பாரம்பரியத் தாயகப் பிரதேசமும் வாழ்வாதாராத்தை நிலைக்கச் செய்யும் பொருளுற்பத்தித் தன்னிறைவும் வரலாற்றுத் தொன்மையும் கொண்ட எந்தவொரு தேசிய இனத்திற்கும் தனக்கான இறையாண்மையை நிறுவிக்கொள்ளும் உரிமை உண்டு. ஒரு தேசிய இனம் வேறொரு தேசிய இனத்துடன் இணைந்திருப்பதற்கோ அல்லது பிரிந்து தனியான அரசு அமைத்துக் கொள்வதற்கோ முழு உரிமை உண்டு. இந்த உரிமையின் அடிப்படையில்தான் உலகின் பல தேசிய இனங்கள் தமக்கான தனியரசுகளைக் கொண்ட நாடுகளாக உருவாகியிருக்கின்றன. அந்தவகையில்தான், தமிழீழ தேசிய இனமும் தனக்கான தனியரசை உருவாக்கிக்கொள்ள கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் தமிழர்கள் சிங்களவருடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையில் தமது சம உரிமைக்கான கோரிக்கைகளை அமைதிவழியில் வலியுறுத்தி வந்தனர். அவ்வமைதி வழியிலேயே போராட்டங்களையும் நடத்தினர். இலங்கை நாட்டிலேயே தமிழர்களும் சிங்களவர்களுமாக இணைந்து வாழ்வதற்கான கருத்துக்களையும் விருப்பங்களையும் தமிழர்கள் முன்வைக்கவே செய்தனர். ஆனால் இலங்கை என்பது சிங்கள பவுத்தர்களுக்கு மட்டுமே உரிய நாடு; அதில் தமிழர்களுக்கு உரிமையில்லை; தமிழர்கள் அந்நியர்கள்; தமிழர்கள்அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பன போன்ற ஆதிக்கக் கோட்பாடுகளால் வழிநடத்தப்பட்டுவந்த சிங்கள பவுத்த பேரினவாதத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் தமிழர்களின் உரிமைக்கான அனைத்துக் கோரிக்கைகளையும் நிராகரிக்கவே செய்தனர். அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் சம உரிமைக்கான அனைத்துவகை அமைதிவழிப் போராட்டங்களையும் காவல்துறை, இராணுவம் போன்ற அரச வன்முறை எந்திரங்கள் மூலம் ஒடுக்கியது சிங்கள பவுத்த பேரினவாத அரசு.

தமிழரின் தாயக உரிமை, மொழியுரிமை, வாழ்வுரிமை, அரசுரிமை போன்ற அனைத்தையும் மறுத்ததோடு, தமிழர்கள் சம உரிமை கோருவதை நாட்டைப் பிளவுபடுத்தும் துரோகம் எனவும், தமிழர் உரிமைகளுக்காகப் போராடுவதைப் பயங்கரவாதம் என்றும் முத்திரை குத்தி ஒடுக்கியது சிங்கள பவுத்த பேரினவாத அரசு. அது மட்டுமல்லாமல், சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர் தாயகப் பகுதிகள் சிங்களமயமாக்குதல், ஆட்சியில், நீதியில், கல்வியில், மொழியுரிமை மறுத்தல்; கல்வி, தொழில், வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கான உரிமை மறுப்பு; தமிழருக்கு எதிரான இனக் கலவரங்கள் மூலம் தமிழர் உடைமைகளைச் சூறையாடுதல், தமிழர்களைக் கொன்றொழித்தல் போன்ற நடைமுறைகளை சிங்கள பவுத்த பேரினவாத அரசு தொடர்ந்து தீவிரப்படுத்தி வந்தது. இதன் விளைவாகத்தான் இலங்கை என்னும் ஒரே நாடு என்னும் அமைப்புக்குள் தமிழர்கள் இனியும் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியாது என்ற முடிவுக்குத் தமிழர்கள் வந்தனர். அதாவது, தமிழர்களின் சொந்தத் தாயகப் பகுதியில் தனித்து இறையாண்மையுள்ள ஓர் அரசை நிறுவி, தனி நாடாக அமைத்துக் கொள்வதுதான் தமிழர்களுக்கான ஒரே வழி என்ற முடிவுக்குத் தமிழர்கள் வந்தனர். சம உரிமையுடன் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில்தான் தமிழர்கள் இந்த முடிவை எடுத்தனர். தமிழர்களின் இந்த முடிவை வெளிப்படையாக உலகுக்கும் அறிவித்தனர்.

“............ மொழி உரிமை இழந்து, குடியுரிமை இழந்து, சமய உரிமை இழந்து நிற்கும் தேசிய இனத்திற்கு மாற்று வழி எது? தரப்படுத்தலினால் உயர் கல்விக்குரிய வாய்ப்பை இழந்து, தொழில் துறையில் சமவாய்ப்பை இழந்து நிற்கும் தேசிய இனத்திற்கு மாற்றுவழி எது? ஆட்சியாளர்களால் தூண்டப்பட்ட குண்டர்களாளும் பாதுகாப்புப் படையினராலும் தாக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுத் தவிக்கும் தேசிய இனத்திற்கு மாற்றுவழி எது? தனித்துவத்தை நாடி திக்குத் தெரியாது நிற்கையில் அழிக்கப்படும் ஆபத்தையே காணும் தேசிய இனத்திற்கு மாற்றுவழி எது?” என்றெல்லாம் தமிழர்களுக்கு முன்னிருந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதிலாக அமைந்திருந்தது 1976 இல் நிறைவேற்றப்பட்ட யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டைத் தீர்மானம் தான். தந்தை செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற தமிழர் தேசிய மாநாட்டில் தமிழ் இனத்திற்குத் தேசிய விடுதலை கோரும் வரலாற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“................. இலங்கைத் தமிழ் மக்கள் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுதபலத்தால் வெற்றி கொள்ளப்படும்வரை சிறப்புவாய்ந்த பழம்பெரும் மொழி, மதங்கள், தனித்துவமான பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டிருந்ததோடு பல நூற்றாண்டுகளாக ஒரு தனித்துவமான பிரதேசத்தில் தனியரசை அமைத்துச் சுதந்திரமாக வாழ்ந்த வரலாறும் உடையவர்கள். இவற்றுக்கு மேலாகத் தங்களது சொந்த மண்ணில் தனி இனமாகத் தங்களைத் தாங்களே ஆட்சி புரிந்து வாழ வேண்டும் என்ற உறுதிப்பாடும் உடையவர்கள். இத்தகைய பண்புகளைப் பெற்றவர்கள் என்பதால், தமிழர்கள் சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட தனித்துவமான தேச அமைப்பைக் கொண்டிருந்தார்கள்.

