இந்திய தேசத்திற் கென்றே ஒரு சட்டம்

முந்தி யளித்த முனைவரிவர் - தந்திரத்தால்

தாழ்த்தப்பட் டோர்களையே, தந்திறத்தால் தானுயர்த்த

ஆழ்ந்துமிகச் சிந்தித்தார் ஆம்.

- மச்ச யோகி

பாபா சாஹேப் டாக்டர் பீமாராவ் இராம்ஜி அம்பேத்கர் இந்தியாவிலுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர். தாழ்த்தப்பட்டவர் என்பதாலேயே பல இன்னல்களுக்கு ஆனானவர். பல அவமானங்களைச் சந்தித்தவர். படிப்பாலும் அறிவாலும் படிப்படியாக உயர்ந்தவர். சுதந்திர இந்தியாவிற்கான சட்டத்தை உருவாக்கியவர். சட்ட மேதை என்றும் சட்டத்தை வடிவமைத்த சிற்பி என்றும் பெருமை பெற்றவர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலாக்கப்படுவதற்குள் அம்பேத்கர் எதிர்கொண்ட சவால்கள், சிக்கல்கள் ஏராளம்.

இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலம். இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் பல லட்சம். ஒரு நூற்றாண்டு காலமாக ஓர் இயக்கமாகவே போராடினாலும் சுதந்திரம் பெறும்போது பேசப்பட்டவர். காந்தி, நேரு போன்று பல்லோர் இருந்தாலும் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பி.ஆர். அம்பேத்கர். ஆனால் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பின்பு நள்ளிரவு வரை படித்துக் கொண்டிருந்துள்ளார். இது குறித்துக் கேட்டதற்குக் காந்தியின் மக்கள் விடுதலை பெற்று விட்டனர். என் மக்கள் (தலித்தியர்) இன்னும் விடுதலை பெறவில்லை. அதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றாராம். தலித் மக்களின் விடுதலையையும் கருத்தில் கொண்டே இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியுள்ளார். “தீண்டப் படாத வகுப்பு மக்களின் உரிமைகளைக் காப்பதற்காகவே அரசியல் சட்ட அவையில் நுழைந்தேன்” என்று அம்பேத்கர் அரசியல் சட்ட அவையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவது குற்றம் என்ற கருத்தை அம்பேத்கர் முன்மொழிய, சட்டப்பரிந்துரையைக் கூட்டம் வலியுறுத்தியது என்பதும் எடுத்துக்காட்டுக்குரியது.

1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்க அரசியல் நிர்ணய சபை 1947 ஆகஸ்டு 29 ஆம் நாள் டாக்டர் அம்பேத்கரை தலைவராகக் கொண்டு ஒரு தயாரிப்புக் குழுவை நியமித்தது. இதன் உறுப்பினர்களாக என்.கோபால்சாமி அய்யங்கார், கே. எம் முன்´, என்.மாதவராவ், சையத் முகம்மது சாதுல்லா, சர். அல்லாடி கிருஷ்ணசாமி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி உள்பட 8 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் முக்கியம். அம்பேத்கரே முதன்மை.

ஆகஸ்டு 3 ஆம் நாளன்று வெளியிடப்பட்ட இந்தியாவின் முதல் அமைச்சரவையில் டாக்டர் அம்பேத்கர் ஒருவர் என்பதும் முக்கியமானதாகும். ஏழு பேர் கொண்ட குழுவானாலும் அம்பேத்கர் ஒருவரே இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியுள்ளார். ஏழு பேரில் ஒருவர் விலகி விட்டார். இவருக்குப் பதிலாக ஒருவர் நியமிக்கப்பட்டார். ஒருவர் இறந்துவிட்டார். மற்றவர் மாகாணப் பணியிலேயே ஈடுபட்டார். ஒருவர் வெளிநாடு சென்று விட்டார். இருப்பவர்களும் டில்லிக்கு வெகு தொலைவில் இருந்து விட்டனர். இத்தகவல்களை 1948 ஆம் ஆண்டு நவம்பர் 5 அன்று அரசியல் அமைப்புச் சட்ட அவையில் கூறியவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்க ஒரு குழு நியமிக்கப் பட்டிருந்தாலும் அம்பேத்கர் ஒருவரே தனி மனிதராக இருந்து தன் அறிவால், திறமையால், முயற்சியால் இயற்றியுள்ளார். இது பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியதாகும். இந்திய நாட்டின் மீதும், அரசியல் பாலும் அம்பேத்கர் கொண்டிருந்த தீவிரத்தின் தன்மையை உணர முடிகிறது. இக்கால கட்டத்தில் அவர் உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்ததையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. மேலும் ‘நான் என் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவும், விருப்பத்திற்காகவும் மந்திரியாகப் பதவி ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நாட்டிற்கு அரசியல் சட்டம் தேவை, இந்த நாட்டின் பூர்வ குடிகளுக்கான சொந்த உரிமைகளை அந்த அரசியல் சட்டம் பாதுகாக்க வேண்டும் என்ற இரண்டு அவசியத் தேவைகளை மனத்தில் கொண்டே சட்ட மந்திரி பதவியை ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்கிறேன்’ என ஒரு நேர்காணலில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மனு அக்கால நீதி நூல். இம்மனுநீதிப்படியே அக்கால மன்னர்கள் அரசாண்டனர். மனுநீதிக்குப் பெருமை சேர்த்தனர். மனுநீதிப்படி ஆட்சி செய்பவனே சிறந்தவன் எனப் போற்றப்பட்டான். ஆனால் அம்மனு, மகளிர்க்கும் தலித்தியர்க்கும் எதிரானது. அவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்கிறது. இக்காரணத்தால் இம்மனு நூலை எரித்தவர் அம்பேத்கர். இவரிடமே இந்தியாவிற்கான சட்டங்களை உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. மனு தர்மத்தை மீறி மனித தர்மத்தைச் சட்டம் மூலம் பேசியவர் அம்பேத்கர்.

