இந்துமதத்தைப் பின்பற்றும் மக்கள் யாராக இருந்தாலும், அவர்களது பெயரைக் கேட்ட உடனேயே அவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில்தான் பெயர்கள் வைக்கப்பட்டு வந்தன. மனுசாஸ்திரம் அப்படித்தான் பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்துமதப் பண்பாடுகளுக்கு மாற்றாக, அறிவியல் பூர்வமான திராவிடர் பண்பாட்டை முன்னெடுத்த தோழர் பெரியார், 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில், பெயர் வைப்பதில் இருக்கும் இந்து தர்மத்தைத் தகர்த்தார்.

                அவரது சுயமரியாதை இயக்கத்தில் உள்ள தோழர்கள் இனிமேல் தங்களது பெயர்களுக்குப் பின்னால், அவர்களது ஜாதிப்பெயர்களைச் சேர்த்துக் கூறக்கூடாது, எழுதவும் கூடாது என்று பிரகடனம் செய்தார். அதன் விளைவாக, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் மாற்றாக, தமிழ்நாட்டில் ஜாதிச்சங்கம் நடத்துபவரின் பெயரில்கூட ஜாதிப்பெயர் நீக்கப் பட்டுள்ளதைப் பார்க்கலாம்.

                ஏற்கனவே சூட்டப்பட்ட பெயர்களில் இருந்த ஜாதியை அகற்றிய பெரியார், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதிலும் ஜாதி, மத, ஆணாதிக்கங்களைத் தகர்த்தார். ரஷ்யா, மாஸ்கோ, புரட்சி, பகுத்தறிவு, சமதர்மம், அசோகன், சித்தார்த்தன், கெளதமன் போன்ற பெயர்களை ஆண் - பெண் இருபாலினங்களுக்கும் சூட்டினார்.

                திராவிடர் இயக்கங்களின் தோழர்கள் பெரியாரின் பண்பாட்டுப் புரட்சியை இன்றும் தொடர்கின்றனர். அந்தத் தொடர்ச்சிகள் பற்றிய ஒரு அறிமுகம்தான் I am “Casteless”

                என்னுடைய பெயர் ஆ.பி.கேஸ்ட்லஸ். திண்டுக்கல்....... 5ஆம் வகுப்பு படிக்கிறேன். என்னுடைய வயது 10. அப்பா பெயர் ஆனந்தமுனிராஜன்.அம்மா பெயர் பிரியதர்ஷினி

casteless familyஉங்கள் பெயரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். யாருமே வைக்காத பெயரா இருக்கு எனக்கு. எனக்கு ஏன் இந்த மாதிரி பெயர் வச்சாங்கண்ணா...எங்க அப்பா பெரியார் வழியில வந்தவர், அதனால இந்தப் பெயர் வச்சு இருக்காங்க.

இந்தப் பெயரைப் பற்றி அப்பா, அம்மாகிட்ட கேட்டு இருக்கீங்களா?

எதுக்காக வைச்சாங்கண்ணு தெரியாத முன்னாடி கேட்டு இருக்கேன். அதற்கு அர்த்தம் “ஜாதியற்றவன்” அப்படின்னு சொன்னாங்க. ஜாதியை ஒழிச்சு மக்கள் எல்லாரும் ஒன்னா இருக்க மாதிரி இருக்கு அந்த பெயரோட அர்த்தம்.

கேஸ்ட்லெஸ்பெயரைக் கேட்டுட்டு உன்னோட நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் பேசும்போது இந்தப் பெயரைப்பற்றி என்ன சொல்லி இருக்காங்க? என்ன நினைக்கிறாங்க?

எங்க அத்தை யாரும் என்னைப் பெயர் சொல்லி கூப்பிடமாட்டாங்க. செல்லமா தம்பினு சொல்லித்தான் கூப்பிடுவாங்க. என்னோட வகுப்புல பசங்க, மற்ற நண்பர்கள் எல்லாம் என்னைப் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. மேம், பெயரோட அர்த்தம் தெரியாததால என்னைக் கூப்பிட்டு அர்த்தம் கேட்டுட்டு ‘குட்’னு சொன்னாங்க.

