழுதில் தனது நண்பருடன் பயணிப்பதற்கு தனக்கு எவ்வித தடையுமில்லை என நினைத்தார். அதற்கான சுதந்திரம் தனக்கு இருப்பதாக நம்பினார். ஆனால், மணமாகாத பெண் அதிலும் ஓர் அந்நிய ஆணுடன் இரவுப் பொழுதில் வெளியே செல்ல அனுமதியில்லை என்ற பாடம் கொடூரமான எச்சரிக்கை யாக்கப்பட்டது. இவ்வாறே காதலிக்கத் தனக்கு உரிமை இருப்பதாக நம்பும் பெண்கள் ஆணவக் கொலைக்கு பலியாகின்றனர். காதலை மறுக்க தனக்கு உரிமையிருப்பதாக நம்பும் பெண்கள் ஒருதலைக் காதலர்களால் கொல்லப்படு கின்றனர். என்ன வேண்டுமானாலும் படி, எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதி. ஆனால் இங்கே பெண்ணுக்கென விதிக்கப்பட்ட எந்த விதிமுறையையும் மீற நினைக்காதே. எந்த எல்லையையும் தாண்ட முயலாதே என்ற சட்டம் பல நூற்றாண்டுகளாய் அமலில் இருக்கிறது.

சமத்துவத்தை விதைப்பதற்கான சமூக மாற்றம் ஏட்டுக் கல்வி பரவலாக்கத்தாலோ, சில ஆயிரங்களைச் சம்பாதிப்பதாலோ வந்து விடாது என்ற சமூக அறிவைக் கால் நூற்றாண்டு கால உலகமயமாக்கல் அனுபவத்தின் விளைவாக நாம் பெற்றாக வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது. படித்த சமூகம் தனது முந்தைய தலைமுறையினர் கொண்டிருந்த மூட நம்பிக்கை களையும் அடிமை - ஆதிக்கக் கருத்தியல் களையும், பிற்போக்குத் தனங்களையும் விட்டொழிந்து ஓரடிகூட முற்போக்கை அடையவில்லை. அதுகூடப் பரவாயில்லை, கல்வியறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் உச்சபட்சப் பலன்களை அனுபவிக்கும் இந்த தலைமுறை அறிவியல் ஆற்றல் அனைத்தையும் கொண்டு அத்தனை பிற்போக்குத்தனங்களையும் நவீனப்படுத்தி நியாயமும்படுத்துகிறது. ஜோசியம், கம்ப்யூட்டர் ஜோசியமானதைப் போல, நல்லநேரம் பார்த்து சிசேரியன் செய்யப் படுவதைப்போல, கணினிக்கு ஆயுதபூஜை செய்வதைப்போல, எல்லா நவீனங்களையும் முன்னேற்றங்களையும் தனது பிற்போக்குச் சட்டகத்திற்கு இழுத்து அடைத்து கலாச்சாரம் என்ற பெயரில் கட்டிக் காக்கும் சமகால அவலம் பரவி நிற்கிறது. இந்த மூட நம்பிக்கைகளின் கொடூர நீட்சியாக, பெண்ணை ஒடுக்கும் சாதியமும் மதவாதமும் ஆணாதிக்கமும் மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன.

மநுநீதி வலியுறுத்திய அதே விதிமுறை களை நச்சுக் கிருமிகளைப்போல எங்கெங்கும் பரவி இருக்கும் இந்துத்துவவாதிகள் புதிய சட்டங்களாக முழங்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இந்துத்துவ அமைப்புகளையும் கட்சி களையும் சேர்ந்தவர்கள் இத்தேசம் விட்டொழித்த பல ஆணாதிக்கக் கருத்தியல் களுக்கு மதத்தின் பெயரால் புத்துயிரூட்டும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் வெறும் மனைவியராக இருக்க, ஆண்கள் மட்டும் வேலைக்குச் செல்ல வேண்டும். இதிலிருந்து விலகும் பெண்களை ஆண்கள் விட்டொழிக்கலாம் என்று சொன்ன ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மநு நீதியின் பெண்ணடிமைத்தனத்தை இந்தியாவின் பண்பாடாக மாற்றப் படாதபாடு படுகிறார்.

