டிசம்பர் 23இல் திருச்சியில் 160க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியாய் கருஞ்சட்டையுடன் திரண்டு, “தமிழ்நாட்டில் பார்ப்பனிய மதவெறி சக்திகளுக்கு இடமில்லை; தமிழ்நாட்டின் கனிமவள சுரண்டலைத் தடுத்து நிறுத்துவோம்” என்ற எச்சரிக்கை செய்திருக்கிறது.

பெரியார் இறப்புக்குப் பிறகு பிறந்த பல்லாயிரக்கணக்கான  இளைஞர்களின் போர்ப் பாசறை என்றே கூற வேண்டும். பெரியார் தனது மரண சாசனமாக விட்டுச் சென்ற தமிழின விடுதலையை சூளுரையாக ஏற்றிருக்கிறது இந்தப் பேரணி.

விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஊடகங்களைத் தவிர, ஏனையவை கட்டுப்பாடாக இந்தப் பேரணியின் செய்திகளையே இருட்டடிப்பு செய்து விட்டன. பெரியார் பேசிய திராவிடம், ‘தமிழரின் இழிவு ஒழிப்பு - தன்னுரிமைக்கான குறியீட்டுச் சொல்’ என்ற உண்மையைத் திரித்து பெரியாரை தமிழருக்கு எதிராக நிறுத்த முயன்ற குழுக்களின் ‘பிரச்சார மாயை’ வெற்றி பெறாது என்று காட்டியிருக்கிறது பேரணியில் திரண்ட இளைஞர்களின் கூட்டம்.

ஜாதி ஒழிப்பு; ஜாதியின் உற்பத்தி சக்திகளான இந்து மதம்; பார்ப்பனியம்; அதை மூளையில் சுமந்து நிற்கும் ஜாதி ஆதிக்க வெறி; தமிழகத்தின் வளங்களையும் உரிமைகளையும் பறிக்கும் இந்திய பார்ப்பன-பனியா அதிகார மய்யங்களின் சுரண்டல்களை எடுத்துச் சொல்லி மக்களை சமூக - அரசியல் விடுதலைக்கு தயார் செய்யும் கடமை பேரணியில் பங்கேற்ற இயக்கங்களுக்கு உண்டு. இதை உணர்ந்த இயக்கங்கள்தான் திருச்சியில் சங்கமித்தன. தேர்தல் அரசியல் களத்தில் நிற்கும் கட்சிகளுக்கான வரம்புகளில் இந்த திட்டங்கள் இடம் பெறும் வாய்ப்புகளே இல்லை.

உச்சநீதிமன்றமே சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை வழங்கினாலும் அதை செயல்படுத்த ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இடதுசாரிகளால் முடியாமல் திணறிப் போய் நிற்பது எதைக் காட்டுகிறது? மக்களை சமூக மாற்றத்துக்குத் தயார் செய்யாமல் சமத்துவத்தை நோக்கிய எந்த சட்டத்தையும் முன்னெடுக்க முடியாது என்பதைத் தானே?

பெண்கள் சமத்துவத்துக்கு பெண்களையே எதிரானவர்களாகக் கொண்டு வந்து நிறுத்துவதில்தான் பார்ப்பனியத்தின் வெற்றி அடங்கி நிற்கிறது. ஜாதி இழிவுக்கு உள்ளான மக்களே ஜாதியை உயர்த்திப் பிடிக்கும் மனநிலைக்கு தயார்படுத்தி வைத்திருப்பதும் இதே பார்ப்பனியம் தான். பாதிக்கப்பட்ட மக்களே எதிரிகளை அடையாளம் காண முடியாத ஒரு சமூகத்தில் நாம் எப்படி எதிரிகளைத் தனிமைப்படுத்தப் போகிறோம். ஒடுக்கப்பட்ட உரிமையிழந்த மக்களை எப்படி ஒன்று திரட்டப் போகிறோம்? இந்த சவாலை எதிர்கொண்டு அதற்கேற்ற செயல் திட்டங்களை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் பேரணியில் பங்கேற்ற அனைத்து இயக்கங்களுக்கும் இருக்கிறது.

பேரணியின் திரட்சியும் அது உருவாக்கிய எழுச்சியும் கொள்கை திசை வழியில் முன்னெடுக்கப்படும் போதுதான் அதை மதவெறிக்கும் ஒற்றை இந்துத்துவ - ஒற்றை இந்தியாவுக்கும் எதிரான விடுதலைப் பாதைக்கு சாத்தியமாக்க முடியும்.

குறிப்பு: இந்த இதழில் 1946 மதுரை கருஞ்சட்டைப் படை மாநாடு - பந்தல் எரிப்பு - பெரியார் அறிக்கை உள்ளிட்ட வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

Pin It