மு.ஆனந்தமுனிராஜன் - தோழர் கேஸ்ட்லெஸ்ஸின் அப்பா

திண்டுக்கல்ல வழக்கறிஞராகப் பணி புரிகிறேன். 2004-ல் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஜாதிமறுப்பு மற்றும் சுயமரியாதைத் திருமணம். சுயமரியாதைத் திருமணம்னு கூடச் சொல்லமுடியாது. பதிவு அலுவலகத்துக்கு முன்னாடி நண்பர்கள் முன்னால இரண்டு பேரும் மாலை மாற்றிக் கொண்டு, பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டு வந்துவிட்டோம் அவ்வளவுதான் எங்களுடைய திருமணமா இருந்தது. அதே மாதிரி எந்தவித ஜாதி, சடங்குகளும் எதுவும் பண்ணக் கூடாது அப்படிங்கறதுல ரொம்ப உறுதியா இருந்தோம். அதனால திருமணத்துல தவிர்த்தோம்.

2007-ல் என்னுடைய அப்பா காலமானார். ஓராண்டுக்கு முன்னால் எங்க அம்மா காலமானாங்க இரண்டு பேருக்குமே எந்தவிதமான சடங்குகளும் பண்ணலை. குறிப்பா ஜாதிஒழிப்புத் தளத்துல இருக்கணும் அப்படிங்கற அடிப்படையில திருமணத்திலும், இறப்புகளிலும் அந்த மாதிரியான சடங்குகளைத் தவிர்க்கிறது அப்படிங்கறதுல தெளிவா இருக்கோம்.

நான் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியர் அனிபா அவர்கள் மூலமாகப் பெரியாரைப்பற்றி அறிமுகம் கிடைத்தது. அவர் இப்ப தவறிட்டார். அதற்கு அப்புறம் திராவிடர் கழகத்துல இணைந்து அப்ப திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக செல்வராஜ் இருந்தாரு. அவரும் தவறிட்டார். அவருடைய வளர்ப்பு நாங்கெல்லாம். நான் காட்டாறு இதழ்ல இருக்கக் கூடிய தாமரைக்கண்ணன் எல்லாருமே அவருடைய வளர்ப்புதான்.

பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டுச் சட்டக் கல்லூரியில் முதலாண்டு சேரும்பொழுதே திராவிடர் மாணவர் கழகத்துல இணைந்து வேலை பார்க்கிறோம். வேலை பார்த்துவிட்டு இருக்கும் போதே அப்ப 69 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லாது அப்படீன்னு ஒரு தீர்ப்பு இங்க வெளியிடுறாங்க. அப்ப திராவிடர் கழகத்துல ஆசிரியர் வீரமணி அவர்கள் தலைமையில் அந்தத் தீர்ப்பு நகலை எரித்து ஒருமுறை சிறை சென்றோம்.

அப்புறம் 1997-ல் உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுடைய கொடும்பாவி எரிப்பு. அந்த நேரத்துல நீதிபதி களுடைய கொடும்பாவி எரிக்கிறாங்க. அப்ப நான், தாமரைக்கண்ணன், தோழர்கள் எல்லாருமே சிறை சென்றோம். கிட்டத்தட்ட 20, 25 நாளுக்குமேல் உச்சநீதிமன்ற நீதிபதிகளுடைய கொடும்பாவி எரிச்சு சிறை சென்றோம்.

திராவிடர் கழகத்தில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்தோம். அப்புறம் மணி அண்ணன் அமைப்பை (தி.க.) விட்டு வெளியேறும்போது மணி அண்ணனுடன் இணைந்து வெளியே வந்தோம். வந்து தொடர்ச்சியாக வேலைகள் பார்த்துட்டு இருந்தோம். அப்ப பெரியார் திராவிடர் கழகமும் தனியா இயங்கீட்டு இருந்தாங்க. விடுதலை இராசேந்திரன் அவர்களுடனும், ஆனூர் ஜெகதீசன் அய்யா அவர்களுடனும் இணைந்து இருந்தாங்க.

அப்ப இணைப்பு மாநாடு நடந்தது. மணி அண்ணன் வெளியில் வரும்போது தந்தை பெரியார் திராவிடர் கழக இணைப்பு மாநாடு ஒன்னு நடத்தினோம். அதுல முழுமையா இருந்தது பாலகுரு அண்ணன், நான், இறந்துபோன பத்ரி எல்லோருடனும் இணைந்து தொடர்ச்சியா அதுல வேலை பார்த்தோம். வேலை பார்த்துட்டு 2000-2001 காலகட்டங்களில் நாங்கள் சென்னையில் தொடர்ச்சியாக வேலை பார்த்தோம். அப்புறம் பணிக்காலம்னு இங்க வந்துட்டோம்.