சுதந்திரமாக உடை அணிவது தொடங்கி இருட்டிய பின் வெளியே இருப்பது வரை எல்லாமே புதிதாகக் கேள்விக்குட்படுத்தப்படு கின்றன. இந்து வெறியர்களால் தொடர்ச்சியாக விடுக்கப்படும் மிரட்டல்கள், தன் பெண் பிள்ளைகளுக்கு ஓரளவுக்கு சுதந்திரம் கொடுத்திருந்த பெற்றோருக்கு கலக்கத்தை உண்டாக்கியது. பெண் குழந்தைகளை சுதந்திரமாக வளர்க்க வேண்டுமென பெற்றோர் நினைத்தாலும் சமூகச் சூழல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் பெண்களுக்குச் சுதந்திரத்தை அளிக்கத் தயாராக இருக்கும் குடும்பங்கள் தனக்கான துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பெண்களுக்கு வழங்கத் தயாராக இல்லை. சாதி மறுப்புத் திருமணம் செய்த கவுசல்யாவின் கண்ணெதிரே அவரது கணவர் சங்கர் வெட்டிச் சாய்க்கப்பட்டார். சாதி, மதக் கோட்பாடுகள் பெண்ணை அடிமைப்படுத்து வதன் மூலமே கட்டிக் காக்கப்படுகின்றன. ஆண் அதன் கருவி. அவ்வளவே. ஆக, பாலினச் சமத்துவத்தை நிலைநிறுத்த விரும்பும் சமூகம் அடிப்படையில், சாதியத்தையும் மதவாதத்தை யும் அழித்தொழிக்க வேண்டும். அதுதான் இங்கே உண்மையான சமூகப் புரட்சியாகிறது.

இந்த மண்ணில் பெரியார் நிகழ்த்திக் காட்டிய சமூகப் புரட்சியும் அதுதான். அவர் பெண்ணடிமைத்தனத்திறகு காரணமாக ஆண்களைப் பழிக்கவில்லை. மதக்கோட் பாடுகளையே சாடினார். இந்துமதம் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்துகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகள் எவ்வாறு அடிமைப்பெண்களை முன்னுதாரணமாக்குகின்றன. கடவுள் குறித்த கதைகளின் மூலமாகப் பெண்கள் மீது நிறுவப்படும் ஆபாசம் என அவர் எல்லா வற்றையும் அம்பலப்படுத்தினார். மதங்களில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு பகுத்தறிவையும் சுயமரியாதையையும் எட்டுவது ஒன்றே பெண் விடுதலைக்கான ஒரே வழி என சூளுரைத்தார்.

பெரியார் ஆற்றியதில் கால்வாசியளவுகூட இவ்வுண்மையை இச்சமூகத்திற்கு உரக்கச் சொல்லும் தலைவர்களோ இயக்கங்களோ இன்றில்லை. அதனாலேயே கல்வியறிவு பெற்ற பெண்கள் மதப் பற்றுள்ளவர்களாகத் தம்மைக் காண்பித்துக் கொள்வதை இந்தியப் பண்பாடு என்பதோடு சேர்த்துக் குழப்பிக் கொண்டனர். மதப்பற்று, சாதிப் பிடிப்பு எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, ஆணாதிக்ககம் மட்டும் வேண்டாம் என்றால் எப்படி? மதமிருந்தால், சாதியுமிருந்தால் இலவச இணைப்பாக ஆணாதிக்கமும் கூடவே வரும் என்பதுதான் விதி. தாய் வழிச் சமூகம் அழிக்கப்பட்ட புதிய கற்காலத்தில் ஆணாதிக்கத்தை நிறுவ மதமே உதவியது. மதத்தைப் பாதுகாக்க ஆணாதிக்கம் ஒரு கருவியாக்கப்பட்டது. உண்மை இப்படி யிருக்க மதக் கோட்பாடுகளை நேர்மறையான தாகவும், ஆணாதிக்கத்தை எதிர்மறையான தாகவும் சித்தரித்து ஒன்றைக் காத்து, மற்றது அழிய வேண்டுமென நினைப்பதை விடவும் அறியாமை வேறெதுவுமில்லை.