இலங்கையின் 1972 ஆம் ஆண்டின் குடியரசுக்கான அரசியல் யாப்பு, புதிய குடியேற்ற எஜமானர்களாகிய சிங்களவர்களின் ஆட்சியின்கீழ் தமிழர்களை ஓர் அடிமை இனமாக மாற்றியுள்ளது. தவறான வழியில் பெற்றெடுத்த ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு சிங்களவர்கள் தமிழ் மக்களின் நிலவுரிமை, மொழியுரிமை, குடியுரிமை, பொருளாதார உரிமை, வாழ்வுரிமை, கல்வியுரிமை, வேலைவாய்ப்புரிமை ஆகியவற்றை மறுத்து அவர்களின் தேசிய கட்டமைப்பின் அடிப்படைகளையே அழித்துள்ளனர். ஆகவே, தமிழீழத் தனியரசு அமைப்பது குறித்து வடகிழக்கிற்கு வெளியே வாழும் பெருந்தோட்டத் தொழிற்சங்கமாகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்த தயக்கத்தைக் கருத்தில் எடுக்கும் அதே வேளையில், தமிழர் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு தேசத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான இறையாண்மையுடைய மதச்சார்பற்ற சோசலிசத் தமிழீழ அரசு மீளப்பட்டு மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது” எனத் தமிழர்களின் தாயக உரிமைக்கான தேவையை உலகுக்குப் பறை சாற்றியது வட்டுக்கோட்டைத் தீர்மானம்.

தமிழீழ தேசிய இனத்தின் இந்த உரிமையைச் சிங்கள பவுத்த பேரினவாத அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, தமிழர்களின் தாயகப் பகுதியை அபகரித்து, தமிழினத்தை அழிக்கும் முயற்சிகளைத்தான் மேற்கொண்டது. மேலும் 1948லிருந்து முப்பது ஆண்டுகாலம் சம உரிமையுடன் ஒரே நாட்டில் இணைந்து வாழ்வதற்குத் தமிழர்கள் செய்த அனைத்து முயற்சிகளையும் முறியடித்துவிட்டது. இறுதியாக, இலங்கையில் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்றோ, அதற்குத் தாயகப் பகுதியும் சுயநிர்ணய உரிமையும் உண்டு என்றோ ஏற்றுக் கொள்ள முடியாது; தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடிமையாக மட்டுமே இலங்கையில் வாழ முடியும் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டது சிங்கள பவுத்த பேரினவாத அரசு. முப்பதாண்டு காலம் தமிழர்களின் சம உரிமைக்கான அமைதிவழியிலான

போராட்டம் தோற்றுப் போய்விட்ட நிலையில்தான், தமிழீழ தேசிய இனத்தின் உரிமையையும் வாழ்வையும் பாதுகாத்துக் கொள்வதற்குத் தமிழீழத் தனியரசு அமைப்பது ஒன்றுதான் வழி என்ற முடிவுக்கு வந்த தமிழீழ மக்கள், தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான ஆயுதவழியிலான போராட்டத்தைக் கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழத் தனியரசுக்கான ஆயுதவழிப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தது.

‘இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமும் சம உரிமையும் உள்ள கவுரவமான வாழ்க்கையைப் பெறுவதற்குத் தமிழீழக் குடியரசு அமைக்கப்பட வேண்டும்’ என்ற 1976 இல் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பணியை - அத்தீர்மானத்திற்குத் தமிழீழ மக்கள் தந்திட்ட ஆதரவையும் விருப்பத்தையும் நிறைவேற்றும் பொருட்டுத்தான் கடந்த முப்பதாண்டு காலமாக ஆயுதவழியிலான போராட்டத்தை எந்தவித சமரசமும் இன்றித் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையேற்று நடத்தி வந்தனர்.

தமிழீழ மக்களிடமிருந்தே தோன்றி, தமிழீழ மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்து, வேறு எந்த நாட்டின் ஆதரவும் இன்றி தமிழீழ மக்களின் ஆதரவுடன் மட்டுமே தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள். சிங்கள பவுத்த பேரினவாத அரச பயங்கரவாதத்திலிருந்து தமிழர்களைக் காப்பதற்காகவே ஆயுதம் எந்தினாவர்கள் விடுதலைப் புலிகள். புலிகளை மக்களும், மக்களைப் புலிகளும் காத்துவந்தனர். புலிகள் வேறு மக்கள் வேறு எனப் பிரிக்க முடியாத அளவுக்குத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலிகளும் மக்களும் இணைந்தே இருந்தனர். இத்தகைய தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டமானது ஒடுக்குண்டு கிடக்கும் உலகின் எல்லா தேசிய இனங்களுக்கும் முன் மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் அமைந்திருந்தது. அதேவேளையில், ஏகாதிபத்திய உலகமயத்தின் சதிவலைகள் உலகின் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவே பல்வேறு வடிவங்களில் இயங்கிக்கொண்டிருந்தது, இயங்கிக் கொண்டுமிருக்கிறது. ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் உலகின் எந்தவொரு மூலையில் நடைபெற்றாலும் அது ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிராகவே இருக்கும்என்பதால், எந்தவொரு தேசிய இன விடுதலைப் போராட்டமும் உலகின் எந்தப்பகுதியிலும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதிலும், ஒருவேளை நடைபெற்றால் அதை நசுக்கி ஒடுக்குவதிலும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் துணையோடுதான் தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிட வேண்டும் எனக்