இங்க வந்ததற்கு அப்புறம் 2009 வரைக்கும் தொடர்ச்சியாக வேலை பார்த்துட்டு இருந்தோம். 2009ல் ஈழப்படுகொலை நடந்த சமயத்தில்தான் இயக்கத்தின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. தொடர்ச்சியா ஒரு இயக்கத்தில் இயங்கீட்டே இருக்கிறோம். இத்தனை அமைப்புகள் இருக்குது கண்ணுக்கு எதிரா பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு நாட்ல 1 லட்சம் மக்கள் படுகொலை செய்யப் படுறாங்க அதை எதிர்த்து நாம எதுவுமே செய்ய முடியலை... அந்த நேரத்துல பல இளைஞர்கள் மனநலம் பாதிக்கப்பட்டார்கள். உண்மையைச் சொல்லணும்னா மன உளைச்சலாகவும், மனநலம் பாதிக்கப்பட்டும் அதுல அமைப்பை விட்டு வெளியே போறோம்.

இப்ப இருக்கக்கூடிய இந்துத்துவா சக்திகளின் எழுச்சியை பார்க்கும்போது உதிரியா இருக்கறது பிரயோஜனப்படாது. இது சரியா வராது. அவுங்களுக்குத்தான் ஊக்கம் அளிக்கும். நம்ப இன்னும் ஈழப்படுகொலை, ஈழப்பிரச்சனைகளை மட்டுமே வச்சிக்கிட்டு அமைப்பு மேல விரக்தியா இருந்தோம் அப்படின்னா இந்துத்துவா சக்திகள் எளிதாக ஊடுருவிவிடுவாங்க. தமிழ்நாட்டுல கால் ஊன்றி விடுவாங்க. அப்படின்னு ஒரு நிலை ஏற்படும் போது அமைப்புக்குள்ள திரும்ப இணைந்து செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

திண்டுக்கல்ல பார்க்கும்போது தொடர்ச்சியா திராவிடர் கழகத்துல இணைந்து இப்பதான் முதல் முதல்ல பெரியார் பிஞ்சுகள் மாநாட்டுல கலந்துக்கிட்டோம். இப்ப திராவிடர் கழகத்துல நகரச் செயலாளராகப் பொறுப்புப் போட்டு இருக்காங்க. ஏற்கனவே மாணவர் கழகத்துல மாவட்டச் செயலாளராக இருந்து இருக்கிறேன். திராவிடர் கழகத்தினுடைய வழக்கறிஞர் அணி பிரிவுக்கு மாநிலப் பொருளாளராக இருந்து இருக்கிறேன்.

தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் எந்த அமைப்புகளிலும் வேலை பார்க்காதது என்ன பிரச்சனை ஆச்சுன்னா... குடும்பம் பெரியாரியலை விட்டு விலகி வெளியே போகுது... அது ஒரு இக்கட்டான சூழல். குடும்பமே பெரியாரியலை விட்டு விலகி போற மாதிரி ஒரு சூழல்... அப்போ திரும்ப அமைப்புல இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுது.

இன்னொன்று இப்ப இருக்கக்கூடிய பெரியாரிஸ்டுகள் மட்டும்தான் இந்துத்துவ சக்திகளை எதிர்த்து நிற்க முடியும். மற்றபடி பார்ப்பன எதிர்ப்பு இல்லாமல் அல்லது பார்ப்பன எதிர்ப்பை மறைமுகமாக, வெளிப்படையாகச் சொல்ல முடியாத எந்த அமைப்புமே இந்துத்துவா சக்தியை தடுத்து நிறுத்தி விட முடியாது. பார்ப்பன எதிர்ப்பை முபமையாகச் செயல்படுத்தக்கூடிய ஒரே அமைப்பு அப்படின்னா பெரியார் அமைப்பு மட்டும்தான்.

இந்தியாவிலே பெரியாரியல் அமைப்பு மட்டும்தான் பார்ப்பனர்களை நேரடியாக எதிர்த்து களத்தில் நிற்கக்கூடியவர்கள். அப்ப பார்ப்பன எதிர்ப்புக் களத்தில் நிற்கும் போதுதான் இந்துத்துவா சக்திகளை தடுத்து நிறுத்த முடியும், அப்படிங்கற அடிப்படையில நம்ம உதிரியாக இருக்கக்கூடிய பெரியாரிஸ்டுகள் அனைவருமே ஒருங்கிணைந்து திருப்பி வந்து 80, 90 காலகட்டங்கள் மாதிரி ஒரு வீரியமாகப் பெரியாரியலை நகர்த்திக் கொண்டு போனால்தான் சரியாக இருக்கும், அப்படிங்கறதால மீண்டும் இணைந்து வேலை பார்க்கிறோம்.

