வலது கையினால் கலப்பையை மண்ணில் அழுத்தி, இடது கையில் கம்பை ஓங்கியவாறு அவன் உழவை ஆரம்பித்தான்.
''........ஐ....ஐ........''
அவன் காளைகளை ஓட்டினான்.
காளை மாடுகள் இவ்வாறு நினைத்தன.
''யார் இந்தப் புதியவன்? எப்படித்தான் இழுத்தாலும் முன்னால் நகர மாட்டேனென்கிறதே? கலப்பையை எப்படிப் பிடிப்பது என்பதுகூட இவனுக்குத் தெரிய மாட்டேனென்கிறதே...''
மாடுகளை அவன் மீண்டும் ஓட்டினான்.
''ஐ....ஐ...நட மாடே.....''
மாடுகள் இப்படி நினைத்தன.
''யார் இவன்? மாடு ஓட்டக்கூட தெரியாதவனாக இருக்கிறான். இவனுக்கு முன்னால் இருந்தவர்கள் எல்லோரும் ஹை......ஹை.... என்றல்லவா ஓட்டினார்கள்?
எப்படியோ சமாளித்துக்கொண்டு மாடுகள் முன்னோக்கி நகர்ந்தன.
திரும்ப வேண்டிய இடம் வந்தது. அவை இடது பக்கமாகத் திரும்பத் தொடங்கின. அவன் கத்தினான்.
''வலப்பக்கம்.. .வலப்பக்கம்...''
மாடுகளுக்கு வலப்பக்கம் திரும்பிப் பழக்கமில்லை.
''என்ன இது? ஒரே புதுமையாக இருக்கிறது. ஒன்றுமே தெரியாதவனாகவல்லவா இவன் இருக்கிறான்... இடம், வலம் கூட தெரியாதவனாக இருப்பானா?''
மாடுகள் இடதுபக்கமாகவே திரும்பின. அவன் அப்புறமும் கத்தினான்.
''ஐ....ஐ....வலப்பக்கம்...மாடே....வலப்பக்கம்....''
மாடுகள் நினைத்தன.
''உழவு கற்றுக் கொள்கிறான் போலிருக்கிறது...''
மாடுகள் இடப்பக்கமாகவே திரும்பி நடந்தன.
மாடுகளின் வாலைப் பிடித்திழுத்து இரண்டு சாத்து சாத்தினான் அவன். மாடுகளுக்கோ தாங்க முடியாத வேதனை.
அவன் கத்தினான்.
''பீடை.... நின்னா போயிட்டே? சொன்னதைக் கேட்கலாமா வேண்டாமான்னு யோசனை பண்றாப்பலேயிருக்கு....மூதேவிகளே எத்தனை தடவை சொன்னாலும் இடப்பக்கமாகவே திரும்புறீங்களே...இந்த அடங்காப் பிடாரிகளெ எவனோ இப்படிப் பழக்கி வெச்சிருக்கான்... எவன்டா இதுகளெப் பழக்கினவன்...?''
கம்பால் ஓங்கி ஓங்கி அடித்தான் அவன்.
''.....ம்மா......ம்மா.....''
வேதனை தாங்காமல் மாடுகள் துடித்தன.
''ஏன் இப்படி நம்மைப் போட்டு அடிக்கிறான்? நமக்கெல்லாம் உயிரில்லையா என்ன?''
அவன் அப்புறமும் அடிக்கத் தொடங்கினான். மாடுகள் வாய்விட்டுக் கதறின.
''....அம்மா....''
அவன் சொன்னான்.
''இதுக்கெல்லாம் கொறச்சலில்லே. சொல்றத மட்டும் பீடைகள் கேட்டிகிறதில்லே...''
அவன் மாடுகளுடைய வாலைப் பிடித்து முறுக்கினான். அதற்கப்புறமாகவும் மாடுகள் இடதுபக்கமாகவே திரும்பி நடந்தன. அவனுக்கு கோபம் தலைக்கேறியது.
கண்கள் சிவந்தன. மூக்கு விடைத்தது. அடக்கமுடியாத கோபத்துடன் கம்பை ஓங்கினான். ''....ம்மா...ம்மா..'' என்ற கதறலைக்கூட பொருட்படுத்தவில்லை அவன். மாடுகள் சேற்றில் வீழ்ந்து அசைவற்றுக் கிடந்தன.
''இந்தக் காட்டுமிராண்டிக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ?''
மாடுகள் படுத்துக் கிடப்பதைப் பார்த்ததும் அவன் அட்டகாசமாக சிரித்தான்.
''ஓகோ....அப்படியா சேதி.... சொன்னதைக் கேட்கப் போறதில்லே இல்லே.... ஒங்களெவிட திமிரு புடிச்ச எத்தனையோ பேரை வழிக்குக் கொண்டு வந்தவனாக்கும். அடிச்சுக் கொன்னுப்புடுவேன்..''
அவனுடைய வீரவசனங்களைக் கேட்பதற்காக மாடுகள் சேற்றிலிருந்து தலையைத் தூக்கின. அவைகளுடைய தலையசைப்பை 'இல்லை' யென்பதாக புரிந்துகொண்டவன் மீண்டும் அடிக்கத் தொடங்கினான். மாடுகள் அலறித் துடித்தன. அவற்றின் துடிதுடிப்பில் நுகத்தடி அவிழ்ந்து கொண்டது.
நுகத்தடியின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற மாடுகள் வேதனையோடு எழுந்து நின்றன. கோபத்துடன் அவனை முட்ட வந்தன. வேறுவழியில்லாமல் அவன் திரும்பி ஓடத் தொடங்கினான். கையிலிருந்த கம்பு எங்கோ தெறித்து வீழ்ந்திருந்தது. சற்றுத் தொலைவிலிருந்த ஒரு வரப்பின்மீது ஏறி நின்று அவன் திரும்பிப் பார்த்தான். மாடுகள் சீற்றத்துடன் பாய்ந்து வந்து கொண்டிருந்தன. பயத்தால் அவனுக்கு நடுக்கம் கண்டுவிட்டது. தலைதெறிக்க ஓடத் தொடங்கினான்.
அவன் வீட்டிற்குள் ஓடினான். வீட்டிற்குள்ளிருந்து துப்பாக்கியுடன் வெளியில் வந்தான். காம்பவுண்டுக்குள் நின்றுகொண்டு மாடுகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினான். மாடுகளின் உடலில் இருந்து இரத்தம் வழிந்தோடியது. மாடுகள் துடிதுடித்துச் செத்தன. அதைப்பார்த்து அவன் அட்டகாசமாகச் சிரித்தான்.
அவனுடைய சிரிப்பொலி நாலா திசைகளிலும் எதிரொலித்தது.
சில நிமிடங்களுக்குள் ஆயிரக்கணக்கான மாடுகள் அவனுடைய வீட்டை நோக்கிப் பாய்ந்து வந்தன. அவைகளின் சீற்றத்திற்கு எதிராக அவன் துப்பாக்கியின் குதிரையைத் தட்டினான்.
ஆனால் அவனுடைய துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்து போய்விட்டிருந்தன. துணையில்லாமல் அவன் விழித்து நின்றான். தனக்கு நேராக பாய்ந்து வரும் மாடுகளைக் கண்டு அலறினான்.
''கடவுளே.... என்னைக் காப்பாற்று.......என்னைக் காப்பாற்று...''
நன்றி ''கத'' ''அன்னம் விடு தூது'' இதழ்கள்
- மு.குருமூர்த்தி (
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
மாட்டுப்பெண்
- விவரங்கள்
- எம்.குருமூர்த்தி
- பிரிவு: சிறுகதைகள்