jalikaaty 450அரபு வசந்தம் என்றெல்லாம் உலகில் முகநூல் வழியாக இளைஞர்கள் கூடிப் போராடிய பல்வேறு புரட்சிகளைப் பற்றிச் சொல்வார்கள். இங்கேயும் அப்படி நடக்குமா? என ஏங்கியிருந்தவர்கள் ஏராளம். இங்கே நடக்கவே நடக்காது என எதிர்மறையாகச் சத்தியம் செய்தவர்கள் ஏராளம். பொதுவாகவே 90களுக்குப் பிந்தைய தலைமுறைக்கு அரசியல் ஆர்வமோ போராடும் உத்வேகமோ இருப்பதில்லை என ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை அவர்கள் எதற்காகவும் இது மாதிரி அலைகடலென ஒன்று கூடியதில்லை.

தமிழ்நாட்டு இளைஞர்கள் மதத்தால், இனத்தால், வாழ்க்கை முறைகளால், சாதியால் பிரிந்து கிடந்தார்கள் என்பதுதான் நிஜம். அவர்களை ஒன்றிணைக்கும் ஒரு புள்ளிக்காகக் காத்திருந்தார்களோ என இப்போது எண்ணத் தோன்றுகிறது. ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்ல வேண்டுமெனில், பெசண்ட் நகர் கடற்கரையில் கூடும் வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மெரினா பக்கம் தலை வைத்துக்கூடப் பார்க்க மாட்டர்கள் மெரீனாவை அவர்கள் வெறுப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன்.

சென்னை கடற்கரையிலேயே இப்படிப் பிரிவுகள் இருப்பது போல அலங்காநல்லூரிலும்கூட இருக்கிறது. அந்த ஊருக்குப் பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் இளைஞர்கள்கூட அலங்காநல்லூருக்கு இதுவரை போயிருக்க மாட்டார்கள். ஜல்லிக்கட்டை பார்த்தேயிராத தலைமுறை சென்னை போன்ற நகரங்களில் மட்டுமல்ல அலங்காநல்லூருக்கு அருகில் இருக்கிற ஊர்களில்கூட இருக்கின்றது. ஆனால் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசலைத் தொட்டாவது பார்த்து வேண்டுமென்கிற உணர்வோடு இளைஞர்கள் படை அலங்காநல்லூரிலும் மெரீனாவிலும் தற்போது குவிந்தது எப்படி? அதுதான் இந்த தை வசந்தம் கொடுத்த நல்ல மகசூல்.

ஆஸ்திரேலியவில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர், வாடிவாசலைத் தொட்டுப் பார்க்க, புத்தம் புதிய சந்தை மதிப்பு மிக்க காரில் வந்து இறங்குகிறார். ஓட்டை உடைசலான தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார் இன்னொரு இளைஞர். பொருளாதார ரீதியிலும் சமூகக் கட்டுமான ரீதியிலும் நேரெதிரான வாழ்க்கைச் சூழலில் இருக்கும் இளைஞர்கள் சந்திக்கும் புள்ளியாக இந்தப் போராட்டக் களங்கள் மாறின. அலங்காநல்லூரும் மெரீனாவும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கான குறியீடுகள். இந்த இரண்டு ஊர் மட்டுமல்ல் தமிழகத்தை சாலைப் பயணமாகக் கடந்த போது எல்லா ஊர்களிலும் இதே மாதிரியாகவே காட்சியைப் பார்க்க முடிந்தது. பெண்கள் குழந்தைளோடு களத்தில் நின்றார்கள். பாலின சமத்துவத்தோடு எல்லா வயது பெண்களும் களத்தில் இருந்தார்கள்.