இப்படி ஒரு பெயர் வைக்கவேண்டும் என்ற சிந்தனை எப்படி வந்தது?

2001-ஆம் ஆண்டு தென்னாப்ரிக்கா ‘டர்பன்’ நகருல நிற வெறிக்கு எதிரான மாநாடு. அதுல ஜாதியத் தீண்டாமையும் ஜாதியப் பாகுபாட்டையும், நிற வெறியாக இணைக்க வேண்டும் அப்படின்னு. இந்தியாவில் இருக்கக்கூடிய முற்போக்கு ஜனநாயக சக்திகள், ஜாதி ஒழிப்பு வீரர்கள், பெரியாரிஸ்டுகள் எல்லாம் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அப்ப இது சம்மந்தமாக அய்யா விடுதலை இராசேந்திரன் மற்றைய தோழர்கள் எல்லாம் டர்பனுக்குப் போறாங்க, போய் அவங்களுக்கான முயற்சியில் ஈடுபடுறாங்க.

அப்ப இந்திய அரசாங்கம் இந்த முயற்சி வெற்றி பெறக்கூடாதுனு கடுமையாகப் போராடுது. மாநாட்டுக்கு வந்து இருக்கக்கூடிய ஒவ்வொரு நாட்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசுறாங்க. அதன் அடிப்படையில இந்தியாவில் இருந்து சென்ற முற்போக்கு ஜனநாயக சக்திகள், என்ன பண்றாங்கனா கியூபா அதிபர் கேஸ்ட்ரோ கிட்ட இதப் பேசுறாங்க. இப்படி இருக்குதா அப்படிங்கறத ஒத்துக்குறார். ஒத்து கிட்டு நானும் சில நாடுகள் கிட்ட பேசுறேன். அப்படினு வாக்குறுதி கொடுக்குறார்.

வாக்குறுதி கொடுக்கும்போது என்ன ஆகுதுன்னா அன்றைய இந்திய அரசு என்ன பண்ணுதுனா, கேஸ்ட்ரோகிட்ட உட்கார்ந்து பேசி இந்த மாதிரியான பிரச்சனை வந்து உள்நாட்டுப் பிரச்சனை இந்தப் பிரச்சனைய நாங்க தீத்துக்குறோம். இது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது. நிறவெறி அளவுக்குக் கிடையாது. அப்படின்னு சொல்லி அதற்கான முயற்சி ஆரம்ப நிலையிலேயே தோற்கடிக்கப்படுது.

அது சம்மந்தமாக அய்யா விடுதலை இராசேந்திரன் இங்க சென்னையில ஒரு கூட்டத்தை ஏற்பாடு பண்ணி டர்பன்ல என்ன நடந்துச்சு. நாங்க அங்க இவ்ளோ வேலை பார்த்தோம் என்னெல்லாம் நடந்திச்சு இதுல இப்படி தோல்வி அடைந்தோம் அப்படின்னு சொல்றாரு. அப்ப நான் முடிவு பண்ணது என்னன்னா... நமக்கு பையனோ, பொண்ணோ யாரு பிறந்தாலும் “கேஸ்ட்லெஸ்” அப்படிங்கற பெயர் வைக்கணும்... அப்ப சில விவாதங்கள் ஏன் ‘ஜாதியற்றவன்’னே வைக்கலாம்ல, ‘ஜாதிப்பகைவன்’னு வைக்கலாம், ‘ஜாதி மறுப்பாளன்’னு வைக்கலாம் அப்படின்னு நிறைய பேர் சொன்னாங்க.

இங்க இருக்கக்கூடிய ஜாதியச் சிக்கல்கள் சர்வதேச அளவுல போகாம இருக்குது. இது வாய்ப்பா இந்தப்பெயர் பலபேர்கிட்டப் போய்ச் சென்றடையும் போது, இந்தப் பெயருக்கான காரணம் என்ன? எதனால் ஏற்பட்டது? அப்படிங்கும் போது இந்தியாவில் இருக்கக்கூடிய உள் முரண்பாடுகள் நிறைய இருக்குல இத வெளிப்படுத்தனும் அப்படிங்குற நோக்கத்திற் காகத்தான் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன்.