காத்துக் கிடந்தது சிங்கள பவுத்த பேரினவாத அரசு - தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதில் பலமுறை தோற்றுப்போன சிங்கள பவுத்த பேரினவாத அரசானது, சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்தால் மட்டும் தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டபின்பு, தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்குப் பல்வேறு ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் உதவியையும் ஒத்துழைப்பையும் நாடியது. சிங்கள பவுத்த பேரினவாத அரசின் கூக்குரலுக்கு ஓடோடிச்சென்று உதவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள பவுத்த பேரினவாத பயங்கரவாத அரசுக்கு அரசியல் - பொருளியல் - இராணுவம் போன்ற கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்தியா. இந்திய அரசு தொடக்கத்திலிருந்தே சிங்கள பவுத்த பேரினவாதத்துக்குத் துணையாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

இலங்கையில் உள்ள மலையக மக்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1821 முதல் 1939 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் தோட்டத் தொழில்களுக்காகத் தமிழகத்திலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்டவர்களாவர். தங்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் மலையகப் பகுதியையும் இலங்கையையும் வளமாக்கியவர்கள் அவர்களேயாவர். மலையகப் பகுதியையே தமது வாழ்விடமாகவும் இலங்கையையே தமது தாய்நாடாகவும் ஏற்றுக் கொண்டவர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அவர்களுக்கு வாக்குரிமையும் அளிக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரத்தைப் பெற்ற சிங்கள பவுத்த பேரினவாத ஆட்சியாளர்கள் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து பத்து இலட்சம் மக்களை நாடற்றவர்களாக்கியபோது, அந்த நடவடிக்கை சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்ற முறையிலோ அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் இந்திய வம்சாவழியினர் என்ற முறையிலோ அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, இந்திய அரசு சிங்கள அரசுடன் ஒப்பந்தம் போட்டு மலையகத் தமிழ் மக்களை இந்தியாவுக்கு நாடு கடத்தவே உதவி செய்தது. இதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்களின் மக்கள் தொகை குறையவும், மலையகப் பகுதியைச் சிங்கள பவுத்த மயப்படுத்துவதற்கும் உதவியது. இதில் மலையகத் தமிழ் மக்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளும் முயற்சியைக்கூட இந்தியா மேற்கொள்ளவில்லை. அதாவது, சிங்கள அரசைப் போலவே இந்திய அரசும் மலையகத் தமிழ் மக்களைத் தனது விருப்பம்போல் கையாள்வதற்கான அடிமைகளாகவே கருதியது.

1958 இல் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தென்னிலங்கைப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது இந்திய அரசு அதை ஏனென்று ஒரு வார்த்தைக்குக்கூட கேட்கவில்லை. 1961 இல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற சட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடிய தமிழர்கள் மீது சிங்கள பவுத்த பேரினவாதத்தின் காவல்துறை, இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட ஈவு இரக்கமற்ற அடக்குமுறை நடவடிக்கையை இந்திய அரசு கண்டிக்கவில்லை. அதேபோல், 1977 இல் சிங்கள வெறியர்களுடன் சிங்களக் காவல்துறையும் இராணுவமும் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் நடத்தியபோது இந்திய அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை.

1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் புகுந்து சிங்களக் காவல்துறையினர் 9 தமிழர்களைக் கொன்றொழித்ததை இந்திய அரசு கண்டிக்கவில்லை. மேலும், 1981 இல் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகத்தைச் சிங்கள இராணுவம் எரித்து நாசப்படுத்தியபோதும் இந்திய அரசு கண்டிக்கவில்லை.

இவ்வாறு இலங்கையில் தமிழர்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியபோதும், இனக் கலவரங்களில் தமிழர்கள் பலியானபோதும் இந்தியா வாய் திறக்க மறுத்து, சிங்களப் பவுத்த பேரினவாதத்திற்கே துணை போனது.

இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தபோது ஈழவிடுதலைக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சியும் பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டன. இந்தியாவின் இந்தவகையான உதவிகள் ஈழவிடுதலைக்கு உதவ வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டவையல்ல. ஏனெனில் ‘ஈழப் பிரச்சினைக்கு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு, அதன் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டுத் தீர்வுகாண வேண்டும்’ என்று மட்டுமே இந்தியா எப்போதும் கூறியிருக்கிறது. ஆகவே, ஈழவிடுதலைக் குழுக்களுக்கு இந்தியா உதவியும் பயிற்சியும் அளித்ததன் நோக்கம் ஈழ விடுதலை அல்ல. மாறாக, ஈழ விடுதலைக் குழுக்கள் உண்மையிலேயே ஈழ விடுதலையை முன்னெடுக்கும் மக்கள் சார்ந்த இயக்கங்களாக வளர்ந்துவிடாமல் தடுப்பதும், இந்தியாவைச் சார்ந்ததாய் - இந்தியாவுக்குட்பட்டதாய் மாற்றுவதை மட்டுமே நோக்கமாய்க் கொண்டிருந்தது இந்திய அரசு.

பெரும்பாலான ஈழவிடுதலைக் குழுக்களைப் பொருத்தமட்டில் இந்திய அரசு தனது நோக்கத்தில் வெற்றியடைந்தது. எனினும், விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் அது வெற்றியடையவில்லை. இந்நிலையில் தமிழீழ விடுதலைக்குப் போராடுவதில் தமிழீழ விடுதலைப் புலிகள் விடாப்பிடியாக நின்றதால் அவ்வமைப்பை ஒழித்துக் காட்டுவதற்குச் சிங்கள பவுத்த பேரினவாத அரசுடன் இந்திய அரசு கூட்டணி சேர்ந்து கொண்டது.