வழக்கமாக பொதுக் காரியங்களில் தலையை நுழைக்கும் இளைஞர்களைஇ வீட்டில் உள்ள பெண்கள்தான் எதற்கு வேண்டாத வேலை என்று கண்டிப்பார்கள். இப்போது அவர்களே முந்திக் கொண்டு களத்தில் இறங்கி விட்டனர். உண்மையைச் சொன்னால் வீட்டின் சும்மா ஒரு இளைஞனாலும் படுத்திருத்திருக்க முடியாது. வீட்டில் உள்ளவர்களே போராட்டத்திற்குப் போவெனச் சொல்லி விரட்டி விட்டிருப்பார்கள்.

பெண்கள் தாய்மார்கள் மத்தியில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இனம்புரியாத ஒரு வெறுப்பும் பதட்டமும் மண்டிக் கிடக்கிறது. கோபத்தை யார் மீதாவது காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களே தார்மீக மற்றும் நேரடி ஆதரவு கொடுத்து விட்ட பிறகு இனியும் களத்தில் இறங்காமல் இருந்தால் பின்னடைவு என்று இளைஞர்கள் எடுத்துக் கொண்டார்களோ, என்னவோ? ஒரே தடை, படிக்கிற கல்லூரிகளும் வேலை பார்க்கிற நிறுவனங்களும்தான். அவர்களும்கூட மறை முகமாகவும் நேரடியாகவும் ஆதரவு தந்துவிட்டனர்.

கடந்த காலங்களில் அவர்களும் பல்வேறு வகைகளில் ஒடுக்கப்பட்டிருத்தனர். போராட்டம் ஆதரவு என்று சொன்னாலே மிரட்டப்பட்டிருந்தனர். சமீபகாலமாக அவர்கள் அந்த அச்சத்தில் இருந்து மெல்ல விடுபட்டிருக்கின்றனர். அழுத்தப்பட்டுக் கிடந்தது வெளியே கிளம்புவது தானே இயற்கை? அதனடிப்படையில் அவர்களும் பச்சைக் கொடிக் காட்டிவிட்டனர்.

எல்லா தடையும் நீங்கின பிறகு இளைஞர்கள் என்ன செய்வார்கள்? களம் தெளிவாக இருக்கிறது. ஆரம்பத்தில் அரசே இந்தப் போராட்டத்தை ஊக்குவித்த மாதிரிதான் தெரிந்தது. தமிழக அரசிற்கு அதற்கான அரசியல் தேவையும் இருந்தது. அதனாலேயே ஆரம்பத்தில் சாமரம் வீசிக் கொண்டிருந்தது தமிழக அரசு. தமிழகம் முழுக்க முன்னாள் முதல்வரின் மரணம் குறித்த அதிருப்திகளும், அதற்கடுத்த அரசின் நடவடிக்கைகள் குறித்த அதிருப்திகளும் இருந்தன. ஜல்லிக்கட்டு என்பதன் வழியாக அத்தகைய அதிருப்திகளைச் சரிக்கட்டி விடலாம் என யோசித்த அரசின் நடவடிக்கைகளையும் தவறென்று சொல்ல முடியாது. எல்லா பக்கமும் கதவுகள் திறந்து கொண்டன. இளைஞர்களின் எழுச்சி என்னும் காற்று எல்லா பக்கங்களிலும் இருந்தும் புகுந்து வெளியேறியது.

பல வருடங்களாக தமிழ், தமிழர் நலன்களைப் பின்னுக்கு தள்ளிச் செயல்படும் போக்கால் கடுமையான விரக்தியில் இருந்தார்கள். மீத்தேன், விவசாயிகள் தற்கொலை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, மீனவர்கள் சாவு என தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக பல்வேறு அரசுகள் நடந்து கொண்ட விதத்தில் அடியாழத்து அதிருப்தியில் இருந்தார்கள். இனி அவர்களிடம் எதிர்பார்ப்பதில் பயனில்லை என்ற முடிவிற்கு வந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தங்களுக்கான சிறு பொறிக்காகக் காத்திருந்தார்கள். அலங்கநல்லூரில் தடியடி நடத்தி அந்த அக்னிக் குஞ்சை ஜல்லிக்கட்டு என்கிற உணர்வும் பூர்வமான ஒரு விஷயத்தில் பொதித்து வைத்தார்கள். வெந்து தணிந்து விட்டது காடு. அதுதான் மெரீனாவில் போர்க் குரலாக வெளிப்பட்டது. கையேந்தி பவனில் தவம் கிடந்தவர்களும் அங்கிருந்தார்கள். கே.எப்.சியே கதியென்று கிடந்தவர்களும் அங்கு இருந்தார்கள். சாதி, இன , மத உணர்வுகள் கடந்து தமிழர்கள் என்கிற ஒற்றைச் சொல்லை முழங்கிய படி களத்தில் இருந்தார்கள். கட்டுக் கோப்பான ராணுவம் போல களத்தில் இருந்தார்கள். ஒரு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை என தமிழ் நாடு காவல் துறை ஆரம்பத்தில் ஆச்சரியம் தெரிவித்தது.