என்னுடைய திருமணத்திற்கு முன்னாலேயே 2001 லேயே இந்த மாதிரி முடிவு எடுத்துட்டோம். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எங்களுடைய திருமணம் ஜாதி மறுப்புத் திருமணம், காதல் திருமணம். காதல் திருமணம் அப்படிங்கற போது இதன் அடிப்படையிலேயே என்னுடைய இணையர்கிட்ட இந்த விஷயத்தைத் திருமணத்திற்கு முன்னாலேயே பேசிட்டேன். குழந்தை எதுவா இருந்தாலும் “கேஸ்ட்லெஸ்”ங்குற பெயர் வைக்கணும்னு. அவங்களும் மனப்பூர்வமாக ஏத்துக்கிட்டாங்க. அப்புறம் தம்பி பிறந்தான் ‘கேஸ்ட்லெஸ்’னு பெயர் வச்சுட்டோம்.

உங்களுடைய சக நண்பர்கள், உறவினர்கள் இதை எப்படி எடுத்துக்கொண்டார்கள்?

வீட்டிலும் சரி, நண்பர்களும் சரி பள்ளிக் காலத்த முடித்த உடனேயே திராவிடர் கழகத்துல இணைந்து வேலை பார்த்தோம். இந்த நேரங்களில் இருந்த எதிர்ப்பைப் பார்த்தீங்கனா பெருசா ஒன்னும் இல்ல. “நான் அப்படித்தான்”ங்கறது அவங்களுக்குத் தெரியும் இல்லையா... அதனால பெயரோட அர்த்தம் கேட்டுகிட்டாங்க, இந்தப் பெயரை வைக்கலைன்னா தான் ஆச்சர்யபடனும்னாங்க. அவுங்க அதப் பெரிய முரணாகப் பார்க்கல.

இப்படிப் பெயர் வைப்பதால் சமூகத்தில் என்ன விளைவுகள் வந்துவிடும்?

 ஜாதிங்கறது 2000 ஆண்டுகளாக இருந்திட்டு இருக்குது. ஜாதி ஒழிப்புக்கான ஒரு இயக்கம் பெரியார் காலத்திற்குப் பின்பு தமிழகத்தில் மிக வீச்சாக இருக்கிறது. எவ்ளோ பெரிய ஜாதி வெறி பிடிச்ச நபர்களாக இருந்தாலும் ஜாதி ஒழிப்பிற்கான ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டு இருக்குது அப்படிங்கறது எல்லாத்துக்கும் தெரியும். அப்படி எங்களை அடையாளப் படுத்துவதுதான் நோக்கம்.

நாங்கள் ஜாதி ஒழிப்புக் குடும்பம். அதனுடைய தொடர்ச்சியாகத்தான் என்னுடைய காரில் ‘ஜாதி இல்லை’ என்று எழுதுவதும், எங்கள் வீட்டுக்கு ‘ஜாதி மறுப்பு இல்லம்’ என்று பெயர் வைத்ததும், எங்கள் குடும்பப் பெயர்கள் ஜாதி ஒழிப்பை நோக்கியே இருக்கணுன்னு தீவிரமா இருந்தோம். எங்களைப் பொறுத்தவரை எங்களிடம் ஜாதி கேக்க மாட்டாங்க. எந்தச் சாமி கும்பிடுறீங்கன்னு கேக்க மாட்டாங்க. அதுவே எங்களுக்குப் பெரிய வெற்றி தான்.

ஜாதிச் சான்றிதழ் காரணமாகத்தான் ஜாதி இருக்குதுன்னு சொல்றாங்க அதைப்பற்றி உங்கள் கருத்து?

ஜாதிங்கிறது 2000 வருஷமா இருக்குது. 1952 க்கு அப்புறம்தான் சாதிச் சான்றிதழ் இருக்கு. நீங்க சொல்றதப் பாத்தா 1952 ல தான் ஜாதி உற்பத்தி ஆகி இருக்கணும். ஜாதிச் சான்றிதழ் காரணமாத்தான் ஜாதி வந்ததுங்கிறது ஒரு பார்ப்பனீயத்தனமான வாதம். இடஒதுக்கீட்டு அடிப்படையில் பள்ளிக் கூடம் படிச்சிருப்பான், வேலைக்கு போயி ருப்பான், பெரிய அதிகாரி ஆயிருப்பான் அவன் சொல்வான் ஜாதிச் சான்றிதழ் இருக்கக்கூடாதுன்னு.அவங்க தாத்தா, அப்பா என்ன படிச்சிருக்காங்கன்னு கேட்டா சொல்ல முடியாது. ஏன்னா அவங்க படிச்சிருக்க மாட்டாங்க. இவங்க இடஒதுக் கீட்டுல படிச்சுட்டு இந்த மாதிரி பேசிட்டு இருக்காங்க. இதனால கல்வி, வேலைவாய்ப்பு போன்றதுல ஏகபோகமா இருக்கிற பார்ப்பனர் களுக்கே இந்தவாதம் வலு சேர்க்கும்.