1987 இல் உருவாக்கப்பட்ட இராசீவ் - செயவர்த்தனா ஒப்பந்தமானது தமிழீழ மக்கள் மீது திணிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தமிழீழ மக்களின் ஒப்புதல் பெறாதது. இவ்வொப்பந்தத்தை தமிழீழ மக்களும் விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே ‘அமைதிப்படை’ என்ற பெயரில் இலங்கைக்கு அனுப்பட்ட இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளையும் தமிழீழ மக்களையுமே கொன்றொழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனாலும், தனது நோக்கங்களில் வெற்றி பெறாமலேயே ‘இந்திய அமைதிப்படை’ 1990 இல் இந்தியா திரும்பியது. எனினும் , ஈழத்தமிழர்களுக்கு எதிராக விடுதலைப்புலிகளுக்கு எதிராக - தமிழீழ விடுதலைக்கு எதிராக இந்திய - சிங்கள அரசுகளின் கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான - சிங்கள பவுத்த பேரினவாத அரசுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாட்டை மேலும் மேலும் புதுப்பித்துக் கொள்ளும் வகையில்தான், விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பு என அறிவித்து இந்தியாவில் தடைசெய்தது இந்திய அரசு. இதன்மூலம் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிய உண்மைச் செய்திகள் மக்களைச் சென்றடைய விடாமல் தடுத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் சிங்கள பவுத்த பேரினவாத அரசு பரப்பும் பொய்களையே இந்தியாவும் பரப்பியது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகப் பேசுவதும் செயல்படுவதும் உதவுவதும் குற்றச் செயல்களாக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் 42 நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பு என அறிவித்துத் தடைசெய்யத் தூண்டியதும் இந்திய அரசுதான். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உலக நாடுகளிலிருந்து தார்மீக ஆதரவும், உலகம் முழுவதிலிருக்கும் ஈழமக்களிடமிருந்தும் ஏனைய நாட்டு மக்களிடமிருந்தும் தார்மீக மற்றும் பொருளியல் ஆதரவும் கிடைப்பதைத் தடுத்து நிறுத்தியதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாகும்.

தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு எதிராக உளவுத் தகவல்களைச் சேகரித்துச் சிங்கள பவுத்த பேரினவாத அரசுக்கு அளித்துக் கொண்டிருந்ததும் இந்தியாதான். அதுமட்டுமல்லாமல், சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்துக்கும் இந்தியா பயிற்சி அளித்தது. தமிழர்களுக்கு எதிரான போருக்குத் தேவையான இராணுவத் தொழில் நுட்பக் கருவிகள், ரேடார்கள், டாங்கிகள், ஆயுதங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியது. கடல்வழியில் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு உதவிகள் வந்து சேர்வதைத் தடுப்பதற்காக இந்தியக் கப்பற்படை காவலுக்கு வைக்கப்பட்டது.

ஈழப் போராளிகளுக்கு எதிரான போரில் இந்திய இராணுவத் தளபதிகள் பாகிஸ்தான், சீனா, ரசியா, இஸ்ரேல் போன்ற பிறநாட்டுத் தளபதிகளுடன் சேர்ந்து சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்திற்குப் போர் முனையிலேயே வழிகாட்டினர். இந்தியப் போர் விமானிகள், இந்தியச் சிறப்பு இராணுவப் படையினர் சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்திற்கு ஆதரவாகப் போர் முனைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். ஈழத்தமிழின அழிப்புப் போரில் சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்துடன் இந்தியப் படையும் வெளிப்படையாகவே இணைந்து கொண்டது.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பவுத்த பேரினவாத பயங்கரவாதத்தினை இந்தியா கண்டிக்கவும் இல்லை. கண்டு கொள்ளவும் இல்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் சிங்கள பவுத்த பேரினவாத அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக முறித்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிராகப் போரை நடத்தியது பற்றியோ, ஈழப் பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் வெளியேற்பட்டதைப் பற்றியோ, சிங்கள பவுத்த பேரினவாதத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் கடத்திக் கொல்லப்பட்டதைப் பற்றியோ, பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பும்போது தடை செய்யப்பட்டதைப் பற்றியோ, பள்ளிகள், மருத்துவமனைகள் சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டு தமிழர்கள் அழிக்கப்பட்டது பற்றியோ, தமிழர்கள் முகாம்களில் அடைத்துக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்படுவதைப் பற்றியோ, தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படுவதைப் பற்றியோ, சிங்களப் பேரினவாத இராணுவத்தின் முப்படைத் தாக்குதல் மூலம் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டது பற்றியோ இந்திய அரசு இதுவரை ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரினால் சிங்களப் பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில், அதைப் பாதுகாக்க பல்லாயிரம் கோடிக் கணக்கில் நிதியுதவி அளித்துக் கொண்டிருக்கிறது இந்தியா. சிங்கள பவுத்த பேரினவாத அரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு தமிழீழ தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை நசுக்கவும், அப்போராட்டத்தை வழிநடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பை நசுக்கவும் தனது முழு சசக்தியையும் பயன்படுத்தி வந்திருக்கிறது இந்திய அரசு.

இந்திய அரசு சிங்கள பவுத்த பேரினவாத அரச பயங்கரவாதத்துடன் தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழீழ தேசிய இனத்தின் தாயக உரிமை, தேசிய இன உரிமை, சுயநிர்ணய உரிமை போன்றவை சிங்கள பவுத்த பேரினவாத அரசால் மறுக்கப்படுவது குறித்து இந்திய அரசு அக்கறை கொள்வதில்லை. இதற்குக் காரணம் இந்தியாவின் விரிவாதிக்க நலனைத் தவிர வேறொன்றுமில்லை.

தெற்காசிய மண்டலத்திலேயே ஒரு ஏகாதிபத்திய நாடாக இந்தியா உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்கு உட்பட்ட நாடாக இலங்கை இருந்து கொண்டிருக்கிறது. இலங்கை முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்வதே இந்தியாவின் நெடுநாளைய திட்டம். “இலங்கையின் இறையாண்மை” “ஒன்றுபட்ட இலங்கை” என்ற கோட்பாட்டின் மூலம் இலங்கை முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொ£ள்வது அதன் கொள்கை. இலங்கை முழுவதையும் தனது ஆதிக்கக் கரங்களுக்குள் அரவணைத்துக் கொள்வதற்கு வேறெந்தக் கொள்கையையும் விட இதுவே அதற்கு ஏற்பான கொள்கை என்று இந்தியா கருதிக் கொண்டிருக்கிறது.