கண்ணியமான இந்தப் போராட்டம் தான் மேலும் மேலும் ஆட்களை அதை நோக்கி ஈர்த்தது. இதன் உச்சகட்டமாக எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் தன்னுடய யுவபுரஸ்கார் விருதை மாணவர்களின் எழுச்சியை முன்னிட்டுத் திருப்பிக் கொடுத்தார். வணிகர் சங்கம் போன்ற அமைப்புகள் எல்லாம் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களத்தில் குதித்தனர். கூட்டம் கூடிய போதும் எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. இது போராட்டமல்ல. அறப் போராட்டமாக நடந்த கொண்டாட்டம் என்பதைத் தமிழகக் குடும்பங்கள் புரிந்து கொண்டன. கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டெல்லாம் பெண்கள் போராட்டக் களத்திற்கு வந்தார்கள். முதியவர்கள் கூட ஒரு ஒரமாய் அமைதியாய் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

சென்னையில் நிலைமை கட்டுக்குள் இருந்தது. ஆனால் வெளியூர்களில் இளைஞர்கள் ரயிலை மறித்தார்கள். பயணிகள் சிரமங்களை அனுபவித்தபடி பேருந்தில் ஏறிப் போனார்கள். ஆனாலும் பொறுத்துக் கொண்டார்கள் என்றுதான் படுகிறது. மிகப்பெரிய போராட்டத்தில் சில ஆர்வக் கோளாறுகளை தவிக்க முடியாதுதான்.

தமிழகமே இளைஞர்கள் ஆரம்பித்த இந்தப் போராட்டத்தின் பின்னால் அணிதிரண்டு விட்டது. அவர்கள் தங்களுக்கு எதிரானவற்றை ஒற்றை எதிரியாய் முன்னிறுத்திப் போராடத் துவங்கிவிட்டனர். ஜல்லிக்கட்டு அதற்கான துவக்கப் புள்ளி. இதற்குக் காட்டியது மாதிரி எல்லா விஷயங்களுக்கும் காட்டுவார்களா? எனக் கேள்விகள் பல முனைகளில் இருந்தும் வந்து விழுகின்றன. அணி திரள்வது என்பது ஒரே நாளில் நடந்து விடாது. அது சிறுகச் சிறுகச் சேரும் செல்வம் போன்றது. ஒரு பெரிய ஆழிப் பேரலை மாதிரி பிரம்மாண்டமான துவக்கம் அமைய வேண்டும். ஜல்லிக்கட்டு என்பது அப்படியான அக்னிக் குஞ்சாக அமைந்துவிட்டது. ஆயிரம் விமர்சனர்கள் இருந்தாலும் கடல் கடந்தாலும் இளைஞர்கள் பாரம்பரியத்தின் பின்னால்தான் அணி வகுத்திருக்கின்றனர்.