பொதுவாகவே பெரியார் இயக்கத் தோழர்கள் தமிழில் பெயர் வைக்கின்றனர். ஆனால் நீங்கள் அதிலிருந்து மாறுபட்டுப் பெயர் வைத்ததன் நோக்கம்?

நாங்கள் ஒரு காலத்தில் தமிழ் வெறியர் களாகத்தான் இருந்தோம். பெரியார் சொன்னதைப் போல் எல்லாப் பற்றுகளையும் துறக்கவேண்டும் என்று உணர்ந்தோம். அவர்கூறியதைப் போல நடுநிலையாகச் சிந்தித்தோம். அதனால் தமிழ் மொழியைத் தாய்மொழி என்ற அளவில் ஏற்றுக் கொள்கிறோமே தவிரத் தமிழ்மொழியில்தான் பெயர் வைக்கணும் என்ற கட்டாயம் இல்லை. ஆசிரியர் வீரமணி அவர்கள் மண்டல் கமிஷன் நினைவாக ‘வி.பி.சிங்’ என்று பெயர் வைக்கச் சொன்னார். திராவிடர் கழகத் தோழர்கள் பலபேர் வி.பி. சிங் என்று பெயர் வைத்துள்ளனர். அது ஒரு வரலாற்றுப் பெயராக இருக்கணும் என்பதுதான். அதனால்தான் என் மகனுக்கு ‘கேஸ்ட்லெஸ்’ என்று பெயர் வைத்தோம்.

பெரியார் ரஷ்யா, மாஸ்கோ என்று பெயர் வைக்கச் சொன்னார். பெரியார் கேட்பார் நீங்கள் பழநி, திருப்பதி, சிதம்பரம் என்று பெயர் வைக்கும் பொழுது நாங்கள் ரஷ்யா, மாஸ்கோ, என்று பெயர் வைக்கக் கூடாதா என்று . அதுபோல கொள்கையின் அடிப்படையிலும் தத்துவத்தின் அடிப்படை யிலும் தான் பெயர் இருக்கணும். மத்தபடி இப்படித்தான் வைக்கணும் என்பதெல்லாம் கட்டாயம் இல்லை. தமிழில்தான் பெயர் வைக்கணும்னு அவசியம் இல்லை. அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஒருவேளை உங்களுக்குப் பெண்குழந்தை பிறந்திருந்தால்?

பெண் குழந்தை பிறந்தாலும் இப்படித்தான் பெயர் வைக்கணும் என்றுதான் முடிவு செய்தோமே தவிர பெண்ணுக்கென்று தனியாகப் பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பெண் குழந்தை பிறந்திருந்தாலும் பெரியார் சொன்ன ‘பெண் விடுதலை’ என்ற அடிப்படையிலேயே வளர்த்திருப்போம்.

நியூமராலஜி அடிப்படையில் பெயர் வைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

படிப்புக்கும் அறிவுக்கும் சம்மந்தம் இல்லையென்று சொல்லுவார்கள். அது தான் உண்மையான விசயம். அது போலத்தான் நல்லா படித்தவர்களும், பட்டம் வாங்குன வங்களும் உயர்பதவிகளிலிருப்பவர் களும்தான் நியூமராலஜி பார்க்கிறார் களே தவிர, பாமர மக்கள் அதைப் பற்றி அவ்வளவாகக் கவலைப் படுவதில்லை. அது போன்றவற்றில் எனக்கு உடன்பாடில்லை. இது களையப்பட வேண்டிய ஒன்று.

குடும்பத்தில் முதல் குழந்தைக்குக் குலதெய்வத்தின் பெயரை வைக்கின்றார்களே?

குலதெய்வ வழிபாடு என்பது ஜாதியைப் பாதுகாக்கும் வழிபாடு. அது ஒரு ஆணாதிக்க வழிபாடு. பெண்ணுக்கென்று நிரந்தரமான குலதெய்வம் கிடையாது. பெண்களுக்குத் திருமணத்திற்கு முன்பு ஒரு குலதெய்வம், திருமணம் ஆன பிறகு ஒரு குலதெய்வம் ஆகிவிடுது. பிறக்கும் போது இருக்கும் குலதெய்வம் சாகும் வரை இருக்குறது இல்ல. திருமணத்திற்கு அப்புறம் மாறிடுது. இது எப்படினு நமக்கு புரிய வில்லை. குலதெய்வ வழிபாடுங்குறது ஜாதியையும், ஆணாதிக்கத்தையும் பாதுகாக்கும் ஆயுதமே தவிர வேறு ஒன்னும் இல்லை. அதனால் குலதெய்வப் பெயர்களை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அந்த மாதிரியான பெயர்களை வைக்கவில்லை.