இந்தியா என்பதே பல்வேறு தேசிய இனங்களையும் அடிமை கொண்டிருக்கும் ஒரு வல்லாதிக்க நாடாக உருப்பெற்றிருக்கிறது. இந்தியா ஒரு நாடு என்ற முறையில் அதனுள் அடங்கியிருக்கும் தேசிய இனங்களை மட்டுமல்ல, அதன் அண்டை நாடுகளையும் தனது விரிவாதிக்கக் கரங்களால் அணைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கையும் இந்தியாவின் விரிவாதிக்க நலனுக்கு உட்பட்டதாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கிறது இந்தியா. அதாவது தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை நசுக்கி இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாத அரசின் இறையாண்மையப் பாதுகாக்க உதவும் கொள்கையே இந்தியாவின் கொள்கையாக இருந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே ஈழத்தமிழர்களின் நலனைப் பலியிட்டுக் கொண்டிருக்கிறது. சிங்கள புவத்த பேரினவாத அரசுடன் சேர்ந்து கொண்டு ஈழத்தமிழின அழிப்புக்குத் துணை போய்க் கொண்டிருக்கிறது. அதாவது, இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாத அரசின் மூலமாகத் தனது வல்லாதிக்கத்தை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈழத் தமிழினத்தின் உரிமைகளையும் உயிர்களையும் பலியிட்டது. பலியிட்டுக் கொண்டிருக்கிறது இந்திய வல்லாதிக்க அரசு.

சிங்கள பவுத்த பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இந்திய வல்லாதிக்க விரிவாதிக்க நலன்களுக்கு உடன்பட மறுத்தும்தான் தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆகவே, தமிழீழ விடுதலைப் போராளிகளை ஒழிப்பதன் மூலம் தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒழிக்க முடியும் என இந்திய வல்லாதிக்கமும் சிங்கள பவுத்த பேரினவாத அரசும் கருதின. இந்த அடிப்படையில்தான், தீவிரவாதத்திற்கு எதிரான போராக அறிவித்து இந்திய வல்லாதிக்கத்துடன் இணைந்து ஈழத்தமிழினத்தைக் கொன்றொழிக்கும் கொடூரமான போரை சிங்கள பவுத்த பேரினவாத அரசு நடத்தி முடித்திருக்கிறது.

தமிழீழ தேசிய இன விடுதலை இயக்கமான போராளிகள் அமைப்பை நிராயுதபாணியாக்கிச் சரணடையச் செய்யும் நோக்கோடுதான் தமிழர்களுக்கு எதிரான இந்தப்போர் நடவடிக்கையை - தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கையைச் சிங்களப் பவுத்தள பேரினவாதமும் இந்திய வல்லாதிக்கமும் இணைந்து நடத்தியிருக்கிறது. போராளிகளை ஒழித்துக் கட்டுவதும், போராளிகளுக்குத் துணையிருந்த மக்களை ஒழித்துக் கட்டுவதும், தமிழீழம் என்ற அரசியல் கோரிக்கையே எழாமல் தடுப்பதும், தேசிய இன விடுதலை இனிசாத்தியமில்லை. இலங்கைக்குள்ளும் அதன் அரசியல் சட்ட அமைப்புக்குள்ளும் உட்பட்டுச் சிங்களவர்களுக்கு அடிமையாய் இருப்பதே தமிழர்களின் தலைவிதி என்பதாக ஆக்குவதும்தான் சிங்கள பவுத்த பேரினவாத - இந்திய வல்லாதிக்கத்தின் கூட்டு நடவடிக்கையான தமிழின அழித்தொழிப்புப் போரின் நோக்கமாக இருந்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராளிகளும் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உறுதியுடனும் பற்றுடனும் இருந்து போராடியதாலும் சிங்கள பவுத்த பேரினவாத - இந்திய வல்லாதிக்கத்திற்குப் பணிந்து போக மறுத்தாலும் சிங்கள பவுத்த பேரினவாத இந்திய வல்லத்திக்கத்தின் இராணுவ பயங்கரவாதம் போராடிய மக்களையும் போராளிகளையும் கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்தது.

பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், ஆண்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி, போராளிகள் பொதுமக்கள் என்ற பாகுபாடின்றி விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைத் தாக்குதல் மூலமாகவும் ஏறி குண்டுகள் வீசியும் அன்றாடம் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது சிங்கள பவுத்த பேரினவாத இராணுவமும் அதற்குத் துணைநின்ற இந்திய வல்லாதிக்கமும். உலகநாடுகளால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், நச்சுவாயுக் குண்டுகளைப் பயன்படுத்திக் கொடூரமான முறையில் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது சிங்களப் பவுத்த பேரினவாத இராணுவம். சர்வதேச போர்விதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டுத் தமிழர்களைக் கொன்று குவிப்பதிலேயே குறியாய் இருந்திருக்கிறது சிங்கள இராணுவம். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டுவந்த இந்தப் போர் பயங்கரவாதம் ஒரு கோர வடிவத்தை வெளிக்காட்டியிருக்கிறது. சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்தால் ஏற்கெனவே தொடுக்கப்பட்டு வந்த போரினால் பல இலட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக உலகெங்கும் பல நாடுகளுக்குத் துரத்தப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் பலகோடிக் கணக்கான உடைமைகள் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் சூறையாடப்பட்டுவிட்டன. தமிழர்கள் உணவுக்காகவும் வாழ்விடத்துக்காகவும் ஆடுமாடுகளைப் போல அலைகிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்கள் மீது கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இறுதிக்கட்டப் போரின்போது சிங்கள பவுத்தபேரினவாத இராணுவத்தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகப் போராளிகளுடன் அய்க்கியப்பட்டுக் கொண்டிருந்த மக்கள்மீது ஈவிரக்கமின்றி கொத்துக் குண்டுகளை வீசி கூட்டங்கூட்டமாக தமிழர்களைக் கொன்றொழித்தது இராணுவம். எங்கும் பிணக்குவியல் இரத்த வெள்ளம், மரண ஓலம். உணவில்லை, மருந்தில்லை, காயம்பட்ட உயிர்களைக் காப்பாற்ற எந்தவழியும் இல்லை. சிங்கள பவுத்த பேரினவாதம் தொடுத்த தமிழர்களுக்கு எதிரான போர் நாளுக்குநாள் கொடூரமாக நடந்தேறியது. தங்களின் தாயக விடுதலைக்காகவும் வாழ்வுரிமைக்காவும் போராடிய ஈழத்தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.பல்லாயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் இராணுவ பயங்கராவாதத் தாக்குதல்களால் உடல் உறுப்புகள் இழந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ்மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களுக்காகப் போராடிய பல்லாயிரக்கணக்கான போராளிகள் சித்திரவதைக் கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இராணுவ பயங்கரவாதத்தால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் கிடையாது. எஞ்சியுள்ள மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம், நீர், மருந்து என எந்த வித அடிப்படை வசதியும் சிடையாது. தொற்று நோய்களாலும், போதிய உணவு, மருந்து பற்றாக்குறைகளாலும் தமிழ்க் குழந்தைகளின் இறப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காலங்காலமாகத் தாங்கள் பூர்விக மண்ணில் வாழ்ந்த ஈழத்தமிழினம் - தங்களின் விடுதலைக்காகப் போராடிய ஈழத்தமிழினம் சொந்த மண்ணிலேயே அகதியாக, அநாதையாக அடிமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. போராடிய போராளிகளையும் அவர்களுக்குத் துணைநின்ற மக்களையும் கொத்துக் கொத்தாய்க் கொன்று குவித்த இந்தப் போரை சிங்கள பவுத்த இராணுவம் மட்டும் நிகழ்த்தவில்லை. சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்துடன் இந்திய வல்லாதிக்க இராணுவத்தின் கூட்டும் மிக முக்கியமாக அமைந்திருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், இந்திய வல்லாதிக்கம் தான் தமிழின அழித்தொழிப்புப் போரை நடத்தியிருக்கிறது. அதனால்தான் சிங்கள பவுத்த பேரினவாத பாசிச வெறிபிடித்த இராசபக்சே அரசு இந்தியாவுக்காகத்தான் இந்தப் போரை நடத்தினோம். இந்தியாதான் இந்தப்போரை வழிநடத்தியது, இந்தப் போரில் இந்தியாவின் பங்கு மகத்தானது. இந்தியாவுக்கு நன்றி என இந்திய விரிவாதிக்க நலனின் விசுவாசத்தைக் கொக்கரித்துச் சொன்னது.

சிங்கள பவுத்த பேரினவாதமும் இந்திய வரிவாதிக்கமும் மட்டுமே ஈழத்தமிழின அழித்தொழிப்பில் ஈடுபடவில்லை. இவற்றோடு உலக ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளும் கூட ஈழத்தமிழின அழித்தொழிப்புக்கும் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் துணைபோயிருக்கின்றன. இன்னும் துணைபோய்க்கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் இந்தியாதான். அதாவது, இந்திய அரசு தமிழீழ விடுதலையை எதிர்க்கிறது. சிங்கள பவுத்த பேரினவாத அரசின் உறவுக்காகவும் - இந்தியாவின் விரிவாதிக்க நலனுக்காவும் சிங்கள பவுத்த பேரினவாதத்திற்குத் தமிழினத்தைப் பலியிடுவது எனத் தீர்மானித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தியா. உலக ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவும் தேசிய இனங்களின் விடுதலைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் தமிழீழ தேசிய இன விடுதலையை எதிர்க்கின்றது. இதனால், உலகின் மற்ற நாடுகளில் இந்தியாவின் வல்லாதிக்கத்தை மீறி - இந்தியாவின் நிலைப்பாட்டை மீறி தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கவோ இராணுவ பயங்கரவாதத்தால் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிராகவோ தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவும் அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கவும் தயங்குகின்றன. தமிழீழ மக்களின் தாயக உரிமைக்கான நியாயமான போராட்டம் குறித்து வாய்திறக்க மறுக்கின்றன.

இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் சிங்கள பவுத்த பேரினவாத அரசின் நட்புக்காவும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் சிங்கள பவுத்த பேரினவாத அரசுக்கு உலக நாடுகள் பலவும் ஆயுதங்களையும், நிதியுதவியும் வழங்கியுள்ளன. உலக நாடுகளின் இம்முனைப்புக்குப் போட்டியாக இந்திய அரசும் சிங்கள பவுத்த பேரினவாத அரசுக்கு ஆயுதங்களை வழங்கி தமிழின அழிப்புப்போரை நடத்துவதற்கு எல்லாவகை உதவிகளையும் செய்திருக்கிறது. இந்தியாவின் இத்தகைய நிலைப்பாட்டினால்தான் ஐ.நா. சபையே ஏற்றுக் கொண்டிருக்கும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்கு உட்பட்ட ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க உலக நாடுகள் மறுக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் போரில் இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், சிங்கள பவுத்த பேரினவாத இராணுவ அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சில நாடுகள் பெயரளவிலான தீர்மானத்தைக் கொண்டு வந்த போதுகூட சிங்கள பவுத்த பேரினவாத அரசின் பக்கமே நின்ற இந்திய அரசின் தலையீட்டால் உலக நாடுகள் தமிழின அழித்தொழிப்பு குறித்துப் பெயரளவுக்குப் பேசுவதைக் கூட நிறுத்திக் கொண்டன. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை மனித குலத்தின் அறம்சார் கொள்கை. ஈழத் தமிழர் பிரச்சினையில் உலக நாடுகள் இந்த அறம் சார் கொள்கைகளை ஆதரிக்கவும் இல்லை, பொருட்படுத்தவுமில்லை. இதற்கெல்லாம் காரணம்கூட இந்தியாதான்.