பெரியார் இதைத்தான் உறுதியாக எடுத்துரைத்தார். ஆனால், அரை நூற்றாண்டுக் காலம் தெருத் தெருவாக அலைந்து பெண் விடுதலையை மையப்படுத்தி அவர் செய்த பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் பலன் அடுத்த தலைமுறைக்குக்கூட கடத்தப்படவில்லை. ஆண்களை விடவும் பெண்கள் கடவுள் நம்பிக்கையும் மதப்பற்றும் அதிகம் கொண் டிருக்கக் கற்பிக்கப்படுகின்றனர் என்றாலும் கல்வியின் பயனால் சிந்திக்கும் திறன் அதிகரித்திருக்குமானால் இந்நேரம் அது தகர்க்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டுக்குள் முடங்கியிருந்த பெண்கள் எப்படிப் பிற்போக்காக இருக்க வைக்கப்பட்டனரோ அதைப் போலவேதான் பெரும் சாதனைகளைப் புரியும் பெண்களும்!

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்த பி.வி. சிந்து ஊர் திரும்பிய கையோடு திருப்பதிக்கு வந்து வெங்கடேசுவரனுக்குக் காணிக்கை செலுத்தினார். இதுபோன்ற பெண்கள், இது போன்ற நடவடிக்கைகளால் இந்த சமூகத்திற்கும் சக பெண்களக்கும் சொல்ல வரும் செய்தி என்ன? பொதுவாக மதப்பற்று எல்லாரையும் பலவீனமானவர்களாகவே வைத்திருக்கும் என்பதே உளவியல்.

பலவீனமே அடிமைத்தனத்திற்கு வழி வகுக்கிறது எனும்போது இந்தத் தொடர்ச்சியைப் புரிந்து கொள்ள மறுக்கும் பெண்கள் சாதித்தாலும் அது அடிமையின் சாதனையாகவே அடையாளம் பெறுகிறது. மத நம்பிக்கைக் கொண்ட பெண்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்னை வரும்போது பெரும்பாலும் எதிர்த்து நிற்காமல், தப்பிக்கும் வழி அறியாதவர்களாகவே இருக்கின்றனர். அவர்களது மதம் அவர்களுக்கு அதையே கற்பிக்கிறது.

பகுத்தறிவு மற்றும் சமத்துவப் பரவலாக்கம் இங்கே நிகழ வேண்டுமெனில் சாதி மதத்திற்கு எதிரான சமூகப் புரட்சி நடந்தாக வேண்டும். ஆணாதிக்கத்தை ஆணின் ஆதிக்கமென சுருக்கிப் பார்க்கும் பார்வையில் இருந்து விலகி, அடிப்படையில் மதக் கோட் பாடுகளாலேயே அது வளர்த்தெடுக்கப்படுகிறது என்ற சமூகப் புரிதலை எட்ட வேண்டும். இந்தியச் சமூகத்தின் பெரும்பான்மை இந்துக் களுக்கு அவர்களது மதம், சாதி மற்றும் ஆணாதிக்கம் என இரண்டு கருவிகளாலேயே இயங்குகிறது என்பது நன்கு தெரியும். அதனால் தான் அவ்விரண்டையும் பலவாறான வன்முறைகள் மூலமாக அதை கட்டிக் காத்துக் கொண்டே இருக்கின்றனர்.