‘மனு தர்மத்தின் மற்றொரு மறுபதிப்பே இந்திய அரசியல் சட்டம்’ என்கிறார் கவிஞர் தமிழ்நாடன். அம்பேத்கரோ ‘தற்போதுள்ள இந்திய அரசில் சட்டம் 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தின் பெரும் பகுதியை எடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. இவ்வாறு முன்பே உள்ளதிலிருந்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதற்காக வெட்கப்படத் தேவையில்லை. இதைக் ‘கருத்துத் திருட்டு’ என்று கூற முடியாது. ஓர் அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் தங்களுக்கே தனிக்காப்புரிமை கொண்டவை என்று எந்த நாடும் கோர முடியாது’ என்கிறார். மேலும் ‘ஒர் நாட்டின் அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறியுள்ளார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதி முடித்து 1948 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் அரசியல் அமைப்புச் சட்ட அவையில் அறிமுகப்படுத்தி அரசின் வடிவம் பற்றியும் விளக்கினார். “இந்திய அரசியல் அமைப்புச் சட்ட விதிகளின்படி குடியரசுத் தலைவர் பிரிட்டிஷ் அரசியலமைப்புச் சட்டத்தில் அந்நாட்டு மன்னருக்கு உள்ள அந்தஸ்த்தில் இருப்பவர். குடியரசுத் தலைவர் இந்திய அரசின் தலைவராக இருப்பார். ஆனால் நிர்வாகத்தின் தலைவராக இருக்க மாட்டார். அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்துவார். ஆனால் இந்திய நாட்டை ஆள்பவராக இருக்க மாட்டார்” என்று விளக்கியுள்ளார். மேலும் அவையினருக்குப் புரியச் செய்ய வேண்டும் என்னும் நோக்கத்துடன் பல்வேறு விதமாய் விவரித்துள்ளார்.

அரசியல் சட்ட நகலில் புதுமையாக, புரட்சியாக ஏதுமில்லை என்னும் குற்றச் சாட்டும் எழுப்பப்பட்டது. குற்றச் சாட்டுக்கு ஏற்கும் விதமாக விளக்கமளித்துள்ளார். இறுதியாக “புதிய அரசியல் சட்டத்தின் கீழ் தவறுகள் நடக்குமானால் அதற்கான காரணம், நாம் ஒரு மோசமான அரசியல் சட்டத்தைப் பெற்றிருக்கிறோம் என்பதன்று. இதைச் செயற்படுத்தும் மனிதர்கள் செய்யும் தவறே காரணம் என்றுதான் சொல்லவேண்டும்” என்று விளக்கமளித்து, தெளிவுபடுத்தி அனைவரையும் ஏற்கச் செய்து தன் திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

ஒரு தேசத்திற்கான சட்டத்தை வடிவமைத்தாலும் அம்பேத்கரின் எண்ணம் முழுவதும் தீண்டப்படாத வகுப்பு மக்களைக் காப்பதிலும் முன்னேற்றுவதிலுமே இருந்தது. அம்பேத்கரே அரசியல் சட்ட அவையில் இத்தகவலைக் குறிப்பிட்டுள்ளார். 1948 நவம்பர் 29 ஆம் நாள் ‘தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது’ என்னும் விதி எண் 11 நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று...?

இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு அரசியல் மேதைகளின் பாராட்டைப் பெற்றிருப்பினும், இச்சட்டத்தை வடிவமைக்க அம்பேத்கர் இரவு பகலாக உழைத்தது 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள். ஏறக்குறைய 3 ஆண்டுகள். இந்திய அரசியல் சட்டம் 22 பகுதிகளையும் 395 சட்ட உறுப்புகளையும் கொண்டதாகும்.

எல்லோருக்கும் பாதுகாப்பான, பொதுவான ஒரு சட்டம் இயற்றிய ஒரு மாமேதை அம்பேத்கர். அவர் மிகத் தெளிவாக, மிகச் சாதுர்யமாக, பகுத்தறிவுச் சிந்தனையுடன் “வருண அமைப்புக்கும், வழக்கச் சட்டம் என்பவற்றுக்கும் இதுகாறும் பாதுகாப்பாக உள்ள பழைய சட்ட விதிகள் நீக்கப்படுகின்றன” என்று அம்பேத்கர் முன்மொழிந்த சட்டத்திருத்தப் பகுதி அடியோடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ளாத, தாங்க முடியாத அம்பேத்கர் 11.10.1951 அன்று வேதனையுடன் கண்ணீரும் கம்பலையுமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வெளியேறினார். இது ‘அம்பேத்கர் பற்றி’ அய்யா வே. ஆனைமுத்து எழுதியதாகும்.

அம்பேத்கர் போன்ற ஒரு சட்ட ஞானியை மதிக்காதது இந்திய அரசுக்கே அவமானம். இன்று ‘இந்திய அரசியல் சட்டம்’ ஒரு தந்தையை இழந்து அனாதையாக உள்ளது.