ஈழத்தில் நடைபெற்று வந்த தேசிய ,இன விடுதலைப் போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்டது களத்தில் நின்று போராடிய போராளிகள் இயக்கத்தின் பெரும்பகுதியை அழித்து ஒழித்தது. போராளிகளையும், மக்களையும் கொத்துக் கொத்தாய்க் கொன்றொழித்தது. தமிழீழத்திற்காகப் போராடிய ஈழத்தமிழர்களைச் சொல்லெணாத் துயரங்களுக்கும் இழப்புகளுக்கும் உள்ளாக்கியது என எல்லாவற்றையும் செய்து முடித்தது. சிங்கள பவுத்த பேரினவாத - இந்திய வல்லாதிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் அரசுகள்தான்.

தமிழீழம் தனது சொந்த உரிமைக்காகப் போராடுவதை ஆதரிக்க நாடுகள் இல்லை. தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த நாடுகள் இல்லை. அதைக் கண்டிக்கவும் நாடுகள் இல்லை. சிங்கள பவுத்த பேரினவாத - இந்திய வவ்லாதிக்க - ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் அரச பயங்கரவாதத்தால் ஒரு மனித பேரவலம் தமிழீழத்தில் நிறைவேறியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் கடுமையான பாதிப்புகளையும் இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்தித்திருக்கிறது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் -அப்போராட்டத்தில் களம்நின்ற போராளிகள் மற்றும் மக்கள் குறித்தும் - தமிழீழ விடுதலைப் போராட்டப் பின்னடைவுகள் குறித்தும், பேசவும் எழுதவும் கூடிய மனித உரிமை எனக் கூறிகொள்ளும் அறிவுஜீவிகள், இடதுசாரி வேடங்கொண்டிருக்கும் அறிவுஜீகள், முதலாளித்துவ அறிவுஜீவிகள் புலம்பெயர் ஈழத்து அறிவுஜீவிகள் என அறிவுஜீவிகள் வட்டமாய்க் கூடிச் சேர்ந்தியங்கும் அறிவுஜீவிகள் சிலரின் அண்மைக்கால எழுத்துக்களும் பேச்சுக்களும் வன்மங்களைச் சுமந்தபடி வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டம் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதற்கும், தமிழர்கள் கொடூரமாய்க் கொல்லப்பட்டதற்கும், ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்ததற்குமான எல்லாவற்றுக்கும் தமிழீழம் என்ற கோரிக்கையும், தமிழீழத்திற்காகப் போராடிய போராளிகளும் தான் காரணம் என்பது போன்ற அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர் பலர். களத்தில் நின்று கடைசிவரை போராடிய போராளிகள் இயக்கத்தின் மீது விமர்சனம் என்ற பெயரில் கொச்சைப்படுத்தி சேற்றை வாரி இறைப்பதும், அப்போராளிகள் ஜனநாயக மற்றவர்கள், சகோதரப் படுகொலைக் காரர்கள், அதிகார வெறியர்கள், இரணுவவாதிகள், பாசிஸ்டுகள்,

இரக்கமற்றவர்கள், சாதியம் காத்தவர்கள், முஸ்லீம் பகையாளிகள், அரசியலற்றவர்கள், உலகச்சூழல் புரியாதவர்கள், மக்களைக் கொடூரமாகக் கொன்றவர்கள், மக்களைப் பிணையக் கைதிகளாக வைத்திருந்தவர்கள் கடைசிக்கட்டப்போரில் மக்களைச் சுட்டுக் கொன்றவர்கள்........... என நீளும். போராளிகள் மிதான குற்றச் சாட்டுகள் போராளிகள் இயக்கத்தின் மீது விமர்சனப்பூர்வமாக முன்வைத்தவையல்ல. இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் நேர்மையற்ற முறையில் அமைந்த அவதூறுகளும் வன்மங்களுமே ஆகும்.