இந்தியச் சமூகத்தின் ஈடற்ற பெண்ணுரிமைப் போராளியான பெரியார், ஆணாதிக்கத்திற்கு ஆண்களே காரணம் என்றும், அதனால் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டுமெனில் ஆண்களை ஒழிக்க வேண்டும் என எங்கேயுமே குறிப்பிடவில்லை. ஆனால், இன்றைய பெண்களுக்கு புரிதல் அவ்வாறான குறுகிய விவாதங்களுக்குள் சிக்கி உழல்கிறது. அதோடு, இன்றைய படித்த பெண்கள் தம்மை தீவிர மதப் பிடிப்பாளர்களாக முன்னிறுத்தியபடியே ஆணாதிக்கத்தை வேரறுத்துவிட முடியுமென நம்புகின்றனர். அதுதான் வேதனையான வேடிக்கை.

‘தலைமுடியை வெட்டியெறியுங்கள்; அலங்காரத்தை நிறுத்துங்கள்; உடைகளை மாற்றுங்கள்; தேவைப்பட்டால் கருப்பையையும் அறுத்தெறியுங்கள்’ என்று பெரியாரின் அத்துமீறல்கள் அனைத்தும் மதக் கட்டுப்பாடுகளிலிருந்து பெண்களை விடுவிக்கும் முயற்சியே. ஏனென்றால் இவையனைத்துமே ஓர் அடிமைப் பெண்ணுக்கான அறிகுறிகள்.

இந்துக்கள் அதிகரிக்க, இந்துப் பெண்கள் நான்கிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென மோகன் பகவத் போன்றவவர்கள் இந்த முன்னேறிய காலத்திலும் உளறுவார்கள் என்ற அவதானிப்பில்தான் கருப்பையே வேண்டாம் உங்களுக்கு எனக் கோபப்பட்டார் பெரியார். இந்து மதத்தைக் காக்க இந்துப் பெண்கள் பிள்ளைப் பெற்றுத் தரும் எந்திரமாக இருக்க வேண்டுமென்ற கருத்து ஆணாதிக்கச் சிந்தனையா, மத ஆதிக்கச் சிந்தனையா? எதிர்க்கப்பட வேண்டியது மதமா? ஆணா? எது?

பெண்ணை வெறும் உடலாக்கி, அதையே சிலையாக்கியதுதான் மதம் மற்றும் ஆண்களின் சூழ்ச்சி. அதனாலேயே பெண்கள் உடல் குறித்த சிந்தனைகளைத் துறக்க வேண்டுமெனப் பெரியார் வலியுறுத்தினார். பெண்கள் மதிப்பற்றுப் போவதற்கும், அவர்கள் வெறும் போகப் பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசமாகத் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும். (விடுதலை 15.6.1943)

தங்களை நாகரிக நாரிமணிகள் என்று கருதிக்கொள்ளும் பெண்கள் எல்லாம்கூட, நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்து கொள்வதையும், நைசான நகைகள் போட்டுக் கொள்வதையும், சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர - ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வது தான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை (விடுதலை 11.10.1948) என, உடலரசியலை பெரியார் அளவுக்குப் புறக் காரணிகளோடு பிணைத்து எடுத்துரைத்தவர் யாருமில்லை. திருமணம் குறித்தும்; பாலியல் சுதந்திரம் குறித்தும் இன்று பேசும் யாரையும்விட மிக மிக முன்னோக்கி சிந்தித்தவர்.

இந்துமதம் ஒரு பக்கம் பெண்ணுடலைத் தீட்டாக்கி மறுபக்கம் பெண்ணைப் புனித மாக்கிச் செய்து கொண்டிருந்த குழப்படிகளி லிருந்து பெண்களை வெளியே இழுத்து சுயமரியாதை எனும் தெளிவை விதைத்தவர். கொண்டாடுவதற்கு உடலில் ஏதுமில்லை என்ற அவரது நிலைபாட்டிலிருந்து விலகி, நவீனப் பெண்ணியவாதிகள் உடலைக் கொண்டாடத் தலைப்பட்டனர். உடலைக் கொண்டாடுதல் என்பது ஓர் ஆண் மனநிலை.