உலகின் பழமையான இனங்களில் சீனர்கள் எப்போதும் தங்களது பாரம்பரியத்தை விட்டுக் கொடுப்பதில்லை அதேபோல் தமிழகப் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு எதிரான தடையை எதிர்த்து பல்வேறு இயக்கங்கள் பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. ராஜசேகரன் சிவசேனாதிபதி போன்ற முன்னோடிகளிடமிருந்து தங்களுக்கான சக்தியை இந்த இளைஞர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இளைஞர்களின் ஒட்டுமொத்த ஆதரவு என்பது இதுவரை கிடைக்காமல் இருந்தது. தமிழ் இளைஞர்கள் பாரம்பரியத்திலிருந்து தடம் மாறுகிறார்களோ என்கிற ஜயம் இருந்தது. அந்த ஜயத்தைத் தவிடு பொடியாக்கி பாரம்பரியத்தின் சிவப்புக் கொம்புகளை தலையில் ஏந்தியிருந்தார்கள் தமிழக இளைஞர்கள். தங்களது வீட்டுப் பெண்களுக்கு அதை அணிவித்தார்கள். குழந்தைகளுக்கு அதை அணிவித்தார்கள். தோழியருக்கு தோழர்களுக்கு தோழமையோடு அதை அணிவித்தார்கள்.

ஒரு அடர்த்தியான அரசியல் போராட்டத்தை நடத்தினார்கள். பாட்டும் கும்மாளமுமாய் இப்படி ஒரு களத்தை இந்திய தேசம் பார்த்ததில்லை. உலகில் பல்வேறு இடங்களில் இப்படியான கொண்டாட்டமான போராட்ட வடிவங்களைக் கையாண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இதுதான் முதன்முறை என்பதிலிருந்தே இந்தப் போராட்டத்தின் அடர்த்தியைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தப் போராட்டத்தை ஏன் முறியடிக்க முடியவில்லை? ஏனெனில் அவர்கள் ஒற்றைத் தலைமையின் கீழ் இல்லை. உண்மைதான் தலைவர் என்று யாரும் இல்லாமல் ஒரு மிகப்பெரிய தலைமையை எதிர்த்த இந்தப் போராட்டம் வெற்றியில் முடிந்திருக்கிறது. கடைசி நாள் சம்பவங்களைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அது இந்தப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் எழுதிய க்ளைமேக்ஸ். இளைஞர்களின் போராட்டத்தைப் பொறுத்தவரை அது வெற்றி என உலகிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

அரசியலை ஒதுக்கியதன் வழியாக அவர்கள் வேறொரு விஷயத்தையும் மறைமுகமாகச் சொல்லி இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு மட்டுமில்லை. தமிழகத்தைப் பாதிக்கும் அத்தனை விஷயத்திற்காகவும் இனி அவர்கள் களத்தில் இறங்குவார்கள்.

தமிழ் இளைஞர்கள் பிற மாநில, பிற தேச இளைஞர்களுக்கு முன்மாதிரியான போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின் தலைவர் திருவாளர் ஜல்லிக்கட்டுக் காளைதான். காளைகளின் குணத்தை பெண்கள் உட்பட அத்தனை காளையர்களிடம் பார்க்க முடிந்தது. காளைகளின் குணமான மூர்க்கத்தை இது போல் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் சட்ட ரீதியிலான போராட்டங்களையும் இணையாக நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டை பொறுத்தவரை இதற்காக காலகாலமாகப் போராடிய முன்னோடிகளின் விரல் பிடித்து இனி சட்டப் போராட்டத்திலும் இறங்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. அவர்கள் முட்பாதைகளின் வழியே ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல போராட்டங்களை நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறனர். வெற்றி மமதையில் முன்னோடிகளை மறந்து விடக்கூடாது.

இந்தி எதிர்ப்பு போராட்டங்களை பார்க்காத ஒரு ஹைடெக் தலைமுறைக்குக் கிடைத்த அடையாளமும் கௌரவமும் இந்தப் போராட்டம். நோஞ்சான் தலைமுறை என இனியும் யாரும் இந்த ஹைடெக் தலைமுறையைக் கிண்டலடிக்க முடியாது. அவர்கள் தை வசந்தத்தின் புதல்வர்கள். இல்லையில்லை தை வசந்தத்தின் தூதுவர்கள்!

Pin It