ஈழத்தில் நடந்துள்ள மனிதப் பேரவலத்திற்கெல்லாம் போராளிகள்தான் காரணம்; போராளிகள் முன்னெடுத்த தமிழீழம் காரணம். தமிழீழம் இனி சாத்தியமில்லை. தேசிய இன விடுதலைப் போராட்டம் இனி சாத்தியமில்லை. ஆயுதவழியிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தினால்தான் இம்மனிதப் பேரழிவு இனி ஒருபோதும் ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் கதியும் - அதற்குத்துணை நின்ற மக்களின் கதியும் அதோ கதிதான். தமிழீழம் என்ற கோரிக்கையோ போராட்டமோ தேசிய இன சுயநிர்ணய உரிமை என்ற முழக்கமோ இனி எழவே எழக் கூடாது. கடந்த அரை நூற்றாண்டாக நடந்து வந்த தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டம் தோல்வியிலேயே முடிந்துள்ளது; ஆகவே, தமிழீழ விடுதலைப் போராட்டம் சாத்தியமில்லை; தேவையற்றது; உலகின் மற்ற தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோல்வியே ஒரு பாடம்... என்றெல்லாம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அவதூறு பரப்பும். அறிவுஜீவிகள் இவர்களைப் போன்றவர்கள் ஒட்டுமொத்த சாராம்சத்தில் சொல்ல வருவது என்னவென்றால் ‘தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற கோரிக்கையே தவறானது. தமிழீழ விடுதலைப் போராளிகள் தீவிரவாதிகள். அவ்வியக்கம் போராளிகளின் தீவிரவாத இயக்கம், தமிழீழ விடுதலைப் போராட்டம் இனி சாத்தியமில்லை. ஆயுதப் போராட்டம் தவறானது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் - இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டுத்தான் தமிழர்கள் இருக்க வேண்டும். என்பதைத்தான் இவ்வறிவுஜீவிகள் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். இதையேதான் சிங்கள பவுத்த பேரினவாத அரசும், இந்திய வல்லாதிக்க அரசும் முதலாளித்துவ நாடுகளும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இவ்விடத்தில், சிங்கள பவுத்த பேரினவாத - இந்திய வல்லாதிக்க முதலாளித்துவக் கொள்கையோடு கைகோர்த்துக் கொள்கிறார்கள் அவ்வறிவுஜீகள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விமர்சிக்கின்ற பேரில் அவதூறுகளைப் பரப்பிவரும் ,இத்தகைய அறிவுஜீவிகள் இந்நிலைப்பாடானது. சிங்கள பவுத்த பேரினவாத - இந்திய வல்லாதிக்கச் சார்பான நிலைப்பாடாகவே அமைந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விமர்சிக்கும் இவ்வறிவுஜீவிகளின் பேச்சிலும் எழுத்திலும் நேர்மையில்லை. ஏனெனில் போராளிகள் இயக்கத்தையும், அதன் நடவடிக்கைகளையும், அதன் கோரிக்கைகளையும் விமர்சிக்கும் இவர்கள் ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்த சிங்கள பவுத்த பேரினவாத அரசையோ அல்லது உற்றதுணையாய் சக பங்காளியாய் போரில் ஈடுபட்ட இந்திய வல்லாதிக்க அரசையோ அல்லது தமிழர்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உலக நாடுகளைப் பற்றியோ விமர்சிப்பதில்லை. தமிழினத்திற்கு எதிரான அவற்றின் கொடூர நடவடிக்கைகளை எதிர்க்கவுமில்லை, எதிர்ப்பதுமில்லை மாறாக, தமிழீழ விடுதலைப் போராளி இயக்கத்தையும் அதன் நடவடிக்கையையும் மாறி மாறிக் குற்றம் சாட்டுவதும், அவதூறுகளைப் பரப்புவதுமாகத்தான் இவ்வறிவுஜீவிகள் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக - இந்திய -உலக அரசியல் குறித்து முரண்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் கொண்டவர்கள் கூட தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதிலும் அவதூறுகளைப் பரப்பிவிடுவதிலும், விடுதலை வேட்கையை வற்றிப்போகச் செய்வதிலும் தேசிய இன விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு நீர்த்துப் போகச் செய்வதிலும் ஒன்றுபட்டு நிற்கின்றார்கள். இம்மாதிரியான அவதூறு சக்திகள் தெரிந்தும் தெரியாமலும் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கு எதிராக நிற்கின்றன; சிங்கள பவுத்த பேரினவாத இந்திய வல்லாதிக்கத்தின் கருத்துக்களையே பிரச்சாரம் செய்து வருகின்றன. எனினும் பொய்களும் அவதூறுகளும் கொச்சைப்படுத்தல்களும் போராட்டவரலாற்றின் பக்கங்களில் உண்மைகளாக ஆகிவிடுவதில்லை. போராட்டகால உண்மைகள் வெளிவரும்போது அவதூறுகள் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய அவதூறு வன்மங்கள் அம்பலப்பட்டுபோகும். தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடக்கும்போதுதான் முறியடிக்கப்படும். தமிழீழ விடுதலைப் போராட்டமும் முடிந்து விட்ட ஒன்றல்ல, அது தொடர்ந்து நடக்கத்தான் செய்யும். ஏனெனில் தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது தமிழர்களின் சொந்த இறையாண்மைக்கான போராட்டம். தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் உரிமைக்கான போராட்டம். மனிதகுல அறப் பண்புகளை காக்கின்ற போராட்டம். அரை நூற்றாண்டுகாலம் போராடியவர்கள் இன்னும் போராடுவார்கள் மனிதர்கள் விடுதலைக்குரியவர்கள்; விடுதலைக்காகப் போராடும் குணமுடையவர்கள் தமிழர்கள், தமிழர்கள் விடுதலைக்காகப் போராடும் குணமுடையவர்கள் மட்டுமல்ல, அரைநூற்றாண்டு அனுபவமும் உடையவர்கள், விழுந்தவர்கள், எழுவார்கள்; விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்தவர்கள். அவர்களுக்குத் தோள் கொடுப்பதும் துணை நிற்பதும் நம் அனைவரின் கடமை மட்டுமல்ல, வரலாற்றுத் தேவையும்கூட.

‘அவதூறுகளை முறியடிப்போம்; தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும்’ என்ற இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த அவதூறுகளை மறுத்தும் எதிர்த்தும் வெளிவந்தவை. இக்கட்டுரைகள் வெகுமக்கள் தளத்திற்குப் போய்ச் சேரவேண்டும் என்பதாலும், தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த அவதூறுகளுக்கான மறுப்புகளை ஆற்ற வேண்டியதும் இன்றைய காலகட்டத் தேவை என்பதாலும் இவ்வாறான கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் அதனதன் அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. இவை ஒரே மாதிரியான ஒரே பார்வையில் அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவை அல்ல. ஆயினும் இதனுள் உள்ள எல்லாக் கட்டுரைகளும் தமிழீழ விடுதலைப் போராட்ட அவதூறுகளை மறுக்கக்கூடிய வகையிலேயும், அவதூறு சக்திகளின் கருத்தியல் அரசியல் நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தக்கூடிய வகையிலேயும் இருக்கின்றது. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளோ அல்லது இத்தொகுப்பு உருவாக்கமோ தனி மனிதர்களை விமர்சிக்கும் அல்லது அம்பலப்படுத்தும் நோக்கம் கொண்டவையல்ல. தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த அவதூறுகளுக்கான மறுப்புகள் என்ற வகையிலும், அவதூறு சக்திகளின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தும் வகையிலும்தான் இந்நூல் கொண்டுவரப்படுகிறது. அரசியல் ரீதியிலான நேர்மையான உரையாடல்களை மேலும் மேலும் தொடர்வதற்கு இந்நூல் உதவும். இந்நூல் வெளிவர உதவிய கட்டுரையாளர்கள் அனைவருக்கும் எமது நன்றி. இந்நூலைக் கொண்டுவரும் பாலை வெளியீட்டகத்திற்கு நன்றி. இந்நூல் உருவாக்க முயற்சிகளில் பங்கெடுத்து உதவிய தோழர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தோழமை நிறைந்த நன்றி.

-     மகாராசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

(‘அவதூறைகளை முறியடிப்போம்’ நூலுக்கான முன்னுரையிலிருந்து...)

வெளியீடு: பாலை வெளியீடு,

2, முதல் தளம், மிதேசு வளாகம்,

4வது நிறுத்தம், திருநகர், மதுரை – 6.

பேசி: 9842265884 & 9487352972

Pin It