பெண்ணியப் போராளிகள் உடலைப் போற்றி எழுதத் தொடங்க ஆணுலகம் அதை ரசிக்கத் தொடங்கியது. நம் வேலையைப் பெண்களே பார்க்கின்றனர். பரவாயில்லை என வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர். உடலைக் கொண்டாட வேண்டுமா? கடக்க வேண்டுமா? என்றால் கடக்க வேண்டும் என்பதே விடுதலைக்கான பதில். உடலைக் கொண் டாடுதல் ஓர் அகவயப்பட்ட நிலை. ஆனால், கடத்தல் என்பது புறவயப்பட்ட போர். ஆம், அதுவொரு சமூகப் போர். அந்தப் போரை நிகழ்த்தாமல் பெண்ணியம் உடலைக் கொண் டாடுதல் என்ற சிற்றின்பத்தில் நிம்மதியடைந் திருக்கிறது.

இந்து மதத்தின் வருணாசிரமம் பெண்களை சூத்திரர்களாகவே கருதுகிறது. இன்றும் பெண் ஒரு தீட்டுப் பிறவிதான். 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்தை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டுப் பெண்ணடிமைத்தனத்திற்கான காரணங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சிய பெரியார், நாகரிகச் சமூகத்தின் தந்தை என எக்காலத்திலும் சொல்லலாம்.

ஆனால் நாகரிகம் என்ற சொல்லுக்கான விளக்கம் இங்கே திரிபட்டுக் கிடக்கிறது. பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கைவிட்டு சமகால மாற்றங்களுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளுதலே நாகரிகம் என்ற சொல்லுக்கான விளக்கமாக முன்வைக்கப்படு கிறது.

இந்த விளக்கத்தை அப்படியே விழுங்கிக் கொண்டவர்கள் மேற்கத்திய உடை அணி வதையும், பேசுவதையும், கணினியைக் கையாள் வதையும், செல்போனில் சுழல்வதையும், மால்களுக்குப் போவதையும், குளிர்பானங்கள் குடிப்பiயும் நாகரிகம் என்றாக்கி, தம்மை முன்னேறியவர்களாகக் கருதிக் கொள்கின்றனர். உண்மையில் நாகரிகமடைதல் என்பதற்கான விளக்கம் வேறு.

முந்தையத் தலைமுறைகளில் பின்பற்றப் பட்ட பிற்போக்குக் கருத்தியல்களைக் கைவிட்டு ஒரு சமூகம் பண்படுதலே நாகரிகம். மனித அறம் குறித்தும், சக மனிதர் குறித்தும், விழிப்போ டிருந்து எதிர்காலத் தலைமுறை பண்போடு வாழ வழியமைத்தலே நாகரிகத்தின் பயன். கடந்த காலத்தின் கொடுமைகளையும் மூடத்தனங்களை யும் கேள்விக்குட்படுத்தாமல் வெறுமனே உடைகளில் புரட்சி செய்யும் சமூகத்தை ஒரு போதும் நாகரிகமானதாகக் கருத முடியாது.

பெண்ணை மதச் சட்டகத்திற்குள் அடைத்து வைத்திருக்கும் வரையில்தான் ஆணாதிக்கம் இங்கே பிழைத்திருக்கும். ஆக, மதத்தையும் சாதியத்தையும் வேரறுப்பதில் ஒவ்வொருவரும் - ஒவ்வொரு பெண்ணும் பெரியாராகும்போது ஆணாதிக்கமென்ன, அத்தனை ஆதிக்கங்களும் தகர்ந்து விழும்.

இந்த விழிப்புணர்வும் புரிதலுமே இங்கே வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதுவொன்றே பெண்களுக்கான விடுதலையை உறுதிப் படுத்தும்.

- ‘தமிழ்த் தேசிய விடுதலைக்கான வாழ்வியல் பண்பாடு’ நூலில் இடம் பெற்ற கட்டுரை

Pin It