குலதெய்வப் பெயர், ‘தான் எந்த ஜாதி’ என்பதை வெளிப்படுத்துவதற்கான பெயர். நாங்கள் எப்படிச் சாதியை விரும்பாமல் ‘கேஸ்ட்லெஸ்’னு பெயர் வைச்சோமோ... அது மாதிரி அவங்க அவங்களோட ஜாதியை வெளிப்படுத்துவதற்காக குலதெய்வப் பெயர்களை வைக்குறாங்க.

நான் வழக்கறிஞர் என்பதால எங்கிட்ட சில பிரச்சனைகளுக்காகத் தாழ்த்தப்பட்ட மக்கள் வருவாங்க. அதில் பழைய பத்திரங்களை எடுத்துப் பார்த்தா, அவங்க பெயர்கள் எல்லாம் மண்ணாங்கட்டி, பாவாடை, அம்மாவாசை என்று தான் இருக்கும். இந்தப் பெயர்கள் எல்லாம் குலதெய்வப் பெயர்கள்தான். இன்று அது குறைந்து விட்டது. 50 வருசங்களுக்கு முன்னால அப்படி இருந்தது.

இப்ப சமஸ்கிருதப் பெயர்களை வைக்குறாங்க. இந்தப் பெயர்கள் எல்லாம் ஆபாசமாக இருக்குது, வாயில் நுழையாத பெயர்களாக இருக்குதுனு சொல்றாங்க... இருந்தாலும் அவங்க அவங்களோட குல தெய்வப் பெயர்கள்ல இருந்து விடுபட்டு இருக்காங்க. அது வரவேற்கப்பட வேண்டிய விசயம் தான். ஆனால், இன்னும் சில ஆதிக்கச் சாதியினர் அவங்களோட ஆதிக்கத்தைக் காட்டத் தங்களது குலதெய்வப் பெயர்களை வைக்கிறாங்க. முதல் குழந்தைக்குக் குலதெய்வப் பெயர்களை வைப்பதே தாங்கள் இந்தச்சாதி என்று அடையாளப் படுத்தத்தான்.

திரைப்பட நடிகர்கள், நடிகைகள் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பெயர்களை வைத்துக் கொள்ளுகின்றனரே?

ஜாதி வெறியர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சாதிப்பெயர்களை வைக்கின்றனர். அது மாதிரி சாதி மறுப்புத் திருமணம் செய்வோரும் திருமணம் செய்யறதோட மட்டும் நிறுத்தாம தங்கள் குழந்தைகளின் பெயரில் கவனம் செலுத்தணும். எந்தச் சமரசமும் இல்லாமல் பெயரில் கவனம் செலுத்தணும். சினிமாத்துறையுல பெயர் வைப்பதிலும் அதுவே அடங்கியிருக்கு.

ஒரு தெருவுக்குப் போனால் ஒரு நடிகரோட நற்பணி மன்றம் இருக்கும். அந்த நடிகர் எந்தச் சாதினு தெரிந்தாலோ அல்லது அந்தத் தெருவில் உள்ளவர்கள் எந்தச் சாதினு தெரிந்தாலோ போதும். ரெண்டில் ஒன்று தெரிந்தால் போதும் ரெண்டும் ஒன்றாகத்தான் இருக்கும். ஒரே சாதிக்காரர்களாகத் தான் இருப்பார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட நடிகர்களோட பெயரை அவங்களோட குழந்தைகளுக்கு வைக்குறது இல்ல.

‘பெயரில் சாதி’ என்பதற்கு ஒரு சின்ன உதாரணம், ஒரு ஆய்வாளர் அம்பேத்கர்னு பெயர் வைத்திருந்தார் திண்டிவனம் பகுதியில். அவர் சந்தித்த பிரச்சனைகளை ஆனந்த விகடனில் பேட்டியாகப் போட்டிருந்தாங்க. ஆனால் அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். பெயரில் என்ன இருக்குனா, பெயரில் எல்லாம் இருக்கு. பெயரில் ஜாதியும் இருக்கு, பாலின வேறுபாடும் இருக்கு.

ஜாதியற்றோர் இடஒதுக்கீடுனு கேரளாவில் சொன்னாங்க அதுமாதிரி தமிழ்நாட்டில் என்ன செய்ய வேண்டும்?

திராவிடர் கழகம் தீர்மானம் போட்டாங்க... சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்குத் தனியாக இடஒதுக்கீடுனு... சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்குக் கண்டிப்பாகத் தனியா இட ஒதுக்கீடு வேணும். ‘சாதியற்றோர் இடஒதுக்கீடு’ அதிகரிக்க அதிகரிக்க இந்த இடஒதுக்கீட்டைக் குறைக்கணும். சாதி மறுப்புத் திருமணம் செய்யும் போது பெரும்பாலும் ஆண் என்ன சாதியோ அந்த ஜாதிக்குப் போயிடுறாங்க. அதனால முழுமையா ஜாதிய ஒழிக்க முடியல. அந்தச் சூழல்ல இருந்து மீட்டுக் கொண்டுவரணும். சாதி மறுப்புத் திருமணம் பண்றவங்களுக்குப் பாதுகாப்பு தரணும். அவர் களைச் சாதி மறுப்புத் தம்பதிகளா மீட்டெடுக் கணும்.

தோழர் பிரியதர்ஷினிதோழர் கேஸ்ட்லெஸ்ஸின் அம்மா

என் பெயர் பிரியதர்ஷினி. எனக்கு ஆனந்த முனிராஜன் 2002-ல் அறிமுகமாகிப் பின்னர் சாதி மறுப்பிற்காகத்தான் திருமணம் செய்து கொண்டோம். அப்போது பதிவு செய்து உறுதிமொழி ஏற்றுதான் திருமணம் செய்து கொண்டோம். ஆணாகப் பிறந்தாலோ, பெண்ணாகப் பிறந்தாலோ இந்தப் பெயர்தான் வைக்கணும் என்று முடிவு செய்தோம். அப்புறம் நான்கு வருடங்கள் கழிச்சுதான் மகன் பிறந்தான். நான்கு வருட இடைவெளியில் நான் நிறைய மாநாடுகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் சென்றேன்.

அதன் பிறகு இந்தப் பெயர் வைத்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று புரிந்து கொண்டேன். அந்தப் பெயரையே மகனுக்கு வைத்தோம். இந்தப் பெயரை நாங்கள் வைத்த போது நிறைய எதிர்ப்புகள் வந்தன. இன்னமும் கூட அந்தப் பெயரைச் சொல்லி யாரும் கூப்புடுறது இல்லை. சின்ன வயசுல இந்தப் பெயரை வைச்சதுக்கு நிறைய சண்டை எல்லாம் போடுவான். இப்ப புரிதல் வந்ததும் ரொம்பப் பெருமையாக நினைக்கிறான்.

இந்தப் பெயரின் மூலமா அடுத்த தலை முறைக்கு ஜாதி இல்லைனு தெரிவிக்கணும். வெளிய யாரும் அவன என்ன ஜாதினு கேக்கக்கூடாதுன்னு இந்தப் பெயர வச்சிருக்கோம். அவன வெளிய யாரு கிட்டையும் ஜாதி கேக்கக்கூடாதுன்னும், பாக்கக் கூடாதுன்னும் சொல்லி வச்சுருக்கேன். இத மத்தவங்க கிட்டையும் சொல்லச் சொல்லி யிருக்கேன். இப்பவும் சின்ன பசங்க ஜாதிய பத்தி பேசுறாங்க. அவனோட நண்பர்கள் இயேசுவக் கும்புடு, அல்லாவக் கும்புடுனு இவன்கிட்ட சொல்றாங்க. அப்படி முடியாதுனு சொல்லு, சாதி எல்லாம் இல்லைனு சொல்லு, நீ வெளிப்படுத்து அப்புடினு சொல்லிக் கொடுத்திருக்கோம்.

இந்தப் பேர என்னனு கேட்டா... அத பத்தி சொல்லி ஜாதி இல்லைனு புரியவைக்கணும்னு சொல்லியிருக்கோம். அடுத்த தலைமுறைக்கு சாதி இல்லைனு தெரியப்படுத்தச் சொல்லியிருக்கோம். இவனும் அப்படித்தான் இருக்கான். சாதி பாக்காம, சாமி எல்லாம் கும்பிடாம அப்படியே இருப்பான்னு நம்புறோம். இப்பதான் அவங்க அப்பா வெளிய மாநாட்டுக்கு எல்லாம் கூப்பிட்டுப் போறாரு. அவனோட தலைமுறையில இதுமாதிரி இருக்கக் கூடாது இது விவாதிக்கப்படணும்னு இந்த பெயர வச்சுருக்கோம்.

நேர்காணல்: கல்யாண்குமார், வின்சென்ட்

Pin It